பேரின்பம் உன்னுள்ளே.
நீயே தெய்வம் என்றுணர். உன்னையே நீ ஒளியாக தரிசனம் செய்.

1008 - 1506 திருமந்திர விளக்கம்.

1008: புற வழிபாடு தேவையற்றது :

இறைவனை எண்ணி அடிமையானவர் எவ்வகையான செயலாலும் அவனை வழிபட மாட்டார்.  ஏனென்றால் எட்டுக் கன்மச் செய்கையில் அவா இல்லாமையால் கிரியை வழித்தான உபாசனையை விரும்பார்.  சிவயோகியர் இறைவனை வழிபட்டு அவனிடம் தம்மை அடைக்கலப்படுத்துவர். ஆதலால் கிரியையான வழிபாட்டை விரும்பாமல் சிவத்திடம் அன்பு கொண்டவர் அவனது அருளின்
வழியே நிற்பர்.
 
1009: மணியின் ஒளி போல் இறைவனைக் காணலாம் :
சிவயோகம் என்பது அறிவு ஒன்றாலேயே அடையக் கூடியது என்பதைக் கிரியைவழி நிற்பவர் உணர்வது இல்லை.  அவர்கள் கருத்து எல்லாம் வெளியேயுள்ள மூர்த்தி, பூசை, திரவியம், மந்திரம், செபம் ஆகியவற்றில் தான் அலைந்து கொண்டிருக்கும்.  நியதிகுட்பட்டுக் கிடைத்த உடலுள் ஒரு நெறி மனத்துடன் காணில் ஒளிபொருந்திய மணிக்குள்ளே விளங்கும் ஒளிபோல் இறைவனைக் காணலாகும்.
 
1010: சிவனடியாரின் இயல்பு :
உள்ளம் இருளும் ஒளியும் போல் இரண்டு இயல்புடையது.  வெளியாகிய ஒளியைச் சார்ந்து அருளையும் மயக்கமாகிய இருளைச் சார்ந்து அறியாமையையும் பொருந்தும்.  மயக்கத்தை விட்டு நீங்காமையால் அறிவு மயங்கும்.  எனவே மயக்கத்தைக் கைவிட்டவரே சிவன் அடியார் ஆவார்.
 
1011: ஒன்றையும் எண்ணாமல் இருப்பார் :
தானே சிவன் - அவனே சிவன் என்ற இரண்டு வழியாய்த் தன்னைச் சிவமாய்க் காண்பவன், சிவத்திடம் பத்தி கொண்டு தனது அறிவைச் சிவ அறிவில் ஒன்றுபடுத்திய நாலாம் நிலையான "சாயுச்சியம்" நிலையை அடையும் வழி இதுவே.  இத்தகைய சித்தியைப் பெற்றால் சிவஞானியர் தம்மைச் சிவம் நடத்தும் என்று தாம் நன்மை தீமை ஒன்றையும் எண்ணாதவராக விளங்குவர்.
 
1012:விந்து நாதம் தோன்றி மேலே செல்லும் :
கொப்பூழ்க்குக் கீழ் நிலைபெற்றிருக்கும் சுவாதிட்டானத்தில் உள்ள அணையாத தீயானது  அக்கினிக்
கலையாகும்.  இத்தீயை சிவாக்கினியாக்கிச் சிவத்தியானம் செய்தால் சீவர்களை விட்டு அகலாத குண்டலினி சத்தி கண்ட தானத்தில் வந்து விளங்குவாள்.  அழகிய ஒளியுடன் கூடிய 'ந'காரம் சுவாதிட்டானத்தினின்று நெற்றியை இடமாகக் கொண்டு விளங்கும்.  இந்த இடத்திலிருந்து விந்துநாதங்
கள் தோன்றி மேலே செல்லும். குண்டலினியை எழுப்பிடச் செய்தால் விந்துநாதம்
தோன்றும்.
 
1013: உண்மையான வீடு :
'ந,ம' என்ற எழுத்துக்களால் குறிப்பிடப்படும் மறைப்புச் சத்தியான திரோதானத்தையும் மலத்தையும் இருப்பிடமாகக் கொண்டு ஆன்மாக்கள் இயங்குவன.  ஆதலால் அவை பசுத்தன்மை உடையன.  பசுத்தன்மையை மாற்றச் சிவத்தைச் சார்ந்து சிவத்தைச் சிந்திக்க, 'ந, ம' வுடன் கூடிய பசுச் சிவத்துக்கு இருப்பிடம் ஆகும்.  'ந, ம' தன்மை கெட 'நமசிவாய', சிவாயநம' எனச் செபித்தல் மட்டும் உண்மைப் பொருள் சித்திக்காது.  உண்மைப் பொருளான சிவத்துடன் பெருமையுடைய பிரணவத்தின் சமாதி அடைதலே உண்மையான வீடு ஆகும்.
 
1014: சீவ ஒளி  சிவ ஒளியில் நிற்கும் :
உடலானது தான் அன்று என உணர்ந்த அந்நாளில் சீவனின் அண்டத்தில் சிவத்தின் ஒளி ஒளிரும்.  ஒளி வரும் காலத்தில் அது சந்திரக் கலையாய்த் திகழும்.ஒளி வரும்போது பிரிவுற்றிருந்து சீவனின் நிலை சிவத்துடன் ஒன்றாயின் சீவஒளி சிவ ஒளியுடனே கலந்ததாய் இருக்கும். உடலோடு கூடிய உறவை விட்டால் சீவனின் இயல்பான நிலை தானே விளங்கும்.
 
4, நவகுண்டம்.  ஒன்பது வகை ஓம குண்டங்கள்.
மந்திர ஆற்றலைப் பெற்றவர் தம் தொழிலுக்கு ஏற்பக் குண்டம் அமைத்துக் கொண்டு ஓமம் செய்வர்.  ஒன்பது வகைக் குண்டங்கள்: சதுரம், யோனி, பிறை, முக்கோணம், வட்டம், அறுகோணம், பதுமம், அட்டகோணம், வர்த்துவம்.
 
1015: எல்லா நன்மைகளையும் அளிக்கும் :
நவகுண்டங்களுள்  பேரொளி எழுந்து நிற்கும்.  அந்த நவகுண்ட சோதியால் எல்லா நன்மைகளையும் அடையலாம்.
 
1016: நாற்கோண குண்டத்தின் பயன் & 1017: பேரொளியாய்த் திகழ்ந்தது :
நாற்கோண (சதுரம்) குண்டத்தில் ஆணவம், கன்மம், மாயை மூன்றும் கெடும்.மகிழ்ச்சி உண்டாகும்.  படைப்பு முதலிய ஐந்து தொழில்களும் சிறக்கும்.  மூலாதாரத்து அக்கினி மேல் முகமாகி மண்டலங் களையும் கடந்து செல்லும்.   அச்சுடர் நிலம் முதலாக துவாத சாந்தம் வரை ஒரே பேரொளியாய் விளங்கும்.
 
1018: ஒளியின் இயல்பு :
அகத்தே பொருந்திய குண்டத்தில் பொருந்தினால் ஒளிவடிவாய்த் திகழலாம்.  அதனால் ஈரேழு மண்டலங்களையும் படைத்து துடைக்கலாம்.
 
1019: வலிய வினைகள் வந்து பொருந்தா:
நாற்கோண குண்டத்தில் சோடசகலைகள் பதினாறும் விளங்கித் தோன்றும்.  மூலாக்கினி காம செயத்துடன் சுழுமுனை நாடி வழியாய் மேல் எழுவதைக் கண்டு கொள்ளலாம்.  அங்ஙனம் கண்டு கொள்பவர்க்கு வெம்மையை அளிக்கும் வலிய வினைகள் வந்து பொருந்துவதில்லை.
 
1020: சிவசூரியன் விளங்குதல் :
முக்கோண வடிவில் மூலாதாரமான குண்டத்தில் விளங்கும் பிரமன் முதலியஐவரும் சத்தியோசாதம், வாமதேவம், தத்புருடம், அகோரம், ஈசானம் என்ற ஐந்து முகங்களைக் கொண்ட சிவமாக உடலின் உள்ளேயும் வெளியேயும் விளங்குவர்.   தலையின் மீது சூரிய வட்டம் முழுமையடைந்து பன்னிரண்டு
இராசிகளும் அமையும்படி தியானத்தில் உறுதிஉடையவர்க்குச் சிவசூரியன் தலை மீது விளங்குவான்.
 
1021: அன்னமய கோசம் ஒளியுடன் விளங்கும் :
நவகுண்ட வழிபாடு செய்தால் தலை முகம் ஆகியவை நல்ல ஒளியைப் பெறும். இடைகலை பிங்கலையாகிய இரு கைகளில் சுழுமுனை ஒளியாய் விளங்கும்.   அன்னத்தால் ஆன அன்னமய கோசத்தில் வேகத்துடன் கூடிய இலிங்கமும் நல்ல ஒளியாய் உள்ளேயும் வெளியேயும் விளங்கும். 
நவகுண்ட வழிபாட்டால் அன்னமயகோசம் ஒளி பெற்று விளங்கும்.
 
1022: ஒளி மயமான சத்தியை உணரவேண்டும் :
திவ்விய இலிங்கம் நன்மையை அளிக்கும் என்று கூறிய பராசத்தியே ஆன்மாக்களாகிய நமக்குக் கடைத்தேறுவதற்குரிய சொல் "பிரணவம்" ஆகும் என்று இயம்பினாள்.    இவ்வாறு முடி முதல் அடிவரை ஒளியக எல்லாவற்றையும் ஆக்கி நிற்கின்ற சத்தியை நல்ல குருவிடம் போய்க் கேட்டறியாதவர் கல்வி கற்றவர்கள் மாட்டார்கள்.  அவர்கள் அறிவிலும் சிறந்து விளங்க மாட்டார்கள்.
 
1023: சுவாதிட்டானக் குண்டத்தில் வழிபாடு செய்தால் வரும் பயன் :
சுவாதிட்டானக் குண்டத்தில் வழிபாடு செய்தால், சுவாதிட்டானச் சக்கரத்தில் உள்ள இடைகலை பிங்கலை என்ற இரண்டு ஒளிகள் மூலாதாரத்தை நோக்கிப் போகும்.   இடைகலை பிங்கலை எல்லாச் சக்கரங்களுடனும் தொடர்பு கொண்டவை ஆதலால் அவை மற்றச் சக்கரங்களின் இயல்புகளை மாற்றிச் சகஸ்ரதளத்தை நோக்கிப் போய்ச் சேரும்.
 
1024: சிவாக்கினி தோன்றும் :
மூலாதாரத்தை இடமாய்க் கொண்ட சிவாக்கினிக்கு ஊன்றியகால் சூரியன் ஆகிய பிங்கலை ஆகும்.  நீர்ப்பகுதியான மணிபூரகத்தை நோக்கி தூக்கி ஆடும் கால் இடைகலை ஆகும்.  உடல் என்ற மண்டலத்தை இடைகலை பிங்கலை ஆகிய இரண்டு கலைகளால் மூல முதலான ஆறு ஆதாரங்களையும் செழிப்படையச் செய்ய முகத்தின் முன்பு சிவாக்கினி வந்து தோன்றும்.
 
1025: எம்பெருமானே தலைவன் ஆவான் :
சூரியன், சந்திரன், அக்கினியைக் கண்களாகக் கொண்ட சிவனே முழுச்சுடராக விளங்கியது.  அங்ஙனம் கண்களையுடைய சிவனே எல்லாத் தத்துவங்களையும் தன்னுள்படுத்தி அடக்கிக் கொண்டான்.  இச்சிவனே திசையெல்லாம் கண்களை உடையவனாகித் தன்னைச் சுற்றியுள்ள எட்டுத் திக்குகளையும் கண்டான்.  எவ்வகைக் கணங்களுக்கும் எம்பெருமானே தலைவன் ஆவான்.
 
1026: ஆன்மாவே மைந்தன்/சண்முகன்/சீவன்/சிவகுமாரன்/கந்தன் ஆனான் :
எம் தலைவனான சிவனுக்கு முன்னே, சீவனின் ஆறு ஆதாரங்களும் ஒன்று பட்டுச் சண்முகமாகத் தோன்றும்.  சண்முகமாகத் தோன்றும் அந்தச் சீவனில் கூத்தனாகச் சிவன் கலந்திருந்ததால், கந்தன் எனும் அந்த சீவன் சிவனுக்கு மகன் முறையாக ஆயினான் எனத் தெரிந்து கொள்வீர்.
 
1027: தேவர் ஆவார் :
பொருந்திய மூலாதாரக் குண்டமாக நான்கிதழ்ச் சக்கரத்தில் விளங்கும் ஒரு சுழுமுனைநாடி, இடைகலை, பிங்கலைநாடிகளின் இயல்பை விரியும்படி செய்யும்.   அவ்வாறு இரண்டும் பக்குவம் பெற்றுச் சுழுமுனை யில் விளங்கும் அக்கினிக்கலை விரைவாக எழுவதால், இத்தன்மையுடயோர் தேவர் ஆவார்.
 
1028: அருட்கண்களில் விளங்குவர் :
முன் செய்யுளில் சொன்ன வண்ணம் ஒளி உடல் பெற்றவர் தம் ஒளியுடலில் உலகம் எங்கும் உலவி வருவார். நிலையான ஒளி அமைந்து திகழ்வர். பிரணவத்தை அறிந்து அடைய முந்துபவர்க்கு
எல்லாம் நிலையான ஒளியை வழங்கும் அருட்கண் உடையவராக விளங்குவார்.அவர் தம் கண்களில் சத்தி நிற்பாள்.
 
1029: பிரணவ தேகம் பெற்றவர் இயல்பு :
ஒளிக்கு இருப்பிடமான அறுகோண பிரணவ குண்டம், முன் தான் லையாய் இருந்த ஆறு ஆதாரங்களிலும் முப்பத்தாறு தத்துவங்களையும் தன்னுள் இருத்திக் கொண்டதாகும்.  பிரணவம் உள்ளும் வெளியுமாய் உள்ளது.   ஆனதால் ஒளி உடல் பெற்றவர் வியோம ரூபினி, வியாபினி முதலிய கலைகளில் தொடர்பு
கொண்டு பூத உடலை எங்கும் எடுத்துப் போக முடியும்.  பிரணவ உடல் பெற்றவர் உடலுடனும், உடலை நீக்கித் தனித்தும் எங்கும் செல்ல முடியும்.
 
1030: பிரணவத்தின் வடிவம் :
எல்லையில்லாத பிரணவத்துக்கு எடுக்கும் பாதங்கள் மூன்று.  கூரிய முகங்கள் இரண்டு.  கண்கள் ஆறு.  கற்று எண்ணும் நாக்குகள் ஏழு.  கொம்புகள் நான்கு.
 
1031: இறைவனைப் போன்று ஆன்மாவும் அழிவற்றதாகும் :
எல்லை இல்லாத ஆன்மாவான பிரணவத்துக்கு இருப்பிடம் இல்லை.  அதை அளந்து வரையறை செய்வாரும் இலர்.  அதைத் தெரவிக்கும் சொல்லும் இல்லையாகும்.  ஆன்மாவைப் பத்து என்ற எண்ணின் வடிவான 'ய'கரமாக அறிவீர்.
 
1032: பார்வதி சிரசின் மேல் விளங்குவாள் :
இரு கண்களில் விளங்கும் 'அ'கர 'உ'கரங்களிப் புருவத்தின் நடுவில் ஒன்றாய் ஆக்கி, அங்கு எட்டான 'அ'கரமான சந்திரக் கலையைக் கொண்டு தொடங்கி, சுவாதிட்டான சக்கரமான ஆறு இதழ்களும் மூலாதாரச் சக்கரமான நான்கு இதழ்களும் மாற்றம் பெற, தேன் போல் இனிய சுவாதிட்டான சக்கரம் மலர, விந்து வெற்றி அடைந்து, உணர்வாகக் கலந்த ஆறு ஆதாரங்களும் ஒன்றுபட்டு மேல் நோக்கிய சத்தியான பார்வதியிடம் சேர்ந்து நின்றது.  இருபார்வைகளையும் புருவ நடுவில் இட்டு வழிபட்டால் மனம், நீர், நிலை ஒருமைப்பட்டு பார்வை நிலைக்கும்.  பார்வதி சிரசின் மேல் நிற்பாள்.
 
1033: சதாசிவமூர்த்தி பொருந்தும் முறை :
பார்வதியின் கணவனான சதாசிவமூர்த்திக்கு மூலாதாரச் சக்கரத்தில் உள்ள கலைகள் நான்கு.  பஞ்சப் பிராணனுக்கு அவரே தலைவர்.  ஐம்பூதங்களில் சிவமும் சத்தியாய் விளங்குவதில் பத்து முகங்களும் அவற்றில் ஒளி மயமாய் உள்ளதை அறியும் பத்துக் கண்களும், சுவாதிட்டானத்தில் விளங்கும் கால்களான
இடைகலை, பிங்கலை இரண்டு, ஒளிமயமான முடி ஒன்று, தொங்கும் இடைகலை பிங்கலைஆகியவை பூதங்களில் உண்டாக்கும் நாதம் பத்து ஆகத் தத்துவங்கள் இருபத்தைந்து.
 
1034: சிரசில் அக்கினியைக் கூட்டுவது முத்தியாகும் :
அன்னமயகோசம், பிராணமயகோசம், மனோமயகோசம், விஞ்ஞானமயகோசம்,ஆனந்தமயகோசம் என ஐந்தை உடையது ஆன்மா.  மற்றவரால் அளவிட்டுச் சொல்லக் கூடிய தத்துவங்கள் இருபத்தைந்தையும் கொண்டவை தூல உடல்.   பனிப்படலம் போன்று விளங்கும் சகஸ்ரதளம், குண்டம் விரிவடைந்து விளங்கும் போது, பஞ்சு பறப்பது போன்ற கதிர்களையுடைய ஒளி விரிந்த மேலான சுடரும்நாதமும் ஆன அக்கினியைக் கூடுவது முத்தி ஆகும்.
1035: சினம் நீங்கி இன்பம் பெறுவர் :
அநாதி மல முத்தரான சுடராய் விளங்கும் பரம்பொருள்,  கற்று அவற்றில் மயங்காது கடந்து நிற்பவரின் கருத்தில் எழுந்தருளும்.  பரந்துள்ள குண்டலினியான ஒளியின் துணையால் கடந்து போய், உலகப்பற்றை விட்டு அப்பொருளை அடைந்து (சிவமான பகையை/சினமான பகையை நீங்கி ) செற்றற்று அசையா திருந்தவர்கள் அந்தப் பொருளுடன் பிரியாது சேர்ந்திருப்பர்.
 
1036: சகஸ்ர தளத்தைச் சேர்ந்தவர் உலகத்தை விரும்பமாட்டார் :
பிரணவம் விளங்கும் சகஸ்ரதள குண்டத்தில் நிவிருத்தி முதலிய ஐந்து கலைகளும் பொருந்தும்.  திசைகளும் அதனிடம் பொருந்தும். சகஸ்ரதளமாகிய பிரணவ குண்டத்தில் பிரணவத்துடன் கலந்தவர், கீழ் நோக்குவதுடன் பாய்ந்து போகும் ஐம்பூதங்களையும் இயக்கும் மூலத்தீயை வெறுத்தவர் ஆவர்.
 
1037: உலகத்தை வாழ்விக்க வந்த பொருளை அடைய வேண்டும் :
பரந்த கடலால் சூழப்பட்ட ஏழு உலகங்களையும் நிலைபெறும்படி செய்த ஒப்பற்ற தலைவனைச் சிந்தித்துச் சேருங்கள். சித்திகளை எதிர்பார்த்துச் செய்த யாகம் முதலிய செயல்களைக் கைவிட்டுப்,  பலனை எதிர்பாராது இறைவனை அடைவதே நல்லது என்னும் ஞானம் கைவரப் பெற்றவர்கள் மெய்யான சிவத்துடன் பிரிவில்லாமல் இருந்தவர்கள் ஆவார்கள்.
 
1038: சிவனைச் சிரசின் மேல் தியானிக்க :
தாமரை மலரைப் போன்று மலர்ந்துள்ள சகஸ்ரதளத்தில் விளங்கும் இறைவனுக்குஇடைகலை பிங்கலை நாடிகளே இரு திருவடிகள். சுழுமுனையே மூக்கு. மலர்ந்து எழும் சிவந்த ஒளியே முகம்.    சந்திரன் சூரியனுடன் விளங்கும் அக்கினியே நெற்றிக்கண். சிரசின் மேல் இப்படி உணர்ந்தபடி இருப்பாயாக.
 
1039: சிவன் சகல வல்லமையும் தருவான் :
உத்தமனான சிவன் மூலாதாரத்தில் விளங்கும் போது ஒரு பாலன்; நடுத்தர வயதுஎன்ற  இளமைப்பருவம் பெறும்போது சகஸ்ரதளத்தில் ஈசான மூர்த்தியாய் இருப்பான்.   அப்போது தலையின் பின்பக்கத்தில் உள்ள சிறு மூளையின் ஆற்றல் உச்சிக் குழியை அடையும். ஆறு ஆதாரங்களையும் தாண்டிச் சென்ற அக்கினி ஆன்மாவைத் தளைக்குமாறு செய்யும்.   (குண்டலினி ஆறு ஆதாரங்களைக் கடந்தபோது தருணி எனவும் பெயர் பெறும்.)
 
1040: சுடரைச் செல்வம் போல் போற்ற வேண்டும் :
சித்திரணி நாடியின் வழியே போய் விளங்கிய பிரணவம் என்னும் குண்டம் மூலாதாரம் முதல் சகஸ்ரதளம் வரை ஒன்றாய் விளங்கும்.  முறையாய் ஏழு ஆதாரங்களிலும் விரிந்த ஒளியை சோம்பல் இல்லாமல் கண்டவர் மிக்க செல்வம் பெற்றவராய் ஆவார்.          (சகஸ்ரதளத்துடன் ஏழு ஆதாரங்கள். ஒவ்வொரு
ஆதாரமும் ஓர் உலகு என உரைக்கப்பட்டது.
 
1041: குருவானவர் அக்கினியை அன்புடன் பாதுகாப்பர் :                                                                           மிக்க செல்வமாய் வளர்கின்ற மூலாக்கினியைப் பயிலும் சாதனமாய்க் கொண்ட குருவானவர் எப்போதும் உபதேசம் செய்யும் ஆற்றல் பெறுவர்.  உலகை நடத்தும் அருட்செல்வராகத் திகழ்ந்து அந்தத் தீயை 
அன்புடன் விரும்பியிருப்பர்.
 
1042: சோதியைக் கண்டவர் என்றும் அழியாதவர் :
எல்லா இடங்களிலும் பரவிஎழுகின்ற சோதியான சிவனை அன்புடன் ஆராய்ந்து அறிபவர் எவருமிலர்.  அந்தப் பேரொளியை உடலான ஓம குண்டத்திலே காத்து மனத்தின் உள்ளே தியானம் செய்பவர் அறிவால் முதிர்ந்தவராய்க் கோடி யுகங்கள் கண்டவர் ஆவார்.
 
1043: தம் உடலில் ஒன்பது குண்டங்களைக் கண்டவர் இயல்பு :
யோனி குண்டத்தைக் கண்டு பாயும் கருவில் மனித வளர்ச்சிக்குள்ள உறுப்பு முழுவதும் அடங்கித் தோன்றுவது போல், பழமையான  ஒன்பது குண்டங்களையும் ஒரு சேர அகத்தில் கண்ட யோகி உலகம் முழுவதையும் தமக்குள்ளே ஒளி மயமாய் எழும்படி செய்வான். உலகைத் தமக்குள்ளே காண்பதே சிறந்த சாதனம் ஆகும்.
 
1044: ஒன்பது குண்டங்கள் :
நாற்கோணம், முக்கோணம், அர்த்தசந்திரன், வட்டம், அறு கோணம், பதுமம்,எண் கோணம், யோனி, நீள் வட்டம் ஆகியவை ஒன்பது குண்டங்களாகும்.
 
5. சத்தி பேதம்.
இறைவனுடன் வேறுபடாது பிரிப்பில்லாது விளங்கி ஐந்தொழில் செய்யும் சத்தியே அலைமகள், கலைமகள், மலைமகள் ஆக பேதப்பட்டு நிற்கிறாள்.
 
1045: எல்லாமாய்த் திரிபுரை விளங்குவாள் :
திரிபுரை, சுத்த மாயையாக, அசுத்த மாயையாக, விந்துவாக, வைகரி வாக்காக,ஓம் என்ற பிரணவமாக, உள் ஒளியாக, ஓர் ஆறு தொகுதியில் மந்திரமாகவும், சத்தியினது மூர்த்தியாகவும், அவற்றைக் கடந்தும் விளங்குவாள்.
 
1046: பல வடிவாய் விளங்குபவள் :
அத்திரிபுரை, அக்கினி, சூரியன், சந்திரன் என்ற மூன்று கண்டங்களாய் விளங்குபவள்;  பேரழகு வாய்ந்தவள்;  வான வடிவானவள்; உலகத்தைக் காக்கும் செவ்வொளியுள் உள்ளவள்; நாராயணி;
பல நிறங்களை உடையவள்; மகேசன் சத்தியாகிக் கரு நிறத்தில் திகழ்பவள்; நினைப்பவர் மனத்தில் உறைபவள்.    இப்படித் திரிபுரையே பல சத்திகளாகத் திகழ்பவள்.
 
1047: முப்பயன்களையும் அளிப்பவள் :
சத்தியே இயற்கையாய் அமைந்துள்ள முப்புரங்களில் தானே மலைமகள், அலைமகள், கலைமகள் ஆக மூன்று வடிவம் தாங்கியுள்ளாள்.  அவளே இந்த மூவரையும் அடக்கிக் கொண்ட சதாசிவ நாயகியாய் ஓர் உருவம் தாங்கியுள்ளாள்.  செம்மை வெண்மை நிறம் கொண்ட அவளே இன்பத்தையும், வீடு பேற்றையும்,
கல்வியையும் அளிப்பவள் ஆவாள்.
 
1048: அறிவை வழங்கி ஆட்கொள்வாள் :
அத்திரிபுரை பெருமாட்டி நாதத்தையும் நாதம் கடந்த நாதாந்த நிலையையும் அருள்வாள்.  பரவிந்துவாக இருந்து பெருகும் உலகம் முதலான அண்டங்களை அளிப்பாள்.  பரையும், பேரழகான அபிராமியும், சொல்லுக்கும் மனத்துக்கும் அப்பாற்பட்டு விளங்கும் அகோசரியும் ஆகிய அன்னை அன்புடன் தழுவுவாள். பின்னர் அறிவை வழங்குவாள்.
 
1049: இராசேசுவரியின் தோற்றம் :
அழகான காலணி சிலம்பு, சிவந்த பட்டுடை, கச்சணியும் கொங்கை, மலர் அம்பு,கரும்பு வில், எழுச்சியைத் தரும் அங்குச பாசம், அழகிய முடி, கரிய நீல நிறக் குண்டலம் என்பவை அத்தேவிக்கு உரியவையாம்.  இராசேசுவரியின் தியானத்தோற்றம் இது.  இராசேசுவரியின் தியானம் வசியத்துக்கு உரியது.
 
1050: சண்டிகை தோற்றம் :
சண்டிகை அம்மை குண்டலத்தைக் காதில் அணிந்தவள்.  கொல்லும் தன்மையுடைய வில் போல் வளைந்த புருவத்தை உடையவள்.  செந்நிறத் திருமேனி கொண்டு விளங்குபவள்.  தோளணி, கழுத்தணி, ஒளி விடும் முடி, சந்திரன் ஆகியவற்றை உடையவள்.  சாமுண்டி எனவும் உரைக்கப்படும் சண்டிகை உலகை நான்கு திசைகளிலும் காத்து நிற்பவள்.
 
1051: வித்தையில் விளங்கி அருளுபவள் :
உயிர்கள் உய்யும் பொருட்டு உயிர்களுடன் கலந்து நிற்கும் அம்மை திரிபுரையாவாள்.  தொன்மை யானவள்;  குறைவற்ற அழகு வாய்ந்தவள்; சீவர்களின் சிரசின் மேல் உள்ள சிகையில் விளங்குபவள்.   நன்றாக அறியும் கண்களை உடையவள்.  நான்கு திக்கு இடங்களில் உள்ளனவற்றைத் தன்பால் இழுக்கும் செயலை செய்பவள்.    அவளே தூய சகஸ்ரதளத்தாமரையில் விளங்கும் சுத்தவித்தியாதேவி ஆவாள்.
 
1052: இறைவியின் அருள் :
தூய்மையான கச்சினையும் மாலையையும் சூடிய மார்பை உடையவள்.  இன்ப ஊற்றாகும் இயல்பு உடையவள்.  பொருளாகக் கொண்டு சீவர்களை ஆட்கொள்ளும் பெரிய சத்தி.  பரபரை.  மனமான காட்டில் வாழ்பவள்.  தானே படைத்துக் கொண்ட வடிவம் உடைய ஞான வடிவி.  அவளே தானேயாக விளங்கும் சந்திரமண்டலம் ஆவாள்.
 
1053: அவளே வீடு பேறு அளிப்பவள் :
சந்திர மண்டலத்தில் விளங்கும் அச்சத்தியை ஒளி மண்டலத்தே வாழ்பவர்களான
தேவர்கள் உணராமல் இல்லை.    ஒளி மண்டலமான அத்தேவியை அறியாது செய்யக்கூடிய தவம் வேறு ஒன்று இல்லை.   சந்திரமண்டலத்தில் இருந்து தான் பிரமன், திருமால்,உருத்திரன்,மகேசுரன்,சதாசிவன் என்னும் ஐவரும் சீவர்களைத் தொழிற்படுத்துகின்றனர்.  ஆதலால் சந்திரமண்டலத் தலைவியான அவளை அறியாது வீடு புகும் நெறியை நான் அறியேன்.
 
1054: ஞானியர் கூற்று :
ஞானியர் பராசத்தி ஆனந்த வடிவுடையாள் என்பர்.  அவள் அறிவு வடிவினள் என்பர்.  நாம் செய்யும் செயல் அனைத்தும் அவளது விருப்பின் வழி நடப்பதுஎன்பர்.  சிவபெருமானும் அவளிடம் வீற்றிருப்பவனே என்பர்.  தூலத்திலும் சூக்குமத்திலும் விளங்கும் சகலமும் சத்தியின் ஆற்றலால் நிகழ்வனவேயாம்.
 
1055: சிவமும் சத்தியும் இணைந்தே செயற்படுகின்றனர் :
சிவம் எங்கு உள்ளானோ அங்கு இருப்பவள் தையலான சத்தி.  உடல் எங்கு உள்ளதோ அங்கு உயிர்க்கு உயிரான காவலாய் விளங்குபவள் சத்தி.  வான் எங்கு உள்ளதோ அவ்விடங்களில் எல்லாமும், அதற்கு அப்பாலான பரவெளியிலும்  தலைவியான தேவியே விளங்கி நின்றாள்.  இங்ஙனம் நிற்கும் குறிகளை
ஆராய்ந்து அறிக.
 
1056: யாவுமானாள் பரசத்தி :
பலவகையாலும் பராசத்தியே மேன்மை உடையவள்.  யாவற்றையும் தாங்கும் ஆதார சத்தியாய் அவளே நின்றாள்.  அவள் தன்மையை ஓர்க.  எல்லா ஊழிகளிலும் உயிர்களைக் காக்கும் ஆற்றல் பெற்றவளும் அவளே ஆவாள்.  புண்ணியத்தின் பயனைத் தருபவளும் அவளே ஆவாள்.
 
1057: இன்பத்தையும் ஞானத்தையும் அளிப்பாள் :
உயிர்களுக்கு இன்பத்தை ஊட்டுபவள்.   குண்டலினி சத்தியுடன் பொருந்திச் சீவர்களுக்குப் பரிபாகத்தைச் செய்து பராசத்தியாய் விளங்குவாள்.    அப்பெருமாட்டி அடியார்களுக்கு நாள்தோறும் ஒளியுடலை அளித்துப் பரிபாகம் உண்டாகும்படி செய்கின்ற கொழு கொம்பாகவும் திகழ்வாள்.
 
1058: மனத்திடை வைத்தேன் திரிபுரையை :
உயிர்களுக்குக் கொழுகொம்பாய் விளங்குபவளை, குவிந்த முலையை உடைய மங்கையை, தேன் சிந்தும் மலர்களை அணிந்த முடியை உடைய திரிபுரையை, வானோர் விரும்பும் விழுப் பொருளை, சிவந்த பவளம் போன்ற திருமேனியை உடையவளை நான் நம்பி எனது மனத்துள் விரும்பி வைத்துக் கொண்டேன்.
 
1059: வித்தைக்குத் தலைவியாவள் :
இவ்வுலகத்தில் உண்டு பண்ணி வைக்கப்பட்டு வைத்த பொருளும், அவற்றுடன் பொருந்திய உயிர்க் கூட்டமும், பத்துத் திசைகளிலும் நிறைந்து காக்கும் பத்து முகங்களையுடையவளும், நடப்பாற்றலான பரையும், வனப்பாற்றலான பராபரையும், அந்தக்கரணம் நான்கையும் செயற்படச் செய்பவளும் ஆகிய தேவி ‚வித்தைக்கும் தலைவி ஆவாள்.
 
1060: என் மனத்தகத்தாள் சத்தி :
சத்தி தூய வித்தைக்குத் தலைவி.  அகன்ற மார்புக்கு மேல் சூழ இருக்கும் சந்திரமண்டலத்தில் விளங்குபவள்.  அழியாத தவத்தைச் செய்யும் தூய நெறிகளை அருளியவள். தோகை மயில் போல விளங்குபவள். சகல கலைகளையும் வென்றுமேம்பட்ட இளமை குன்றாத கன்னி.  அத்தகைய சத்தி என் மனத்தகத்தே நிலையாய் முழுமையாய் நின்றாள்.
 
1061: வேற்றுமையற நின்றாள் :
இப்படி விளங்கும் பராசத்தி முழுக்கலையுடன் என் உள்ளத்தில் பொருந்தி, ஏழ் உலகத்தில் உள்ளவரும் தொழச், சகஸ்ரதளத்தில் சிவத்துடன் ஒன்றுபட்டு மனோன்மனியாம் மங்கலப் பொருளாய் நான் வேறு அவள் வேறு எனப் பிரித்து அறிய இயலாதபடி நின்றாள்.
 
1062: அவளை அடையும் வழியை அறியாதிருக்கின்றனர் சிலர் :
அங்ஙனம் ஒத்து அடங்கித் திகழும் சகஸ்ர தளத்தில் வீற்றிருக்கின்ற பராசத்தியும் பெருந்தலைவனான சிவபெருமானை மகிழ்ந்து சேரும் மனோன்மனியும், மங்கலமாய்த் திகழ்பவளுமான சிவசத்தியை உள்ளத்தில் நிறுத்தும் வழியைச் சிலர் தெளிவு பெற்று அறியாமல் விளங்குகின்றனர்.
 
1063: நினைவார்க்கு நன்னிலையை அளிப்பாள் :
சிவ ஒளியில் பொருந்தி - எல்லாவற்றையும் உணர்ந்து - உடனாய் நிற்கும் - இயல்பாகவே மணம் பொருந்திய மலரை அணிந்த கூந்தலை உடைய சத்தியுடன்தானுமாய்க் கூடி நின்று நினைப்பவர்க்கு அங்கே எழுந்தருளியிருக்கும் சத்தி நல்ல நிலையை அளித்திடுவாள்.
 
1064: என்னைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டாள் :
அருளால் எல்லாரிடத்தும் ஒத்து விளங்கும் பராசத்தி ஆனந்தமே வடிவாய் உள்ள அழகி.  ஓட்டுடன் பொருந்தியுள்ள புளியம்பழத்தைப் போல் உலகத்தோடு ஒட்டி விளங்கிய எனது இயல்பை மாற்றிப் பக்குவம் உண்டாக்கிப் பழம் வேறு ஓடு வேறாக ஆன பழுத்த புளியம்பழத்தைப் போல் உலகத்தை விட்டுப் பிரித்துச்  சிவகதியைக் காட்டினாள்.  தன் ஒளியில் என்னை ஒன்றாக்கிக் கொண்டாள்.
 
1065: காரிய நிகழ்வுக்குக் காரணமானவள் அவளே :
உலகினர் உண்டு என்றும் இல்லை என்றும் கூறிய சத்தியே சூக்குமப்பொருளைத் தூலப் பொருளாய்ச் செய்தாள்.  வளமை வாய்ந்த தில்லை அம்பலம் எனக்கூறப் பெறும் சகஸ்ரதளத்தில் சத்தியே நிலை பெற்று நின்றாள்.  ஆன்மாவின் பந்த, மோட்சங்களுக்குக் காரணம் அறிவு வடிவான சிவத்திடம் உள்ளது என்ப
தையும், அதைச் செயலுக்கு விடுவது சத்தி என்பதையும் இவ்வுலகத்தார் உணர்வதில்லை.  ஆன்மாக்களின் அக்கினி மண்டலம் சூரிய மண்டலம் சந்திர மண்டலம்என்ற மூன்றிலும் பராசத்தியே நிலை பெற்றுத் திகழ்ந்தாள்.
 
1066: பராசத்தியே ஒளி மயமாய் உள்ளாள் :
சத்தியானவள் சீவர்களின் உயிரும் உடலுமாய் நின்றனள். வாக்கு ரூபினியாகிய கலைமகள் உடலில் சுவாதிட்டானச் சக்கரத்தில் உணர்வாக விளங்குகிறாள். இவ்வுணர்வு மூலாதாரத்தை அனுசரித்த போது காமமாக விளங்கும். வாக்கு ரூபினியாகிய கலைமகள்  சந்திரமண்டலத்தை நோக்கி ஊர்த்துவ முகம் கொண்டு சென்று சிரசில் உணர்வாய் அமைந்தபோது சிவகதியில் உயிரைச் சேர்க்கும் சத்தியானாள். 
 
1067: சொல் தேவியைத் துதியுங்கள் :
சொல்வடிவில் விளங்குபவள் எம்இறைவி.  அவள் மூன்றுகண்களைப் பெற்றவள்.  படிகம் போன்ற தூய்மையான வெண்ணிறத்தாள்.     வெண்தாமரையான சகசிரதளத்தில் விரும்பி இருப்பவள்.  நாத மயமானவள்.     உங்களது சென்னியில் இப்பெருமாட்டியின் திருவடிகளைச் சூடிக் கொள்ளுங்கள்.  வாயினால் துதித்து வணங்குங்கள்.
 
1068: ஆதித் தலைவியாய்க் காணுங்கள் :
அப்பெருமாட்டியைத் துதித்து அவளது இரு திருவடிகளான சூரிய சந்திரர்களை ஒன்று சேர்த்து வணங்கி ஒலியும் ஒளியும் அமையும்படி இருப்பீர்.  உங்கள் உள்ளத்துத் தியானத்தில் அங்குசம்,பாசம்,கரும்பு என்ற இவற்றுடன் பொருந்திய மெல்லியலை ஆதித் தலைவியாகக் காணுங்கள்.
 
1069: மூன்று காலமும் விளங்கும் :
படைப்புப் பெருகுமாறு செய்த குளிர்ச்சி பொருந்திய நீர்ப்பகுதியில் பாற்கடலில் உள்ள திருமாலின் தங்கையான நாராயணியும் சகஸ்ரதளத் தாமரையில் வீற்றிருப்பவளும் ஆன இறைவியின் மந்திரத்தைச் சிவசத்தியாய் எண்ணிப் பல முறைதியானித்தால் சூக்குமமான உடல் ஒளிமயமாக விளங்கி இறந்தகாலம், நிகழ்காலம் எதிர்காலம் என்ற முக்காலமும் தோன்றும்.
 
1070: அருட்சத்தியாவாள் :
சத்தி, 'அ'கார முதல் 'உன்மனி' ஈறாக உள்ள பதினாறு கலைகளையும் உருவமாய்க் கொண்டவள்.  வேதம் முதலிய நூல்களில் பரமாகவும் அபரமாகவும் துதித்துப் புகழப்படுபவள்.  உயிர்களின் இருப்புக்கு ஆதாரமாக விளங்குபவள். நாதம் நாதாந்தத்தில் திகழும் சிவத்துக்கு இவளே அருட்சத்தியும் ஆவாள்.
 
1071: திரிபுரசுந்தரி மயக்கம் பொருந்திய சிந்தையை மாற்றி அருள்வாள் :
உண்மைப் பொருளைத் தனக்கே உரிமையாய்ப் பெற்ற,  அருள் வழங்கும் தன்மை கொண்ட சகல
புவனத்தலைவியான திரிபுரை, மயக்கம் பொருந்தும் பிரபஞ்சத்தைப் பற்றிய சீவர்களின் சித்தத்தை
மாற்றி அருளினாள்.  அவர்களை நிலையான பந்தமில்லாத உலகங்களில் பொருத்தினாள். அத்தகைய திரிபுரையின் திருவடியை நான் வணங்குவேன்.  மக்களே! இந்த உண்மையை அனுபவத்தில்
கண்ட நீங்கள் மற்றவர்க்கு எடுத்துக் கூற வருவீர்களாக!
 
1072: வராகக் கோலம் :
தேவியைச் சுற்றியுள்ள ஏழு மங்கையரில் ஒருத்தியான 'வராகி' என்பவள் 'பன்றி'முகத்துடன் கூடிய அடையாளத்தைப் பெற்றவள்.  அவள் வெற்றியை அளிக்கப் படையும், இழிவானவர் உடம்பை இடித்துத் துன்புறுத்தும் உலக்கையையும், உழுபடையான கலப்பையையும் கைகளிலே கொண்டவள், ஒளி மிக்க வெண்மையான நகைகளை உடையவள்.  அவள் குற்றம் இல்லாத, ஊன் உடலைக் கடந்து
தியானிப்பவர் மனத்தில் சிறந்து திகழ்வாள்.
 
1073: தேவி வழிபாடே ஐந்து மூர்த்திகளின் பிடிப்பை விட்டு விலக்க வல்லது :
"ஓம்" என்ற பிரணவ வடிவான தேவியே ஐந்தொழில் நிலைக்கு வரும்போது ஐந்தொழிலுக்கும் அவள் தலைவியாவாள்.  அவள் பச்சை நிறம் உடையவள்.  அவளே அகங்காரத் தத்துவத்துடன் பொருந்தி எழுச்சியுற்ற போது சதாசிவர், மகேசுரர், உருத்திரர், திருமால், பிரமன் என்பவர்களைத் தன் அம்சமாக
உண்டாக்கி விட்டாள்.  "‹ரீம்" என்ற மந்திர பீசத்தில் வீற்றிருப்பவள் அவளே ஆகும்.
 
1074: சிவகதியை அளிப்பவள் :
பராசத்தி தானே எல்லாவற்றுக்கும் தலைவி.  தானே வாக்கு வடிவமாக விளங்கும் நான்கு வேதங்கள், ஆறு அங்கங்கங்கள், மீமாம்சை, நியாயம், மிருதி, புராணம் ஆகப்  பதினான்கு வித்தைகளும் ஆவாள்.  தேவ உலகங்களையும், மன மண்டலத்தையும், நுண்ணறிவையும் கடந்த நாதாந்தமும் அவளே. பராசத்தியே சிவகதியை அளிப்பவளுமாய் உள்ளாள்.
 
6. வயிரவி மந்திரம் :
(வயிரவக் கடவுளின் சத்தி.  அவளை நிணைவு கூர்வது வயிரவ மந்திரம்.)
 
1075: "ஐம்" என்ற மேதாகலையை எழுப்பிச் செபிக்க வேண்டும்:
'ஐ' என்ற எழுத்தால் உணர்த்தப் பெறுபவள் ஆதி பயிரவி. அப்பயிரவி பீசத்தில் அகரமாகிய பிரணவத்தையும் மாயையான 'ம்' என்பதையும் சேர்த்து, "ஓம், ஐம்" என்று செபித்தால், தேவி வாக்குவடிவமான பதினான்குவித்தையை அளிப்பதுடன் வாக்கியப் பொருளான தன்னையும் உணர்த்துவள்.
 
1076: அந்தமும் ஆதியும் ஆவாள் :
பதினான்கு எழுத்தாக உள்ள வயிரவியே ஞானேந்திரிய அந்தக் கரணங்களான பதினான்கையும் சீவர்களுடன் பொருத்திப் படைத்துக் காத்துத் துடைத்தல் முதலாகச் செய்து சிந்தையான தாமரையில் எழும் பெரிய சத்தியும் ஆவாள்.  அவளே முடிவும் முதலுமாக விளங்குகின்றாள்.
 
1077: வயிரவியை வழிபடுபவர் அழியும் உடலை அடையார் :
வயிரவியை வழிபடுவதில் பிரமன், திருமால், உருத்திரன் ஆகிய மூவரும் அடங்குவர்.  ஆற்றல் பொருந்தச் செல்லும் திரிபுரையை வழிபட்டவர்  நல்வினையை உடையவர் ஆவார்.  அழிகின்ற இயல்புடைய ஐம்பூதத்தால் ஆன உடம்பைப் பொருந்திய அநாதியான ஆன்மாக்கள் அடையும் இடத்தை அவர் அடையார். 
 
1078: சிவம் ஆவார் :
சிவன், புண்ணியனும் நந்தியும் தூயவனுமானவன்.  நாதசத்திக்குத் தலைவன்.  அவன் விளங்கும் முடியின் மீது வானராசி மண்டலத்தைச் சந்திரன் சுற்றுவது வட்டம் ஆகும்.  இவ்வட்டத்தில் பகலவனும் சந்திரனும் சுற்றிவருவர்.  வட்டம் முழுமையானால் அங்கு விளங்குவது அக்கினிக் கலையாகும்.  அந்த அக்கினிக் கலையை அறிந்து தியானிப்பவர் நிறைவான சிந்தையராய்ச் சிவம் ஆவர்.
(சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய மூன்றும் நுட்பமாய் அமைந்துள்ள இடம் தலையில் வடகிழக்குப் பகுதி.  இங்கு விளங்கும் தீ ஆன்ம ஒளியாகும்.)
 
1079: திரிபுரை அருள் செய்வாள் :
அழகிய சிவபெருமான் திரு நந்தியான காவல் ஆவான்.  அவனொடும் கயிலை மலையில் அனைத்துலகும் காப்பாற்றும் பெண் யானையைப் போன்ற அம்மை வீற்றிருக்கின்றாள்.  திருவடிப் பேறு கருதித் திரு முறைகளை நாளும் இடையறாமல் ஓதுபவர்க்கு அந்தம் ஆக்கிய இறைவனுடன் - அண்ணலுடன் – உறைந்து திரிபுரை அருள் செய்வாள்.
 
1080: பயிரவி உயிர்களின் பக்குவம் அறிந்து ஞானம் தந்து ஆட்கொள்வாள் :   குருமண்டலத்தில் தியானித்திருக்கும் உண்மை நிலையை உணரும் பராசத்தி, நாத வழியில் நேர்மையாக உயிர்களுக்கு உபதேசம் செய்தருளுவாள். அவ்வாறுஉபதேசிக்கப்பட்டவருக்குச் சந்திர வட்டமான சோடச கலை பொருந்தும்;பேரொளி வடிவான வயிரவியின் சூலம் வந்து உடம்பில் திகழ்ந்து சோதியாய் மாற்றிடும்.
 
1081: சிவனுக்கு அங்கமாவாள் துர்க்கை :
துர்க்கைக்கு நான்கு கைகள்.    அவள் சூலத்தையும்,  கபாலமான மண்டை ஓட்டையும், நாகபாசத்தையும், அங்குசத்தையும் நான்கு கைகளில் தாங்கி விளங்குகின்றாள்.   திருமாலும் பிரமனும் அறியாத வடிவு உடைய சிவனுக்கு மேலான அங்கமாய் நின்ற மென்மையுடையவள் சூலினி துர்க்கை ஆவாள்.  இதற்குப்
பெயர் "அங்காங்கி பாவம்."
 
1082: வயிரவியின் கோலம் :
துர்க்கை மென்மையானவள்.  சீந்திற் கொடி போன்று மேல் நோக்கியும் கீழ் நோக்கியும் படரும் தன்மையுடையவள். கலைகளில் எல்லாம் விளங்கும் அறிவை ஒரு சேரப் பெற்றவள்.   சொல்லப்படும் முருக்கம்பூப் போன்ற சிவந்த நிறம் உடையவள்.  மணியின் ஒளி போன்ற ஒளியை உடையவள். பலவகை அணிகளால் ஆன உடையை உடுத்திய திருமேனியை உடையவள்.
 
1083: வயிரவியின் மற்ற இயல்புகள் :
சத்திக்குப் பலகலைகள் விளங்கும் சந்திரமண்டலம் பல மணிகளால் இழைக்கப்பட்ட திருமுடியாகும்.  அவள் சொல்லப்படும் வானத்தைக் காதாக உடையவள்.   தோழியாய் உள்ளவள்.    நல்ல ஒளியுடைய சூரியனையும் சந்திரனையும் விழிகளாய் உடையவள்.   பொன் போன்று ஒளிரும் ஒளியில் எங்கும் நிறைந்து விளங்குபவள்.
 
1084: சத்தியுடன் சூழ்ந்திருப்பவர்கள் :
தலையின் மீது விரிந்துள்ள எட்டு இதழ்த் தாமயைின் நடுவில் ஒப்பில்லாத தன்மையுடைய மனோன்மனி உள்ளாள்.   அப் பெருமாட்டியைச் சூழ்ந்து வாமை, சேட்டை, ரௌத்திரி, காளி, கலவிகாரணி, பலவிகாரணி, பலபிரதமனி, சர்வபூததமனி என்னும் எட்டுக் கன்னியர் உள்ளனர். ஒவ்வொரு சத்திக்கும் எட்டு எட்டுச்சத்திகள்.  அவர்கள் யாவரும் சத்தியைச் சூழ்ந்து தரிசித்து விளங்குகின்றனர்.
 
1085: பராசத்தி வணங்கத் தக்கவள் :
பராசத்தி, ஆராய்ந்து எடுக்கப்பட்ட ஒலியை எழுப்பும் சிலம்பு, வளை, சங்குஅணிகளையும் ஒளியுடன் கூடிப் பாவங்களை அழிக்கும் தன்மையுடைய சக்கரத்தையும் அணிந்தவள்.  எட்டுத் திக்குகளிலும் நிறைந்திருக்கின்றவள்.  எல்லாஅண்டங்களையும் திக்குகளையும் தாங்கி நிற்கும் திருவருட் செல்வி.  அவள் சிரசின் மேல் விளங்கும் சகஸ்ர தளத்தில் பூசிக்கத் தகுந்தவள்.
 
1086: வழிபடும் முறை :
வழிபாட்டுக்குரிய மணப் பொருள்களும், அழகிய மணமுள்ள மலர்களும், சிறந்த
புதிய ஆடைகளும், நெடுந்தொலைவுக்குக் கேட்கும் ஐந்து இசைக் கருவிகளின் முழக்கமும், சொல்வதற்கு அரிய தலையான திருவைந்தெழுத்தால் ஆன மந்திரமும் கூடிச் செய்யும் பூசையை ஏற்றருளுபவர் திரிபுரை ஆவாள்.
 
1087: பல தெய்வங்களும் தேவியே :
வெவ்வேறு அணிகளாய் விளங்கும் பொன் போலப், பார்க்கும் பலதெய்வங்களும் தேவியின் வெவ்வெறு பேதமாய் விளங்கும்.     பெருமையாய்ப் போற்றப்படும் பிரமனும், திருமாலும், உருத்திரனும் மற்றத் தெய்வங்களாய் விளங்குவது உலகத்துக்குக் காரணமான தேவியால் தான் என்று அறிவாயாக!  எனவே சத்தியை வழிபட்டால் எல்லா தெய்வங்களையும் வழிபட்டாற் போன்றதாகும்.
 
1088: தேவி கும்பகத்தில் விளங்குவாள் :
அனைத்து மந்திரங்களுக்கும் காரணமான சூட்சும ஓங்காரியைத் தியானிக்கும் சகஸ்ரதளத்தில், வாயுவை உட்கொள்ளாமல், உள்ள காற்றை வெளியேற்றுவதால் அமையும்  பூரண கும்பகத்தில்  விளங்கும் நாராயணி, குருவானவர் நடுவே இருந்து கூறிய வேத உபநிடத்தின் முடிவாகவும் உள்ளாள்.
 
1089: மந்திரம் உச்சரிக்கும் முறை :
ஒவ்வொரு விரலிலும் நான்கு பிரிவுகள்(இறைகள்)உள்ளன.
சிறுவிரல் = நிலம்; அணிவிரல் = நீர்; நடுவிரல் = அக்கினி; சுட்டுவிரல் = காற்று. பெருவிரல் = வானம்.
மந்திரத்தைக் கூறுபவர் நடுவிரல் கீழ் உள்ள இரண்டு பிரிவில் தொடங்கி சிறுவிரலின் பிரிவுகள் நான்கும் சுட்டுவிரலின் பிரிவுகள் நான்கும் ஆகியவற்றை வட்டமாய்ச் சுற்றி பத்து எண்ணும் போது அக்கினி,  பூமி தத்துவத்தை நோக்கிச் செல்வதால் "நமசிவாய" என்று அமையும். 
பின்பு நடுவிரல் கீழ் உள்ள இரண்டு பிரிவில் தொடங்கி சுட்டுவிரலின் பிரிவுகள் நான்கும் சிறுவிரலின் பிரிவுகள் நான்கும் ஆகியவற்றை வட்டமாய்ச் சுற்றி பத்து எண்ணும் போது அக்கினி, வாயு  தத்துவத்தை நோக்கிச் செல்வதால் "சிவாயநம"என்று அமையும். 
அக்கினியை வாயுவை நோக்கும்படி மேல் நோக்கியதாய் ஆக்கி செந்தமிழ் முறையில் தேவியை வணங்க வேண்டும்.
 
1090: குருமண்டலம் அமையும் :
கூறப்படும் நவசத்திகளுள் ஒன்றான மனோன்மனியை முடியின் மேலும் மற்றச் சத்திகளை வரிசையாய்ச் சிரசைச் சூழவும் பொருத்தும்படி எண்ணிப் பிரசாதகலைகளில் உடலில் விளங்கும் எட்டுக் கலைகளை முன்னே பேசிய நந்தி மற்ற எட்டும் நிரம்பியதாய் உயிரில் விளங்கும்படி ஒழுங்கு செய்தான்.  (சோடச கலைகள் பதினாறில் உடம்பைப் பற்றியவை எட்டு.  உயிரைபற்றியவை எட்டு.)
 
1091: ஒளி மண்டலத்தை உண்டாக்குவாள் :
சத்தி உடலில் குழல் போல் விளங்கும் சுழுமுனை நாடியில் விளங்குபவள்.  கருணைக் கண்ணை உடையவள்.  உயிரில் மயக்கத்தைச் செய்யும் இருளை முற்றிலும் அகற்றும் குண்டலினியாக இருக்கின்றாள்.  மூலாதாரத்தினின்று எழுகின்ற மூலக்கனலில் உண்டான மூல வாயுவுடன் சேர்ந்து
ஒளிமண்டலத்தை உருவாக்கி விட்டுத் திரும்புவாள்.  இத்தேவியை நீ கண்டு கொள்வாயாக!
 
1092: மூன்றிட மந்திரங்கள் :
(கிரியையால் உணர்த்தப்படும் ஆறு மந்திரங்களுல் இதயம், சிரசு, சிகை ஆகிய மூன்றுக்குரிய மந்திரங்கள் இங்குக் கூறப்பட்டன.)   கூறும் மந்திரப் பொருள் உணர்ந்து தலையின் மேல் வீற்றிருக்கும் சத்திக்கு
வணக்கம் செய்க.  மூங்கில் குழாய் போன்றுள்ள நடுநாடியின் வழியாய் உச்சியில் பொருந்தி நீ அளிக்கும் ஆகுதியை ஏற்பாள். உச்சியின் நடுவே விளங்குவது "சிகா"  என்ற மந்திரம் என்று அறிவாயாக!
 
1093: யோனி முதல் கபாலம் வரை திகழ்வாள் :
சிகையால் உணர்த்தப் பெற்ற சகஸ்ரதளத்தில் திகழும் ஒளியை எவ்விடத்தும் சூழ்வதாகக் கொண்டு, முன்னம் காமம் முதலிய எண்வகை இருள் பொருந்திய அங்கத்தை மாறும்படி பண்ணி, தொகையாய் நின்ற நேந்திரத்திரயமான யோனி முதல் கபாலம் வரை விளங்குவாள்.  இதை அறிக.
 
1094: விழிப்புடன் செய்ய வேண்டிய உச்சாடனம் :
மனம் ஒளியடையச் சிறுவிரலையும் அதை அடுத்துள்ள மோதிரவிரலையும் எதிர் வரிசையாய் மாற்றி மோதிரவிரல் பொருந்தும்படி கட்டிப் பிடித்துக் கண்களை அமுக்கி நெரிப்பதில் நீண்ட நடுவிரல் பொருத்தத்தில் பார்வையைச் செலுத்தினால் ஒளியுண்டாகும்.  அத்தகைய ஒளியில் புகுவதற்கு முயல்க.
 
1095: பிராணன் வசப்படுவதற்குரிய மந்திரம் "சிம்" :
பிராணன் வசப்படுவதற்குச் சொல்லப்பட்ட மந்திரமாவது, கூறுவதற்கு அரிய "ச" காரத்தை முன் நிறுத்தி அதனுடன் "இ" காரத்தைப் பிரித்துச்சேர்த்து மாத்திரையில் குறைந்த "ம" காரத்தையும் கூட்டிச் சொல்லுக.
"சிம்" என்று சொன்னால் பிராணன் வசப்படும்.
 
1096: நாதத்தின் நடுவே தேவி விளங்குவாள் :
இவ்வாறு செபித்த சீவன், பிராணன் மேல்எழச் சகரத்தால் குறிப்பிடும் சிவத்துடன் 'ய' ஆகிய ஆன்மாவும் உடன் உறையும். அங்குச் சுத்தமாயை விளங்கும் போது சங்கோசை தோன்றி விரிய அந்த ஓசை நடுவுள் திரிபுரை சிறந்து ஒளியுடன் விளங்குவாள்.
 
1097: வலிய அடியார்க்கு அருளுபவள் சத்தி :
வயிரவி நீலநிறம் உடையவள்.  இரவில் இயங்குபவள்.    இராசத  தாமத சாத்துவிகம்  என்ற மூன்று குணங்களும் அடங்கிய உள்ளத்துள் தானே வலியச் சென்று அருள் வழங்கும் தலைவி.     தேவ தேவனான சிவபெருமானின் ஏவலின் வழி நன்மையை அருளுபவள். அவளை விரும்பிப் புகழுங்கள்.
 
1098: தேவியே யாவுமாய் விளங்குவாள் :
சிவபெருமான் அருளிய மறை, இயங்குவன, நிற்பன ஆகிய உலகம், இவற்றுக்கு முதலாகிய ஐம்பூதங்கள், நான்கு திசைகள் ஆகிய எல்லாம் மூன்று கண்களை உடைய தேவியின் வடிவமே ஆகும்.  விரும்பும் இருளாயும், வெளியாயும், தோன்றுகின்ற ஆன்மாவாகவும் உள்ள ஒளிப்பிழம்பானவள்.  இவற்றுக்கெல்லாம் ஆற்றலை அளிப்பவளும் தேவியே ஆவாள்.
 
1099: உயிரும் உடம்பும் சிவத்தன்மை அடையும் :
குண்டலினி சுருண்டு கிடக்கும் மூலாதாரத்தைப் பொருந்தி, அவளைச் சகஸ்ரதளத்துக்குக் கொண்டு வந்து,  ஞான சாத்திரங்களில் சொன்னவற்றை அனுபவமாய்ப் பெற்றால், உடம்பும் உயிரும் சிவத்தன்மை அடையும். சொல்லால் சொல்ல இயலாத அழகுடைய உடம்பு கிடைக்கும். அறியாமையுடைய உலகத்தில் பிறவிகள் உண்டாகா.
 
1100: இன்பம் ஊட்டிச் சிவத்தை விளங்கச் செய்வாள் :
தேவி அழகான முடிமேல் விளங்குபவள்.  விளங்கும் புருவத்தை உடையவள்.  கருங்குவளை கண் போன்ற கண்களைக் கொண்டவள்.  கண்களில் மகிழ்ச்சிக் கண்ணீர் ததும்பும்படி ஒளியையுடையவளாய் விளங்கும் ஆனந்த சுந்தரி.  தேவியே மனம் அற்ற சூழ்நிலையை சீவனுக்கு இன்பமாக அமைத்துத் தந்து மனமற்ற இடத்தில் விளங்கும் சிவத்தை சீவனுக்கு வெளிப்படுத்தி விளங்குமாறு செய்தாள்.
 
1101: சத்தி ஆட்கொள்ளும் முறை :
சிவத்தை வெளிப்படச் செய்து - அதனால் உண்டாகும் பயனையும் உணர்த்தித் - தெளிவை அளித்து - என் மனத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்திக் - கதிர்களுடன் விளங்குகின்ற பேரொளிப் பெருமானை ஒளி மிகச் செய்து - எளியேனை ஆட்கொண்டாள்.
 
1102: சகல உயிர்களையும் தாங்குவாள் :
சந்திரமண்டலத்தில் சிரசின் உச்சியின் மீது விளங்கும் திரிபுரசுந்தரியே பல கோடி சீவர்களிடம் பொருந்திப் பல கோடி உயிர்களையும் தாங்கியபடியுள்ளாள்.  பதினாறு கலைகளையும் தன்னிடம் வரிசைப்படப் பொருந்தக் கொண்டுள்ளாள்.  வானத்தில் விரிந்து விளங்கும் சூரியன் சந்திரன் அக்கினி என்ற மூன்று பொருள்களையும் படைத்துத் தாங்குபவள் அவளே.
 
1103: பிறவி உங்களைச் சாராது !
தையல் நாயகி, சகஸ்ரதளத்தில் துறவியர்க்கு அருளும் தலைவி. அருள் பார்வையால் உலகத்தின் மயக்கத்தை அகற்றும் மனோன்மனி.  அந்த இறைவியை மெதுவாக நின்று தோத்திரம் செய்து பணியுங்கள்.  பணிந்த பின்பு கொடிய பிறவிப் பிணி உங்களை அடையாது.
 
1104: என் உள்ளத்திருந்தாள் :
சத்தி, மூங்கிலைப் போன்ற தோள்களை உடையவள்.தோளுக்கு மேல் விளங்கும்
சந்திர மண்டலத்தில் விளங்குபவள். பொருந்திய குழலைப் போன்ற சித்ரணி நாடியில் விளங்குபவள். இளம்பிறை என்ற காமக்கலையைத் தாங்கித் திகழ்பவள்.  தூய கதிர்களைச் சடை முடி போல் தந்த சூலினி.   என் உள்ளத்தை இடமாகக் கொண்டு வீற்றிருப்பாள்.
 
1105: உலகச் சார்பைக் கெடுத்துச் சிவச்சார்பு உண்டாக்கினாள் :
இன்பம் விளங்கும் மூலாதாரத்தில் வீற்றிருக்கும் வாலைப் பெண். தனக்கு ஒப்பில்லாத தலைவி.  தன்னை இயக்குபவர் ஒருவர் இல்லாதவள். என் மலச்சார்புகளை அகற்றி அவற்றினின்று வேறுபடுத்தித் தனியன் ஆக்கினாள்.  என் மனம் தனது அடியில் நன்றாகப் படும் (பாடும்?) வண்ணம் செய்து என்னை விரும்பி நின்றாள்.
 
1106: நாதத்தை உண்டாக்கினாள் வாலை :
இடைகலை, பிங்கலை, சுழுமுனை என்னும் மூன்றுள் நடுவில் உள்ள நாளம் போன்ற சித்ரணி நாடியில் பொருந்திய வாலையான சத்தி பல சத்திகளைக் கொண்டு விளங்குபவள்.  அப்பெருமாட்டியின் காலணியுடன் கூடிய திருவடி அசைவினால் உண்டாகும் ஒலியுடன் உள்ளத்தில் பொருந்தி அமைதியுடன் உள்ளாள்.   கூட்டத்துடன் கீழே உள்ள கன்னி சிரசில் போய் நாதத்தை உண்டாக்கி இன்பம் அடையச் செய்தாள்.
 
1107: என்னிடம் மனோன்மனி செய்தது :
நான் அவளுடன் உறங்கும் அளவில் மனோன்மனி எழுந்து வந்து ஒலிக்கும் வளையலை அணிந்த கையால் என் கழுத்தை நன்றாகத் தழுவினாள்.  அவளது சத்தியை என் வாயிலில் இட்டாள். "ஐயா,உறங்கவேண்டா" என்று இறைவனைச் சேர்வதற்குரிய உபாயத்தைச் செய்தருளினாள்.
 
1108: மனோன்மனி அபயம் அளித்தாள் :
எனக்கு இத்தகைய உபாயத்தை அளித்த மனோன்மனி என் உள்ளத்தில் உண்டாகும் காமம் முதலிய பகைவர்களால் ஏற்படும் கேடுகளை நீக்கினாள்.  இறைவனிடம் நீங்காத அன்பு ஏற்படும்படி செய்தாள்.  நாயைப் போன்று அலையும் மனத்தை விலக்கினாள்.  சுழுமுனை நடுவில் ஆசையை அடக்கி வைத்து "
அஞ்சாதே!" என்று எனக்கு அபயம் கொடுத்தாள்.
 
1109: அடைக்கலம் அடைந்தார்க்கு இன்பம் அளிப்பாள் :
அம் என்னும் பிரணவத் தொனியை எழச்செய்பவள். அரிய தவத்தால் அடையத்தக்கவள்.  செம்மையான சொல்லைச் சொல்பவள்.     சிறந்த சிவந்த ஒளியில் விளங்குபவள்.  அவளே அடைக்கலம் என்று திருவடிகளை வழிபட்டவர்க்கு அஞ்சாதே என்னும் பிரணவ நாதத்தை அளிக்கும் இறைவி. 
இங்ஙனம் அம்மனோன்மனியை உரைப்பர்.
 
1110: நாராயணி உயிர்களிடம் பொருந்தி விளங்குவாள் !
அவள் நல்வினை ஆற்றியவர்களால் ஆராயப் பெறும் பெண் பிள்ளை. ஐந்தொழிலுக்கும் காரணமானவள்.  நாராயணனின் தங்கை. கரிய நிறம் உடையவள்.  கரிய இருளில் விளங்கும் போது அஞ்ஞானமயமான உயிர்களிடம்  கோரமாய் விளங்குபவள். உடல் உயிர் உலகு என்பனவற்றை ஒடுக்கும் கோரமானவள்.   அத்தகையவளே ஞானமயமாய் உள்ள உயிர்களிடம் அன்புடையவளாய் இன்பத்துடன் விளங்குவாள்.
என் உள்ளத்தில் மகிழ்ச்சியுடன் வீற்றிருந்தாள்.
 
1111:உள்ளத்தில் பொருந்தித் தலையில் விளங்குவாள் :
சந்திர கலைகளைத் தன் தலையில் உடைய அப்பெருமாட்டி நாதத்தை வெளிப்படுத்துவாள். என் மனத்தில் விளங்கியிருந்தும் நீண்ட நாள் பொருந்தியிருந்தும், உச்சியிலே உலாவி உணர்ந்தும் கலந்தும் விளங்குவாள்.
 
1112: சந்திர மண்டலத்துக்கு மேல்விளங்கும் சத்தி :
மார்புக்கு மேல் நெற்றி நடுவிலிருந்து தலை முடியளவும் அதற்கு மேலும் சந்திர மண்டலம் உள்ளது.  அந்த மதி மண்டலத்தில் மங்கை தழுவியபடி இருப்பாள்.  மேருமலையின் உச்சியில் சிவத்துடன் கூடி அசைந்தாடிக் கொண்டு படர்கின்ற கொடி போல் அங்கு இருந்தாள்.
 
1113: சிவத்துடன் ஒன்றி இருப்பாள் :
சத்தி என் மனத்தில் இழை போன்ற வடிவினளாய் விளங்கினாள்.  ஆதி சத்தி ஒருத்தியே உலகைச் செலுத்தும் போது குண்டலினியாகவும், செயலுறுதியான போது சிவத்துடன் ஒன்றியும் இருப்பாள்.   உள்நாக்குப் பகுதிக்கு மேல் நான்கு விரல் அளவு பாதையில் புகுந்தால் - திருந்திய அறிவான சிவத்துடன் ஆதி சத்தி ஒன்றாய் கூடி விளங்குவதைக் காணலாம்.
 
1114: தேவி பிரிவின்றி விளங்குவாள் :
அவளுக்கு முற்பட்டது இல்லை.  அவளுக்கு ஒரு காரணமும் இல்லை. ஆனால் அவள் எல்லாவற்றுக்கும் காரணமாவாள்.  அவள் சோதியாகவும், சோதியற்றும் உள்ளாள்.  சுகம் பொருந்திய மேலான அழகுடையவள்.  இன்பத்தை அளிக்கும் மாது அவள். சமாதியை அளிப்பவளும் அவளே.  மனோன்மனி அவளே.  மங்கலத்தை அளிப்பவளும் அவளே.அத்தகைய தேவி இதை எனக்கு அறிவித்து என் மனத்தில் பிரிவின்றி உள்ளாள்.
 
1115: மூன்று கால ஞானமும் உண்டாகும் :
பராசத்தி என் மனத்துள் பிரிவின்றி இருந்தாள்.  என்னை விரும்பியிருந்தாள். அங்குச் சிவ வடிவான தேவிக்கு வணக்கத்தைச் செலுத்தினேன்.  பிரமன் படைப்பை ஆராய்ந்து உணரும் வல்லமையை அளிக்கும் நிலை அதுவேயாம்.  பற்றுகளை நீக்கியருளினாள்.  அதனுடன் நூல் வாயிலாகப் பெற்ற அறிவால் கூறும் பிதற்றல்கள் யாவற்றையும் அவள் போக்கினாள்.
 
1116: நுண்ணறிவில் நோக்குவார்க்கு விளங்குபவள் :
ஏழை மனிதர் உண்மையை அறிந்து கொள்ளாமல் வாதம் செய்து காலத்தை வீணாக்கிக் கெடுகின்றனர். அவள் முயற்சியால் வீடுபேற்றைத் தரும் முழு முதல் தலைவி.    மீன் போன்ற இமையாத நாட்டம் மூன்றை உடையவள்.  அவள் ஒலியை உண்டாக்கும் செவ்வொளி.  அருள் வழிகின்ற திருமுகம் உடையவள். நம் மனத்துள் விளங்குபவள்.
 
1117: படைத்தலில் கருத்தூன்றிய கன்னி :
மூலாதாரத்தில் விளங்காத நிலையில் இருந்த ஒளியே உள்ளம், இதயம், நெஞ்சம் என்னும் மூன்றனுள் - அண்ணாக்குப் பகுதி தொடங்கிப் பிரமரந்திரம் செல்லும் நான்குவிரல் அளவு சிறிய வழியில் நாதத்துடன் ஒளியாக விளங்கியது. இருந்தும் எல்லாம் அளிக்கவல்ல அறிவான சிவத்தின் கருத்தின்படி தொழில் ஆற்றும் சுத்தமாயையாகிய சத்தி மூலாதாரத்தில் அடங்கிய ஒளியாய் இருந்து படைத்தலில்
கருத்து ஊன்றிய கன்னியாக விளங்குகிறாள்.
 
1118: சத்தியே படைப்புக்குக் காரணம் :
சத்தி மூலாதாரத்தில் சிவத்துடன் சேராது கன்னித் தன்மை கெடாதவள். காதலியாய்ச் சிவத்துடன் பொருந்தி பிரமன், திருமால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன் ஆகிய ஐந்து மக்களைப் பெற்றாள். 
தூய சொல்லாகிய நாத வடிவுடையவள். மறைகளால் புகழ்ந்து பேசப்படும் சிவனும் அங்கே உள்ளான்.  இத்தகைய மாயையானது இருளாகவும் விளங்கியது!  என்னே வியப்பு!
 
1119: சிவம் அருள் செய்யும் :
சத்தி இருள் மயமாய் இருப்பது. அஞ்ஞானத்துடன் கூடிய இருளில் செலுத்துவது.  ஞான வெளியில் விளங்குவது சிவம்.  சிவத்துடன் கலந்திருக்கும் சிவ போகத்தில் விளையும் இன்பமே  புண்ணியர்க்குப் பொருளாவது.  இவ்வாறு தெளிந்த சிந்தையுடன் நாதத்தை வணங்கினால் சிவம் நாதத்தை இடமாய்க் கொண்டு அருள் செய்யும். 
 
1120: மனத்தில் விரிந்து நிற்பாள் சத்தி :
பராசத்தி ஆதியாயும் அனாதியாயும் விளங்குபவள்.  பாதித் திருமேனியைக் கொண்டவள் அவள். எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாக இருக்கின்ற நாதசத்தி.   பெருமையுடைய இவள் அனைத்தையும் தன்னிடம் நிலைக்கச் செய்பவள்.  மனொன்மனி, நித்திய மங்கலி.  அவளை நினைக்கும் என் மனத்தில் நிறைந்து  
விரிந்து விளங்குவாள்.
 
1121: சத்தியே பல பேதமாய் நிற்பவள் :
கூறப்பட்ட முறையில் உயர்வான கலையான  பிரணவமே நாம் என்று அறியாதுமக்கள் உள்ளனர்.  சத்தியே சாதியும் அவற்றால் விளையும் பேதமும் தத்துவங்களுமாய் நிற்பவள் என்று ஆன்மத் தலைவி எனக்குக் கூறிவாள்.
 
1122: என் வினைகளைப் போக்குவாள் :
உயிர்களின் தலைவி நல்ல முறையில் உயிர்களைப் பக்குவம் செய்து வீணாத் தண்டில் விளங்கும் வாகீசுவரி ஆஆள்.  நன்மைகளை அளிப்பவள் என்று அவளைத் தேவர்கள் புகழ்ந்து பேசும் தலைவி.  சிவத்துக்குரிய சிவமங்கை.  விரும்பி வழிபாடு செய்யப்படும் என் வினைகளைப் போக்குபவள் ஆவாள்.
 
1123: வினைகடித்தார் உள்ளத்தவள் ஆவாள் :
வினைப்பயனைக் கெடுத்தவரது உள்ளத்தில் ஒளியாக எழுந்தருளியிருந்து தன்னை அடைக்கலமாய் அடைந்தவர்க்கு உண்மைப் பொருளாக விளங்குபவள்.  என்னை வழிவழியாக அடிமையாக்கிக் கொண்டவள்.  ஈசனும் அவளுக்கு கணவனுமான சிவத்தைப் பார்ர்க்கும் போது அநாதி ஆவாள்.
 
1124: சத்தியே சிவபெருமானுக்கு வடிவாகும் :
தேவி தனக்குமுதலாயும் பழமையாயும் ஒரு காரணமும் இல்லாதவளாயும் எல்லாவற்றுக்கும் காரணமாயும் விளங்குபவள்.வாக்குக் கடவுளாய் விளங்கி வேதியர்க்கு ஆராய்ச்சியைத் தந்தாள்.    நிலைத்து நின்ற பேரொளியாய்ப் பரஞ்சுடராகிய சிவத்துக்கு வடிவமாய் நிற்பவள்.  பாதி மேனி உடையவள்.  பன்னிரண்டு இராசிகளை உடைய சூரியன் போல் ஒளியுடையவள் ஆதி சத்தி.
 
7. பூரண சத்தி.  (முழுமையுடைய சத்தி) :
 
1125: ஆராய்ச்சியின் முடிவு சிவம் :
உலகங்களின் முடிவையும் அனைத்தும் முடியும் இடத்தையும் ஆராய்ந்து அறிந்தேன்.   எல்லா உலகங்களும் ஆதிப்பெருமானான சிவத்திடம் இலயம் அடைகின்றன என்பதை உணர்ந்தேன்.  ஆணாகவும் பெண்ணாகவும் உள்ள பால் உணர்ச்சி முடியும் இடத்தையும் அறிந்தேன்.  சிவசத்தி எந்தெந்த உலகத்தில் எவ்விதம் தொழிற்படுகிறது என்பதையும் ஆராய்ந்து அறிந்தேன்.
 
1126: ஆன்மாவை இலயமடையச் செய்வது ஆதிசத்தியே :
குண்டலினி சத்தி பராசத்தியுடன் கூடிய போது உடல் நினைவின்றி மூச்சின் இயக்கமும் இல்லாது கும்பகம் அமைந்திடும்.  ஆதிசத்தியின் அருளால், உலகத்துக்குக் கொண்டு வந்த முறைப்படியே இலயம் அமைந்திடும். ஆன்மா உருவத்தை விட்டபோது ஈசனான மகேசுரர் ஆட்சி அதனிடம் நிகழ்வதில்லை.   இதை மக்கள் அறியவில்லை.   அவள் புண்ணியரின் திருக்கூட்டங்களைத் தன்னருளில் நிலைக்கச் செய்யும் கன்னி. 
 
1127: அன்பே வடிவாய் அமர்ந்திருப்பர் :
குண்டலினி சத்தி சிரசைக் கடந்து நிராதனக் கலைக்குச் செல்லின் மதம் உடைய ஐந்து ஆண் யானை களாகிய புலன்களும், அவற்றைச் செலுத்தும் மனமும், உலகஇயல்புடன் கூடிய நவமணிகளால் ஆன திருமுடியையுடைய திருமாலும், பெண்ணுடன் கொள்ளும் புணர்ச்சியில் விருப்புற்று விளங்கிய பிரம்ம சத்தியான வாகீசுவரியும் அன்பால் பொருந்தும் கலவியுள்பட்டு வேறுபாட்டை விட்டனர்.
சீவர்களுக்கு கீழ்முகமாய் இருந்து காமச்செயலில் விருப்பத்தை ஏற்படுத்தி நடத்திய குண்டலினியே - சிவக்காதல் கொண்டவர்க்குக் கீழ் நிலையிலிருந்து மேல் முகம் கொண்டு உயர்ந்து போய் எண்ணியதும் இன்பத்தை அளிப்பவள் ஆவாள்.
 
1128: உயிர்களின் விருப்புக்கேற்றபடி உடன் இருந்து உதவுவாள் சத்தி :
எம் தந்தையான சிவன் துன்ப மயமான சுக்கில சுரோணிதச் சேர்க்கையில் விருப்பம் கொள்ள, இன்பக் கலவியில் செலுத்தி அங்கே எழும் ஆனந்தத்தில் நுழைவதற்கு - முதுகந்தண்டின் கீழ் பகுதியில் விளங்கும் "என்பில் பராசத்தி" நாதமயமான சிவத்துக்குத் துணையாய் உள்ளாள்.
 
1129: அம்மை அப்பன் சிவசத்தியே :
உடல்உறவினால் வந்த தாயும்தந்தையும் உற்பத்திக்குக் காரணம் ஆக மாட்டார்.   மாயையைத் தொழிற்படுத்திய சுத்த வித்தியாதேவியும், சிவனுமே தோற்றத்துக்குக் முதற்காரணம். இந்த அம்மை என்றும் நிலை பெற்று உன்னைப் பொருந்தி நாதத்தைத் தந்தருளுவாள். அவள் விளங்கும் ஒளி மண்டலமே நந்தி என்ற பெயரை உடையது.
 
1130 : சத்தியின் ஆணையால் ஞானம் பெற்று நீண்ட காலம் வாழலாம் :
மாலை போல விளங்குவன ஆதாரங்கள்.அவற்றுள் ஒன்றான சுவாதிட்டானத்தில் வீற்றிருக்கும் - பிரமன் படைப்பாகிய உலகில் மக்கள் வாழும் ஆண்டுகள் நூறுஆகும்.  சுவாதிட்டானத்தில் படைப்புக்குத் துணையான கலைமகளே பின்பு ஞானவாணியாக, பரவக்கு வடிவான வாக்கீசுவரியாய் ஞானத்தை அளித்தாள்.  படைப்பை நீத்து மேலே வரச்செய்தது நடுவுள் வீற்றிருக்கின்ற பராசத்தியே.
 
1131 : இறைவனது ஆசனம் ஆவார் :
ஐயத்தை உடைய மனத்தை அடக்கி நாதத்தில் நுட்பமாக விளங்கும் பரத்தை அறிந்த பின்பு, உண்மையாய் இறைவனிடம் நம்பிக்கை கொண்டு கவலை நீங்கி ஒளி மண்டலத்தில் நிலை பெற்றவர், இறைவன் அகலாமல் விளங்க ஆசனம் ஆவார். 
 
1132 : சத்தி மதி மண்டலத்தை அமைத்து இன்பம் அளிப்பாள் :
அருளின் மிகுதியால் தானே மூலாதாரத்திலிருந்து எழுந்த தத்துவ நாயகி, வான மண்டலத்தில் புலப்படும்படி விளங்கி, மதி மண்டலத்தை ஒளி பெறும்படி அமைத்தாள்.  செந்தேனைப் போன்று இடைவிடாத விருப்பத்தால் எழும் ஒளியில் வான்அணுக்கள் அசைந்து கொண்டிருக்கும் இடமான பொன்னம்பலத்தில் பராசத்தி நடனம் ஆடிக் கொண்டிருக்கிறாள். இதனை அறிவீராக.
 
1133 : விரும்பிய யாவும் பெறலாம் :
அருட்சத்தியைச் சேர்ந்தால், தன்மாத்திரைகளை அறியும் ஞானேந்திரியம் ஐந்தும் ஐம்பொறிளும் இல்லாது - அறியும்  நீங்காத அறிவைப் பெறுவர்.  அங்ஙனம் அருட்சத்தியை விடாமல் பற்றி நிற்பவரிடம் அவளும் பொருந்தி அவரது விருப்பத்தை நிறைவு படுத்துவாள். 
 
1134 : நாதசத்தியைப் பொருந்தியிருப்பின் இளைஞர் ஆகலாம் :
இரவும் பகலும் இல்லாத இடத்தில் அதாவது சூரியன் சந்திரன் ஆகியவர் இயங்காத இடத்தில் அதாவது நாத விந்து இல்லாத இடத்தில், மகிழ்ச்சியைத் தருகின்ற பருவ வேறுபாடற்ற தேவியான நாத சத்தியுடன் பொருந்தியிருந்தால் என்றும் இளமையுடன் இருக்கலாம்.
 
1135 : பராசத்தி விளங்கும் இடம் :
வாலையாகிய பராசத்தியுடன் அணுகுவதற்கு உரியதாகாத விந்து நாதங்களைக் கடந்தால் - முத்தி  அடைவதான வீடு பேற்றுக்கு மூலமான பராசத்தியைக் காணலாம்.
 
1136: முத்தி நிலை :
நாதாந்தத்தில் நிலை பெற்றிருந்த பராசத்தி சிவத்துடன் ஒன்றிய போது அவளே சீவர்களுடன் பொருந்திய இச்சையாகவும் - விருப்பமாகவும் - ஞானமாகவும் விளங்குவாள்.  முன் கீழ் நோக்குடன் கூடியிருந்த கிரியா சத்தி நல்லவற்றை நாதாந்தத்தில் உணர்த்த அங்கு நின்ற போது, இச்சை, ஞானம், கிரியை என்ற
மூன்றும் ஒன்றிய சித்தமானது சிவமானால் மூவகைச் சத்தியும் பராசத்தியுள் அடங்கும்.  பரன் பரையை விட்டு அகலாதவன்.  பரமானது அவர்களுடன் எப்போதும் இருப்பது.  இது தான் முத்தி நிலையாகும்.
 
1137 : சிவமும் சத்தியும் மலரும் மணமும் போன்றவை :
நறுமணமும் மலரும் போல் சத்தியும் சிவனும் ஒன்றாக ஆன்மாவிலும் மற்ற தத்துவங்களிலும் ஒத்துப் பொருந்தியதை உலகத்தவர் உணரார்.    அவ்வாறு சத்தியும் சிவமும் சமமான நிலயில் கலந்துள்ள போது - சத்தியுடன் ஒத்துள்ள சிந்தையை என்னிடம் வைத்து இறைவனும் விளங்கினான்.
 
1138 : எல்லாமாக விளங்குபவள் சத்தி :
சிந்தைக்குள் உலவும் சத்தி விந்து நாதங்களாக விரிவு அடைந்தாள். அந்தச் சத்தி சந்திர மண்டலத்துக்கு உரியவள்.  ஆறு ஆதாரங்களையும் கொண்டு விளங்குபவள்.  சத்துவ குணம் உடையவள்.  'அ'கரம் முதல் 'க்ஷ'கரம் இறுதியாக உள்ள ஐம்பத்தோர் எழுத்துக்களிலும் உறைபவள் ஆவாள்.
 
1139: ஒளியைக் காண்பவரின் உள்ளத்தில் சத்தி இருப்பாள் :
சந்திர மண்டலத்தில் சிறந்து விளங்கும் சத்தி - தன் வேகத்தைக் காட்டாமல் அமுதம் சுரக்கும் கொங்கைகளுக்குக் கீழே விளங்கினாள்.  இத்தகைய இரண்டு நிலைகளை அறிபவர் எவரும் இல்லை.  மனத்தெளிவு பெற்றுப் புருவ நடுவில் விளங்கும் தீப ஒளியை உள்ளே காண்பவரிடம் அப்பெருமாட்டி அன்னவரின் சிந்தையில் ஊற்றைப் போல் விளங்கினாள்.
 
1140 : விந்து மண்டலத்தில் விளங்குபவர் அடயோகப் பயிற்சியாளர் :
என்னை அடிமையாக ஏற்றுக் கொண்டவன் தீ வடிவினனான உருத்திரன்.  மூலாதாரத்தில் விளங்கும் உருத்திர சோதி, விந்து மண்டலத்தில் ஏறிச் சிறப்புற வீற்றிருப்பவள்.இவ்வுண்மையை உணர்ந்தவர் அடயோக பயிற்சியாளர் ஆவார்.
 
1141: நாத சத்தியே சகஸ்ரதளத்தில் உறையும் சத்தி :
சத்தி யாவற்றினும் மேலாக உறையும் இடமாறு இதழ்களையுடைய சுவாதிட்டான சக்கரம்.  பூமி தத்துவத்தில் விளங்கிய இந்த நாத சத்தியே - பூமி தத்துவத்துக்கு மேல் உள்ள இருநூற்றுப் பதினெட்டு உலகங்களையும் தாண்டி  புண்ணியத்தால்சகஸ்ர தளத்தில்  வந்தனள். 
(ஒரு மலரில் இதழ்கள் வேறு வேறாய் இருப்பது போல், மனிதனைச் சுற்றியுள்ள அண்டாகாயம் அல்லது பிரணவத்தில் 224 உலகங்கள் உள்ளன.  பூமியாக விளங்குவது 6 இதழ்கள் கொண்ட சுவாதிட்டானம்.  இதற்கு மேல் 218 இதழ்கள் (உலகங்கள்) உள்ளன.  இவை அனைத்துக்கும் மேலாக இருப்பது சகஸ்ரதளம்.)
 
1142: எல்லாப் புவனங்களையும் சத்தியே இயக்குகிறாள் :
பரமன் இருந்தபடி இருக்க சத்தி மட்டும் செயலாற்றும்.  இவளே வல்லமை மிக்க சித்சத்தியாக விளங்கும் சோதி.  அவள் வான் கூற்றில் உள்ள இரண சமூகமாக விளங்குவதால் உலகு சத்தியால் நடைபெற்ற வண்ணம் உள்ளது.
 
1143: குண்டலினி சத்தி மேலே சென்ற போது நவசத்தியாய் விளங்கியது :
சுவாதிட்டானத்தை இடமாக உடைய குண்டலினி சத்தி மூலாதாரமான நான்கு இதழ்களுடன் மேல் உள்ள மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை, சகஸ்ரதளம் ஆகிய ஐந்தையும் பொருந்தி - வாமை, சேட்டை, ரௌத்திரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரதமனி, சர்வபூத தமனி, மனோன்மனி ஆகிய ஒன்பது
சத்தியாய் இருந்தது.  அது தன் வழியாகிய  சுவாதிட்டானத்திலிருந்து படர்ந்து உள் வழியான வீணாத் தண்டினூடே பேரொளியாய் புகுந்து போனது.
 
1144: குண்டலினியே சகஸ்ரதளத்தில் விளங்குகிறாள் :
ஆதி சத்தியின் இருப்பிடம் சகஸ்ரதளம்.  இதன் ஆற்றல் மற்றச் சக்கரங்களில் உள்ளது.  முக்கோணச் சக்கரமான சுவாதிட்டானத்தில் உள்ள குண்டலினியே மற்றச் சக்கரங்களில் விளங்கி ஆஞ்ஞையைக் கடந்து போய், உடலையும் சிதாகாயத்தையும் ஒன்றுபட இணைக்கும் உச்சியாகிய  சகஸ்ரதளத்தை அடைந்து  விளங்குகிறாள்.
 
1145: குண்டலினியே எல்லாச் சக்கரங்களிலும் பரவியவள் :
மூன்று சதுர வடிவமான மூலாதாரத்தில் எழுந்த முளை போல் விளங்கும் சுடரான சத்தி ஆதாரச் சக்கரங்கள் எல்லாவற்றிலும் பரவிச் சுழுமுனை நாடியின் மீது விளங்குகின்ற பிரமரந்திரத்தைக் கடந்து உள்ளம் ஒளியை அடைய எல்லாச் சக்கரங்களிலும் பரவியிருந்தாள்.
 
1146: பூரணி பத்துத் திக்கிலும் பரவியிருந்தாள் :
பூரணி சத்தி பத்துத் திசைகளையும் பத்து முகங்களாகக் கொண்டு எழுந்தருளி இருந்தாள்.  அதனால் எல்லாப் பக்கங்களிலும் பேரொளி பரவியது.  சிரசை நோக்கிக் குவிந்து முத்துப் போல் சகஸ்ரதளத்திலே திகழும் ஒளியை நோக்கித் தேன் போன்று இனிமையை அளிக்கும் காமவாயு அதோ முகத்திலிருந்து நீரினதுஓட்டம் போன்று சகஸ்ரதளத்தை அடைந்தது.
 
1147: மூலாதாரத்தில் உள்ள குண்டலினி உரைப்பது :
அம்பைப் போன்ற கண்ணையும் கொம்பு போன்ற நுண்மையான இடையையும் மற்ற அழகுகளையும் உடைய சத்தி நறுமணம் கமழ்கின்ற செம்பொன் திருமேனியுடன் சிவத்தை நோக்கி அரிய உயிர்கட்கு இன்ப மொழியான அரிய மறையை நாள்தோறும் உரைக்கின்றாள்.
 
1148: பராசத்தியின் விரிவு :
பெருங்கடவுள் தன்மை பொருந்திய பிரணவத்தில் விளங்கும் இன்பத்தைத் தருபவள் சத்தியானவள்.  பவளம் போன்ற செந்நிற ஒளி அவள் உடுக்கும் ஆடையாகும்.  நிலத்துக்குக் கீழ்க் கடந்துள்ள திருவடிகளை உடையவள்.  அவள் அகில அண்டங்களையும் கடந்து சூரியன், சந்திரன் அக்கினி ஆகிய
மூன்று சுடர்களையும் பூண்டு விளங்குவாள். 
 
1149: இறைவனை ஒரு பாகத்துக் கொண்டவளை வணங்க வேண்டும் :
உலகத்தலைவனாகிய இறைவனைத் தன் மேனியின் ஒரு பாகத்தில் புனைய வல்லாள்.  அண்ட கோடிகளைச் சங்கற்ப மாத்திரத்தில் உள்ளேயே மாற்றத்தைச் செய்பவள்.  அனைத்து மண்டல ஒளியையும் தன்னிடம் கொண்டவள். அனைத்தையும் சுமந்துள்ளவளை வாழ்த்துகிறேன்.
 
1150: புவனாபதி அம்மையை வணங்கினால் இயமனை வெல்லலாம் :
என் அன்புக்கு இலக்கான புவனாபதி அம்மையைப் போற்றி என்பேன். அடியேனது அருந்தவத்தின் ஆற்றலினுள் நிற்கும் பெண் பிள்ளை அவள்.  என் சினத்தன்மையை மாற்றிச் சிற்றம்பலத்துள் விளங்கும் சிவந்தநிற ஒளிமயமானவள்.  இயமனை விரட்டும் வலிமையள் ஆவாள்.
 
1151:ஆதிப்பரம் பொருளின் இயல்பு :
சுழுமுனையில் நாதமாக விளங்கும் இன்பத்தைத் தரும் சுந்தரி, அழகுடன் கூடிய திரிபுரையான மங்கை, கங்கை ஆற்றினைப் போன்று பெருகி வரும் துன்பங்களைப்  போக்க மலையாகிய சிகரத்தை அடையுங்கள் என்று அருள் செய்து, அடியாரின் வினைகளைப் போக்கி விளங்கிடும் ஆதியான பரம் பொருளும் ஆவாள்.
 
1152: என் மனத்துள் புகுந்து ஆண்டருளினாள் :
சத்தி, மெல்லிய நுட்பமான நாதத்தில் விள்ங்குபவள்.  பரகாயத்தில் பரந்துள்ள மெல்லிய ஒளி அணுக்களால் ஆனவள்.  அனைவராலும் புகழப்படுபவள்.  வணங்குபவரின் பக்குவத்துக்கு ஏற்றபடி பயனை அளிக்கும் பசிய கொடியைப் போன்றவள்.   அற்பமான புகழில் விருப்பம் கொள்ளும் உடல் வலிமையைத் தந்து,  வலிமைமிக்க நாதமயமான அப்பராசத்தி என் மனத்தில் புகுந்து ஆண்டருளினாள்.
 
1153: பராசத்தியே இறைவனாகிப் படைத்தருளுகிறாள் !
அந்த அருளம்மையால் தாபித்தவன் தான் எம் இறைவன்.  சங்கற்பத்தால் உலகைப் படைக்கும் போது, தானே மேலும் கீழுமாய் எங்கும் பரவி, அப்பொருளாகவே தான் இருந்து, அந்தப் பொருளுக்கும் உயிரை அளித்தருளுபவள் அவளே ஆவாள்.
 
1154: அருளம்மையின் பெருமையை உணர்ந்து வழிபட வேண்டும் :
சிவத்தின் பெருமையை உணர்ந்து கொள்ளாதவர் அது இது எனப் பல தெய்வங்களை வழிபடுவர்.  முத்திப் பேறு அடைவதற்குரிய மூலகாணமான பொருள் இதுவென அறியமாட்டார்.  குழலைப் போன்ற சித்ரணி என்ற நாடியில் விளங்கும் திருவருளம்மையின் அருளால் நிலையாய் ஆவது இதுவாகும் என்பதை அறிய
மாட்டார்.  இவர்கள் யாவரும் தெளிவு அடையாதவர்களே ஆவார்கள்.
 
8.  ஆதார வாதேயம் :  ஆதாரம் + ஆதேயம்.
இடமும் இடத்தில் உள்ள பொருளும் என்பது பொருள்.  அருளம்மை சத்தியே இடமாகவும், இடத்தில் உள்ள பொருளாகவும் விளங்குகிறாள் என்பது கருத்து.
 
1155: சத்தியே ஆதாரங்களாக உள்ளாள் :
நான்கு இதழ்களையுடைய மூலாதாரம், ஆறாம் ஆதாரமான ஆஞ்ஞை ஆகிய இரண்டின் இடையே தொண்ணூறு நரம்புகள் செயல்படுகின்றன.  இந்த இரண்டுக்கும் இடையே சுவாதிட்டானம் - ஆறிதழ், மணிபூரகம் - பத்து இதழ், அநாகதம் - பன்னிரண்டு இதழ், பதினாறு இதழ் விசுத்தி என்ற சக்கரங்கள் ஆக நாற்பத்து நான்கு இதழ்கள் உள்ளன. இந்த நான்கு வகை ஆதாரங்களில் 44 + 44 ஆக இரண்டு வகைத் தொகுதிகள் உள்ளன. ஒரு தொகுதி செயலைச் செய்வது. 
மற்றொன்று  செயலை அறிவது. ஆஞ்ஞையில் இரண்டு இரண்டு இதழ்கள்.  ஆக மொத்தம் தொண்ணூறு உணர்வு சத்திகள் கண்டத்துக்குக் கீழ் உள்ளன.   சீவன் ஆஞ்ஞையில் உள்ள போது இவை நிகழும். ஆணாகவும் பெண்ணாகவும் திகழும் ஆஞ்ஞைச் சக்கரத்தில் உள்ளவள் அருளம்மை.  அவள் மற்ற ஆதாரங்களில் விளங்கி அவற்றைத் தாங்கியும் உள்ளாள்.
 
1156: சத்தி உயிர்களைப் பக்குவத்துக்கு ஏற்ப இயக்குதல் :"
சத்தி, தன் கீழ் உள்ள ஆதாரங்களின் அறிவை அறிய ஆறு ஆதாரங்களையும் தன் திருமேனியில் கொண்டிருக்கின்றாள்.  அவள் தன் அறிவைச் செலுத்த மூலாதாரம் வரை நரம்புத் தொகுதிகளை விரித்திருந்தாள்.  அவள் கண்டத்துக்குக் கீழ் உள்ள ஐந்து சக்கரங்கள் இயங்குவதைக் கவனித்தபடியுள்ளாள்.    மேல் நோக்கம் உடையார்க்கு இவை செயல்படாமல் அவற்றைத் தடுத்தும் உள்ளாள்.
 
1157: சத்தியை வழிபடின் துன்பம் விலகும் :
அறிவைச் செலுத்தும் முறையில் உந்து சத்தியாகவும், அறிவை அறியும் முறையில் உணர்வு சத்தியாகவும் சத்தி சிவத்துக்காக செயல்படும். சிவம் தூண்டாத போது சத்திக்குச் செயல் இல்லை.  அப்போது சத்தி சிவனுடன் அறிவை அறியும் சிற்சத்தியாய்ச் சமமாய்த் திகழ்வாள். இத்தகைய சமமான நிலையில் உள்ளபோது ஒளி வடிவான அந்த அன்னையைத் தியானித்தால் செயல் வழியான சத்திநிலை
கெட்டுத் துன்பம் விலகும்.     நீங்களும் உடலைத் தாண்டி வெளியில் வந்து விளங்குவீர்.
 
1158: சத்தியை வழிபடின் சத்தியின் இயல்பை அடையலாம் :
வெளி வானத்தில் திகழும் சிவத்துடனே பொருந்தியவனும் இரண்டு பிரபைகளினால் பெரிய சகஸ்ர தளத்தில் ஏற்படும் இன்பம் பொருந்த, மணமுடைய மலர்களை அணிந்த மங்கையர் உள்ளத்தில் இடம் பெறாதவனும் ஆகியவன், படைப்புச் செயல் முடிந்த பின்பு இறைவனுடன் சமமான சத்தியை விரும்பிய போது அவளைப் போலவே பெண் தன்மையை அடைவான்.
 
1159: சத்தியில் மனம் ஒண்றிய போது பேச்சிராது !
ஒரு பெண்ணானவள் மற்றொரு பெண்ணை விரும்பி ஆசை கொண்டு சேர்வது அறியாமை. ஆனால் இங்குப் பராசத்தியான பெண்ணுக்கு ஆண்மையும் உண்டு.   இவ்வாறு பெண்ணும் ஆணுமாய் இருப்பானேன்?  பிறவியின் இயல்பை அறிந்துபெண்ணுடன் ஆணும் கூடிய போது பேசும் காரியம் முடிந்தது.  சிவன் சீவனின் அறிவைக் கவர்கின்ற போது ஆண் தன்மை கெட்டுச் சத்திமயமாய்ப் பெண் தன்மை பெறுவான்.  சீவன் பராசத்தி நிலை பதியப் பெற்றுச் சிவத்துடன் ஒன்றாகின்றான்.  அந்நிலையில் சிற்றின்பத்தில் பேச்சற்று நிற்பது போல் பேரின்பத்தில் பேச்சின்றி நிற்பர்.
 
1160: சத்தி மனத்துள் புகுந்து மகிழ்ச்சியைத் தருதல் :
சொல்லைக் கடந்த குற்றமற்ற ஒளி வடிவான பரம்பொருள் மனோன்மனி மங்கையான சினம் இல்லாத ஒளிவடிவான சிவத்துடன் கூடி என் மனத்துள் தானே புகுந்து மகிழ்ச்சியைத் தந்தது.
 
1161: சிவன் சத்தியுடன் கூடி ஐந்தொழில் செய்கின்றான் :
மூலாதாரத்திலிருந்து சீவர்களுக்கு மகிழ்வைத் தருபவள் சத்தி.   சிவத்துக்கு வேறாக இருந்து உலகத்தை விளக்குபவள் பார்வதி.  மனோன்மனி உலகில் எல்லா உயிர்களையும் காத்து  நிற்கும் பரந்த பெண் வடிவாகும்.  இத்தகைய ஐந்தொழில் தலைவியும் பிரணவ வடிவுமான சத்தி மகிழ்வூட்டச் சிவன் மகிழ்ந்து நின்றனன்.
 
1162: பரிபக்குவம் அடைந்த உயிர்களைச் சத்தி சிவம் காத்தல் :
சிவபெருமான் நெற்றிக் கண்ணுடன் மகிழ்ச்சியுடன் நின்றான்.  ஆன்மாக்களாகியநம்மிடம் எழுந்தருள விரும்பி விளங்கினான்.   அதனால் உலகங்களில் எல்லாம் விரும்பி நின்றான்.  சத்தியின் தோளைத் தழுவிப் போகியாய் நின்றான்.
 
1163: பேரின்ப அனுபவம் சொல்ல இயலாது :
பெருத்த கொங்கைகளை உடையவள்; மென்மையான இடையை உடையவள்;
புள்ளிகள் பரவிய தேமலை உடையவள்; தூய மொழி பேசுபவள்; மயில் தோகை போன்ற அழகிய திருவடியை உடையவள்; பாலை போன்றவள்.    இத்தகைய பராசத்தியை அடைந்தமையால் ஏற்பட்ட சிறப்பை யான் சொல்ல இயலாது. 
 
1164: மனோன்மனி வினைப் போகத்தை அளிக்கின்றாள் :
தீ மண்டலம் விளங்கும் காமபீடத்தின் வல்லபத்தை எவராலும் அளவிட்டுச் சொல்ல முடியாது.  அளந்து அறிய முடியாமலேயே அங்கு மக்கள் திகைப்புடன் இருக்கின்றனர்.  வினைப் போகத்தை வெல்ல அரிதாகும்படி ஒப்பற்ற தலைவி விளங்குகிறாள். இத்தகு ஆற்றல்வாய்ந்த சத்தியான மனோன்மனியைப் பந்தித்துச் செயல்படாது நிறுத்த இயலாது.
 
1165: மனோன்மனி பூதங்களைத் தாங்குபவள் :
மனோன்மனியே பெரும் பூதங்களைத் தாங்கி வானமாய் நிற்பள். அவளே சுடும் தீயாகவும் சூரியனாகவும் சந்திரனாகவும் உள்ளாள்.  அவளே ‚உள் பொழியும்சத்தியாகவும் உள்ளாள்.  அவளே வடவரை என்ற சிரசில் வடபாகமாகவும் (கயிலாயம்),  குளிர்ந்த கடல் நடுவே உள்ள "கடல் நீர் பொங்கிப் பெருகிடாது
காக்கும் வடவைத் தீ" ஆன காமமாகவும் விளங்குகின்றாள்.
 
1166: தேவதரிசனம் பெறலாம் :
நெற்றியில் கண் உடைய சத்தியை மதி மண்டலத்தில் கூடி இருந்த  ஞானியர் மண் உலகத்தவரே ஆனாலும் தெய்வகுணம்,தெய்வத்தன்மை பொருந்தியவர்கள் ஆவார்கள்.  பதைப்பு இல்லாது அவர்கள் தேவர்களைக் கண்டிருப்பர்.
 
1167: பலரும் தொழ விளங்குதல் :
வாலை என்ற பெயரை உடைய குண்டலினி எல்லாத் திக்குகளிலும் பரந்து நிற்பவள்.  இவளே உடல் உற்பத்திக்கு முன்னால் எல்லாத் திக்குகளிலும் விளங்கிய பராசத்தியாவாள்.  கீழே வந்த குண்டலினி மேலே போன போது உயிரைப் பிரித்துச் சகஸ்ரதளத்தை இடமாகக் கொண்டு எல்லாத் திக்குகளிலும் உள்ளவர்களும் தொழும்படி செய்தாள்.
 
1168: சிரசில் விளங்கும் சந்திர மண்டலம் பராசத்தி நிலையம் :
கன்னி ஒளி போன்று விளங்கிய பிறைச்சந்திரன் பொருந்தியுள்ள இடம் செந்நிறம் வாய்ந்த சுவாதிட்டானம்.  சந்திரர் பதினாறு கலைகள் நிரம்பிய போது விளங்கும் இடம் தலையாகும். 
இதுவே போற்றியிருக்கும் பராசத்தி நிலையம் ஆகும்.
 
1169: பராசத்தியின் பல இயல்புகள் :
சத்தியானவள் பலவகையிலும் எல்லாவற்றையும் என்றென்றும் தாங்கி நிற்பவள். முதன்மை அளவையாய்த் திகழ்பவள்.  இரவில் விளங்கும் சத்தியாய், சத்தி வழிபாட்டினை வளக்கும் "உருத்திர யாமளம்" என்ற ஆகமத்தால் தெரிவிக்கப்படுபவள்.  குருவாய் வரும் அவள் வடிவங்கள் பலவற்றையும் உணர்ந்தேன்.
 
1170: யோகினி சத்திகளைப் பராசத்தி தொழிற்படுத்திடுவாள் :
ஏழு ஆதாரங்களையும் யோகினி சத்திகள் உணர்ந்து உயிர்களுக்கு உணர்த்துபவர் ஆவார்.  மனத்தில் உள்ள ஈசன் இவர்களைக் கூடிப் பெண் போகம், உலக போகம், வித்தியாபோகம் பொருந்திய பரம் என்ற பெயரை உடையதாய் இருந்தது.  இத்தகைய சத்திகளின் தொகுப்பே பராசத்தி.
(யோகினி சத்திகள் பன்னிருவர் : வித்தியா, ரேசிகா, மோசிகா, அமிர்தா, தீபிகா, ஞானா, ஆபியாயதி, வியாபிநி, மேதா, வியோமா, சித்திரூபா, லட்சுமி.).
 
1171: சத்தியே போகமும் யோகமும் அருள்பவள் :
சத்தியான இதுவும் எம் சிவபெருமானும் வான் கலப்பில் சேருவதால் கலவியும் அதனால் விளையும் யோகமும் போல் விளங்கினர்.    இன்பம் பொருந்திய சுழுமுனையில் விளங்குகின்ற மங்கையே அக்கலவியும் யோகமுமாம்.
 
1172: சத்தி விளங்கும் இடங்கள் : யோகத்தை விளக்கும் நல்ல சத்தி  ஒளியாய் புருவநடுவைப் பீடமாய்க் கொண்டு திகழ்வாள்.  அத்தகைய யோக சத்தியின் ஒளி பெற்ற முகம் தென் பகுதி என்ற வலக்கண் ஆகும்.  யோக நற்சத்தி மணிபூரகத்தில் சூரியனாய் விளங்குவாள்.  யோக நற்சத்தி சந்திரனாக விளங்குவது
வடக்குப் பகுதியான இடக்கண் ஆகும்.
 
1173: சிவாக்கினியைத் தூண்டுவதன் விளைவு :
குருவால் தேர்ந்து மேலான சிவாக்கினியைத் தூண்டி ஒளி பீடத்துக்குக் கொண்டு சென்றால் ஒழுகும் இயல்புடைய மாயை முடிவு பெறும். ஆராய்ந்து அறியப்படும் விந்துநாதங்கள் பெருகச் சுழுமுனை நாடியில் வளைந்து செல்லும் குண்டலினியும் முளைத்து எழுவாள்.
 
1174: பந்தத்தையும் வீடு பேற்றையும் அருள்வாள் :
ஆறு ஆதாரங்களிலும் பராசத்தியே அகரகலை பதினாறையும் பொருந்தி விளங்குவாள். ஆறு ஆதாரங்களும் அவளாய் இருந்தாலும் ஒன்பதாம் கலை வரையில் அதிகமான விரிவு பெற்று விளங்காத நிலையாம்.   கலை வடிவாய் அமைந்து விரிந்த உலகத்திலும் பரத்திலும் அவளே கலந்திருப்பாள்.   இவ்வாறு அவள் கலந்துள்ள நிலையே பரவாதனை எனப்படும்.
 
1175: தக்க மந்திரத்தைச் செபித்தால் பராசத்தியின் அருள்வெளிப்படும் :
தலையைச் சூழப் பராசத்தியே இருபத்தேழு விண்மீன்களாய், பன்னிரண்டு இராசிகளில் அசைவு வடிவில் விளங்குகிறாள். இந்த அசைவானது பின் சிறிது சிறிதாக மிகுந்து எட்டு வகைச் சத்திகளும் பராசத்தியிடம் வெளிப்பட்டருள்வாள்.அவளே பழமையான முதல் நிலையையும் உடையவள்.  இந்த பன்னிரண்டு இராசிகளின் வட்டன் நிறைவு பெற்றால் வான மண்டலம் விளங்கும்.
 
1176: தத்துவங்களாயும் அவற்றுக்கு அப்பாற்பட்டவளாயும் உள்ளாள் சத்தி :
அக்கினிக்கண்டம், சூரியக்கண்டம், சந்திரக்கண்டம் ஆகியவை முடிந்து விளங்குவதில் பராசத்தியாக விளங்குகிறாள்.  அவள் தத்துவமாயும் தத்துவங்கள் அல்ல-வாயும் யாவற்றிலும் சிறந்து திகழ்பவள்.  பராபரனைத் தன்னிடம் உடைய பராபரை.  அந்தச் சத்தி பேரானந்தத்தை அளிப்பவளாகவும் உள்ளாள்.
 
1177:ஞானியர்க்கும் அஞ்ஞானியர்க்கும் அவரவர் நிலைக்கு ஏற்ப அருள்பவள் :
சத்தி தேனைப் போன்று விருப்பத்தைத் தரும் வீணாத்தண்டின் அடியிற் புற்றாஞ் சோற்றைப் போல் சத்திகள் பலவற்றைக் கூட்டாகக் கொண்டவள்.  குங்குமம் போன்ற நிறத்தை உடையவள்.  ஞானியர்க்குப் பொறிகளை அடக்கும் அங்குசமாகவும், அஞ்ஞானியர்க்குப் பிணிக்கும் பாசமாகவும் அருள்கிறாள். நிலமான சுவாதிட்டானம் அவள் விரும்பித் தங்கும் இடமாகும்.
 
1178: சிவத்துக்கு
மனோன்மனி தாயாகவும் மகளாகவும் மனைவியாகவும் உள்ளாள் :
உயிர்களின் மூச்சினையும் மனத்தையும் கடந்து விளங்கும் மனோன்மனி, பேய்களையும் பலவகைப்பட்ட பூதகணங்களையும் தமக்குப் படையாக ஏவலாக உடையவள். சத்தி தத்துவத்தினின்று சாதாக்கிய தத்துவவாசியான சதாசிவனான அரன் தோன்றுகின்றான்.  ஆதலால் சத்தி சிவனுக்குத் தாய் எனப்பட்டது. 
சிவதத்துவத்தினின்று சத்தி தத்துவம் தோன்றுகிறது.  ஆதலால் சத்தி சிவனுக்கு மகள் எனப்பட்டது.  சத்தியாகி நின்று சத்தி தத்துவத்தில் சதாசிவத்துடன் கூடி இருந்து உலகமும் பல உயிர்களும் தோன்றுவதற்குக் காரணமாய் உள்ளாள்.  ஆதலால் சத்தி சிவனுக்கு மனைவி எனப்பட்டது.   ஆராய்ச்சி அறிவைக் கடந்த சிவனுக்கு சத்தி தாயாகவும் மகளாகவும் மனைவியாகவும் உள்ளாள்.
 
1179: சர்வ வியாபி :
மனோன்மனி சிவபெருமானுக்கு மனைவியும் ஆவாள்.  சத்தி தத்துவமாய் நின்று நாத விந்துகளைத் தோற்றுவிக்கவும் செய்வாள்.  சிவத்துடன் கூடிய நிலையில் அனைத்துக்கும் காரணியாகவும், படைப்பை எண்ணிப் பிரிந்த போது சிவத்தின் காரியமாகவும் ஆவாள்.  இத்தகைய புணர்ப்பை உடையவள்.    விந்து சத்தி பொருந்தியுள்ள பழைமைக்கெல்லாம் பழமையானவள்.    அண்டங்களின் அளவாகப் பிரிந்திருக்கும் பத்துத்திசைகளையும் உடைமையாகக் கொண்டவள்.
 
1180: சத்திக்கு நிலையான இடம் சகஸ்ரதளம் :
சத்தி பத்து முகங்களை உடையவள்.  நாலு இதழ்களை உடைய மூலாதாரத்தை வேதமாக அமைத்து ஆறு இதழ்கள் பொருந்திய சுவாதிட்டானத்தை அதன்அங்கமாக அமைத்துள்ளாள்.   சகஸ்ரதளத்தில் சிவத்துடன் பொருந்தும் போது சமமாய் ஒத்து நிற்கின்றாள்.  எம் தலைவியான அவள் நிலையான பொருள் ஆவாள்.
 
1181: புருவ நடுவில் விளங்குபவள் சத்தி :
குண்டலினியான சத்தி கூட்டமான சத்திகளுடன் புருவத்திடையே விளங்குவாள். அவள் மேலானவள். ஏழு உலகங்களிலும் விளங்குபவள்.  மகிமைபொருந்திய மங்கை.  சூரியன் சந்திரனை அமுதம் நிறைந்த கொங்கைகளாக உடையவள்.  பிரமனை ஆள்பவள்.  அவள் பிரிவில்லாது நின்று அருள் செய்பவள்.
 
1182: சத்தி அறிவு மயமானவள் :
சிவபெருமானுடன் பிரிவு இல்லாமல் கலந்து நின்ற பெருந்தகுதியுடைய மங்கை.  தியானத்தில் புருவ நடுவுக்கு மேல் பொருந்தி விளங்கும் அழகிய கொம்பு போன்றவள்.  அறிவுக்குள் அறிவாய்ப் பொருந்தி அரிய உயிர்க்கு அறிவாய்க் கலந்து திகழ்ந்தவள்.
 
1183:  ஆசைகளை அறுத்தாள் :
கொடைக்குணம் பொருந்திய பராசத்தி மனத்துள் இருந்து மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகள் செய்யும் தீச் செயலை ஒழித்து, உயிருடனே ஒன்றி, தவநெறி மேற்கொள்ளக் கூடிய இன்பத்தில் என்னை மயக்கி விரும்பச் செய்தாள்.
 
1184: உள்ளத்துள் விளங்கி இன்பம் அளிப்பாள் :
விரும்பி, உயிர்களுக்கு அருளைச் செய்யும் போக சத்தி - மனத்துள் இருந்து இன்பம் அளிக்கின்றாள்.  இதனை யாரும் அறியார்.  அத்தகைய புதல்வி சத்தி மலரும் மணமும் போன்று சிவத்துடன் பொருந்தி இனிதாய் விளங்குகின்றாள்.
 
1185: உள்ளத்துள் தடையான எண்ணங்களை விலக்குவாள் சத்தி :
சத்தி என் உள்ளத்தை இடமாய்க் கொண்டு விரும்பி இருந்தாள்.  திருத்தமான புணர்ச்சியில் தெளிந்து அறிந்து தியானித்து இடையீடு இல்லாத, வியப்பில்லாத நிலையில் பொருந்தி விளங்கத் தடையானவற்றை எல்லாம் விலக்கி இருந்தாள்.  அது தான் சத்தி கலப்பு என்பதாம்.
 
1186: வினையை வெல்லலாம் :
"அது தேவை, இது தேவை" என்ற ஆசையை விட்டு, அவளைப் புகழச் செய்து, பிரமரந்திரத்தில் தியானிக்கில் விதிக்கப்பட்டவினைகளையும் வெற்றிகொள்ளலாம்.   சந்திர மண்டலத்து வாழ்பவளான அம்மை சொன்ன மண்டலங்கள் மூன்றாகும்.  ஆசையை விலக்கித் தலை உச்சியில் பொருந்திருந்தால் ஊழையும் எளிதாய் வெல்லலாம்.
 
1187:சந்திரமண்டலத்தில் விளங்கினால் புலன் அறிவு முதலியன இல்லையாகும் :
தாமத குணம் கொண்ட அக்கினி மண்டலம், இராசத குணம் கொண்ட சூரியமண்டலம், சாத்துவிக குணம் கொண்ட சந்திர மண்டலம் ஆகியவை மோகினியானவள் சேரும் மூன்று மண்டலங்கள்.     சிரசின் மீது பன்னிரு கலைகளை உடைய சூரிய மண்டலத்தின் உச்சியில் பொருந்துதல் சுத்தமாயையாகும்.
சாத்துவிக குணம் ஓங்கிய போது சிரசின் மீது நன்மை அளிக்கும் பராசத்தி சந்திரமண்டலத்தில் விளங்குவாள். அப்போது  முழு சந்திர மண்டலம் அமைந்த போதுநாதத்தைக் கடந்த நாதாந்தம் விளங்கும்.
 
1188: சிந்தனையால் நாதம் தோன்றிச் சந்திர மண்டலத்தைச் சேரும் :
சந்திர மண்டலத்தில் தோன்றும் நாதம் மலை போன்று ஓங்கும். பின் சிறு மூளைப்பகுதியில் படரும்.  கண்டத்தினின்று மேல் எழும்.   சோதியாக அநாகதத்தில் உள்ள இதயத் துடிப்பு ஒலி  சந்திர கலை மேல் போய் இறுதியைச் சேரும்.
 
1189: சத்தியே அந்தமும் ஆதியும் :
சந்திர கலை பதினாறின் முடிவே படைப்புக்கு முதலாம்.  ஆயிரக் கணக்கான மாற்றங்கள் இல்லாது மனம் சமநிலையைப் பெற்று எழில் மிக்கு விளங்கும் நறுமணமுடைய இடமாய்த் திகழும். அதனையே தனக்கு ஒரு பேறாகக் கொண்டு சத்தி விளங்குகின்றாள்.
 
1190: எல்லா உலகங்களும் வழிபடச் சந்திர கலையில் சத்தி வீற்றிருந்தாள் :
மங்கையான சத்தி சந்திர கலையில் இறுதியாக விளங்கும் நுட்ப வாக்குகளான அயல் உடலில் வீற்றிருக்கின்றனள்.  மேலான ஆனந்தத்தைப் பெறுவதற்கான நன்னெறியை அடைந்து உலகங்களில் உள்ளவர் அவளது புகழைச் சொல்லி வழிபட்டு ஏங்கியிருக்க அவள் நன்மையை அளிக்கும் சத்தியாய் வீற்றிருந்தாள்.
 
1191: படைப்பு முதலிய ஐந்தொழிலையும் செய்பவள் சத்தி :
சத்தியும் சிவபெருமானும் பொருந்தி நின்று, பிரணவத்தின் உச்சியிலிருந்து சீவர்களைப் படைக்க எண்ணிச் சீவர்களின் உடம்புக்கு வேண்டியதையும் உயிருக்கு வேண்டியதையும் மதிப்பிட்டனர்.  சூரியன் சந்திரன் என்பவர்களைக் கொங்கைகளாகக் கொண்ட பார்வதியும் ஐந்துமக்களுடன் தம் சத்தியுடன் சேர்த்து உலகத்துக்குரிய படைத்தல் தொழிலைச் செய்தனள்.
 
1192: அகவழிபாடு செய்ய வேண்டும் :
தவம் செய்யும் மக்கள், வெளிச் செயல்களை மட்டும் செய்து  உள்ளத்தில் உள்ள சிவசத்தியைத் தியானம் செய்வாராயின், மூலாதாரத்தினின்று மூண்டு எழும் மூலாக்கினி ஆறு ஆதாரங்களாகிய வழியுடன் பிரமப் புழையில் உயர்ந்து அன்பு வடிவான சத்தியினிடம் அடங்கும்.
 
1193: ஆறு ஆதாரங்களில் சந்திரனின் ஒளி :
முத்துப் போன்ற நிறத்தை உடைய வீரியம் வற்றி ஒளி ஆவதில் தான் ஆறு ஆதாரங்களில் விளங்கும் சந்திரன் ஒளி மாற்றம் பெறும்.  சந்திர கலை ஆறு ஆதாரங்களிலும் பொருந்தித் தன் சத்தியை வெளிப்படுத்திக் களிப்பூட்டுவதாக உள்ளது.  அதனது இயல்பை மற்ற ஒளி பெற்று மூலாதாரத்தினின்று மேலே தோன்றும்.
 
1194: என் உள்ளத்தில் கோயில் கொண்டாள் :
என் மனத்தகத்தாள். சிவத்துக்குரிய தேவி.  பைரவி. முத்தைப் போன்ற சுக்கிலநாடியில் முகம் உள்ளவள்.  சூரியன்,சந்திரன்,அக்கினி என்ற மூன்று கண்களைப் பத்து முகங்களிலும் உடையவள். ஆற்றல் வாய்ந்தவள். திறமையுடையவள்.  பத்து நாடிகளிலும் செயலாற்றுபவள்.   
 
1195: சத்தி மும்மண்டலங்களில் உயிரில் பொருந்தியவள் :
பொருந்திய மூன்று மண்டலங்களுள் அக்கினி மண்டலத்தில் பொருந்திய திருவடியை உடையவள்.  சந்திர மண்டலத்தை முகமாகவும் சூரிய மண்டலத்தை உடலாகவும் கொண்டு மும்மண்டலத் தலைவியானவள் முன் நிற்பாள். நாம் விலக்கினும் நம் மனத்தை விட்டு விலகாத ஒளியாய்ப் பொருந்துவாள்.
 
1196: குண்டலினி விசுத்திக்கு மேல் பொருந்தி இன்பத்தை அருள்வாள் :
உள்ளொளியான குண்டலினியானது ஆறு ஆதாரங்களின் அங்கங்களில் வெண்மை ஒளியாகச் சிவத்துடன் கூடி, எல்லா ஆதார தெய்வங்களுடன் கலந்து மேலே போவாள்.  அநாகதச் சக்கரம் அடங்க விசுத்திச் சக்கரத்துக்கு மேல் அமுத மண்டலம் விளங்கத் தொடங்கும்.
 
1197: இன்பமாய் வெளிப்படுவாள் :
விசுத்திக்கு மேல் நெற்றியினது நடு முதல் பிரமரந்திரம் முடிய விளங்கும் சகஸ்ரதளத்தில் திகழும் சதாசிவம் ஆகிய பரமகுரு விளங்க, அங்கு வெளிப்படுவது ஆனந்தக் கள் ஆகும்.  அந்த ஆனந்தமே இறைவனின் திருவடிகள் ஆகும்.  அவனது வடிவம் ஆனந்தம்.  மூலாதாரம் முதல் ஆறு ஆதாரங்களையும் அங்கமாக உடைய சத்தி ஆனந்தத்தை அளிப்பாள்.
 
1198: சத்தியுடன் நிற்பவர் :
குண்டலினியும், பிரமன் முதலிய முத்தேவர்களும், அஞ்ஞானக் காடான ஆறுஆதாரங்களும், சந்திர கலை பதினாறும், சதாசிவ பத்தினியும், மந்திர இறைவனான ஈசானரும் சார்ந்து நிற்கப் பராசத்தி எழுந்தருளினாள்.
 
1199: தர்க்கவாதத்தை விட்டுச் சத்தியை அடைய வேண்டும் :
பயிற்சியாளர்க்கு சத்தியானவள் வாலை வடிவில் குண்டலினியாய் உள்ளாள்.  அக் குண்டலினியின் இயல்பை அறிந்து மேல் எழச் செய்தால் அவளே வீடு பேற்றை அளிக்கும் தலைவி ஆவாள்.  இந்த உண்மையை அறியாமல் பத்தியை வீணே செலுத்தியவர்கள்  ஆரவாரம் செய்யும் நாய் போன்று கதறிய
படி இருக்கின்றவர்களே ஆவார்கள்.
 
1200: சத்தி திருவடியை அருள்வாள் :
பராசத்தியின் திருவடியைக் காண்பவர் யார்?  அவளை ஒளியில் பார்த்துத் தியானம் செய்பவர்க்குக் கரிய நிறமுள்ள சுழு முனையான குழலின் அடிப்பகுதியில் சிவந்த தாமரை போன்ற பெருமை நிறைந்த திருவடியை அருளும்படி செய்வாள்.
 
1201: சமாதிக்கான சாதன முறை :
சத்தியைப் பற்றிய கருத்துக்களைச் சிந்தனையில் நீங்காமல் வைத்து, சிரத்தில் ஆதியான புருவ நடுவில் தொடங்கி, ஒளி முகமாக முன்னிலைப் படுத்திக்கொண்டு, ஆகுமஞ்சனம், கூர்மாசனம் போன்றவைகளால் குண்டலினியின் முகத்தை மாற்றி மேல் எழும்படி செய்து, உலக நடப்புகளை நினைக்காமல்
அவளையே நினைத்து ஐம்பொறிகள் கூடும் இடமான நாத ஒலியில் பொருந்திச் சமாதியை மேற்கொள்ளுங்கள்.
 
1202: சமாதியை மேற்கொள்பவர்க்குச் சந்திரகலையில் சத்தி விளங்குவாள் :
சத்தியானவள் தானாக இருக்கும்போது " சிவம், சத்தி, நாதம், விந்து, சதாசிவம், மகேசுரர், உருத்திரர், பிரமன்,திருமால் " என நன்மை தரும் ஒன்பது பேதமாய் இருப்பாள்.  சமாதியை மேற்கொள்பவர் - சத்திக்குரிய மந்திரமான சிவாயநம  மந்திரத்தால் சத்தியை வழிபட, சிவசத்தியாய் சமநிலையில் சந்திரகலையின் உச்சியை  உறைவிடமாகக் கொண்டு விளங்குவாள்.
 
1203: எளிதில் சத்தியை அடைய வழி :
சத்தி விளங்கும் மூலாதாரம் முதலான இடங்கள் தோறும் முறையாய் அடைந்து இன்பத்தை அளிக்கும் மங்கையை நாள் தோறும் விரும்பியபடி இருந்தால், மூலாதாரத்துள் உடன் உள்ள மற்ற சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி என்ற நான்கு சக்கரங்களிளும் தினையளவு நேரத்துள் இறைவியை அடையலாம்.
 
1204: சத்தியை சித்தத்தில் வணங்க வேண்டும் :
இளைய தளிர் போன்ற மேனியையும், கூட்டத்தையும் உடைய குண்டலினியும்,குவளை போன்ற கண்களை உடையவளுமான பராசத்தியை இன்பமான முறையில் வஞ்சம் இல்லாது சித்தத்தில் வணங்கினால் மேலான இருவினைப் பயனை அடையலாம்.
 
1205: சத்தியைத் தியானித்தால் எட்டுக் குணங்களையும் அடையலாம் :
உனக்கு இன்பம் உண்டாகின்ற நேரத்தில், மூலாதாரத்தில்விளங்கும் பாலையைச் சுவாதிட்டான வழியில் போக விடாது தடுத்து, மனத்தால் பிரமரந்திரம் நோக்கி மேலே போகவிட்டு குண்டலினி சத்தியை உணர்வாயாக.  அப்படிச் செய்தால் அவள் உன்னை நிலத்தில் நீண்ட வாழ்நாளுடன் வாழச் செய்வாள். 
தன் வயத்தனாதல் முதலிய எட்டுக் குணங்களும் அடைதலும் கூடும்.
 
1206: சத்தி சந்திர மண்டலத்தில் விளங்குவதைக் காண வழி :
ஆமை தன் ஐந்து உறுப்புக்களை அடக்கிக் கொள்வதைப் போல் ஐம்பொறிகளையும் அடக்கி நான் செருக்கு இல்லாதவன் என்று - பிரணவ மந்திரத்தைத் தொண்டைக்கு மேல் தியானித்தால் - மூலாதாரம் முதல் பிரமரந்திரம் வரை சுழுமுனையில் பலசத்திகளை மாலைபோல் கொண்டுள்ள சத்தியை சோதியாய் சந்திரமண்டலத்தில் திகழ்வதைக் காணக்கூடும்.
 
1207: சத்தி பொன்னொளியிலே விளங்குவாள் :
சத்தி, மூலாதாரம் முதல் பிரமரந்திரம் வரை செல்லும் சித்திரணி என்ற நாடியில் தேவையற்ற தத்துவங்களைக் கட்டி நிறுத்தியும், திருவருளம்மையை அடையவேண்டிய தத்துவங்களைத் தூண்டியும் நடத்துகின்றாள்.  அதனுடன் பெரிய சங்கமும் அமுத கலசமும் பொருந்தும். இருபதங்களான சிவா என நீண்டு உச்சரிக்கப்படும் மந்திரத்தை விரும்பும் சிறந்த பொன் அம்பலத்துள் தேவையான நாத
விந்துக்களைப் பெருக்கிப் பொன் ஒளியில் விளங்குவாள்.
 
1208: தேவர்கள் வணங்கும்படி மும்மண்டலங்களும் சோதியாய் விளங்குவாள் :
பிரமன், திருமால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன் என்பவர் சத்தியின் திருவடியைச் சூடித் தம் தம் பதவியைப் பெற்றனர்.    காமனும் அவனுடைய தம்பியான சாமனும் சூரியனும் சந்திரனும் அக்கினியுடன் திருவடியில் பொருந்தும்படி மூலாதாரம் முதல் ஒரே பேரொளியாய் நின்றாள்.
 
1209: நடுநாடிவழி நின்று ஞானம் அளிப்பாள் :
சத்தி, சுவாதிட்டானத்தில் இன்பத்தைப் பெருக்கும் பிறைத் திங்களைத் தலையில் சூடியவள்.  சுழுமுனை நாடியும் அதன் மீது விளங்கும் சந்திரன் சூரியன் அக்கினி என்ற சூலத்தைத் தன் வடிவாய் உடையவள்.  தலையில் விளங்கும் சூலத்தைத் தன் வடிவாய் உடையவள்.  தலையில் விளங்கும் சந்திர மண்டலத்தை உடையவள்.  மூலாதாரம் முதற் கொண்டு பிரமரந்திரம் வரை கொடி போல் சித்திரணி நாடியில் செல்பவள்.  மலம் அற்றவள்.  பெண்.    இத்தகைய இயல்புடையவள் நடு நாடி வழி ஞானம் விளங்க நின்று நடனம் ஆடுவதால் அண்டத்தின் தலைவி என்று அழைக்கப்படுவாள்.
 
1210: அண்டம் யாவும் சத்தி மயம் :
வானக் கூறான அண்டம் முதல் பூமி வரை பொன் காதணியை உடைய பராசத்தியைத் தவிர நிலையான இடம் பெற்றவர் வேறு எவரும் இலர்.  சிவனும் சத்தியும்ஆகிய காரணம், பெண்ணும் ஆணுமாகப் படைப்பதன் பொருட்டே ஆகும்.  மூலாதாரத்தில் ஆண் தன்மையும் பெண் தன்மையும் ஆக இரண்டும் பொருந்தி உள்ளன.
 
1211: சத்தியின் மேன்மை :
பராசத்தி நஞ்சுண்டவனுக்கு அமுதம் ஆவாள். அவர் அடையும் பதவி ஆவாள்.
நிரம்ப வந்து பொருந்தும் தவத்தால் உண்டாகும் இன்பமாகத் தானே வருவாள். அத்தகைய சத்தி - ஆதாரங்கள் தோறும் எல்லாம் அடையப் பெறும் குவிந்த வழியான சுழுமுனையுடன் பொருந்தி வந்து செறிந்த உச்சியின் மீது திகழ்ந்தாள்.
 
1212: சத்தியை வழிபடாது கெடுதல் கூடாது :
அன்ன மயமான உடலில் உள்ள நான்கு இதழ்த் தாமரையினின்று வழிபடப் பெற்று உச்சி நடுவிலே மேன்மையானபிரணவமாய் அம்மை வளங்கினாள்.  மேலான அருந்தவம் மேலும் மேலும் பெருகவும் - உயிர்வளியின் இயக்கத்தால் அழிகின்றமக்கள் சத்தியை வழிபடாது கெடுதல் கூடாது என்பதை அறிவதில்லை.
 
1213: சிவார்ப்பணம் செய்பவர்க்குச் சத்தி பேரொளியாய்க் காட்சி தருவாள் :
சத்தி அன்னமய கோசத்துக்கு உண்ணும் உணவாய்ச் சத்தி வழங்குபவளாய் இருந்தாள்.  யோனியான குண்டத்தில் தன்னைச் சிவார்ப்பணம் செய்பவர்க்கு அங்கேயும் பேரொளி வடிவாய் விளங்கினாள்.  சிவத்துக்கு அடிமை என்று இருப்பவர்க்கு வேரினிடமே - மூலாதாரத்திடமே - துணைவி பொருந்தி விளங்கினாள்.
 
1214: சத்தி ஐந்து கலைகளில் உள்ளவள் :
சந்திரனைப் போன்ற வெண்பளிங்கின், செழுமையான முத்துப்போன்று சிலைமயமாய் சத்தி உள்ளாள்.  சுருண்ட குழல் போன்ற சுழுமுனையில் விளங்குவதுடன் ஒளிரும் தன்மையுடையவள்.  மூலாதாரச் சத்தியால் மாற்றப்பட்ட போது நீக்கல்,நிலை பெறுத்தல், நுகரச் செய்தல், அமைதியாக்கல், அப்பாலாக்கல் ஆகிய ஐந்துநிவிருத்தி கலைகளாக உள்ளாள்.
 
1215: உள்ளக் கற்பனைக்கு அப்பாற்பட்டவள் :
மூலாதாரத்தில் உள்ள உருத்திரருடன் குண்டலினி பொருந்தி நின்றாள். 
உள்ளத்தின் கற்பனைகளுக்கெல்லாம் அவளே காரணம் ஆனாள்.  பாச அறிவுகளில் எல்லாம் அவளே விளங்கினாள். பாசஅறிவு அழியும் உடம்புடன் தொடர்புள்ளவை ஆதலால் குண்டலினி வந்து கால தத்துவத்துடன் கலந்துள்ளாள்.
 
1216: சத்தி சிவனின் பாகத்திலிருந்து உயிர்களுக்கு நன்மை செய்பவள் :
சத்தி, உயிர்களுக்குக் காலதத்துவமாய் உள்ளவள். எங்கும் எண்ணத்தை நிறைவு செய்யும் அனுகூலம் உடையவள்; உமை; மூலாதாரச் சத்தியான குண்டலினி.  சண்டிகை மந்திரத்தில் விளங்குபவள்.  இவள் காப்பவளாய்ச் சிவத்துக்கு ஒரு பாகமாய்த் திகழ்பவள்.
 
1217: சத்தியின் வடிவம் :
சத்தி பசும் பொன் மயமான கதிர்களை முடியாய் உடையவள்.  ஓர் உடம்பு, பத்து வன்மையான தோள்கள், விருப்பம் தரும் ஐந்து முகங்களைக் கொண்ட காயத்திரி தேவி, ஒவ்வொருமுகத்திலும் மும்மூன்று கண்களை உடையவள்.  அஞ்ஞான மயமான இருட்டைப் பிளந்து போகும் பிரணவத்தில் விளங்கும் சிவபெருமானுக்குப் பாகமாய் உள்ளவள்.
 
1218: தத்துவங்களைத் தோற்றியவளும் ஒடுக்கியவளும் சத்தி :
ஆன்மாவும் முப்பத்தாறு தத்துவங்களும் பொருந்தி நின்று செயற்படுகின்ற கொத்துகள் ஐந்து பூதங்கள், ஐந்து கன்மேந்திரியங்கள், ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து தன்மாத்திரைகள், கலை,காலம்,நியதி, மாயை,புருடன் என ஐந்து ஐந்தாக விளங்குகின்றன.   அவற்றுள் வேதனும் பதினெண்கணத்தவரும் பொருந்த முதலாகவும் முடிவாகவும் தேவி விளங்குகின்றாள்.
 
1219: எழுத்துகளுக்கு உயிராக சத்தி விளங்குகிறாள் :
படைக்கும் நாள் ஆதாரச் சக்கரங்களில் உள்ள ஐம்பத்தோர் எழுத்துகளிலும் அவளுடைய சத்திகள் பொருந்தியுள்ளனர்.  அவற்றுக்குப் பராசத்தி உயிராய் உள்ளாள்.  இப்படி ஆகும் அவளுடன் உடலில் சிவன் அம்மையுடன் பொருந்தி எல்லாவற்றிலும் கலந்து நின்றாள்.
 
1220: அடியார்களின் எண்ணத்துக்கு ஏற்ப அருளுதல் :
சத்தியுடன் சிவத்துக்கு இடமாகிய சக்கரம் சிரசின் மேல் உள்ள எட்டு இதழ்த்தாமரை.  உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களுகு ஏற்ப அந்த அந்த ஆதாரங்களில் போய்ப் பொருந்திச் சத்தி அருள் செய்வாள்.  எனவே ஒவ்வொரு ஆதாரத்திலும் தியானம் செய்தால் அதற்கு ஏற்ற பயன் உண்டு.
 
1221:சத்தி தன்னை அறிவித்து விளங்கிச் சீவனை மேல் எழச் செய்வாள் :
திருவருளம்மை என்னுள்ளே சுழுமுனையில் மேல் நோக்கியபடி நின்றாள்.  அதனால் ஏழு ஆதாரச் சக்கரங்களிலும் உயிர்வளி உந்தப் பெற்று மற்ற ஒன்பது வாயுக்களுடன் மேல் ஏறிப் போய்  சகஸ்ரதளம் விளங்கியது. உயர்வான சகஸ்ரதளத்தில் திருவருளம்மையும் நின்றாள்.
 
1222:உயிர்வளி ஊர்த்துவமுகம் ஆனபோது சத்திசீவனுடன் கொண்டு போகும் :
உயிர்வளி மேல் நோக்கிய முகமானது உணர்வாக எழும் மந்திரமான பிரணவத்துள் சேர்ந்து எழுகின்றது மேலான வீடு பேற்று நிலையாகும்.  அப்போது சத்தி சிவத்தை நோக்கி அகண்டத்தில் செல்ல விரும்பிச் சீவனுடன் கலந்து எழும்.இந்த நிலை சிவத்தின் பால் விரும்பிப் போகும் காதலி போன்ற நிலையாகும். 
இதனை அறிவாயாக!
 
1223: சீவனுக்கு மண்டல அறிவு நீங்கின் சத்தி வீணாத் தண்டில் விளங்குவாள் :
மேல் நோக்கிய சகஸ்ரதளம் அக்கினியாயும் ஆதி சத்தியாயும் அமையும்.  மகேசுரன் விளங்கும் மண்டலமாயும் வாயு முதலான மேலுள்ள வானம் சூரியன் சந்திரன், அக்கினி என்பவையும் அங்குத் திகழும். கவசமாய் உயிர்க்குள்ள சிகைமந்திரம் உடம்பறிவு கடந்து செயலற்றதாகப் - பராசத்தியும்
அரசன் வாழும் வீணாத்தண்டில் விளங்குவாள்.  (சிகை மந்திரம் கவிழ்ந்த சகஸ்ரதளத்தை உணர்த்தும். சகஸ்ரதளம் நிமிர்ந்தால் சிகை மந்திர அறிவு இருண்டு விடும்.)
 
1224: சத்தி ஐந்தொழிலை நிகழ்த்துபவள் :
நடு நாடியில் விளங்கித் திகழும் மனோன்மனியானவள் ஐம்பத்தோர் எழுத்துக்களுள் அடங்குவாள்.  அவளே பேரறிவுப் பேராற்றலுடன் பெரும் பொருளாய் விளங்குபவள். அவள் படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் ஆகிய ஐந்தொழிலுக்கும் உரியவள்.
 
1225: பராசத்தியைப் போற்றுபவரின் உயிரில் சிவம் விளங்கும் :
தானே நிகழ்வதான மோகினி அதனைச் சேர்ந்துள்ள யோகினி  சத்திகளாகிய இவற்றைக் கடந்து போனவர் திருவருள் சத்தி மயமுடையவராய் அவளது திருவடியைப் போற்றுவர்.  அங்ஙனமான உயிரில் விளங்குபவன் சிவன்.  அவனே மேலான பரமசிவம்.
 
1226: சகஸ்ர தளத்தை அடைவதே பிரணவ நெறி :
உடலின் தலை மீது விளங்கும் சகஸ்ர தளத்தில் மோகினியாகிய பராசத்தி பொன்னொளியில் விளங்கும் சிவத்துடன் மோன நிலையில் வைத்துக் கூறியருளுவது 'அ'கர, 'உ'கர, 'ம'கர, விந்து, நாதங்களாகிய உயிர் அடையும் பிரணவ வழிபாடு ஆகும்.
                                                                                                                                                                   1227: வாக்கும் மனமும் ஒன்றியவரின் மனத்தில் விளங்குவாள் :                                                    இவ்வுலகத்தார் உய்யும் பொருட்டுச் சமய நெறிகளை வகுத்தவள் உமை. அவள் தன் பதியான சிவத்துடன் பிரிவில்லாது விளங்குவாள். அவள் யாவரும் அறிவதற்கு அரியவள்.  வாக்கும் மனமும் ஒன்றான போது, அத்தகையவரின் நுட்பமான அறிவில் விளங்கும் பெருமையைப் பெற்றவள்.
 
1228: சன்மார்க்கம் :
மிகக் கூர்மையான புலன்களைக் கொண்டு அறியும் மக்களின் அறிவு  சிவமானது அக்கருவிகளுடன் பொருந்தியிருந்ததால் உண்டானது. எனவே, இது பின்னறிவு.   அக் கருவிகளை விட்டுப் பதியுடன் ஒன்றிக் கருவிகள் இல்லாது அறியும் அறிவைப் பெறுவது செந்நெறியாகும்.  சிவத்துடன் கூடி அடையப்படுவதே ஆன்மா அடைய வேண்டிய வழிபாடாகும்.   இதுவே சன்மார்க்கம்.
 
1229: சன்மார்க்கத்தைக் காட்டியவள் சத்தி :
சன்மார்க்கமாகப் பொருந்திய நெறி தூய்மையற்ற நெறிகள் யாவற்றையும் விலக்கிவிடும்.  நல்ல நெறியால் நல்லொழுக்கம் வரும். அந்த நல்ல நெறியைக் காட்டிய தேவியும் பராசத்தியே ஆவாள்.
 
1230: சிவசத்தியின் நடுவில் இருக்க வழி பிரணவம் :
சத்தியும் ஆன்மாவும் இவை இரண்டையும் உடைய சிவமும் என்னும் மூவருமே அல்லாமல் வீடு பேற்றின் முடிவை அறிபவர் எவரும் இல்லை.  பிரணவத்துக்கு மேல் அர்த்த மாத்திரையான சுரமான 'ம'கரத்தை இட்டுப் பிரணவம் பக்குவமானால் சிவ சத்தியின் நடுவில் இருப்பதற்கு வழி ஏற்படும்.
 
1231: ஊழை வெல்பவர் :
ஒரு நெறியில் இல்லாது அது சிறந்தது என்றும் இது சிறந்தது என்றும் எண்ணி வாழ்நாளை வீணாகக் கழிக்காமல், இன்பம் மிகும் சித்திரணி நாடியில் விளங்கும் குண்டலினியை அவளுடைய கணவனுடன் பொருந்திச் சந்திர மண்டல அமுதத்தைப் பெருக்கி வழிபடத் தகுதி உடையவர் ஊழ்வழியில் செல்லாமல்,  அருள் வழியில் போய், ஊழை வெல்லும் ஆற்றலைப் பெறுவர்.
 
1232: பராசத்தியை உண்மையாக உணர்பவர் அடையும் பயன் :
வெற்றியையுடைய பராசத்தியை உண்மையாய் உணரவல்லவர் ஊழையும்,வினைக் கூட்டங்களையும், சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்து புலன்களையும் வெல்லமுடியும்.
 
1233: மரபின் வழி வந்த பாசம் :
மரபின் வழி வந்த பரம் பொருளாகிய சத்தி ஐம்பத்தோர் எழுத்துக்களுடன் கலப்புற்று விளங்கியது.   வீணாத்தண்டின் அடியில் விந்து நீக்கத்தைச் செய்யும் குழல் போன்ற நாளமே சத்தியுடன் 'அ'கர வாச்சியப் பொருளான சிவமும் முதலாய்ச் சாரும் இடம் ஆகும்.  பிரகிருதியை விரும்பும் சீவனை சிவன் காமத்தொழிலில் ஈடுபடுத்தியதைக் குறிப்பது இது.
 
1234: கருத்துக்கேற்ப அமையும் :
சத்தியுடன் சிவன் சேரின் மூலப்பொருள் இல்லாமலே சங்கற்பத்தால் எல்லாம் தோன்றின. அத்தகு இயல்பு கொண்ட ஐம்பத்தோர் எழுத்துக்களாகிய சத்திகளும் சீவர்களின் அறிவில் பொருந்தி அவர்களது கருத்துக்கு ஏற்பப் பொருள் பிரபஞ்சம் அமையும்.
 
1235: அரிய அமுதமாய்ச் சத்தி விளங்குவாள் :
ஆஞ்ஞையின் மேல் விளங்குபவளாகிய சத்தி - தேவர்கள் வந்து வழிபட்டு அருந்திட அரிய அமுதமாகப் பிறைச் சந்திரனைப் போன்று சந்திரமண்டலத்தில் சிவத்துடன் விளங்கினாள்.
 
1236: சத்தி ஆன்ம ஒளியாகவும் இருக்கின்றாள் :
மூலாதாரத்திலிருந்து மேல் எழுகின்ற எழுச்சியை உடையவர் குழலில் விளங்கும் சத்தியின் தன்மையை அடைவர்.  இடாநாடியிலே விளங்கும் சந்திரமண்டலத்தில் பொருந்திய தவம் உடையவரிடம் சத்தி  ஆன்ம ஒளியாகவும் உள்ளாள்.
 
1237: வேண்டியதை அடைவர்; ஞானம் அடைவர் :
ஆன்ம ஒளியாக உள்ள பராசத்தியுடன் பொருந்தி சந்திரமண்டல ஒளியை உணர்ந்து அதில் பொருந்திய உயிர்களின் சிந்தையில் மறைந்திருந்த ஞானங்கள் தானே தோன்றி விளங்கிடும்.  அவர்கள் விரும்பியவை எல்லாம் கிடைக்கப் பெறுவர்.
 
1238: சத்தி ஆன்மாவுக்கு வெளிப்படுவள் :
பராசத்தியை வழிபட, விரும்பிய உருவை எய்துவதற்கான தூய வழியானது தோன்றும்.  எய்துவதற்கேற்ப பலகலை ஞானங்களை அவள் அளிப்பாள். ஆன்மாவிடம் பேதம் இல்லாது ஒன்றியிருப்பதை உணர்த்த - மான்விழி போன்ற கண்களை உடைய பராசத்தியும்,   காமனைப் போன்ற பரமசிவனும் எதிரில்
தோன்றி சான்றாய் வெளிப்படுவர். 
 
1239: சத்தியே பொருளாகவும் பொருளை அடையும் வழியாகவும் உள்ளாள் :
சத்தி ஆராயப்படுகின்ற அறிவினது எல்லையையும் கடந்து நிற்பவள். பரவாக்கு வடிவானவள். பிரணவ வடிவானவள்.  மயக்கத்தை உடையதாகி மிக்க களிப்பைஉடையவள்.  சிவந்த ஒளியில் விளங்குபவள்.   சிவத்தால் விரும்பப்படும் அழகினள்.   அறியப்படும் பொருளாகவும் அறிகின்ற வழியாகவும் அவளே
விளங்குகிறாள்.
 
1240: சத்தியைத் தியானித்தால் அறிவு குன்றாத சமாதி கிட்டப் பெறும் :
நெறியாய் நின்ற பராசத்தியை ஒரு கணமும் பிரியாது பரவாக்கு வடிவான சிவத்துடன் அவளது குறியைக் கொண்டு வழிபடுபவர் அறிவு குன்றாது அங்குப்பொருந்தி சமாதியில் அடங்கி இருக்கலாம்.
 
1241: மாலாங்கதியை விட்டு மேலாங்கதியை எய்த வேண்டும் :
மயக்கத்தை விளைக்கும் பிரமன், திருமால், உருத்திரன், மகேசுரன் ஆகியவர்களைவிட்டு - "பிரமன், திருமால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன், சூரியன், சந்திரன், அக்கினி, விண்மீன் ஆகிய ஒன்பதும் ஒடுங்கிடும்" - பிரணவ வடிவான சிவத்தை வணங்கி - தேனை அருந்திக் களித்த வண்டைப் போல் சிவசத்தி உருவமாய்த் திகழும் நிலையை அடைய வேண்டும்.
 
1242: யோக நெறியின் பயன் :
சகஸ்ரதளத்தில் விளங்கும் பராசத்தியுடன் கூடிய சிவத்தை வணங்கும் நெறியை உலகத்தவர்க்குக் கூறுங்கள்.  இந்திரன் முதலாக உள்ள எண் திக்குக் காவலர்களும் மற்றத் தேவரும் அசுரரும் வந்து உங்கள் அடிகளை வணங்குவர்.
 
1243: சத்தி வழிபாடு சிவத்துக்கு ஆகும் :
இடைவிடாமல் சொல்லப்படும் மந்திரமும் நறுமணப் பூவும், தூபமும், கவர்ச்சியைத் தரும் நறுமணப் பொருளும், இருளைப் போக்கும் தீபமும் கொண்டு சத்தியை வழிபடும் பூசையானது, வேள்வியில் இடும் அவியை ஏற்கும் இறைவனுக்குரிய அருச்சனையாக அமையும்.
 
1244: சிவனுக்கு ஆக்கம் தந்த சத்தியை வழிபட வேண்டும் :
சத்தியை ஒரு பக்கத்தில் கொண்டு உலகைத் தாங்கிய சிவன் அவளால் உண்டான ஆக்கத்தால் உலகத்தில் நிலைபெற்று நிகர் இல்லாதவனாகவும் அழிவில்லாதவனாகவும் இருக்கின்றான்.  அழகிய கிளியை ஏந்திய சுருண்ட கூந்தலை உடைய பார்வதி அன்று பரமனை ஒரு பக்கத்தில் கொண்ட பராசத்தி ஆனதால் அவளை வழிபடுக.
 
1245: சத்தி வழிபாடு செய்பவரை உலக மாதர் வணங்குவர் :
கரிய கொடியைப் போன்ற மாதும், உமையும், அன்பர்க்கு உதவும் தலைவியும், நல்ல கொடியைப் போன்ற மாதும், முச்சுடர்களை மூன்று சிறந்த கண்களாய்க் கொண்டு ஆஞ்ஞைச் சக்கரத்தில் விளங்கும் மாதும் ஆன சத்தியை வணங்கிப் போற்றுக. பொற்கொடி போன்ற பெண்கள் உன் அடிகளைப் போற்றித் துதிப்பர்.
 
1246:ஆதாரச்சக்கரங்களின் ஆற்றலைச் சத்தியை நினந்து மாற்றி அமைக்கலாம் :
பராசத்தியின் விரிந்த சுடர் மாலை போன்ற ஆதாரச் சக்கரங்களின் அசைவு கீழ் நோக்கிச் செல்லாது நீங்க, பத்தினியுடன்கூடி மூலாதாரத்தில் ஏற்படும் நாதத்தைக் கண்டத்தின் வழியாக உண்ணாக்குச் செல்லுமாறு கீழ் நோக்கும் அசைவை மேல் முகமாக ஆக்குக.
 
1247: சத்தியுடன் பொருந்தியிருக்க வேண்டும் :
சீவன் நஞ்சாகிய காமக் கழிவுகளைச் செய்யாமல் விந்து செயம் பெற்றுக் குண்டலினியை சிரசின் மேல் உள்ள ஒளி மண்டலத்தில் கொண்டு சேர்த்து அடக்கி - பிரிவு இல்லாமல் சிவசத்தியுடன் ஓர் உருவு ஆகும்.
ஒளி மயமான இறைவன் சீவனுக்குள் அடங்கியிருப்பது சீவனது அன்பின் பெருமையாலேயே  ஆகும்.
 
1248: சத்தியுடன் உலகத்தைப் படைத்தான் சிவன் என்பது உபசாரம் :
ஆண்டவன் எல்லா உயிர்களையும் வடிவாகக் கொண்டு விளங்குகின்றான். இதை  நன்றாக ஆராயின் - ஒலிக்கின்ற வளையலை அணிந்த பொன் ஒளியில் திகழும் மங்கையை இறைவன் மகிழ்வுடன் பொருந்தி உலகைப் படைத்தான் எனல் கற்பனையாகும்.  (உபசாரமாகும்).
 
1249: சிவனே உடலில் இருப்பவன்; தன் திருவடியில் சேர்ப்பவன் :
மாயையைச் சேர்த்து வைக்கும் சடையுடைய சிவன் - தன் பொற்பாதத்துடன் தொடர்பு படுத்தும் ஒளி மண்டலத்தில் விளங்கும் சீவனின் நுண்மை மண்டலத்திருமேனியைத் தன் கலவியால் செய்வான்.  அவனே உடம்பான கலவியுள் பொருத்தி மகாசத்திக் கூட்டத்துடன் சேர்த்து அந்தந்த உடலாகவும் அவன்
விளங்குகின்றான்.
 
1250: சிவத்துடன் கலந்ததால் உண்டான பயன் :
"சிவன் வேறு நாம் வேறு அன்று" என்பதை நான் அறிந்தேன்.  உலகத் தலைவனான ஈசனை - என் தனித் தன்மையை விட்டு ஒன்றிய போது - நான் பரந்த நிலையை அடைந்தேன். கீழே உள்ள உலகங்களின் தொடர்பை நீங்கினேன்.  முன்பு தளையில் ஈடுபடுத்திய ஆதி சத்தியின் அடியைப் பற்றி  அதன் பிரிவான
விருப்பு ஞானக்கிரியைகளை விட்டு மேல் நோக்கிய போது பந்தத்தினின்று நீங்கி சத்தியின் அருளைப் பெற்றேன்.
 
1251: கற்றதன் பயன் இறைவனை அடைதலே :
ஒன்பது சத்திகளுள் மேலான மனோன்மனியைத்  துணையாய்க் கொண்டவர் இறைவனின் அடிகளையே அழிவற்ற நல்லபயன் உடையது என்பர். கற்ற கல்வியின் பயனை அறிவார்க்கு மனோன்மனியின் திருவடியான பொன்னொளி திகழும் மண்டலத்தை அடைவது நிகர் அற்ற பேறாகும்.
 
1252: கனிவுடன் அம்மை என்னை நினையக் காரணம் யாது?
ஒப்பில்லாத தலைவனுடன் என்னுள்ளத்தை விரும்பி உறையும் இனியசத்தியினது இருப்பிடம் ஏழு உலகங்கள் என உரைப்பர். பனிமண்டலத்தைப் போல் திகழும் சகஸ்ரதள உச்சியில் கனிவுடன் என்னை நினைப்பது என்ன காரணமோ!  அம்மையே கூறுவாய்!
 
1253: சகஸ்ர தளத்தில் குண்டலினியும் இருத்தல்!
ஏழாம் உலகு என்ற சகஸ்ரதள நாயகியான மனோன்மனியே, நல்ல வீட்டுலகைச் செய்து ஞானச் செல்வியாய் இருப்பாள்.    எடுத்த உடலைப் பக்குவப்படுத்திய குண்டலினியும் அந்த வீட்டில் ஒரு மிக்க அமர்ந்தாள்.
 
1254: சிவசத்தியே உயிரை அறிந்து அருள் செய்யும் :
உடம்பு தோற்றத்துக்குக் காரணமான தாயும் தந்தையும் காதலால் ஒருவருக்கு ஒருவர் உறவு கொண்டனரே தவிர, என்னை அவர்கள் அறிய மாட்டார்கள்.   சிவனும் சத்தியும் ஆன்மாவும் ஒன்று பட இருந்ததில், என்னை எப்போதும் பிரியாத அம்மையும் அத்தனையும் வணங்கி நான் உய்வு பெற்றேன்.
 
9. ஏரொளிச் சக்கரம். 
எழுச்சி கொண்டு மேல் நோக்கிய ஒளி வடிவான சக்கரம்.   மூலாதாரத்தில் உள்ள அக்கினி எவ்விடத்தும் பரந்து எல்லாவற்றையும் தனக்குள்அடக்கிக் கொண்டு தான் ஒன்றாய் நிற்கும் நிலை.
 
1255:மூலாக்கினி சிரசில்சக்கரம்போல் விளங்க அதன் நடுவில் சிவம் விளங்குதல்:
மூலாதாரத்தில் தோன்றி எழும் நான்கு இதழ்களை உடைய தாமரை மிகுந்த ஒளி வடிவுடையதாம்.  தூலவிந்து மாற்றி அமைக்கப்படுவதால் எழுகின்ற ஒளி சிரசில் நாதமாய் அமையும்.    எழுகின்ற அக்கலை எங்கும் நிறைந்த பின்பு அதன் மையத்தில் தீ மயமான சிவம் விளங்கும்.
 
1256: மூலாதாரத்தில் உள்ள எழுத்துக்களே சிரசில் சக்கரமாய் அமையும் :
மூலாதாரத்தில் உள்ள வ, ச, ஷ, ச என்பவை பெருவன்மை கொண்ட எழுத்துக்கள்.  அவை மண் முதல் வான் வரை வளர்ந்தன. அங்கு அவை பெருமையுள்ள சக்கரமாய் அமைந்தன.  அவை அமைக்கின்ற முறையை அறிவோம்.
 
1257: மூலாதாரத்தில் உள்ள ஒலி அணுக்களே 144 சத்திகள் :
வீரியமாய்க் கீழே இருந்தது மாற்றி அமைக்கப்படுவதால் பன்னிரு கலைகளையுடைய சூரியனாகத் தலையில் விளங்கும். மூலாதாரத்தில் உள்ள அக்கினியாகிய வ, ச, ஷ, ச என்பவையே இங்கு ஒளிகளாகப் பொருந்தும்.  அவை மூலாதாரம்முதல் இடைகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்று நாடிகளிலும் பொருந்தி மேலுறும்.  அவையே நூற்று நாற்பத்து நான்கு கலையாற்றலாகத் தலையின் வட்டமாய் விளங்கும்.
 
1258: பிருதுவி தத்துவம் நுட்பமாய்ச் சிரசு ஒளி மண்டலத்தில் விளங்கும் :
"அம்" என்றதால் விளக்கச் சந்திர மண்டலம் மேலே அமையும். அந்த ஒளியுடன் அங்கு நாதமும் ஓங்கி நிற்கும்.  தலையின் மீது சந்திரமண்டலம் சிறந்து விளங்கினால் பூமி தத்துவம் நுட்பமாய் அங்கு அமையும்.
 
1259: நுட்பமாய் உள்ளவையே தூலமாய் இறைவன் சங்கற்பத்தால் விரியும் :
மேல் விளங்கும் மண்டலம் உலகமாய் விரிந்தது. அங்கு விளங்கும் விந்து நாதங்களே உலகமாய் விரிந்தது.  அதற்குள் விளங்கும் இறைவனின் சங்கற்பமே உலகமாய் விரிந்தது.  சூரிய சந்திர மண்டலங்களில் உள்ள நுட்ப ஒலியே பருஉலகமாய் விரிந்தது.
 
1260 & 1261 நில, நீர், நெருப்பு, காற்று, வான் மண்டலங்களின் தோற்றம் :
அகர கலை விரிந்து விந்து நாதமுமாய் விளங்கியது. அதில் சக்கரமானது விரிந்து விளங்கும்.  அங்கு முதலில் காணப்படுவது நில (பூமி) தத்துவம்.  மேலும் விரிந்தபோது நீர் மண்டலம் அமையும்.  அச்சக்கரம் நீராய் விரிந்த பின்பு நீரினில் நெருப்பு தத்துவம் விளங்கியது.  நீருக்குப் பின் காற்றுத் தத்துவம் அமைந்தது.  அதன் பின் வானத் தத்துவம் தோன்றியது.
 
1262: வான் எழுத்துச் சிவானந்தம் அளிக்கும் :
வானுக்குரிய அடையாள எழுத்து "அ." அகரமான வான் அடையாள எழுத்துச் சிவானந்தத்தை ஒருவனுக்குத் தரும்.  பஞ்ச பூதங்களின் அடையாள எழுத்துகள்.   நிலம் - ல,   நீர் - வ,   நெருப்பு - ர,   காற்று - ய,   வான் - அ.
 
1263: பத்து நிலைகளையும் கடந்தால் சிவம் விளங்கும் :
ஏரொளிச் சக்கரம் பத்து ஒளி வட்டத்தால் ஆனது.  இச்சக்கரத்தை நாதம் முதலாக கொண்டு அறிந்து கொள்க.  அந்தந்த மண்டலத்துக்குரிய தலைவர்கள் அங்கங்கு உள்ளனர் என்க.  இறுதியில் உள்ளது சிவசூரியன் என அறியவும்.
 
1264: பிரணவத்தினின்றே எழுத்து வடிவான யாவும் தோன்றின :
முதல் ஆறு சக்கரங்களில் உள்ளது பிரணவமான ஆதி எழுத்தாகும்.அவை சத்தி எழுத்துக்களாகும்.   இதற்கு மேல் உள்ள நான்கு சக்கரங்களும் சூரிய, சந்திரர்களின் சேர்க்கையினால் சோதி மண்டலம் ஆகும்.  இந்தச் சோதி மண்டலத்தில் இருந்தே எழுத்து வடிவானவை தோன்றுகின்றன.
 
1265: முடிவான எழுத்துக்கள் :
மூலாதாரம் முதலாக உள்ள ஆறு சக்கரங்கள் நூற்றுநாற்பத்துநான்கு கலைகளாக விரியும்.  ஆறு ஆதாரங்களுக்கும் நடுவில் தோன்றி எழுவது நெருப்பு விளங்கும்அக்கினி நாடியாகும்.   வன்னி எழுத்துக்கள் ஆறு ஆதாரங்களுடன் அமைந்து முடிவாகவும் முதலாகவும் அவை திகழும்.
 
1266: நாதத்தைக் கடந்து சிவத்தை அடைய வேண்டும் :
மேலே கூறிய அந்தமான எழுத்துக்கள் முடிவாகிய சூக்குமம் முதலிய தூலமும் நீங்க விசுத்தி ஆஞ்ஞைச் சக்கரங்களும் முடிகின்றன.  அதனால் பதின்மூன்றாம் எழுத்தான "ஓ"கரத்தில் அமைந்த பின் அதன் மேல் உள்ள மண்டலத்தில் ஏறிக் கடப்பதே முடிவாம்.
 
1267: நாள்கள் முதலியவை உண்டாதல் :
அத்தகைய காலம் முந்நூற்று அறுபது நாள்கள். பதினைந்து நாள்கள் பட்சமாகும்.  ருது (பருவம்) ஆறு. மாதம் பன்னிரண்டு.   அவையெல்லாம் சூரியன் தோற்றத்தால் வந்தவையாகும்.
 
1268: ஓரைகள் அமையுமாறு :
பகல் இரவு காலங்கள் வானம் முதலாக ஆறு ஆறு நாழிகையாய் உள்ளன.  ஓரையும் (இராசியும்) முப்பது கலைகளாய் வரும்.  ஆண்டுக்குக் கலைகள் முந்நூற்றறுபது.   இதை வகுத்துப் பார்க்கச் சூரியன் செல்லும் பன்னிரண்டு ஓரைகள் (இராசிகள்) விளங்கும்.
 
1269:சூரிய வீதி மூன்றாக உள்ளது :
சூரிய வீதியானது மூன்றாய்ப் பகுக்கப்பட்டுள்ளது.  அவை
(1) மேட (ஆடு) வீதி.       - இடபம், மிதுனம், கடகம், சிம்மம்.
(2) இடப (ஏர்) வீதி.        - கன்னி, துலாம், மீனம், மேடம்.
(3) மிதுன (தண்டு) வீதி.  - விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம்.
ஓரைகள் (இராசிகள்) எல்லாம் இம் மூன்று வகையினவாம்.
 
1270: இராசியுள் சக்கரம் ஒளிமயமாய் விரிந்து விளங்கும் :
சூரியன் வீதியாய், இராசியாய் இருப்பது தலையில் உள்ள சகஸ்ரதளம்.  சக்கரம் என்பது உடலில் உள்ளது.  ஆறு ஆதாரங்களும் காரியப் பகுதிகளாகும். சகஸ்ரதளம் விந்து இயக்கத்துக்கும் நாத இயக்கத்துக்கும் ஏற்றபடி மென்மை பெறும்.  அவ்வாறு மென்மையானால் பயிற்சியாளனின் வழிபாட்டுக்கு ஏற்பச் சகஸ்ரதளத்தில் அசைவு உணர்ச்சியும் ஒளியும் அமையும்.  இந்த உணர்வானது சிரசைத் தாண்டினபோது அந்தச் சகஸ்ரதளம் நிமிரத் தொடங்கும்.
 
1271: எழுத்துக்களின் இயக்க விளைவு :
சூரியன், சந்திரன், அக்கினி கண்டத்தில் உள்ள எழுத்துக்கள் எல்லாம் அவை அவை தன்மைக்கேற்ப அசைவைத்  தூலத்தில் கீழேயும், சூக்குமத்திலும் அமைக்கின்றன.  இவ்விதம் தலையில் அமையும் சந்திர சூரிய அக்கினி மண்டலங்கள் ஒப்ப வளர்ந்த பின்பு ஆன்மா என்ற தாரகை முழுமையாகிவிடும்.
(ஒவ்வோர் எழுத்தும் ஒவ்வோர் ஆதாரத்தில் நினைத்த போது அசைவை உண்டுபண்ணி ஒளிமயமாக் ஆன்மாவை நிறைவு அடையப் பண்ணும்.)
1272: நட்சத்திர அறிவே ஆன்ம சொரூபம் :
சகஸ்ர தளம் நாள் மீன்களின் ஒளிகளாய் ஆகியது.  இத்தகைய நாள் மீன் ஒளிகளுக்கு மேல் பேரொளியின் பிழம்பாம் சிவம் இருக்கின்றது.  இந்த நாள்மீன் ஒளியில் சந்திரனாலான அறிவும் சூரியனாலான அறிவும் அமைந்து விளங்கும். நாள் மீனின் சுருக்கமான அறிவே ஆன்மாவாகும்.
 
1273: தலைக்கு மேல் கரிய மேகம் போன்ற ஒளி விளங்கும் :
இவ்வாறான சக்கரம் ஒளி வளர்ந்து ஆனது ஆகும்.  ஒளிக்குப் புற எல்லையில் நாதம் அமைந்திடத் தோன்றும் தீக்கொழுந்து தீபத்தைப் போல் ஒத்து  விளங்கிய பின்பு அப்புறம் கருமையான ஒளி போல் காணப்படும்.
 
1274: சீவரின் அண்ட கோசமும் ஒளிமயமாக வேண்டும் :
ஓவ்வொரு உயிரிலும் சூழ்ந்துள்ள அண்டமே உலகு எங்கும் கலந்துள்ளது.  ஊழி முடிய இவை நிலையாக உள்ளத்தைக் காணும் போது இந்த அண்ட கோசமே சீவர்களின் மூலம் போன்றது.  இந்த அண்டம் ஒளிமயமாய் ஆவது அதற்கு வலிவு தருவதாகும்.
 
1275: உயிரின் அண்டகோசமும் ஒளிமயமாக வேண்டும் :
ஒவ்வோர் உயிர்ப் பொருளிலும் சூழ்ந்திருக்கும் அண்டமே உலகு எங்கும் கலந்துள்ளது.  ஊழி முடிய இவை நிலையாக உள்ளத்தைக் காணும் போது இந்த அண்ட கோசமே உயிர்களின் மூலம் போன்றது.  இந்த அண்டம் ஒளிமயமாய் ஆவது அதற்கு வன்மை சேர்ப்பதாகும்.
 
1276: ஓளியும் ஒலியும் ஒத்திருக்க வேண்டும் :
விந்துவும்(ஒளியும்) நாதமும் (ஒலியும்) ஒத்து இருந்தால் வானக் கூற்றான அண்டகோசத்துக்கு விதையைப் போல் விளங்கும். அதாவது எண்ணம்,  செயல் ஆகியவை ஒத்திருந்தால் அண்டகோசம் விருத்தி அடையும். ஐம்பூதங்களும் அக்கினிக்கலைகளான எட்டும் சேர்ந்தும் ஆன்ம ஒளி அமைய வேண்டும். வான்கூற்றில் உள்ள எட்டு அணுக்கள் கொண்டது ஒரு தூல வீரிய ஒளி அணுவாகும்.  ஒளி (விந்து) குறைந்து நாதம் (ஒலி) மட்டும் எழுந்து நின்றால் ஒளியைவிட ஒலி எட்டு மடங்கு கூடுதல் எனப் புகல்வர்.
 
1277: ஒளி அணுக்கள் விந்து நாத மண்டலங்களை அமைக்கும் :
ஒளி அணுக்கள் இரண்டு வகையாய் உள்ளன. அவை மேலே போய் அண்டகோசத்தில் விந்து நாத மண்டலங்களை அமைக்கும்.  இந்த வகையான ஒளி அணுக்களும் நாத அணுக்களும் ஒத்த பின்பு அண்ட கோசமானது விரிவை அடைந்து விந்து மண்டலங்கள் ஆகும்.
 
1278: விந்து மண்டலத்தின் இன்றியமையாமை :
விந்து விரிந்த போது வீசமாகிய ஒளி அணுக்கள் மறையும்.  விந்து விரியும் தன்மைக்கு ஏற்ப நாதமும் அமையும்.  விந்துவைக் கட்டுப் படுத்தினால் எட்டும், எட்டுமான சந்திர கலை பதினாறும் அமையும்.  அதனால் ஒளி மண்டலம் விரிந்து ஒளி பீஜங்களாய் அமையும்.
 
1279: விந்துவே சிவத்தின் திருவடியை விளக்குவது :
தோன்றிய எல்லாம் விந்துவைக் (ஒளியைக்) காரணமாய்க் கொண்டவை. விந்துவால் விளைந்ததே உயிர்.  இந்த உலகம் எல்லாம் விந்துவைக் காரணமாய்க் கொண்டே உண்டாயின. சிவத்தினது திருவடியை விந்துவான ஒளியே விளக்கும்.
 
1280: பிரணவமே விந்து நாதமாய்ச் சக்கரமாக அமையும் :
எல்லா எழுத்துக்களுக்கும் மூலமான பிரணவமும் விந்து நாதத்தால் ஆனது.  அதுவே தலையில் சக்கரமாக அமைந்தது.  அந்தப் பிரணவம் உடம்புள் நிற்கும்.   அது எல்லா எழுத்துக்களும் சேர்ந்த மந்திரமாகும்.
 
1281: பிரணவத்தைத் தியானிக்கச் சிவம் விளங்கும் :
மந்திரம் சக்கரம் ஆகியவற்றைச் சொன்னால், பிரணவ எழுத்து ஒளி வட்டமாக உள்ளே காணப்படும்.    கண்டத்தில் வைகரியாய் நிறுத்தி எண்ணுவதிலும் தகடுகளில் ரேகை கீறிக் காண்பதிலும் பயன் ஏதும் இல்லை.  ஸ்பந்தமாக (அசைவாக) உள்ள பிரணவத்தை முதன்மையாய்க் கொண்டு தியானம் செய்யவும்.
 
1282: பிரணவ சக்கரம் அமைந்தால் உண்டாகும் பயன் :
அக வழிபாடாகச் செய்யப்படும் பிரணவ வட்டத்தில் பொருந்தி விளங்குகின்ற மந்திரம் பின்பு இடப்பட்ட சக்கரக் கோடுகளை விட்டுத் தவறுவது இல்லை.  தன்மாட்டு உண்டான தடைகளான அஞ்ஞானம் பின்னிடச் சொல்லப்பட்ட மந்திரத்தை ஆராய்தலுமாகும்.  பிரணவச் சக்கரம் அமைந்தால் சீவர்களைக்
கட்டுப் படுத்தியிருக்கும் தடைகள் யாவும் நீங்கும்.
 
1283: ஏரொளிச் சக்கரத்தை உணர்பவர் சிவனை அடையலாம் :
ஏரொளிச் சக்கரத்தை உணர்பவர்க்கு, அது பிறப்பு இறப்புகளான பகையை அறுத்து உள்ளத்தைக் காக்கும்.  ஏரொளிச் சக்கரம் சிந்தனையில் நல்ல வழியைக் காட்டும். ஏரொளிச் சக்கரம் நுட்பமான வற்றுக்கெல்லாம் நுட்பனாம சிவத்தை அன்புடன் அடையச் செய்யும்.
 
1284: இதன் பெருமையைக் கூற இயலாது :
ஏரொளிச் சக்கரத்துக்கு முதல் எழுத்து "அ"கரமாகும்.  அதன் மேல் எழுத்தான அம்மை எழுத்து "உ"கரம்.    இந்தச் சக்கரத்தில் மாயா செயலான நிலம், நீர், நெருப்பு, காற்று என்னும் நான்கு பூதங்களும்  பொருந்தி நிற்கும்.  இப்படி எல்லாம் கூடி நிற்கும் சக்கரத்தைப் பற்றிக் கூறமுடியுமோ!
 
1285: ஆறு இயல்புடையன மந்திரம் !
தெளிவான ஐந்தெழுத்துடன் கூடியது மாரணம்.  அதை மாறுபட்ட இயல்புடையதாய் மதித்துக் கொள்பவர்க்குச் சொல்லப்பட்ட சக்கரத்துடன் எழும் மந்திரமானது "தம்பனம், மோகனம், உச்சாடனம், வித்வேடனம், மாரணம், வசியம் ஆக ஆறு செயல்களைச் செய்வனவாய் அமையும்; விரியும்.
 
1286: பகையை வெல்ல ஐம்பூதங்கள் துணை செய்யும் :
எல்லா உயிர்களுக்கும் அருள் செய்பவள் எனக் கருதப்படுகின்ற அம்மை குறித்த சக்கரத்தின் முதல்வியாகும். அம்மையை மதிப்பவர்க்கு அன்னை ஒத்து  பகையை வெல்லத் துணை செய்வாள். அம்மையின் ஆணையின்றி  எதனையும் செய்யாத ஐந்து பூதங்களும் அம்மையோடு உடன் எழுந்து தொழில் செய்யும்.
 
1287: பகை இல்லாமல் செய்யும் :
தனக்குள் தேடித் தெளிவு கொண்ட அடியார்க்கு உண்டான தம்பனம் மாரணம் வசியம் என்பவை இயல்பாகவே வந்து பொருந்தும்.  இவர்களின் இருப்பிடத்தில்பகைவரும் வந்து அடையமாட்டார்.
 
1288: மூலாதாரச்சக்கரத்துள் 'அ'கரத்தைத் தியானிக்க வேண்டும் :
மூலாதாரத்துள் இருக்கும் சக்கரத்தைத் தெளிந்து அறிந்து கொள்வாயாக!  கனிந்த குழைவான 'அ'கரத்தை அந்நடுவில் குளிர்ந்த குண்டலினியின் சுற்று வட்டத்துள் வைத்து, மூலவாயுவை அங்கிருந்து சுழுமுனை வழியாக உயரத்தில் கொணர்க.
 
1289: பிரணவத்தை விரும்பிக் காமம் முதலிய பகைகளை விடுதல் வேண்டும் :
கால் எனப்படும் இடக்காலின் பெருவிரல், அரை எனப்படும் சுவாதிட்டானம்,முக்கால் எனப்படும் சுழுமுனை இம்மூன்றும் பொருந்தி பிரணவம் விளங்கும்.  பிரணவத்தை விரும்பிப் பரந்து விரிந்து காமம் முதலான ஆறு பகைகளயும் விட்டவர்க்கே விருப்பத்தைத் தரும் இம்மந்திரம் செயல்படும்.
 
1290: பிரணவ வழியில் போய்ச் சிவனை வழிபடுக :
கூத்தப் பெருமானின் எழுத்தான இந்தப் பிரணவ மந்திரம் முன்பு வெளிப்படாது நின்று உள் நாக்குப்பகுதியிலிருந்து அதன் பகைவர்களை மாற்றி வெளிப்பட்டுத் தலையை நோக்கிச் சென்று சகஸ்ரதளம் விரியுமாறு ஒளியுடன் விளங்கும்.  அவ்விடத்தில் விளங்குவது சிவம் என்று அறிக.
 
10. வயிரவச் சக்கரம் :
வயிரவர் சிவபெருமானின் வடிவங்களுள் ஒன்று. பகை முதலிய இடையூறுகளைப் போக்குவதற்கு இவரை அடையறாது வழிபடுவது வழக்கம். வயிரவர்க்கு உரியதுவயிரவச் சக்கரம்.
 
1291: வயிரவரைப் பத்து இடங்களில் தியானம் செய்க :
வளர்பிறையில் பிரதமை , துவதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சட்டி என்னும்திதி வரை ஆறு ஆதாரங்களிலும் வயிரவரைத் தியானிக்க வேண்டும்.  சத்தமிக்கு மேல்  அட்டமி  குற்றமுடையது.   நவமி திதியில் நெற்றிக்கு மேல் தியானிக்க வேண்டும்.  ஏகாதசியில் வலக்காதின் பக்கம் தியானிக்க வேண்டும். திரையோதசியில் பிடரிப்பக்கம் தியானிக்க வேண்டும்.    பௌர்ணமியில் இடக்காது பக்கம் தியானிக்க வேண்டும்.  இங்ஙனம் வயிரவரைத் தியானிக்க வெற்றி ஏற்படும்.
 
1292: பகைவனை வெல்லலாம் :
வயிரவரைத் தியானம் செய்பவரின் மனத்தில் வயிரவர் தோன்றுவார்.    அவர் சூலத்தையும் கபாலத்தையும் ஏந்தியவராக விளங்குவார்.  அவர் பகைவன் மீது அருள் காட்டாததால், பகைவனை வெல்லலாம்.  பகைவன் இறந்து விட்டதால் அவன் உடலை எப்படி வேண்டுமாயினும் பந்தாடலாம்.
 
1293: வயிரவரின் கோலம் :
உயிர்களின் பக்தியை மேற்கொண்டு அவை விரும்பும் வண்ணம் திருவருள் காட்டுபவர் வயிரவர்.  தருமத்தையும் பாசத்தையும் விளக்க இரண்டு கைகளிலும் கபாலமும் சூலமும் ஏந்தித் தோன்றுவார். வயிரவர் தண்டிப்பார் என்பதை விளக்கமற்ற  இரண்டு கைகளில் உடுக்கை என்ற கருவியும் பாசம் என்ற கயிறும் ஏந்தித் தோன்றுவார். தண்டித்ததின் சாட்சியாகத் தன் ஐந்து ஆறாம் கைகளில் தலையும்
வாளும் உடையவராய் விளங்குவார்.
 
1294: மனம் பொருந்தித் தியானம் செய்க :
ஆறு கைகளையும் அவற்றில் பொருந்திய ஆயுதங்களையும் மனம் பொருந்தித் தியானம் செய்க. அப்பெருமானின் மேனி செந்நிறமாக விளங்கும். அவர் தூயவர் மனத்தகத்தே விளங்குவார்.    ஓலியைப் பொருந்தி உடலைக் கடந்து நின்று பூசனை செய்க.
 
1295: பூசனை முறை :
அப்பெருமானை ஓர் ஆயிரம் உருச்செபித்து வழிபடுக.  பூசனைக்கு நல்ல தேனை விரும்பிப் படைக்க.  பூசனைக்குச் சாந்து புனுகு ஆகியவற்றைச் சாத்திப்பகை நீக்கம் செய்க.
 
1296: நிவேதனத்தை மனத்தால் நினைத்து வழிபாடு செய்க :
நாம் விரும்பும் வண்ணம் நம் பகைவர்களுக்குள் கலகமும் உண்டாகிவிடும்.  விரும்பிய அறு செயல் கலையை உண்மையாய்ப் பெற்ற பின்பு நீ விரும்பியபடி நடக்கலாம்.  அப்போது உனக்கு வேண்டிய எல்லாம் உனக்குக் கிடைக்கும்.
 
11. சாம்பவி மண்டலச் சக்கரம் :   சிவசத்தி விளங்கும் சிவலிங்க மேனி நிறைந்த சக்கரம்.  அதலால் இது சாம்பவி சக்கரம் எனப்படுகிறது.
 
1297: சாம்பவி சக்கரம் அமைக்கும் முறை :
சாம்பவி மண்டலச் சக்கரம் அமைப்பைச் சொல்வதானால், எட்டு வரை கீறுதல் அல்லது எட்டு இதழ்த்தாமரை அமைத்தல் வேண்டும்.  அதன் சிறந்த பகுதியாய் உள்ளவை நான்கு.  அதில் ஒளி (விந்து), ஓசை (நாத), சத்தி, சிவம் என்னும் நான்கும் அமையப் பெறும்.  அவற்றுள் கண்ணாகக் காணப்படுவது விந்துவாகும்.  இதனை நாம் உணர்ந்து ஒழுகினால் நாட்டார்கள் நம்மை அறிந்து வழிபடும் நிலை உண்டாகும்.
 
1298: சாம்பவி மண்டலச் சக்கர வீதிகள் முறை :
நாடறிந்த சாம்பவி சக்கரத்துள் கோணுதல் முதலியவை அகல, இரண்டு பக்கங்
களிலும் வீதிகளை அமைக்க வேண்டும்.  சிறந்ததாகக் காணப்படும் எட்டு இதழ் நடுவில் உள்ள பதினாறு வீதிகளுள் இதழ்கள் அகல நான்கு பக்க மூலைகளும் அவற்றில் இடை இடம் நான்கும் நடு இடமும் ஆகும்.
 
1299 & 1300 சாம்பவி மண்டலச் சக்கரம் :
சாம்பவி மண்டலச் சக்கரம் இருபது வரைகளைக் கொண்டது.  நடுவில் நல்ல லிங்க வடிவம் நான்கு நாற்கோணங்களில் நான்கு நான்கு இலிங்கம் இடைவெளி நான்கில் நான்கு பூக்கள்.  நடுவிலும் அப்படியே பூ.  இப்படி அமைய வேண்டும்.இதில் நடு வீதியில் 'க'காரம் முதல் 'ஷ'காரம் வரையுள்ள முப்பத்தைந்து எழுத்துக்களையும் 'சிவாயநம' என்ற ஐந்து எழுத்தையும் வேறுபட்ட நிறத்தில் வலமாக எழுதுக.  அதுவே தூய்மையான சிவாயநம என்று அறியுங்கள். தெளிந்த பின்பு கூறுங்கள்.  பயிற்சியாளர்க்குக் குறை ஏதும் இல்லை.
 
1301: இறப்பு உண்டாகாது :
சாம்பவி மண்டலச் சக்கர உண்மையை சொல்லில் குறைவு ஏதும் ஏற்படாது.  ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்த இறைவனின் திருவடியை அடையவும் கூடும்.  வேதமானது கூறும் கூற்றும் அப்பிரணவத்து ஒலியே என்று இப்படி உணரவல்லார்க்கு இறப்பு உண்டாகாது என்று சான்றோர் உரைத்துள்ளனர்.
 
1302: பொருள் முதலியன சாம்பவியால் உண்டாகும் :
வெளியே காணப்படுகின்ற பொருளும், உள்ளே மனத்தகத்துக் காணும் தெய்வமும், போற்றப்படுகின்ற ஊரும், நன்மைகள் பெருகும்புண்ணிய தீர்த்தமும், உணவும், உணர்வும், உறக்கமும், முயலாமலேயே வந்தடையும் பொன்னும் ஆகிய எல்லாம்இச்சாம்பவியால் உண்டாவன ஆகும்.
 
1303: நினைத்தவை நடக்கும் :
ஒருவர் சிவாய நம என்று சொல்லும் போது மூலாதாரத்தினின்று நமசிவாய என்பது தோன்றும்.  அந்த ஐந்தெழுத்து நாதமாகிய ஓசையின் வழியே போகும் இடமான உச்சித் துளை (பிரமரந்திரம்) வழியே சென்றால் நாம் எண்ணிய செயல்களை எல்லாம் செய்ய முடியும்.  உலகத்தில் ஒருவரும் பகையாக மாட்டார்.
 
1304: சாம்பவிச் சக்கரத்தை வணங்குபவர் அடையும் பயன் :
சாம்பவி மண்டலத்தை வணங்குபவரிடம் பகை இல்லை. நகைப்புக்குரிய நிகழ்ச்சிகளும் இடம் பெறா. நாடோறும் நன்மைகள் உண்டாகும்.தீவினைகளும் அவற்றால் உண்டாகும் பிறவியும் இல்லாமற் போகும்.  தடை ஏற்படாது.  நீர் போல் குளிர்ந்த குணம் உடையவராக இருப்பர்.
 
1305: ஆனந்த வடிவம் முதலியன சாம்பவியால் நிகழும் :
எல்லாரும் சாம்பவியை ஐந்தெழுத்தால் வணங்கலாம்.  அதனால் எவரும் அறியாத ஆனந்த வடிவம் உண்டாகும்.  நிலம் முதல் வானம் வரை சூரிய,சந்திரமண்டலம் ஆகவும், மேலான உடலில் உயிராகவும், உயிரில் உணர்வாகவும் அந்தச் சாம்பவி சக்கரம் விளங்கும்.
 
1306: தத்துவங்களின் நிலை :
சிவாயநம என்று சிந்திப்பவர்க்கு, உள்ளே உந்தியினின்று தலைமுடியப்பிரணவம் தோன்றி எழும்.  அந்தப் பிரணவமே திருவைந்தெழுத்து வடிவான முதல் நிலை ஆகும்.  சிவனும் சத்தியும் நாத விந்து தத்துவங்களினின்று உடலைக் கொண்டு வரும். திரும்பவும் சத்தி சிவத்தை எண்ணிய போது தத்துவங்கள் விந்துவிலும் விந்து நாதத்திலும் இலயம் அடையும்.
 
12. புவனாபதி சக்கரம் : புவனை சத்தியின் பெயர்களுள் ஒன்று.   அப்பெருமாட்டிக்குரிய சக்கரம் புவனாபதி சக்கரம்.
1307: இம்மை மறுமையைப் புவனாபதி அளிக்கும்:
'க, ஏ, ஈ, ல, ரீம்' முதலிய ஐந்து எழுத்துக்களும் வாக்பவகூடமாகிய பொன்னிறம்.
'ஹ, ச, க, ஹ, ல, ‹ரீம்' முதலிய ஆறு எழுத்துக்களும் காமராஜ கூடமாகிய செந்நிறம். 
'ச, க, ல, ‹ரீம்' முதலிய நான்கு எழுத்துக்களும் சத்திகூடமாகிய வெண்ணிறம்.
வாக்பவகூடத்தில் 'க, ஏ, ஈ, ல' முதலிய ஐந்து எழுத்துக்கள் முறையே சிவன்,சத்தி, மதன், அவனி ஆகியோரைக் குறிக்கும்.
காமராஜ கூடத்தில் ஹ, ச, க, ஹ, ல, ‹ரீம்' முதலிய ஆறு எழுத்துக்கள் முறையே சூரியன், சந்திரன், மன்மதன், ஹம்சம், இந்திரன் ஆகியோரைக் குறிக்கும்.
சத்தி கூடத்தில் ஹ, ச, ல' முதலிய ஆறுஎழுத்துக்கள் முறையே பரை, மன்மதன்,மால் ஆகியோரைக் குறிக்கும்.
'சு'கரத்தை ஆதியாக மூன்று பகுதியை உடைய இம்மந்திரம் இம்மை மறுமைப் பயன் இரண்டையும் அளிக்கும்.
 
1308: புவனாபதி மந்திரமே சிவத்துக்குரிய வடிவம் :
ஆராயும் போது நான் உரைக்கும் உரை இதுவே ஆகும். இம்மந்திரவடிவமான புவனையைத் தவிரத் தெய்வம் வேறுஇல்லை. நான் ஒன்றைச் சொல்லக்கேட்பாய்! வாரி (மேகம்) போன்ற முக்கோணத்தில் மனம் நித்தியானந்தத்தையும் அகண்டத்தையும் விரும்பின், அதுவே சிவனது வடிவம் என அறிக.
 
1309: பராசத்தியே எட்டாக உள்ளது :
எட்டுச் சத்திகள் ஒன்றான போது ஏக பராசத்தி ஆவாள். அந்த ஏக பராசத்தியே இறைவனுக்குத் திருமேனி ஆவாள். சிவகுருவோடு பொருந்தி நிற்பாள். அவளதுதிருமேனி வித்தையாகும். அது சித்தியையும் முத்தியையும் அளிப்பது.
 
1310: புவனை வித்தையின் பயன் :
எட்டு சத்திகளும் எட்டு அங்கங்களையுடைய யோகத்துக்கு அங்கமாகும்.  நாதாந்தம் கைகூடப் பெற்றவர்க்கு இந்த எட்டும் கலப்பித்தல் அமையும். விருப்பத்தை விளைவித்துப் போகத்தில் செலுத்தும் வீர்யமும் அற்று நீங்கும்.  பெண் இன்பத்தில் நாட்டம் உடைய கீழானமக்களுக்கு அடைய முடியாததாகும்.
 
1311: அறுகோணமாய் அமைக்க வேண்டும் :
எல்லாப் பயனையும் தருவது இயந்திரத் தலைவனாகிய புவனாபதிச் சக்கரத்தின் திருவடியாகும்.   அதனை அறிந்து, அவள் மந்திரத்தைக் குருவால் பெற்று அதனை உடம்பில் நிறுத்திப் பயிலவும், ஆன்மா உடலில் மந்திரத்தாத்துவாக நிலைக்க உறுப்புக்களைச் சிவனின் அங்கங்களாகக் கருதி உன் பிறவி வேர்
நீங்குமாறு செப்புத் தகட்டில் அறுகோணம் அமைக்க.
 
1312: புவனாபதி சக்கர அமைப்பு முறை :
மேற் சொல்லப்பட்ட அந்த அறு கோணத்தில் ‚ம் ‹ரீம் என்ற பீசங்களை எழுதுக.  அந்தக் கோணம் ஆறின் உச்சியிலும் ஹிரீங்காரம் இட்டு, எல்லாக் கோணங்களையும் சூழ அழகிய வட்டம் எழுதி, பின்னர் அதன் மேல் பதினாறு உயிர் எழுத்துக்களையும் 'அ' முதற் கொண்டு எழுதுக.
 
1313 & 1314: இதுவும் அது :                                                                                                                        மேற் சொல்லப்பட்டபடி எழுதப்பட்ட இதழ்களின் நடுவில் உள்ள வெளியில் எட்டு 'ஹ' என்னும் எழுத்தையும் 'உ' என்னும் எழுத்தையும் சேர்த்த ‚ எழுதி அணுக.  இதழ்களின் மேலே 'கிரோம்', 'சிரோம்' என்பனவற்றை எழுதி அதன் இடப்பக்கத்தில் 'ஆம்கிரொம்' என எழுதுக.  அச்சக்கரத்தின் மீது
வலப்பக்கத்தின் மீது மாலையைப் போல் 'கிரோம்', 'சிரொம்' என்று எழுதிட வேண்டும். குற்றம் இல்லாத 'ஹிரீம்' என்ற பீசத்தால் சக்கரத்தைச் சூழ்ந்து புவனாபதி சத்தியைப் பூசனை செய்க.
இம் மூன்று மந்திரங்களும் புவனாபதி சக்கர அமைப்பை விளக்குகின்றன.
 
1315: மனப் பூசை செய்தல் :
புவனாபதியை வழிபடும் போது "காமம் முதலான குற்றம் நீங்கிய உள்ளத்தில் நிலை பெறுதல் வேண்டும்" என வேண்டி அதற்குரிய மந்திரங்களைச் சிந்தித்து உயிர் கொடுத்து அங்கே நிறுத்தி ஒளி விளங்குமாறு தியானம் செய்ய வேண்டும்.
 
1316: புவனையின் தோற்றம் :
சிவந்த மேனியை உடையவளாய்ச் செந்நிறப்பட்டுடை பூண்டு, கையில் அங்குசம் பாசம் அபய வரதத்தையும் கொண்டு திருமேனியில் அணிகலன்களையும் மணி யணிகளையும் அணிந்து தூய முடியுடன் வடிவு கொண்டு தோன்றுவாள்.
 
1317: நிவேதனம் செய்யும் முறை :
உடம்பைக் கடந்து ஒளி மண்டலத்தில் நின்று துதித்து, நூல் முறைப்படி பூசனை செய்து, பால் சோற்றை மந்திரத்தால் செபித்து, நான்கு திசைகளிலும் "நாரதாய சுவாகா" என்று சொல்லி நிவேதித்துச் சிறப்பாக நிர்மாலியத்தைப் போக்கிப் பின்பு
பிரசாதத்தை உண்க.
 
1318: பூசைக்குப் பின்பு புவனாபதியை மனத்தில் பதித்துக் கொண்டால் எல்லா நலமும் ஏற்படும் :
படைக்கப்பட்ட படையலை உண்பதற்கு முன்பு தேவியை உன்னிடம் கலந்திருப்பதாகக் கண்டு இதய கமலத்தில் பொருந்திக் கொண்டு, அங்கு யாவராலும் கண்டறிய ஒண்ணாத புவனாபதியை மனத்துள் கொண்டு வழிபடுக.  பின் அவள் நீ நினைத்தவை எல்லாம் அளிப்பாள்!
 
13. நவாக்கரி சக்கரம் : ஒன்பது எழுத்துக்களைப் பீசமாகக் கொண்ட தேவி மந்திரம் அமைந்த சக்கரம் :
 
1319: அமைப்பு முறை :
நவாக்கரி சக்கரத்தில் ஓர் எழுத்தான அம்மையே ஒன்பது எழுத்துக்களைக் கொண்ட தேவி மந்திரமாக, அதுவே எண்பத்தொரு வகையாக விளங்கும்.  அந்த நவாக்கரி"கிலீம்" முதல் "சௌம்" இறுதியாய் விளங்கும்.  இந்த ஒன்பது பீச எழுத்துக்களுள் ஒவ்வொன்றும் முதலெழுத்தாய் மாறி எழுதப்படும். 
இதில் எண்பத்தோறு எழுத்துக்கள் இருக்கும்.
 
1320: உச்சரிக்கும் முறை :
முதலில் சௌ, ஔ, ஹௌ, கிரீம், கௌ, ஐ, இரீம், கிரீம், கிலீம் என்ற இவை ஒன்பதும் மந்திர உறுப்பாய்க் கொண்டு இவற்றோடு கிலீம் மந்திரம் மூலமாகக் கொண்டு, செம்மையாக உள் எழுந்த முறையில் 'சிவாயநம' எனக் கூறுவாயாக.
 
1321: நவாக்கரி அம்மை அருள்வாள் :
நவாகரியானது நான் அறிந்த ‚வித்தையாகும்.  இதில் நன்மைகள் அனைத்தும் உண்டாகும்.  இதை நாவுள் வைத்து நினைக்கவே நவாக்கரி சத்தி நன்மைகளை அருள்வாள்.
 
1322: இருவினை நீங்கும்; சோதி விளங்கும் :
இதனால் ஞானம் கல்வி முதலிய நன்மை எல்லாம் உண்டாகும்.  கொடுமையைத் தரும் (சஞ்சிதம்) பழவினைகள் உம்மை விட்டுப் போய்விடும். இந்தப் பிறவியில் அறியாமையால் ஈட்டப்படும் தலையான வினைகளை (ஆகாமியம்) நீக்கி வரங்களைத் தரும் சந்திர மண்டலம் விளங்குவதை அனுபவத்தால் அறியலாம்.
 
1323: பொன் வெள்ளி செம்புத் தகடுகளில் அமைக்கலாம் :
நவாக்கரி சக்கரத்தை வெள்ளி, பொன், செம்புத் தகடுகளில் அமைக்க வேண்டும்.  இதனை மனத்தில் தியானிக்கவும்.அப்படிச் செய்யின் உங்களுக்கு அமையவுள்ள வினைகளை வெல்லலாம்.    நீங்கள் வாழ்கின்ற பூமி உங்களுக்கு வெற்றியை அளிக்கும்.  உங்களது தியான நிலைக்கு ஏற்ப நிலைத்திருக்கும்.
 
1324: வழிபடும் முறை :
"‚ம்"என்பது முதலாக "கிலீம்" என்பது வரை தியானியுங்கள்.  அங்ஙனம் தியானிக்கும் போது முதலாக உள்ளது இறுதியாய் அமையும்.  நெல்லும் அறுகம்புல்லும் கொண்டு தியானித்து வணங்குங்கள்.  உங்களது வழிபாட்டை விரும்பி வெளிப்பட்டருள்வாள்.
 
1325: சத்தியின் நிறத்தை எண்ணி வழிபடுக :
உங்களுக்கு வெளிப்பட்டு அருள் செய்யும் சத்தி  அழகிய காயாம்பூவைப் போல் கரிய வண்ணம் கொண்டவள் ஆகும். அவளைக் கருதித் தொழுவார்க்கு எண்ணியவை யாவும் கைகூடப் பெறும். 
அவள் உன்னை விரும்பும்படி நீ நடந்து கொள்வாயாக.
 
1326: பராசத்தி உன்னிடம் பொருந்துமாறு நடந்து கொள்க :
இந்த உலகில் எல்லா நன்மைகளும் உண்டாகும்.  காலன் நமக்குரிய ஆயுளாக எண்ணிய நாள்களும் கடக்கும். எங்கும் பரவிச் செல்லும் சூரியனின் சுடரைப் போல் புகழானது எவ்விடத்திலும் பரவும்.  எனவே அந்தப் பராசத்தி உன்னிடம் பொருந்துமாறு நடந்து கொள்க.
 
1327: பராசத்தியை வழிபடின் ஞானமும் செல்வமும் கைவரப் பெறும் :
பொன்னும் வெள்ளியும் மணியும் முதலியவை தாமே உன்னை வந்தடையும்.  பராசத்தியின் அருளும் ஞானமும் வரும்.  தேவர்கள் வாழ்வு கைகூடப் பெறும்.   நீ அவளை அடையும் வகையை அறிந்து கொள்க.
 
1328: சிவபெருமானை அடைய முயல்க :
நவாக்கரியைத் தேவர்கள் ஆவதற்காக மக்கள் அறிவார்கள்.  அவனை அறிந்த தேவர்களுக்குத் தேவர்களின் தலைவனான சிவபெருமான் அருள் செய்வான்.  பாயும் நீர் பொருந்திய கங்கையைச் சூடி அதன் வேகத்தை மாற்றியருளிய சிவபெருமானை அடைய நீ முயல்வாயாக.
 
1329: சத்தியை மேகம் போன்ற மண்டலத்தில் காணலாம் :
நீங்கள் வணங்குதற்குரிய சக்கரத்தில் பொருந்திய எழுத்துக்கள் உலகவர் புகழ்கின்ற ஹிரீம் முதலாக ‚ம் இறுதியாய் உள்ளவையாகும்.  இதனை வழிபட்டு மாலையை அணிந்து புகழுடன் கூடிய பராசத்தியை மேகம் போன்ற மண்டலத்தில் கண்டு கொள்வீராக.
 
1330: முகப்பொலிவு உண்டாகும் :
தனக்கு உவமை இல்லாத தலைவியாம் சத்தியைத் தரிசனம் செய்யுங்கள்.  அள்ளிக் குடிப்பதைப் போல் முகப்பொலிவு உண்டாகும்.  மேன்மையான பரமசிவம் மஞ்சமாகத் தாங்கும் நிலையான சத்தியைப் போற்றி உள்ளத்தே கொள்ளுங்கள்.
 
1331: மன்னர் வசமாவார்; பகைவர் கெடுவார்!
நீங்கள் அடையும் பேறாக உள்ள பெருமையை எண்ணில் நாட்டை ஆளும் மன்னரும் நம் வசமாவார்.  நம் பகைவர் வாழாது கெடுவார்.  ஆதலால் இறைவனை ஒரு பகுதியிலே கொண்டவளைத் துதியுங்கள்.
 
1332: ஆசையையும் பிறவியையும் அறுப்பீர் :
எட்டுத் திக்குகளுக்கும் தலைவியாம் சத்தியை வழிபடுங்கள்.  தேவர்கள் வாழ்வு எத்தகையது என்று எண்ணி அதில் கொண்ட ஆசையை அறுங்கள்.  மீண்டும் பிறந்து இப்பூமியில் வரும் வழியை மாறுங்கள்.  நாயகியின் திருவடி துணையைப்பற்றித் தெளிவு கொள்ளுங்கள்.
 
1333: திருவடி ஞானம் பெறுவர் :
சத்தியம்மையின் திருவடிகளை இடைவிடாது நினைத்திருந்தவர் நா அசையாமல் உள்ளே செபிப்பர்.  அங்ஙனம் தங்களது அகப் பார்வையைச் செலுத்தி விளங்க இருந்தவர் பெருமையுடைய திருவடியைக் காண்பவர் ஆவார்.
 
1334: இச்சக்கரத்துக்குரிய பீசம் :
"ஐம்" முதலாக வளர்ந்து தோன்றும் சக்கரம், ஐம் முதலாகப் பிற பீசங்களோடு "‹ரீம்" இறுதியாகும்.  அகர வாக்கியப் பொருளான சிவனுக்குரிய சத்தியை மாயைக்குத் தலைவியாகப் போற்றுவாயாக.!
 
1335: வாக்கீசுவரி தோன்றியருளுவாள் :
வணங்கப்பெறும் வாக்கீசுவரியான சத்தியை, வேதாகமங்கள் எல்லாம் பகுத்துஓதும் அவையனைத்தையும் சேர்த்து நம் நாவால் பயில, அதற்கு அருள் செய்ய வல்லவளை அண்ணாக்கின் உள்ளே முன் எழக் கண்டு கொள்வீர்!
 
1336: யாவற்றையும் அறியும் அறிவை அளிக்கும் !
இத்தகைய இயல்புடைய சக்கரத்தை ஒருவன் நா அசையாது எண்ணினால், இது கூத்தப் பெருமானின் வடிவமாகும்.  பொன் மன்றில் விளங்கும் சபாவித்தையும் மக்கள் கையதாகும்.  மெல்லியலான நவாக்கரி அருள் பொருந்துவதால் உலகத்தையே வெல்லலாம்.
 
1337: வாழ் நாள் இன்பமயமாகும் :
மென்மையான இயல்புடைய உண்மைப் பொருளாகியவளைக் குருவின் உபதேசப்படி விடாது பற்றித் தியானியுங்கள்.  இன்ப துன்பக் கலப்புடைய நாள்கள் பலவும் நல்ல இன்ப நாள்களாகவே அமைந்திடும்.
 
1338: அவன் சொன்ன வண்ணம் நிகழும் :
எல்லா நன்மைகளும் இவன் நாவால் சொன்னபடி நடைபெறும்.  இவன் சொன்னவண்ணம் சொல்லுக்குரிய பயனும் தொடர்ந்து விடும்.     வாக்கீசுவரியே  இவன் நாவில் இருப்பதால் எல்லாக் கலையும் பொருந்தி நாவரசனாக விளங்குவான். பரந்த உலகத்தில் பகையும் இராது.
 
1339: எல்லாம் பயிற்சியாளரை அடையும் :
பகையைக்கெடுக்கும் 'கௌம்' முதல் 'ஐம்' இறுதியாய் உள்ள சக்கரத்தை நன்றாய் அறிபவரைப் பிறர் பழித்திட மாட்டார். பற்பல வடிவங்களாய் உள்ளவை யாவும் இவருக்கு வேறானவை அல்ல.    ஆதலால் வேறு வகையின்மையாக எல்லாம் இவரை வணங்குவனவாம்.
 
1340: எண்ணியவைக் கை கூடப் பெறும் :
இத்தத்துவ நாயகியை எல்லாரும் வணங்குவர்.  ஆதலால் அந்நல்லவர் எல்லாம் அவளிடம் பொருந்தியிருப்பர்.    காமம் வெகுளி மயக்கம் என்ற மூன்று குற்றங்களும் அகலும்.  எண்ணிய செயல் கைகூடப் பெறும்.
 
1341: நினைத்தவாறே சொல்லும் அற்றல் பெறுவான் :
தனக்குமேல் பிறர் இல்லாது தானே பேசி அடங்குவன் ஆவான். தான் ஒருவனே எண்ணிய வண்ணம் ஒளிக்காமல் பேசுபவனாவான்.  தானே பேரூழிக் காலத்தில் சிவபெருமானின் சங்காரத் தாண்டவத்தைக் காண்பவன் ஆவான்.  தானே வணங்கித் தலைவனும் ஆவான்.
 
1342: வினைகள் நீங்கும்; புண்ணியம் உண்டாகும் :
எல்லா உயிர்களிளும் அழகியளான சத்தியே எல்லாவற்றையும் பெற்றெடுத்த அழகுடைய அன்னையும் ஆவாள்.  அப்பெருமாட்டியின் திருவடியை வணங்கினால் நம் வினைகள் நீங்கப் புண்ணியன் ஆகலாம்.
 
1343: சத்தியை வழிபடுபவன் இனியன் ஆவான் :
சத்தியை வழிபடுபவன் உலகம் எங்கும் பொருந்திப் புண்ணியன் ஆகி மதிக்கத் தக்கவனாய் அனைவருடன் கலந்து விளங்குவான்.    அருள் நிறைந்தவனாக உலகம் முழுவதும் மிகவும் இனியனாய் அமர்ந்திருப்பான்.
 
1344: எல்லா உயிர்களிடமும் விளங்குவான் :
சக்கரத்தின் பீசம் "கிரீம்" முதல் "கௌம்" இறுதியாகும்.  அது தானாக உள்ள சக்கரம் என்று அறிபவர்க்கெல்லாம் அஞ்ஞானமயமான காட்டில் இருள்மயமாகக் கலந்திருந்த  அழியாத பராசத்தி  உறவாகி  அறிவு நிலையில் ஒளியாக எல்லா உயிர்களிடமும் விளங்குகின்றான்.
 
1345: சத்தியின் அருளல் :
ஒளி செய்யும் பராசத்தியை அறிந்து கொள்வார் உள்ளத்தில் சத்தி எழுந்தருளி களிக்கும் மனத்தில் உண்மைப் பொருளை விளக்கித் தெளிவு தரும்.  பயிற்சியாளர் மனத்தின்படி மழையுடனே செல்வத்தையும் உண்டாக்கும்.
1346: சக்கர வழிபாட்டின்நன்மை :
நவாக்கரி சக்கரத்தைப் பூசனை செய்து அறிவாயாக!  உலகத் துன்பம் யாவும் விலக்கும். பகையைத் தடுத்து நிறுத்தும். மன்னனும் வணங்கும்படியாகச் செய்யும்.   மனத்தைக் கலங்க வைக்கும் துன்பங்கள் உண்டாகா.
 
1347: பகை, கோபம், துன்பம் உண்டாகா :
சக்கரவழிபாட்டைச் சேர்ந்தவர்க்குத் துன்பம் உண்டாவதில்லை. உள்ளுடலானது பொன் ஒளியுடன் விளங்கும்.  பிற உயிரைக் கொல்லாதவர் ஆனதால் பிறவியைஅடைய மாட்டார்கள்.  வாழ எண்ணும் உயிர்கட்கெல்லாம் இதை விடச் சிறந்த வகையில்லை.  முடிவும் இல்லை.
 
1348: பயிற்சியாளர் இருக்கும் இடத்தில் உள்ளவரும் ஞானமயமாய் இருப்பர் :
தியானித்தவர் ஒளியுடல் பெற்றுத் திகழ்வார்.  சினந்து எழும் ஆகாமிய வினைகளைக் காணாதவர் ஆவார்.  இவரிடம் பரந்து எழும் உள்ளொளி அவர் வாழும் பகுதியில் படரும். அதனால் அப்பகுதியில் பரவிய இருள்மயமான அஞ்ஞானம் கெட்டு ஒளி பெற்று ஞான மயமாய் விளங்குவர்.
 
1349: ஞானமும் நல்ல மனமும் உண்டாகும் :
ஒளியுடைய  'ஹௌம்'  முதல் கிரீம் இறுதியாக உள்ள மகிழ்ச்சியைத் தரும் சக்கரத்தைக் கண்டறிவார்க்குத் தெளிவான ஞானமும் மனமும் உண்டாகும்.     அவர் வணங்கி வழிபடுவது ஐந்தெழுத்துடன் கூடிய நவாக்கரியாகும்.
 
1350: உயிர்களுக்கு ஆற்றலையும் அறிவையும் அருளுபவள் :
சதாசிவ மூர்த்திக்கு அருள் சத்தியாய் விளங்குபவள் இவளே!  இவளே கீழ் நோக்கிய சத்தியாக உயிர்களைச் செலுத்துபவள்.  இவளே சுவை ஒளி ஊறுஓசையாகிய இவற்றை அறியும் அறிவாய்த் துணை செய்பவள்.  இவளே அருவ நிலையில் எல்லா உயிர்களையும் தன்னுடன் அடக்கிக் கொண்டவள்.
 
1351:யாவிலும் கலந்து நிற்பாள் :
சத்தி எல்லா உலகங்களையும் கொண்ட ஈசான மூர்த்தி வடிவோடு எனக்குள்ளும் இடம் பெற்று விளங்கினாள். அப்பெருமாட்டியை மண்ணிலும் நீரிலும் ஒளியிலும் காற்றிலும் வானிலும் கண்ணின் கருமணிப் பார்வையிலும் உடலிலும் காணலாம்.
 
1352: சத்தியிடம் மனம் பொருந்தி விளங்குவாயாக :
சத்தி உயிருடன் கலந்து நின்று உயிர்களுக்குச் செய்யும் உதவியைக் காணலாம். சீவ பேதமின்மையால் அவளை அடைய வேண்டும் என்ற ஒரே விருப்புடன் கூடி நிற்பவர் சத்தியைக்  காணவும் கூடும்.  அவ்வாறு உயிர்க்கு உயிராக இருக்கும் அவள் வழியே உயிர்கள் செயல்படுவதைக் காணவும் முடியும்.  ஆதலால் அவளிடம் என்றும் பிரியாத வண்ணம் கருத்துப் பொருந்தி நிற்பாயாக!
 
1353: உண்மை நிலை எய்துவர் :
பயிற்சியாளர்க்கு ஏழு உலகங்களும் ஒன்றாய்க் கலந்து விளங்கும்.  எல்லாஉயிர்களிடமும் கலந்து பொருந்தித் தானாகக் காண்பர்.    நிலத்தில்  உள்ள  எல்லா இயல்புகளையும் உள்ளவாறு அறிவர்.  உயிர்கள் வலிய எய்திய விணைகளை விலக்கும் உண்மைப் பொருளாகவும் விளங்குவர்.
 
1354: அமுதேசுவரி நன்மையைத் தருவாள் :
மெய்ப் பொருளான 'ஔம்' முதல் 'ஹௌம்' ஈறாக உள்ள எழுத்துக்கள் விளக்கமாய் அமையப் பெற்ற இச்சக்கரத்தில் சிவம் விளங்க வீற்றிருக்கின்ற அமுதேசுவரி நன்மையைத் தரும் பொருளாக உடலின் நடுவில் மூலாதாரம் முதல் பிரமரந்திரம் வரை ஒரே ஒளியாய் உள்ளாள்.
 
1355: அமுதேசுவரியை வணங்குபவர் உடல் அழியாது :
மூலாதாரம்முதல் பிரமரந்திரம்வரை பேரொளியாய் விளங்கும் அமுதேசுவரியுடன் மூலவாயுவை மேலே கொண்டு வந்து பொருந்தச் செய்தால் நாள்தோறும் புதுமைகளைப் பார்த்த பின்பு நாடு முதலிய வேறுபாடுகளே இல்லை.   நாள் தோறும் புதுமைகளைக் கண்ட பின்பு பயிற்சியாளரின் உறவான உடலுக்குக் கேடு உண்டாகாது.
 
1356: அம்மையிடம் அருள் கொள்ளுங்கள் :
மூலாதாரத்தினின்று மேல் ஓங்கி எழும் ஒளியை அறிந்த பின்பு ஒருவிதமான கேடு வந்து சேராது.   பேரொளியைக் கண்ட பின்பு நாடு முதலிய வேறுபாடு இல்லையாகும்.  நாள் வேறுபாடு அற்ற பின்பு மேல் கீழ் முன் பின் என்ற கால வேறுபாடும் இல்லை.  அமுதேசுவரியின் அருள் வரும் வழியைக் கண்ட பின்னர்உலகமான துக்கக் காடும் இல்லை.  இதை நன்கு கண்டு உய்வீர்!
 
1357: அம்மையுடன் பொருந்தி நீக்கம் இல்லாது நிற்க :
தான் வந்தடைந்த உலகம் எல்லாம் தோன்றாதபடி பாழ் செய்து, அந்த உலகத்தில் கண்டறிந்த யாவும் வெட்ட வெளியாய் ஆயிற்று.  தானே எங்கும் நிறைந்திருத்தலால் வேறு இடம் ஏதும் இல்லை.   ஆகவே உலவுவதற்கு வேறு வழி இல்லை.  தான் என்ற பொருளே இல்லை. சலிப்புக்குரிய இடம் சிறிதும் இல்லை.
எனவே அசையாமல் அனுபவத்தில் நிலை பெறுக.
 
1358: யாவற்றையும் அறியும் அறிவு உண்டாகும் :
பயிற்சியாளர்க்க்கு ஏழ்கடலும் முன் நிற்கும். ஏழுஉலகங்களும் முன்னே நிற்கும்.
உள்ளத்தால் நினைத்தவை யாவும் முன்னர் வந்து நிற்கும்.  சத்தி தன்னிடம் நிலைபெறக் காண்பவர்க்குத் தலையின் மீது ஒளிகள் அமைந்து விளங்கும்.
 
1359: நவாக்கரி சக்கரத்துக்குரிய பீசம் :
விளக்குகின்ற ஒளியாய்த்திகழும் 'சௌம்' முதல் 'ஔம்' ஈறாகஉள்ள பீசங்களையுடைய நவாக்கரி சக்கரம் உண்மைப் பொருளாகும்.  அதில் விளங்கும் மின்னல் கொடிபோன்றவளை விளங்கும் ஞானத்தை உடையவனாய் அறிந்து நீ விளங்குக.
 
1360: சத்தியை உணர்ந்தவர்:                                                                                                                 இதனால் தெரியவரும் உண்மையை உணர்த்தப் புகுந்தால், எங்கும் விளங்கும் சத்தியே ஆகும்.    இவ்வாறு விளங்கும் உண்மையான ஞானப் பொருளை உணர்ந்தவரே சத்தியை உணர்ந்தவர் ஆவார்.
1361: எல்லாமாய் நிற்பவள் சத்தி :
சத்தியம்மை தானே வானம் போல் உருவு இல்லாமல் எங்கும் நிறந்து விளங்குபவள்.  தானே பரமாகாயமாய் விளங்குபவள். தானே அனைத்துப் பொருளுமாகி அவை எல்லாவற்றையும் தனக்குள் அடக்கிக் கொண்டவள்.   எல்லா அண்டங்களும் தானேயாய்த் திகழ்பவள்.
 
1362: சிரசின் மேல் விளங்கும் சத்தியைக் கண்டத்தின் வழி அறிய வேண்டும் :
அண்டங்கள் யாவற்றிலும் அளத்தற்கு இயலாதவளாய் உள்ளவள்.  பிண்டமான உடலில் ஞானம் விளங்கும் பெருவெளியைத் தனக்குரிய இடமாகக் கொண்டவள்.   ஓமம் செய்கின்ற ஓம குண்டத்தில் பல நன்மைகளைப் பெற்றாலும் கண்டத்துக்கு மேல் விளங்கும் நிலையான கலப்பை அறியாதவராய்ச் சிலர் உள்ளனர்.
 
1363: தலையெழுத்து :
சத்தி கடல் சூழ்ந்த உலகம் எல்லாம் கலந்திருப்பதை அறியார்கள்.  உடலுடன் கூடிய உயிர் ஒரு நாள் உடலை விட்டுப் பிரிந்து விடும் என்பதை அறியார்கள். சிறு தெய்வத்தை நாடியதால் நாதத்தை அறியார்கள். இவ்வாறு நடந்து கொள்வது அவரது தலையெழுத்தாகும்.
 
1364: நவாக்கரி சக்கர அமைப்பு :
மானே! சுயம்புவாய்த் தானே தோன்றிய அந்தச் சக்கரத்தைப் பற்றிக் கூறின் குறுக்கும் நெடுக்குமாகப் பத்துக் கோடுகள் கீறி அமைக்க. பின்பு தேன் போன்ற வளே, இரேகைக்கு உட்பட்ட அறைகள் ஒன்பதாகக் குறுக்கும் நெடுக்குமாக எண்பத்தோறு அறைகள் அமைக்க.
 
1365: சக்கரத்தின் நிறங்கள் :
சக்கரத்தைப் பற்றிக் கூறும்போது கூட்டங்களுக்கு வெளியான மதி மண்டலம் பொன் நிறம் உடையது.  கட்டங்களில் அமைந்துள்ள கோடுகள் சிவப்பு நிறமாக விளங்கும். அருளுடைய சத்தியினது எழுத்துக்கள் அடைக்கும்கட்டங்கள் பச்சை நிறம் உடையதாகும்.
 
1366: சக்கரத்துக்குரிய படையல் :
பொருந்திய மரப்பட்டையில் எழுதிய இப்பெண் சத்தி பீசங்களை எண்பத்தோர் அறைகளில் அடைக்க வேண்டும்.  பின்பு உப்பின்றி விளங்கும் வெண் பொங்கலான அவிசை நெய்யுடன் கலந்து ஓமம் செய்து பின் உயிர் ஆகுதியும் செய்ய வேண்டும்.
 
1367: சிவனுடன் சேர்த்தலும் ஆகும் :
இயந்திரத்தில் அமைக்கப்பட்ட பொன் போன்ற சத்தி அம்மையைப் பரபரப்பு இல்லாது நீ சிக்கெனப் பிடித்துக் கொள்வாயாக! அங்ஙனம் தியானிக்கத் தொடங்கிய நாளிலேயே இன்பம் உண்டாகும்.  வேள்வியின் தலைவனான பிரமனை ஒத்த பின்பு விரைவில் நேயப் பொருளான சிவத்துடன் நன்கு சேர்த்தலுமாகும்.
 
1368: சக்கரத்துக்கு சார்த்த வேண்டிய பொருள்கள் :
அரைக்கப்பட்ட சந்தனச் சாந்து, குங்குமப் பூ, கத்தூரி, மணம் எங்கும் பரவும் பல நறுமணங்களின் கூட்டு, சவ்வாது, புனுகு, நெய், பச்சைக் கற்பூரம், பசுவின் கோரோசனை, பனி நீர் என்னும் இவ்வொன்பது பொருள்களையும் சேர்த்து அச்சக்கரத்துக்குச் சார்த்துவாயாக!
 
1369: தியானம் செய்யும் முறை :
சத்தியுடன் உள்ளத்தை வைக்கும் தவத்தைச் செய்தால் உள்ளே எழும் முதிராத  இளங்கொங்கையை உடைய வாலைப் பெண்ணைப் பொருந்தி நவாக்கரியாக விளைந்த இம் மந்திரத்தை ஆயிரக்கணக்காக உருவை எண்ணுவாயாக.
 
1370: நவாக்கரி சத்தியின் ஆயுதங்கள் :
உள்ளத்தே விளங்கும் ஒளி வடிவான எம் தாயும் தந்தையுமான நவாக்கரி தேவிக்குக் கைகள் ஆறு. அவள் அவற்றில் மழு, சூலம், தோட்டி, பாசம், வில், அம்பு என்ற கருவிகளுடன், முதலில் கிலீம் பீசத்தை உடைய தேவி வழிபாட்டாளன் முன்னர் வெளிப்படுவாள்.
 
1371: நவாக்கரியைச் சூழ இருப்பவர்கள் :
அம்மையைச் சூழ யோகினி சத்திகள் அறுபத்து நால்வர் இருப்பர்.  வாமை,சேட்டை, இரௌத்திர், காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரதமனி, சர்வபூததமனி என்னும் எட்டுப் பேரும் இருப்பர்.  அவர்கள் இரு கைகளிலும் வில்லும் அம்பும் கொண்டு இருப்பர்.  யோகினி சத்திகள் சக்கரட்தை நோக்கியவராய்ச்
சுற்றிலும் இருப்பர்.
 
1372: சத்தியின் திருவடிவம் :
பொன்னினால் ஆன காதணி, முடி, ஆடை முதலானவற்றுடன் காணப்படுவது இம்மூர்த்தம்.  இம்மூர்த்தம் அக்கினியை மேனியாய்க் கொண்டது. பழமையாகவே பேரொளியைத் தனது இருப்பிடமாகக் கொண்டு விளங்குவாள்.  இங்ஙனம் நினைவார்க்கு அந்த அம்மை வெளிப்பட்டருள்வாள்.
 
1373: ஊர்த்துவ சகஸ்ரதளம் அமையுமாறு :
சத்தியின் திருவடிவத்தை அறிந்து மனத்துள் ஒப்பில்லாத சத்தியைத் தரிசித்தால் அவள் எங்கும் நீக்கம் இல்லாமல் நிறைந்து அருள் பொழிவாள்.  பின்பு எங்கும் கலந்துள்ள நாதமும்ஒளியும் ஆகிய பிரணவம் தோன்றும். உடம்பைத் தாண்டிய கீழ் நோக்கிய சகஸ்ரதளம் விளங்க அருள்வாள்.
 
1374: சத்தி ஞானத்தைத் தந்து வீட்டை அருள்வாள் :
பேரொளி வடிவான சத்தி, உண்மையை விளக்கும் தத்துவ ஞானத்தை அன்பரின் குரு மண்டலத்திலிருந்து விளங்கிடச் செய்வாள்.    அவர்களிடம் இறைமைக் குணங்கள் விளங்குமாறு விளங்கிக் கருவின் வழிப்பட்டுப் பிறக்கும் செயலைப் போக்கிப் பெரிய வீட்டு நெறியை அருள்வான்.
 
1375: பார் ஒளியாய்ப் பரவி விளங்கினாள் :
பேரொளியான பெருஞ்சுடராய் மேலான ஒளியாகி விளங்கும் தலைவி கரிய ஒளிபோன்ற கன்னியாய்ப் பொன் நிறத்துடன் பூமி தத்துவத்தின் ஒளியாய் எங்கும் பரந்து நின்றாள்.
1376: திருமேனியழகு :
சத்தி, மேலே தூக்கிய கைகளில் தாமரைமலரும் குமுதமலரும் கைக்கொண்டு ஏந்தியவளாய் விளங்குவாள்.  அபயவரதமான இரண்டு கைகளிலும் கொய்யும் தளிர் போன்று விளங்கும் அழகு வாய்ந்தவளாய், தனங்கள் முத்தும் பவளமும் நிறையப் பெற்று, நல்ல மணி பொதிந்த ஆடையுடன் விளங்குவாள்.
 
1377: பரகதி அளிப்பாள் :
சத்தி, மாணிக்கம் பதித்த முடி தலையிலும் சிலம்பு என்ற அணி பாதத்திலும் அணிபவள். அங்ஙனம் அணிபவள் அவளேயன்றி அருள் வழங்குவார்  எவரும் இல்லை.  புலன்களின் வழியே போகாது அடக்கியவர் மனத்தில் அருள்மயமாய் அவள் எழுந்தருளி வணங்குபவர்க்குப் பரகதி ஆவாள்.
 
1378: சத்திகள் சூழ விளங்குவாள் சத்தி :
இந்த நவாக்கரி சக்கரத்தைச் சூழ்ந்து உள்முகமாகப் பரவியுள்ள அறுபது சத்திகளும் எட்டுக் கன்னியரும் அவ்வாறு சூழ்ந்து நிற்க, இரண்டு கைகளிலும் பூக்களைத் தாங்கிச் சிறந்தவர் ஏத்தும் ‚ம் பீசத்துக்குரிய செல்வமாக விளங்குவாள்.
 
1379: ஓராண்டு தியானித்தால் சிவசூரியனை அடையலாம் :
இங்ஙனம் செல்வமான சத்தியைத் தியானித்து உள்ளம் வெளியே ஓடாமல் அடங்கி நிற்குமாயின், ஓராண்டில் ஆசைப்பளுவான சுமை நீங்கித் திருவருளால் எண்ணியவை யாவும் கை கூடப் பெறும்.  சிவச் சூரியனிடம் பொருந்தும் செயல் உண்டாகும்.
 
1380: சத்தி ஒளிமயமாய்ப் பயிற்சியாளரிடம் பொருந்துவாள் :
பொருந்திய மூலாதாரத்தில் எழுந்த முழு மலராகிய நான்கு இதழ்த் தாமரையில் இருந்து மேலே பேரொளிப் பிழம்பான சகஸ்ரதளத்தில் முன் கூறிய சத்தி பரவியுள்ள முழுமைப் பொருளாய் விளங்கிய பின்பு, மூலம் முதல் துவாத சாந்தம் வரை ஒளி மண்டலம் ஆகி விளங்கும்.
 
1381: இயக்கிகள் சூழ நடுவில் வீற்றிருப்பாள் :
இத்தகைய சோதி  மண்டலத்துள் விரும்பி  எழுந்தருளி இருப்பவள் சத்தி.  உயிரும் மெய்யும் ஆகிய ஐம்பத்தோர் எழுத்தும் வித்து எழுத்து ஐந்தும் ஆகிய ஐம்பத்தாறு எழுத்துக்களையும் இயக்கும் திறம் உடையவளும் அவளே! ஐம்பத்தாறு எழுத்துக்களை இயக்கும் ஐம்பத்தாறு இயக்கிகள் சூழ நடுவே வீற்றிருப்பவளும் அவளே ஆவாள்.
 
1382: வெண்ணிற மண்டலத்தில் சத்தி விளங்குவாள் :
அம்மையை அருட்கண்ணால் நோக்குபவர்க்கு அவள் முடியினின்று அடி வரை பேரொளிப்பிழம்பாய் விளங்குவாள்.  அப்பெருமாட்டியின் திருமேனியும் பெரிய முத்துப் போன்ற வெண்மையாய் விளங்கும் அவளுடைய அழகிய கைகள் நான்கில் மஞ்சள் வரையுடைய பைங்கிளியும் ஞான முத்திரையுமாக மேல் ஏந்திய கைகளில் பாசமும் அங்குசமும் கொண்டவளாய் விளங்குவாள்.
 
1383: சிவமாம் தன்மையை அடையலாம் :
மேற் பாடலில் சொன்ன வண்ணம் நாதமான ஞான முத்திரையை உணர்ந்து பாசமாகியவேரை அறுத்து அன்புடன் மனத்தில் சத்தியைத் துதித்தபடி இருங்கள்.  ஐந்து ஆண்டுச் சாதனையில் கேடு தருவன எல்லாம் அகன்று போகும்.  பின்பு மண்ணுலகத்துக்கு மேல் அமர்ந்துள்ள சிவமாகலாம்.
 
1384: சத்தி மண்டலம் அமையுமாறு :
நெற்றியில் கண்ணுடைய சத்தியின் அருளைப் பெறும் வழியாகிய தடையில்லாத நாத தரிசனம் தனக்குள் அமையுமானால் வான மண்டலத்தில் உள்ள பேரொளி விளங்க '‹ரீங்காரப்' பீசத்துக்குரிய சத்தி மண்டலம் அமையும்.  நாத தரிசனம் பெற்றவர்க்குச் சத்தி மண்டலம் அமையும்.
 
1385: ஆறு ஆதாரங்களும் ஒருவழிப்படும் :
ஹிரீங்காரமண்டலத்துள் எழும்பேரொளியைக் கண்டு மனத்தில்நினைத்திருங்கள்.  அது கீழிருந்து மேலே பிளந்து கொண்டு உள்ளே எழும்.  அங்ஙனம் எழுவதனால் வீணாத்தண்டில் பொருந்திய யாவற்றையும் தாங்கவும் முடியும்.
 
1386: பிறவியை நீக்கிட நாதம் மேல் எழும்!
அகன்ற கொப்பூழ்க் கமலத்துள் ஓங்கி மேலே எழும் பிரணவத்துக்கு உணர்வாய் இருப்பவள் சத்தி.    உணர்வைப் பெருக்கிக் கீழ் முகமாகச் சத்தியை வெளிப்படுத்துவதால் அடங்கியிருந்த நாதம் - வருந்த வரும் பிறவியை எண்ணி, சத்தியை வெளிப்படுத்துவதை நீக்கிவிட - அச்சத்தி வன்மையுடன் மேல் ஓங்கி
எழுந்து விளங்கும்.
 
1387: ஆன்மாக்களுக்கு அருளுபவள் மனோன்மனியே!
நல்ல மணிகளை அணியாக உடைய வாக்கீசுவரியும் பொன்முடியும் பொன்ஆடையும் பூண்ட திருமகளும் பாபாடும் ஆற்றலை அளித்தருளும் வெண்ணிற ஒளியில் விளங்கும் கலைமகளும் உயிர்களின் தலைவியுமான மனோன்மனி சகஸ்ரதளத்தில் எழுந்தருளியுள்ளாள்.
 
1388: உயர்வளி இயக்கம் இல்லாத போது சத்தியைக் காணலாம் :
சத்தியை வழிபடுவதற்கு முன்பாக இடைகலை பிங்கலையால் வெளியே போய்ப் பொருளை அளந்த முறையாக, சத்தியை வழிபட்ட பின்பு வெண்ணிற அமுதகலசங்களாகப் பொன்னம்பலத்தைத் தரிசிக்க வழியாதலை அறிந்து அங்கே இருந்தவர் தத்துவங்களை இயக்கிக் கொண்டிருக்கும் சத்தியைக் காணலாம்.
 
1389: தன் சத்தியால் வெளிப்பட்டருள்வாள்!
காரணிகளான எழுத்துச் சத்திகள் பிரணவத்தோடு சேர்த்து 'அ' முதல் 'ஷ' வரை ஐம்பத்து இரண்டு. காரணியாக அவற்றை இயக்கும் கன்னிகள் ஐம்பத்துஇருவர்.  இங்ஙனமாகக் காரணி விளங்கும் பொன்னம்பலத்தில் வெளிப்பட்டும் மற்றத் தத்துவங்களில் மறைந்தும் விளங்கித் தன் அருளால் சீடர்களுக்கு வெளிப்பட்டு விளங்குவாள்.
 
1390: ஓராண்டுப் பயிற்சியில் சூரியனைக் காணலாம்!
எல்லாவற்றுக்கும் காரணியாய் விளங்கும் இந்தச் சத்தியைச் சகஸ்ரதளத்தில் நிலை பெற்றிருக்கக் கண்டு ஓராண்டுப் பயிற்சி செய்தால் உன்னைவிட்டு அகலாமல் சத்தி இருப்பாள்.  நீங்கள் மேற்கொண்ட விரதம் குறையாமல் இருப்பின் பின்பு பரமாகாயத்தில் விளங்கும் சிவசூரியனைக் காணலாம்.
 
1391: என் உள்ளத்தில் இன்பம் பெருக்குபவளாய் இருந்தாள் :
அன்பர்களின் சித்தம் உலகப் பொருள்களுடன் இருந்தபோது இந்தச் சத்தி இதயத் தாமரையில் இருப்பவளாக இருந்தாள்.  முன் மந்திரத்தில் கூறியவாறு உலகப் பொருள்களுடன் இல்லாது சீவனையும் உடம்பையும் பிறவியில் பொருந்தியிருக்கும் வாயுவின் கட்டினை விலக்கி, இன்று என் உள்ளத்தில்
இன்பம் பெருக்குபவளாக இருந்தாள்.
 
1392: காளியின் தோற்றம் :
இந்தச் சத்தியானவள் தன் எட்டுக் கரங்களிலும் மலர்ந்த பூ, கிளி, பாசம், மழு, வாள், கேடயம், வில், அம்பு என்பனவற்றைத் தாங்கி ஆரவாரத்துடன் இருந்து கூத்தையும் விரும்பி நடித்தனள்.
 
1393: இதுவும் அது :
சத்தியானவள் பொன் முடியையும் முத்து மாலையையும் விரும்பியவள்.  நிறைவான பவள மாலையையும் செம்பட்டு உடையும் உடுத்தவள்.  அண்ணாந்து ஏந்திய அழகிய முலையில் கச்சினைப் பூண்டவள்.    அரிய உயிர் இன்பம் அடைந்து உய்ய மலர்ந்த முகத்துடன் விளங்குபவள்.  அவளது மேனி பசிய
நிறம் வாய்ந்தது.
 
1394: சத்தியினைச் சூழ்ந்திருப்பவர்கள் :
பச்சை நிறம் கொண்ட இவளுக்குச் சத்திகள் நாற்பத்தெட்டு.    மழலை பேசும் தோழியர் எட்டுப் பேர்கள்.  இவர்கள் எப்போதும் உடன் இருப்பவர்.  ஆதலால் கச்சு அணிந்த கொங்கைகளுடன் இரண்டு பக்கமும் காவல் உடையவளாக மெலிந்த இடையை உடையவள் இனிதாய் வீற்றிருந்தாள்.
 
1395: வான வெளிக்குச் செல்க :
மூலத்தில்தாங்கிய பேரொளிவடிவான சத்தியைச் சுழுமுனை மார்க்கமாகக் கலந்து கொள்க என்று, விருப்பம் அவ்வாறே  ஆக, மூலாதார வாயுவை மேலே செலுத்தி, நீ காதலனைக் கூடப் போகும் காதலியைப் போல் வான வெளிக்குச் செல்லுக.
 
1396: கீழ் உள்ள சத்திகள் மேலே வரும் :
கொப்பூழ்க்கும் இதயத்துக்கும் இடையில் உள்ள சூரியன் கண்ணில் விளங்கும் சந்திரனுடன் சேர்வதால் நாத சத்தி விளங்கும் ஞானசூரியன் ஆயிற்று.  அதுவே சந்திர மண்டலத்தின் விரிவு என்பதைத் தெரிந்து கொள்க.
 
1397: உயிர்களின் பாசத்தைச் சத்தி அறுத்தல்!
விழிக்கு மேல் விளங்கும் சத்திக்குப் பத்துத் திசைகளும் பத்து முகங்கள் ஆகும். தாபத்தை உண்டாக்கும் சூரியன் தன் நிலையை விட்டுச் சந்திர மண்டலத்தில் மெல்ல அடங்கி வருவதால் ஆபத்தைச் செய்யும் பத்து நாடிகள் கீழும் மேலும் செல்வதை விட்டு அடங்கும்.  இங்ஙனமாகச் சீடர்களின் பாசத்தை அறுக்கச்
சூலத்தைப் பயன் படுத்தினாள்.
 
1398: சத்தியின் கருவிகள் :
சூலப்படை, தண்டு, வாள், பறை, ஒளி தரவல்ல ஞான வடிவான வேல், அம்பு, உடுக்கை, கிளி, வில் தாங்கி, காலம், பூ, பாசம், மழு, கத்தி என்பனவற்றைக் கைகளில் தாங்கி, அழகிய சங்கு, அபயம் வரதங்களும் விளங்கும் கைகளைக் கருதித் துதிப்பாயாக!
 
1399: எண்ணங்களைக் கடந்தால் அம்மை விளங்குவாள் :
வழிபாட்டாளன் எண்ணத்தில் விரும்பி அமர்கின்ற சத்திகள் நாற்பத்து நால்வர்; உள்ளத்தில் அமர்கின்ற தோழியர் நாற்பத்து நால்வர் ஆகும்.  எண்ணம் உருப்பெறும் சகஸ்ரதளத்தில் இருந்தவள்-உலக எண்ணங்களை வழிபாட்டாளன் கடந்த போது அவள் விளங்குபவளாக நின்றாள்.
 
1400: சத்தியே வாலை, குமரி, குண்டலினி :
அவ்வாறு கடந்து நின்றவள் பொன் முடியுடன் மணி, முத்து, பவளம் என்பவை விரவச் செய்யப் பெற்ற கச்சினை அணிந்து பரந்த இடுப்பில் பட்டாட உடுத்து, சிலம்பை அணிந்து, வாலை வடிவில் அங்கு வீற்றிருந்தனள்.
 
1401: உண்மை அறிவு உண்டாகும் :
இவ்வாறு நின்ற சத்தி இடையீடு இல்லாது மேருவாகவும் அணிமா முதலிய சத்தியாகி, பழைய சாத்திர அறிவு முதலியவற்றை அகற்றிவிடப் பொருந்திய பேரொளியை உணர்ந்தார்க்கு உண்மை அறிவு உண்டாகும்.
 
1402: சதாசிவ நாயகியின் தோற்றம் :
கீழ்நோக்கிய சகஸ்ரதளம் ஒன்று உண்டு.  அவ்விடத்தில் காணப்படுபவளே சதாசிவ நாயகியான மனோன்மனி.  அவள் சதாசிவரைப் போல் ஐந்து முகமும் பத்து கைகளும் கொண்டவள்.
 
1403: சதாசிவ நாயகியின் வடிவம் :
நல்ல மணி, சூலம், கபாலம், கிளி என்பனவற்றுடன் பல மணிகளையுடைய பாம்பு, மழு, கத்தி என்பவையும் சத்தியின் கைகளில் உண்டு.  மாணிக்கம் போன்ற தாமரை, உடுக்கை கையில் உளவாம்.  இவற்றுடன் பொன்னாலும் மணியாலும் அவள் அலங்கரிக்கப்பட்டவள்.
 
1404: பராசத்தி ஆற்பது சத்திகள் சூழ வீற்றிருந்தாள் :
தன்னை வழிபடுகினற சத்திகள் நாற்பதின்மர் சூழ நேசத்தையுடைய பராசத்தி நாற்பது கன்னியர்க்கு நேராக உடம்பில் உள்ள சகஸ்ரதளத்தில் கலந்தவள்.  குற்றம் ஏதும் சாராதபடி மகிழ்வுடன் வீற்றிருந்தார்கள்.  ‚சக்கரம் என்பது நாற்பத்து மூன்று முக்கோணங்களால் ஆனது.  அதில் நடுவில் உள்ள திரிகோணம் நீங்க உள்ளவை நாற்பது கோணங்கள் ஆகும்.  அக்கோணங்களில் நாற்பது சத்திகளும் விளங்குவர்.
 
1405: பேரொளியை நினைப்பார்க்குப் பராசத்தி வெளிப்படுவாள் :
பிரணவத்துள் விளங்கும் பேரொளியைச் சுமையான உடலில் இருந்து உடலைக் கடந்து எழுந்திட, அதுவே தனக்கு ஆதாரம் என்று உணர்ந்து அதை எண்ணி மனோலயம் பெறுபவர்க்கு மண்ணினின்றும் நீரைப் பருகி எழுகின்ற மேகம் போல் பராசத்தி தலையில் வெளிப்படுவாள்.
 
1406: சத்தி விந்து நாதங்களாய் வெளிப்படுவாள் :
சுவாதிட்டான சக்கரத்தில் நிலை கொண்ட 'அ'கர, 'உ'கரங்கள் சகஸ்ரதளத்தை அடைந்து 'சிவாயநம' என்று அகக்கண்ணுக்குப் புலனாகும்படி விந்துநாதங்களாய் வெளிப்பட்டன.  அது காண்பதற்கு அரியது அன்று. அந்நாதம் எழுந்தது பயிற்சியாளனுக்குக் காட்சி தந்து திருவடியில் வைத்துக் கொள்வதற்கேயாகும்.
சிவாயநம என்பதன் பொருள், பிரணவமாகிய வேருக்கு உடலான தான் அடிமை என்பதாம்.
 
1407: ஒளியாக மேலே விளங்கினாள் :
முன்பு சொல்லிய வண்ணம் சந்திரக் கலையிடை விளங்கிய அமுதத்தை ஏந்திய கொங்கையையுடைய பராசத்தி அக்கினிக் கண்டத்தில் இடைகலை,பிங்கலையால் சுவாதிட்டானத்தில் செயல்படும் சுக்கில சுரோணிதத்தைக் கொண்டு அமுதமயமாக மேலே இருந்தாள்.
 
1408: பயிற்சியாளரிடம் பரமேசுவரி வெண்ணிற ஒளியில் கலந்து எழுவாள் :
நீலமலரும் முத்தும் கலந்த குளிர்ச்சியுடைய ஒளியில் ஆனந்தமயமாக விளங்கும் அழிவில்லாத சத்தி, அமுதம் போன்ற அழகானமேனியுடன் வெண்ணிற ஒளியாக வெளிப்பட்டருள்வாள்.
 
1409: முப்பத்தாறு சத்திகளும் தோழியரும் அம்மையைச் சூழ விளங்குவர் :
அழிவில்லாத முப்பத்தாறு சத்திகளும் நாடுதற்கு அரிய முப்பத்தாறு தோழியரும் சக்கரத்தை இல்லமாகக் கொண்டவர்கள்.  சக்கரத்தினது இதழ்களில் குடியிருந்து இவர்கள் காலவரையறையைக் கடந்துநின்ற அம்மையைச்சூழ நின்றனர் ஆவார்.
 
1410: ஓராண்டில் பயன் உண்டாகும் :
புத்தி தத்துவத்தில் சிவம் நாதமாக நிறைந்து நின்றது.  அதன் ஒளியான சோதி உள்ளத்தினின்று நீங்காது இருக்கக் கண்டதாகும்.  ஓராண்டு சாதனை கூடி வரும் போது முன்பு கூறிய ஔகாரம் விளங்கியது.
 
1411: விண்ணவரும் வணங்குவர் :
வானத்தில் நிலை பெற்ற அண்டங்களுள் வாழும் உயிர்கள் யாவும் மண் உலகில் வாழ்கின்ற உயிர்களைப் போல் பயிற்சியாளரை வந்து வணங்கும்.  திருமாலைப் போன்று பெறும் இன்பங்களைப் பற்றித் துன்பம் தரும் நோய் நிறைந்த இங்கு இருந்து சொல்ல முடியுமா?  முடியாது.
 
1412: குண்டலினியே நினைத்தவற்றை அளிப்பாள் :
மூலாதாரத்தில் கீழ்நோக்கும் முகமாய் இருந்த குண்டலினிசத்தியே 'உ'காரத்தைப் பொருத்தி இடைநாடியில் விளங்கி எழும்ஒளியாய்ச் சகஸ்ரதளத்தில் நிலைபெற்று எண்ணங்களை எல்லாம் நிறைவு செய்யும் கற்பக மரம் போல் ஆனாள்.அவளே தான் எல்லாச் சித்திகளையும் அளிக்கும் இலக்குமியும் ஆனாள்.
 
1413: அகங்காரம் நீங்கும்!
பொன் மொடி போன்ற பராசத்தியை வழிபட்டால் செருக்கைத் தரும் அகங்காரம் நீங்கி  விடும்.     நிலையான பெருவெளியான பரமாகாயத்தில் பின்னிய கொடி போல் விளங்கும் பேதையை, சத்தியைக் காணலாம். 
 
1414: சிரசின் மேல் விளங்கும் :
பேதையான பராசத்திக்கு எல்லா உயிர்களையும் பேணும் பெண்மையே அழகாகும்.  இவளுக்குச் சிவமே தந்தையாகும்.  மாதரசியாகிய இவளுக்கு மண்ணுலகம் சிறிய திலகமாய், பல சத்திகள் சூழ மேலே குவிந்த இடத்தில் விளங்குவாள்.
 
1415:முப்பத்திரண்டு சத்திகளும் கன்னிகளும் சூழச் சத்தி விளங்குதல் :
சத்திகள் முப்பத்திருவர் இருந்தனர்.  கன்னியான முப்பத்திருவரும் சூழப் பரவிய இதழ்களை உடைய சகஸ்ரதளத்திலே காண்கின்ற பல இடங்களையும் தனக்கு இடமாக்கிக் கொண்டு எழுந்தருளியிருந்தாள்.
 
1416: மறைகள் பொருள் தேடும் பயிற்சியாளர் மனத்துள் விளங்குவாள் :
நவாக்கரி சக்கரத்தில் உள்ள சத்திகள் கூத்தப் பெருமானின் ஒளியைக் கண்டு ஊர்த்துவசகஸ்ரதளத்தில் இருந்தனர். அப்பெருமானும் சத்திகளும் உலகத்துக்குக் காரணமானவர்கள்.  பழைமையான வேதத்தின் பொருளை அறிந்து கொள்ளத் தேடுபவர்களின் மனத்துள் விளங்குபவள்.  அத்தகைய பெருமையுடைய சிவசத்தி என் உடலிலும் மனத்திலும் பொருந்தி என்னை ஆட்கொண்டது.
 
1417: சத்தியை மனத்துள் தியானிப்பவர்க்கு ல்லாம் கை கூடும் :
சிவசத்திககள் தாமே வீடாய் அடைந்து ஆளப் பெற்றால் அவர்க்கு இல்லாதது ஏதும் இல்லை. இத்தகைய தன்மையுடையவர் அயலவரிடம்போய் இரப்பதில்லை.  அவர்களுக்குத் தேவர்களும் நிகராக மாட்டார்கள்.  சிவசத்தி இவர்களின் ஆன்மாவையே இடமாய்க் கொண்டுள்ளதால் இவர்கள் இல்லாத இடம் ஏதும்
இல்லை.
 
1418: ஆன்மாவின் நிலை :
தத்துவங்களுக்கு மன்னனான ஆன்மா அறுபத்து நான்கு தறிகளால் கட்டப்பட்டது..  ஆன்மாவான பிரணவம் அறுபத்து நான்கு ஒளிக்கதிகளால் ஆனது.  ஆன்மா அறுபத்து நான்கு கலைகளில் விளங்குகிறது.  பிரணவத்தில் விந்து நாதமான சிவனும் சீவனும் உள்ளன.
 
 
=============நான்காம் தந்திரம் முற்றிற்று==================
 
ஐந்தாம் தந்திரம் (1419-1572)
 
1.சுத்த சைவம்
சுத்த சைவமாவது, சடங்குகளில் நில்லாது தலைவனையும் தன்னையும் தளையையும் அறிந்து தளையின் நீங்கித் தலைவன் திருவடிச் சார்பு பெறுதல்.  சைவம் சுத்த சைவம், அசுத்த சைவம், மார்க்க சைவம், கடுஞ்சுத்த சைவம் என நால்வகையாகும்.
 
1419: அளத்தற்கரியது இறைவனின் பெருமை:                                                                                    ஊரையும் ஊர் அடங்கிய உலகத்தையும் மூவுலகங்களையும் ஒருசேரப் படைத்து ஆளுகின்ற பேரறிவாளனாகிய இறைவனது பெருமை மேருவைப் போல உயரமானது  பூமியைப் போல அகலமானது சமயத்தை போல ஆழமானது அளவிடற்கரியது.
 
1420: சிவமாதல் சுத்த சைவம்:
சத்தாகிய சிவம் அசத்தாகிய பாசம் சதசத்தாகிய ஆன்மா ஆகியவற்றை அறிந்து, அறிவையையும் அறியாமையையும் சேராமல் விட்டு, பசு பாச அறிவினை நீத்து, சுத்த மாயை அசுத்தமாயை இரண்டிலும் பொருந்தாமல் தான் என்ற ஒரு பொருள் இல்லாது சிவத்தை அறிந்து சிவத்தைத் தியானித்துச் சிவமேயாதல் சுத்த சைவம் என்பதாம்.
 
1421: சைவ சித்தாந்தர்:
கற்கத் தக்கனவற்றைக் கற்று , பதினாறு கலைகளை அறிந்து சிவயோகம் பயின்று அகர உகர மகர விந்து நாதங்களின் அறிவை முறையாக அறிந்து, பிரணவபதம் உணர்த்தும் சாந்தியதீதை கலையைப் பொருந்தி, உயிரின் மாயாசார்பான குற்றத்தை விட்டு மேலான சிவத்தைக் கண்டுறைபவர் சைவ சித்தாந்தர் ஆவார்.
 
1422: அறியப்பட வேண்டியது சிவம்:
வேதாந்தமாவது சுத்த சைவ சித்தாந்தமாம்.  இந்நெறி நிற்போரே நாத முடிவாகிய சிவத்தைத் தரிசித்த சலனமற்றவராவர்.  தத்துவ முடிவை ஞான மயமாகப் பண்படுத்த நாத முடிவில் நிறைவுற்று விளங்கும் சிவம் அறியப்படி பொருளாவர்.  சுத்த சைவர்க்கு நாத முடிவில் சிவம்விளங்கும்.
 
ஐந்தாம் தந்திரம்
2. அசுத்த சைவம்.   அசுத்த சைவமாவது, திருவேடந்தரித்து சரியை கிரியையாகிய இருநெறியில் நிற்பார்
நிலையைக் கூறுவது.
 
1423: சரியை கிரியை நெறி நிற்பவர்க்குரிய அடையாளம்:
உடம்பினால் இறைவனை வழிபடும் சரியை வழிி மற்றும்  உடம்பினாலும் மனதினாலும் இறைவனை வழிபடும் கிரியை வழி ஆகிய வழிகளில் நின்று இறைவனது இரு  திருவடி களையும் புகழ்பவரது உடம்பில் காது ஒன்றுக்கு இரண்டாகப் பொருந்திய இரு குண்டலங்கள், திருநீறு, சிரத்தில் உத்திராக்க மாலை,செபமாலை கண்டமாலை ஆகிய இரண்டு உத்திராக்கமாலை ஆகியவை அணிகலன்களாக அணியப்படும்.
 
1424: ஒரு வகைச் சைவர்:
அசுத்த சைவரில் ஒரு வகையினர் காதினில் பொன்னால்  செய்யப்பட்ட இரண்டு கடுக்கன்களை அணிந்து கொண்டு சொல்லப்பட்ட சிவ வேடத்தில் இடையில் ஓர் ஆடையும் அதன் மேல் ஓர் ஆடையும் உடையவராய்  அத்துவா சோதனை செய்து  உபதேசம்  பெற்றவராய் சைவாகமங்களைப் பாடம் சொல்லிக் கொண்டிருப்பர்.
 
1425: கடுஞ்சுத்த சைவர்:
பிரணவம் மண், நீர், தீ, காற்று, வான், சூரியன், சந்திரன், அக்கினி, விண்மீன் என்ற ஒன்பதும் உடலில் விளங்குகிறது என்பதை அறிந்தவர், அறிய வேண்டியவற்றை அறிந்தவராகிறார்.  இவ்வாறு அறிந்தவர் பிரமன், திருமால்,உருத்திரன், மகேசுவரன், சதாசிவன்,விந்து, நாதம்,சத்தி, சிவன் என ஒன்பதாகவும் சிவமே விளங்குகிறது என்பதையும் அறிவார். இங்ஙனம் ஒன்பதாகவும் விளங்கும் சிவத்தைத் தம்முள்ளே கண்டவர் பகுப்பு உடைய உலகங்களை எல்லாம் அறிந்தவர்.
 
1426: ஞானியர் இயல்பு:
ஞானியர் என்பவர் உலகத்தில் தோன்றும் ஞானநூல்களுடன் மோனநிலையையும் முழுமையாக எண்ணப்பட்ட எட்டு பெரும் சித்திகளையும் மற்ற உலகங்களின் அறிவையும் உபனிடதஅறிவையும் சிவத்தையும் தன்னையும் அறிந்து நிற்கும் ஆற்றலுடையவர் ஆவார்.
 
3. மார்க்க சைவம்.
(சைவ மார்க்கத்தில் நின்று வேதாந்த சித்தாந்த நுண்பொருளை அறிந்து ஆன்ம போதம் கெட்டுச் சிவ போதத்தில் திளைத்திருப்பவரின் சைவமே மார்க்க சைவம்.)
 
1427: சுத்த நெறி பற்றியவர்க்குரியவை:
பொன்னால் இயற்றப்பட்ட உருத்திராக்கமான சிவசாதனம், திருநீற்றுப் பூச்சான சிவ சாதனம் ஐந்து எழுத்து ஓதுதலான ஞான சாதனம், தீயவருடன் சேராமல் நல்லடியாருடன் சேர்ந்திருத்தலான சாதனம் ஆகியவை சுத்தசைவர்க்குரிய சன்மார்க்க ஒழுக்கமாகும்.
 
1428: ஞானியின் இயல்பு:
குற்றம் நீங்கிய ஞானி ஒளி வீசும் ஞானத்துக்கு மன்னன் ஆவான். அவன் அழிவில்லாதவன். துன்பம் இல்லாத வேதாந்த சித்தாந்தங்களிடையே பொருந்தும் ஞானம் உடையவன்; உண்மையான முத்திப் பேற்றை உணர்ந்தவன்; மேன்மையுடைய சுத்தசைவத்தில் பத்தி உடையவன்;
 
1429: ஆகமங்கள் சுத்த சைவர்க்குரியன:
ஆகமங்கள் ஒன்பது.  அவை காரணம், காமிகம், வீரம், சிந்தம், வாதுளம், யாமளம், காலோத்தரம், சுப்பிரபேதம், மகுடம்.  இந்த ஒன்பது ஆகமங்களே விரிவைப் பெற்று இருபத்தெட்டு ஆகமங்களாய் ஆயின. அவை சைவம், ரௌத்ரம், ஆரிடம் என்று மூன்று வகையாகி வேதாந்த சித்தாந்த முடிவாகியதே சுத்த சைவர்க்கு ஒன்றாக முடிந்ததே உண்மை.ஆகமங்கள் சுத்த சைவர்க்கு உரியவை.
 
1430: அருட்சத்தியின் இயல்பு:
கேவலத்தில் சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி என்ற மூன்றும், சுத்தத்தில் சாக்கிரம் சொப்பனம் துரியம் துரியாதீதம் ஆகிய நான்குமாக ஏழும், சத்தும் அசத்தும் ஆகியனவும் அவற்றைக் கடந்ததுமான பராபரை,  சீவர்களைச் செலுத்தும் பராபரை, சீவர்களுக்குள் பொருந்திய  உயிர்க்கு உயிரான பராபரை சிவத்துக்கு
அருட்சத்தியாய் எங்கும் பரந்துள்ளாள்.
 
1431: ஞானியர் எல்லாம் வல்ல சித்தர் ஆவர்:
சத்து அசத்து என்பனவற்றைக் கடந்த ஞானியர் சத்தியே தாமாகி, அறிவு, அறியாமை நீங்கிய சிவமாய்த் தன்னைப் பாவிக்கும் பாவனையில் உடல் நினைவு இல்லை; தான் என்ற அறிவும் இல்லை;  இரண்டற்ற நிலையில் அதீத பாவனையில் முழுகியிருப்பவர் களிடம்   அனைத்துச் சித்திகளும் சிறந்து விளங்கும்.  (சிவோகம் = சிவமாய்த் தன்னைப் பாவித்தல்.)
 
1432: சுத்த சைவர் இயல்பு:
ஆன்மாவான தன்னையும், பரசிவத்தையும், சதாசிவமான மன்னனையும், பதி பசு பாசம் ஆன முப்பொருளையும், அநாதியாய் இருந்து வரும் பாசத்தளையையும், குற்றமற்ற வீடு  பேற்றையும் சுத்த சைவர் தடை நீங்கும் வழியாய்க் கொண்டு எண்ணுவர்.
 
1433: ஆன்ம போதம் கெட்டுச் சிவபோகத்தில் திளைப்பர்!
நிறைவான சிவத்தில் சித்தத்தை வைத்து, ஆன்ம போதம் அற்று மறை முடிவைப் பெரிது என்று எண்ணி, ஆனந்தத்துடன் துவாத சாந்தத்தில் முறையாகப் பெறும் சிவபோகம் சுத்த சைவர்க்கு முதல் நிலையில் கிட்டப் பெறுவது கண்கூடாகும்.
 
1434: மார்க்க சைவர் இயல்பு:
எந்நாளும் ஒரு தன்மையான ஞானத்தில் மதிப்பு இல்லாது சிறந்த யோகமும் பெரிது எனத் தெளிந்து கொள்ளாத சிந்தையைத் தெளியச் செய்து, அங்குச் சிவத்தை ஆக்கி, சிவோகம் பாவனையைச் செய்து முறையாய் நிற்றலே ஞானிக்குரிய சரியையாகும்.  மார்க்க சைவர் ஞானத்தில் சரியையாகிய சிவோகம் பண்ணி நிற்பர்.
 
1435: சிவத்தைச் சேர்பவர்:
வைராக்கியத்தால் பிரமத்தை அடையலாம் என்று கூறும் வேதாந்தத்தை உணர்ந்தவர் பிரம வித்தையை அறிந்தவர்.  சிவோகம் பாவனையினால் தலையில் நாத தரிசனம் செய்து  நாதாந்தத்தை அடைந்தவர் நன்மைகளில் மகிழாமலும் தீமைகளில் சோர்வு அடையாமலும்  நிற்கும் மேலான யோகியர் ஆவார். வேதாந்த கொள்கைக்கு வேறான, அன்பால் சிவத்தை அடையலாம் என்று கூறும் சித்தாந்த அனுபவம்  உடையவர் இயற்கையை அறிந்து தக்க உபாயத்தால் சிவத்தைச் சேர்வர்.
 
1436: உயிர்களைப் பற்றிய பாசங்கள் சிவபரம்பொருளைப் போய் அடையா:
வானிலேயே இருப்பினும் வானை இடமாகக் கொண்ட மேகங்கள் வானத்தைச் சென்று ஒட்டா.  கண்ணால் காணப்படும் காட்சியின் பிரதிபலிப்பு யாவருக்கும் ஒன்றாய் இருப்பினும் காண்பவரின் உணர்ச்சிக்கு ஏற்றபடி உணர்ச்சிகளை உண்டாக்குமே தவிர மற்றபடி  கண்களைத்  தாமாக வந்து பொருந்தா.  அவற்றைப் போன்று எல்லாமாய் விளங்கும் சிவத்தை,  எண்ணத்துக்கு அப்பால் உள்ள சிவபரம் பொருளை பாசங்களால் பிடிக்கப்பட்டுள்ள, பசுத்தன்மையுடைய சீவர்கள் அறிய மாட்டார்கள்.
 
1437: சித்தாந்தத்தால் பெறப்படும் சித்தி:
பிரமம் என்பது ஒன்றேயாகும் என்னும் வேதாந்த இலட்சியமும், இறைவன் வேறு சீவன் வேறு என்னும் துவைதமும் இல்லாததாய்ப் பொருள் இயல்பினால் வேறாய்க் கலப்பினால் ஒன்றாய்ச் சுத்தாத்துவிதப் பாவனையில் நின்று சமய நிந்தனையை விட்டு அகன்று பராபரையான நேயப்பொருளைத் திருவடி ஞானத்தால் பெற்றுச் சிவமாதலே சித்தாந்தத்தால் பெறப்படும் சித்தியாகும்.
 
4. கடுஞ்சுத்த சைவம்:  (ஞான நிலையில் ஆடம்பரம் ஏதுமின்றி தான் அவனாய் நிற்கும் நிலை கடுஞ்சுத்த சைவம்.  இந்நெறியினர் கிரியைகளைக் கைவிட்டு ஞானமே பெரிது என்று எண்ணி சாயுச்சியம் அடைவர்.)
 
1438: சுத்த சைவர் இயல்பு:
திருநீறு, உருத்திராக்கம், காதணி போன்ற வெளிக்கோலங்களில் விருப்பம் இல்லாது இறைவனைச் சேர்ந்து உலகியல் ஆடம்பரம்  இல்லாமல், தம்மிடம் உள்ள பொருள் களில் ஆசையையும் பற்றையும் நீத்து, பிறவித் துன்பத்தை அளிக்கும் பாசத்தையும், சீவ போதத்தையும் பாழாகச் செய்யும் சிவஞானம் பெற்றவரே சுத்த சைவர்.
 
1439: சித்தாந்த நெறியில் இயல்பு.
உடல் என எண்ணப்படுகின்ற அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் என்னும் ஐந்தையும், மூலாதாரம் முதலிய ஆதாரங்கள் ஆறையும், ஐந்து பிரிவாய் விளங்கும் சுத்த மாயை முதலிய சிவ தத்துவத்தையும்இவற்றின் சார்பானவற்றையும்  நீக்கித் தன் உண்மை நிலையை அறிந்து அதில் நிற்றல் வேண்டும்.  அதுவே சித்தாந்த நெறி.
 
1440: கிரியைகளை விட்டு ஞானமே பெரிதெனக் கருதி சாயுச்சியம் பெறுவர்:
இறைவனால் அருளப்பட்ட ஆகமங்களில் கூறப்பட்ட பர முத்திகளில் சாராமல், முத்தர் கண்ட பிரணவப் பதத்தால் உணர்த்தப்படுவதே பரமுத்திக்கு மூலமாகும்.   அதை உணர்ந்த ஆன்மா பிரணவப் பொருளான இறைவனை அறிந்து உலக பந்தங்களை விட்டு நீங்கினால் சுத்தசிவமாகும் பேறு பெறுவர்.   அவரே சுத்த சைவர் ஆவார்.
 
1441: யான் அடைந்த பெரு நிலை:
அறிபவனான நான் என்றும் அறியப்படும் பொருள் சிவம் என்றும் ஆராய்ந்து நான் சிவத்தைச் சேரவே, சிவன் சீவன் என்ற இரண்டு நிலையில்லாத தற்சிவம் நானே தான் என்ற உண்மையையை சிவம் உணர்த்தியதால் அறியப்படும் பொருள் எனவும், அறிபவன் எனவும் பிரித்து அறிதற்கு இயலாத பெருநிலையை அடைந்தேன். கடுஞ்சுத்த சைவர் சிவன் வேறு சீவன் வேறு என்ற நிலை இல்லாது சிவத்துடன் ஒன்றாய் நிற்பர்.
 
1442: கடுஞ் சுத்த சைவர் பர சாயுச்சிய நிலையில் நிற்பர்:
இன்னதென்று கூறுவதற்கு அரிய அந்த நெறியை அடையப் பெற்றால் பொறுத்தற்கு அரிய கண் முதலிய ஐம்பொறிகளும் செயல் அற்று அடங்கிப் போய் விடும்.   மேல் விளங்கும் ஞானம் விளக்கொளி போன்று ஒளிரும்.  அதன் பின்பு சிரசின் மேல் ஒளியில் ஒன்றுபட்டு நிற்கும் சாயுச்சிய நிலையில் இறைவனுடன் ஒன்றியவனாகி - ஏகனாகி - நிற்றல் பொருந்தும்.
 
5. சரியை.    (சிவபெருமானைப் பலவிடங்களிலும் தேடித் திரிதலும், புகழ்ந்து பாடுதலும், கோவில் வழிபாடு செய்தலும் சரியை எனப்படும்.)
 
1443: சுத்த சைவர்க்குச் சரியை உயிர் நெறி:
வீடுபேற்றை அடைவதற்கு முதல் அங்கமான சரியை நெறி இது என்று வேத ஆகமங்களை ஆராய்கின்ற காலாங்கி, கஞ்சமலையான், கந்துரு ஆகியவர்களே!  கேளுங்கள்!  இந்த நிலவுலகத்தில் சுத்த சைவர்க்கு உயிரைப் போன்ற நெறி சரியையாகும்.
 
1444: பூசைகளின் இயல்பு:
எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல் எண்ணி இறைவன் உயிர்க்கு உயிராக நிற்பதை அறிதல் சிறந்த ஞான பூசையாகும்.  ஞான பூசை என்பது தலையான அன்பு.    உயிரில் ஒளியைக் கண்டு, உயிருக்கு ஒளியை அளிக்கும் பொருளாக இறைவனைக் காண்டல் மேலான யோக பூசையாகும்.      வெளியே பிராணப் பிரதிட்டையாக ஆவாகனம் செய்தல் வெளிப் பூசையாகும். வெளியே செய்யும் சிவபூசை ஞானத்துக்கு வாயில். ஆதலால் அது கடையான அன்பு.
 
1445: வழிபடுபவர் நெஞ்சமே கோயிலாகும்:
நாடுகள், நகரங்கள், நல்ல கோவில்கள் ஆகியவற்றைத் தேடி, சிவனைப் பாடி வணங்கினால் அன்பு முதிரும். வணங்கிய பின் அவரவர் உள்ளத்தை இறைவன் தனக்கு கோயிலாகக் கொண்டு விளங்குவான்.   இந்நிலையை அவர்கள் உணர்வார்கள்.
 
1446: சரியை, கிரியை, யோக, சித்த நெறியினர்:
பத்தர் கோவில் வழிபாடு முதலியவற்றைச் செய்யும் சரியை வழியில் நிற்பவர்.   கிரியை வழியில் நிற்பவர் திருநீறு முதலிய சிவசாதனங்களை அணிந்து சிவ வேடம் தாங்கி நிற்பவர்.  தூய இயமம் முதலிய அட்டாங்க யோக உறுப்புகளை உணர்ந்து அந்த வழியில் நிற்பவர் தூய யோகியர் ஆவர்.  சித்தர் சிவத்தைத் தன்னில் கண்டு தான் அதில் ஒன்றி நிற்பவர்.
 
1447: சரியை முதலிய நெறியில் நிற்பவர் செயல்கள்:
உண்மையான ஞானம் உடையவர் இறைவனே தாம் ஆனவர்கள்.  அட்டாங்க யோக நெறியில் நின்று சமாதி அடைந்தவர் யோகியர். கிரியை உடையவர் சிவபூசையைத் தவறாமல்செய்பவர். சரியை நெறியில் நிற்பவர் பல பதிகளுக்கும் பயணம் செய்வர்.
 
1448: உருவ அருவ வழிபாட்டாளர்கள்!
சிவன் உருவத்தையும் அருவத்தையும் பொருத்துக் கிளர்ச்சியைத் தரும் கிரியை
ஞானம் என்ற பூசை முறையானது அறியப்படும். வழிபடுபவரின் பக்குவத்துக்கு ஏற்ப கிரியையினர் உருவ வழிபாட்டையும் யோகியர் அருவ வழிபாட்டையும் தேர்ந்து கொள்ளும் பூசையானது நேசப்பொருளுக்கு உரியஉயர்ந்த பூசையாகும்.
 
1449: இறைவன் அமைப்பு:
சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கினாலும் பெறும் ஞானம் நான்கும் விரிவாய் உள்ள வேதாந்தச் சித்தாந்தத்தால் அடையப் பெறும்.   வேதாந்தம், சித்தாந்தம், நாதாந்தம், போதாந்தம், யோகாந்தம், கலாந்தம் என்ற ஆறு முடிவைக் கொண்டவை.  உண்மைப் பொருளான நந்தியெம்பெருமான் மயக்க அறிவைக் கொண்ட மக்களை குரு மண்டலமான  பொன்னகர் அடைந்து  வணங்கி அறிவைப் பெறும்படி வைத்தான்.
 
1450:தீட்சைகளின் இயல்புகள்:
சமய தீட்சை ஆன்மாவில் பதிந்துள்ள குற்றங்களை அகற்றி ஆணவ மலத்தினது வன்மையைக் குறைக்கும்.   சிறப்பான தீட்சை சிவத்தின் துணைக் கொண்டு அமையப் பெற்ற மந்திரங்களால் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களின் வன்மையைக் குறைக்கும்.  நிர்வாண தீட்சை நிவிருத்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி,  சாந்தீயாதீத கலைகளின் மலக்குற்றங்களைப் போக்கி ஆன்மாக்
களை மேல் உள்ள கலைகளுக்குத் தகுதிப்படுத்தும்.  திருமுழுக்காட்டு என்பது சத்தி நிலை பெறப் போதித்து நிலை பெறுத்தலே ஆகும்.
 
6. கிரியை;(மலர் தூவி வணங்கி உள்ளும்புறமும் இறைவனை பூசித்தல்  கிரியை):
 
1451: வினைகள் வாரா!
பத்துத் திக்குகளிலும் எப்போதும்  எங்கும் பரவியுள்ள,  மலம் அற்ற  ஒப்பற்ற சிவத்தைப் பணிந்து திருவடியை அடைக்கலம் என உறுதியாய்ப் பற்ற, மேன்மேலும் தாவி வருகின்ற வினையாகிய கடல் இந்த ஆன்மாவைச் சாராது. இந்த உண்மையை அறிந்து கொள்வாயாக!
 
1452: பற்றை விட்டுத் தியானிக்க வேண்டும்!
காட்டில் நிறைந்து மணம் கமழும் சந்தனமும் வான் அளாவ நிறையும் வண்ணம் சிறந்த மலர்களும் சாத்தி வணங்கினாலும், உடல் பற்றை விட்டுத் தியானிப்பவர்க்கன்றி, தேன்போல் இன்பத்தைத்தரும் சகஸ்ரதளத்தில் விளங்கும் திருவடியைச் சேர முடியாது.
 
1453: இறையருளைத் தாங்கும் இயல்பைப் பெறுவீர்!
மேலான சுங்கன்றைப் போல் ஒலிக்கின்ற கழலை உடைய இறைவனின்  திருவடியை வணங்குங்கள்.  அப்போது ஞானத்தைத் தரும் சுழுமுனை நடுவே தோன்றும் தேவர் உலகத்துத் தேவர்கள் வந்து உம்மை வழிபடுவார்கள். பெருமை மிகு காளை ஊர்தியையுடைய இறைவனின் திருவருளைத் தாங்கும் பாத்திரம் ஆவீர்.
 
1454: இறைவனை வணங்குவதே அன்பினாலாகும்!
இங்ஙனம் வணங்கி எட்டுத் திக்குகளில் உள்ள மண்டலங்களில் எல்லாம் சிவனது பணியை  ஒப்பற்ற பணியாய்ச் செய்கின்ற சத்தியை ஒரு பாகத்தில் உடையவன் இறைவன். அவனது பெருமையை உணர்ந்து ஏத்துவதே மக்கள் செய்கின்ற பணி. அவ்வாறான, எல்லாம் வல்ல பெருமானை ஏத்துவது அன்பினாலேயே ஆகும்.
 
1455: பத்தன் சிவம் ஆதல்:
பத்தன் ஒருவன் தூய்மையான மந்திரம் முதலியவற்றை எண்ணி அங்ஙனம் நடந்து பழகிச் சுத்த மாயை என்ற அருள் ஆற்றலால் குற்றம் இல்லாத மெய்யோகத்தில் அமைத்த நெறியில் பொருந்தித் தன்னையும் தலைவனையும் உணரும்.  ஞானத்தினால் சித்தம் குருமண்டலப் பிரவேசத்தால் சிவமாய் அமையும்.
 
1456: பத்தன் வேண்டுவது அருளே!
சிவனிடம் கொண்ட இடையறாத அன்பினால் உருகித் தினமும் நாத வழிபாடு செய்வேன்.  செம்பொன் போன்ற சகஸ்ரதளத்தில் விளங்கும் விந்து நாதம் ஆன திருவடியில் வணங்கி நின்று துதிப்பது எனக்கு அருளுவாயாக என்பதே ஆகும். அப்போது இறைவன் சிரசின் மேல் சோதியாய் விளங்கி அருளுவான்.
 
7. யோகம்.     (மூலாதாரத்தில் உள்ள குண்டலினியோடு கூடிய பிராணனைத் துவாத சாந்தத்தில் விளங்கும் சிவத்துடன் சேர்த்துப் பொருந்தியிருத்தல் யோகம் ஆகும்.  இவ்வாறு சேர்த்துத் தியானம் செய்தால் ஒளி திகழும்.)
 
1457: நாதத்தில் நிலைத்து உடல் நினைவு இல்லாமல் இருத்தல்.
மூலாதாரம் தொடங்கி வீணாத்தண்டின் ஊடே பிரமரந்திரத்தைச் சேர்ந்து உண்மைப்  பொருளாம் சிவத்துடன் பொருந்தித் தறியைப் போன்று தம் உடலை அசையாமல் இருக்கச் செய்து, உடலைச் சொறிந்தாலும் தாக்கினாலும் துணுக்கென்று உணராமல், இலட்சியப் பொருளான சிவத்தைப் பதித்து அறிபவர்க்கு அயலாய்ப் பொருந்த முடியும்.
 
1458: நாதத்தின் அருமை:
பல காலம் யோகத்தைப் பயின்று ஞானம் பெற்றவர்க்க்கன்றி மற்றவர்க்கு பலகாலமானாலும் உணரப்படாதவன் சிவன்.   பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமால், நான்முகன் ஆகிய தேவர்களும் ஊழிக்காலம் முயன்றாலும் அவனை அடைய இயலாத ஓர் உயர்ந்த இடத்தில் சகஸ்ரளத்தில்அவன் வீற்றிருக்கின்றான்.
 
1459: சிவம் அணைவதால் உண்டாகும் பயன்:
இயற்கையாய் மலரில் உள்ள மணம் மலர் பக்குவம் அடைந்தபோது மலர்ந்து மணம் தரும். அது போல் இயற்கையில் ஒளி பொருந்திய உயிர் எழுதப் பெற்ற ஓவியம் போல் அசைவற்றிருந்து அறியும் வல்லமை உடையவர்க்குப் பக்குவம் வந்த போது வெளிப்படும். சீவனுக்குள் சிவமணம் விளையும். புனுகுப்பூனை சேர்வதால் நடப்பட்ட தூண் (நடுதறி) மணம் பெறும். அது போன்று சிவம் அணைவதால் சீவன் ஒளி பெறும்.
 
1460: பிறவிக்குக் காரணமான இருளை ஒழித்தவர்:
உய்ந்தோம் எனக் கூறுவீர். ஆனால் யோகத்தால் உள்ளே கூறும் பொருளைக் காண மாட்டீர். சந்திரனின் தூல நிலையான சுவாதிட்டானத்தில் பொருந்திய சிவத்தைச் சூக்குமத்துக்கு மாற்றி சிந்தையில் பொருத்தித் தெளிவு பெற்று இருள் நீங்கினால் அது பழமையாய் வரும் பிறவிக்கு மூலத்தை நீக்கும் மருந்து
விதையாகும்.
 
1461: பிறவி நீங்க வழி:
இலக்கண அறிவு, இலக்கிய அறிவு, அறுபத்து நான்கு கலை அறிவு ஆகிய இவையெல்லாம் பழியைத் தரும் பாசத்தால் உண்டாகும் பிறவியை நீக்காது.  அழிவு செய்யும் சூரியன், சந்திரன், அக்கினி ஆகியவற்றை வகைப்படுத்திச் சிரசுக்குச் செலுத்துவதால் ஒளி அமைவதை உணர்ந்தேன்.
 
1462: உண்மையான தவம்:
சூரியன், சந்திரன், அக்கினி ஆகியவற்றைச் சிரசில் சேர்க்கும் யோகத்தை உள்ளன்புடன் செய்பவர் தவம் உடையவர்.  இதுவே பெருவாக்கியமான 'தத்துவமசி' என்பதன் பொருள் ஆகும்.  இதுவே உண்மையான தவம் ஆகும்.    இதுவே சீவரை தேவராக்குவதும் ஆகும்.  சிவ வடிவம் பெற்றவரைப் பிரணவ தேசிகன்
என்பர். தேவவுடல் என்பது இதுவே ஆகும்.
 
1463: மீண்டும் பிறவி எடுக்காததற்கு வழி:
உடம்பில் அக்கினி மயமாய் இருந்து சூட்டை வெளிப்படுத்திக் கொண்டிருப்பது உத்தமன்   ஆகிய சிவம். அதுவே ஆண், பெண் கூட்டுறவிலிருந்து அக்கினி மண்டலத்தில் விளக்கம் அடைகின்றது. அந்த அக்கினியைக் காப்பாற்றி மேல் எழும்படி செய்தால் மீண்டும் பிறவிக்கு வாராத ஒளி உலகைத் தரும்.  இதைச் செய்ய நாணம் கொள்வாயானால் உன்னை நரகத்தில் செலுத்தி மீண்டும் பிறவி எடுத்திடவே வழி செய்யும்.
 
1464: குண்டலினி யோகமே ஒளியைத் தந்து இருளை அகற்றி இறவாமையைத் தரும்:
குண்டலினி யோகமே ஒளியைத் தந்து இருளை அகற்றி இறவாமையைத் தரும் என்ற இந்த உண்மையை உணராமல் எத்தனையோ ஆயிரம் நேர்மையுடைய செங்கோல் மன்னர்கள், உண்மையான வேத நெறி விளக்கிய முனிவர்கள் அழிந்தார்கள். இந்த யோகத்தை அறிந்த எண்ணற்ற சித்தர்களும், தேவர்களும் பிரமன், திருமால், உருத்திரன் ஆகிய  மூவரும் உயிர்க்கு  நன்மை செய்பவர் பரசிவத்தைத் தவிர வேறு இலர் என்று பெருமையாய் வணங்குவர்.
 
1465: சிவாதித்தன் ஒளி விளங்கும் நெறியே சிறந்தது!
யோகியர், யோகம், கிரியை, சரியை என்ற மூன்று நெறிகளையும் கொண்டு மேன்மை அடைவர். அத்தகைய பயன் தருவன கிரியையில் கிரியை, கிரியையில் சரியை  என்பனவாகும்.  ஆசையை விட்ட சரியை ஒன்று.  அதாவது உடலில் சூரிய மண்டலத்தில் விளங்கும் சூரியனைச் சிரசில் விளங்கும் ஒளி மண்டலமாய் ஆக்குவது.  இதில் சிவாதித்தன் விளங்கும் உண்மையைக் கண்டேன்.  ஆதலால் அவ்வாறு விளங்கும் ஒளி மண்டல சிவாதித்தன் பத்தியில் சிறந்த அன்பு கொண்டேன்.
 
1466: யோகத்தின் நால்வகை தீட்சையும் பயனும்:
யோக நெறியில் சமய தீட்சை என்பது அட யோகம், ராஜயோகம், இலயயோகம் மந்திரயோகம், குண்டலினியோகம், சிவயோகம் போன்ற பல யோக நெறிகளைப் பற்றி எண்ணுதல் யோக நெறியில் சிறந்த தீட்சையாவது இயமம், நியமம் முதலிய அட்டங்க யோக நெறி நிற்றல் யோகத்தில் நிர்வாண தீட்சையாவது பராசத்தியின் தரிசனம் பெறுவதாம். யோக அபிடேகமாவது ஒளி மிக்க சித்திகளை அடைதல்.
 
8.ஞானம்:
(ஞானம் என்பது பதி அறிவு.    ஞானம், ஞேயம், ஞாதுரு என்ற மூன்றும் கெட்டு ஒன்றானநிலையே ஞானம் எனப்படும்.  எனவே ஞானமே வீடு பேற்றுக்கு வழியாகும்.)
 
1467: ஞானத்தின் சிறப்பு:
ஞானத்தை விட சிறந்த அற நெறி இல்லை.  ஞானத்தைக் கொடுக்காத சமய நெறியும் நல்லது ஆகாது. ஞானத்துக்குப் புறம்பானவை வீடுபேற்றை அளிக்காது ஞானத்தில் மிக்கு விளங்குபவரே மக்களின் மேலானவர். 
 
1468: ஞானியர் அடைந்த நெறி!
நாதமும் நாதத்தின் வடிவான மனமும், அம் மனம் தந்த புத்தியும், புத்தியை  உணர்த்தும் அகங்காரமுமாகிய இம்மூன்றும், அது சிந்திக்கின்ற செயலும், அவற்றால் உண்டாகும் நாதமும் கடந்த ஞானியர் அடைந்த நெறியே ஞானம்.   சித்தம் என்பது மனம், புத்தி, அகங்காரம் ஆகியவற்றின் சேர்க்கையே. சித்தம் என்பதன் பொருள் சிந்திப்பது.  சிந்தனை இல்லாவிடில் அந்தக் கரணங்களின் குறும்பு இல்லை.  நாதம் கேட்பதும் இல்லை. இதுவே ஞானநிலை.
 
1469:ஞானியர் பிரமப் பொருளைப் பெறுவர்:
சீவனின் சித்தத்தில் அமைந்துள்ள சங்கற்ப உலகமும் புறத்தே அமைந்துள்ள உலகமும், அன்பால் எனக்கு அருளாக அமைந்தன என்பர் ஞானியர்.   இத்தகைய ஞானமும் அதனால் அமையும் சிவபாவனையும், பின்பு சிவத்தையும் அறியும்.
 
1470: ஞானியர்க்கு உலகமே மேலான ஒழுக்கத்தைத் தரும்:
முரண்பாடு இல்லாத ஞானத்தைத் தெளிந்து உணர்ந்தார்க்குச் சார்ந்திருக்கும் காவலான இடம் அழியாத பிரமப் பொருள் ஆகும். அசைவன அசையாதன என்று இரு வகையாய்க் காணப்படும் உலகம் மேலான ஞானம் விளங்கும் ஒழுக்கம் முதலிய எல்லாம் தரும்.
 
1471:ஞானியர்க்குத் தன் நீர்த்தொனி மூலம் தன் வருகையைப் புலப்படுத்துவான்:
அறிவு-அடக்கம்-அன்பு என்ற மூன்றும் என்றும் நீங்காமல்உள்ள நகரில் கோயில் கொள்ளும் பேரருளுடையவன் இறைவன்.  அவன் தான் உருக் கொண்ட நிலையையும் நல்ல குணங்களையும் எண்ணித் தனது திருவடியை நீங்காத நெறியை உடைய ஞானியர்க்கு இறைவன் தனது  வரவை அருவியில் உண்டாகும் சலசலப்பு போன்ற நீர்ச் சலசலப்பை ஞானியரது சிந்தனையில் அமைத்து புலப்படுத்துவான்.
 
1472: ஞானியர் தாம் ஒளியே என்பதை உணர்வர்:
ஞானியர்க்கு ஞானம் முதிர்ந்து எழுகின்ற நிலையில், சிந்தனையில் கருவியாகிய நாதம் தோன்றும்.   முகத்தின் முன்பு எவ்விடத்தும் இளம்பிறை மண்டலத்தின்  ஒளி விளங்கும். அப்போது அவர்கள் உடம்பின் இழிவை உணர்வர். உடலைக் கடந்து ஒளி மிக்க சோதி விளங்கும்.  அப்போது ஞானியர் ஒளியே தாம் என உணர்வர்.
 
1473: ஞானத்தில் நான்கு வகை:
ஞானியர்க்கு இயல்பில் பொருந்தியவை 1. ஞானத்தில் ஞானம். 2.ஞானத்தில் யோகம். 3. ஞானத்தில் கிரியை. 4.ஞானத்தில் சரியை என்ற நான்குமாம்.      அனுபவத்தில் முதிர்ந்து பிரணவ சித்தியான மௌன ஞானிக்கு இவை ஏதும் தேவையில்லை.     முன்னே மகிழ்வை அடைந்து சந்திர மண்டலம் ஒளியில்
விளங்கும் சத்தி ஞானத்தைத் தந்து விடும். அவர்களைப் போல் அல்லாது ஆதாரங்களில் பொருந்தி யோகம் செய்பவர்க்குச் சரியையும்  கிரியையும் உரியனவாகும்.
 
1474: நான்கு நிலைகள்:
ஞானிக்கு ஞானம் முதலிய நான்கு நிலைகள் உண்டு.    
ஞானத்தில் ஞானம் என்பது 'நான்' என்ற அகப்பற்றும், 'எனது' என்ற புறப்பற்றும் இல்லாமையாகும். ஞானத்தில் யோகம் என்பது நாதாந்தத்தில் பேரொளியைக் காண்பதாகும். 
ஞானத்தில் கிரியை என்பது நல்ல வீடு பேற்றை விரும்புதலாகும். 
ஞானியர் முத்தியை விரும்பி நாதாந்தத்தில் நிற்பர். அப்போது அவர்க்கு யோகம் கைவரப்பெறும்.  அதன் மேலான பிரணவத்தை ஞானியர் கூடப் பெறுவர். அதன்பின் அவர்க்கு 'நான் என்ற அகப்பற்றும் 'எனது' என்ற புறப்பற்றும் நீங்கி விடும்.பிரணவ நிலையை அடைவர்.
 
1475: ஞானி சிவமுத்தனும் சித்தனும் ஆவான்:
ஞானத்தில்ஞானம் முதலிய நான்கையும் பெற்றவன், நல்வினையினால் அடையும் நற்பயனையும், பாவத்தால் வரும் தீய பயனையும் கடந்து நிற்பான்.   பெருமையுடைய நேயத்தின் ஞான வரம்பைக் கடந்தவன், திண்ணிய  மலக் குற்றங்களற்றவனும் சிவமுத்தனும் சித்தனும் ஆவான்.
 
1476: ஞானச் சமயம் முதலான நான்கின் பயன்:
ஞானத்தில் சமய தீட்சை என்பது மெய்ப் பொருளை விரும்பும் ஞானி மெய்ப் பொருளைப் போல் தானும் ஒளி உருவினன என்று உணர்தலாகும்.   ஞானத்தில் விசேட தீட்சை என்பது, அவ்வாறு ஒளி விளங்குவதே ஆகும்.   ஞானத்தில் நிர்வாண தீட்சை என்பது நன்மைகளை அறிந்து வழங்கும் மெய்ப் பொருளின் அருளை அடைவதாகும்.   ஞான முழுக்காட்டு - ஞான அபிடேகம் என்பது குருமண்டலத்துள்
வேறுபாடின்றிக் கலத்தல் ஆகும்.
 
உயிர் தன்னை அறிதல் ஆன்ம தரிசனம்.
உயிர் பராசத்தியை அறிதல் சிவதரிசனம்.
உயிர் இடைவிடாது பரையில் நிற்றல் சிவயோகம்.
உயிர் குரு மண்டலத்தில் அழுந்தல் சிவபோகம்
 
9.சன்மார்க்கம்  (நன்னெறி.  இதை ஒளிநெறி என்றும் கூறுவர்.
 சன்மார்க்கத்தினால் சிவமாந்தன்மை அடையலாம்.)
 
1477: சன்மார்க்கத்தின் இயல்பு:
உயிரின் உண்மை நிலை விந்து நாத மயமானது என்பதை அறிந்து - உடல் என்பதைத் 'தான் அன்று' என அனுபவமாக உணர்ந்த ஞானியர், உடல் இருப்பதையும், இல்லாது போவதையும் எண்ணிக் கவலை கொள்வதில்லை.  
சிவம் என்பது எல்லாப் பூதங்களிலும் கலந்து அறிவுடன் நிற்பதை உணர்ந்த ஞானியர் பற்றுகின்ற நெறி சன்மார்க்க நெறி.    சிவத்தின் உண்மை வடிவங்கள்ஆன விந்து நாதத்தில் விளங்கும் சுடரைக் கண்டு, சினத்தை கை விட்டுச் சிவயோகத்தில் நிலையான சித்தம் உடையவராய்க் காலனை வென்ற சிவனின் உள்ளக் குறிப்பை உணர்ந்தவர் பற்றுகின்ற நெறி சன்மார்க்க நெறியாகும்.
 
1478: சைவநெறி சிவனால் அமைத்துத் தரப்பட்டது.
சைவ சமயத்துக்குப் பெருமையைத் தரும் நிகர் இல்லாத தலைவன் சிவன்.   அவன்  ஆன்மாக்கள் உய்வு பெறும் வண்ணம் அமைத்த ஒளி நெறியானது ஒன்று உண்டு. அதுவே தெய்வச்   சிவநெறி.  சன்மார்க்கம்.    அதைச் சேர்ந்து உய்தி பெறுமாறு இந்த உலகில் உள்ளவர்க்கு சன்மார்க்கத்தை அமைத்துத் தந்தான் சிவன்.
 
1479: குருபத்தியால் முத்தி அடையலாம்:
சிவத்தின் ஆற்றல் குருவிடம் பதிந்துள்ளது.   எனவே குருவின் துணையால் முத்தி அடையலாம்.  குருவையே சிவமாய்த் தரிசிக்கவும்,  தியானிக்கவும், தீண்டவும்,  புகழவும், திருவடி நிலையைத் தலை மீது சூடவுமான குருபத்தி செய்யும் மெய்யன்பர்க்கு குருபத்தி முத்தியை அடையத் துணையாகும்.
 
1480: பிறப்பை ஒழிக்க மாட்டாதவர்:
சிவம் அகண்ட பரந்த பொருள்.  இதை அறியாதவர் மனத் தெளிவு இல்லாதவர்.  ஆதலால் சீவனது பரவிய ஆற்றலை அடைய மாட்டார்.  சீவன் பரவியுள்ளமை ஆகாத போது சிவம் ஆகமாட்டார். அதனால் தெளிவு இல்லாதவர் பிறவி முடிவு பெற மாட்டாது பெருகி நிற்கும்.
 
1481:சன்மார்க்கத்தின் பெருமை:
ஆன்மாவான தான் சிவமேயாகித் தன்னிடம் பொருந்திய ஆணவம், கன்மம், மாயை, யேயம்,திரோதாயி என்னும் ஐந்து மலங்களையும் அகற்றி, மௌனம் என்ற பிரணவத்தை அடைந்து முத்தான்மா ஆவதும்,   குற்றம் இல்லாது ஞான அனுபவத்தில் இன்பம் அடைவதும், தான் தன்னிலை கெட்டு சிவமாவதும் சன்மார்க்கத்தால் ஆகும்.
 
1482: சன்மார்க்கத்தாரின் பெருமை:
சன்மார்க்க நெறியினரின் முகமே சிவம் உறையும் இருப்பிடம் ஆகும்.  சன்மார்க்கத் தாரின் இடமே கோயில்.   சன்மார்க்கத்தாரின் கூட்டத்தைக் காண்பது  சிவ தரிசனம்.  இவற்றை எம்மார்க்கத்தில் உள்ளவர்க்கும் கூறுவேன்.
 
1483: சன்மார்க்கம்,  ஞானத்தால் தான் அவனாகும் நன்னெறியாகும்:
சன்மார்க்க சாதனம் என்பது சிவத்தை அறியும் ஞானம் ஆகும்.  இம்மார்க்கம் தவிர மற்றச் சாதனம் அறிவில்லாதவர்க்குரியது. தீமை அளிக்கும் மார்க்கத்தை விட்டுத் துரியத்தில் பொருந்திக் குற்றம் நீங்கினவரின் சன்மார்க்கந்தான் அவன் ஆகும் நன்னெறி.
 
1484: வேதம் கூறும் மார்க்கமே நன்மார்க்கம்:
சன்மார்க்கத்தை அடையவரும் அரிய பயிற்சியாளர்க்கு ஏனைய சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்று மார்க்கங்களும் பெறுவது இயல்பானது.   ஆதலால் சிவத்துடன் பொருந்தும் நல்ல மார்க்கமே அவர்க்கு வேண்டுவதாகும்.   இதுவே பிரணவ மார்க்கம் என வேதம் கூறியது எனக் கொள்க.
 
1485: சிவப்பேரொளி தாம் என்று உணர்வர் சன்மார்க்கத்தினர்:
தனக்கு மாறான பாசத்தையும், பாசத்தால் கருமத்தையும், கன்மம் காரணமாக வரும் பிறப்பு  இறப்புகளாகிய  அவத்தைகளையும், அவத்தைகளுக்குக் காரணமான பிரகிருதியையும், இவற்றோடு பொருந்தி இவற்றை அறியும் ஞானத்தையும், இவற்றின் வேறுபாடுகளையும், ஆன்மாவான தன்னையும் கண்டவர் சன்மார்க்கத்தார் ஆவார்.
 
1486: சமாதி கூடியிருத்தலே சன்மார்க்கம்!
ஆன்மாவைப் பாசத்தினின்றும் பிரித்துப்[ பதியுடன் கூட்டிக் கனியாத மனத்தை நன்றாய்க் கனிய வைத்து, கெடாத மெய்ப் பொருள் தோற்றத்துக்குள் சேர்ந்து அசையாத வண்ணம் சமாதியில் கூடியிருத்தலே சன்மார்க்கம் எனப்படும்.
 
1487: சன்மார்க்கமே ஞானத்தைத் தருவது!
சன்மார்க்கத்தில் உள்ளவர் அடைய வகுக்கும் மார்க்கம் சன்மார்க்கமான மார்க்கமே அல்லாது வேறு ஒன்று இல்லை.  சன்மார்க்கத்தைப் பொருந்தாதவர் மார்க்கம் யோக சித்திகளைத் தரும் நெறியாகும்.
 
 
10.சகமார்க்கம்: (தோழமை நெறி. இந்நெறியில் நிற்பவர் சிவ வடிவைப் பெறுவர்.)
 
1488: சகமார்க்கம் முத்தியையும் சித்தியையும் அளிக்கும்:
சன்மார்க்கமே தோழமைநெறி எனும் சகமார்க்கம் ஆகியது.  ஞான நெறி என்பது தோழமை நெறியால் அடையப்படுவது.   அரச மார்க்கமான சகமார்க்கம் வீடுபேற்றையும் சித்தியையும்அளிப்பதாம்.      இவையல்லாத பிற்பட்ட நெறிகளான சத்புத்திர மார்க்கம், தாச மார்க்கம் நீங்காத பிறப்பையும் இறப்பையும் அளித்து ஞானத்தை எண்ணி எண்ணி உறுதி அடைய வழியாகும்.
 
1489: துவாதச மார்க்கத்தார் இறவார்: 
தலையின் மீது பன்னிரண்டு அங்குலத்தில் ஆன்மாவும் சிவனும் பொருந்தும் இடமான குரு மண்டலத்தில் பொருந்தும் மார்க்கத்தை அறியாதவர், துவாத சாந்தத்தில் உள்ள குருமண்டலமான ஒளி மண்டலத்தையும் அங்கே விளங்கும் சிவத்தையும் அறியாதவர் ஆவார்.  அத்தகையவரின் வீட்டில் திருமகள் தங்காமல் போய் விடுவாள்.  தன் உருவத்தையும் உறவினரையும் விட்டு இறந்துபடுவர்.
 
1490: யோகச் சமாதியை விரும்பியவர் யாவற்றையும் உணர்ந்தவர் சித்தர்:
துவாத சாந்தத்தில் பொருந்தியவர் யோக சமாதியை அடைவர்.  இந்த நிலையில் உலகம் எல்லாம் நுட்பமாய் அங்குள்ளன.   அவ்வொளியில் சிவமும் சத்தியும் உள்ளன.
இதை விரும்பி மேற்கொண்டவர்களே சித்தர்கள்.
 
1491: சகமார்க்க யோகியர்க்கு உண்டாகும் பயன்கள்:
யோகம் போகம் என்ற இரண்டும் யோகியர்க்குப் பொருந்தும்.  யோகத்தால் சிவசாரூபம் அடைந்து விளங்குவார்.  சிவசாரூபம் என்பது சிவன் உருவாக சூக்கும ஒளியுடல் அமைந்து  எங்கும்  தடையில்லாது  செல்லும்  ஆற்றலைப் பெறுவது ஆகும். அதனால் பூலகில் அடையப் பெறும் அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கும் அடைந்தவர் ஆவார்.  அழியாத யோகியர்க்கு யோகமும் போகமும் பொருந்தும்.
 
1492: சகமார்க்கத்தினர் ஒளியை அறிவர்:
ஆதார சோதனையால் நாடி தூய்மை அமைந்திடும்.  அமைந்து மேதை முதலான பதினாறு கலைகளில் விளங்கும் வானமும் ஒளியும் புலப்படும்.    அறிவினது ஆலயம் என்ற ஆன்மாவின் ஐம்புலன்களும் ஐம்பொறிகளும் புத்தியும் தம் இயல்பான கீழ் இழுக்கும் இயல்பை விட்டு நிற்பதே சகமார்க்கம்.
 
1493: பொறிகளை அடக்கும் யோகியின் மனத்தில் சிவன் வந்து பொருந்துவான்.
உயிரைக் கீழ் நோக்கி இழுத்துச் செல்லும் ஞானேந்திரியங்கள் ஐந்தையும் மனம் என்னும் கூர்மையான வாளால் வருத்தித் துன்புறுத்தினால் அவ்வமயத்தே "அமரர், சித்தர், அசுரர், தைத்தியர், கருடர், கின்னரர், நிருதர், கிம்புருடர், கந்தருவர், இயக்கர், விஞ்சையர், பூதர், பசாசர், அந்தரர், முனிவர், உரகர், ஆகாயவாசியர், போகபூமியர் ஆகிய பதினெட்டுக் கணங்களும் கருதும் ஒருவனும் வணங்கத் தக்கவனுமான சிவன் சிந்தையில் வந்து பொருந்துவான்.
 
1494: இறைவன் சகமார்க்கத்தினருக்கு உதவுவான்:
வளமான பழத்தைப் போன்ற கனிவை உடைய செம்மை உடையவர்க்கு உண்மைப் பொருள் ஆகிய  இறைவன்  நல்ல கனியைப் போன்று இன்பம் தருவான். உள்ளம் நெகிழ்ந்து உள்ளே மகிழ்ந்து இருக்கும் சகமார்க்கத்தினரை இறைவன் கனியினின்று சாற்றை நீக்கி எடுப்பது  போல் அவரைத் தத்துவங்களினின்று நீக்கி அவருடன் தானும் உடன் இருப்பான்.
 
11.சற்புத்திர மார்க்கம்.
(சற்புத்திரன்=நன்மகன்.  நன்மகன் தந்தைக்குச் செய்யும் தொண்டு போன்றது இதுபூசனை செய்தல் முதலிய கிரியை இந்நெறிச் செயல்கள்.)
 
1495: ஞானம் பெறுவர்:
சற்புத்திர மார்க்கம் கிரியை வழி நிற்பது. இச் சகமார்க்கம் யோகத்தை அளிப்பது.மேற் கூறியஇரு மார்க்கங்களும் கடந்து யோக சத்தியுடன் பொருந்தியிருத்தல் சன்மார்க்கத்தால் பெறும் ஞானம் ஆகும்.
 
1496: சற்புத்திர மார்க்கத்தின் இயல்பு:
1. பூசை செய்தல்,      2. பாராயணம் செய்தல்,  3. உண்மை பேசுதல், 4. இறைவனின் புகழைக் கூறி வணங்குதல், 5. குற்றம் இல்லாத தவ ஒழுக்கங்களை மேற் கொள்ளல், 6. குறிப்பிட்ட சில மந்திரங்களைக் கூறிச் சிந்தித்தல், 7. காமம், குரோதம், கோபம், மோகம், மதம், மாற்சரியம் என்ற    ஆறு பகைகளை நீக்குதல், 8. அன்புடன் ஹம்ச பாவனை செய்தல் என்ற இந்த எட்டும் குற்றம் இல்லாத    சற்புத்திர மார்க்கத்தின் உறுப்புகளாகும்.  சற்புத்திரநெறியில் நிற்பவர் சதாசிவபதம் வரை செல்வர்.  சகமார்க்கத்தினர் சிவ நிலை வரை செல்வர்.
 
1497: ஒரு நெறியில் மனம் வைத்தல் வேண்டும்!
வெள்ளை அன்னமானது தாமரையை விட்டுக் கவர்ச்சியான நீல மலரை அடையாது. அது போன்று கிரியையாளர் நன்னெறியிலேயே நின்று வழிபட்டு மேன்மை அடைவர்.    அதைக் கண்டும் கூட மற்றவர்கள் வண்டானது தேனைச் சேர்க்கப் பலமலர்களை நாடி அலைவதைப் போன்று  பலவகையான பிறவழிகளில் சென்றுசிறு பொழுதேனும் சிவனை வழிபடும் வழி அறியாது கெடுகின்றனர்.
 
1498: இறைவனே கரை ஆவான்!
இறைவனின் திருவடி நிழலே பிறவிப் பெருங்கடலுக்கு அரிய கரையாகும்.  பெரிய கரையாவது அரன் ஆணையின் வண்ணம் அமைவதே.  திருவடியான கரைக்குப் போகின்ற நிலையான உயிர்களுக்கு எல்லாம், ஒரே அரசாய் ஏழுலகினும் ஒத்து விளங்கியவன் இறைவன் ஆவான்.
 
1499: இறைவன் தாங்குவான்:
உள்ளப் போக்கில் உயர்ந்தும், திருவடியை வழிபட்டும், இன்பத்தை அனுபவித்தும், தழுவி மகிழ்ச்சியைப் பெற்றும் சிவபெருமானின் திருவடிக்கே விண்ணப்பம் செய்யுங்கள்.  வரஇருக்கும் பிறவிக்கு அஞ்சி எடுத்தபிறவியைப் பயனுடையதாக்குவது அதுவே!   தன் இழிந்த நிலைக்கு அஞ்சி அவனைத் தாங்குபவனாகக் கொள்பவர்க்கு அவன் தாங்குபவனாகவே அமைகின்றான்.
 
1500: இறைவனைத் தொழுங்கள்:
சிவனை நின்று தொழுங்கள்.  அப்பெருமானை என்றும் கிடந்து தொழுங்கள்.  அழகிய பரஞ்சோதியான இறைவனைப் பொருந்திய மலர் கொண்டு தொழுது வழிபடுங்கள்.  அங்ஙனம் தொழும் போது சிவபெருமான் தொழுபவரின் சிந்தனையில் வெளிப்பட்டருள்வான்.
 
1501: தொண்டு நெறியில் நின்று இறைவனை வணங்குங்கள்:
வீடு பேற்றை அளிக்கவல்ல சற்புத்திர மார்க்கத்துக்கு வாயிலான தொண்டு நெறி பற்றி, வினையின் வழியே வடிவம் பெற்று வாழும் உலகத்தீர், கேட்பீர்!  கருவில் செலுத்தும் வினைக் கூட்டங்கள் பணிய இறைவனை வணங்கி நாள்தோறும் இன்பமாக நிலை பெற்று இருப்பீர்!
 
12.தாச மார்க்கம்: (கோயிலில் போய் தொண்டு செய்கின்ற நெறி - அடிமை நெறி.)
 
1502: தொண்டு நெறி.
செய்தற்கு எளியனவான கோயிலில் விளக்கு ஏற்றுதல், மலர் பறித்தல், அன்புடன் மெழுகுதல், திருவலகு இடுதல், இறைவனை வாழ்த்தல், பூசைக் காலங்களில் மணியடித்தல், திருமஞ்சன நீர் சேர்த்தல் முதலிய திருக்கோயில் பணிகளிச் செய்வது
தொண்டு நெறியாகும்.
 
1503: ஓர் இறைவனை வணங்குங்கள்!
ஆதிப் பரம் பொருள், அது என்றும் இது என்றும் ஐயம் கொண்டு துணிவு இல்லாது நீங்குவர் சிலர். இதுவே பரம்பொருள். இதை வழிபடுதலே முறையாகும் என வணங்கியவர் எவ்விடத்தும் இலர்.  ஆதலால் உமக்கு அமைந்துள்ள கர்ம நியதிப்படி எதில் பற்று இருக்கின்றதோ அங்குப் போய் இறைவனை விரும்பி வழிபடுக.  அதுவே "அது, இது" என்ற ஐயத்தை நமது மனத்தினின்று போக்கும் வழியாகும்.
 
1504: ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்ட இறைவனை வணங்க வேண்டும்!
உணர்வாகிய திங்களால் உண்டாகும் கீழான உணர்ச்சிகளை அடக்குங்கள்.  அதன் பின்பு அறிவான சூரியனால் ஆராய்ச்சி நிகழும்.    ஆராய்ச்சியின் பின் வரும் திடஞானம் கொண்டு எங்கும் நிறைந்த திருவடியை நாதத்தை எப்போதும் எண்ணிக் கொண்டே இருங்கள். அறிவும் உணர்வும்  கடந்தால் ஞானம் உண்டாகும்.  அறிவாராய்ச்சிக்கு  அப்பாற்பட்ட இறைவன் தோன்றுவான்.   தேவ தேவனான சிவபெருமானை நாள் தோறும் வணங்குங்கள்.   இங்ஙனம் வழிபடுவதில் எல்லா வழிபாடுகளும் ஒரு முடிவைப் பொருந்துவதாகும்.
 
1505: பேரன்புடன் வாழ்த்தினால் அருளுவான்!
தேவர்கள் ஆயிரம் திருப்பெயர்களைச் சொல்லிச்சிவத்தை அருச்சித்துத் துதிப்பர். 
ஆனால், அவர்களை விடுத்து மனம் மகிழ்ந்து திருவடியை உள்ளத்தில் கொண்டு தொழுது கண் போன்றவன் என இறைவனை எண்ணி நிற்கும் அடியார்கட்கு, நாத வடிவினனான இறைவன் அவர்தம் பேரன்புக்கு ஆட்பட்டு வெளிப்பட்டருளுவான்.
 
1506:மனம் மகிழ்ந்து பூசை செய்ய வேண்டும்:
கல் பாசிக்குளத்தில் விழுந்தால் பாசி அகலும்.  உடனே பின்பு மூடிக்கொள்ளும்.அது போன்று மிக்க ஆசையுடன் இறைவன் புகழைப் படித்தாலும்,  பூசித்தாலும், சிறந்த மலர்களைக் கொய்து கொணர்ந்தாலும், அந்தக் காலத்தில் தெளியும் மனம்பின் மூடிக் கொள்ளும். இத்தகையோர் குற்றம் இல்லாத பேரொளியான நீலகண்டப் பெருமானை அன்பால் இடைவிடாது உள்ளத்தில் இருத்த நினைவு இல்லாதவர் ஆவார்.  இறைவனை அன்பால் இடைவிடாது உள்ளத்தில் இருத்தி வணங்குதலே மனம் மகிழ்ந்து செய்யும் பூசையாகும்.
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free