பேரின்பம் உன்னுள்ளே.
நீயே தெய்வம் என்றுணர். உன்னையே நீ ஒளியாக தரிசனம் செய்.

1 - 538 திருமந்திர விளக்கம்.

திருமந்திரம் விநாயகர் காப்பு
 
ஐந்து கைகளையும் யானை முகத்தையும் இளம்பிறை போன்ற தந்தத்தை உடையவனும் சிவனது குமாரனும் ஞானச்சிகரமாக விளங்குபவனுமாகிய  விநாயகக் கடவுளை அறிவினில் வைத்து அவன் திருவடிகளைத் துதிக்கின்றேன்.
 
1. கடவுள் வாழ்த்து. ( 1 - 50 )
 
0001: சிவன் ஒருவனே சத்தியோடு இரண்டாய், பிரம்ம, விஷ்ணு, ருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளாகி ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களைச் செய்து,  நான்கு வேதங்களாகி உண்மை விளங்கச் செய்து, ஐந்து இந்திரியங்களையும் அடக்கும் ஆற்றல் அளிப்பவனாய்,  ஆறு ஆதாரங்களிலும் விரிந்து, அதற்கு மேல் ஏழாவது இடமாகிய சகஸ்ரதளத்தின் மேல் பொருந்தி,  நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய எட்டுப் பொருள்களையும் உணர்ந்து அவற்றில் கலந்து அட்டமூர்த்தமாய் விளங்குகின்றான்.
 
0002: இனிமையான உயிரிலே பொருந்தியிருக்கும் தூய்மையானவனும் நான்கு திசைகளுக்கும் பராசக்திக்கும் தலைவனும், தெற்குத் திசைக்குரிய இயமனைஉதைத்தவனுமாகிய இறைவனைப் புகழ்ந்து பாடி நான் உரைக்கின்றேன்.
 
0003: உயிர்களோடு உடனாய் நின்றவனும், அழிவில்லாத தேவர்கள் “ஆடையில்லாதவன்" என்று பகரும் தலைவனும், பக்கத்திலுள்ள தேவர்களாலும் கூட அறியமுடியாத மேலோனும் ஆகிய இறைவனை நான் அணுகி இருந்து அநுதினமும் வழிபாடு செய்வேன்.
 
0004: அகன்ற சீவர்களுக்கு மெய்ப்பொருளானவனும் ஆகாய மண்டலத்துக்கு வித்துப் போன்றவனும், அடைக்கலமான இடத்தில் என்னைச் செல்ல விட்டவனும் ஆகிய இறைவனைப் பகலிலும் இரவிலும் வணங்கிப் பரவி மாறுபாடுடைய இவ்வுலகில் நான் அறியாமை நீங்கி நின்றேன்.
 
0005: சிவபெருமானோடு ஒப்பாகவுள்ள கடவுள் புறத்தே உலகில் எங்குத் தேடினும் இல்லை.  அவனுக்கு உவமையாக இங்கு அகத்தே உடம்பிலும் எவரும் இல்லை.  அவன் அண்டத்தைக் கடந்து நின்ற போது பொன் போன்று பிரகாசிப்பான்.  சிவன் செந்நிறம் பொருந்திய ஊர்த்துவ சகஸ்ரதளத் தாமரையில் விளங்குபவனாவான்.
 
0006: சிவனைக் காட்டிலும் மேம்பட்ட தேவர்கள் ஒருவரும் இல்லை.  சிவனல்லாது செய்கின்ற அருமையான தவமும் இல்லை.  அவனை அல்லாது பிரமன், விஷ்ணு, உருத்திரன் ஆகிய மூவராலும் பெறுவது ஒன்றும் இல்லை.  அவனையல்லாது வீடு பேறு அடைவதற்குரிய வழியை அறியேன்.
 
0007: பொன் போன்ற சகஸ்ரதளத்தில் விளங்குபவனும், பழமையாகவே சமமாக வைத்து எண்ணப்படும் பிரமனாதி மூவருக்கும் பழமையானவனும், தனக்கு ஒப்பாரும் மிக்காருமில்லாத தலைமகனும் ஆகிய இறைவனை யாரேனும் "அப்பனே" என்று வாயார அழைத்தால் அப்பனாக இருந்து உதவுவான்.
 
0008: தாழ்ந்த சடையுடைய சிவன் தீயைக் காட்டிலும் வெம்மையானவன்;  நீரைக் காட்டிலும் குளிர்ச்சியானவன்; குழந்தையினும் நல்லவன்;  பக்கத்தில் இருப்பவன்;  அவனிடம் அன்பு செய்வார்க்கு தாயைக் காட்டிலும் கருணை புரிவான்.  இவ்வாறிருந்தும் இறைவனது கருணையை அறிபவர் இல்லை.
 
0009: பொன்னால் செய்யப்பெற்ற அழகான சடை என்று கூறுமாறு அவன் பின்புறம் விளங்க இருப்பவன்.  அவனது திருநாமம் நந்தி என்பதாகும்.  உயிர்கட்கெல்லாம் தலைவனாகிய அந்த சிவன் என்னால் வணங்கத்தக்கவன். அப்பெருமானால் வணங்கத் தக்கவர் வேறு எவரும் இல்லை.
 
0010: சிவனாகிய தானே இப்பூவுலகத்தைத் தாங்கிக் கொண்டு ஆகாய வடிவினனாகவும் உள்ளான்.  சிவனே சுடுகின்ற அக்கினியாகவும் உள்ளான்.  சிவனே அருள் பொழியும் சத்தியுமாய் இருக்கிறான்.  சிவனே விசாலமான மலையாகவும் குளிர்ச்சியான கடலாகவும் உள்ளான்.  சிவனே எல்லாப் பொருளிலும் வியாபகமாய் உள்ளான். 
 
0011: தூரத்திலும் பக்கத்திலும் எமக்கு முன்னோனாகிய இறைவனது பெருமையை எண்ணினால் "ஒத்ததாகச் சொல்லக் கூடிய பெரிய தெய்வம் பிறிதொன்றில்லை."  முயற்சியும் முயற்சியின் பயனும் மழையும் மழை பொழிகின்ற மேகமும் அந்த இறைவனே ஆகும்.  அவன் பெயர் நந்தி.
 
0012: ஒப்பற்ற அன்போடு அழியாதிருக்கும் நெற்றிக் கண்ணையுடைய "சிவனே அழியாதிருக்கும் அருள் புரிபவன்" என்பதை விண்ணவரும் மண்ணவரும் அறியாதிருக்கின்றனரே! என்ன அறியாமை!.
 
0013: கண்ணில் கலந்தும் எங்கும் கடந்தும் விளங்குகின்ற சிவனை பிரமன், விஷ்ணு முதலான தேவர்களும் எண்ணத்தில் அகப்படுத்தி நினைப்பதில்லை.  மண்ணுலகோரோ சிவனைக் கடந்து சென்று அறிய முடியவில்லை.
 
0014: சிவன் சுவாதிட்டான மலரிலுள்ள பிரமனையும்,  மணிப்பூரகத்திலுள்ள விஷ்ணுவையும்,  அநாகதச் சக்கரத்திலுள்ள ருத்திரனையும் கடந்து சிரசின் மேல் சகஸ்ரதளத்தில் நின்று எங்கும் கண்காணித்துக் கொண்டுள்ளான்.
 
0015: சிவன் உலகினைப் படைப்பவனாயும், உடலைக் காத்து மாற்றம் செய்பவனாயும் அழிப்பவனாயும், குவிதல் இல்லாத இயல்போடு ஊழைச் செலுத்துபவனாயும், திருவருள் சோதியாயும், என்றும் அழியாத தன்மையோடு நிறைந்து உள்ளான்.
 
0016: அமரர்களும் தேவர்களும் குற்றத்தில் பொருந்தியுள்ளமையால் அழகு நிறைந்த ஒளியோடு கூடிய நெற்றியையுடைய உமாதேவியை ஒரு பாகத்தில் உடையவனாகிய சிவனது குணத்தைப்  பாராட்டி நாடமாட்டார்கள். 
 
0017: தூல உடம்பும் சூக்கும உடம்பும் ஒன்றாகக் கலந்து இருப்பினும் மாயை சம்பந்தமுடைய சூக்கும உடம்பில் தான் கானமானது மிகுந்திருக்கும்.  அக்கானம் அல்லது நாத வழியே மனம் பதிந்து ஆன்மா தன்னை ஒளி வடிவாகக் காணினும் உடலை விட்டு ஆகாய வடிவினனாகிய சிவனோடு கொள்ளும் தொடர்புக்கு நிகரில்லை.
 
0018: ஸ்பந்த உணர்வு சிரசின் வடகீழ்த்திசையில் உள்ளது.  வட திசையைப் போற்றி அங்கு விந்துவை ஒளிமயமாகும் யோகம் செய்து உயிர்ச்சத்தியைச் சேமித்து வைத்தால் ஒளி மண்டலம் விளங்கும்.  இவ்வடதிசைக்குத் தலைவனாக நீயும் ஆகலாம் என்று சொல்பவன் எமது தலைவனாவான்.
 
0019: வடதிசைக்குத் தலைவன், விஷய வாசனைக்கு இடமான ஏழு ஆதாரங்களையும் அழித்துப் பால் நிலமாக்கிய மூதறிவாளன், பாவங்களைப் போக்கடிக்கின்ற பலியினைக் கொள்ளும் வடதிசையை இடமாகிக் கொண்ட சீவரது உண்மையான தவத்தை நோக்கி அத்தவம் செய்வோரையே இடமாக்கிக் கொண்டு எழுந்தருளியிருக்கிறான்.
0020: இறப்பையும் பிறப்பையும் கருவில் உதிக்கும் முன்னே வரையறை செய்த சிவன் பொருந்தியுள்ள  நியதியை அறியின், அது விளக்கம் மிக்க கண் மலருக்கு மேல் உள்ள சிரசாகும்.  கண் மலரே அகநோக்கு வழியாகும். ஆகாய பூத அறிவு சிரசில் சிறந்து விளங்கத் தொடங்கும் போது சாதகனது சிரசில் அவ்விறைவனது வடிவம் ஒளியும் ஒலியுமாக விந்து நாதமாக வெளிப்படும்.
 
0021: ஆகாயத்திலுள்ள மேகம் போன்ற கரிய திருமால், பிரமன், தேவர் முதலியோரது இழிந்த பிறவியை நீக்குகின்ற ஒப்பற்றவனும் ஆணவமாகிய காட்டு யானையைக் கதறும்படி பிளந்த எம் தலைவனுமாகிய சிவனைப் புகழ்ந்தால் பிறவி நீக்கம் பெற்று உய்யலாம்.
 
0022: மாயையில் தோன்றிய உடம்புக்கு உரியவனாகியவனும் தியானப் பொருளாக மனத்தில் தோன்றுகின்றவனுமாகிய சிவன் - சீவர் நினைத்ததை அறிவான் என்ற போதும் சீவர் தாம் சிவனை நினையாதிருக்கின்றனர்.  கடவுளுக்கு என்னிடத்தில் கருணை இல்லை என்று சொல்லும் தன் கருணைக்கு இலக்காகாமல் தப்பி நிற்பவருக்கும் கருணை வழங்கி நிற்கின்றான் இறைவன்.
 
0023: சர்வ வல்லமையுடையவனும் அக்கினி தேவனைக் கடலின் மத்தியில் நிலைக்கச் செய்தவனும் நீதியுள் நீதியையுடையவனும் ஆகிய இறைவனை இல்லை என்று கூற வேண்டாம்.  அவன் படைத்தல் முதலியவற்றைச் செய்கின்ற கடவுளர்க்கும் தலைவனாய் இரவும் பகலும் ஆன்மாக்களுக்கு அருள் செய்து கொண்டிருக்கின்றான்.
 
0024: போற்றிக் கூறியும் புகழ்ந்து பாடியும் நின்மலனாகிய சிவனது திருவடியை இடைவிடாது தாரகமாகக் கொண்டு தெளியுங்கள். சிவபெருமான் திருவடிக்கே நம் செல்வமெல்லாம் உரியது என்று எண்ணி புறப்பொருளில் மயங்கிக் கிடக்கின்ற மனத்தை மாற்றி நிற்பவரிடத்தில் சிவன் நிலை பெற்று நிற்பான்.
 
0025: பிறவாதவனும் அழிவில்லாதவனும் யாவற்றையும் ஒடுக்குபவனும் பேரருளுடையவனும்  எல்லோர்க்கும் இடையறாது இன்பத்தை நல்குபவனும் ஆகிய சிவனை வணங்குங்கள்.  அவ்வாறு வணங்கினால் நீங்கள் அவனடி மறவாதவர்களாய் அஞ்ஞானம் நீங்கி ஞானப்பேறு அடையலாம்.
 
0026: ஆன்மாக்களை என்றும் தொடர்ந்து நிற்கும் சிவனை வணங்குங்கள்.  அவ்வாறு வணங்கினால் எங்கும் வியாபித்துள்ளவனும் விசாலமான உலகம் முழுவதும் கடந்து நின்றவனும்  சகஸ்ரதள கமலத்தின் மேல் உடனாய் இருந்தவனும் ஆகிய  சிவனது திருவடிப்பேறு கிட்டும்.
 
0027: சேர்க்கையின் இடம் என்று சொல்லப்படும் சுவாதிட்டான மலரின் கீழ் ஒளி பொருந்திய முகத்தையுடைய இறுதியில்லாத "இறைவனது கருணை நமக்கே உரியது" என்று அப்பெருமானைத் தினந்தோறும் வழிபடுவோரது புத்தியில் சிவன் தானே புகுந்து  பெயராது நின்றான்.  சுவாதிட்டான மலரில் பிரமனாகத் தொழிற்புரியும் சிவமே சகஸ்ரதளத்தில் சதாசிவ மூர்த்தியாக அருள் புரிகிறார்.
 
0028: எக்காலத்தும் எவ்விடத்தும் மாறுபட்ட தன்மையில் நீக்கமற நிறைந்துள்ள சிவன் தனக்கென செயலின்றி உள்ளான்.  ஆன்மாவோடு பொருந்தியுள்ள சிவன் தன்னை வழிபடுவோர்க்கு வழிகாட்டியாக உள்ளான்.
 
0029: மாறாத சிவ நினைவு கொண்ட அடியார் மனத்திடை ஆணிவேர் போல் இருக்கும்
சிவனே சீவர்களின் சீவ யாத்திரை முழுவதும் உதவக்கூடிய உண்மையான உறவு ஆவான்.
                                                                                                                                                                    0030: உலகவர் வேண்டாது தானே பெய்யும் மழை போல இல்லாமல் பால் வேண்டி பசுவை அழைக்கும்
கன்றுக்கு பசு பால் கொடுப்பது போல தன்னை அண்டி வேண்டுவோர்க்கு ஞானத்தை சிவன் அருளுவான்.
 
0031: இறைவன் பூவுலக வாசிகளுக்கு மனித வடிவிலும், புவர்லோக வாசிகளுக்கு ஒளிவடிவிலும், சுவர்லோல வாசிகளுக்கு தேவவடிவிலும், சித்திகளை விரும்பியவர்க்கு சித்தராகவும், நிறைவு பெற்ற மனத்தை உடையவர்க்கு நாதமாகவும் காட்சியளிக்கிறான்  அத்தகைய சிவனை அகக்கண்ணில் அறிவாக எண்ணி அன்பு பூண்டிருக்க வேண்டும்.
 
0032: விரிந்த நீரால் சூழப்பெற்ற ஏழு உலகங்களையும் கடந்துள்ளவனும், சீவ கோடிகளின் பத்துப் பக்கங்களிலும் நிறைந்துள்ளவனும், மானிடர்கள், தேவர்கள் அனைவர்க்கும் தலைவனு மாகிய சிவனின் அகண்ட வியாபகத் தன்மையை ஒருவரும் முழுதும் அறிந்து இயம்ப முடியாது.
 
0033: உண்மைப் பொருளான சிவத்தை உணராது பல கடவுளர்களைப் பல கிரியை விதியால் வழிபடுவதாலும், தோத்திரப் பாடல்களைப் பாடுவதாலும் அமைதி கிடைக்காது.  அதனால் பயனில்லை.
 
0034: சிவனின் ஆயிரம் திருநாமங்களை எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பவர்களின் சீவனில் சிவமணம் எப்போதும் வீசும்.
 
0035: சிவனைப் போற்ற போற்ற - சிவன் சகஸ்ரதளத்தில் கவிழ்ந்துள்ள அஷ்டதள கமலத்தை நிமிரும்படி செய்து - உங்கள் எண்ணத்தை உலக முகத்தில் இருந்து மேல் முகமாகச் செய்து - உங்களது ஈசானமுகம் ஒளி மயமாக விளங்கச் செய்வான்.
 
0036: உயிருக்குத் தந்தையான இறைவனை, தனக்கு ஒப்பில்லாதவனை வேண்டுவோர்க்கு வேண்டியதை ஈயும் வள்ளலை ஊழியைச் செய்கின்ற முதல்வனை எந்த முறையில் வழிபட்டாலும் அவன் விரும்பி அருள் புரிவான்.
 
0037: வானத்தில் சந்திரனைப் போல இறைவன் இந்த உடலில் சந்திரமண்டலமாகிய சகஸ்ரதளத்தில் ஜோதி மயமாக இயங்கிக் கொண்டிருக்கிறான்.
 
0038: ஒரு தாயின் வயிற்றில் பிறவாதவன், பெரியவன், அரியவன், உருவமுடையவன் ஆகிய சிவனை சகஸ்ரதளத்தில் நின்று இடைவிடாது தோத்திரம் செய்வதே பெரிய தவம். 
 
0039: வாயாரப் புகழ்ந்து வாழ்த்துவாரது மனத்தில் ஜோதியாய் விளங்குபவனும் குற்றங்களைப் போக்கும் தீர்த்தம் போன்றவனும் தேவ தேவனுமாகிய இறைவனை அன்பினால் நேசித்து வணங்கினால் இறைவன் அருளைப் பெறுவது எளிதாகும்.
 
0040: ஆத்ம தத்துவத்தின் குறையை நினைந்து சிவனது திருவடியை வணங்கி வாழ்த்த வல்லார்க்குச் சிவன் " நீீ வேறு - உடம்பு வேறு " என்று உடலைப் பிரித்தறியும் ஆற்றலை அருளுவான்.
 
0041: விந்து நீக்கத்தைத் தடுத்து உண்ட  தேவர் பிரானாகிய சதாசிவமூர்த்தி நாதமயமாகி
நின்று இருட்டை மாற்றி ஒளி மண்டலத்தை விளங்கச் செய்தான்.  அத்தகைய சிவன் மனம் தூயராய்ப் போற்ற வல்லார்க்கு இனமாக வந்து பொருந்துவான்.
 
0042: சிவனை இடைவிடாது தோத்திரம் செய்பவர் மாயையோடு கூடிய உலக சம்சாரப்
பந்தத்தில் உழல்பவராயினும் அவ்விறைவன் அவர்களோடு வந்து பொருந்துவான்.
 
0043: சிவனது திருவருளைச் சிந்தித்து அவனது திருவடியைப் புகழ்ந்து பாடி அன்பினால் கசிந்துருகி சிவஞானத்தில் நிலைத்திருப்போர்க்கு சிவன்  அவரது மனத்தைச் செம்மைப்படுத்தி அவரது சீவனில் புகுந்து பூரணமாக நிறைந்திருப்பான். 
 
0044: சிவனது திருவடியை அன்போடு வணங்க வேண்டும்.
 
0045: உலகம் சிவன் விதித்த முறையின் படியே நடக்கின்றது. நமது வாழ்க்கையும் சிவன் விதித்தபடியே தான் நடக்கின்றது.  அந்த சிவனை தோத்திரம் செய்து வழிபடு வோர்க்கு சிவன் முத்தி நெறி காட்டியருளும் சிவசூரியனாவான்.
 
0046: உருவமாக வழிபட்டாலும், அருவமாக வழிபட்டாலும், எவ்வண்ணம் வழிபட்டாலும் அவ்வண்ணம் அருளுபவன் சிவன்.
 
0047: இல்லறத்திலிருந்து இறைபணி செய்பவர் பெரிய தவத்தையுடையவர்க்கு ஒப்பாவார்.      இடைவிடாது தியானத்தில் இருப்பவர் இறைவனது அன்பில் பொருந்தியிருப்பர்.   உலகவர் விவகார வேளையில் உலகத்திலும் மற்றைய நேரங்களில் சிவ சிந்தனையிலும் இருந்தால் இல்வாழ்க்கையானது அவரைப் பந்திக்காது.  இல்லற வாழ்க்கையில் சிவசிந்தனையோடு
இருந்தால் பேரின்பம் கிட்டும்.
 
0048: இரவு பகல் என்ற பேதமின்றி பூமியில் உள்ளோர்க்கு அருளும் மேலான என் தந்தையை அடியார் வணங்கும் தேவ தேவனை என்னுடைய சிரசில் தியானித்துப் பொருந்தியிருந்தேன்.
 
0049: சீவனாகிய பசு ஆணவம், கன்மம், மாயையால் கட்டப்பட்டு துன்புறுவதை உணர்ந்து பதியாகிய சிவனை நினைந்து பொருந்தியிருந்தால் பாவக் கடலைக் கடந்து முத்திக் கரையை அடையலாம்.
 
0050: பாடியும், மலர்களைத் தூவி அர்ச்சித்தும் இறை சிந்தனையில் ஆடியும் மனதில் வைத்து அன்பால் போற்றியும் சகஸ்ரதளத்தில் இறைவன் திருவடி கண்டு தியானித்தும் இவனே தேவ தேவன் என நான் அறிந்தபடியெல்லாம் இறைபணி செய்வேன்.
 
2. வேதச் சிறப்பு    (0051 - 0056)
 
0051: வேதத்தில் நாம் ஓதத்தக்க நீதிகள் எல்லாம் உள்ளன. எனவே தர்க்க வாதத்தை விட்டு வேதத்தை ஓதி அனுபூதிமான்கள் முக்தி பெறவேண்டும். 
 
0052: வேதத்தை உரைத்த இறைவன் பிரமப்பொருள் விளங்கவும் உண்மைப் பொருளை உணர்த்தவும் வேதத்தைக் கூறி அருளினான்.  எனவே வேதத்தின் உட்கருத்தை அறியாது ஓதிக் கொண்டிருப்பவன் உண்மை வேதியராக மாட்டான்.
 
0053: மந்திர வடிவான அழகிய வேதத்தில் ஞானியர்க்குத் தேவையான உள்ளம் உருக்கும் மந்திரங்களாயும் பிறரை அழிக்கும் கம்பீரமான மந்திரங்களாயும் சூக்கும நிலையில் நின்றவன் முக்கண்ணையுடைய சிவபெருமானாவான். பலனை விரும்பாத ஞானியர்க்கும் பலனை விரும்பும் இல்லறத்தார்க்கும் பலனை அளிப்பவன் சிவன் ஒருவனேயாவான்.
                                                                                                                                                                    0054: அறிவு அறியாமையற்ற, வீடு பேறாயுள்ள சிவனைப் பொருந்துமாறு குருவால் உணர்த்தப் பெறும் நெறியே தெய்வீகநெறி.
 
0055: ஆறு அங்கங்களாக ஆராயப்பெற்று வரும் வேதத்தை அருளிச் செய்த சிவனை நம் உடம்பின் பகுதியாகக் கொண்டு அவனது இயல்பை உணர வேண்டும்.  சிவன் வெளியே இருப்பதாக வைத்து பயன் கருதி செய்யும் கருமங்கள் வினையைத் தான் பெருக்கும்.
 
0056: பாட்டும் இசையும் ஆட்டமும் இறைவனது உண்மையை உணர அமைக்கப் பெற்றவை.  இந்த உண்மை உணராது ஆடல் மகளிர், அவற்றுக்கான இசையின் புறத்தோற்றத்தில் மயங்குபவர் வேத நெறி காட்டும் உண்மை நெறி நில்லார்: விரத மில்லாதவராவார்:      வேள்வியில் விருப்பமுடையவராய் உண்மைப் பொருளை உணராது மாறுபாடுற்று அழிகின்றார்.
 
3. ஆகமச் சிறப்பு   (0057 - 0066)
 
0057: உமாபாகன் இருபத்தெட்டு ஆகமங்களை அறுபத்தாறு பேர்களுக்கு உச்சியை நோக்கியுள்ள ஈசான முகத்திலிருந்து உபதேசித்து அருளினான். (சதாசிவ மூர்த்திக்கு ஐந்து முகங்கள்:- 1.சத்தியோசாதம்2.வாமதேவம்3.அகோரம்4.தற்புருடம்5.ஈசானம்)
 
0058: ஆன்மாக்களின் மீதுள்ள கருணையால் இறைவன் வழங்கிய இருபத்தெட்டு கோடியே நூறாயிரம் ஆகமங்கள் ஈசனது பெருமையை உரைக்கும்.
 
0059: சூக்கும வடிவில் உள்ள கருத்துக்களே ஒலி வடிவில் மொழிகளாக உள்ளன.   சிவன் சொல்லிய அறத்தை பதினெட்டு மொழிகளிலும் கருத்து கெடாமல் வெளிப்படுத்த அறிஞர்களால் முடியும்.
 
0060: ஆகமத்தை அனுபவமின்றி அறிந்தால் பயனில்லை.
 
0061: சிவபெருமானே பரஞானம் அபரஞானம் அறிவித்து ஆகமத்தில் அறிவாய் விளங்குகின்றான்.
 
0062: சிவமாகிய பரம்பொருளிடமிருந்து சத்தி, சதாசிவர், மகேசர், உருத்திரர், திருமால், பிரம்மன் ஆகியோர் அவரவர் அறிவில் பெற்ற ஒன்பது ஆகமங்கள் எங்கள் குருநாதனாகிய நந்தியெம்பெருமான் வழி முறையாகப் பெற்றவை ஆகும். 
 
0063: குருபரம்பரையில் பெற்ற ஒன்பது ஆகமங்களின் சாரமே திருமூலரின் திருமந்திரமாகும். அவற்றில் 1. காரணம் 2. காமிகம் 3. சிந்தியம் 4. சுப்பிரம்  இவை நான்கும் சிவபேதம்.
5. வீரம் 6. வாதுளம் 7. காலோத்ரம் 8. மகுடம் இந்த நான்கும் ருத்திர பேதம். 
9. யாமளம் தந்திர சாஸ்திரம் என்றும் கூறுவர்.
 
0064: இறைவன் அருளால் வந்த சிவாகமங்கள் கணக்கற்ற கோடிகளாகத் தொகுத்துச் சொல்லப் பெற்றிருப்பினும் இறைவன் சொன்ன உண்மைப் பொருளை உணராவிடின் அவை அனைத்தும் நீர் மேல் எழுத்துப் போல் பயனற்றவை.
 
0065: சிவபெருமான் பராசக்திக்கு ஆகமப் பொருளை சிருட்டி தொடங்கும் முன் வடமொழியிலும் தென் மொழியிலும் உபதேசம் செய்தருளினான்.
 
0066: ஆன்மாக்களை பந்தத்தில் விடுகின்ற முறைமையினையும் ஆன்மாக்களைப் பந்தத்தில் நின்று நீக்கும் முறைமையினையும் கண் இமைத்தல் நின்று உயிர் போகின்ற முறைமை யினையும்  தமிழ், வடமொழி இரன்டிலும் உணர்த்தப் பெறு- கின்ற சிவனை ஆகம அறிவினால் அறியமுடியாது.
 
4. குரு பாரம்பரியம்  (0067 - 0072)
 
0067: சிவனிடம் உபதேசம் பெற்ற குருநாதர் என்மராவர்.  அவர்கள் 1.சனகர் 2.சனந்தனர் 3.சனாதனர் 4.சனற்குமாரர் 5.சிவயோகமாமுனி 6.பதஞ்சலி 7.வியாக்ரபாதர் 8.திருமூலர்.
 
0068: சிவனருளால் மூலாதாரச் சக்கரத்தில் விளங்கும் உருத்திரனை அடையலாம்.  சிவன் வழிகாட்ட மூலாதாரத்திலிருந்து மேலேறிச் சிரசின் மேல் நிலைபெறலாம்.  சிவனருள் எல்லாவற்றையும் செய்யும்.  சிவனது அருளால் குருநாதன் என்ற தகுதியையும் பெறலாம். 
 
0069: திருமூலர் மூலம் திருமந்திரம் உபதேசம் பெற்ற ஏழுமாணாக்கர்கள். 1.மாலாங்கன் 2.இந்திரன் 3.சோமன் 4.பிரமன் 5.உருத்திரன் 6.காலாங்கி 7.கஞ்சமலையன்.
 
0070: சனகாதியர் நால்வரும் நான்கு திக்குகளுக்கு ஒருவராய்ச் சென்று தாம் பெற்ற அனுபவங்களைப் பிறர்க்கு உணர்த்தி மேன்மையுடைய குருநாதர்களானார்கள்.
 
0071: இறைவன் சனகாதி நால்வருக்கு உபதேசித்தது துறவு நெறி. சிவயோக மாமுனி, பதஞ்சலி, வியாகிரபாதர் மூவருக்கும் உபதேசம் செய்தது உலகுடன் இருந்து உலகுக்கு அருளும் நெறி.  இரு நெறிகளிலும் பிறவி நீக்கம் ஒன்றே குறிக்கோளாகும்.  இரு
நெறியையும் இணைப்பதே திருமூலர் நெறியாகும். 
 
0072: எட்டுத் திக்குகளிலும் மழை பெய்தாலும் யோகியர் சிரசில் விளங்கும் செவ்வொ -ளியில் அழுந்தியிருத்தல் வேண்டும்.  செய்கருமங்களை விடாது செய்ய வேண்டும் என்று சிவன் சனகாதியர் நால்வருக்கும் உபதேசித்தருளினான்.
 
5. திருமூலர் வரலாறு  (0073 - 0094)
 
0073:  பக்திநெறி - உருவ வழிபாடு.  அநாகத சக்ர தியானம் - ஞானநெறி.  அருவ வழிபாடு - அக்ஞா, சகஸ்ரதள தியானம்.  சிவபெருமானின் திருவருளால் திருமந்திரமாகிய ஆகமத்தைச் சொல்லத் தொடங்குகிறேன் - திருமூலர்.
 
0074: சிவயோகம் பயில்பவர் தேகத்தைச் சூழவும் தேகத்து உள்ளும் ஒளிக்கதிர்கள் பாய்ந்து உள்ளும் புறமும் இணைவதை அறிவார்.  ஏழு ஆதாரங்களையும் ஒளி நெறிபற்றி உள்ளும் புறமும் ஒன்றுபடுத்தி "ஒளி மயமாக இருந்தேன்" என்கிறார் திருமூலர்.
 
0075: அண்டம் என்ற ஆகாயக் கூற்றில் சிவத்தை நோக்கி மேலேறும் போது கீழே சுருண்டு கிடந்த குண்டலினி நிமிர்ந்து மேல் செல்கிறது.  சமாதிக்கு சென்று மீள்பவர் மேல் பேரறிவுடன் கூடிப் பின் பிரிந்து மீள்கின்றனர்.    ஏழு ஆதாரங்களிலும் பொருந்தியிருந்து அந்த ஏழு புவனங்களுக்கும் தலைவியாகிய அருமையான தவத்துக்குரிய சத்தியை சிதாகாயப் பெருவெளியில் பக்தியினாலே தரிசித்தபின் நான் அருளுடன் திரும்பினேன் என்கிறார் திருமூலர்.
                                                                                                                                                                   0076: திருமூலர் உணவையும் மறந்து சதாசிவ தத்துவம், முத்தமிழ் வேதம் ஆகியவற்றில் அளவுக்கு மீறிய ஆராய்ச்சியால் மனம் தெளிந்து உண்மைப் பொருளை உணர்ந்திருந்தார்.
 
0077: பிரபஞ்ச சிருட்டிக்கு காரணமான ஆற்றல் நீளவொளியில் உள்ளது.  நீல ஒளியில் இருந்தே பிரபஞ்சம் படைக்கப்படுகிறது. பிரபஞ்சத்தில் அறிவாகிய செவ்வொளி எல்லா உயிர்களிலும் கலந்துள்ளது. இந்த இரு ஒளிகளால் சூக்கும உலகங்களும் ஸ்தூல பூதங்களும் படைக்கப்பட்டு பஞ்ச கிருத்தியம் நடைபெறுகிறது.  இந்த உண்மையை உணர்த்தவே
திருமூலர் வந்துள்ளார்.
 
0078: சிவபெருமான் சீவர்களைப் பக்குவம் செய்யும் பொருட்டு வீணாத் தண்டில் பொருந்தி யிருக்கும் சத்தியின் திருவடியைச் சேர்ந்திருந்தேன்.  சுழுமுனையில் விளங்கும் சிவசத்தியோடு பொருந்தியிருந்தேன் என்கிறார் திருமூலர்.
 
0079: சிவனது திருநாமங்களை ஓதி சகஸ்ரதளத்தில் அம்மையப்பனை வழிபட்டு சிவமாகிய அறிவின் நிழலில் சேர்ந்திருந்தேன் - திருமூலர்.
 
0080: தேவர்களும் துதிக்கும்படியான இரவும்பகலுமற்ற சுயம்பிரகாச வெளியில் நந்தி தேவரின் திருவடியின் கீழ் எண்ணற்ற காலம் அமர்ந்திருந்தேன் என்கிறார் திருமூலர்.
 
0081: தன்னை பற்றித் தமிழில் ஆகமம் செய்யும் வண்ணம் தனக்கு நல்ல ஞானத்தை அளித்ததுடன் இறைவன் தனக்கு பிறவியையும் கொடுத்து அருளினான்  என்கிறார் திருமூலர்.
 
0082: ஏழுஆதாரங்கள், விந்து, நாதம் ஆகிய ஒன்பதும் கடந்த நிலையில் சத்தியும் சிவமும் கலந்த சகஸ்ரதளத்தில் நின்று தோத்திரம் செய்து நல்ல அறிவு மயமான சிவனை வணங்கி  சிவனது திருவடியின் கீழ் இருந்தேன் என்கிறார் திருமூலர்.
 
0083: திருக்கைலாயத்திலிருந்து செல்லுகின்ற சூக்குமமாயுள்ள விண் வழியாக காமத்தை வெல்கின்ற அறிவு பொருந்திய ஞான முனிவரான சிவனை நினந்து இவ்வுலகு வந்தேன் என்கிறார் திருமூலர்.
 
0084: சிவபெருமான் வேதத்தின் சொல்லையும் பொருளையும் எனக்கு உணர்த்தி அருளினான்  என்கிறார் திருமூலர்.
 
0085: ஆகாயத்தை இடமாகக் கொண்ட அறிவு சொரூபமான சிவத்தைப் பற்றிச் சொல்லப் போனால் அது உடலைப் பற்றிய உணர்வாகவுள்ள மந்திரமாகும்.  அந்த மறை பொருளைச் சிந்தித்தால் சிரசில் உணர்வு உண்டாகிவிடும்.  அப்படி இறைவனைப் பற்றி நினைந்து தான் அடைந்த இன்பத்தை இவ்வுலகமும் அடைவதாக என்கிறார் திருமூலர்.
 
0086: பிறப்பிறப்பற்ற சிவனை சுழுமுஇனையில் கண்டவர் பக்தியோடு திருமந்திரம் ஓதத் தகுந்தவர்.
 
0087: இறைவன் உடல் சீராக இருக்கும் வண்ணம் "சாடாராக்கினி" யை வைத்தான்.  ஏழுலகங்களும் சீராக இருக்கும் வண்ணம் "வடவாமுகாக்கினி "யை வைத்தான். எந்த குழப்பமும் இல்லாதிருக்க எல்லாப் பொருள்களையும் அடக்கி வைத்துள்ள திருமந்திரத்தை வைத்தான். உலகையும் உயிரையும் வாழவைக்க உதவுவது திருமந்திரம்.
 
0088: திருமாலும் பிரமனும் கூட காண முடியாத சிறப்பினை உடையது இறைவனது வடிவமாகும்.
 
0089: கற்பனையாகத் தோன்றும் உலகில் குருபரன் ஒழிவினை நல்கித் திருவடி தீட்சைச் செய்தருளினான்.
 
0090: அறியப்படும் பொருளையும், அறிகின்ற அறிவையும், அறிகின்றவனையும், மாயையின் விவரங்களையும் சுத்தமாயையில் விளங்கும் பரை, ஆதி, இச்சை, ஞானம், கிரியை ஆகிய சர்வசத்தியின் கூட்டத்தையும், அவ்வித சத்திகளில் விளங்கும் சிவத்தையும், சொரூப சத்தியின் பிரபாவத்தையும் திருமந்திரத்தில் அறியலாம்.
 
0091: அசைவற்றிருக்கும் அறிவு மயமான சோதியான நடராஜ மூர்த்தியின் ஆணையினால் திருமூலர் திருக்கையிலையில் இருந்து தென்னாடு வந்தார்.
 
0092: சிவனின் அருளால் மூலாதாரத்தில் உள்ள உருத்திரனையும், பின் சிவனின் அருளால் சகஸ்ரதளத்தில் உள்ள சதாசிவமூர்த்தியையும் தரிசித்து மெய்ஞானம் பெற்று சிவனருளில் நிலை பெற்றிருந்தேன்.
 
0093: மூலாதாரத்தில் உள்ள சிவசத்தி சீவனை மேலே செலுத்தியபோது பிரணவத்தின் உச்சியை அடையும்.  நாத நிலை முடிவு பிரணவத்தின் முடிவாகும்.  பிரணவமாகிய நாதம் முடிந்த நாதாந்த நிலையில் பிரணவ உச்சியில் ஆன்மா சோதி சொரூபமாக விளங்கும்.
பிரணவம்: அகாரம், உகாரம் மற்றும் மகாரம் கலந்த ஓம்.
நாதாந்தநிலை: அகாரம், உகாரம், மகாரம், நாதம், விந்து ஐந்தும் கடந்த நிலை.
 
0094: இரவிலும் பகலிலும் சுயம்பிரகாசமாய் ஒளி வடிவாய் இருக்கும் சிவனை புகழ்ந்து தியானித்து அடைய முயல்வேன்.
 
6.அவையடக்கம்  (0095 - 0098)
 
0095: ஏகமாய்ச் சத்தாய் சித்தாய் ஆனந்தமாய் உலக முழுவதும் தோன்றவும் ஒடுங்கவும் நிலைக்களமாகிய கடவுளின் பெருமையையும் நீலத்தையும் அகலத்தையும் பரப்பினையும் யார் அறிய வல்லவர்? தனக்கென நாமமும் ரூபமும் இல்லாத பெரிய சுடரின் அடியையும் முடியையும் யார் அறிய வல்லவர்?
 
0096: பாடும் நெறியில் புகழைப் பாடவோ, பக்தி நெறியில் ஆடவோ, போக நெறியில் நாடவோ, ஞான நெறியில் தத்துவத்தை ஆராயவோ அறியாத நான் உய்வு பெறுவது எங்ஙனம்? - என்கிறார் திருமூலர்.
 
0097: "வேதஸ்வரத்தினில் நாதரூபமாக விளங்கும் இறைவனை நாம் உணர முடியாது" என்று  அடக்கமாக கூறுகிறார் திருமூலர்.
 
0098: இறைவனை அன்னியப் பொருளாக பாவித்து வழிபடும்  முனிவர்களும் தேவர்களும் சிவனை அறியமுடியாது.  சிவனை சீவனுக்குள் அகங்காரமின்றிக் காண்பவரே சிவனை அறிய முடியும்.
7. திருமந்திரத் தொகைச் சிறப்பு  (0099 - 0100)
 
0099: மூவாயிரம் திருமந்திரங்களையும் பொருளுணர்ந்து காலை எழுந்தவுடன் ஓதினால் சிவனை அடையலாம்.
 
0100: திருமந்திரம் மூவாயிரம்  பாடல்களைக் கொண்டது.  அது ஒன்பது தந்திரங்- களாக உள்ளது.  முதல் ஐந்து தந்திரம் பொது.  பின் நான்கு தந்திரம் சிறப்பு. இந்த பொது-சிறப்பு தந்திரங்களை மூவாயிரம் பாடல்களை ஓதுவார்க்கு அது இம்மை மறுமைப் பயன் அளிக்க வல்லது.
 
8. குருமட வரலாறு  (0101 - 0102)
 
0101: கயிலாய பரம்பரையில் வந்த ஏழு மடங்களும் சன்மார்க்கத்தைப் போதிப் -பனவாம்.  மடத்தின் தலைவர் திருமூலர் அழகான ஆகமங்களைப் பொழிந்தார்.
 
0102: சிவ ஆனந்தத்தில் திளைத்திருக்கும் 1. காலாங்கர் 2. அகோரர் 3. திருமாளிகைத் தேவர் 4. நாதாந்தர் 5. பரமானந்தர் 6. போகதேவர் 7. திருமூலர் ஆகிய எழுவரும் பிறவி நோயற்ற சித்தர்களாம்.
 
9. பிரம்மன், விஷ்ணு, ருத்திரன் ஆகியோரது இயல்பு.   (0103-0112)
 
0103: ஆன்மாக்களுக்கு சுகத்தையளிக்கும் சங்கரன் மட்டுமே பிறப்பு இறப்பு எனும் தளர்வில்லாதவன்.  பிரமன், விஷ்ணு, ருத்திரன் மூவரும் பிறப்பிறப்பில் உழல்பவரே.
 
0104: சுவாதிட்டானச் சக்கரத்தில் இருந்து படைத்தலைச் செய்யும் பிரமனும்  மணிப்பூரக சக்கரத்தில் இருந்து காத்தலைச் செய்யும் விஷ்ணுவும், மூலாதாரச் சக்கரத்தில் இருந்து அழித்தலைச் செய்யும் ருத்திரனும் சிவனது அதிகாரத்தின் கீழ் உட்பட்டவர்கள். உயிர்களுக்கு உடம்பினைப் படைத்துக் காத்து அழித்துச் செய்யும் செயல்களால் இவர்கள் மூவரும் ஒரே தன்மையுடையவர்கள்.  இம்மூவரும் ஒருவரை விட ஒருவர் பெரியவர் அல்லர்.  சிவமே இம்மூவருக்கும் பெரியவர்.
 
0105: இருவினக்கும் அப்புறமாக இருக்கும், உடம்பினைப் படைத்துக் காத்து அழிக்கும் தொழில்களுக்கு அதிபதியான பிரம்மன், விஷ்ணு, ருத்திரன் ஆகியோரை உண்டாக்கிய மூலப் பொருளான சிவனே  உலகில் மாபெரும் தெய்வம்.  மாசில்லாத தூய்மையாளரே அப்பரம் பொருளை உணர முடியும்.
 
0106: சங்கரன் விந்து நாதம் சிறப்படையும் போது பிரம்மன், ருத்திரன்,விஷ்ணு, மகேசுவரன், சதாசிவன் ஆக ஐவராக ஆன்மாக்களிடம் விளங்குவான்.
 
0107: பிரம்மனும், விஷ்ணுவும், உருத்திரனும் சிவனுக்கு வேறானவர் அல்லர்.  அவர்கள் மூன்று கண்களையுடைய சிவனது வழி நின்று முத்தொழில் செய்து சீவர்களுக்கு நலம் புரிபவர்கள்.  அதனால் நந்தியின் சுற்றமாகிய பிரம்மன், விஷ்ணு, உருத்திரன் ஆகிய மூவரையும் வணங்கி மேன்மை பெறலாம்.
 
0108:  இறைவன் தன்னை வணங்கிய திருமூலரை "நீ பிரம்மா,விஷ்ணு ஆகியோருக்கு இணையாக பூவுலகில் போதகாசிரியனாக இருந்து ஞான அருள் பரப்பு" என ஆணையிட்டான்.
 
0109: வானவர்களும் மனிதர்களும் பிரம்மன், விஷ்ணு, ருத்திரன் ஆகியோரும் " நாதமாகவும் விந்துவாகவும்  உடலில் விளங்கும் இறைவன் சிவன் ஒருவனே " என்பதை சிவனருளால் உணர வேண்டும். 
 
0110: ஒளிவிடும் பரம்பொருளாகிய சிவனே பிரம்மன்,விஷ்ணு, ருத்திரன், மகேசுவரன், சதாசிவன் என ஐவராக இருக்கும் உண்மை நிலை உணராது அவர்களை வேறு வேறாக எண்ணுவது பேதைமை.     
 
0111: மேன்மையான நிலையில் எல்லாவற்றிலும் உள்ளும் புறமுமாகி நிற்கும் சிவனே  தான் விளங்காத வாறு மறைவாக சிருட்டித்தலில் பிரம்மனாகி விருப்பம் உண்டாக்குவதில் திருமாலாகி சங்காரத் தொழில் செய்யும் போது உருத்திரனாகவும் இருக்கிறான்.
 
0112: சிவபரம்பொருளின் ஒரு கூறாகிய சதாசிவனாகிய இறைவனே ஆகாயக் கூற்றில் பொருந்தி எல்லாத் தத்துவங்களிலும் ஊடுருவியும் வேறாயும் உள்ளான்.  உடலில் உயிராக நிற்பது ஒருகூறு.  அவனே பிராண ரூபமாக உடலில் இருப்பது மறு கூறு.  அசைவாகவும் அசைவற்றும் இருக்கும் தலைவன் அவனே.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
முதல் தந்திரம்:
1. உபதேசம்  (0113 - 0142)
 
0113: இறைவன் பரமாகாயத்தினின்று ஆன்மாக்களின் வினைக்கேற்ப திருமேனி தாங்கி, குளிர்ச்சி பொருந்திய தனது திருவடியை ஆன்மாக் களுக்கு பாதுகாவலாக அமைத்து உள்ளே இருந்து ஊன்,
உடல் முதலியவற்றை உருகச் செய்து ஒப்பில்லாத ஆனந்தத்தைக் கண்ணில் நின்று காட்டி பாசத்தை நீக்கியருளினான்.
 
0114: சிவபெருமான் தனது அருட்சத்தியைப் பதிய வைத்து ஆணவம்,கன்மம், மாயை போன்ற பாசங்களை போக்கியருளினான்.  மேலும் பாச இருள் வந்தடையா வண்ணம் சிவசூரியனை உதிப்பித்து நந்தியெம்பெருமான் பளிங்கு போன்ற சீவனில் பவளம் போன்ற செந்நிறமான சோதியைப் பதிப்பித்தருளினான்.
            (புலனறிவு பொறிகளின் வழியே சென்று உலகநாட்டம் கொள்கிறது.  உலக நாட்டம்
உள்ள வரையில் அருட்கண் விழிக்காது.  அருட்கண் விழித்தால் உலக நாட்டம் வராது. 
இந்த இரு நிலைகளும் சாதகன் மூளையில் அமைய வேண்டும்.)
            முன் மூளையில் ஒரு வித கனம் ஏறி ஐம்புலனறிவைத் தடை செய்து நெற்றிக்கு நேரே நீலவொளி தோன்றும்.  அதில் மனம் ஆழ்ந்து விடில் மனத்தின் கற்பனையும் ஓட்டமும் நின்று விடும்.   இதுவே நெற்றிக் கண்ணாகும்.  இந்தக் கண்ணே ஞானிகளின் சூக்கும திருஷ்டி நிலையாகும்.  உலக காரண நிலையை விரும்பின் இக்கண்ணால் அறிவர்.  இந்நிலையைப் பெற்றோரே தன்னையும் சிவத்தையும் அறிவர்.
 
0115: சிவன் என்றும் சீவன் என்றும் தளை என்றும் சொல்லப்படும் முப்பொருள்களில் சிவனைப் போன்று சீவனும் தளையும் மிகத் தொன்மையானவை.  சீவத்தன்மையும் தளை அல்லது பாசமும்   சிவனைச் சென்றடையா.  சிவன் சீவனிடம் விளங்கினால் கட்டுப்பட்ட நிலையும் பந்தமும் நீங்கி விடும்.
 
0116: மூங்கிலில் இருந்து தானே தோன்றும் தீ மூங்கிற்காட்டையே அழித்து விடுவது போல இம் மெய்யெனும் கோவிலில் குடி கொண்ட சிவன் தாய் சேயினது அழுக்கைப் போக்குவது  போல சீவனின்  ஆணவம்,  கன்மம், மாயை ஆகிய மும்மலங்களைப்  போக்கும் கருணைக் கடலில் உதிக்கும் சூரியனாவான்.  சீவன் பக்குவம் அடைந்த நிலையில் சிவன் தானே தோன்றி சீவனின் மல இருளைப் போக்குவான்.
மனிதனிடம் மாபெரும் ஆத்ம சத்தி உள்ளது.  அந்த சத்தி தனது இடை, பிங்கலை
என்ற சூக்கும நாடிகளால் தேகத்தை ஆளுகிறது.  அவ்வித நாடிகள் கண்ணுக்குப் புலப்படும் தூல உடலிலும் சூக்கும உடலிலும் உள்ளன.  இந்த ஆத்ம சத்தி நேர் மின்கதி, எதிர் மின்கதி போன்றவை.  இந்த ஆத்ம சத்தி எண்ணத்தோடு சேரும் போது எண்ண சத்தியாகிறது.  பொருள்களோடு தொடர்பு கொள்ளும்போது இந்த ஆத்ம சத்தி கிரியா சத்தியாகிறது.
இவ்விதமான ஆக்கச் செயலுக்கு மின் சத்திப் பெருக்கைப் பெறக் கண்ட நெறியே உபதேசமாயிற்று. பொருள்களுடன் பொருந்தி அறிவதில் ஒரு மின் காந்த சத்தி அமைகிறது என்பதைக் கிரியை வழி நிற்போர் கையாளுகின்றனர்.
தம்மிடமுள்ள இரு நிஒலைகளையும் ஒரு மிக்கச் சேர்ப்பதில் அவ்வித மின் காந்தத்தை அடையலாமென்று அடயோகிகள் பிராண அபான சேர்க்கையில் ஈடுபடுகின்றனர்.
இரு கண்களின் பார்வையைச் சேர்ப்பதில் ஞானயோகம் உள்ளது.
இரு காதுகளின் சுத்த ஞானத்தை ஒன்று படுத்துவதில் பிரணவம் உதிக்கும்.
ஸ்த்ரீயுடன் பொருந்திக் காமாக்கினியை யோகாக்கினியாக மாற்றித் தேகத்தைக் கடந்து மேலே சென்று விடலாம்.
 
0117: சீவனும் சீவனை மறைத்துள்ள பாசமும் சூரிய காந்தக் கல்லும் அதனைச் சுற்றியுள்ள பஞ்சும் போலாம்.  சூரிய காந்தக்கல் சூரியன் முன்னே பஞ்சை சுட்டு எரிப்பது போல சீவனது அறிவு  குருவின் (சிவனின்) முன்னே பாசம் நீங்கி விளக்கம் பெறும். சிவகுருவின் உபதேசத்தினால் தான் சீவனின் பாசம் நீங்கும்.
 
0118: சீவன் புறத்தே சென்று பற்றும் ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயீ போன்ற ஐந்து மலங்களையும் அகத்தேயுள்ள விஷய வாசனைகளையும் சீவனின் உயிர்க்குயிராக விரும்பி எழுந்தருளி யிருக்கும் சிவன் போக்கியருளினான்.
 
0119: சீவ அறிவு ஐம்புலன்களோடு  கூடியதாய் வழி அறியாது வெள்ளத்தில் அகப்பட்டது  போல் மயங்கி நிற்கும்.  சிற்றறிவு பேரறிவில் சென்று அடங்கியது போல குரு உபதேசம் தெளிவினை நல்கி நல்வழியைக் காட்டும்.  குரு உபதேசத்தால் சிவஞானம் மிகுந்து லட்சியத்தை அடைதல் கூடும்.
 
0120: பசுவின் பாலிடமிருந்து நீரைப் பிரிக்கின்ற அன்னப்பறவை போல சிதாகாயப் பெரு வெளியில் ஆடுகின்ற அம்பலவானனது ஒப்பற்ற ஆட்டம் சீவர்களிடமிருந்து வினையைப் பிரித்து விடும்.  அதனால் தீமை காரணமாகக் கருவி கரணங்களில் பொருந்திய பாவ புண்ணியங்கள் எல்லாம் ஏழு பிறவியிலும் வறுத்த வித்து முளையாவாறு போல பயன் தராவாம்.
 
0121: சிவயோகியர் உடம்போடு கூடியிருந்தாலும் உலக வாசனை அற்றிருப்பர்.  பிறவிக்குக் காரணமான கன்மத்தை அழித்து மேல் நிலை எய்த விழிப்பு நிலையிலேயே தூய்மையான துரிய நிலை எய்திப் பந்தங்கள் நீங்க, புலன் உயிர் வழி நின்று ஏகமாய் சிவயோகியர்கள் உடலின் அறிவும் செயலுமின்றி இருப்பார்கள்.
 
0122: சிவயோகமாவது சித்து(அறிவு)ப்பொருள்கள், அசித்துப்(அறிவில்லா) சடப் பொருள்கள் இவை இவை என்று விவேகத்தால் அறிந்து, உடம்பை வருத்தாது உணர்வை சுழுமுனை மார்க்கமாகச் சிரசுக்குக் கொண்டு செல்லும் சிவராஜயோகம் அறிந்து அங்குக் காணும் சிவவொளியில் புகுந்து நின்று வேறு வகையான தீமை தரும் யோகத்தை மேற்கொள்ளாது அவனுடைய பதியாகிய பரமாகாய மண்டலத்தில் நின்று உய்யும்படியாக தோழமை நெறியை சிவன் அருளினான்.
 
0123: உலகமெல்லாம் சிவமாகவே இருக்கின்ற உண்மையை உணர்த்தியருளினான். தேவர் களும்
அறிய முடியாத இன்பஉலகை எமக்கு வழங்கியருளினான்.  பரமாகாய வெளியில் திருநடனம் புரிகின்ற திருவடியை எமக்குச் சூட்டிஅருளினான். சிவமும் சத்தியும் பிரிப்பற்ற பேரின்ப நிலைமாகிய அருள்வெளியையும் வழங்கியருளினான் எம்பெருமான் சிவன்.
 
0124: சிவன் விளங்கும் சிதாகாயப் பெருவெளியில் ஆன்மாவினது இச்சை, ஞானம், கிரியை ஆகியவை  சிவனது இச்சை, ஞானம், கிரியையில் கலந்து அடங்கி ஒடுங்குவதை  அறிவில் தெளிந்து கண்டவரே சிவ சித்தராவார்.
 
0125: சித்தர்கள் சிவலோகத்தில் பெறும் பேரின்பத்தை இங்கேயே சமாதி நிலையில் பெறு வார்கள்.  நாதத்தையும் நாதமுடிவாகிய நாதாந்தத்தையும் தம்முள்ளேயே தரிசிப்பார்கள்.  சித்தர்கள் அழிவற்ற வராய்க் குற்றமற்றவராய்த் தூய்மையான இன்பத்தில் உறைபவராவர்.  அவ்வாறான மேல் நிலையிலுள்ள  சித்தர்களுக்கு முத்திக்கு வழியாகவுள்ளது முப்பத்தாறு தத்துவங்களாகும்.சித்தர்கள் இல்வாழ்வைக் கொண்டு இவ்வுலகிலேயே முத்தி பெற்றவராவர்.
முத்திக்கு வழி காட்டும் முப்பத்தாறு தத்துவங்கள்:
ஆன்ம தத்துவம் - 24, வித்தியா தத்துவம் - 7, சிவ தத்துவம் - 5.
 
0126: சித்தர்கள் முப்பத்தாறு தத்துவங்களையும் ஏணிப்படியாகக் கொண்டு ஒப்பற்ற சிவானந்த ஒளியில் புகுந்து இன்புற்றனர்.
 
0127: சிவ சித்தர்கள் சிவமாந்தன்மை எய்தி எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பர். எல்லாம் சிவன் செயல் என்று யாவற்றையும் தரிசித்துக் கொண்டு இருப்பர். மூன்று காலங்களின் தன்மைகளை உணர்ந்து தங்களுக்கென எந்த ஒரு செயலுமின்றி இருப்பர்.  அழியாத நிலையை சித்தர் எய்தினமையால், அழியும் தன்மைத்தான கால இயல்பை அறிந்தபடியால், எல்லாம் சிவன் செயல் என்று நடந்ததைப் பற்றியும் நடக்க வேண்டியதைப் பற்றியும் கவலை கொள்ளாது தற்போதம் கெட்டு ஆன்ம சுத்தி பெற்றிருப்பர்.
 
0128: ஆன்ம சுத்தி பெற்ற சித்தர்கள் பராகாயத்திலே பொருந்தியிருப்பர்.  அவ்வொளியில் நாத முடிவான நாதாந்த நிலையில் தம் செயலற்று கிடப்பர். நாதத்தைக் கவனித்துக் கொண்டு யோக நித்திரை செய்வர்.  அதுவே சும்மா இருக்கும் நிலை.
 
0129: சித்தர்கள் சிவலோகத்தைத் தம்முள்ளே கண்டு யோக நித்திரையில்  சிவனோடு பொருந்தியிருந்து சிவ போகமாகிய பேரின்பத்தை அனுபவிப்பார்கள்.
 
0130: அறிவுக்கு எல்லையாகவுள்ள சிவனை எம்முறையில் அணுகுகிறார்களோ அம்முறையில் அவனும் இறங்கி வந்து அணுகுவார்க்கு அருள் புரிவான். சந்திர மண்டலத்தில் விளங்கும் சத்தியாகிய ஆன்மாவில் சூரியனான தான் இணந்து செம்மையான ஒளியை வீசுவான்.
 
0131: சிவயோகியர் சிரசின் மேல் விளங்கும் சிவனின் செவ்வொளியினூடே கொடி போன்று பச்சை நிறமாய் சத்தி பின்னிக் கிடக்கும்  சிவசத்தி தாண்டவம்  கண்டு பெருமை பெறுவர்.
 
0132: சிவயோகியர் உலகை விட்டுப் பிரிந்து செல்லாது உலகில் நின்று உலகவர்க்கு உதவுவதையே கொள்கையாகப் பெற்றனர்.  உலக சேவை செய்வாராயினும் பந்தமின்றிச் செய்வதால் பிறவிக்கு வாராத பெரும்பயன் பெற்றனர்.  இறைவனது திருவடியில் அகலாது நிற்கும் வாய்ப்பைப் பெற்ற இவர்கள் உலகவரோடு பேசித் திருத்தாது மௌன நிலையில் உலகவரின் மன மண்டலத்தில் பொருந்தி அறிவுறுத்துபவராவர்.
 
0133: அண்டத்திலும் அணுவிலும் நிறைந்த சிவனின் அருமையையும் எளிமையையும் ஒரு சேர உணர்ந்த சாதகர் மன ஒருமைப்பாட்டுடன் ஆமையைப் போல் ஐம்பொறிகளையும் புறத்தே செல்லாது உள்ளுக்குள் இழுத்துக் கொண்டு பெருமை சிறுமையாகிய இருமைகளையும் குற்றமின்றி உணர்ந்திருப்பர்.
 
0134: எண்ண அலைகள் இல்லா மனத்தோர் நல்லாசிரியன் கூறும் உபதேச மொழிகளை  மௌனத்தில் உணர்ந்தால் தூல உடம்பு பற்றி சிந்தை ஒழிந்து எல்லைக்குட்படாத அகண்ட சோதியுடன் பொருந்தி சிவமாவார்.
 
0135: சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தமாகியாக ஐந்து தன்மாத்திரைகளும் அறிவற்ற அகங்காரத்தில் ஒடுங்கும்.  அகங்காரம் அறிவு மயமான சிவனில் ஒடுங்கும். எனவே ஆன்மாவை சிவ அருளால் நீராட்டித் தூய்மை செய்வாயாக.
 
0136: 0136: சீவன் சிவனில் கலந்ததும் உலக ஆசை இறைவன் ஆசையாக மாறி மனிதனின் சீவசுபாவம் மாறி விடுகிறது.  மேக நீரில் உப்பு ஏறாதது போல அகண்ட சிவ வியாபகத்தில் சீவ குணங்கள் அடக்கப்பட்டு விடுகின்றன.
 
0137: இறைவனின் எல்லையற்ற பேரண்டத்தில் சீவனது அண்டகோசம் அடங்குகிறது.  உடம்புகள் தோறும் நின்ற உயிர்கள் எல்லாம் சேரும் இடம் இறைவனது திருவடியே ஆகும்.
 
0138: ஒளியே சிவன் உறைகின்ற உலகம்.  ஒளியான திருவடியே சிவமாம்.  ஒளியே சிவனை அடைவதற்குரிய நெறியாகும்.  அக நோக்கு உடையவர்க்கு ஒளியே புகலிடமாகும்.
 
0139: சிவகுருநாதனை சிரசின் மேல் சோதிப் பிழம்பாகக் காணுதல் தெளிவினைத் தரும்.  சிவனின் "சிவாயநம" எனும் ஐந்தெழுத்தைச் செபித்தல் தெளிவினைத் தரும்.  சிவனின் உபதேச மொழியை அதாவது "ஓம்" என்ற நாதத்தைக் கேட்பது தெளிவினைத் தரும். சிவனது ஒளியான திருமேனியை இடைவிடாது நினைத்தல் மிக்க தெளிவினைத் தரும்.  சிவகுருநாதனால் நல்ல தெளிவு உண்டாகும்.
 
0140: ஆன்மா தானே தத்துவங்களை விட்டு இறைவனைச் சந்திக்கும் பேறு பெற்றால் ஐம்புலன்களின் வழி ஓடும் மனம் ஆன்மாவின் வசமாகி  விடும்.  புலன்களின் விஷய சுகங்களின் இயல்பு மாறி அப்புலன்களே ஆன்மாவை இறைவன் வழி நிற்கச் செய்யும்.  உலக போகத்தில் விருப்பம் இல்லாமல் போய் பர போகத்தில் விருப்பம் உண்டாகும்.
 
0141: ஒளியான திருவடியை இடைவிடாது சிரசில் கூடி திருவடி உணர்வைப் பெறுவதன் மூலமும் உடல் நினைவை விட்டு திருவடியை இடைவிடாது நினைந்து வணங்குவதன் மூலமும் சிவ திருவடி ஞானம் உண்டாகும்.
 
0142: குருநாதன் உபதேசப்படி நந்தியை அறிவினில் தியானித்தவர்  நாத சம்மியம் கிட்டி ஆகாய மண்டலத்தில் விளங்குவர்.
 
2.   யாக்கை நிலையாமை  -  உடம்பின் நிலையாமை (0143 - 0167)
 
0143: மண்பாண்டம் சுடப்பட்டதும் வலிமை பெறுவது போல தூல உடல் ஒளியாக மாற்றப்பட்டால் நெடுநாள் தேகம் நிலைபெறும்.  அவ்வாறு செய்யாவிடில் இருவினையால் விளைந்த உடல் அழிந்து விடும்.
 
0144: வினை போகங்களை அளவிட்டு வைக்கப்பட்ட உடம்பு வினை போகங்களை அனுபவித்து நீங்கியபின் சுகபோகங்களை உடனிருந்து அனுபவித்த மனைவியும் மக்களும் கூட வரமாட்டார்.  உயிரோடு வாழ்ந்த காலத்து கடைப்பிடித்த விரதத்தின் பயனும் ஞானமும் அன்றி வேறு எவையும் இறந்தோருடன் கூட செல்வது இல்லை.
 
0145: உடல் விழுந்த பின் ஊரார் எல்லாம் ஒன்று கூடி ஓலமிட்டு அழுது அது வரையில் உள்ள பெயரை மாற்றிப் பிணம் என்ற பெயரைச் சூட்டி தூதுவளை நிறைந்த சுடுகாட்டில் கொண்டு போய்க் கொளுத்தி விட்டு அவர் மீது  கொண்டிருந்த அன்பையும் அகற்றி இவ்வண்ணம் ஒருவர் இருந்தார் என்ற எண்ணமின்றி நீரினில் மூழ்கி விட்டு சென்றார்கள்.
 
0146: உடம்பு பழுதாகி உயிர் பிரிந்தால் மீண்டும் அந்த உடலில் உயிர் புக முடியாது.
 
0147: கபம் மேலோடி உயிர் பிரிந்த பின்னர் உடம்பை ஆடையால் மூடி சுடுகாட்டுக்கு கொண்டு போய் வைத்து வாய்க்கரிசி போட்டு காக்கைகளுக்கு இடுவர்.
 
0148: நல்ல முறையிலே  பக்குவமாகச் சமைத்த அறு சுவை உணவை உண்ட தலைவன்   மனைவியோடு குலாவியிருந்தார்.   இடப்புறம் நெஞ்சம் சிறிது வலிக்கிறது என்று சொல்லி கீழே படுத்தார்.  அப்படியே இறந்து ஒழிந்தார்.  உயிர் ஒரு நொடியில் உடம்பை விட்டு நீங்கும்.
 
0149: அரச போகத்தில் வாழ்ந்தவனும் இறந்த பின் மீண்டிலன்.
 
0150: இறந்த பின் காதலும் கசந்து நினைப்பையும் மறந்து பாடையில் வைத்து மனைவியர் பொருத்தமாக புலம்பி அழுது பற்றினையும் நீங்கிப் பிண்டம் போடுவார்கள்.   இறந்தபின் எல்லோரும் விட்டு விடுவார்கள்.
 
0151: இனிப் பயனில்லை என்று மருத்துவர் கை விட்டு விட, நினைவு கெட்டு உயிர்ப்- பியக்கம் நீங்க, நெய்யிட்டுப் பிசைந்த சோற்றைச் சுவைத்த நாக்கு முதலிய பஞ்சேந்திரியங்கள் செயல் இழக்க,  மை பூசிய கண்ணையுடைய மனைவியும் செல்வமும் இவ்வுலகத்திருக்கவே உடலை விட்டு உயிர் போக விடை கொள்ளும் முறை இதுவாகும்.
 
0152:உடம்பாகிய பந்தல் பிரிந்தது. உயிர் நிலையாகிய களஞ்சியம் கட்டு விட்டு போயிற்று.  உடம்பிலுள்ள ஒன்பது வாயில்களும் ஒரு சேர அடைபட்டன.  துன்பத்தைத் தருவதாகிய கால முடிவு விரைவாக வந்தடைய அன்புடைய சுற்றத்தாரும் பிறரும் அழுது நம்மை விட்டகன்றார்கள்.  கால முடிவில் உடம்பின் கட்டுக் கோப்பு கலந்து பிராணன் நீங்கும்.
 
0153: நாட்டுக்கு நாயகனாகிலும் இறுதியில் சுடுகாட்டுக்குத் தான் செல்ல வேண்டும் என்பதை உணர்தல் வேண்டும்.
 
0154: தொன்னூற்றாறு தத்துவங்களும் நன்றாகச் செய்யப் பெற்ற மதில் சூழ்ந்த உடல் எனும் கோவிலில் வாழ்பவராவர். உடம்பு அழியத் தத்துவங்கள் முதலியன உடலைவிட்டு நீங்கும். 
 
0155: வீடு, மனைவி, செல்வம் ஆகிய புறச் சார்புகள் நீங்க உயிர் நீங்கிய உடலைப் பாடையில் வைத்து ஊருக்குப் பொதுவாகப் புறத்தேயுள்ள சுடுகாட்டை நோக்கி எடுத்துச் சென்று மயக்கத்தோடு பாடையினின்றும் எடுத்துச் சிதையில் வைத்து விட்டுச் சென்றார்கள்.
 
0156: உயிரோடு வாழ்ந்திருந்த உடலைச் சுடுகாட்டில் வைத்துவிட்டு எல்லோரும் நீங்கியதைக் கண்டும் மக்கள் "தம் உயிர் உடலை விட்டு நீங்காது" என்று தாம் தேடும் அருமையான பொருள்களில் மயக்கமுற்று அதனைத் தேடுவதற்கு அலைந்து மக்கள் வருந்துகின்றார்கள்.  யாக்கை நிலையாமை அறிந்தும் உலக மயக்கம் நீங்கவில்லை.
0157: பந்தமுள்ள உறவினரும் மனைவியும் மக்களும் ஊருக்குப் புறம்பேயுள்ள நீர்த்துறை வரை பிணத்தோடு வந்து நீங்குவர்.  வாழ்வுக்கு அடியாகவுள்ள தலையினை மறைத்து தீ மூட்டி பிறகு நீரில் தலை மூழ்குவார்கள் பந்தமற்றவர்கள்.
 
0158: மண்ணில் செய்யப் பெற்ற குடமாவது ஓட்டுக்கு ஆகும்.  ஆனால் இறந்த பின் இந்த உடம்பு ஒன்றுக்கும் ஆகாது.  உடம்பின் இழிவு உணர்க.
 
0159: பாதுகாவலோடு அமைக்கப் பெற்ற உடம்பு உயிர் நீங்கிய பின் பயனற்றதாய்க் கழிந்தது.
 
0160: சுரோணிதமாகிய அத்திப் பழத்தையும் சுக்கிலமாகிய அறைக்கீரை விதையையும் கிளரிக் கருப்பையாகிய உலையிலிட்டுக் கருவாகிய கூழைச் சமைத்தனர்.  சுரோணிதமாகிய அத்திப் பழத்தை சுக்கிலமாகிய அறைக்கீரை வித்து உண்டு சிசுவாய் வளர்ந்து ..வளர்ந்து.....வளர்ந்து.....பின் அழுது மாண்டு இறுதியில் சுடுகாட்டுக்குச் சென்றார்.
 
0161: நடு நாடியாகிய சுழுமுனையில் பிராணனைச்  செழுத்தாமையால் உடம்பு அழிந்து கெடுகிறது.
 
0162: உயிர் நடனம் செய்த உடம்பாகிய கூடம் அப்படியே கிடந்தது.  முன்னிருந்த அழகு இப்பொழுது அவ்வுடம்பில் இல்லை.  அசைந்தாடிக் கொண்டிருந்த பிராண ஓட்டமும் நின்றது.  அவ்வாறு பிராணன் நீங்கியதும் உறவினரும் உற்றாரும் ஒப்பாரி வைத்தழுது உடலைச் சுட்டெரித்து விடுகிறார்கள்.
 
0163: உடம்பு பத்து மாதங்களில் வெளி வந்தது. இது விருப்பப்படி அமைந்ததல்ல.  பன்னிரண்டு ஆண்டுகளில் அது உலக வாசனை பொருந்தும் இடமாக ஆகிறது.  எழுபது ஆண்டுகளில் அது மடிந்து போகிறது.  மனித வாழ்வின் நிலையாமையைப் புரிந்து கொள்வீர்.
 
0164: உடம்பாகிய அகல் இருக்க உயிராகிய தீப ஒளியைக் காலன் கொண்டு செல்கிறான்.  அறிவில்லாதவர்கள் உடம்பு அழியும் உண்மையை அறியாது அரற்றுகின்றனர். பிறப்பாகிய விடிவும் அருளாகிய இருளும் மாறி மாறி வரும் என்பதை உலகினர் அறியாது நிலையற்ற இந்த உடலை நிலையென்று பற்றிக் கிடந்து வருந்துகின்றனர்.
 
0165: சிவன் படைத்த உடம்பிலும் உயிரிலும் கலந்து விளங்கும் சோதியை வணங்காத அறிவில்லாதவர் சுற்றத்தார் கதறும் வண்ணம் நரகத்தில் கிடந்து வாடுவர்.
 
0166: முடி மன்னராய் நான்கு வகைச் சேனை புடை சூழச் சென்றாலும் பிராணன் நீங்குவதைத் தடுக்க முடியாது.
 
0167: உடலை விட்டு உயிர் வெளியேறிய பின் உடம்பு  உணர்ச்சியற்றது.  இறந்த பின் இவ்வுடலை காக்கை கொத்தினால் என்ன?  கண்டவர் பழித்தால் என்ன? பாராட்டிப் பேசினால் என்ன?  பாலைத் தெளித்தால் தான் என்ன? எதுவும் பயனற்றது.
 
3.   செல்வ நிலையாமை   (0168 - 0176)
 
0168: உனது பதவி, படை, பொருட்குவியல் ஆகிய அனைத்தையும் உன் மரண சமயம் பிறர் கவர்ந்து செல்வர்.  அதற்கு  முன்பு உயிருள்ளபோதே  - தெளிந்த உயிரோடு - நிலையான செல்வத்தையுடைய இறைவனை அடைந்துவிடின் உனக்கு வேறு ஒரு மாதவமும் வேண்டாம்.
 
0169: வானத்து சந்திரன் ஒளி குறைந்து இருளாவது போல செல்வமும் குறைந்து இல்லாது போகும்.  எல்லாம் நிலையில்லாதது.  அழியக்கூடியது.  எனவே பொருள் மயக்கம் நீங்கி மழை மேகம் போன்ற அழியாத பெருஞ் செல்வமான இறைவனை நாடுங்கள்.
 
0170: உயிரோடு வந்தாலும் இவ்வுடம்பு அழிந்து போகும்.  எனவே உடம்பு அழியும் முன்னர்க் கண்ணிடமாக விளங்கும் ஒளியைக் காண வேண்டும்.
 
0171: தேனை எடுப்போர் வண்டுக்குத் தீங்கு செய்வர்.  அது போல செல்வத்தைக் கவர்ந்து செல்வோர் செல்வம் உடையானுக்குத் தீங்கு செய்வர்.  செல்வம் உடையானுக்குப் பயன்படாததோடு தீமையும் செய்யும்.
 
0172: பெருஞ்செல்வம் நிலையானதல்ல.  காலத்தால், அரசால் அது குறைந்து போகும். கீழான செல்வத்தைப் பெருக்காது மேலான சிவ செல்வத்தைப் பெருக்கினால் எம பயம் இல்லை.
 
0173: செல்வமும் மாடும் நிலையானவை அல்ல.  இதை உணர்ந்து மூளியில் வைத்த ரத்தினம் போன்ற உயிரின் தொடர்பு சிமிழைத் திறந்து அவ்வொளி -யைக்  கண்டு அதில் நிலை பெற்றால் தூல விந்து பர விந்துவாக மாறிவிடும்.
 
0174: ஒளிப் பொருளான சிவத்தை நினைந்து அச் செல்வத்தைப் பெருக்கிக் கொள்வோர் கூவி அழைத்துக் கொள்ளும் மேலான செம்பொருளை அடைதல் கூடும்.
 
0175: உறவு முறையை நிலை நாட்டிய தாயாரும் சுற்றத்தாரும் உடம்புக்குச் சுடுகாட்டைக் காட்டிக் கொடுத்து விடுவர்.  ஆனால் சுழுமுனையில் மனம் பதியின் உடம்பு நெடுநாள் இருக்கும்.  சுற்றத்தாரைக் காட்டிலும் கை தூக்கி விடுவது மெய்ப் பொருளாகும்.
 
0176: உடம்பை விட்டு உயிர் பிரியும் போது இறைவனை எண்ணுவதே மரண வேதனையைத் தடுக்கும் உபாயமாம்.
 
4.  இளமை நிலையாமை   (0177 – 0186)
 
0177: கிழக்கே எழும்  சூரியன் மேற்கே மறைவதும், இளங்கன்று வளர்ந்து  மூப்பெய்து இறப்பதும் இளமை நிலையாது என்பதை உணர்த்தினாலும் மக்கள் இளமை நிலையா -மையை உணர மாட்டார்.
 
0178: நீண்ட காலம் உலகில் வாழும் பேறு பெற்றிருப்பினும் பல ஆண்டுகள் அறியாமையில் கழிந்தோடி விடுகின்றன. தூண்டுகின்ற விளக்கின் சுடர் போன்ற இறைவனை யாரும் தங்கள் உடலில் நிலை பெறச் செய்து அவனது அகண்ட ஒளியில் புகுந்து பேரறிவைப் பெறுவார் இல்லை.
 
0179: மூப்பு எய்தியபின் அருமையான காரியங்கள் செய்ய முடியாதனவாகும்  முடியாதன வாகும் இளமையானது நாள் தோறும் சிறிது சிறிதாகத் தேய்ந்து கடைசியில் இற்று ஒழியும். உயிர் செழுமையான உடலில் இருக்கும் போதே  நந்தியாகிய இறைவனை ஆராய்ந்து பொருந்துங்கள்.
 
0180: இளமையில் பெண்களுக்கு கரும்பைப் போன்று இனிக்கும் ஆடவன் முதுமையில் எட்டிக்காய் போன்று கசப்பானவனாக ஆகிவிடுகிறான்.  இளமை நிலையாததோடு முதுமை வெறுக்கவும் படுமாம். 0181: பாலன் என்றும் இளையன் என்றும் முதியோன் என்றும் பருவ காலங்கள் மாறுபடுவதை உலகவர் அறியவில்லை.  இவ்வுலகத்தைக் கடந்து அதற்கு மேலாகவுள்ள அண்டங்கள் ஊடறுத்து நிற்கின்ற
இறைவனது திருவடியை வணங்கி அன்பு செய்க.
 
0182: மூலாதாரக் கடவுள் உருத்திரமூர்த்தி கோபமூர்த்தியாகி ஒவ்வொரு நாளும் தேகத்தை அழிப்பவராயினும் அவரைப் பொருந்தும் வகையில் தேகம் உள்ள போதே அவரை நினைத்துப் பிரணவத்தின் விந்து நாதங்களைச் செழிப்புறச் செய்து கொண்டவர்க்கு அவரே சூக்கும தேகமாகிய ஒளியுடலைத் தந்தருளுகிறார்.  வாழ்நாளை வீழ்நாளாக்காது இறைவனைப் பொருந்தி வாழ்பவர்க்கு இறைவன் அருள் செய்வான்.
 
0183: பறந்து சென்று தீயனவற்றைப் பற்றி உண்ணும் காக்கை போன்ற ஐந்து இந்திரியங்களும் சிரசின் மேல் பனிப் படலம் போல விளங்கும் ஒளியில் தலைப்பட்டு அமையுமாயின் ஐந்து இந்திரியங்களைக் கொண்ட உடம்பின் நினைவு நீங்கி மேன்மையான இடத்துக்குச் செல்லலாம்.
 
0184: சூரியகலை சந்திரகலை என்கிற பிங்கலையும் இடைகலையும் மனிதரின் உடம்பில் உள் நின்று அளக்கின்றதை அதாவது பிராண இயக்கம் நடைபெறும் வரை ஆயுள் குறைகிறது என்ற ஆத்ம வித்தையை முப்பது வயதுக்குள் அறிந்தவர் விண்ணுறுவார்.  அறியாதவர் வினைக்கு உட்பட்டு அழுந்தி அழிவார்.  முப்பது வயதுக்குள் ஆத்ம வித்தையைக் கற்றறிந்து ஒழுக வேண்டும்.
 
0185: பொருந்திய பதினாறு கலைகளும் உடனாய் நிற்றலைக் கண்டும் கீழானவர்கள் சோடச கலை வழியே சென்று மேல் விளங்கும் இறைவனைச் சிந்திக்கின்றாரில்லை.  சினக்கின்ற காலனாகவுள்ள உருத்திரன் மீண்டும் கருப்பையில் வைத்தபின் மன மயக்கம் ஒழியாதவராய்ப் பிறவியில் வீழ்வர்.
 
0186: இளமையிலேயே தியானத்தில் பொருந்தி பிராண இயக்கம் உணரா நிலையில் சந்திர மண்டலத்தில் நின்றுசிவனைப் புகழ்ந்து பாடி சித்தி பெறுங்கள்.
 
5. உயிர் நிலையாமை. உடம்பிலே உயிர் நிலையாமை. (0187 – 0196)
 
0187: கொம்பிலே  தோன்றும் தளிர் மலரெல்லாம் சருகாகப் போவது கண்டும் மனிதர்கள் உயிர் உள்ள போதே இறைவனை வணங்கமாட்டார். எமன் வந்து அழைக்கும் போது கூட இறைவனை வணங்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவராய் அழிவர்.
 
0188: பிரமன், திருமால், ருத்திரன்,மகேசுவரன், சதாசிவன் ஆகிய  ஐவரும் சிவன் ஏவல் வழி நின்று உடம்பிலும்  உயிரிலும் தொழில்  புரிவர்.  வினை நுகர்வு முடிவில் சிவனிடமிருந்து இறுதிச் சீட்டு வந்ததும் இந்த ஐவரும் உடம்பை விட்டு நீங்கி விடுவார்கள்.
 
0189: மண்ணாலாகிய உடம்பில் உள்வெளி சுவாசமாகிய தாளங்களோடு சீவன் ஆகிய அரசன் வீற்றிருக்கிறான்.  அங்குள்ள சீவன் உடம்பை விட்டு நீங்கினால் உடம்பு மீண்டும் மண்ணாய்ப் போகிறது.
 
0190: சிரசின் மேல் ஈசான திக்கில் விளங்குபவனும் வாக்கு உருவமாக இருந்து கொண்டு நடிப்பவனும் வெந்து போகின்ற உடம்பினுள்ளே விளையாடும் நம் தீயாக உள்ளவனுமாகிய இறைவனே அழிகின்ற உடம்பாயும் உள்ளான் என்ற தன்மையை அறியாதவர் உடம்பைத் தாங்குகின்ற சிவனது இயல்பையும் உணராதவர்.  சிவக் காட்சியோடு சீவக் காட்சியும் ஒருங்கு நிகழும் என்பது சித்தானந்தம்.  இறைவனே ஊனாய் உயிராய் உள்ளான் என்பதை உணர்ந்தவர் ஆருயிரை உணர்ந்தவராவார்.
 
0191: சிவசூரியனாகிய இறைவன் உடம்பில் கீழும் மேலும் சூழவுள்ள எட்டுத் திசைகளிலும் உணர்வு மயமாக வியாபித்து உதவுவதை உலகவர் அறியவில்லை.  நான் எனும் அகங்காரம் கெட்ட ஞானியரிடம்
அவன் கலக்கின்ற மாயத்தன்மையும் உலகவர் உணரமாட்டார்.
 
0192: சீராக செய்யப்பட்ட பட்டாடை கிழிந்து ஒழியும்.  கரியமயிர் நரை மயிராகும்.  இதைக் கண்டும் உலகவர் பூமியில் இறப்பதும் பிறப்பதும் சிறு பொழுது தான் என்பதை உணர்வதில்லை.  எல்லாம் அநித்தியம்.
 
0193: சுழுமுனையாகிய அகப்பை இடம்பெற்ற உடம்பாகிய பானைக்கு விந்துவாகிய அரிசி ஒன்றேயாம். உடம்பினுள் சோம சூரியாக்கினியாகிய அடுப்புக்குப் பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன் முதலிய ஐவகை வாயுக்களும் விறகாகும்.
 
0194: புறத்தே செல்லும் மனத்தோடு சீவன் அகத்தாமரையில் இன்பத்தை நாடி நினைத்தாலும் சோம சூரியாக்கினியாகிய ஒளியில் விளங்கும் சிவன் தோன்ற மாட்டான்.  புறத்தே செல்லும் மனத்துள் சிவன் விளங்க மாட்டான்.
 
0195: நல்ல ஊழ்வினையைப் பெற்று மனிதராய்ப் பிறந்துள்ளவர்களே! இந்த மனிதப் பிறவியில் இன்பம் ஆகின்ற நெறியை விரும்பி  ஒழுக்கத்தில் நில்லுங்கள்.  மேலாம் நிலம் எனும் ஒளி மண்டலத்தை விரும்பி இறைவனை ஏத்துங்கள்.  ஆகின்ற வழியும் போகின்ற வழியும் அறிந்தோர்க்குச் சொல்ல வேண்டியது ஒன்றுமில்லை.
 
0196: வஞ்சனை பேசி அறம் அழிய நடவாதீர்கள்.  கொடியோராகிப் பிறர் பொருளைக் கவராதீர்கள். உண்ணும் போது யாரேனும் நாடிவரின் ஒரு அகப்பை உணவு கொடுத்துப் பின் உண்ணுங்கள்.  உயிர் நிலையாமை அறிந்து அறவாழ்வு வாழுங்கள்.
 
6. கொல்லாமை. ஒரு உயிரையும் உடம்பினின்று பிரிக்காமை.(0197-0198)
 
0197: பற்றுக் கோடாகிய சிவகுருவின் பூசைக்கும் கூட மலர்களைச் செடியில் இருந்து கொய்து கொல்லாமை நன்று.  சிரசின் உச்சியில் உயிர் விளங்குமிடத்தில் பூஜிக்க கண்மலரின் ஒளியே நல்ல மாலையாகும். அசைவற்ற மனமே சிறந்த தீபமாகும். அகப்பூசைக்குப் புறப் பொருள் தேவையில்லை.    கொல்லாமை என்ற விரதத்துடன் கண்களில் அமையும் ஒளியைக் கொண்டு அசைவற்று இருந்து சிரசின் உச்சியை லட்சியமாகக் கொண்டு தியானம் செய்ய வேண்டும்.
 
0198: கொல் என்றும் குத்து என்றும் சொல்லிய விலங்கையொத்த மக்களை எம தூதர்கள் வலிமையான கயிற்றால் கட்டி அனல் கக்குகின்ற நரகம் நோக்கி செல் என்றும் நரகத்தில் நெடுங்காலம் நில் என்றும் அதட்டி ஆணையிடுவர்.
 
7.புலால் மறுத்தல்.  புலால் உண்ணாமை ( 0199 - 0200)
 
0199: பொல்லாத புலால் உணவை உண்ணும் கீழ் மக்களை யாவரும் காணும் வண்ணம் எம தூதர்கள் கறையானைப் போன்று பற்றி அரித்துப் பின் அனல் கக்குகின்ற நரகத்தில் முதுகைக் கீழ்ப் புறமாகக் கிடத்தி வைப்பர்.
 
0200: கொலை, களவு, கள், காமம், பொய் பேசுதல் ஆகியவை பஞ்சமா பாதகங்கள் ஆகும்.  அப்பாவங்களை நீக்கி சிரசின் மேல் திருவடி சூடி இன்பம் அடைந்தோர்க்கு இப்பாவங்களும் அவற்றால் வரும் துன்பங்களும் இல்லையாம். இவர்கள் பேரின்பத்தில் திளைத்திருப்பார்கள்.
 
8. பிறன் மனை நயவாமை (0201 – 0203)
(அடுத்தவன் மனைவியை விரும்பாமை)
 
0201: அன்புள்ள மனைவி வீட்டில் இருக்க பிறரால் காத்து வைக்கப் -பட்டிருக்கிற அடுத்தவர் மனைவியை விரும்பும் காமுகர் - வீட்டில் காய்த்துள்ள பலாவின் கனியை உண்ணாமல் காட்டில் பழுத்துள்ள ஈச்சம்பழத்தை உண்ண துன்பப்படுவது போலாம். பிறர் மனைவியை நாடுவது அறியாமையாகும்.
 
0202: தகுதியற்ற புளியம்பழம் போன்ற பிறர் மனைவியை நயப்பவன் தானும் கெடுவான்.  அவனது தவறான  நடத்தையால் அவன் அருமையாக  மணந்த நல்ல மனைவியும் அழிவாள்.
 
0203: பொருளில் பற்றுடையோரும்  பாச அறிவுடையோரும் மருண்ட பார்வை கொண்ட பெண்களிடம் மயங்குவர்.  மயக்கத்தை மாற்றும் வழியின்றி அழிவர்.
 
9. மகளிர் இழிவு. (பரத்தையர் மகளிர் பற்றிய இழிவு) (0204-0208)
 
0204: கவர்ச்சியைக் காட்டி புன்முறுவல் செய்யும் மாதரிடம் இருந்து விலகி விட வேண்டும்.  அவர் பால் மனம் செல்லாது காத்திட வேண்டும். புறத்தோற்றத்தைக் கண்டு ஏமாறலாகாது. 
 
0205:பிறர்மனை செல்வோர் அம்மனைக்குரிய மாதரை நாடினால் மலைச்சுனையில் புகுகின்ற நீர் மூழ்குவாரைச் சுழிக்குள் சிக்க வைத்தல் போல காமச் சுழலில் சிக்க வைத்து விடும்.  கனவு போல அம்மாதர் மீது சுரக்கின்ற சிறிய அன்பை நனவு போல உண்மையானது என்று விரும்புதல் கூடாது.
 
0206: அழகு பொருந்திய வாழ்க்கையுடைய இளம் பெண் மழையைக் கண்ட புல் போல தளிர்த்திருந்த போதிலும் - மயங்கிய தேவரையொப்பார் வந்து பொருந்த அவர்கள் முன்னமே புணர்ந்தவரை "வெளியே இரும்" என்று சொல்வார்.  மேலும் குறிப்பு மொழியால் வெளியேறச் சொல்லி நீங்கிப் போவார்.
 
0207: மங்கையர் கூட்டம் வெளியே ஆலைக்கரும்பின்  சாறு போன்றது. உள்ளே வேம்பு போன்றது. மங்கையரோடு கூடுவது முதலில் இனிக்கும். பிறகு கசக்கும்.  இத்தகைய மங்கையரோடு கூடுவதால் என்ன பயன்?
 
0208: சுக்கிலத்தை விலை மாதரின் பாசி படிந்த கருக்குழியில் ஆழ நட்டு இன்புறுவார்களை அறிவு புகட்டித் தடுக்காவிட்டால் மறைமுகமாகச் சென்று புறவாயிலில் புகுந்து போயாவது அழிந்து  விடுவர்.  மாதராசையில் செல்பவரைத் தடுக்காவிடில் அழிந்து கெடுவர்.
 
10. நல்குரவு.  (வறுமை)  (0209 – 0213)
 
0209: உடுத்திய ஆடை கிழிந்து பயனற்றது போல வறுமையுற்றோர் வாழ்க்கையும்
வாழ்க்கையும் பயனற்று போய் விடும். சுற்றத்தார்களும் அன்பின்றி விலகி விட்டார்.  கொடுக்கல் வாங்கல் இல்லை.  உற்சாகம் இல்லை.  நாட்டில் இருப்பவராயினும் நாட்டோடு ஒட்டிய கம்பீர நடை இல்லை. வறுமையாளர்க்கு உலகவாழ்வு இல்லை.
 
0210: வயிற்றை நிரப்புவதற்குரிய வழியைத் தேடுவதைவிட்டு இந்திரியங் களத் தூர்க்கும் இறைவனது பொருளை சேர்க்கும் புகழைப் பாடுங்கள். பிறவிக்கு காரணமாகிய வினை நீங்கினால் வயிற்றுக்குழி தானே நிரம்பி விடும். பிறவி நீக்கத்துக்கான வழியைத் தேட வயிற்றுக்குழி தானே நிரம்பிவிடும்.
0211: உலகவர் வயிற்றுக்குழியை நிரப்ப பொன்னைத் தேடினாலும் அவ்வயிற்றுக் குழியைக் குறையாது நிரப்புவது யாவர்க்கும் கடினமானது. இறையருளால் அவ்வயிற்றுக் குழியைத் தூர்க்கும் திருவடி ஞானம் பெற்றபின் பிறவிக்குக் காரணமான வினையும் நீங்கி அவ்வயிற்றுப் பிணியும் நீங்கும்.  நிலையற்ற பொருளை நாடாது நிலையுடைய பொருளை நாடினால் மலமாசு நீங்கும்.
 
0212: பிறவி தோறும் தொடர்ந்து வருகின்ற உடலுக்கு உறவாகிய சுற்றத்தோடு  உயிருக்கு உறவாகிய இந்திரியங்களும் வினையைக் காட்டிலும் தீமை செய்வன.  வாழ்நாளைக் கடந்து உயிர் உடலை விட்டு நீங்குவதற்கு முன்னே உலகப் பொருளை விட்டு மாறுபட்டு உண்மைப் பொருளை நாடி நீங்காதிருந்து பிறவிக்குழியைத் தூர்ப்பதோடு பசிப்பிணியையும் போக்கலாம்.  இறை உணர்வாகிய விளக்கினை ஏற்றி உலக உறவாகிய இருளைப் போக்க வேண்டும். 
 
0213: வறுமையினின்றும் நீங்க இறைவனை ஏத்த வேண்டும்.
 
11. அக்கினி காரியம் -  தீ ஓம்புதல்.  (0214 – 0299)
 
0214: அந்தணர் வேள்வி இயற்றின் வானவரும் மண்ணவரும் திக்குப் பாலகரும் நலமுறுவர்.
 
0215: வேள்வியினைச் செய்யும் வேதமோதும் அந்தணர் மீண்டும் பிறவியைத் தரும் சுவர்க்கத்தை விரும்பி அக்கினி காரியம் செய்து தானம் கொடுத்து உணவை உட்கொள்வர். பிறவிக்கு வாராத நெறியுடன் தங்களுடைய விதியத் தாங்களே நிச்சயம் செய்யும் மெய்ந்நெறியை உணர்ந்தவர் தங்களுடைய அறிவைச் சிரசில் செலுத்தி வாழ்வர்.
 
0216: இல்லறத்தில் உள்ள அந்தணர் புறத்தே ஓம்பும் அக்கினியின் தத்துவத்தை அகத்தே உணர்ந்து மனைவியோடு கூடிச் செய்து அதன் உண்மைப் பொருளை உணர்ந்து சிவசக்தியாக எண்ணி யாமத்தில் அதாவது பொழுது புலர்வதற்கு ஆறு நாழிகைக்கு முன் இக்கிரியௌ செய்வதே பொருந்துகின்ற துணையான மென்மையான நெறியாம்.      மனைவியோடு பொருந்திச் செய்வது தான் சந்திர மண்டலம் அமைவதற்கான உண்மை நெறியாகும்.
 
0217: அருளை எண்ணி ஆண் பெண் சேர்க்கையை விரும்பிப் புரிந்தால் குண்டலினி விளங்கி மேலேறியும் சிற்சத்தி இருள் நீங்கி ஒளியாயும் விளங்கும்.  அருளை எண்ணாது சுக்கில சுரோணித கலப்பேற்பட்டால் ஆணும் பெண்ணும் மயக்கத்தையே அடைகின்றனர்.
 
0218: ஆண் பெண் கூட்டுறவினால் உண்டாகும் உணர்வோடு மேலே சென்று புருவமத்தியில் விளங்கும் சுடரினை அறிய  வேண்டும்.  மலநீக்கம்  பெறும் அந்நாள் நன்னாளாகும்.  எப்போதும் உடலில் நிலைபெற்ற செல்வமாகிய சிவன் அவ்வக்கினியேயாம்.
 
0219: யோனி குண்டத்துள் உள்ள அக்கினியைத் தீப்பந்தம் போல் மேலெழும்படி செய்தால் அடைகின்ற வினைகளும் நோய்களும் முடிவு எய்தி நீங்கும்.  கீழே உள்ள அக்கினி மேலே நிலை பெற்றால் வினை முதலியவை கெடும்.  அவற்றைத் தாங்கியுள்ள வினைகளைச் சுட்டு மேலும் அவை ஏற்படாமல் காக்கும். (வாஜபேய யாகம்)
 
0220: பொன்னும் மணியும் கேட்டினத் தரும் முன்னே, அருமையான ஞானச் செல்வத்தை அளித்த தலைவனாகிய சிவனை நாடுங்கள். மேலான சிவாக்கினி சிரசின் மேல் உதிப்பதை நினந்து ஞானச் செல்வத்தை நாடி அக்கினி காரியம் செய்யுங்கள்.
 
0221: சுடர்ப் பொருளாகிய சிவனே ஓமத்துக்குரிய தலைவனும் ஆவான்.
 
0222: உடலின் சகல அக்கினி காரியத்துக்கும் சிவன் மறைந்திருந்து உதவுகிறான். இறந்த பிறகு சாரமாகிய சூக்கும உடலிலும் பொருந்தி விளங்குவான். நெய்யப் பெற்ற ஆடை உரம் பெறுதல் போல வாசனா ரூபமான வினைகள் சிக்குண்டு கடல் போல் பெருகி விடுகின்றன.  ஆன்மா சிவத்தை நோக்கிச் சிந்தனையைக் கடைவதாலே சப்திக்கின்ற நாத ஒலி உண்டாகி வினை கெடும்.
 
0223: அக்கினியை சிரசுக்குக் கொண்டு செல்லும் திறமுடையவர் வைதீகாக்கினியை காருகாபத்தினி யோடு கூட வளர்த்தவராவர்.  மறுமையில் பிரம்ம லோகம் முதலியவற்றில் தங்கி இளைப்பாறவும் இம்மையில் மேல் ஓங்குகின்ற புகழும் அவர்க்கு உண்டாம். அக்கினி காரியம் செய்பவர் இம்மை இன்பத்தோடு மறுமையிலும் இன்பம் பெறுவார்.
 
12. அந்தணர் ஒழுக்கம்.  அந்தணர் ஒழுகும் முறை.  (0224 - 0237)
0224: அந்தணராவோர் தம் தவமாகிய இறைவனை எண்ணும் கருமத்தைச் செய்து பிறவியை அறுப்பவராவர்.
 
0225: அக்கினி காரியம் செய்யும் அந்தணர் "தத்துவமசி - அது நீ ஆகிறாய்" என்ற மகா வாக்கியப் பொருளாகிய பிரணவத்துள் ஒடுங்கி இன்புறுவர்.
 
0226: அந்தணர் காயத்திரி மந்திரத்தின் துணையால் மாயையை வென்றவராவர்.
 
0227: முத்தி நெறியான பிரணவத்தைத் தெளிந்து - குரு உபதேசம் பெற்று - மகா வாக்கியம் உணர்த்தும் அத்துவித நெறியில் அகவழிபாட்டில் இருந்து - பிரம்ம சொரூபமானவர்கள் குற்றமற்ற அந்தணர்கள்.
" ஓம் " என்ற ஒரு சொல் பிரணவம் எனப்படும்.  இ•து அ, உ, விந்து, நாதம் என ஐந்து பிரிவாகவுள்ளது.  ஓம் என்ற ஓசையை மானதமாக எழுப்பும் போது மூலாதாரத்தில் தொடங்கி கண்டத்தின் மேல் ஒளியாக  அமைகிறது. கண்டத்தில் இருந்து வைகரி வாக்கோசையுடன் வெளியே பாய்வதை தூலப் பிரணவம் அதாவது ஓம் எனும் சத்தம் என்கிறோம்.  தூலப் பிரணவம் கிரியையில் விளங்குவது. கண்டத்தில் இருந்து வைகரி வெளியே செல்லாமல் கபாலம்  நோக்கிப்  பாய்வதைச் சூக்கும பிரணவம் என்கிறோம்.  சூக்குமப் பிரணவம் தியானப் பொருளாய் பெரிய உபதேசமாய், வேதாந்த லட்சியமாய், சித்தாந்த முடிவாய் சகல மதத்தினரும் தொழும் வணக்கப் பொருளாய் உள்ளது.
 
0228: மெய்ப் பொருளை அகத்தில் நோக்கித் - தற்போதம் இழந்து  இளைப்பினைத்  தரும் இந்திரியங் களைப் புலன்களின் வழி செல்லாது தடுத்து நிறுத்துபவர் இருவினை ஒத்த உயிர்களாய் ஞானம் பெற்று பந்தத்தை நீக்கி பிரமம் ஆவார்.  பிரணவத்தை உணர்ந்தோர் கட்டின்றி பிரமமாவார்.
 
0229: வாய் வேதாந்தம் பேசிப் பயனில்லை.  உண்மைப் பொருளைக் கேட்டுத் தெளிந்து சிந்தித்து அனுபவத்தில் நிற்க வேண்டும்.  அப்பொழுது தான் ஆசை நீங்கும்.  ஆசை விட்ட இடமே வேதாந்தம் ஆகும்.
 
0230: இடை பிங்கலை சுழுமுனையே பூணூலின் முப்பிரியாகும்.  இம்மூன்று நாடிகளையும் ஒன்றாக்கி உணர்வதே மறை முடிவு.  அதன் பயனாக பிரம நாடி சிரந்து சிரசில் ஞானம் விளங்கும்.  வெறுமனே பூணூல் அணிவதில் பயன் இல்லை.  அதன் பொருள் உணர்ந்து நின்றால் தெளிவு உண்டாகும். 
 
0231: மெய்ப் பொருள் அறிவில்லாதவரும், மனத்தோடு பொருந்திய விஷய வாசனைகளை நீத்து உண்மையை உணருகின்ற உணர்வு இல்லாதவரும், மெய்யான பக்தி இல்லாதவரும்,  மேலான
பொருள் ஒன்று உண்டு என்று அறியாதவரும் அந்தணராக மாட்டார்.
 
0232: மேன்மையான பிரணவ நெறியில் அறிவு அறியாமையின்றி குரு உபதேசத்தினாலே திருவடியைப் பொருந்தி பிரணவ நெறியில் செல்வதால் புறக்கிரியைகளை விட்டிருக்கும் தூய்மையான அந்தணர்க்கு ஒளியுடன் பொருந்தி நிற்றல் உண்டாம்.
 
0233: வேதமல்லாத பிற நூல்களைக் கற்காது ஒதுக்குதல் நல்லது.  தூய்மையான வேதங்களைக் கற்று பொருள் உணர்ந்து ஓதுபவரே அந்தணராவார்.  அந்தணர் பிற நூல்களைக் கல்லாது வேதத்தையே ஓதுவார்.
 
0234: எல்லா உயிர்களிடமும் அருள் உள்ளங்கொண்ட, வேத  முடிவாகிய சிவத்தையே இடைவிடாது நினைக்கும் அந்தணர் வாழும் பூமி வளம் குன்றாத பூமி.  அந்த நாட்டு மன்னனும் நல்லவனாயிருப்பான்.  காலை மாலை இரு வேளைகளிலும் ஆகுதி செய்வார்கள்.
 
0235: நிராசையுள்ளவர்கள் வைராக்கியத்தால் அடையும் நெறி வேதாந்த நெறி. தேகத்தில் இறங்கியுள்ள ஆற்றலை அதன் இயல்பை மாற்றி ஊர்த்துவ முகமாக்கிப் பிரணவ தேகம் பெறச் செய்யும் நெறி நாதாந்த நெறியாகும். பிரணவ தேகிகள் சித்தியையும் முத்தியையும் பெறுவர்.
 
0236: பிராணனும் உட்சுவாச வெளிசுவாசங்களும் அடங்கிய காலத்து மகிழ்ச்சியாக இருந்து நன்மையே பல பேசிக் கொண்டிருந்தாலும் மேலான முத்தியைப் பெறும் செல்வர்கள் யாவற்றையும் கடந்து விளங்கும் சிவத்தையே நாடுவர்.
 
0237: இறைவனை எண்ணிட "யான்" என்ற அகப்பற்றும் "எனது" என்ற புறப்பற்றும் தானே நீங்கும்.  நான் எனும் அகங்காரம் அறுபட்டு விடும்.  பின்னர் எது ஒன்றையும் தேடாது பூவிலே பொருந்திய பிரமனைப் போலப் புண்ணியத்தை விரும்பியவனாய் ஆகுதி செய்யப்படும் அவியை உண்ணவே பிரணவம் பொருந்தும்.
 
13. இராச தோடம்  (அரசனுக்குரிய குற்றம்)  (0238 – 0247)
 
0238: கல்வி அறிவு இல்லாத அரசன் அறத்தின் வழி ஆராயாமல் கொல் என்று ஆனையிடுவான். இவன் இயமனை விட மோசமானவன்.  அறத்தின் வழி நிற்கும் நல்லவரை இயமன் நெருங்க மாட்டான்.
 
0239: அரசன் தன் நாட்டில் தினந்தோறும் நன்னெறியினை முறையாக ஆராய்ந்து நீதி முறைமை செய்ய வேண்டும்.  இல்லாவிட்டால் நாள் தோறும் நாட்டின் வளம் குன்றி மக்களிடையே அறியாமை வளரும். அரசனின் செல்வமும் குறைந்து கொண்டே வரும்.  நாட்டில் நீதி முறை சரியாக இல்லாவிட்டால் நாடு வளங்குன்றி அரசு கெடும். 
 
0240: வேடத்துக்குரிய நெறியில் அகமும் புறமும் பொருந்தி வாழ்பவரது வேடம் உண்மையான வேடமாகும்.  வேடத்துக்குரிய நெறியில் நில்லாதவரை வேடத்துக்குரிய நெறியில் நிற்கச் செய்தால் அது வீடு பேற்றை அளிக்கும் வழியாகும்.  அது அரசனின் கடமையாகும்.
 
0241: அறியாமை கெடாதவர் சிகை, பூணூல் முதலிய வேடங்களைக் கொண்டால் மண்ணுலகத்தில் உள்ளவர் வாடுவர்.  அரசன் பெருமை இல்லாதவன் ஆவான்.  ஆதலால் வேடத்தின் உண்மையை ஆராய்ந்து அறிந்து ஆடம்பரமாக அணியும் பூணூலையும் சிகையையும் களைந்து விடுதல் நாட்டுக்கும் அரசனுக்கும் நன்மையாம்.
 
0242: ஞானத்தை அடையாமல் ஞானிகளைப் போல சிகையும் பூணூலும் பெற்று நடிக்கிறவர்களை ஞானிகளைக் கொண்டு அரசன் சோதித்து ஞானம் பெறும்படி செய்தால் நாட்டுக்கும் அரசனுக்கும் நன்மையாம்.
 
0243: பசுவையும் மகளிரையும் அறநெறியில் நிற்பவரையும் உண்மையான சிவபக்தரையும்
அரசன் காக்க வேண்டும்.  அவ்வாறு காக்காவிட்டால் மறுமையில் நித்திய நரகத்தை அடைவான்.
 
0244: மக்கள் செய்கின்ற நல்வினைத் தீவினைப் பயன்களில் ஆறில் ஒரு பங்கு அரசனைச் சேருமாதலால் அரசன் தான் அறநெறியில் நிற்றலோடு தனது குடி மக்களையும் அறநெறியில் நிறுத்தல் வேண்டும். அறநெறியில் மக்களை ஒழுகாது விடுதல் அரசனுக்குரிய குற்றமாம்.
 
0245: அரசன் எவ்வழி மக்களும் அவ்வழி.  அரசன் உலகைக் காப்பதை  விடுத்து யுத்த வெறி பிடித்து அலைவது குற்றமாகும்.
 
0246: பிராணனது இயக்கத்தைத் தடுத்து மூலாதாரத்தில் உள்ள மூலக்கனலை சிரசின் மேல் செலுத்தி அங்குக் காணும் பால் போன்ற வெண்ணிர ஒளியைக் கொண்டு மதி மண்டலம் அறிந்து அங்கு உண்டாகும் ஆனந்தத் தேனைப் பருகாதவராய் -  ஆனந்தம் விளைவிக்குமென்று மயக்கங்கொண்டு  கள்ளினை உண்ணும் மருட்சியாளரை மேலும் இப்பழக்கத்திற்கு ஆளாகாதபடி செய்தல் அரசனின் கடமையாகும். 
 
0247: தத்தமக்குரிய சமயநெறியில் நில்லாதவர்களை சிவன்  அருளிய ஆகம முறைப்படி அப்பெருமான் மறு பிறப்பில் எத்தகைய தண்டனையைக் கொடுத்துத் திருத்தும்.  ஆனால் இப்பிறப்பிலேயே தண்டனை கொடுத்து திருத்துவது அரசனின் கடமையாகும்.
 
14.   வானச் சிறப்பு  (மழையின் பெருமை) (0248 - 0250)
 
0248: அமுதத்தைப் போன்று வளப்பத்தைத் தருகின்ற மழைப் பெருக்கால் சுவையுடைய பல மரங்கள் உலகத்தில் உண்டாகும்.  பாக்கு, இளநீரையுடைய தென்னை, கரும்பு, வாழை மற்றும் அமுது அளிக்கும் சமாதி நிலைக்கான எட்டி முதலியன உண்டாகும்.
 
0249: சிரசாகிய மலையினின்றும் பெருகி வரும் ஒளி மயமான ஆகாய கங்கையைப் பற்றி உரைப்பதற்கு உரையில்லை.    அது மன மண்டலத்தில் அன்பினால் ஊறும்.  பிருதிவிக் கலப்பின்மையால் நுரை இல்லை.      அழுக்கில்லையாதலின் தெளிந்த தன்மையுடைய நீர்.    எந்தையாகிய பாவங்களைப் போக்குகின்ற ஆறு அகண்டமாதலின் கரையில்லை.
 
0250: யாவராயினும் கொடுங்கள்.  அவர் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்று கருதாதீர்.   வருவிருந்து பார்த்திருந்து உண்ணுங்கள்.  பழலையைப் போற்றாதீர்கள்.  இம்மை மறுமையில் விருப்பம் உடையவரே! மிக விரைந்து உண்ண வேண்டா.  காகங்கள் உண்ணும் காலத்தில் பிற காகங்களை அழைத்து உண்பதை அறியுங்கள்.   உண்ணும் போது பிறர்க்குக் கொடுத்து உண்ண வேண்டும்.
 
15.  அறஞ் செய்வான் திறன்  (இல்லையெண்ணாது ஈதல்) (0251 - 0259)
 
0251: தாம் பரனாதல் தன்மை உடையோம் என்றறிபவர் இறைவன் திருவடியை வணங்குபவராவர்.  தம்மை அறிந்த அவரே மனத்தால் வாக்கால் அறம் செய்யும் நெறியில் நின்றவராவார்.  அவரே உண்மையை உணர்பவர் ஆவார்.  தம்மை அறிந்தவர்க்கு இறைவனே உறவினனாக உள்ளான்.  அண்ணலைப் பணிந்து அறம் செய்வோர்க்கு அண்ணலே உறவாவார்.
 
0252: உண்ணுவதற்கு முன்பு இறைவனுக்கு பச்சிலை கொண்டு பூசித்தல்,  பசுவுக்கு ஒரு வாளவு புல் கொடுத்தல், பிறர்க்கு சிறிதளவு உணவு கொடுத்தல், பிறர் மனம் நோகாதவாறு இனிமையாகப் பேசுதல் அனைத்தும் எல்லோராலும் செய்யக் கூடிய எளிமையான அறம்.
 
0253: அகப்பற்று புறப்பற்று இல்லாத சிவஞானியர்க்கு உணவளிப்பது சிறந்த தர்மம்.    இருந்தும் கல்வியறிவு சிறந்த மனிதர்கள் கூட சிவஞானியரை அழைத்து வந்து உண்பிக்கும் பயன் அறியவில்லை.
 
0254: அறம் செய்யாத உள்ளத்தை உடையோரே நீர் காமம், வெகுளி, மயக்கம்  ஆகிய அழுக்கினை அகற்றி அறிவைப் பெருக்கவில்லையே.   செல்வம் மிகுந்த காலத்திலும் அறம் செய்யாது உலக நோக்கில் காலத்தைக்கழித்து என்ன செய்யப் போகின்றீர்?   உம் உடல் எரிந்து அழியும் போது நீவிர் தர்மம் செய்யாது காத்தவை என்ன ஆகும்? சிவத்தை பற்றிப் பொருட்பற்றைக் குறைத்து அறம் செய்ய வேண்டும்.
 
0255: நீ நல்லவன் என்பதை உணராது, உனக்குற்ற வறுமையையும் கருதாது, நீ வயதில் இளையவன் என்பதையும் கருதிடாது, உன்னுடையநிலைமையை அறியாது, உன் உடலில் இருந்து உயிரைப் பிரிக்கின்ற காலன் வந்து உனது உயிரை உடலை விட்டுப் பிரித்துக் கொண்டு போவதற்கு முன்பு உடலை நிலை பேறாகச் செய்யும் நல்ல தவத்தினைச் செய்தல் வேண்டும்.
 
0256: துறந்தோர்க்கு இவ்வுலகில் ஒரு உறவும் இல்லை.  இறந்தோர்க்கு இவ்வுலகப் பொருள்களினால் எவ்வித இன்பமும் இல்லை.  அறம் செய்ய மறந்தோர்க்கு இறைவன் வழித்துணையாக வருவதில்லை.  துறந்தோரும், இறந்தோரும், அறம்செய்ய மறந்தோரும் அறத்தினைச் செய்யும்  முறையை அறிமாட்டார்.  நன்மை வேண்டுவோர் அறமே துணை என கருதி அறத்தை மறவாது செய்தல் வேண்டும்.
 
0257: அறிவையே தெய்வமாகக்  கருதும் மனிதர்கள் முற்பிறப்பில் செய்த தவத்தின் வழி தாம் தவம் செய்து மேன்மையடைவர்.  உடம்பே தெய்வமென்று கருதி   வாழ்கின்ற கூட்டம் "தெய்வம் நான்" என்று இயமன் வருவதை அறியாது கெடுவர். உடம்பையே பெரிதென்று எண்ணி அறம் செய்யாதவர் அழிவார்.
 
0258: நம்மை ஆழ்த்துகின்ற வினையாகிய கடலில் இருந்து கரையேறுவதற்குரிய தோணியாக இருந்து நமக்கும் நமது சுற்றத்தார்க்கும் களைப்பினைப் போக்கிக் காக்கும் வழிகள் இரண்டு உள்ளன.  அழியாப் புகழினையுடைய அச்சிவனைப் பற்றி நின்று ஆற்றப் பெறும் தவம் ஒன்று.  இல்வாழ்க்கைப் பற்றி நின்று செய்யும் அறம் மற்றொன்று. இவையே மறுமைக்குத் துணையாவன. 
 
0259: பற்றுக்கோடு அதுவேயாய் நின்ற மெய்ப்பொருளை உலகில் குறை  கூறாதவனாய் அறநெறி அல்லது பிற நெறியில் செல்லாது பொருந்தி - நீங்கள் பிறர்க்குக் கொடுத்த ஒன்றே துணையாகும்.  அதுவே சிவம் வைத்த முத்தியடையும் வழி.  சிவனைப் பற்றி நின்று அற்றார்க்கு ஒன்று ஈவதே முத்தி நெறியாம்.
 
17.  அறஞ்செயான் திறன் (தருமம் செய்யாதவர் இயல்பு) (0260 - 0269)
 
0260: பொருந்திய நல்ல அறங்களைச் செய்யாதவரது செல்வம் பயன்படாத எட்டி மரத்தின் பழம் போலாகும்.  வட்டி வாங்கி உலகில் பிறர் பொருளைக் கவர்ந்திடும் பாதகர்கள் செல்வத்தின் பயனை அறியாதவர்.
0261: ஆண்டுகள் பல கழிந்தன.  ஊழியும் பலப்பல சென்றன.  எத்தனையோ மனக் கோட்டைகள் தகர்ந்தன.  வாழ்நாளும் குறைந்து - சத்து நீங்கிய சக்கை போலவுள்ள- துன்பத்தைத் தருகின்ற -  தம் உடம்பு பயனற்று அழிவதைப் பார்த்தும் - உலகினர் அறத்தின் மேன்மையை அறியாது உள்ளனர்.  உடம்பு இடும்பைக்கே கொள்கலம்.   யாக்கை நிலையாமையை உணர்ந்தும் உலகவர் அறத்தினை அறியவில்லை.
 
0262: உலகில் பலர் தர்மம் என்னதென்று அறிகிலர்.  அறத்தின் பயனாகிய இறைவன் திருவடியை எண்ணும் முறைமையையும் அறியவில்லை.  சிவநகருக்கு பக்கமாகிய சொர்க்காதி நிலைகளையும்  அறியவில்லை.  உலகமக்கள் கூறும் பொய் மொழிகளைக் கேட்டு இவ்வுலகப் பொருளை விரும்பிப்
பாவகாரியங்களைச்  செய்து அதனால் பிறப்பு இறப்பாகிய பகையில் பட்டுழல்கிறார்கள்.
 
0263: தருமம் செய்யாதவரை இருமலும் சோகையும் கோழையும் சுரமும் சென்றடையும்.  மரணம் விளைவிக்கும் இடியும் மின்னலும் பாம்புக்கடியும்  தொண்டை நோயும் வயிற்றுக் கட்டியும் தருமம் செய்பவர் பக்கம் அணுகாது.  அறஞ் செய்யார் வாழ்வில் நோய்வாய்ப்பட்டுத்  துன்புறுவர்.
 
0264:உலோகாயத மதத்தின் போதனையால் தம் புகழை விரும்பி நிற்பார் இறைவனை வழிபடமாட்டார்.   தம்மை நோக்கி வந்து யாசித்தவர்களுக்குச் சிறிதும் கொடுக்கமாட்டார்.    வழிப்போக்கர் தங்கச் சரீரப் பிரயாசை கொண்டு குடத்தினால் நீர் விட்டுச் சோலைகளை வளர்க்கவும் செய்யார்.   இத்தகையோர் நரகத்தில் வீழ்ந்து துன்பப்படுவர்.
 
0265: அறவழியில் நடப்பவராக இல்லாமல் தேவருலக இன்பம் நீங்கும் வண்ணம் தீயவழியில் நடப்பவர் இருள் சூழ்ந்த உலகமாகிய நரகத்தில் நடப்பவராவர்.  காமம், வெகுளி, மயக்கம் ஆகிய குற்றங்களைக் களைந்து அவற்றினின்றும் நீங்கிச் சன்மார்க்கத்தில் நிற்பவர் வினை கடந்து நின்றவராவர்.
 
0266: எல்லா உயிர்களிடமும் கருணை காட்டுபவர் இறைவனது திருவடியைக்  காண்பர்.  விரக்தி கொண்டு உலகினை விட்டுத் துணிவுடன் தவம் செய்தவர் சாயுச்சிய நிலையை அடைவர்.  உலக நிலை நின்று அறமற்ற செயல்களைச் செய்பவர் வழித்துணையாகிய இறைவன் அருளின்றி மாள்வர்.  காலனுடைய சினத்துக்கு ஆளாகிப் பயத்தைத் தரும் நரகில் வீழ்ந்து அழிவர்.
 
0267: உலகில் ஒருவரது இன்பமும் துன்பமும் அவர் முற்பிறப்பில் செய்த அறச்செயலுக்கும் மறச்செயலுக்கும் ஏற்ப அமைகின்றன.  அறத்தினால் இன்பம் வருவதைக் கண்டும் கூட அன்பில்லா சிந்தை உடையவர் அறம் செய்யாது கெடுவர்.
 
0268: ஆக்கத்திற்கும் அழிவிற்கும் காரணகர்த்தாவான  கேடில்லாத இறைவன் நேர்மையற்ற  செயலைச் செய்து இன்பம் பெற அனுமதிக்க மாட்டான். தக்கார்க்கு இடுதலையும் வறியார்க்கு ஒன்று ஈதலையும் நினையுங்கள்.  பிறர் இன்பம் கெடும்படியாக நடப்பது மிருகத்தனமானது.  தீமை செய்வது மனிதப் பண்புக்கு உரியதன்று.
 
0269: சிலருக்கும் பலருக்கும் வாழ்வு தருகிறோம் எனத் தருக்கும் அற்ப அறிவுடையோரை அவரது செல்வத்தைக் கருதி வாழ்த்தி வாடாமல்  அழியாத செல்வமாகிய வீடு பேற்றினை அளிக்கும் இறைவனைக் கருதி வாழ்த்துங்கள்.
 
18. அன்புடைமை.  இறைவன் பால் அன்பு கொள்ளுதல் ( 0270 - 0279)
                                                                                                                                                                                              0270: அனுபவமில்லாதவர் அன்பாகிய சத்தியும்  அறிவாகிய சிவமும்   இரண்டு பொருள்
என்பர்.  அன்பின் முதிர்வினால் சிவமாகிய அறிவு விளங்கும் என்பதை உயர்ந்தோர் தாழ்ந்தோராகிய எல்லோரும் உண்ர்வதில்லை.  அன்பு தான் சிவத்தை விளங்கும்படி செய்கிறது என்பதை உணர்ந்தபின் எல்லோரும் அன்பே வடிவாய் சிவமாந்தன்மை எய்தியிருந்தார்.  அன்பு என்ற பண்பைக் காண முடியாது.  உணர முடியும்.  அதுபோல  சிவத்தையும் காணமுடியாது உணரவே முடியும். அன்பே சிவத்தை விளங்கச் செய்யும்.
 
0271: துறவிக்கு மஞ்சள் ஒளியும் இல்லறத்தார்க்கு வெண்மை ஒளியும் சிரசின் மேல் சாதகம் செய்யும் போது விளங்கும் என்பர்.  கூத்தன் பொன்னம்பலத்திலும் (தூலத்தில் சிதம்பரம்) வெள்ளியம்பலத்திலும் (தூலத்தில் மதுரை) ஆடுகின்றான் என்பது இதுவே.  
கூத்தன் துறவிக்கு மஞ்சள் ஒளியாக பொன்னம்பலத்திலும் இல்லறத்தார்க்கு வெண்மை
ஒளியாக வெள்ளியம்பலத்திலும் ஆடுகின்றான்.
 
0272: உடலை வருத்திச் செய்யும் அசுர வழிபாட்டால் இறைவனை அடைய முடியாது. அன்போடு உருகி நெகிழ்ந்துருகும் அன்பு வழிபாட்டால் மட்டுமே இறைவனை அடைய முடியும்.
 
0273: மிக்க அன்புடையவர் இறைவனை உணர்வர்.  அன்பினால் உண்டாகும் மனம் நெகிழ்வுடையார் விந்து நாதமாகிய திருவடிகளைச் சிரசில் சூடுவர்.    சம்சாரமாகிய சுமையைத் தாங்கி வருந்துபவர் பிறவியாகிய  சாகரத்தில்  உழல்வர்.  அன்பில்லாத அவர் இறைவனை அறியும் வழி தெரியாது வருந்துவர்.
 
0274: அன்பினால் மனத்தை உருக்கி இறைவனை ஏத்தி வழிபடுங்கள்.  தலையாய அன்பினால் மனத்தை உருக்கித் தலைவனை நாடுங்கள்.  குருநாதன் பாசத்தைப் போக்கித் தனது கருணையை நம்மிடம் காட்டுவான்.
 
0275: உருவம், அருவுருவம், அருவம் ஆகிய மூன்றும் கடந்த சிவன் மாதொருபாகன்  பொன்னொளியில் விளங்குபவன்-பக்தரது அன்பு வலையில் அகப்பட்டு அருளுவான்.
 
0276: உலகைப் படைத்து -எல்லா இன்பங்களையும் அமைத்து இவ்வுலக வாழ்வில் உறுதியைத்
தந்து அன்பைப் படைத்து - அகண்ட உலகமாகவும் உள்ள இறைவனிடம் அன்பு செலுத்தாது மாந்தர்கள் கெடுகின்றனர். இன்பம் படைத்த இறைவனிடம் அன்பைச் செலுத்த வேண்டும்.
 
0277: சோதி வடிவான இறைவனை நினைத்தும் நெஞ்சத்தில் வைத்தும் அவனையே தலைவன் என்று ஏத்தியும் உள்ளத்தில் அன்பு கொண்டு அவனை யார் அருள் வேண்டினாலும் சிவன் அவர் உள்ளத்தில் சிவஒளியைப் பெருகச் செய்வான்.
 
0278: உயிர்களின் வினைக்கீடாக இறப்பையும் பிறப்பையும் இறைவன் அமைத்த முறைமையினை அறிந்திருந்தும் கூட மக்கள் உலக போகத்தில் தான் விருப்பத்தைச் செலுத்துவர்.  இறைவனை விரும்பி நாட மாட்டார். மக்கள் உலகப் பொருளை விரும்புவதை  விட்டு மெய்ப்பொருளை விரும்ப வேண்டும்.
 
0279: தன்னையறியும் அறிவு கொண்டவரிடம் அவ்வன்பில் நின்று அருளுவான்  இறைவன்.  அன்பே உடலாகவுள்ள அவன் தன்னில் நிற்பது போலவே பிறரிடமும் நிற்பான்.  உலகத் தோற்றத்திற்கு முன்பும் உலக அழிவுக்குப் பின்பும் அழியாது நிற்பவன் அவன்.  ஆத்ம விசாரணை  செய்யும் முனிவர்க்கும் அவனே தலைவன்.  அவனிடம் யாரொருவர் அன்பு கொண்டாரோ அவரிடம் நிலையாகப் பொருந்தும் அரிய பொருள் அந்த இறைவன்.  அன்பின் வழி அணுகுவோர்க்கு அவன் துணையாக இருந்து உய்விப்பான்.இறைவன்அன்புடையவர்க்குத் துணையாவான்.
 
19.  அன்பு செய்வாரை அறிவன் சிவன்.    (0280 - 0289)
அன்பே சிவமாவது என்பதை அறிவாரைச் சிவன் அறிவான்.
 
0280: உயிர்கள் தன் மாட்டு அன்பு செய்தலை  இகழ்ந்ததையும் மெய்யன்பு கொண்டிருத்தலையும் இறைவன் அறிவான்.  மேலோனாகிய அத்தலைவன் அதற்கேற்ப மகிழ்ந்து அருள் செய்வான்.  தன் மாட்டுத் தளிர்த்து வரும் அன்பினைப் புரியவல்லார்க்கு மகிழ்ச்சி கொண்டு அன்பு செய்யும் அளவுக்கு கருணை வழங்குவான்.
 
0281: மக்கள் பேரின்பம் அடைய இப்பிறவியில் இயல்பாகப் பல சாதனைகளைக் கொடுத்த இறைவன் - துன்பம் நிறைந்த பிறப்பில் அவர் எத்தொழிலைச் செய்தாலும் அவர் செலுத்து கின்ற அன்பில் சிவன் கலக்க ஆதியாகிய பெருமான் முன்னே அமைத்துக் கொடுத்த பிறவியானது முடியும். ஆதிப் பிரானோடு துன்ப நிலையிலும் பொருந்தியிருந்தால் பிறவி நீங்கும்.
 
0282: அன்பு பொருந்திய சிந்தையின் மேல் விளங்கும் சிவமாகிய ஒளி இன்பம் வழங்குகின்ற கண்ணை யுடைய இச்சத்தியோடு அன்பரை ஏற்று அருள் புரியத் திருவுளங்கொள்வான். அவ்வாறு ஏற்றுத் திருவுளங் கொண்டமையின் வலை போன்ற ஐம்பொறிகளின் தொடர்பு அறுபட்டு நீங்கும்.  அப்பொழுது நன்மை பெற்ற சிந்தையை நீங்கள் இறைவன் பால் தொடர்பு கொண்டு துன்புறு கண்ணியை அகற்றி நில்லுங்கள்.  ஐம்பொறிகளின் வழிச் செல்லாது அன்போடு சிந்தையில் சோதியை நாட வேண்டும்.
 
0283: சிற்றின்பத்தில் மகளிர் மேல் வைத்த அன்பு போல சிரசின் மேல் உதிக்கும் பரிச உணர்வில் மனம் பதிவுண்டு இருக்க வல்லார்க்கு  உணர்வு கெட்டு நாதத்தோடு பொருந்தித் துவாதசாந்த வெளிக்குச்  சென்று கூடலும் அங்குப் பெறும் பேரின்பம் இங்குப் பெற்ற சிற்றின்பம் போல இருக்கும்.  உணர்வு கெட்டு அனுபவிக்கும் சிற்றின்பம் போன்றது பேரின்பமாம்.
 
சிவபோகம்: சிதாகாயப் பெருவெளியை நாடல் - உணர்வு உதித்தல் - நாத தரிசனம் கிட்டுதல் - துவாதசாந்தம் செல்லல் - உடலுணர்வு கெடல் தற்போதமிழந்து இன்பத்தில் நிற்றல் - இன்பத்தையும் மறந்து அதுவேயாய் நிற்றல் -  ஆகியவை படிநிலைகளாம்.
 
0284: பேரின்பத்தில் திளைத்திருந்தாரோடும் விளங்கிய சோதியாகிய இறைவனை சித்திகளை உடையவர் ஆராய்ச்சியினால் என்றும் அறிந்துவிட முடியாது.  ஆனால் அடியார்கள் பக்தியோடு (அன்போடு) அவனருளாலே அவனை வணங்க அவர்கட்கு வீடு பேற்றை அளித்து அவர்கள் முன்பு விளங்கித் தோன்றுவான்.
 
0285: ஆணவ மலத்தைக் கிழித்த - மஞ்சள் ஒளிக்கிரணம் கொண்ட சிவனை மூலாதாரக் கமலத்தில் இறை அன்பினால் காணலாம்.  இறைவன் திருவடியை அன்பினால் பெறலாம்.
 
0286: எல்லாப் பொருளாக உள்ளவனும் - வானுலகில்  தேவர்கள் போற்றும் தலைவனும் - இன்ப வடிவானவனும் - நம்பத் தகுந்தவனும் - சீவர்களது இன்பத்தில் பொருந்தி மகிழ்கின்ற அன்பு வடிவானவனும் -ஆகிய சிவனை யாரும் அறிய முடியவில்லை.
 
0287: பிறப்பு இறப்பில்லாத நந்தியாகிய இறைவனை - முன்பு அவனை வணங்கி பிறப்பு இறப்பு அறியாத ஞானியர் அன்பினால் இறைவனை வழிபட்டு அவனை உணந்திருக்கின்றோம் என்பர்.  இருந்தும் மற்றவர் அன்பினால் இறைவனை உணர்ந்து பிறப்பு இறப்பைப் போக்கிக்கொள்ள அறியவில்லையே.  (பிறப்பிறப்பில்லாத இறைவனை அன்பினால் வணங்கிப் பிறப்பிறப்பை நீக்கிக் கொள்ள வேண்டும்)
0288: இரவும் பகலும் இடைவிடாது அவனை அன்பினுள் வைத்துப் போற்றுவார்களை இறைவன் அறிவான்.  ஆதலால் நாம் ஒளி பெற்று ஓளியில் நின்று நமக்கென ஒரு செயலின்றியிருப்பின் இறைவன் எழுந்தருளி வந்து நம்மிடை பிரிப்பின்றி உடனுறைவான்.
 
0289: அகத்தும் புறத்துமாக ஒளி வடிவாகிய இறைவனை விடுவதும் மீண்டும் பிடிப்பதும் எதற்காக?   உயிர்க்குயிராய் ஒளிவடிவான இறைவனின் ஒளிவடிவில் இனிமையாக இடைவிடாது பற்றியிருப்பதே அன்பு வழிபாடாகும்
 
20.  கல்வி.  சிவானுபவத்தைத் தரும் கல்வி.   (0290 – 0299)
 
0290: இறைவன் எவ்விதமான தடையுமின்றி என் மனத்தைத் தனக்கு இடமாக்கிக் கொண்டான்.  அதனால் மல நீக்கத்தின் பொருட்டு உடல் வந்தது என்ற காரணம் அறிந்தேன்.உயிர் அந்த உடலோடு பொருந்திச் செறிந்துள்ளதை அறிந்தேன்.  உவர்த்தலில்லாத மிகுகின்ற அனுபவ அறிவைப் பெற்றேன்.
(பிறவியின் பயனை உணர்ந்து இறையனுபவம் பெற உண்மை அறிவு மிகும்.)
 
0291: உண்மைக் கல்வி கற்றவர் சிந்தித்துப் பார்க்கும் போது அவர்கள் கருத்தில் ஞானக் கண் புலனாகிறது.  அவர்கள் அவ்வாறு புலனாகும் உண்மையைச் சிந்தித்துப் பிறர்க்கு உரைப்பர்.  
 கல்தூண் போன்று சலனமற்றிருந்து பிறருக்கு உணர்த்தி அவர்களது ஞானக் கண்ணை விளங்கச் செய்வர்.  உண்மைக் கல்வியுடையோர் தாம் பெற்ற ஞானத்தைப் பிறருக்கு கொடுத்து அருளுவர். 
 
0292: எடுத்த உடலில் உயிருள்ள போதே உடல் நிலையாமையை உணர்ந்து உறுதி பயக்கும் நிலையான பொருளான இறைவனுடைய ஞானத்தைப் பெற முயலுங்கள்.  உங்களுடைய பாவங்கள் நீங்கி விடும். சொல்லில் குற்றமின்றி இறைவனை ஏத்துங்கள்.  அதனால் ஒப்பிட்டுக் கூற முடியாத சுய சோதியான சிவன் விளங்குவான்.
 
0293: உண்மையில் பிரணவ அறிவில்லாத கல்வி கற்றவர்கள் பிரணவத்தினின்றும் விலகிய வழியில் செல்கின்றனர்.  உலகியல் பற்றுடையோர் குண்டலினியின் ஆற்றலைப் பெருக்காது வீணாக்குகின்றனர்.  இரவும் பகலும் இறைவனை நினந்து வழிபாடு செய்யுங்கள்.  இரசவாதம் செய்யப்பெற்ற பொன்போலக் குண்டலினி ஆற்றலால் அழியா உடல் (பிரணவ தேகம்) அமையும். இறைவனை ஏத்தினால் பிரணவ தேகம் அமையும்.
 
0294: இறைவழிபாடு செய்வார்க்குத் தூய்மையான சோதி துணையாக வரும்.  நல்ல பிரணவம் அவர்களுக்குத் துணையாக விளங்கும். சுக்கிலம் கெடாது தூய்மையுற்று உடலுக்கு உறு துணையாய் ஒளியாகி நிற்கும்.  பிரணவக் கல்வியே பிறவியில் துணையாய் இருந்து வீடு பேற்றை அளிக்கும். 
 
0295: உடம்பிலுள்ள சுழுமுனை நாடியைப் பற்றிச் சிரசின் உச்சியில் பிரமரந்திரம் செல்ல மாட்டாதார் காம விகாரம் கொண்டால் சிவயோகத்தின் பயன் கிட்டாது. முதுகந்தண்டைப் பற்றிச் சிரசின் மேல் சென்றவரிடம் இந்திரியங்கள் சேட்டை செய்யா.  இதனை அறியாதவர் கீழேயுள்ள தத்துவங்களின் இயல்பில் மயங்கி நன்மை அறியாமல் கெடுகின்றனர்.  சுழுமுனை நாடியின் மேல் சென்றால் இந்திரியங்களின் சேட்டை அறும்.
 
0296: சுழுமுனையின் மேல் சென்றவர்க்குத் துன்பம் களையும் சிவன் நாத தத்துவத்தில் வெளிப்படுவான்.  நாதத்தில் சிவன் பரிசுத்தமான ஒளியை வீசிக் கொண்டிருக்கும் சந்திர மண்டலம் விளங்கப் பெற்றவர்க்கு தகுதி வாய்ந்த மனம் பொருந்துகின்ற சுழுமுனை நூலேணியாகும். கல்வியுடையார் சுழுமுனை நாடியையே நூலேணியாகக் கொண்டு சந்திர மண்டலம் விளங்கப் பெறுவர்.
0297: ஞானம் பெற வாயிலாகப் பிறவி நோய்க்கு மருந்தாக இருந்த நூலேணி பற்றியோர் முன்பு அவ்வாறு பற்றாதவர் கழிக்கப்பட்ட துணையாகும்.  பெருமையில் சிறந்தவனாகிய சிவபெருமன் சிந்தையின் பழைய நிலையை ஒழிக்கத் தக்க துணையாவான்.  தேவ சொரூபம் பெற்று  ஏழுலகங்களுக்கும் செல்ல வழித் துணையாகவும் இருப்பான். சிவஞானமற்றவர் கூட்டம் தவிர்த்து ஞானியரது துணை கொண்டு சிவனை வழித்துணை- யாகப் பெறுதல் வேண்டும்.
 
0298: வாழ்வின் பற்றுக்கோடான மேலான சிவபெருமானையே பற்றி வழிபடுங்கள். முழுமுதற் கடவுளாகிய அவனது அருளைப் பெற்று விட்டால் எல்லாம் இனிது முடிவு எய்தும்.
 
0299: பரந்த கடலாகவும், உயர்ந்த மலையாகவும், ஐம்பூதங்களாகவும், ஒளிவடிவான இடபமாகவும் விளங்கும் தேவ தேவனாகிய சிவன் தன்னையே நினைந்திருப்பார் நெஞ்சில் விளங்கித் தோன்றுவான்.
 
21.  கேள்வி கேட்டமைதல் (வல்லோர் பால் சென்று கேட்கத் தக்கனவற்றைக் கேட்டு மனம் அடங்கியிருத்தல்) (0300 – 0309)
 
0300: நீதிகளைக் கேட்டும், அந்தணர்களது அறிவுரைகளைக் கேட்டும், பாவங்கள்  இவையெனக் கூறும் நீதி நூல்களைக் கேட்டும், பிற சமய நூல்களைக் கேட்டும், பொன் என்று உரைக்கப் பெறுகின்ற திருமேனியையுடைய எம்பெருமானது தன்மையினைக் கேட்டும் சிவகதி தானே பெறலாம்.
 
0301: இறைவனை உணர்வாய் அறியுங்கள்.  கற்று அறியுங்கள்.  கேட்டு அறியுங்கள். பின் கற்றதையும் கேட்டதையும் சுய அனுபவத்தில் உண்மையை உணர்ந்து நிட்டை கூடி சிவத்துடன் பொருந்தி உயர்ந்தோராகுங்கள்.
 
0302: சிவனை வேண்டிப் பணி செய்தால் திருமாலும் பிரமனும் அருள் செய்வார்.  சிவன் ஆணை வழி நிற்போர் தேவராவதோடு எல்லாப் பதங்களும் கிட்டும்.  திருவடிப் பேறும் கிட்டும்.
 
0303: தலைவன் சிவனே என்று ஞானம் பெற்ற மனிதர்கள் பிறகு தேவராவர்.  மனிதராய்த் தேவராய் மேல் நிலைக்கு எய்தி வரும் மேலான தவமுடையார்க்கு சிவபெருமான் உவந்து அருள் செய்வான்.
 
0304: இறப்பும் பிறப்பும் வினை வழி அருளும் இறைவனின் தன்மையினை அறிந்து பிறர்க்கு உரைத்தும் தானே பேசியும் களிப்புற்று அன்பு செலுத்தி இருங்கள்.  சிவன் சோதியாய் இருந்து சுவாதிட்டானமாகிய மலரில் விந்துவாகிய மணத்தில் பொருந்தி அருளிக்கொண்டிருக்கிறான்.
 
0308: பிரமன் விஷ்ணு ருத்திரன் ஆகியோர்க்கும் பழமையானவன் சிவன்.  தன்னை இகழ்ந்து கூறுகின்றவர்க்குத் துன்பத்துக்கு இடமாக இருப்பவன். சிவனின் பெருமையை மகிழ்ச்சியுடன் உணராது விலகி நிற்போர்க்கு அவன் கல்லில் செதுக்கிய பசு போலப் பயன்பட மாட்டான். (இறைவனை இகழ்ந்தவர்க்கு அவன் பயனில்லாதவனாவான்.)
           
0309: ஆன்மாக்களிடம் தனது சத்தியைப் பதுப்பித்தருளிய சிவன் அச்சத்தியால் மனத்தோடு வாக்கையும் அவற்றோடு பொருந்தியிருந்து உணர்கின்றான்.  அவனது வடிவம் ஒன்றுக்கொன்று மாறுபட்டது.  எனினும் உடம்பாகிய அச்சிலிருந்து மனத்திட்பமாகிய ஆணி கழன்று உருக்குலந்த காலத்து ஆதியாகிய சிவனை விரும்பி நின்றவர்க்கே அவனை நெருங்கி அனுபவிக்கலாகும்.
22. கல்லாமை.   (0310 - 0319)
 
0310: ஆசிரியர் பால் சென்று முறையாகக் கற்காமல் பண்டைய தவத்தால் அவர்களது கருத்தில் தெய்வக் காட்சியை உணரவல்லாராயின் அவர்கள் இறைவன் அருளால் அநுக்கிரஹம் செய்யப் பெற்றவர் ஆவார்.  இத்தகையோர் உலகைப் பற்றாமல் சிவத்தைப் பற்றி நிற்பர்.  கல்வி கற்றோரும் கல்லாதவராகக் கருதப்பட்டவர் பெற்ற சிவானுபவத்தை அடைவதில்லை.
 
0311: சிவத்தின் அருளைப் பெற்றவர்கள் உண்மை நெறி ஒன்று என்று எண்ணி அவ்வழியே வாழ்கின்றார்கள்.  சிவத்தின் அருளைப் பெறாதவர்கள் உலகில் பல நெறி உள என்று கூறுவர்.  ஆனால் எங்களது இறைவனே எல்லா நெறியாயும் உள்ளான்.  கல்லாதவர்கள் இவ்வாறு கலந்திருக்கும் இயல்பை அறிய மாட்டார்கள். கற்றும் அறிவில்லாதவர் இறைவன் எல்லாவற்றுள்ளும் கலந்திருக்கும் தன்மை உணரார்.
 
0312: நிலையில்லாதவற்றை நிலையுடையனவாகவும் நிலையில்லாத உடம்பை நிலையுடையதாகவும் நெஞ்சில் எண்ணுபவர்களே!  எல்லா உயிர்க்கட்கும் இறைவனே தாரகமாயினும் உண்மை உணராதார் நெஞ்சில் அவன் அறியப்படாதவனாகவே உள்ளான்.  உலகத்தை நிலையாக எண்ணுபவர் நெஞ்சில் இறைவன் விளங்கித் தோன்ற மாட்டான்.
 
0313: இறைவழி நிற்கும் ஆற்றல் இல்லாதவன்  அறியாமையால் மயக்கம் செய்வனவற்றைப் பயில்வான்.  வள்ளலாகிய பெருமானை மனத்தினுள் தியானிக்க மாட்டான். உலகானுபவத்திலேயே  திளைத்திருப்
பான். சிவத்துடன் பொருந்தியிருக்கும் சிவநெறியைக் கற்க மாட்டான். அரநெறி அறியாத அவன் வினைத் துயரங்களுக்கு ஆளாவான்.
 
0314: சீவன் எடுத்த உடம்பில் நிலைத்திராது பிரிந்துவிடும் என்ற உண்மையை உணர்ந்து சிவத்தின் அருளைப் பெற்றவர் தான தருமம் செய்தும் துறவறம் பூண்டும் ஒழுகினார்.  உலகில் அருளைப் பெறாதவராகிய கீழ் மக்கள் கொடிய வினையால் விளையும் துயரத்தை அனுபவிப்பர்.  சீவன் நில்லாது என்றுணரும் அருளைப் பெற்றோர் அறம் செய்து தவத்தினில் தலைப்படுவர்.
 
0315: பரமாகாயத்தினுள் விளைந்த சிவமாகிய விளங்கனி கண்ணினுள்ளே கலந்து அவ்விடத்து இருந்தது.  உலகியலைப் பெரிதாக மதித்து அதில் வாழ்ந்து கொண்டு புத்தி யூகத்தால் பலவாறாக இறைநிலையை எழுதி வீணாயினரே.  (கற்றறிவில்லாதார் ஞான சாதனையால் இறைவனைக் காணாது புத்தி யூகத்தால் கண்டவரைப் போல எழுதி இளைத்தனர்).
 
0316: ஞானசாதனையை அறிந்தவர்க்கன்றிச் சிவமாகிய விளங்கனியைப் பெற முடியாது.  இச்சாதனையை அறிந்தவர்க்கன்றிக் காட்சி கிட்டாது ஞான சாதனையை அறிந்து உண்மைப் பொருளைக் கண்டு பொருந்தி நிற்கும் வித்தையை அறிந்தவர் உண்மையான கல்வி கற்றவராவர். ஞானசாதனையை அறிந்தவரே கற்றறிந்தவராவார்.
 
0317: கற்றும் அனுபவமில்லாதவர் கருத்தில் இறைவனை உணரமாட்டார். எனவே அனுபவ மில்லாத மூடரைக் காணவும் கூடாது.  அவரது வார்த்தையைக் கேட்பதும் கடமை ஆகாது. எழுத்து வாசனை இல்லாதவர் விளக்கிச் சொல்லும் திறன் இல்லாமையால் பிறரைத் தவறான வழியில் செலுத்தமாட்டார்.  எனவே கற்றும் அனுபவமில்லாத மூடரைக் காட்டிலும் கல்லாதார் நல்லவராம்.
 
0318: நூல்களைக் கற்றும் அனுபவ ஞானமில்லாத தீய குணமுடையோர் தீமையைத் தருகிற ஆணவம் கன்மம் மாயையை விடமாட்டார்.  இவர்கள் குற்றத்தை அறிந்து நீக்கிக் கொள்ளாத மூடர்களாவார். மேலும் பல திசைகளிலுள்ள அறிஞர்களோடு கூடி உண்மை உணரா அறிவிலிகள் ஆவார்.  சிவஞானம் பெற்றுச் சிவத்தினிடமன்பு கொண்டு நிற்போரே கணக்கறிந்தவராவார்.  சிவஞானக் கல்வி கற்று அன்பில் நிற்போரே உண்மையை உணரமுடியும்.
 
0319: ஒளி பெற்ற அடியார் நாடும், மங்காத ஒளியாய் உள்ள, பெரிய கடவுளை கற்றறிந்து விடுவோம் என்று  அறியாதவர் கூறுவார்.   உள்ளேயே இருக்கின்ற சோதி எவ்வாறு நடத்திக் கொண்டிருக்கிறது என்பதை அறியாத சிவஞானமில்லாதவர் அவர்கள்.
                        
23. நடுவு நிலைமை.  (0320 - 0323)
சிரசின் மேல் விளங்கும் ஒளியில் நிற்றல், நடுவாகிய சுழுமுனையில் நிற்றல், சிவசக்திக் கிடையே நிற்றல், சூரிய சந்திரனாகிய இரு கண்களுக்கு மேல் புருவ நடுவில் நிற்றல், எல்லா உயிர்களிடமும் அந்தண்மை பூண்டு ஒழுகல் எனப் பல பொருள்களும் நடுவு நிலைமையில் பொருந்தும்.
 
0320: நடுவாகிய சகஸ்ரதளத்தில் விளங்கும் ஒளியை அறிந்து நில்லாதவர்க்கு ஞானம் கிட்டாது. சகஸ்ரதள ஒளியில் நிற்போர்க்கு நரகம்கிடையாது. அவ்வாறு நடுவுநின்றார் நல்ல தேவ வடிவு பெறுவார்.  சகஸ்ரதளம் அறிவில் நிற்போர் ஞானமுடையோராவார்.
 
0321: சகஸ்ரதள ஒளியில் மேக வண்ணத்தானாகிய திருமாலும்,நான்கு வேதங்களையும் உணர்ந்த பிரமனும் ஞானிகளாவோரும் இருந்தனர்.  அதிலே யாவரும் நம்பத்தக்க சிவனும் விளங்கினான்.
 
0322: இப்பிறவியிலேயே ஞானிகளாக வேண்டிய சிலரும் சிரசின் மேல் உச்சியில் பொருந்தியிருந்தனர்.  அவர்களில் சிலர் தேவர்களாவார்கள்.  சிலர் சிவமாந்தன்மை எய்துவர். அவ்வழியிலே சகஸ்ரதள ஒளியில் நிலை பெற்றுள்ள அடியார் கூட்டத்தோடு சாதகர் பொருந்தி நின்று அழியாப் பதம் பெற்றுச் சிவமாம் தன்மை எய்தலாம்.
 
0323: உலகில் தோன்றிய எல்லாவற்றையும் அழிக்க வல்லவனாகிய இறைவன் சிவபெருமானை நினைந்து  சகஸ்ரதள ஒளியில் நிற்பவர் எப்போதும் நன்றிக் கடப்பாடு உடையவராக இறைவனது திருவடிகளைப் பெற வேண்டி முயற்சியுடையவராயிருப்பார். அவர்கள் சிவனது திருநாமத்தைப் பற்றிக் கொண்டு யோக நித்திரையில் இருப்பார்கள்.
 
24. கள்ளுண்ணாமை (கள் உண்ணுதலைச் செய்யாமை) (0324 – 0330)
 
0324: பசுக்கள் அருந்துவதற்கு கழுநீரை பெற்றால் பிறகு குளந்தோறும் சென்று நீரைத்
தேடி அருந்தா.கழுநீரை விரும்பித் தாகத்தால் களைத்துத் தம்முடைய உடம்பினை வருத்தி இருக்கும். வாழ்வுக்கு வளமையைத் தரும் நீர் சிவானந்தமாகிய மதுவாகும்.  இம் மதுவை அருந்தாமல் முழு நீராகிய மதுவை உண்பவர் ஒழுக்கமில்லாதவர்.  ஒழுக்கமில்லாதவர் சிவானந்தமாகிய மதுவைப் பருகாது முழு நீராகிய மதுவைப் பருகாது முழுநீராகிய மதுவைப் பருகிக் கெடுவர்.
 
0325: சித்தத்தைச் சிவன் பால் வைத்து உருகச் செய்து சிவசமாதியில் பொருந்தி சிவானந்தம் நீங்காத மதுவினை சுத்த நிலையில் அனுபவிக்கச் சிவானந்தம் நீங்காது.  அத விட்டு சிவன் நினைவின்றி நிற்றலும் இருத்தலும் கிடத்தலும் கீழ்நிலையாகும்.
 
0326: ஆணவ மலமும் காமமும் கள்ளும் கீழ் மக்களுக்கேயாகும். அவை  சமயத்தை உள்ளவாறு உணராது மயக்கத்தை விளைவித்து கெட்டுப் போகும் புத்தியை உண்டாக்கும்.  மேலோர்க்குச் சிவபெரு மானது இரு திருவடி இணைப்பால் பெறும் பிரணவ மயக்கமான சிவானந்தத் தேனாகிய உணர்வு உள்ளது.  இது மயக்கத்தை நீக்கி நன்னெறியைக் காட்டும்.
 
0327: சக்தி வழிபாட்டினர் தேவிக்கு திருப்தி செய்வதாய்க் கூறித் தாங்கள் மது உண்டு அழிபவராவர்.  காம வாழ்வில் உள்ளோர் காமமாகிய போதையில் மூழ்கிக் கலங்கி நிற்பர். மகாதேவா என்னும் ஓமத்தைச் செய்வோர் சிரசின் மேல் வெளிப்படும் ஒளிக்குள்ளே தமது உணர்வை நிறுத்தி மகிழ்ந்திருப்பர்.  சிவநாம மகிமையை அறிந்தனு- பவிப்பவர் அப்பொழுதே சிவனை அணுகும் இன்பம் பெறுவர். (காமத்தில் ஈடுபட்டு அழியாது மூலாக்கினியைத் தூண்டி ஒளி பெற்றுச் சிவநாமத்தை உணர்ந்திருக்க வேண்டும்.)
 
0328: புறத்தேயுள்ள கள்ளை அருந்துபவர் - வேதாகமம் உணர்த்தும் உண்மையை
விளங்க  மாட்டர். பசு பாசம் பதி ஆகியவற்றை அறிய மாட்டார். விரும்பியவற்றை-யெல்லாம் அளிக்கும் சிவபெருமானது அருளைத் துணையாகக் கொண்டு அவர் வாழ மாட்டார்.  தெளிந்த உண்மையான சிவயோகத்தில் அவர் நிலைபெறமாட்டார்.
(கள்ளுண்போர் உண்மை உணராது கெடுவர்.)
 
0329: மயங்கச் செய்கின்ற சமயக் குற்றங்களைப் பொருந்திய மூடர்கள் சமயத்தின் பெயரால் மயக்கத்தைத் தருகின்ற மதுவினை அருந்துவார்கள் இப்பெரிய மூடர்கள் நல்ல வழியை ஆராய்ந்தறியார்கள்.  மயக்கத்தைக் கொடுக்கின்ற மகாமாயையும் மாயையின் இருப்பிட மாகும். மயக்கத்தில் இருந்து தெளிந்தாலும் வாமாசார வழிபாடு மீண்டும் மயக்கத்தைத் தருமே தவிர சிவானந்தத்தை நல்காது.  (சமயத்தின் பேரால் மதுவுண்போர் மயக்கத்தினின்றும் தெளிவு பெற்று நித்தியானந்தத்தைப் பெறார்.)
 
 
0330: உண்டாரை மயங்கச் செய்வதும் மாண்டாரை நினைந்து கவலச் செய்வதும் ஆகிய கள் உண்மையை அழிக்கும்.  இயங்கிக் கொண்டு இருக்கிற பெண்ணின்பத்தை நாடி அடையத் தூண்டும்.  இங்ஙனமாகிய கள்ளை உண்பார் நல்ல ஞானத்துக்குத் தலைப்படார். அவர்களுக்கு என்றும் இடையறாது விளங்கும் சிவானந்தத் தேறல் கிட்டாது.  (கள்ளுண்பார் சிற்றின்பம் விரும்பிப் பேரின்பம் எய்தார்.)
 
0331: இரவு பகல் என்ற பேதமற்று தன்னை மறந்த சாக்கிராதீத நிலையில் இருந்து வேறு எண்ணமற்றுச் சிவானந்தத் தேனை உலகவர் அருந்த மாட்டார்.  இரவும் பகலுமில்லாத திருவடி இன்பத்தில் திளைத்து இரவும் பகலும் உள்ள அசுத்த மாயை சுத்த மாயை இரண்டையும் சாதகர் அகற்றி நிற்க வேண்டும்.
 
0332: சாக்த மதத்தினர் சக்தியை விரும்பி மதுவை உண்பர். மதுவுண்டு தம்மை மறந்திருத்தலால் அவரது அறிவுச் சத்தி கெடுகிறது. சத்தி என்பது சிவஞானத்தை அறிந்து அதில் நிலாஇ பெற்று சத்திய ஞானானந்தத்தை அடைதலாம்.(உண்மையான  ஞானத்தில் ஆனந்தம் அடையவேண்டுமே அன்றி மதுவை அருந்தி அடையலாகாது.)
 
0333: சக்தியையுடையவனாகிச் சிவன் அருள் புரிந்தால் சத்தியின் அருள் கிட்டும்.  சத்தி அருள் புரிந்தால் சிவனது அருள் உண்டாகும்.  சத்தி சிவமாகிய இரன்டும் விளங்கும் விந்து நாதங்களை உணர்ந்து பொருந்தியிருக்க அவர்களுக்குச் சத்தி வடிவம் உண்டாகி அட்டமா சித்திகளும் தாமே வந்தடையும்.
(சிவசத்தியின் அருள் உண்டாயின் அட்டமாசித்திகளும் தானே வந்தடையும்.)
 
0334:சிவானந்தமாகிய தேன் முப்பத்தாறு தத்துவங்களையும் கடக்கச் செய்யும். தத்துவங்களே தான் என்று மயங்கின அறிவை நீக்கும்.  உபாயத்தால் சிவத்தை அடையலாம் என்று எண்ணிச் செய்யப் பெறும் பொய்த் தவங்களினின்று சாதகரை நீக்கியருளி  உண்மையான சிவபோகத்துள் செலுத்தும்.  உண்மையாய்த் தோன்றிய உலகம் இல்லாது ஒழியும்படி செய்து சாதகருக்கு மேலான ஆனந்தம் சித்திக்கும்படி செய்யும். (சிவானந்தத் தேறல் தத்துவங்களினின்றும் ஆன்மவை நீக்கிப் பிரித்து பேரானந்தத்தைக் கொடுத்தருளும்.)
 
0335: சிவயோகியர் பிராணனை வசப்படுத்தி சந்திரமண்டலத்தில் சிவானந்தத்தை நல்கும் ஞானாமிர்தத்தை அருந்துபவர்.  அட்டமா சித்திகள் விரும்புபவர்.  கள்ளினைக் குடித்து மூடராக ஆசைப்பட்டு உண்டாகும் பற்றினால் உள்ள அறிவையும் இழந்தார்கள்.
 
0336: மரணத்தை மாற்றும் ஒளி ஊற்றைத் திறந்து அனுபவிக்க மாட்டீர்.  சிவகுருவின் திருவடியை எண்ணி நிற்க மாட்டீர்.  சமாதியில் சிவசோதியை விரும்பிப்பொருந்த மாட்டீர்.  அருள் நீர்ப் பெருக்கால் நன்மை தரும் கண்ணின் காரியமாகிய ஒளி நெறி பற்றிச் சென்று பிராணன் செல்லும் வழியை (சுழு முனை வழியை) அறியுங்கள்.
(அகக் கண்ணில் காணும் ஒளி வழியே சென்றால் சிரசில் சுவாசம் புகுவதும் போவதும்  காணலாம்.  அந்த ஒளியில் நிலை பெற்றால் சுவாச பந்தனம் உண்டாகும்.  சமாதியில் நிலை பெறலாம்.) (சந்திர மண்டல ஒளியமுதத்தைத் தேக்கி அருந்துவதற்கு அகக்
கண்ணினால் சோதியை நாடி இன்புற வேண்டும்.)
-------------------------------------------------------------------------------------------------------------------------
முதல் தந்திரம் முடிந்தது.
 -------------------------------------------------------------------------------------------------------------------------
இரண்டாம் தந்திரம்
1. அகத்தியம்.  (அகத்து + இயம்).   உடம்பில் விளங்கும் நாதம் அகத்தியம் ஆகும்.   அந்த நாத இயல்பை உணர்த்துவது இப்பகுதி.  அக்கினி உடம்பைத் தாங்கிக் கொண்டும் உண்பதை ஜீரணித்துக் கொண்டும் உள்ளது.  அதன் சொரூபம் நாதமாகும். 
 
0337: சீவர்கள் இருக்க வேண்டிய இடம் :
"இவ்வுலகில் வாழுகின்ற சீவர்கள் சுழுமுனை மார்க்கத்தில் பொருந்தி நில்லாது உலக முகமாகக் கீழ்நிலைப்பட்டு இடை பிங்கலையில்  பிராணசக்தியைச் செலுத்திக் கெடுகின்றார்கள்" என்று திருமூலர் இறைவனிடம் வேண்ட அதற்கு இறைவன் "மூலசொரூபமான நாதமே! நீ சென்று - விரைந்து கெடுகின்ற
சீவரது சிரசின் முன் பக்கமாகப் (ஆக்ஞையில்) பொருந்திக் காப்பாயாக!" என்று அருளினான். (சீவர்கள் சுழுமுனை மார்க்கமாக மேல் நோக்கிப் புருவ நடுவில் சென்று பொருந்தியிருக்க வேண்டும்.  சிவபெருமான் அகத்தியரைப் பொதிய மலையில் போய்த் தங்கும்படி பணித்த புராணக் கதையை உணர்த்துவது)
 
0338: நாதம் ஒளிமயமாய்த் தலையில் பரவுதல் :
அக்கினி கலையின் சொரூபமாகிய, மூலாதாரத்திலிருந்து உற்பத்தியான நாதத்தைச் சிரசின் முன் பக்கம் விளங்கச் செய்யும் சாதகனாகிய அகத்தியன், அதனைப் பின்புறம் பிடரிப் பக்கம் விளங்கச் செய்ய,  அது பின் மூளையில் பொருந்திச் சிரசின் இடப்பக்கம் சென்று தவமுனியாகிப்  பின்னர் சிரசு  முழுவதும்
ஒளிமயமாகப் பரவும்.
 
2. பதிவலியில் வீரட்டம் எட்டு.
இறைவன் மறக்கருணை காட்டி ஆட்கொண்ட எட்டு இடங்களை வீரஸ்தானம் என்பர்.  அவை:1. திருவதிகை 2. திருக்கடவூர் 3. திருக்கொறுக்கை 4. வழுவூர் 5. திருக்கோவலூர் 6. திருப்பறியலூர் 7. திருக்கண்டியூர் 8. திருவிற்குடி.  இங்கு நடந்தனவாகவுள்ள புராணக் கதைகளுக்கு ஆசிரியர் தத்துவவிளக்கம் தருகிறார்.
 
0339: அந்தகாசுரனை அழித்தல் :
இயமனைப் போன்ற கொடிய எண்ணம் உடைய "அந்தகன்" எனற பெயரைக் கொண்ட அசுரன் இறைவனிடம் பெற்ற வரத்தால் உலகத்தின் உயிர்களை எல்லாம் வருத்தி வந்தனன்.  நல்ல பண்பு என்று கூறப்படும் வானவர் அக்கொடுமை தாங்காமல் இறைவனிடம் போய் வேண்டினர். சிவபெருமானும்
வெண்மையும் கூர்மையும் உடைய ஞானமான சூலம் கைக்கொண்டு அந்தகாசுரனைக் கொல்லும் தொழிலைச் செய்தருளினான்.  இது நிகழ்ந்த இடம் திருக்கோவலூர்.
சீவர்களது கருத்திலேயிருந்து உலகத்திலுள்ள உயிர்களையெல்லாம் துன்பம் செய்கின்ற அறியாமையாகிய அந்தகாசுரனை இறைவன் சுடர்  விடுகின்ற ஞானமாகிய சூலத்தைக் கொண்டு அழித்தான். 
 
0340: இறைவனின் அருட்செயல் :
உலகம் நிலைபெறப் பிரமனது சிருட்டி வேண்டும் என்று கருதிய இறைவன், சுவாதிட்டானமாகிய சக்கரத்திலிருந்து விந்து நாசம் செய்து கொண்டிருந்த பிரமனை, விந்து நீக்கம் செய்வதைத் தடுத்து, அக்கினிக் காரியத்தினால் விந்து ஜெயம் பெறச் செய்து, அவனது சேட்டையை நீக்கி, உலக இன்பத்துக்குப்  பொருந்துமாறு அருளினான்.  இது நிகழ்ந்த இடம் திருப்பறியலூர்.
பக்குவப்பட்ட சீவர்களை பிரமனின் ஆட்சியிலிருந்து விடுவித்து சுவாதிட்டானச் சக்கரத்திலிருந்து விந்து நாசம் செய்வதைத் தடுத்து அக்கினி காரியத்தால் விந்து ஜெயம் பெற அருளினான்.  (நான் முகனின் சிரசைக் கொய்த தத்துவம்).
 
0341: பக்குவப்பட்டவர்களுக்கு உலக இன்பத்தின் கவர்ச்சியை நீக்கினான் : இறைவனது திருவடியை உணர்ந்த பக்குவப்பட்ட சீவர்கள் போகம் செய்யும் போது பிரம்மனின் சேட்டை ஓட மணிப்பூரகத்தில் இருந்து திருமால் தந்து கொண்டிருக்கும் போகக் கவர்ச்சியை சிவன் போக்கியருளுவான்.  காம இன்பம் அனுபவிக்கக் கருவாயில் எழுச்சியும் இரத்த ஓட்டமும் மிகுதியாய் வேண்டும்.  ஞானியானவன் போக காலத்திலேயும் சிரசிலேயே இடைவிடாமல் சிந்திப்பதால் ஆண் குறியில் இரத்தம் மிகுதியாகாமல் தடுக்கப்படுகிறது. இதுவே பிரம்ம கபாலத்தில் குருதியை ஏற்றதன் தத்துவம் எனப்படும்.
இது நிகழ்ந்த பதி திருக்கண்டியூர்.   இறைவன் பக்குவப்பட்ட சீவர்களுக்கு உலக இன்பத்தில் உண்டாகும் கவர்ச்சியை நீக்கியருளுவான். 
 
0342: இறைவன் அருள் புரிவான் :
அபானன் விந்துநாசம் செய்யும் பொருட்டு கீழ் நோக்குதலைச் செய்வதை யோக சாதனையால் தடுத்து மேற்சென்று பிராணனோடு கலந்து  சகஸ்ரதளம்  வட்டமாக விரியுமாறு சீவர்களுக்கு சிவன் அருள் புரிவான். இதுவே சங்கார தத்துவம் எனப்படும்.
 
0343: முப்புரம் அழித்ததை அறியவல்லவர் யார் ?
சிவன் ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களை, மும்மலங்களின் வலிமையை அழித்தவன். இதுவே முப்புரம் எரித்த தத்துவம் எனப்படும்.
 
0344: சிவ ஒளியின் முன் மற்ற ஒளிகள் விளங்கா :
அகத்தே உள்ள அக்கினியை சிரசின் மேல் எழுப்பி நாதத்தை வெளிப்படுத்தும் அக்கினி காரியத்தில் சிவன் ஒளியாக வெளிப்படும்போது ஏனைய எல்லா ஒளியும் விளங்காது ஒழியும். இதுவே கயமுககொடியாசுர
சங்காரத்தின் தத்துவம்.
 
0345:மூலாதாரக்கனலைச் சுழுமுனை உச்சியில் தியானிப்பவருக்கு இறப்பில்லை:
மூலாதாரத்திலிருந்து மூலக்கனலை சுழுமுனை நாடி வழியாக மேலெழுப்பி சிரசில் சுழுமுனை உச்சியில் தியானித்திருப்போர் எமனை வென்று உடம்பாகிய உலகைக் கடந்து சகஸ்ரதளமாகிய ஊரில் அழியாதிருக்கலாம்.  இதுவே  திருக்கடவூர் எமசங்காரத்தின் தத்துவம்.
 
0346: திருக்கொறுக்கையில் நிகழ்ந்த வீரச் செயல் :
மனத்தைச் சிவனோடு சேர்த்து வைத்து குறிவழி செல்லாது தடுத்து வாழ்க்கைத் துணைவியுடன் பொருந்தியிருந்து விந்து ஜெயம் செய்வது அருந்தவயோகமாகும்.    இதைப் பரியங்க யோகம் என்றும் கூறுவர். 
சிவனோடு மனத்தைப் பொருத்தி விந்து ஜெயம் பண்ணுதல் காம தகனமாகும்.   
இதுவே திருக்கொறுக்கையில் மன்மதனைத் தகனம் செய்த தத்துவம் எனப்படும்.
 
3. இலிங்க புராணம்.
இலிங்கமாவது தோற்ற ஒடுக்கங்களுக்கு காரணமாகிய அருட்குறி.
 
0347: சத்தி அருச்சனை செய்தாள் :
மூலாதாரத்திலுள்ள கிரியா சத்தியாகிய குண்டலினி சத்தியே சிரசை அடைந்து  சிற்சத்தியாகி சிவனோடு பொருந்த வழிபடுகிறாள்.  இதுவே சிவனைச் சத்தி வழிபட்டாள் என்ற தத்துவ விளக்கம்.
 
0348: சிவன் அன்புடையவரை ஆட்கொள்ளுவான் :
சிவபெருமானை அடைவது கடினம் என்று சோர்ந்து போக வேண்டாம்.    அவன் தன்னிடம் அன்பு செலுத்தும் அடியாரை அவரது தன்மையறிந்து கருணையோடு ஆட்கொள்வான்.
 
0349: மூவர்க்கும் அருள்பவன் சிவன் :
மணிப்பூரக அதிபதி திருமாலும் சுவாதிட்டான அதிபதி பிரமனும் மூலாதாரத்தைச் சுற்றிவர அங்கு ஔமயமாக விளங்கும் உருத்திரமூர்த்தி  உற்பத்தியைப் பெருக்காது மேலே சென்ற திருமாலுக்குச் சகஸ்ரதளத்தில் விளங்க   அருள் செய்தான்.  உற்பத்தியைப் பெருக்காது மேலே சென்ற பிரமனுக்கும்  ஒளியினை நல்கினான். சிவனே பிரமன், திருமால், உருத்திரன் ஆகிய மூவர்க்கும் அருள் புரிய வல்லவன்.
(பிரமனுக்கு வாட்படையும் திருமாலுக்கு ஆழிப்படையும்  அளித்த தத்துவம்.)
 
0350: சீவனின் குணங்கள் கீழ்ப்படின் சிவன் வெளிப்படுவான் :
ஞானேந்திரியம் ஐந்து கன்மேந்திரியம் ஐந்து ஆக பத்து, அவற்றால் பற்றப்படும் புலன்கள் பத்து என பத்திதழ்த் தாமரையாகிய மணிப்பூரகத்தில் இருந்து உலகானுபவம் பெறும் சீவனின் குணங்கள் கீழ்ப்படுத்தப்பட்டு சீவபோதம் தடையுற்ற போது சீவனுக்கு சிவனது அருள் கிட்டும்.
(இராவணன் கையிலை மலையைப் பெயர்தெடுத்த தத்துவம்.)
 
0351: உடல் நினைவு கெடும் வழி :
சீவனாகிய சண்டீசனின் உணர்வு சுழுமுனை வழியாக மேலேறிச் சகஸ்ரதளத்தைத் தாண்டிச் சென்ற போது மாயையால் உண்டான உடம்பான தந்தை பொறுத்துக் கொள்ள இயலாது சினம் கொண்டு ஒடுக்க முற்பட சண்டீசன் அக்கினி கலையாம் வாளினால் இடை பிங்கலையாகிய இருநாடிகளையும் தொழிற்படாது செய்து சிவத் தொண்டன் ஆயினான்.
சீவ உணர்வு சகஸ்ரதளத்தைத் தாண்டிச் சென்ற போது உடல் நினைவு கெடும்.  (சண்டீச நாயனார் வரலாற்றின் தத்துவம்.   சண்டீசுரர் மணலால் இலிங்கத்தைச் செய்து பசுக்களின் பாலை அந்த இலிங்கத்துக்கு வார்த்துச் சிவ வழிபாட்டைச் செய்தார்.  அவருடைய தந்தை எச்சதத்தன்.)
 
0352: மனம் ஒருமைப்பட்ட தேவர்களுக்குச் சிவபெருமான் அருளல் :
இந்திரிய வாயிலாக புறப்பொருள் நாட்டம் உள்ள வரை வருத்தத்தையும் துன்பத்தையும் மிகுந்து அனுபவித்த தேவர்கள் பின் மனம் ஒருமைப்பட்டு சிவனைச் சரணடைந்து "இறைவனே போற்றி என வணங்கினர்.  அப்போது ஒப்பில்லாத புகழை உடைய சிவபெருமான், "எழுந்து மேலே வாருங்கள்" என 
தேவர்களுக்கு அருள் செய்தான்.
(பாற்கடலில் எழுந்த நஞ்சு தேவர்களைத் துரத்தியது குறிப்பிடப்பட்டுள்ளது.)
 
4. தக்கன் வேள்வி :
தக்கன் வேள்வியாவது ஆண் பெண் கூட்டுறவாகும்.  சிவபெருமானை நினைந்து செய்யாமையால் விந்து செயமாகிய பயனைப் பெறாது கூட்டுறவாகிய வேள்வி சிதைந்தது..
                                                                                                                                                                   0353: சிவன் அருள் இல்லையேல் விந்து செயம் பெற முடியாது :ஆண் பெண் கூட்டுறவாகிய தக்க யாகத்தை சிந்தையில் சிவனை நினையாது செய்ததால் சிவபெருமான் கோபம் கொண்டார். 
அப்போது காமாக்கினியால் உடல் தகிக்கப்பட்டு விந்து நீக்கம் உண்டாகியது. விந்து செயம் என்ற தக்கயாகத்தின் பயன் சித்திக்கவில்லை.   சிவனது அருள் இல்லையென்றால் விந்து ஜெயம் பெற முடியாது.
 
0354: திருமாலுக்குச் சிவன் அருளல் :
ஆண் பெண் கூட்டுறவைச் செய்யத் தருக்கி எழும் திருமாலும், "உலகத்தில் படைப்பவன் சிவன் அல்லன்; நாமே தான்" என்றான்.  அதனால் கட்டினை உண்டாக்கும் பாசக் கடலில் சூழ்ந்து வருந்திய பின் சிவனை நோக்கித் தவம் செய்ய, முடிவில்லாத சிவபெருமானும் விஷ்ணு தத்துவம் மேலே விளங்கும்படி
செய்தான். விஷ்ணு தத்துவத்தால் விருப்பத்துக்கு காரணமாகி ஆண் பெண் சேர்க்கையை இராசதமாகச் செய்யாமல் சிவனை நினந்து சாத்துவிகமாகச் செய்தால் அது தக்கன் வேள்வி என்ற தவமாகும். அப்போது காம உணர்வு இரச்சிக்கப்படுகிறது.
 
0355: சிவபெருமான் பிரமனுக்கு அருளுதல் :
காம காரியமாகிய தக்கன் வேள்விக்குத் தானே தலைவன் என்று பிரமன் தருக்குக் கொண்டான்.  அதனால் காமாக்கினி மூண்டெழுந்த போதிலும் இவற்றின் சேர்க்கைக்கு உதவுபவன் பிரமனது சட அணுக்களை அணுவுக்கு அணுவாய்த் தாங்குபவனும் ஆகாய பூத நாயகனுமாகிய சிவனேயாகும்.
 
0356: நீக்கம் அற நிறைந்திருக்கும் சிவன் :
பிரமன், திருமால் முதலிய தேவர்கள் அவர்களுக்குரிய தன்மையை சிவபெருமானால் பெற்று சிவ ஒளியில் நிலை பெற்றிருப்பதை சீவன் உணர்ந்த போது சீவனுக்கு சிவன் விளங்கியருளுவான். அக்கினி கலை உள்ளே விளங்கும் வரை அவ்வக்கினி கலையில் சிவபெருமான் நீக்கமற நிறைந்து விளங்கியிருந்தான்.
 
0357: சிவன் விரைந்து வந்து அருளுதல் :
தேவர்கள் எல்லாம் வான பூத நாயகனான சிவபெருமானே எவ்விடத்தும் நீக்கம் இல்லாமல் நிறைந்துள்ளான் என்று உணர்ந்து வேண்ட, மூலாதாரத்தில் உள்ள அக்கினி கலை சுழுமுனை வழியாக மேலெழ, சிவந்த ஒளியானது சகஸ்ரதளத்தில் சென்று பற்ற, இதுவே வழிபடும் மகிழ்ச்சிக்குரிய பெருவழி என எண்ணிச் சிவபெருமான் சிவன் விரைந்து வந்து அருள் செய்தான்.
 
0358: திருமால் முதலியவர் உறுப்புகளை இழந்து பின்பு நல்லவர் ஆயினர் :
திருமால், பிரமன், தக்கன், சூரியன் ஆகியவருடன் வரும் சந்திரன், நாமகள், அக்கினி, இந்திரன் ஆகியோர்  சிரம், முகம், மூக்கு, காது, தோள் ஆகியவற்றை சிவனருள் பொருந்தாமையால் இழந்து பின் சிவனருளால் தூய்மை அடைந்து மேற்சென்ற போது நல்லோராயினர்.
 
0359: மனத்தை ஒருமைப் படுத்தும் மந்திரம் கொடிதன்று :
வாயால் செபிக்கப்படும் செபி மந்திரங்களைச் சொல்லிச் சிவனது அருள் பெற்ற  தேவர் சொல்லும் செபி மந்திரத்தை விட, வாயிட்டுக் கூற முடியாத பிரணவத்தால் மூலாதாரத்திலுள்ள அக்கினியைத் தூண்டி, நாதம் உண்டாகச் செய்து, தாம் பொருந்த நோக்கும், மனத்தை ஒரு முகப்படுத்தும் குவி மந்திரம் அசபையே சிறந்தது.  (மனதைக் குவியச் செய்யும் குவி மந்திரமான பிரணவத் தியானமே சிறந்தது.)
 
0360: சிவன் மல நீக்கம் செய்தனன் :
தேவர்கள் தங்களது ஒன்பது வாயில்களும் இன்பம் அடைய, எங்களுக்கு அருளுதல் வேண்டும் என்று வேண்டிட, கொடிய அசுரர்களாகிய ஆணவாதி மும்லங்களும் அழிந்துபோகும்படி பிரணவம்என்ற வில்லினால் எரித்து அருளினான்.
 
0361: அன்புடன் வேள்வியைச் செய்ய வேண்டும் :
முதலில் சினந்து, பின்பு அருள் செய்த நாத வடிவினனான சிவபெருமானே, தன்னை நினையாது அலட்சியப்படுத்திச் செய்யும் ஆண் பெண் காம வேள்வியை விந்து நாசம் ஏற்படுத்தி அழியுமாறு செய்கிறான்.  இன்ப வடிவினனான தன்னை அன்புடன் நினைந்து அகங்காரத்தை விட்டு அன்போடு சாத்துவீகமாகக் காமவேள்வியைப் புரிபவருக்கு அதே சிவன் விந்து ஜெயம் தந்து அருள் புரிகிறான்.
 
5. பிரளயம் (அழிவு) அழிவைச் செய்து அருளுபவன் சிவன்.
 
0362: சிவன் சோதியாய் விளங்கி அருளுவான் :
கருவிடும் எல்லையை மூடி எழும் மணிபூரகத்தில் உள்ள நீர் மண்டலத்தில் உற்பத்தி செய்யும் பிரமனும் சேர்க்கையைச் செய்யும் திருமாலும் தம்முள் மாறுபட்டு நிற்க, மணிபூரகத்தில் உள்ள அறிவு மயமான சூரியன் மேலெழுந்து சிவசூரியனாகி அரிய உச்சியின் மேல் நின்று இருவருக்கும் அருள் புரிந்தான்.
 
0363: அஞ்சேல் என அருள் செய்தான் :
உலகிலுள்ளோர் காமாக்கினியில் வீழ்ந்து துன்பமாகிய பிரபஞ்சத்தில் அழுந்தாது இருக்க சிவபெருமான் கடல் பகுதியான மணிபூரகத்தினின்று பிளந்து கொண்டு எழுந்து அண்டத்தின் எல்லையை அடைந்து சீவர்களைத் துன்பமான அலை மோதும் உலகத்தில் அழுந்தாமல் காத்து "அஞ்சேல்" என்று அருள் செய்தான்.  (சிவனை நினைப்பவர் காமாக்கினியால் தகிக்கப்பட்டு பிரபஞ்சத்தில் உழலமாட்டார்.)
 
0364: சிவனைக் காணும் தன்மையில்லாதவர் :
குளிர்ந்த மணிபூரகமான கடலைக் கடந்த அறிவுமயமான சிவசூரியனை அமரத்தன்மை பெற்றவரும், ஒளி மண்டலத்தவரும் தலையின் மேல் எட்டுத்திக்கும் கடல் போல் பரவி விளங்கும் சிவன் என்று வணங்குவர். வானத்தைக் கடலைப் போன்று செய்த அப்பெருமான் சிரசின் மேலும் சென்று அகக் கண்ணுக்குப்
பரவெளியாகக் காட்சி தருவதை தேவர்கள் அறிய மாட்டர்கள்.
 
0365: காமத் தீயை முறை தெரிந்து பயன்படுத்துவோர் பெறும் பயன் :
சீவர்கள் தமது உடலில் காமாக்கினி மிகும் போது அதை மிகாதவாறு தடுத்து விந்துநீக்கம் ஆகாதவாறு வைத்து காமாக்கினியை முறை தெரிந்து பயன்படுத்தும்போது தம்முள்ளே சிவத்தை சுயம்பு மூர்த்தியாக  நிலையாகப் பெற முடியும்.
 
0366: நான்முகனின் சேட்டையை அழித்தல் :
சீவன் சிவனோடு கொள்ளும் நட்பை அழிப்பவன் பிரமன். விந்து நீக்கமே பிரமனின் ஊர்த்துவ சிரமாதலின் அவனது சிரமானது ஆகாயத்தை பழிக்காதவாறு சிவன் பக்குவப்படுத்தி பிரஜா விருத்தியாகிய சேட்டையினை ஏற்றருளினான்.
 
6. சக்கரப் பேறு. 
சக்கரப் பேறாவது ஆணையால் பெற்ற செல்வம் ஆகும்.  சிவபெருமானிடம் இருந்து திருமால் சக்கரம் பெற்ற வரலாற்றின் தத்துவம்.
 
0367: இன்பங்களைப் படைத்துக் காப்பவன் :
மயக்கத்தைத் தரும் விஷ்ணு தத்துவத்துக்கு இவ்வுலக அனுபவம் அறுபட்டதும் மணிப்பூரகத்திலுள்ள உணர்வு அழ்கிய சுழுமுனை வழியாக சகஸ்ரதளமாகிய வட்டத்தை அடையும்.  அப்பொழுது வெள்ளொளியில் விளங்கும் தேவாதி தேவன் பூமி முதலாக ஏழுலக இன்பங்களையும் படைத்து அருளுபவனாக உள்ளான்.
 
0368: சிவன் தன் ஆற்றலில் ஒரு பகுதியை அளித்தல் :
திருமால் தான் பெற்ற சக்கரத்தைச் தாங்க முடியாமல் மேலான சிவபெருமானை விருப்பத்துடன் வழிபாடு செய்ய சிவன் திருமாலுக்குத் தனது வியாபக சத்தியைப் பகிர்ந்தளித்து சகஸ்ரதளம் விரியும்படி ஆற்றலைக் கொடுத்தான்.  உலகாபிமானம் உள்ளவரை சகஸ்ரதளம் போதிய ஆற்றல் இல்லாமையால்
குவிந்திருக்கும்.  உலகாபிமானம் நீக்கி சிவனை முழுமையாக வணங்க சிவனருளால் சகஸ்ரதளம் விரிந்து கொடுக்கும்.  அரனருளால் சகஸ்ரதளம் நிமிர்ந்து பிரகாசம் அடையும்.
 
0369: திருமாலுக்கும் சக்திக்கும் சிவபெருமான் தன் ஆற்றலை அளித்தல் :
சிவனே தன் அகண்ட வியாபகத்தில் ஒரு பகுதியைத் திருமாலுக்கும், சத்திக்கும் ஆளுகைக்கு எல்லைப் படுத்திக் கொடுத்தான். திருமாலும் சத்தியும் சிவனது பகுதியாக சிவனது ஆணை வழி நடப்பவராவார்.
 
0370: திருமால் சக்கரம் பயன்படாமை :
திருமால் காம உணர்வினைத் தூண்டி சீவர்களது தக்கன் வேள்வியை நடத்த காம வாயுவின் வேகத்தால் விந்து ஜெயமின்றி   அக்கினி சத்தியாகப் பயன் கிட்டாது சுக்கில நீக்கம் ஏற்பட்டு காம வேள்வி அழிந்தது.
 
7.எலும்பும் கபாலமும்.
பிரம விஷ்ணுவின் எலும்புகளைச் சிவன் அணிந்துள்ளான் என்பதன் தத்துவம் உணர்த்தப் பெறுகிறது.
 
0371: சிவன் எலும்பும் கபாலமும் ஏந்தியிருந்தார் :
சீவர்கள் இறந்தாலும் அவர்கள் அறிவும் (மண்டையோடு) அறிவு விளங்கத்தக்க சூக்கும உருவமும் (எலும்பும்) அழியாமல் சிவனிடம் உள்ள காரிய சரீரம் தாங்கிக் கொண்டுள்ளது.  சீவர்கள் மறு பிறவி அங்கிருந்தே வருகிறது.  (தோற்றம், இருப்பு, ஒடுக்கம் ஆகிய காரியம் சிவனிடம் காரியமாக உள்ளது.)
 
0372: நான்முகனும் திருமாலும் சிவனின் அடிமுடி தேடல் :
சிவ வியாபகத்துக்கு உட்பட்டிருந்த பிரமனும் திருமாலும் அறியாமையால் தங்களைத் தாங்களே தலைவர் என்று ஆணவத்தோடு அங்கீகரித்த காரணத்தால் அவர்கள் முன்பு சோதிப்பிழம்பாய்த் தோன்றிய சிவபெருமானது திருவடியையும் திருமுடியையும் காணமுடியாது தேடுவாராயினார்.
 
0373: சிவனை சீவர்கள் காணலாம் :
ஆகாய பூதத்தில் ஏழு உலகிலும் நிறைந்து அக்கினி வடிவில் வியாபித்துள்ள நீலகண்டனை அவனது அருளால் சீவர்கள் காணலாம்.
 
0374: எங்கும் நிறை இறைவன் சிவன் :
சிவன் உடம்பாயும், உயிராயும், அதனுள் நின்ற உணர்வாயும், அக்கினியாயும், தூரப் பொருளாயும், ஆகாயமளவும் ஓங்கி விளங்கும் சோதி உருவாயும், சூரியனையும் சந்திரனையும் கடந்து ஆளுகின்ற அண்டங்கள் முழுமையாகவும் வியாபித்துள்ளான்.
 
0375: சிவப்பரப்பில் பொருந்தினாலன்றி அவனை அறிய இயலாது :
பிரம விஷ்ணுக்கள் ஆணவத்தோடு கூடி ஆராய்ச்சி செய்தமையால் சிவனது திருவடியும் திருமுடியும் வளர்ந்து கொண்டே செல்ல அவற்றைக் காண முடியாது சிவனது அருளைப் பெறாதவராயினர்.  சிவத்துடன் பொருந்தியவர் சிவ வியாபகத்தைப் பெற்று சிவனை அறிவர்.
(சிவ வியாபகத்தில் பொருந்தினாலன்றி அதனை அறிய முடியாது.)
 
0376: பிரமன் விஷ்ணுவால் சிவனின் அடியையும் முடியையும் காண இயலாது :
தேவரும் முனிவரும் திருமாலும்  பிரமனும் ஆசையுற்று சிவனை வழிபட்டோராதலின் சிவனை அடைய முடியவில்லை.
0377: பிரமனும் விஷ்ணுவும் சிவனது இயல்பை அறியார் :
சுவாதிட்டானச் சக்கரத்திலுள்ள பிரமனும் மணிப்பூரகச் சக்கரத்திலுள்ள திருமாலும் ஊண் பொதிந்த உடம்பினுள்ளே உயிர் போல உடனாய் உணர்கின்ற,  முன் மூளை, பின் மூளையாகிய தானங்களில் அதிட்டித்துள்ள சிவனது இயல்பினைப் பெறார். பிரமன், திருமால் இருவரும் சிவனுக்கு ஈடாக மாட்டார்.
 
0378: பஞ்சசாதாக்கியத்தின் அருளைப் பெறலாம் :
ஆன்மாக்களின் உய்திக்காக பரம் பொருளால் அமைக்கப் பெற்ற உண்மை நெறியில் சென்றால் எல்லாத் தத்துவங்களிலும் கலந்தும் கடந்தும் நிற்கின்ற மேலான பஞ்ச சாதாக்கியத்தின் அருளைப் பெறலாம்;  சதாசிவ ரூபத்தைக் கூடலாம்.
 
0379: தேவர் சிவனைப் பொருந்தாததற்கு காரணம் :
தேவர்கள் சிவபெருமானை வணங்கிய போதும் - ஆசையோடு வழிபட்டதாலும் தம்மை முழுமையாக அர்ப்பணிக்காததாலும் சிவனைப் பொருந்தாது அறியாதவராயினர்.
 
0380: சிவன் படைக்கும் தொழிலைப் பிரமனுக்கு அருளல் :
'என்னுடைய சிரசில் தாங்கள் விதிக்கும் கட்டளையைத் தாரும்" எனப் பிரமன் சிவபெருமானிடம் வேண்ட ஊழியைச் செய்கின்ற சிவன் பேரொளிப் பிழம்பாய் விளங்கி நின்று சிருட்டித் தொழிலைப் பிரமனுக்கு அருளினான்.  (பிரமனை சிருட்டித் தொழிலுக்கு நியமித்தவன் சிவபெருமானாவான்.)
 
4. சர்வ சிருஷ்டி = எல்லாவற்றையும் படைத்தல்.
 
0381: நாத தத்துவ தோற்றம்:
தொடக்கமும் முடிவும் இல்லாத மேலான பரம்பொருள் அறிவு மயமாய் சிவன் எனவும் சக்தி எனவும் பிரிப்பில்லாமல் விளங்கும். பரம்பொருளுடன் பிரியாத பராசக்தியான பேரொளியிடம் பரன் தோன்றத் தீமையற்ற பரை தோன்றும். அந்தப் பராசக்தியிடம் விளங்கும் நாதம் தோன்றும்.
 
0382: நாதத்தினின்று தோன்றுவன!
மேலே சொல்லப்பட்ட நாதத்திலிருந்தது விந்து தோன்றும்.  சுத்தமாயையில் தோன்றிய நாத விந்துக்கள், சிவன் எனவும் சத்தி எனவும் பிரியும். பிரிந்து ஞானம் என்றும் செயல் என்றும் முறையே உண்டாகும். உலகைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற இச்சை காரணமாக அனைத்தும் சுத்த மாயையினின்று
தோன்றும்.
நாதம்  -- சிவன் -- பேரறிவு    -- ஞானம்
விந்து  -- சத்தி   -- பேராற்றல் --  செயல்
 
0383: சக்தியின் பெருமை சொல்லப்படும் தன்மையதோ!
தத்துவங்கள் தோன்றுவதற்கு இடமாகிய சக்தி பராசக்தியிடமாய்த் தோன்றி நவமணிகள் போன்ற ஒளியுடன் ஆவியில் கலந்து பரவி நிற்கும்.    ஆற்றலொடு தொழில் செய்கின்ற அந்தச் சத்தியின் பெருமையைச் சொல்லப் புகுந்தால் அளவிடும் தன்மை உடையதாகுமோ!
 
0384: சதாசிவ மேன்மை:
எண்ணத்துக்கு அப்பாற்பட்ட சிவப் பேரொளியானவன், எண்ணத்துக்கு உட்பட்டு வரும் சத்தியாய்,  இச்சை காரணமாகத் தோன்றிய நாதத்தைப் பொருந்திய விந்துவாய், ஐந்தொழில் பாரத்தை ஏற்று நடத்தும் சார்பாகிய சத்தியாகவும் ஒப்பில்லாத சக்தி உடையவனாகவும் உள்ளான்.
 
0385: பிரபஞ்சம் உண்டாதல்:
அசுத்த மாயையினின்றும் வானம், காற்று தோன்றி வளரும். நெருப்பினின்றும் நீரும் பொருந்திக் கடினமான இயல்பு கொண்ட நிலமாகும்.  பஞ்சீகரண நியாயத்தில் ஒன்றில் ஐந்து இயல்புகளும் கலந்து வான் முதலிய ஐந்து பூதங்களாகிப் பூ என்ற வியகிருதியில் பிரபஞ்சம் தோன்றும். ஐந்து பூதங்களின்
கூட்டமே புவனம்.  புவனங்கள் இருநூற்று இருபத்து நான்காகும். 
(உதாரணம்: நிலம் என்ற பூதத்தில்தரை பங்கு நிலத்தின் தன்மையும் நெருப்பு, காற்று நீர் வான் ஆகியவற்றின் தன்மை தலா அரைக்கால் பங்கும் இருக்கும்.
 
0386: சிவசத்தி படைப்பில் நான்முகனிடம் பொருந்திப் படைத்தல்:
புவனத்தைப் படைப்பது சிவசத்தியாகும்.  அவர்கட்கு பிரமன். திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் என்ற ஐந்து மக்கள்.  படைக்கும் போது சிவசத்தியே பிரமனாக இருந்து நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் விந்து நாதம் சத்தி சிவம் என்ற ஒன்பது கண்டங்களைப் படைப்பர்.
 
0387: சிவனும் சத்தியும் வெம்மையும் குளிர்ச்சியுமாய் உலகைக் காக்கின்றனர்:
சிவபெருமானே  அறிவின்  மயமாய் எல்லாப் பொருள்களிலும் பொருந்தி குளிர்ச்சி பொருந்திய மாயா காரியப் பொருளைக் காத்தருள்கின்றான்.  சத்தியும் கண்ணோட்டமுடன் எல்லாவற்றிலும் கலந்து, தாங்கும் தன்மையுடன் (மேல் ஏழ் உலகிலே) வியாகிருதியிலே விரிந்து எழுவாள்.
 
0388: நீருடன் கூடிய மண்ணிலே பிறப்பு உண்டாதல்:
நீர்ப் பகுதியான மணிபூரகத்தில் புருடனுக்கு இன்பம் உண்டாகும்.  அக்கினி விளங்கும் அநாகதமான நெஞ்சிலே ஒளி வீசுகின்ற கிரணங்கள் உண்டாகும். வாயு விளங்கும் விசுத்தியில் ஆராயத் தக்க உயிர்ப்பு நிலைபெற்றிருக்கும். நாதம் சத்தியைத் தந்து கொண்டிருக்கும்.  நீர் மண் இடையேயுள்ள சுவாதிட்டானமே உற்பத்திக்குரிய இடமாகும்.    இப்பாடல் ஐம்பூதங்களின் தோற்ற முறையைக் கூறுகின்றது. ஐந்து பூதங்களும் ஐந்து தன் மாத்திரைகளினின்று தோன்றுவன.
 
0389: சிவனே உலகைப் படைப்பவன்:
எல்லா அண்டங்களிலும் வாழும் தேவர்களுக்குத் தலைவனும் முன்னோனுமான சிவபெருமான் உலகத்தைப் படைக்கும் நான்முகன், உலகங்கள் ஏழையும் உண்டு உமிழ்ந்த திருமால் ஆகியவரை அதிட்டித்து  இந்த உலகை ஆக்கலும் காத்தலுமான செயலைச் செய்கின்றான்.
 
0390: சிவனே பிரமனாய்ப் படைப்பு நடத்துகின்றான்:
பெருகும் கடற்பகுதியான மணிபூரகத்தில் உள்ள திருமாலுடன் தலையின் மீது அழகான வெண்மையான ஒளியில் விளங்கும் சிவபெருமானும், பூரிக்கும் சுவாதிட்டான சக்கரத்தில் உள்ள பிரமன் அங்கு உடம்புடன் உயிரைப் புணர்த்தும் தன்மையை உணர்ந்துள்ளான்.
 
0391: சிவனே திருமாலாய் பிரமனாய் வேதமாய் உலகாய் உள்ளான்:
படைப்புக்குக் காரணனான சிவபெருமான் அன்புடன் அனைத்துப் பொருள்களிலும் கலந்துள்ளான். அப்பெருமான் திருமாலாக உடலின் நடுப்பகுதியான தாமரையில் வீற்றிருக்கின்றான். அவனே புவனங்களை எல்லாம் படைக்கின்ற பிரமனாக உள்ளான்.  அவனே சொல் பிரபஞ்சமாகவும் (ஆரணமாகவும்) பொருட் பிரபஞ்சமாகவும் (உலகாகவும்) உள்ளான்.
 
0392: பிரமனது படைப்புக்குக் காரணன் சிவன்!
பயன்கள் எல்லாவற்றையும் எளிமையாய்த் தரும் பெரிய மாணிக்கத்தை விளங்கச் செய்ய, நன்மையை அளிக்கச் சிவன் ஒருவன் இருக்கின்றான்.   அவன் பிரமனுக்கு ஒளியை அளித்துப் படைப்புத் தொழிலுக்கு மூலாதாரத்திலிருந்து உதவுகின்றான்.  அவனது துணையைக் கொண்டு பயனை எளிமையாகப் பெறும் காரணத்தை நான் உணர்ந்து கொண்டேன்.
0393: முத்தொழிலை நினைய சிவன் விளங்கித் தோன்றுவான்:
சிவனருளால் நிகழும் படைத்தலும் காத்தலும் அழித்தலும் என்ற மூன்றையும் எண்ணிப் பார்க்கும் போது சிரசைச் சுற்றியுள்ள எட்டுத் திக்குகளிலும் மூலாதாரத்திலிருந்து மேலே எழும் செவ்வொளி மோதிப்பரவும்.  சிவன் வெளிப்பட்டுத் தோன்றுவான்.  அம்மூன்றும் சிவனது தோற்றத்தைக் காணச் செய்யும்.
 
0394: துன்பம் நீக்கி இன்பம் தருபவன் சிவன்!
குற்றமற்ற சிவன் உலக உயிர்களுடன் பொருந்திப் பக்குவம் செய்பவன்.  அவன் என்னுடைய அரிய உயிருக்கு வளத்தைத் தந்து என் உடலில் பொருந்தி, முன்னம் துன்பத்தைக் கொடுத்த உடலுக்குத் துணையாய் நடு நாடியினது உயிர்ப்பாக நன்மை தந்து கொண்டிருக்கின்றான்.
 
0395: சிவன் உயிர்க்கு உடலாயும் உள்ளான்:
உலகங்கள் உண்டாவதற்கு உருத்திராட்சத்தை அணிந்த கொன்றை மலர் மாலையை அணிந்த அரனும், உருகும் சிவந்த பொன் போன்ற மேலான அழகிய திருமேனியை உடையவனுமான சிவபெருமான் "பிறவியில் செல்லும் உயிர் வாழும் உடலாகவும் இருக்கின்றான்."  அப்பெருமானே உயிரைச் சிவமாக்கி ஆள்கின்றவனும் ஆவான்.
 
0396: இறைவனின் பதிவிற்கேற்பப் பயன்களும் வேறுபடும்:
ஒருவன் ஒருத்தியான சிவனும்சத்தியும் அரிய உயிர்கள் உய்யும் பொருட்டுக் காத்தல், படைத்தல், அழித்தல் ஆகிய விளையாட்டை நிகழ்த்தினர். அவ்விருவரின் விளையாட்டு எல்லாம் செய்ய வல்லது.  சூரிய கதி மாறுபாட்டல் உண்டாகும் பருவங்களுக்கு ஏற்ப விளையும் பயன்களும் வெவ்வேறாகும். 
அதே போல் இறைவனின் அருள்பதிவின் மாறுபாட்டால் உண்டாகும் பக்குவத்துக்கேற்ப விளையும் பயன்களும் உலகத்தில் வேறுபடும்.
 
0397: மூவர் செயல்களையும் சிவன் அறிவான்:
உலகங்களுக்குத் தலைவனான உருத்திரனிடம் புகுந்து உலகை அழிக்கும் செயலைச் சிவபெருமான் அறிவான்.     அப்பெருமான் சக்கரப்படையை உடைய திருமாலிடம் பொருந்தி உலகத்தைக் காக்கும் செயலை அறிவான்.   சுவாதிட்டான மலர் மீது வீற்றிருக்கின்ற பிரமனிடம் பொருந்திப் படைப்புத்
தொழிலையும் அறிவான்.  அவ்வாறு அறியவும் அப்பெருமானின் ஆட்சிக்கு உட்பட்டே அவர்கள்
மூவரும் தொழிலை நிகழ்த்துகின்றனர்.
 
0398: அதிகார மலம் மட்டும் உடையவர்:
ஆணவ மலத்தை உடையவராகிய பிரமன் முதலிய ஐவரும் தகுதி பற்றி மேல் உள்ளவர் காரண ஈசர் என்றும் கீழ் உள்ளவர் காரிய ஈசர் என்றும் கூறப் பெறுவர்.இறைவன் விரும்பியபடி நடைபெறும் ஐந்தொழிலால் சுத்த மாயையில் தோன்றிய பிரமன், திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன்
ஆகிய ஐவரும் அதிகாரம் மட்டும் உடையவராதலால் ஆணவ மலம் முற்றிலும் நீங்காதவர்  என்றே சொல்லப்படுவர்.
 
0399: சிவசத்தியின் விளையாட்டு:
மாயை என்னும் ஒன்றே சுத்த மாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை என மூன்றாக விளங்குகின்றது.  ஏனைய மூன்றான சாதாக்கியம், மகேசுவரம், சுத்தவித்தை என்ற மூன்றும் மாயையினது காரியமாகும்.  விந்துவைப் பெற்ற நாதமானது பரையினின்று தோன்றுகின்றது. ஆதலால் பரையுடன் சிவனது பழமை
யான விளையாட்டே படைப்பு முதலியவையாகும்.
 
0400: சதாசிவ மூர்த்தியின் ஆணைவழி ஏவல் செய்பவர்:                                                                             வான் முதலிய ஐந்து பூதங்களை இயக்கும் சதாசிவர் முதலிய ஐவரும் உள்பொருளான மாயா சத்தியுள்
பொருந்தி என் உடம்பிலும் உயிரிலும் தொழில் செய்கின்றனர்.  பெருமையுடைய சதாசிவர் உருத்திரன் திருமால் பிரமன் ஆகியோராய் வான், மண் என்னும் உலகங்கள் தோன்றுமாறு செய்கின்றனர்.
 
0401: சத்தியே ஐந்தொழிலையும் செய்பவள்:
அருள் நிரம்பிய முக்கோணப் பீடத்தின் விந்துவில் மையத்துப் புள்ளியிலே விளங்கும் அருள் உள்ளமும் மண்டலநாயகியுமாய் உள்ளவள் சத்தி. அப்பெருமாட்டியே அருள் செய்யும் சதாசிவ மூர்த்தியாகிப் பொருந்தியிருப்பாள்.    அப்பெருமாட்டியே ஐந்தொழில்களைச் செய்பவள் ஆவாள்.
 
0402: எல்லாமாய் இருப்பவள் மனோன்மணி :
சூரியசந்திரர் இருவரையும் இரு கொங்கைகளாய் கச்சினில் அணிந்த மனோன்மணியே மங்கலப் பொருளாகவும், எல்லாவற்றுக்கும் காரணமாகவும், படைத்தல் முதலிய தொழிலில் கலந்தவளாகவும் இருக்கின்றாள்.  அவளே பிரணவ வடிவுடையவள்; வேதப்பொருள்; தேவரை மயக்கும் திரோதான சத்தி; 
முழுமையாய்ச் சந்திர ஞானமும் அனுபவ ஞானமும் உடையவள்.
 
0403:சதாசிவனே மகேசுவரன் உருத்திரன் பிரமன் திருமாலாய் விளங்குபவன்.
சதாசிவத்துடன் கலந்து நிற்கும் மகேசுவரன் கீழே போய் அங்குத் தொழிலைச் செய்யும் உருத்திரனாகவும் திருமாலாகவும் ஆண் பெண் சேர்க்கையைச் செய்யும் சுவாதிட்டானச் சக்கரத்தில் உள்ள பிரமன் ஆகவும் பொருந்தியிருக்கின்றான்.
 
0404: எல்லாமாய் இருப்பவன் சிவனே!
சிவன் என்னும் ஒருவனே சதாசிவன் என்ற தலைவனாகிக் காரியக் கடவுளுடன் பொருந்தி ஏழ் உலகங்களையும் படைக்கின்றான்.  படைப்பது போலவே அவன் ஏழ் உலகங்களையும் காக்கின்றான்,  அவனே ஏழ் உலகங்களையும் ஒடுக்குகின்றான்.  அவனே உலகமாகவும் உயிராகவும் இருக்கின்றான்.
 
0405: சிவனே திருமாலின் செயலில் விளங்குபவன்!
செந்தாமரை மலர் போன்றவன், தீயின் செந்நிறத்தை உடையவனான எம் தலைவனே மேகம் போன்ற கரிய நிறம் உடைய, உயிர்களைப் பாசத்தில் செலுத்தும் திருமாலின் செயலிலும் பூங்கொத்துகளை அணிந்த மங்கையர் கூட்டத்தும் பொருந்தி வலிய உலக உற்பத்தியை அமைக்கின்றனன்.
சுழுமுனை நாடியில் விளங்குவது தீப்பந்தம் போன்று விளங்கும் சிவந்த ஒளி . இந்த ஒளி சுவாதிட்டானம் மூலாதாரம் வழியே நேரே சகஸ்ரதளத்துக்குச் செல்வதாகும்.   இதுவே சிவம் என்க.
 
0406: சிவன் ஆண் பெண் உள்ளத்தில் காதலை விளைவிக்கிறான் :
சிவபெருமான் எண் திசைகளிலும் தேடித் திரியும் சீவனுக்கு உடலுடன் உயிர்கூடிப் பிறக்கும்படி செய்தவன்.  அவன் மங்கையரும் ஆடவருமாய் இருந்து கூடுகின்றவரின் உள்ளத்தில் எழுந்தருளி நின்று விருப்பை உண்டாக்கும் தன்மையை நான் அறிந்தேன்.
 
0407: சிவசத்தி கூட்டுறவால் படைத்தல் முதலியன நிகழ்தல் :
சிவசத்திகளின் கூட்டமே ஏழுலகங்களைப் படைப்பதாகும்.  அச்சிவசத்திகளே ஏழுலகங்களையும் காப்பனவாகும்.  அவையே ஏழுலகங்களையும் அழிப்பனவாகும்.   அக்கூட்டமே உலகத்துடன் உயிரை இணைத்து வைப்பதும் ஆகும்.
 
0408: சிவனே திருமால் பிரமனுக்குப் பணிப்பவன் :
தலைவனான சிவபெருமான் ஒருவனும் சீவர்களுக்கு நன்மையைச் செய்கின்ற மகேசுவரர் சதாசிவரோடு கூடி சுத்தமாயை அசுத்தமாயை என்னும் இரண்டையும் கலக்கி ஒளி மண்டலத்திலிருந்து காரண நிலையை அமைப்பர்.    அந்த ஆணையின் வழியே யாது செய்ய வேண்டும் என்று வினவி நிற்கும்
திருமால் பிரமனுக்குச் சிவனே பணி செய்யும் ஆற்றலை அருளுகின்றான்.
 
0409: படைப்புப் பொய் என்பவரை வல்லிருளில் ஆழ்த்துதல் :
சிவபெருமான் அருளிய ஆணையினால் அயன் நான்கு வகையான தோற்றத்தில் எழுவகைப் பிறப்பினும் எண்பத்து நான்கு நூறாயிர வேறு பாட்டுடன் கூடிய உடல்களைப் படைத்தனன்.  இதனைப் பொய்யானது என்று சொல்லும் மக்களை இத்தன்மையிலேயே ஆணவ வலிய இருளில் ஆழ்த்துகின்றான்.
 
0410: மாயையின் விரிவு :
சூரியன், சந்திரன், எட்டுத்திசைக் காவலர்களாகிய இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் - போதனை செய்யும் நாதம் நிரம்பிய வானம், வாதனை செய்யும் சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் தன் மாத்திரைகள் - மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற அந்தக்கரணங்கள் அனைத்தும் சொல்லப்பட்ட மகேசுவரர் விளங்கும் விந்துமண்டலத்துள் நுட்பமாய் அமைக்கப்பட்டுள்ளன.
 
10.  திதி = காத்தல் = சிவபெருமான் திருமாலாய் உலகைக் காக்கும் இயல்பு:
0411: அருளைச் செய்யும் சதாசிவமே வெளியாகவும் இருளாகவும் எல்லாவற்றிலும் கலந்துள்ளான்.  அப்பெருமானே ஞானியர்க்குப் புகழத் தக்க பொருளாகவும் அஞ்ஞானியர்க்கு இகழத் தக்க பொருளாகவும் விளங்குகின்றான்.  அவனே உடலாகவும் உயிராகவும் இருக்கின்றான்.  அவ்வாறு கலந்து விளங்கும் அவன் அரிய உயிர்களின் அறிவுக்கு அறிவாய் அந்த அறிவை விளக்க நிலை பெற்று நின்றனன்.
 
0412: சதாசிவத்தின் இயல்பு :
சதாசிவமே எல்லாத் திக்குகளிலும் பரவித் தேவர்களாக நிற்கிறான்.  அவனே வானக் கூற்றில் பொருந்தியவன்.  அவனே உடலாகவும் உயிராகவும் பொருந்தி விளங்குகின்றான்.  அவனே கடலாகவும் மலையாகவும் இவை போன்ற அசையாதவையாகவும் உள்ளான்.  அதனால் சதாசிவமூர்த்தியே
தலைவனும் ஆவான்.
 
0413: எங்கும் நிறைந்து நிற்பவன் :
தலையின் மீது பொருந்திய ஒளிமயமான வானத்தில் விளங்கும் அருள்மூர்த்தி உடலாகவும், உயிராகவும்,  உலகமாகவும், கடலாகவும், இருண்ட மேகமாகவும், மழைநீர் பெய்பவனாகவும், இவற்றுக்கு நடுவில் உள்ளவனாயும், அழியாதவனாயும் எங்கும் நிறைந்திருப்பவனாயும் விளங்கி நிற்கின்றான்.
 
0414: சிவன் ஆண் பெண் உள்ளத்தில் காதலை விளைவிக்கிறான் :
மந்திரம் எண்: 406 க்கு உரிய விளக்கம் காண்க.
 
0415: அழிக்கவும் ஆக்கவும் காக்கவும் வல்லவன் சதாசிவம் !
சதாசிவமே உலகத்தை அழிக்க வேண்டிய போது ஒப்பற்ற சூரியனாகி மழை இல்லாது போக வைத்து அழித்தலைச் செய்வான்.  அப்பெருமானே,  சூறாவளிக்காற்றாய் அழிவை ஏற்படுத்துவான்.    அவனே ஒரு சமயம் பெருமழையைப் பெய்யச் செய்து பெருவெள்ளம் தோன்றுமாறு செய்வான்.  அவனே ஒரு சமயம் திருமாலாய் விளங்கி உலகத்தைக் காப்பவனும் ஆவான்.
 
0416: சதாசிவத்தின் ஆற்றல் :
சிவபெருமானே உயிர் ஆற்றலில் விளங்கும் அன்பு, அறிவு, அடக்கப் பண்புகளாக உள்ளான்.  அவனே இன்பத்துக்கும், இன்பக் காரணத்துக்கும்,  இன்பக்கூட்டுறவுக்கும் காரணமாய் உள்ளான்.  அவனே கால எல்லையை வகுத்தவனாகவும், அதை முடிப்பவனாகவும் உள்ளான்.  அவனே நன்மையைச் செய்யச்
சுத்த மாயா தத்துவமாகிய நாதம், விந்து, சாதாக்கியம், மகேசுரம், சுத்தவித்தை என்னும் ஐந்தில் பொருந்தி ஐந்து செயல்களைச் செய்கின்றான்.
0417: இறைவன் குயவன் போல் உலகைப் படைக்கிறான் !
சதாசிவ மூர்த்தியே மாயையினின்றும் உலகத்தைப் படைப்பவன் ஆவான்.  அப்பெருமானே உயிர்களுக்குப் பிறவியைத் தந்தருளுபவன் ஆவான்.   பரண்டமாகிய பெரிய குடமும், சிற்றண்டமான சிறிய குடமும், உடம்பான ஆலயமும், பிறவும் குயவனைப் போன்று மண்ணாகிய மாயையினின்று
வனைய அவன் வல்லவன் ஆவான்.
 
0418: உடலைப் படைப்பதற்கு முன்பும் பின்பும் காத்தருள்பவன் :
நந்தி பெருமான் உடல் உள்ளே அது நடைபெறுவதற்கு மூச்சுக் காற்றாய் உள்ளான்.  அவன் தத்துவங்களுடன் கூடாத உயிர்கள் வானத்தை இடமாய்க் கொண்டு ஒளியாய் விளங்குவான் என்றாலும் அப்பெருமானே அசைவை உண்டாக்கும் உணர்வாய் உடல் உள்ளே பரவி, அதன் உயிர் வெளியேற
விடாமல் கால எல்லைவரை தொழிற்படுத்திக் கொண்டிருக்கிறான்.
 
0419: உடலினைத் தாங்கிய காலத்தும் நீங்கிய காலத்தும் காத்தருள்பவன் சதாசிவன் :
உயிர்கள் உடலை விட்டு நீங்காத வண்ணம் தாங்கிய நிலையிலும், அவற்றைக் கால எல்லையில் உடம்பினின்று பிரிந்த நிலையிலும், அவற்றைக் காத்தற்கு அவனைத் தவிர வேறு ஒருவரும் இல்லை.  மேல்வரும் ஏழுபிறவிகளுக்கும் துரியாதீதமான அந்த நிலையிலும் உயிர்களை வான் பூதத்தலைவனான அச்சதாசிவனே தாங்கிக் கொண்டுள்ளான்.
 
0420: ஞானத்தையும் உடலையும் வழங்குவான் !
சிவன் உயிர்களுடன் கலப்பினால் கூடியிருக்கும் நிலையில் அவனைப் புறத்தே போய்த் தேடினால் அவர்க்குத் தொலைவாய் இருப்பான்.    அவரவரிடம் உள்ள அக்கினிக் கலவையைத் தூண்டிப் பிரமரந்திரம் போய் நெருங்கினால் அருளை வழங்குவான்.  உலகின் மீது பல பிறவி எடுத்து வணங்கினாலும் அந்தந்தப் பிறவி தோறும் உயிர்களுக்குப்பணி செய்தாலும் எம் இறைவன் உடம்பைத்
தந்தருளுவான்.
 
11. சங்காரம். அழித்தல்.  சிவனே உருத்திரனாய்ச் சங்காரம் செய்கின்றான்.
 
0421: அழிவாம் அருட் செயல்கள் :  இறைவன் தீயைப் பெருகச் செய்து சுவாதிட்டான காம இச்சையான பரந்த  உலகத்தை அழித்தருளினான். அதைப் போன்றே அக்கினியால் மணிபூரக காம இச்சையான அலைகடலை வற்றிப் போகும்படி செய்தான்.  அக்கினியால் மும்மலங்களான அசுரரை அழித்தருளினான்.  அந்தத் தீயே அச்சிவபெருமானுக்கு கையில் விளங்கும் அம்பாகும்.
 
0422: மூன்று சங்காரம் !
தினப்பிரளயம், நடுப்பிரளயம், பெரும்பிரளயம் என்ற மூன்றுள் கற்பத்தின் முடிவில் வரும் பிரளயம் ஒன்றாகும்.  இந்த உலகங்களின் நிலை அன்று அழிந்தவற்றை நான் ஞானக் கண்ணால் கண்டேன். 
கற்ப முடிவில் உலையிலே இடப்பட்ட அரிசி கீழும் மேலுமாகச் சுழலுவதைப் போன்று இவ்வுலகம்
பிரளயத்தில் சுழலும்.  அப்போது குறிஞ்சி முதலிய பெரிய நிலங்கள் எரிந்து அழியும்.
 
0423:மூலாக்கினியை வானமான சிரசின்மேல் ஏற்றுபவர்க்குக் கற்பமுடிவு வியப்பில்லை:
சீவர்களுக்குப் பக்குவம் செய்யும் பூமி, பனி மிக்க மலை, மகிழ்ச்சியை உண்டாக்கும் ஏழு கடல்களின் பெருக்கம் முதலியவை எல்லாம் கொதிக்கும்படி செய்கின்ற தீயை மூட்டி வெட்ட வெளியாய் ஆக்குவாரது மனத்தில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை.
 
0424: சிவபெருமான் சீவர்களுக்குப் பக்குவம் கொடுத்து மீண்டும் ஒடுக்கிக் கொள்ளல்:                            சிவன், தலையின்மேல் உள்ள ஒளி மண்டலத்திலிருந்து கீழே இறங்கிய சத்தி உடலைச் சுற்றியுள்ள
ஒளிமயமான அண்ட கோசத்தில் பொருந்தி, திரோதான சத்தியோடு கூடிச்சீவர்களைப் பக்குவம் செய்து, பிரணவமான மூலாதாரத்தில் உள்ள குண்டத்தின் மீது எழும் தீயை மீண்டும் தன்னோடு ஒடுக்கிக் கொண்டு விளங்குவான்.
 
0425: மூன்று சங்கார நிலைமை :
தினப்பிரளயம் என்பது உறக்கத்தில் ஒன்றையும் அறிந்து கொள்ளாமை.  அமைத்த சங்காரம் என்பது கருவி கழன்ற நிலைமை.  சுத்த சங்காரம் என்பது செயலின்றி ஒன்றும் விளங்காது இருக்கும் நிலைமை.  சிவனது அருளில் பொருந்தச் செய்வதே உண்மையான சங்காரமாகும்.
 
0426: உண்மையான சங்காரம் :
நாள் ஒடுக்கம் என்ற நித்த சங்காரம் என்பது தூல சூக்குமமான இரண்டு உடல்களையும் சீவன் தொட்டுக் கொண்டிருப்பது ஆகும்.  இப்படி அமைத்த  சங்கரம் மாயையைப் பொருந்திய சங்காரம் ஆகும்.   சுத்த சங்காரம் என்பது மனம் அதீதத்தில் போய்ச் செயல் இன்றி, சேட்டையின்றி இருத்தலாகும்.
அப்போது சிவனருளில் தோய்விக்கச் செய்வதே  உண்மையான சங்காரமாகும்.
 
0427: சிவமாம் தன்மை அளித்ததே உண்மையான ஒடுக்கம் :
நாள் ஒடுக்கம் என்பது பிறவித் துன்பத்தைப் போக்கும்.  அங்ஙனமாயின் மனம் கருவிகள் ஒத்த ஒடுக்கத்தில் உடலும்உயிரும் பிரிந்திருக்கும் நிலை உண்டாகும்.   இங்ஙனம் வைக்கப்பட்ட ஒடுக்கம் ஆன்மாவுக்குச் சுத்த கேவல நிலையாம்.   சிவமாம்  தன்மை அளித்த ஒடுக்கமே உண்மையான ஒடுக்கமாகும்.
 
0428: ஓடுக்கம் நான்கு வகை :
நாள் ஒடுக்கம் என்ற நித்த சங்காரம் நீண்ட உறக்கத்தில் நிறுத்துவதாகும்.
அமைத்து வைத்த ஒடுக்கம் என்பது மனம் முதலான கரணங்கள் அடங்கி இருக்கும்படி செய்தல் ஆகும். 
சுத்த ஒடுக்கம்  கருவிகளினின்றும் நீங்கிப் பரன் அருளில் கூடாமல்  இருத்தல் ஆகும்.
நான்காம் ஒடுக்கமான சங்காரம் என்பது  கருவிகளினின்றும் கழன்று நீங்கிப் பரமன் அருளில் தோய்ந்து விளங்குமாறு செய்தல் ஆகும்.
 
0429: சுத்த சங்காரத்துள் நிகழ்வது !
பாழாகிய குணம் குறியற்ற சிவத்தை முதலாகக் கொண்டு தோன்றும் ஆன்மப்பயிர், அது தனு கரணம் முதலியவற்றுடன் கூட்டப் பெற்ற பின் திரும்பவும் அடங்கினும் முந்தைய நிலையை அடையாது. இது முடிவினைத் தராத சங்காரம்.    ஆதலால் இச்சீவர்கள்  திருமால், பிரமன் செயலுக்குட்பட்டுப் பிறப்பிலும் இறப்பிலும் உழல்வர்.  ஆணவ மலம் வன்மை கெட்டு வறுக்கப்பட்ட விதையைப் போல் பாழும் பயிரானது அந்தச் சிவத்தின் பரப்பில் அடங்கியிருக்கும்.
 
0430: ஒளி மண்டலத்தில் மனம் ஒடுங்க வேண்டும் !
உலகத்தில் உள்ள சீவர்களே !  சேர்கின்ற வினைகளைச் சுட்டு விடுவது போல் சிவனிடம்  ஆர்வத்தைப் பெருக்கி நிற்பீராக !      இங்ஙனம் அழியும்படி செய்பவன் வாழும் இடமான சகஸ்ரதளம் ஒன்று இருக்கின்றது.  அந்த இடத்தை உடலில் வைத்தான்.  கலந்து சிந்திப்பதற்கு உடலைச் சூழ
ஒளிக்கற்றைகளை அமைத்துள்ளான்.  சிவனது கருணை இருந்தவாறு என்னே !
 
12. திரோபவம்.  மறைப்பு. சிவபெருமானின் ஆணைப்படி மகேசுவரன் சீவர்கள் அறியாதபடி அவரவர் வினையின் பயன்களை நுகரும்படி செய்கின்றான்.  இதுவும் வினையைக் கழிப்பிக்கச் செய்வது.
ஆதலால் இது அருட்செயலே ஆகும் :
 
0431: உடனிருந்து இறைவனை மனம் அறிய இயலாமை !
இறைவன் உயிருக்கு உயிராக இருப்பவன்.   மன மண்டலத்தில் உள்ளே எழும் பேரொளி வடிவு கொண்டவன்.  மனத்தை விட்டுச் சற்றும் நீங்காதவன். இத்தகைய அவனை, மனத்தில் உடனாய் இருப்பினும், மனம் மல மறைப்பால், உலக இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் சீவன் இறைவனை இன்ன தன்மையன் என்று உணர இயலாது.
 
0432: முத்தியை அளித்தான் !
இன்பம் அடைவதற்கு உரிய பிறவியைத் தந்த இறைவன்,  துன்பத்தைத் தரும் தொடர்பை உயிர்களுக்கு அமைத்தருளினான்.   உயிர்களுக்கு எலும்புடன் சேர்த்துப் பொருந்திய தோலாலும் தசையாலும் வலிமை பொருந்தப் பண்ணி துன்பம் தரும் உடலை அவன் உயிர்களைத் தூய்மை செய்வதற்காகவே தந்து
முத்தியை அளித்தருளினான்.
 
0433: இறைவனின் அருட்செயலை அறியார் :
இறைவன் அமைத்துக் கொடுத்த பெருமையுள்ள இயந்திரமான உடலில் - உருத்திரன், திருமால், இன்பத்தைத் தந்த பிரமன் ஆகிய மூவரும் உடனிருந்தபோதும் அந்த இறைவன் வைத்த தன்மையையும், அப்பெருமானின் முழு அருட்செயலையும் அறியமாட்டார்கள்.
 
0434: மனத்தை நாவின் வழி செலுத்தி அடைய அறியார் :
பார்க்கும் கண்ணில் ஒளியாய் இருந்து அருளுபவன் ஈசன்.  ஆணாய்ப் பெண்ணாய் அலியாய் விளங்கும் ஆதியான சிவன் அவனை உண்பதற்குப் பயன்படும் நாவின் வழியே மனத்தை செலுத்தித் தலையிடத்து உள்ள வான் மண்டலத்தில் உண்டாகும் இயற்கையான தடாகத்தில் உடன் உறைவதைப் பொருந்தவில்லை.
 
0435:அண்டகோசத்தில் மறைப்பைச் செய்தல் :
தெளிவு பொருந்திய உயிர்களுக்கும் ஒளி மண்டலத்தில் உள்ளவர்களுக்கும் இன்பத்தை அளிக்கும் இயல்புடைய சதாசிவனும் சிறு ஒளியை உடைய தூவெண்மதியும் இருளும் கெடும்படியாய் வல்லிருளாய் இருக்கும் சீவரின் அண்ட கோசத்தில் மறைப்பைச் செய்து கொண்டிருப்பான்.
 
0436: மறைத்தலைச் செய்பவன் !
தத்துவங்களும்,  ஓசை முதலிய தன்மாத்திரைகளும்,  கூறப்படுகின்ற ஆசைகளும், ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டு விளங்கும் பலவகைப்பட்ட வடிவங்களும், உலகம் முழுதும் தானாய் மறைக்கின்ற இறைவனே - மறைக்கின்ற சத்தியை அருள் செய்பவனாகின்றான்.
 
0437: அகவழிபாடு சிறந்தது !
நான் சிவனை உள்ளத்தில் உணர்ந்து போற்றி எண்ணி வழிபட்டேன்.  அவன் அப்போதே காட்சியில் வெளிப்பட்டு அருளை அளித்தான்.  இனி மகிழ்ச்சியுடன் அன்பு என்ற பெருங்குணம் வெளிப்பட்டு அப்பெருமானை வெளியே வழிபடினும் அது அவனுக்கு விருப்பையே தரும்.    சிவன் மறைவாய் இருந்து செய்யும் உதவியை அகவழிபாடு, புறவழிபாடு இரண்டிலும் அனுபவித்தாலும் அகவழிபாடே மிகவும் சிறந்தது.
 
0438: மகேசுவரன் மறைத்தலைச் செய்பவன் :
உயிர்கள் பக்குவம் பெறும்வரை யாவற்றையும் தானே மறைத்து நிற்பவன் மகேசுவரன்.  அவன் கீழ்முகம் கொண்டு செயற்பட்டு,  உருத்திரன், திருமால்,  நன்மையைச் செய்யும்  சுவாதிட்டான மலரில்  உள்ள பிரமன் ஆகிய  மூவருடனும் கலந்து விளங்கினாலும் அவர்கள் அறியாதவாறு மறைத்தல் தொழிலைச் செய்கின்றான். 
 
0439: மனமாசு நீங்கும் விதம் :
ஒடுங்கியிருக்கும் பாசநிலையில், சிவன் என்னும் பெருங்கரையின் மீது சீவர்கள் இருந்து ஆன்ம அனுபவத்தை விரும்பிப் பிறவியான வரும் கரையினை நாடாத தன்மையில் வான் கங்கையைப் பொருந்தினால் - மாசு நீங்கப் பெறலாம்.
 
0440: உயிர்களுக்குப் புலப்படாதவன் சிவன் :
ஒரே மண் பல நல்ல கலங்களாய் விடும். தே போல் உள்ளே உள்ள ஒருவனே உடல் பேதங்களாகவும் இருக்கின்றான்.   கண் என்ற பொறி வெளியே இருக்கின்ற பல பொருள்களைக்கண்டாலும் அது தன்னை அறியாது. அதைப் போன்று இறைவனும் எல்லா உயிர்களின் வேறுபாட்டுக்குக் காரணமானாலும் அவன்
உயிர்களின் காட்சிக்குப் புலப்படாமல் விளங்குபவன் ஆவான்.
 
13. அருளல்.  (அநுக்கிரகம்)
சதாசிவனே உயிர்களிப் பிறப்பில் செலுத்தி மல நீக்கம் பெற அருள் செய்கின்றான்.
 
0441: உயிர்களை உடல்களுடன் சேர்ப்பவனும் பிரிப்பவனும் சதாசிவன் :
சதாசிவன், எட்டுத் திசைகளிலும் வீசும் காற்றுடன், வட்டமாய்ப் பொருந்தியிருக்கின்ற கடல்,  தீ,  பூமி,  வானம்  என்னும் ஐம்பூதங்களையும் ஒன்றாய்ச் சேர்த்து உயிர்கள் தங்கும் இடமான உடம்புடன் உயிரைச் சேர்த்தும் பின் பிரித்தும் வைப்பான்.
 
0442: உயிர்கள் உய்ய அருள்பவன் சதாசிவன் :
தலையின் உச்சியில் பிரமரந்திரத்தில் ஒளியோடு விளங்கும் நாதத்தை விரும்பி இன்பம் அனுபவித்தவர்க்கு இறப்பு உண்டாகாது.  மேலான விரிந்த சுடராய் உள்ள சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய மூன்று சுடர்களையும் உலகுக்குத் தந்து,  உயிர்கள் உய்யும்படி அம் மூன்று சுடர்களையும் சேர்த்து ஒரே சுடராக்கி அருளுபவன் சதாசிவமே !
 
0443: அசையாதவற்றை அசையச் செய்பவன் சதாசிவன் :
ஒரு குயவன் தன் தண்ட சக்கரத்தில் ஏற்றிய மண்ணைத் தன் விருப்பப்படி செய்து முடிப்பான்.  அவனைப் போன்றே எம் சதாசிவம் எண்ணினால், அசையாத தன்மை கொண்ட உலகத்தை அசையாத் தன்மையை விட்ட ஆன்மாவாய் மாற்றுவான்.
 
0444: உள்ளக் கோயிலில் வீற்றிருப்பான் :
சதாசிவம் ஒளியை ஊர்தியாய் உடையவன்;  ஒருவராலும் உண்டாக்கப்படாதவன்;மாறுபட்ட செயலை உடையவன்;  பல பூதப்படைகளை உடையவன்.  அத்தகையவன் தம் விருப்பப்படி உயிர்களைப் படைத்திடுவான்.  அடியார் வேண்டியவற்றை வேண்டிய படியே கொடுக்கும் கொடைத்தன்மை உடைய
அவன் குணம் எட்டுக் குணங்கள். அவை
1. தன் வயத்தன் ஆதல் 2. தூய உடம்பினன் ஆதல் 3. இயற்கை உணர்வினன் ஆதல் 4. முற்றும் உணர்தல்  5. இயல்பாகவே பாசங்களின் நீங்குதல் 6. பேரருளுடைமை 7. ஒளிக்கதிர்க்கற்றை உடைமை  8. முடிவில்லாத ஆற்றல் உடைமை.
 
0445: இறைவன் படைத்தருளியவை :
உலகத்தவர் வாழ வேண்டும் என்று இறைவன் ஏழ் உலகங்களையும் விரும்பிப் படைத்தருளினான்.    அங்ஙனமே பல பேர்களையும் விரும்பிப் படைத்து அளித்தருளினான். நிலம்  முதலிய ஐந்து பூதங்களையும் தோற்றியருளினான். விருப்பத்துடன் நின்றே உயிரிலும் உடலிலும் பொருந்தி உயிர்களுக்கு உதவினான்.
 
0446: தலைவனாய் உள்ளான் :
சிவபெருமான் ஏழு உலகங்களையும் படைத்து அவற்றை உடைமையாக்கிக் கொண்டான். எங்கும் பல தேவர்களைப் படைத்து அவர்களை ஆண்டு கொண்டான்.  அவனே பல உயிர்களைப் படைப்புக்கு விடுத்துத் தேவர்களுடன் தொடர்புபடுத்தி ஆட்கொண்டான்.  அங்ஙனம் படைத்து ஆட்கொண்ட அவன் தலைவனாய் விளங்குகின்றான்.
 
0447: ஆதாரமானவனும் அவனே !
ஆதி சத்தியுடன் கூடிய சதாசிவன் ஐம்பெரும் பூதங்களைப் படைத்தனன்.   குற்றம் இல்லாத பல  ஊழிகளை உயிர்களின் நன்மையின் பொருட்டு அவன் படைத்தனன் எண்ணில்லாத தேவர்களை அவன் படைத்து விட்டனன். இங்ஙனம் அவன் படைப்பைச் செய்தலுடன் அவற்றுக்கு ஆதாரமாகவும் உள்ளான்.
 
0448: உபதேசம் செய்தருளல் :
சதாசிவன் அகன்ற இடத்தையுடைய இந்த உலகம் ஏழுடனும் ஒன்றாகப் பொருந்தி உள்ளான்.  அவற்றைக் க்டந்தும் உள்ளான்.  இவ்வகையினால் சிவன் உடனாய் இருப்பினும் எளிமையில் காட்சி தருபவன் அல்லன். சிவனே பல வகையான உயிர்களிடம் பரவிக் கலந்து அவனை விரும்பியவர்க்கு அவரவரிடம் பொருந்தி உபதேசம் செய்தருளினான்.
 
0449: பேரொளியின் இயல்பு :
உள்ளே தோன்றிடும் பேரொளியானது உயிர் பொருந்தி நிற்கும் ஓர் உடலாகவும், வானில் உள்ள தேவர்கள் விரும்பும் மேலான பொருளாகவும், இம்மண்ணுலகத்தில் பக்குவம் பெற்ற மேலோர் புகழும் திருமேனியாகவும், கண்ணில் விளங்கும் மணியாகவும் ஞானமாகவும் விளங்குகின்றது. 
 
0450: சிவன் உயிருடன் கலந்திருக்கும் தன்மை :
எவரும் அறிய முடியாத அண்டத்தில் உள்ள திருவடிவை-பூமி முதலாகப் பொருந்திய உடலில் - நீரில் பால் கலந்து நிற்கும் தன்மையைத்  தளர்ச்சி அடையாமல் பார்த்துக் கொண்டிருக்கும் இன்பத்தை அடைந்தேன்.
 
14. கர்ப்பக் கிரியை:  (கர்ப்பத்தில் செய்யப்படும் செயல். இறைவன் கர்ப்பப்பையில் உள்ள உயிர்களைக் காக்குக் முறை.) :
 
0451: உயிரைத் தத்துவங்களுடன் சேர்த்துக் கருப்பையில் இருந்து உதவுகின்றான்:
இறைவன், இறப்பின் போது உயிரை விட்டுப் பிரிந்த இருபத்தைந்து தத்துவங்களையும் தோற்றவிக்கின்றான்.    இறைவன் உயிரை அந்த தத்துவங்களுடன் சேர்க்கின்றான்.  தத்துவங்களுடன் சேர்த்த உயிரை அப்பெருமான் அன்னையின் கருப்பையில் பொருத்தி உயிர்களுக்கு  உதவி செய்கின்றான்.  அவன் உடல் வளர்ச்சிக்குத் தேவையானவற்றை அறிந்தே யாவற்றையும் செய்கின்றான்.
 
0452: கருவைப் போற்றிக் காத்தல் :
யோகியர் உணரும் மூலாதாரத்தின் மேல் தீயும் நீரும் செறிந்துள்ள ஞான பூமியில் திருவடியைப் பதித்துப் பொறுமையுடன் உள்ள இனிய உயிரைக் கருவில் புகும்படி செய்து கருவிலிருந்து நீங்கும் பத்து மாத கால எல்லையை இறைவன் வகுத்தருளினான்.
 
0453: வாழ வேண்டிய காலத்தை நியமித்தல் :
அருள் வெளியில் விளங்கும் இறைவன், தலைவன் தலைவியர் இன்புற்ற போது, சீவன் துயரம் பொருந்திய உடலில்  விட்டுச் சென்ற வினையை அனுபவிப்பதற்காக உயிர் உலகத்தில் தங்க வேண்டிய காலத்தையும், பக்குவம் அடையும் காலத்தையும் ஆண் பெண் இருவரும் கூடிய அக்காலத்திலேயே நியமித்தருளினான்.
0454: பெண்ணின் கருவை நாடி ஓடியது :
கருவை நீங்கிய ஞானியர் அறிந்த இருபத்தைந்து தத்துவங்களும் ஆண் உடலில் இரண்டு மாதம் கருவாகத் தங்கி உருப்பெற்றதை மற்றவர் அறியமாட்டார். அந்தக்கரு பின்பு பெண்ணின் கருவை நாடி ஆணும் பெண்ணுமாகிய இரண்டு உருவமாய் பெண்ணின் உடலில் ஓடிப் பாய்ந்தது.
 
0455: கருவின் உரு :
ஆணும் பெண்ணும் கூடும் கூட்டத்தில்  யோனி விரிந்து ஆணின் குறியினின்று (ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து, பூதம் ஐந்து ஆக) பதினைந்து  தத்துவங்களுடன் சுக்கிலம் பொழிந்தது.    புருடன் என்ற தத்துவம் தன்மாத்திரைகள் ஐந்தும் அந்தக்கரணங்கள் நான்கும் ஆக ஒன்பது தத்துவங்களுடன் புருவ நடுவிலும் உச்சந் தலையிலும் ஒளிர்ந்தது.
 
0456: காற்று ஆணின் விந்துவைப் பெண் கருவில் சேர்த்தல் :
மலரில் உள்ள ஆண் மகரந்தத்தைக் காற்று எடுத்துக் கொண்டு சென்று எவ்விடத்தும் பரப்பிப் பெண் அண்ட கோசத்தில் படியும்படி செய்து கருவை வளர்க்கும்.  அதைப் போன்று ஆணும் பெண்ணும் கூடும் காலத்தில் தனஞ்செயன் என்ற காற்றானது  ஆண் விந்துவுடன் எழுந்து குறிப்பிட்ட காலத்திற்குள் இரைந்து கொண்டு பெண்ணின் உள்ளே சென்று ஆணின் விந்துவைப் பெண்ணின் கருவிலே சேர்க்கும்.
 
0457: கருவில் அமைவன :
உருவம் அற்ற புரியட்டக உடலும் உள்ளே புகும் பத்து வாயுக்களும் காமம் முதலிய எட்டு விகாரங்களும் இவற்றுள் முழுகும் புருடனும், ஒன்பது துளைகளும், குண்டலினியாகிய நாதமும், பன்னிரண்டு விரற்கடை செல்லும் பிராணனான குதிரையும் இறைவன் என்ற பாகனால் கருவில் அமைவன.  
இவை அமையாவிட்டால் பன்றியைப் போன்று இழிவான பிறப்பாக ஆகிவிடும்.
 
0458: குழந்தையின் இயல்பு :
ஆணும் பெண்ணும் கூடும் போது வெளிப்படும் சுக்கில சுரோணிதக் கலப்பில் ஆணின்  சுக்கிலமானது எதிர்த்துச் சென்றால் பிறக்கும் குழந்தை உருத்திரனைப் போல் தாமச குணத்தோடு இருக்கும்.   பெண்ணின் சுரோணிதம் எதிர்த்துவரின்  பிறக்கும் குழந்தை திருமாலைப் போல்  சத்துவகுணத்தோடு விளங்கும். சுக்கிலம் சுரோணிதம் என்னும் இரண்டும் சமமாகப் பொருந்தின் பிறக்கும் குழந்தை
பிரமனைப் போன்று இராசதகுணத்தோடு விளங்கும்.  மூவரின் தன்மையும்  ஒத்த குழந்தை பேரரசனாய்ப் பெரிய அரசை ஆள்வான்.
 
0459: தந்தை தாய் போல் சேயின் இயல்பு அமைதல் :
பல பிறவிகளில் பல உடலில் பொருந்திய கரு நன்றாகப் பதிந்த பின்பு, மயக்கம் பொருந்திய  இருவரின் மனம்  ஒருமை அடைய, அப்போது உருவாகும் கரு பல உலகங்களில் பொருந்தி வருந்திய அந்த ஆண் பெண் இருவரது சாயலில் வெளியாகும்.
 
0460: குழந்தையின் நினைவு குணம் சொல் உண்டாகும் முறை :
கருவில், அறியாத நிலைமையில் உள்ள சிசுவுக்கு மாயை தத்துவங்களைச் சேர்ப்பாள்.  சேர்க்க அக்குழந்தைக்குத் தான் கொண்ட பேருறக்கத்தினின்று நீங்கி  நினைவு உண்டாகும்.  வலிமை மிக்க மாயையின் காரியமான தர்மம், ஞானம் , வைராக்கியம், ஐசுவரியம்,அதர்மம், அஞ்ஞானம், அவைராக்கியம், அநைசுவரியம் முதலிய எட்டுக் குணங்களும் சுத்த மாயையினின்று தோன்றும். சூக்குமை, பைசாந்தி, மத்திமை, வைகரி ஆகிய நான்குவகை வாக்கினின்று சொல்லும் உண்டாகும்.
 
0461: இறைவன் உடலை அமைத்த விதம் :
இறைவன் எலும்புகளை இறுக வைத்துப் பின்னி, நரம்பாகிய கயிற்றால் கட்டி, இரத்தத்துடன்
கூடிய இறைச்சியால்  திருத்தமாக வீட்டை அமைத்து, இன்பம் பெற உயிர்  தங்கும் இந்த உடம்பைச் செய்தான். அவனிடத்து ஓங்கி உண்டாகும் காதலால் அவனது  நிகரற்ற அருட்செயலை எண்ணி யான் அவனை வணங்குகிறேன்.
 
0462: சதாசிவன் அமைத்த அமைப்பு :
உயிர்களைப் பக்குவம் செய்யும் பால் போன்ற நிறம் கொண்ட கதிரவன் ஒளி போன்ற மேனியனான சதாசிவன் உடலில் எங்கும் நீக்கம் இல்லாது நிறைந்து நன்மையைச் செய்வான்.  குதத்தானத்தினின்று தூண்டிச் செலுத்தும் மூலாக்கினியின் வேகத்தைத் தணிக்க இன்பம் பெறும் முறையை அமைத்தனன்.
 
0463: சிசுவைத் துன்புறாமல் இறைவன் காப்பாற்றல் :
பழி பொருந்திய பல செயல்களைச் செய்யும் பாசத்தில் கட்டுப்பட்ட சிசுவைப் பலவான சுழிகளிலிருந்தும் எடுத்து அழியாமல் காப்பாற்றினான்.    பல விதங்களில் சிசுவைத் தூய்மை செய்து வினை பொருந்திய காலத்தில் அச்சிசுவைத் துன்பம் அடையாமல் அப்பெருமான் காப்பாற்றினான்.
 
0464: எண்சாண்  உடம்பு சிசுவுக்கு அமைத்தல் :
ஆண் பெண் கூட்டுறவால் சுக்கில நாடியில் தோன்றிய வெண்மையுடைய சுக்கிலமும் அப்படியே யோனியினின்று தோன்றும் செந்நிறமான சுரோணிதமும் எட்டு விரற்கிடை புறப்பட்டு நான்கு விரற்கிடையளவு உள்ளே செல்லும்.  அப்போது பஞ்ச பூதங்களாகிய அட்சரங்கள் ஐந்தும் அகரமாகிய நாதமும் மகரமாகிய மாயையும் கூடி எட்டுச் சாண் அளவு உடல் சிசுவுக்கு வாய்க்கும்.
 
0465: இறைவனின் கொடை :
இன்பத்தில் பொருந்திய இறைவனும், கருவில் உடலைத் தந்த கொடைச் செயலால், ஆண் பெண் கூட்டுறவினால் முப்பத்தொரு தத்துவங்களைச் சேர்த்து, இருவரது மயக்க நிலையில் ஒரு கருவான முட்டையைத் தந்தனன்.
 
0466: சீவன் தோன்றிச் செயலற்றிருத்தல் :
பிண்டமான இந்த உடலில் அறியாமை வாய்ந்த புலன்கள் ஐந்தும் தோன்றி உடல் அழிந்தபோது அவையெல்லாம் செயலற்றன.   அண்டத்தின் உடலைச் சுற்றியுள்ள அண்ட கோசத்தின் உள்ளே அமைந்துள்ள உயிரும் பக்குவம் பெற்ற போது தன் செயலற்று நாத தத்துவத்தில் அடங்கும். 
 
0467: இறைவன் கருவை அமைக்குமாறு :
மாயையால் உண்டாக்கிய உடலின் கருவை, சதாசிவன் துலாக்கோல் போல் செலுத்தும் சிவதத்துவமான அ, உ, ம, விந்து, நாதம் ஆகிய பிரணவத்தால் இயக்குவான்.  இயக்கி,உயிரை நிலைக்க வைக்கும் ஆன்ம தத்துவம் இருபத்து நான்கும்,   புருட தத்துவம் அல்லாத வித்தியா தத்துவம் ஆறும் உயிரின்
இயல்புக்கு ஏற்றபடி கூட்டி உடலான பொறியிலே ஒன்பது துளைகளையும் அமைத்தனன்.
 
0468: கருப்பையான சூளையிலே வெந்தவை :
சிற்றின்பத்தில் ஈடுபட்டிருந்த தாயும் தந்தையும் என்ற இருவரும் மனம் ஒன்றிவைத்த மண்ணால் ஆன துன்பத்தை அளிக்கும் குடத்துள் சேர்ந்தவன் ஆன்மா ஒருவனே ஆவான்.  அதனுடன் ஒன்பது வாயிலாகிய நீர்ச்சாலும், சூக்கும உடலான எட்டும் ஞானேந்திரியம் கன்மேந்திரியம் ஆகிய பத்தும் ஆகப்
பதினெட்டுக் குடங்களும் அந்தக் கருப்பையான சூளையிலே பக்குவமாய் வெந்தன.
 
0469: சித்திகளைக் கைவிடுவீர் !                                                                                                                பத்து மாதங்களில் ஆகியது இப்பிண்டம் என்பதை உணர்வீர்.    உடலில் பொருந்திய பேறு, இழவு,    
துன்பம், பிணி, மூப்பு, சாக்காடு என்ற ஆறு துன்பங்களையும் அறியாது உள்ளீர்.  அங்கு மனத்துள்
பெருகிக் கொண்டிருக்கும் தாமச,  ராசத சாத்துவிகமாகிய குணங்களினின்றும் பிரியாது உள்ளீர்.    சித்திகள் வீடுபேற்றைத் தராஎன்பதால் அணிமா, மகிமா, லகிமா முதலிய எட்டு சித்திகள்
அமைவதைப் பொருந்தாதீர். 
 
0470: இறைவனை அடைவதற்குரிய வழியை உணர வேண்டும் !
இறைவன் உடலை மாயையினின்று தோற்றுவித்த விதமும், உடலுள் உயிரை அமைத்த விதமும், மூடுதலும் திறத்தலும் ஆகிய இயல்பு கொண்ட கண் முதலிய ஒன்பது வாயில்களையும் அமைத்தவிதமும் உணர்ந்து  உறுதியான ஆயிரம் இதழினையுடைய தாமரையுடன் கூடியசிரசில் தீயின் இறுதிநிலை வைத்த இறைவனைச் சுழுமுனையில் சேர்ந்தேன்.
 
0471: இறையியல்பைக் கேட்டு நின்றேன் !
நூல் அறிந்தவரும் நுட்பமான அறிவுடையாரும் ஓதும் முறையைக் கேட்டு நின்றேன்.  அவர்களது கூற்று இது. எக்காலத்தும் எங்கும் நின்று விளங்குபவன். கேடில்லாது உயிர்களை வினைக்கீடாக உலகு உடல்களில் பொருத்தும் வினைமுதற்காரணன் அவன்.  குழம்பைப் போன்ற கருவைக் கூட்டி வைக்கின்றான்.  அதை உருவாக்குகின்றான்.  உடலை வளர்க்கின்றான்.  அவற்றுடன் கலந்து
நிற்கின்றான். அவ்வாறு சேர்ந்திருக்கும் தன்மையை நேர்படல் என்பர்.  சிவன் சத்தியை நோக்கிட உலகப்படைப்பு தொடங்கும் எனக் குறிக்கின்றார் திருமூலர்.  இது முதல் நிலை. 
சிவன் நுண்மையான உயிரைச் சுக்கில சுரோணித கலப்பில் சேர்ப்பது நிகழும்.  இது இரண்டாம் நிலை. சிவன் கருவை உடலாய் வளர்ப்பது மூன்றாம் நிலை.
 
0472: இறைவன் எங்கும் கலந்து நிற்கும் நிலை :
மலரைப் போன்ற யோனி மொட்டைப் போன்ற இலிங்கம் பொருந்த மலரும். 
மலர்ந்த பின்பு, சுக்கில சுரோணிதங்கள் கலக்கும்.  கலக்க ஒளிமயமான சீவ அணு உண்டாகும்.  நீரிடை உள்ள நிழல் நீருடன் கலந்து வேறாகாது நிற்பதைப் போன்று கருவில் பொருந்திய உயிர் அணு வேறாய்த் தோன்றாது உடல் எங்கும் கலந்து விடும்.
 
0473: இறைவன் சூக்குமத்தையும் தூலத்தையும் கட்டிப் பிரிப்பவன் :
நுண்ணுடலில் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளும் அவற்றுக்குத் தொடர்புடைய மனம், புத்தி, அகங்காரம் என்னும் மூன்று அந்தக்கரணங்களும் உண்டாகும். அவற்றுடன் சேர்ந்த விருப்பு வெறுப்புக்கு ஏற்ப உண்டாகிய உடலை இறைவனே முதலில் சேர்த்துப் பின்பு பிரித்து அவிழ்த்து விடுவான்.  நீங்கள்  இதை அறிவீர்.
 
0474: மண் முதலிய பூதங்களைப் படைத்தல் :
இறைவனின் திருப்பெயரான பிரணவத்தை  உடலில் கலந்து அந்த உடலில் நாதம் விளங்கும்படி செய்வான்; பசுத்தன்மை, பாசத்தன்மை இரண்டும் நீங்கிடச் செய்வான்  நான்கு  இதழ்களையுடைய  மூலாதாரச் சக்கரத்தால் உணர்த்தப்படும் பரப்பு முழுவதையும் மண் முதலான தத்துவத்திலிருந்து தொடங்கும் நியதியை வைத்திருக்கின்றான்.
 
0475: இறைவன் உயிர்களிடம் அறிவும் செயலும் விளங்க வைத்தான் :
செயலான சத்தி இல்லாமல் அறிவாகிய சிவம் இல்லை.  அதுபோல் அறிவாகிய சிவம் இன்றிச் செயலாகிய சத்தியும் இல்லை.  அதலால் சிறப்பான  அவ்வுயிருக்கு உடலைத் தரும் போது இறைவன் குண்டலினிசத்தி, சிற்சத்தி என்ற இரு செவிலித் தாய்களையும் உயிருக்கு அன்போடு அளித்துள்ளான்.
 
0476: சிவன் சத்தி ஆகிய இருவரும் உயிர்களில் கலந்து நிற்றல் :
அவரவர் வினைக்கு ஈடாக அமைத்துச் செய்யப்பட்ட பிறவியில் நல்ல சத்தியும் , சத்திக்கேற்ற
முறையில் தொகுப்பாய்  உள்ள ஆணவ இருளைப் போக்கும் பேரொளி வடிவான இறைவனும், பல வகைப்பட்ட உணவு மயமான பல உயிர்கட்கெல்லாம் வகை செய்யும்படி அவ்வவற்றின் உயிர்க்கு உயிராய் கலந்து நிற்கும் சிறந்த பொருளாகும்.
 
0477: இறைவன் தாய் தந்தை வழி உடலைப் படைக்கின்றான் :
உயிர்க்கு ஆண், பெண், அலி என்ற வேறுபாடு இல்லை.  பெருமையுடனே வளர்கின்றஒளியான உயிரை ஆண் என்றோ பெண் என்றோ அலி என்றோ காண்பது கற்பனையாகும்.  அப்படிப்பட்ட உயிருக்கு ஏற்ற உடலை  தாய் தந்தையின் தன்மையைக் கொண்டு படைப்பது சிவபெருமானின் வல்லமையாம்.
 
0478: கருவில் ஆண் பெண் மாற்றம் அமையும் விதம் :
ஆண் பெண் கூடும் போது ஆண் பண்பு மிகுந்தால் அவ்வுயிர் ஆண் ஆகும்.  பெண் பண்பு மிகுந்தால் அவ்வுயிர் பெண்ணாகும். ஆண் பெண் பண்பு சமமானால் அவ்வுயிர் அலியாகும்.   ஆள் வினை முயற்சியில் கருத்து மிகுதியாய் இருந்தால் பிறக்கும் உயிர் சிறப்பாய்ப் பிறக்கும்.  அது உலகை ஆளும்.  கூட்டுறவின் போது தாழ்ச்சி மனப்பான்மை இருக்குமானால் சுக்கிலம் பாய்வது நின்று விடும். 
 
0479: யோகி சுக்கிலத்தைப் பாய்ச்சல் :
ஆணின் சுக்கிலம் ஆணிடமிருந்து பிரிந்து ஐந்து விரற்கிடை ஓடி விழுமாயின் பிறக்கும் உயிரின் வாழ்வு நூறு ஆண்டு.  அந்தச் சுக்கிலம் நான்கு விரற்கிடை ஓடி விழுந்தால் அந்தஉயிரின் வாழ்வு எண்பதாண்டு.    சுக்கிலத்தைச்  செலுத்தும் வாயுவை இப்படி  நன்றாய் உணர்ந்து பாய்ந்திடச் செய்யும் ஆற்றல் யோகிக்கு
உண்டு.  யோகி வேண்டியபடி சுக்கிலத்தைச் செலுத்தி விரும்பியபடி குழந்தை பெற முடியும்.
 
0480: சுக்கிலத்தைச் செலுத்தும் வாயுவுக்கு ஏற்பக் குழந்தையின் அங்கம் அமைதல்
சுக்கிலத்தைச் செலுத்தும் வாயு குறைந்திடின் குழந்தையானது குட்டையாய்ப் பிறக்கும்.  பாயும் வாயு மெலிந்திடின் முடமாகும்.  அவ்வாயு தடைப் பட்டால் குழந்தை கூனாய்ப் பிறக்கும்.  ஆனால், ஆராய்ந்து பார்த்தால், பெண்களுக்கு வாயு இல்லை. 
 
0481: கரு வளரும் காலத்தில் தாயின் வயிறு இருக்க வேண்டிய நிலைமை :
அன்னையின் வயிற்றில் கருவாக அமைந்த குழந்தைக்கு அந்த அன்னையின் வயிற்றில் மலம் மிகுமானால் அக்குழந்தை மந்த புத்தியுடையதாய் விளங்கும்.  அவள் வயிற்றில் நீர் மிகுமானால் அந்தக் குழந்தை ஊமையாய் விடும். மலமும் நீரும் மிகுந்து இருக்குமானால் அக்குழந்தை குருடாகிவிடும். 
 
0482: மூச்சுக் காற்றின் இயல்புக்கு ஏற்பக் குழந்தையின் பால் வேறுபாடு அமையும் :
இன்ப நுகர்ச்சியின் போது ஆண்மகனிடம் உயிர்ப்பான மூச்சு வலது பக்க நாசியில் (சூரிய கலையில்) இயங்கினால்ஆண் குழந்தையாகும்.  ஆண்மகனிடம் உயிர்ப்பான மூச்சு இடது பக்க நாசியில்
(சந்திர கலையில்) இயங்கினால்பெண் குழந்தையாகும்.  ஆணின் மூச்சு வலது பக்க நாசியிலும், இடது பக்க நாசியிலும் இரண்டும் ஒத்து இயங்கினால் குழந்தை அலியாகும்.  சுக்கிலத்தைச் செலுத்தும் பிராண வாயுவுடன் அபானன் எனப்படும் மலக்காற்று எதிர்த்தால் சுக்கிலம் சிதைந்து இரட்டைக் குழந்தையாகும். 
 
0483: உயிர்ப்பின் இயக்கத்து ஏற்பக் கரு அமைதல் :
ஆண் பெண் இருவருக்கும் உயிர்ப்பு ஒத்து இருக்குமானால் கருவில் உள்ள குழந்தை அழகாக விளங்கும்.  புணரும் அக்காலத்தில் அந்த இருவருக்கும்  உயிர்ப்புத் தடுமாறினால் பெண்ணுக்குக் கரு உண்டாக வாய்ப்பு இல்லையாகும்.
 
0484: பொற்சிலை எனப் பிறக்குமாறு :
பெண்ணின் வயிற்றில் அமைந்த குழந்தை அண்ணாக்கினுள்ளே விளங்கும் பேரொளி போன்றதாகும்.    
அக்குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோ பிறந்து வளர்ந்து சூரியனின் பொன் வடிவைப் போன்று வளர்ந்து முழுவடிவத்தைப் பெறும்.
 
0485: உடலுக்கு வேறாய் அருவமாய் உள்ளது உயிர் :
அந்தக் கருவானது பத்துத் திங்கள் கருப்பையில் வளரும்.  தக்க பருவம் உண்டாகஅக்குழந்தை உலகத்தில் பிறந்து வளரும்.  மாயையான வளர்ப்புத் தாயுடன் பொருந்தி வளரும்.   ஆனால் அந்த உடலுள் பொருந்திய உயிர் வடிவம் அற்றது என்பதை  அறிவார் யார்?  எவரும் இல்லை.
 
0486: மாயையின் மயக்கும் தன்மை :
அக் கருவுக்குக் காரணமான விந்துவான விதையை விதைத்த தந்தையும் அக் குழந்தை என்ன குழந்தை என்று அறிய மாட்டான்.  அந்தக் கருவை ஏற்றுக் கொண்ட தாயும் அறியமாட்டாள்.  பிரமனான தட்டான் அறிந்தவனாயினும்  அதை ஒருவருக்கும் சொல்லவில்லை.  அதை அமைத்துக் கொடுக்கும் சதாசிவனும்
அங்கே இருந்த போதும் இதைஅறியமுடியாது உள்ளதே என்னே, மாயையின் மயக்கும் தன்மை!
 
0487: பழைய பொருளை ஏத்த வேண்டும் :
இன்பம் அனுபவிக்க விரும்பிய ஆண் பெண் ஆகிய இருவர் புணர்ச்சியில், துன்பம் பொருந்தும் பாசத்தில் தோன்றிய உயிர், துன்பத்தில் வளர்ந்த பின்பு, மேன்மை பெற விரும்பி, உலகத்தில் எல்லாவற்றுக்கும் முன்னம் தோன்றியிருக்கின்ற பழைமைக்கும் பழைமையான இறைவனைப் பொருந்த அவனை நாடித்
துதிக்க வேண்டும்.
 
0488: கருவில் கரு வளரும் வகை :
குயில் பறவையின் முட்டையைக் காக்கையின் கூட்டிலே வைத்தால் ஐயம் இல்லாமல் காக்கை வளர்க்கும்.  அது போன்று இயக்கம் இல்லாமலும் போக்கில்லாமலும் ஏன் என்று வினவாமலும் தாயும் மயக்கத்தால் உடலை வளர்க்கும் முறை இதுவேயாகும்.
 
0489: இறைவனுக்கு இன்பம் தருவது :
தாவரமானது முதலில் கிழங்காய் இருந்தது.  முளையாய் ஆகியது.  பின் அது புதராய் ஆகிறது.  பின் பழமாய்ப் பயன் அளிக்கிறது. அதுவே அந்தத் தாவரத்தின் இன்பமாய் அமைவது.   அது போல் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பயன் அளிப்பதே ஆதியாகிய இறைவனுக்கு இன்பம் தருவதாகும்.
 
0490: இறைவனைத் தவத்தால் உணர முடியும் :
மற்றத் தேவரைவிடப் பெருமை உடையவனாயினும் எம் தலைவனான இறைவன் ஊன் உடலில் உள்ள குற்றங்களிலும் கலந்து அவற்றுள் விளங்குகின்றான்.    அப்படிப்பட்ட அவ்விறைவனைத் தேவராலும்
உணர முடியாது.  மக்களே தங்கள் தவ வன்மையினால்உணர முடியும்.
 
0491: உயிர்களின் பக்குவத்துக்கேற்ப உடலினை அமைத்தல் :
மேன்மை பொருந்திய இறைவனிடம் நுண்மையாய் ஒடுங்கிய நல்ல உடல், மீண்டும் பருவத்துக்கு ஏற்பப் பயனை அடைய வேண்டி,  அலைகடலில் கதிரவன் வெம்மையால் உப்புத் திரண்டு உருக்கொள்வதைப்
போல்,  இறைவனது  அருளால்  மீண்டும்  தூல உடம்பு கருவில் உருவாகிறது. 
 
15. மூவகைச் சீவ வர்க்கம் :
மூவகைச் சீவ வர்க்கம் என்பது விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர்.
விஞ்ஞானகலர் - ஆணவம் ஒன்றை மட்டும் உடையவர்.
பிரளயாகலர்   - ஆணவம், கன்மம் இரண்டையும் உடையவர்.
சகலர்          - ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றையும் உடையவர்.
0492: சிவனருள் நிகழும் விதம் :
சத்தியும் சிவனும் விளையாட்டாக உயிர்களை நுண் உடலில் புகுத்திப் பொருத்தி சுத்தமும் அசுத்தமும் ஆகிய இரண்டு மாயைகளுள் கூட்டுவித்து, சுத்தமான மேலாம் நிலத்தை அடையச் செய்து, உயிர்களின் உள்ளத்தில் விளங்கித், துரிய நிலையில் சிவரூபம் பெற அருள் செய்வார். 
 
0493: பத்துத் தரத்தில் மூவகைச் சீவ வர்க்கம் :
தெளிந்த ஞானம் உடைய விஞ்ஞானகலர் நால்வகையினர்:
1. உடலுடன் கூடி இருக்கும் போதே சிவத்தைப் பொருந்திய சீவன்முத்தர் ஒருவர்.
2. உடலை விட்டுப் பிரிந்த பின்பு சிவத்துடன் பொருந்திய உத்தமஇயல்புடையவர்.
3. உடலை விட்டுப் பிரிந்த பின்பு சிவத்துடன் பொருந்திய மத்திம இயல்புடையவர்.
4. உடலை விட்டுப் பிரிந்த பின்பு சிவத்துடன் பொருந்திய அதம இயல்புடையவர்.
பேரூழிகாலத்தில் தெளிந்த ஞானத்தைப் பெறும் பிரளயாகலர்
உத்தம, மத்திம, அதம இயல்புடையமூவகையினர்:
உலகவாழ்வில் பொருந்தி அறியாமையுடைய சகலர்
உத்தம, மத்திம, அதம இயல்புடைய மூவர்.
ஆக மூவகைப்பட்டவரும் பத்து பிர்வு உள்ளவர்கள் ஆவார்கள்.
 
0494: விஞ்ஞானர் நால்வகை :
விஞ்ஞானகலர் ஆணவத்தை மட்டும் உடைய தன்னலம் நீங்கியவரும், ஆன்ம ஞானம் உடைய அட்ட வித்தியேசுரபதம் சார்ந்தவரும், உயர்ந்த ஞானம் உடைய எழுகோடி மந்திரேசுரரும், உண்மையான ஞானம் பெற்றுள்ள ஆணவமல வாசனைவிட்டவருமாக நான்கு வகைப்பட்டவர்.  இவரில் உண்மையான ஞானம் பெற்றுள்ளவர் எடுத்த பிறவியிலேயே உடல் விட்டவுடன் சிவத்துடன் கலந்திடுவர்.
 
0495: விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் எய்தும் பதங்கள் :
விஞ்ஞானகலரில் பக்குவம் குறைவு பட்டவர் உடம்புடன் கூடியிருக்கின்ற போதே சீவன் முத்தி அடையாமல் அடுத்த பிறவியில் சிவபெருமானை அடைவர்.  இரண்டாம் நிலையினரான பிரளயாகலர் இரு பிறப்புகளில் நூற்றெட்டு உருத்திரர் பதம் அடைவர்.   மாயையினது வலிமையால் பிணிக்கப்பட்ட சகலர் மும்மலம் கெடாது இருப்பவர் ஆவர்.
 
0496: சகலரின் மூன்று வகையினர் :
ஆணவம் கன்மம் மாயை என்னும் மூன்று மலமுடைய சகலரில் சிலர் சித்தான சிவத்தைப் பேணி ஞான வடிவமான சிவம் ஆயினர்.  ஞானம் கிரியை என்பவை ஒத்துச் சதாசிவ நிலையில் பற்றி நின்றவர் ஞான
வடிவாய் ஆணவம் கன்மம் மாயைகளைக்கடந்து மேலே நிற்பவர் ஆவார்.  ஞானமும் கிரியை ஒத்து நிற்க, ஆணவம் கன்மம் மாயை என்பனவற்றை நீக்க மாட்டாதவர், நாத தத்துவம் வெளிப்படாமல் சகலர் ஆவார்.
 
0497: சிவனது பேதத்தை உணர்ந்தவர் ஆவார் :
சிவமாகி - ஆணவம் கன்மம் மாயை மாயேயம் திரோதாயி என்ற ஐந்து வகைப்பட்ட மலங்களையும் வென்றவர் - வீணாகிப் போகாத சித்தராய் வீடு பெற்று அழிவில்லாத நிலையில் இருப்பர்.  பசு பாசத் தன்மைகள் நீங்கியவராய் அவர் பிறவி நீங்கினவர் ஆவார்.  அவர் சிவம், சத்தி, நாதம்,  விந்து, சதாசிவம், மகேசுரம், உருத்திரம், திருமால்,பிரமன் ஆகிய சிவனது  ஒன்பது நிலையையும் விரும்பி  அறிந்தவர் ஆவார்.
 
0498: ஒன்பது பிரிவினர் :
விஞ்ஞானகலர் ஆணவம் என்ற ஒரு மலத்தை மட்டும் உடையவர் ஆவார். 
அவர் அணு சதாசிவர்.  விஞ்ஞானகலரைப் போன்று சுத்த மாயையில் உள்ள பிரளயாகலர் இரண்டு மலம் உடையவர்.  கருவி கொண்டு உணரும் சகலரும்  அஞ்ஞானத்தால் அறிவற்றவர் ஆவார்.  இந்த மூவகையிலும் உள்ள உயிரினங்கள்உத்தமம், மத்திமம், அதமம் என்ற தகுதி கொண்டதால் ஒவ்வொரு பிரிவிலும் மும்மூன்றாய் ஒன்பது வகை இருக்கின்றன.
 
0499: மூவகையினரும் முத்தி பெறுதல் :
விஞ்ஞானகலர் ஞான கன்மத்தால் உள்ளே நின்று உணர்த்த்ப் பெற்று எடுத்த பிறவியிலேயே சிவப்பேறு அடைவர்.  பிரளயாகலர் உள் நின்று உணர்த்தப் பெறாமையினால் சுத்த வித்தியா மண்டலங்களை அடைந்து அடுத்து சில பிறப்பில் ஞானம் எய்தி  சிவப்பேறு அடைவர்.  ஆணவம் கன்மம் மாயை என்பனவற்றை நீக்க மாட்டாத சகலரோ ஞானத்தைப் படிப்படியாய்ப் பெற மாயா உடலைக் கொண்டு திரும்பத் திரும்பப் பிறந்து மலங்கள் நீங்கிய பின்னரே ஞானம் எய்தி சிவப்பேறு அடைவர். 
ஆக மூவரும் ஞானத்தை அடைந்து சிவசாயுச்சிய பதம் பெறுவது உறுதியே ஆகும்.
 
0500: சகலர் சிவசத்துவ மண்டலங்களை அடைதல் :
ஆணவம் பொருந்தியுள்ள அஞ்ஞானத்தை நனவிலும் நீங்கியவர் விந்து நாதம் ஆகியவற்றைச் சகல நிலையில் உடம்புடன் காண முடியும்.  ஆணவம் முதலிய மலங்களைப் பொருந்திய சகலரோ மிக மேலான சிவதத்துவ மண்டலங்களை மலம் நீங்கிய பின்னரே அடைவர்.
 
16. பாத்திரம்.
பாத்திரம் அறநெறியில் ஈட்டிய பொருளைச் சேமித்து வைக்கும் இடமாகும்.
 
0501: ஞானியர்க்குத் தருவதால் உண்டாகும் பயன் :
சிவஞானியர்க்கு எள்ளளவு பொன்னைத் தந்தால் அதன் பயன் கொடுப்பவர்க்கு இம்மையில் சித்தியும் இன்பமும் மறுமையில் முத்தியும் ஏற்படும். அஞ்ஞானியர்க்குப் பூமி அளவு பொன்னைத் தந்தாலும் இம்மை இன்பமும் மறுமை இன்பமும் இல்லாதுபோய் விடும்.
 
0502: உயிரில் விளங்கும் நாதனை நாடி உணர்ந்தால் தேவர் ஆவர்.
உரியகாலம் வரும்வரை எதிர்பார்த்திருந்து உயிரைக்கவர்ந்து செல்லும் இயமனைச் செலுத்தியிருந்து ஏற்கும் எட்டுக் குணத்தானும், உயிர்க்கு உயிராம் தன்மையை உணர்ந்தவர்க்கு அருளும் தலைவனும் ஆன இறைவனை, அவன் வீற்றிருக்கின்ற விந்து நாத மண்டலங்களை அடைந்து உணர்ந்தவர் ஒளி
மண்டலத்தில் வாழ்பவர் ஆவர்.
 
0503: கருக் கொண்ட நாள் முதலாக இறைவனை வணங்கவேண்டும் :
நான் அன்னை வயிற்றில் கருவாய் இருந்த போதே சிவஞானத்தைப் பற்றியிருந்தேன்.  இறைவனின் திருவடியை உடலுடன் கூடியிருந்த போதும் நீங்காமல் இருந்தேன். பின்னர் பொய்யான உடலை விட்டு ஒளிமயமான திருவடியை நான் நாடுவேன்.  அது நெய் வார்த்து எரியாத தூண்டா விளக்காகும்.
 
0504: சிவஞானியர் யாவும் சிவன் செயல் எனத் தம்மை மறந்திருப்பர்.
வரத்தக்க இன்பப் பொருள்கள் வரும்.  அவற்றுள் நீங்குபவை நீங்கும்.  கழிக்கப் பெறும் வினைகள் கழியும்.  அனுபவிக்க வேண்டியவை வந்து சேரும்.   இவற்றை  இறைவனே காட்டுகிறான் என்பதைக் கண்டிருப்பவனே, இறைவன் ஆணையின் வண்ணம் செயல் ஆற்றும் முதல் தகுதி கொண்டவன் ஆவான்.
 
17. அபாத்திரம் :  அல்லார்க்கு ஈவதில் பயனில்லை என்பதே அபாத்திரமாகும்.
 
0505 : ஒழுக்கமற்றவர்க்கு வழங்குவது பயன் அற்றது.
ஒழுக்கமும் நோன்பும் இல்லாதவர்க்கு ஈவது என்பது அழகிய வறட்டுப் பசுவுக்குக் குனிந்து நிமிர்ந்து பசுந்தழையிட்டுப் பாலைக் கறந்து குடிப்பதைப் போன்றாதாகும். அதுவேயன்றிப் பருவம் தவறிச் செய்த பயிரையும் போன்று பயன் அற்றதாகும்.
 
0506: அன்பு கொள்ளாதவர்க்கு ஈவது பிழை ஆகும்.
யோகத்துக்குத் தவிர்க்க வேண்டியவற்றையும் கொள்ள வேண்டியவற்றையும் அறிந்து அன்பு உடையார்க்கே தானம் செய்ய வேண்டும்.  அங்ஙனம் இல்லாது சார்பறிந்து அன்பு கொள்ளாதவர்க்குத் தானம் செய்வது பெருந்தவறாகும்.
 
0507: நரகில் அழுந்திக் கெடாதவன்.
ஐம்பெருங்குற்றங்களைச் செய்பவன் நல்லவர்க்குக் கொடுப்பதன் பயனை அறியாது கெடுவான்.  ஆனால் குற்றம் இல்லாத ஞானகுருவுக்கும் தூயபெரியவர்க்கும் காமம் வெகுளி மயக்கமான மூன்றையும் நீங்கியவர்க்கும் அவரவர்க்குத் தந்து அவரவர் நிலையில் நிற்கச் செய்பவன்,  ஞானத்தைப் பெற்றதால் ஐம்பெருங்குற்றம் செய்தவன் விழும் நரகத்தில் புக மாட்டான்.
 
0508: இறைவனை எண்ணாது கொடுப்பவரும் ஏற்பவரும் நரகத்தை அடைவர்.
மண் மலை போன்று அத்துணைப் பெரிய பொருளைத் தந்தாலும், சிவனே முன் நின்று ஈகின்றானெனக் கூப்பிய கையினனாய் இறைவனை வணங்காதவர்க்குக் கொடுத்தவரும், ஏற்றவரும் ஆகிய இருவரும் எழுவகைப்பட்ட நரகங்களில் ஆழ்ந்து வருந்துவர்.
 
18. தீர்த்தம்.  (தூயநீர்).
வெளியே காவிரியும் கங்கையும் இருப்பதைப் போல் உள்ளேயும் மூலாதாரம் முதல் சகஸ்ரதளம் வரை தூய நீர் உள்ளது. இந்த் தூய நீரில் நீராட வேண்டும்.
 
0509: ஞானியர் நீராடும் இயல்பு:
உள்ள மண்டலம் சூழவுள்ள உடலில் மூலாதாரம் முதல் சகஸ்ரதளம் ஈறாக உள்ளஇடங்களில் ஏழு தூயநீர்கள் உள்ளன.  தாம் செய்த வினை நீங்க இவ்விடங்களில் நேர்மை இல்லாத உள்ளம் கொண்ட அறிவற்றவர் பொருந்தி ஆடார்.  அவர் நிலத்தின் பள்ளத்தில் உள்ள தீர்த்தங்களையும் மலையின்
மேட்டில் உள்ள சுனைகளையும் வீணாகத் தேடி அலைவர்.
 
0510: அகத்தே சிவனை நாடின் அவன் விளங்கித் தோன்றுவான்.
தெளிந்த ஞானம் உடையவரின் உள்ளத்தில் வீற்றிருப்பவன் சிவன்.  திருக்கோயில் வழிபாடு செய்பவர்க்குக் குளிர்ச்சியுடைய பொருளாய் விளங்குவான்.    காமநெறியில்  ஈடுபடுபவர்க்கு அடைய முடியாதவனாய் உள்ளான்.  பிராணாயாமப் பயிற்சியாளர் அவனை ஒரு சமயம் அடையவும் கூடும்.
 
0511: கள்ள மனமுடையார் மேலாம் பயனைப்பெற முடியாது.
மனத்துள் உணரும் ஒப்பில்லாத சிவபரம் பொருளைக் கூடா ஒழுக்கமுடைய கள்ளமனத்தை உடையவர் கலந்து அறிய இயலாது.  பள்ளத்தில் உள்ள நீரை பொத்தல் உள்ள நீர் மொள்ளும் சாலைக் கொண்டு மேட்டுக்கு இறைக்க முடியாததைப் போன்று நீர்ப்பகுதியை விரும்பிப் பாய்கின்றவரின் தீய செயலால்,
இன்பம் நுகர்பவர் விந்து ஜெயத்தை அடைய முடியாது.  சிவத்தைக் கூட முடியாது.
 
0512: தலையின் உச்சியில் உள்ள கங்கை நீரில் முழுகிப் புனிதம் அடைவர்.
ஒளி மண்டலத்தில் வாழும் அமரர்கள் வான மண்டலத்தில் செறிந்துள்ள விந்து மண்டலத்தை அடைந்து ஆதிப் பொருளான சிவபெருமானை அடைவர்.  காமக்கலையைத் தடுத்து வெற்றி பெறுவதால் பொருந்தும் பிரணவ ஒலியுடன் வரும் கங்கை நீர் வெள்ளத்தில் பொறிகளையுடைய அன்பர்கள்
நீராடிப் புனிதர் ஆவர்.
 
0513: அகத்தே இறையை நாடுக !
கடலிலே ஒர் பொருளை இட்டு விட்டு அதைக் குளத்தில் தேடுபவர்  நீர்ப்பையான கடலில் விந்து நீங்குவதைக் கெடுத்து அதை நெற்றிப் பகுதியான குளத்தில் ஒளியாகப் பெறுபவரை நிகர்க்க மாட்டார். அவ்வாறு வான பூதநாயகரான சதாசிவத்தின் அருளால் விந்துவானது போய் உடலிலே புகுந்து மேல் சென்றமையை அறியார்.
 
0514: இந்நீர் சந்திர மண்டலத்தில் உள்ளது.
உடம்பில் கலந்துள்ள நீரானது சீவன் தாமத குணவயப்பட்ட போது கீழ்நிலையில் கருமையாக விளங்கும்.  உடலில் கலந்த நீரானது இராசத குணவயப்பட்டபோது கீழே உள்ள மூல வாயு நெற்றிக்கு வந்து மாதுளம் பூப்போன்ற சிவந்த ஒளியாய் விளங்கும்.  கலந்த நீரானது சாத்துவிக வயப்பட்ட போது சிதாகாயத்தை அடைந்து வெண்மையான ஒளியாய் விளங்கும்.   அவ்வாறு கலந்த நீரானது தீயின் ஒளியும் காற்றின் இயக்கமும் பொருந்தியே உள்ளது.  தாமதம், இராசதம், சாத்துவிகம் ஆகிய முக்குணங்களை இறையருளால் தூய்மை செய்வதே நீராடுவதாகும்.
 
19. திருக்கோயில் இழிவு.  (கோயிலுக்கு செய்யும் இழிவால் உண்டாகும் கேடு)
 
0515: இறைவன் திருமேனிக்குச் செய்யும் இடையூற்றால் உண்டாகும் துன்பம்:
கோயிலில் உள்ள அருவுருவத் திருமேனியாகிய இலிங்கத்தைப் பிடுங்கி வேறு ஒரு இடத்தில் வைத்தால் வைப்பதன் முன்னம் அந்நாட்டு ஆட்சி அழியும்.  பிடுங்கி வைத்தவன் இறப்பதற்கு முன்னே தொழு நோயால் பற்றப்படுவான்.  இங்ஙனம் காவலனான சிவபெருமான் உரைத்தருளினான்.
 
0516: கோயில் மதிலுக்கு ஊறு செய்யக் கூடாது.
கட்டப்பட்ட மதிலில் ஒரு கல்லைப் பெயர்த்தெடுத்தால் அந்தத் தீமையானது முடிசூட்டு விழா நிகழ்த்தப்பட்ட மன்னரை வெட்டி வீழ்த்தும்.  முனிவர் செய்யும் தவத்தை முற்றுப் பெறாமல் போகச் செய்து விடும். அவ்வாறு கல்லைப் பெயர்த்தவர் அந்தணர் ஆயினும் அவர்களையும் வெட்டி வீழ்த்தும்படி செய்யும்.  இது சிவபெருமான் ஆணை.
 
0517 & 0518 : தவறாமல் பூசைகள் நடைபெற வேண்டும்.
காலனை உதைத்தவனான சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் கோயில்களில் மறைகளில் விதிக்கப் பெற்றபடி பூசைகள் நிகழாது தவறுமாயின் போக்க முடியாத நோய்கள் மிகும்;  மழை நிலத்தில் பெய்யாது; உலகத்தில் கன்னக்கோல் கொண்டு செய்யும் களவு மிகும்; மன்னருக்குத் தீமைகள் உண்டாகும்;  போற்றுதற்கு அரிய மன்னரும் போர் ஆற்றலில் குறைவார்.
 
0519: சிவதீட்சை பெறாதவன் பூசை செய்தால் உண்டாகும் தீமை:
பூசை செய்வதற்குச் சிவதீட்சைத் தகுதியைப் பெறாது பெயர் மட்டும் பார்ப்பானாய் விளங்குபவன்,  சிவபெருமானுக்குப் பூசையைச் செய்தால் போர் தொடுத்துச்  செல்லும் மன்னர்க்குப் பொல்லாத நோய் உண்டாகும்.  உலக முழுவதும் பரவியுள்ள நாட்டில் பஞ்சம் ஏற்படும் என்று சிறப்புடைய சிவபெருமான் ஆராய்ந்து கூறியுள்ளான்.
 
20. அதோ முக தரிசனம்.
கீழ் நோக்கிய வண்ணம் உள்ள சிவபெருமானின் முகம் அதோ முகம்.  அதைத் தரிசித்தல் அதோமுக தரிசனம் ஆகும்.
 
0520: ஆறுமுகன் சிவபெருமான் ஆணையால் அசுரரை அழித்து வானவரைக் காத்தல்.
'எம் தலைவா! இறைவா! நாங்கள் வருந்துவது முறையோ!' என்று வானவர்கள் அசுரனின் வலிமையைச் சொல்லி முறையிட்டனர்.  அப்போது, 'அழகிய பவளம் போன்ற மேனியையுடைய ஆறுமுகனே! நீ நாம் தரும் படையுடனே போய்த் தேவர்களின் பகைவரான அசுரரை அழித்து விட்டு வா' என்று கூறியருளிய
இறைவனே தற்பரனாக விளங்குகின்றான்.  (கண்டத்தில் எழும் ஒலியே பிரணவ வடிவான கணேசர் என்பர்.  மகேசுரர் உள்ளத்தில் எழும் ஒளியே ஆறுமுகன் என்பர் ஆன்றோர்.)
 
0521: மூலாதாரத்தில் உள்ள சிவனது அதோமுகம் அருளல்:
எண்மையான தலைமாலையை அணிந்த சிவபெருமானுக்கு அண்டங்களையும் எட்டுத்திக்குகளையும் தாங்கிக் கொண்டிருக்கும் அதோ முகத்தின் கழுத்துக் கரியநிறம் உடையதாய் இருப்பதை அறிவார் எவருமிலர்.  கண்டத்துக்குக் கீழே உள்ள பகுதி கருமையான இருளாய் இருப்பது.  இருளை நோக்கிக் கீழே செல்லும்  விந்துவின் இருளைக் கண்டத்தில் மாற்றி ஒளியாக்கி மேலே செலுத்தியதே 
நஞ்சுண்டான் என்பதன் கருத்து.  அவர் நஞ்சை உண்டதால் கழுத்து கரிய நிறம் அடைந்தது அன்பார் அறிவற்றவர்.
 
0522: விண்ணோரும் தொழும்படி அருள்வர்.
கரிய நிறம் பொருந்திய கழுத்தை உடைய சிவபெருமான் செழுமையான கடல் சூழ்ந்த உலகில் பொய்க் கதைகளைப்பேசி மகிழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் உண்மையான தத்துவத்தைப் பற்றிப் பேசுவார்களானால் தேவர்களும் தொழும் தகுதியை அவர்க்கு அருளுவான்.  இவ்வுலகத்தைப் படைத்த அவன் பொய்யையும் மெய்யையும் அறிவான்.
 
0523: சிவன் என நிற்கும்.
மூலாதாரத்தில் உள்ள உருத்திரன் சுழுமுனை வழியாக மேலே எழுந்து தலையில் உள்ள செவ்வொளியுள் கலந்து சிவன் என்ற பெயருடன் விளங்கும்.  அப்போது முன்னைய நிவர்த்தி முதலிய புவனங்களின் இயல்பை மாற்றி வெற்றி பெற்று மேல் எழுந்து நிற்கும்.  இவ்வாறு செய்வது சிவபெருமானின் அதோமுகம் ஆகும்.
 
0524: ஒளியுடன் கூடிய பரனே அதோமுகன்!
அதோமுகம் என்பது கீழே உள்ள அண்டத்தில் பழமையாக உள்ளது; அது நுண்ணுடலில் எங்கும் செல்லும் ஆற்றல் உடையது.  சத்தாகிய ஓம் என்னும் பிரணவ வடிவாய் உள்ள ஒளியுடைய பராசக்தியுடன் கூடிய இறைவனே அதோமுகனாயும் ஊழியைச் செய்பவனாயும் விளங்குகின்றான்.
 
0525: சக்தியுடன் பொருந்தி உள்ளான்.
அதோமுகமான கவிழ்ந்த முகமுடைய பெரிய மலரான விந்தையினைக் கேட்பீர்!
தலையில் கவிழ்ந்துள்ள சகஸ்ரதளத்திலிருந்து நூறு நாடிகள் கவிழ்ந்து கீழ் நோக்கி விரிந்து வந்து முதுகெலும்புகளுடன் பிணைக்கப்பட்டுள்ளன.  அதில் அழிவில்லாத ஆறு கோடி மாயா சத்திகளுடன் அதோமுகமாய் இறைவனும் திகழ்கின்றான்.
 
21. சிவநிந்தை.  சிவபெருமானை முழு முதற் பொருள் என உணராமல் பழித்தல்.
 
0526: சிவனை நிந்தித்தவர் கெடுவர்.
மேலோர் தெளிந்த ஞானத்தால்  தேவர் உலகத் தலைவனான சிவபெருமானை சிந்தையில் நாடி அருள் அடைவர்.  அங்ஙனம் இருக்கச் சிவபெருமான் எளிமையானவன் என்று கீழானவர் இகழ்வாராயின் கிளியானது பூனையிடம் அகப்பட்டு அழிவது போல் ஆகும்.
 
0527: காமத்தில் ஆழ்ந்த தேவரும் அசுரரும் இறைவனை அறியார்.
உலர்ந்த தேவரும் அசுரரும் ஆகிய அனைவரும் காமத்தினால் கெட்டுப் போனவர்கள்.    ஆதலால் அவர்கள் உடம்பில் விளங்கும் அதோமுகத்தின் உண்மைப் பொருளை அவர்கள் உணரமாட்டார்கள்.  அன்பால் கசிந்து அமுதம் போல் சுரக்கும் ஆதியான எம்பெருமானை உடல் எங்கும் தேக்கி உண்டவர்க்கே
அல்லாமல் இறைவனை மற்றவர் அறிய இயலாததாகும்.
 
0528: விளையாட்டாகவும் இறைவனை நிந்திக்க கூடாது.
அசுரரும் தேவரும் இறைவர் நிந்தனையால் தீராத பகைமை கொண்டு உய்வு பெறாமல் இடையில் அழிந்தனர்.  இறைவனிடம் எவ்வகையில் பகை கொண்டாலும் அவனை அடைவது என்பது இயலாது.  இறைவனைப் போலியாகவேனும் பகை கொண்டாலும் தீமை ஒன்று பத்தாக வளரும்.
 
0529: நாமே பிரமம் என்பவர் இறைவனை எண்ணாமல் இகழ்வர்:
அந்தணராய்ப் பிறந்தும் பெண் இன்பத்தையும் ஊடலையும் நினைத்து மார்பிலும் சிந்தையிலும் கலந்துள்ளவராதலாலும், நாம் பிரமம் என்ற அறத்தில் உள்ளவராதலாலும், இறைவனார் பற்றிய எண்ணத்தை உள்ளத்தில் கொள்ளாது இகழ்வார்.
 
22. குருநிந்தை.  குருவைப் பழித்தல்.  குருவைப் பழித்தவர் எய்தும் துன்பம் :
 
0530: குருவைச் சார்ந்தவரே ஞானம் பெற்றவர் :
கீழ்மக்கள் ஞானம் பெற்றவரையும் பேண மாட்டார்கள்.  இவர்கள் உடன் இருந்தவரையும் வருந்தும்படி கூறுவர்.  கற்றறிந்தாரிடம் பொருந்தியவரே ஞானம் அடைந்தவர் ஆவார்.  இவரையே அல்லாமல் வேறு எவர் இப்பேற்றைப் பெற முடியும்?
 
0531: மாணவன் உள்ளத்தில் நாத ஒலி எழும்படி செய்வர் :
ஓர் எழுத்து மொழியான ஓம் என்ற பிரணவத்தின் பொருளை மாணவன் உணருமாறு செய்த பெருமை கொண்ட நாதத்தை எழுப்பித் தந்த குருவை மனம் வருந்தும்படி செய்தவர் ஊர் சுற்றித்திரியும் நாயாய்ப் பிறப்பர்.   பின்பு ஒரு யுகம் வரை பூமியில் புழுவாய்க்கிடப்பர்.
 
0532: குரு நிந்தனை செய்தவர் பொருளும் ஆவியும் கெடும் :
இல்லற ஞானிகளும் தத்துவ ஞானிகளும் உள்ளம் வருந்தக் கேட்டினைச் செய்தவரின் பொருளும் உயிரும் ஓர் ஆண்டில் போய்விடும்.  இது சத்தியம்.சதாசிவத்தின் மீது ஆணை.
 
0533: மந்திரக் குருவுக்குத் தீமை செய்தவர் கெடுவார் :
ஓர் எழுத்து ஒரு மொழியான பிரணவத்தை உப்தேசித்த பெருந்தவம் உடைய குருவை,  உள்ளம் வருந்தும்படி தீமைகள் செய்தவர்கள் இழிவாய் ஒதுக்கப்பட்ட நாயாய் நூறு பிறவிகள் எடுப்பர்.  பின்பு தாழ்ந்த பிறவியினராய் இம் மண்ணுலகத்தில் மடிவர்.
 
0534: ஈசனடியார்க்குத் துன்பம் இழைத்தவர் பெரும்பதவியை இழப்பர் :
சிவனடியார் மனம் கலங்கிடின், தேசமும் நாடும் மற்றச் சிறப்புகளும் அழிந்துவிடும்.  இந்திரனின் ஆட்சி பீடமும் பெரு மன்னரின் ஆட்சி பீடமும் நாசமாகிவிடும்.  இது எம் சிவபெருமானின் ஆணையாகும்.
 
0535: குருவின் முன் பொய் பேசினால் துன்பம் வரும் :
நல்ல நெறியைப் புகட்டிய நல்ல குருவின் முன்பு பொய்பேசினால் முன்னம் பெற்றிருந்த தவமும் கெடும். ஆசிரியரிடம் பெற்ற ஞான உபதேசமும் நிலைத்து இராது.   பழமையாய் உபதேசிக்கப்பட்ட நெறியையும் மறந்து ஆன்ம வளர்ச்சிக்கான மற்ற வழிகளும் போய் வறுமையும் வந்து சேரும்.
 
0536: ஞான நெறியினரே சிறந்தவர் :
கையில் சிக்கிய சிறந்த மாணிக்கத்தைக் கைவிட்டுக் காலில் அகப்பட்ட கல்லை எடுத்துச் சுமப்பவனின் செயலைப் போலவும் கையில் உள்ள நெய், பால், தயிர் ஆகிய உணவு இருக்கத் தனக்கு நன்மை அளிக்காத கையளவு பிட்டு உண்பவன் போலவும் ஆகும்.  ஞானத்தைக் கைவிட்டுக் கிரியை மேற்கொண்டு ஒழுகுதலாம்.
 
23. மயேசுர நிந்தை. 
மகேசுவரரைப் பூசிக்கும் மயேசுரரை நிந்திப்பவர் எய்தும் தீமை :
 
0537: அடியாரைப் பழித்தவர் நரகத்தை அடைவர் :
சிவனடியார்கள் உலக இயலுக்கு மாறுபட்டவர்கள். அச் சிவனடியார்கள் பசி வந்தபோது இரந்து உண்டு வாழ்பவர்கள்.  அத்தகைய அடியார்களை வெறுக்கத் தக்கவற்றைப் பேசியவர்கள் மிகவும் தாழ்ந்த நரகத்தை அடைய வழி செய்து கொண்டவர் ஆவார்.
 
0538: சிவபோகம் சித்திக்கும் :
ஞானியரைத் தூற்றுபவர் நல்வினையினின்று நீங்கித் துன்பம் அடைவர்.  ஞானியரை நல்லவர் என்று ஞானியரைப் போற்றுபவர் துன்பத்தினின்று நீங்கி இன்பம் அடைவர்.  அச் சிவஞானியை அடைந்தார்க்கு அப்போது சிவபோகம் கைகூடும். 
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free