பேரின்பம் உன்னுள்ளே.
நீயே தெய்வம் என்றுணர். உன்னையே நீ ஒளியாக தரிசனம் செய்.

2001 - 2500 திருமந்திர விளக்கம்.

 

26.சிவாதித்தன்.  சிவசூரியன்.

 
2001: சிவஒளிக்கு மாறு பட்ட பாச இருளும் அதனால் உண்டாகும் அஞ்ஞானமும் சிவம் பிரகாசித்த போது நீங்கி அதனுள் ஒடுங்கும்.  பெரிய சூரியன் எழுச்சிக்கு முன்னுள்ள நெருக்கமான இருள் அருணோதயத்தால் விலகுதல் போல பாசஇருளும் சிவஒளியால் தொலையும்.
 
2002: நீருள்ள குடங்கள் தோறும் சூரியன் தோன்றினாலும், அவனை அக்குடத்துள் அடங்குமாறு மூடி வைத்தாலும், அவற்றில் அவன் அடங்கிவிட மாட்டான்.  அது போல நீலகண்டப் பெருமான் விரும்பி எழுந்தருளியுள்ள உயிரில் கலந்திருந்தாலும் அவற்றில் மட்டும் அடங்காது அவற்றைக் கடந்தும் எங்கும்
இருக்கும்.
 
2003: சிவமாகிய தானே விரிந்த கிரணங்களையுடைய சூரியன், சந்திரன்,அக்கினியாகியமூன்றும் பொருந்திய ஓரொளியாக விளங்கும்.  தானே பிரமன், விஷ்ணு என்று நின்று தனது முதல்வனாம் தன்மையை நிரூபிக்கும்.  தானே அறிவற்ற உடலிலும் அறிவுடைய உயிரிலும் பிரிப்பின்றிக் கலந்து இருக்கும்.  தானே ஆகாயமாயும் அதன் ஒளியாயும் இருப்பதோடு தானே இருளாயும் இருக்கும்.
 
2004: தெய்வத்தன்மை பொருந்திய ஒளியுடன் கூடிய சிவாக்கினியும், பூமியும், நீரும், நெருப்பும், காற்றும், விண்ணும், சூரியன், சந்திரன் ஆகிய எட்டும் சிவன் உறையும் திருமேனிகளாகும். இந்த எட்டு மூர்த்தங்களும் எல்லா உயிர்களிடமும் பொருந்தியுள்ளன.  இவற்றை சத்தியோசாதர், வாமதேவர், அகோரர், தற்புருடர்,ஈசானர் ஆகிய ஐவர் இருதயம், சிரசு, சிகை, கவசம், நேத்திரம், அஸ்திரம் என்றஆறு அங்கங்களைக் கொண்டு செயல்படுத்தும்.
 
27. பசுவிலக்கணம்.  (பசு என்றால் பாசத்தல் கட்டப்பட்டது என்று பொருள்.)
 
2005: தியானித்த அளவிலே உணரப்படுகின்ற ஏக நாயகனை, பன்னிப் பன்னிப் பேசும் வேதங்கள் இடைவிடாது சொல்லிக் கொண்டிருக்கும் பரம் பொருளை, என் உள்ளத்து விளங்கும் தூண்டா விளக்கானவனை ஹம்சரூபன் என்று அறிந்து கொண்டேன்.  ஹம்சரூபன் என்றால் இறைவன் மூலாதாரத்திலிருந்து சிரசை நோக்கி  செல்லும் உணர்வு மயமானவன் என்று பொருள்.
 
2006: சீவனின் வாழ்வில் சிவ அன்னம், சீவ அன்னம் என்று இரண்டு அன்னங்கள் உள்ளன.  இரண்டும் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாதனவாகும்.  அவற்றுள் தன்னிலையில் நிற்கும் சிவமாகிய அன்னம் தனக்கு வேறானது என்று சீவனாகிய அன்னம் எண்ணினால் அறியாமையோடு கூடிய சீவனாகிய அன்னத்துக்கு சிவப்பேறு கிட்டாததாகும்.
 
28. புருடன்.
 
2007: ஆன்மாக்கள் செயற்பட்டு உய்வுபெறும் பொருட்டு "வைகரி, மத்திமை, பைசந்தி,சூக்குமை ஆகிய வாக்குகளும், மாயை முதலான மலங்களும், பொய்யான போகங்களை அனுபவிக்கச் செய்யும் புருடன் முதலான வித்தியா தத்துவமும், பிறப்பை ஒழிக்கும் ஞானமும்" ஆகிய இவற்றை சாட்சியாயுள்ள ஈசன்  முன்பே அமைத்தருளினான்
 
2008: அணுவுக்கும் அணுவாயுள்ளதை ஆயிரம் கூறு செய்து அவ்வாயிரத்தில் ஒரு கூற்றினை நெருங்க வல்லார்க்கு அணுவுக்கு அணுவானவனும், ஆதிப்பிரானும், மிகச் சூக்குமமானவனும் ஆகிய பரம்பொருளை அடையவும் கூடும்.
 
2009: எங்கும் படர்ந்து வளரும் தன்மையைத் தன்னகத்தே கொண்ட ஆலம் விதை போல பாசங்களையும் பாச நீக்கத்துக்குரிய தன்மைகளையும் தன்னகத்தே கொண்ட ஆன்மாவைத் திருவருள்  நன்னெறிப்படுத்த, அறியாமையை உண்டாக்கித் துன்பத்தைப் பெருக்கி நிற்கும் இருளை முற்றிலும் கெடுத்துக்
கூத்தப்பெருமான் அமைத்துத் தந்த சிவகதியை ஆன்மா விரும்பவும் கூடும்.
 
2010: ஒப்பற்ற இறைவன் எங்கும் நிறைந்து இடையீடின்றிப் பொருந்தி இயங்குவன, நிற்பனவான எல்லாப் பொருள்களிலும் வியாபித்திருக்கின்றனன்.  ஆனால் ஆன்மாவுள் சிவனும் சிவத்துள் ஆன்மாவும் பிரிப்பின்றிக் கலந்திருப்பதை மக்கள் உணரார்.
 
2011:
உடம்பில் பொருந்திய சீவனது வடிவத்தை அளவிட்டுச் சொன்னால் பசுவின் மயிர் ஒன்றை நூறாகப் பிளந்து அதில் உள்ள ஒன்றை ஆயிரம் கூறாக்கினால் உயிரின் வடிவம் பசுவின் உரோமத்தை ஓர் லட்சம் கூறிட்டதற்கு ஒப்பாகும். புருட தத்துவம் ஒரு பசுவின் மயிரானால் அதில் லட்சத்தில் ஒரு கூறு
சீவ அணுவின் அளவாகும்.
 
2012: எம் இறைவன் ஏனைய தேவர்களை விடப் பெருமையுடையவன்.  ஆயினும் தனது எளிவந்த கருணையால் உடம்பினுள் உயிராகக் கலந்தும் விளங்குவான்.  தேவர்களால் அளவிட்டு அறிய முடியாத இந்த தேவ தேவனை ஆன்மா தான் செய்த தவத்தின் அளவுக்கேற்பத் தானே அறியும்.
 
2013: யோகத்தைப் பயின்று தெளிந்த குரு உபதேசம் செய்ய, யோகத்தில் பொருந்திப் பயில்வதற்குள்ள நற்பண்புகள் இல்லாதவராயினும் பழைய வாசனையினால் பயின்ற சீவன் பின்னே அனுபவத்தைத் தம்முள்ளே பெற்றுச் சிவரூபம் எய்துவர்.
 
2014: உயிர் மாயையின் காரியமான துன்பங்களில் தோய்ந்து தானும் அதன் வசமாகும்.
ஞானமே வடிவான குருவின் அருளாலே சேதனத்தில் தூண்ட, மாயா உபாதிகள்ஒன்றிலும் பொருந்தாது.  உயிரானது  செயல் ஒடுங்கி பயிற்சி வசத்தால் துரியநிலையில் புகுந்து ஞானமே வடிவாக விளங்கும்.
 
30. பசு. (கட்டப்பட்டது.)
 
2015: வேதங்களையும் ஆகமங்களையும் நிறையக் கற்ற உயிர்கள் பொருள் அனுபவம்இன்றி புலம்பிக் கொண்டு திரிந்தாலும், அரச செல்வாக்கைப்  பெற்றுள்ள உயிர்கள் தமக்குரிய விருதுகள் கட்டிக் கொண்டு தெரிந்தவர் போல் திரிந்தாலும், முதிர்ந்த அனுபவமுடையவரின் சிறு ஞானமே உலகத்துக்குப் பயன் தரும்.
மற்றையோரது வாய் வேதாந்தம் வறட்டுப் பசுவைப் போல் உலகுக்குப் பயன்படாது.
 
2016: சுவாதிட்டானமாகிய கொல்லையில் மனத்தை வைத்துக் காமச் செயலில் ஈடுபடும் உயிர்களாகிய பசுக்களை என்ன செய்யக் கூடும்?  அனுபவ ஞானியின் உதவியால் அப்பசுக்களைக் காம எல்லையைக் கடக்கச் செய்து அகண்டமான சிவபிரானின் திருவடியில் சேர்த்துத் திருவருளைத் துய்க்கும் ஆற்றலை உண்டாக்கிச் சிவஞானிகள் கூட்டத்தில் சேர்த்து மதித்த பின் அன்றி - அப்பசுக்கள் காமக்கொல்லையில் வைத்த மனத்தை மாற்றமாட்டா.
 
31. போதன்.  சிவஞானத்தை அனுபவத்தில் கண்டவன்.
 
2017: சீவன் எனவும் சிவன் எனவும் இரு பொருள் இல்லை.  சீவன் சீவத்தன்மையில் உள்ளவரை சிவனை அறிய முடியாது.  சீவன் சீவத்தன்மை மாறி அகண்ட ஞானம் பெற்ற பிறகு சீவன் என்ற பேரை விடுத்து சிவம் என்ற பேரைப் பெற்று விளங்கும்.  அனுபவம் கைவரப் பெற்ற ஞானி ஒருவன் சீடனுக்குச் சிவஞானம் கிட்ட வேண்டும் என்று கருதி அவனது காம நிலையை மாற்றிச் சிவமாகும் நெறியை உணர்த்திய பிறகு மீண்டும் பிறவிக்கு வரும் நிலை இல்லாமையால் அவன் சிவத்தையறிந்து சிவமாவான்.
 
2018: அறிவொளியால் விளங்கும் நடராசப் பெருமான் மனத்தை விளக்காகக் கொண்டு வாழ்கின்ற உயிர்க்கூட்டங்களுக்கு விளக்கம் தரும் மேற்பார்வையாளர்ஆவார்.  நாகப் பாம்பின் படத்தில் உள்ள நாகரத்தினம் பாம்புக்குப் பக்குவம் வந்த போது ஒளி தருவதைப் போன்று கூத்தப் பெருமான் உயிர்களுக்குப் பக்குவம் வந்தபோது  ஒளியைத் தருவான்.
 
2019: அகண்ட அறிவான சிவத்தைக் கொண்டு தம் அறியாமை நீங்கினவனே,  ஐம்பொறிகளால் சுட்டியறியும் அறிவை விடுத்து எங்கெங்கும் உள்ளனவற்றை அங்கங்கே இருந்து காணும் ஆற்றலைப் பெற்றவனாவான்.  அவனே அறிவுருவாய் எல்லா உயிர்களிடத்தும் அறிவாய் நின்று அறிவன். அறிவில் பொருந்தி நின்ற சீவனும் ஆவான்.
 
2020: முப்பத்தாறு தத்துவங்களின் இயல்பை அறியாதிருந்த அடியேனுக்கு அவற்றின் இயல்பை என் ஆசான் உரைத்தருளினான்.  அவற்றின் இயல்பை அவனருளால்அறிந்த பிறகு அவன் அத்தத்துவங் களைக் கடந்த பொருளாக இருப்பதையும் உணர்த்தினான்.
 
2021: சிவத்தோடு பிரிப்பின்றி நிற்கும் திருவருளில் நின்றறிந்து தெளிய மாட்டார்.   கேட்டினைச் செய்யும் ஐம்மலங்களும் தம்மிடம் எவ்வாறு பொருந்துகின்றன என்பதையும் அறியமாட்டார்.  உடம்பை வருத்தித் தவங்கள் செய்து தங்கள் அறிவைப் பாழாக்கும் அவர்கள் தோழமை நெறியில் விளங்கும் சிவத்தையும்
அறிய மாட்டார்.
 
2022: நாளும் தன்முனைப்போடு செயல்படுபவர்கள் எல்லாம் இறைவனே செய்கிறான் என்பதை உணராதவர்கள்.  இத்தகைய வினை செய்வோர் நாள்தோறும் இறைவன் உயிர்களாகிய நமக்குச் செய்யும் அருட்செயல்களை எண்ணார்.  நம்வினைக்கேற்ப இன்ப துன்பங்களை நளினமாக அவன் ஊட்டுவதையும்
அறியார்.  இறைவன் "எல்லாம் சிவன் செயல்" என்று செயல்படும் வினை கடந்த நல்லவர்களுக்காக நாள் தோறும் அருள் வழங்குதலால் வினை செய்பவர்கள் இதை எண்ணிப் பார்க்க மாட்டார்கள்.
 
32. ஐந்து இந்திரியம் அடக்கும் முறை.
 
2023: இந்திரியங்கள் செம்மையாய் இருக்கும் போதே யோகம் செய்தல் வேண்டும்.   ஐந்து இந்திரியங் களும் மிக்க மதம் பொருந்திய யானைகள் போன்றவை.   அவை உடலில் களிப்பினைத் தரும் சந்திரமண்டலமாகிய கட்டுத் தறியில் அணைந்து பொருந்துவதில்லை. இவற்றை அடக்க முயலும் ஆன்மாவாகிய பாகனும் இளைத்து ஐம்பொறிகளின் வல்லமையும் குறைந்த பிறகு யோக நெறியால் திருந்துதல் என்பது சித்தியாது.
 
2024: கருத்துடைய நல்ல நூல்களைப் பலகாலும் கற்றுணர்ந்து பிராணனது இயக்கத்தை ஆன்மாவாகிய பாகன் மாற்றித் திருத்தினால் இந்திரியங்களாகிய குதிரைகள் வேகமாகப் பாயாமல் திகைத்து நிற்கும்.  பிடரியில் ஏறி அமர்ந்து பாகன் நன்கு தூண்டினாலும் அக்குதிரைகள் மீண்டும் இந்திரியங்கள் வழிச் செல்லா.
 
2025: ஐம்பூதங்களாகிய இடங்கள் ஐந்து; ஞானேந்திரியங்களாஇக்ய பறவைகள் ஐந்து; அவை சென்று பற்றும் தன்மாத்திகைளாகிய புலன்கள் ஐந்து; கன்மேந்திரியங்கள் ஐந்து;  அவற்றின் செயல்களாகிய வாசனாதிகள் ஐந்து;  மாயையாகிய குலம் ஒன்று.  இவை அனைத்தையும் அறிவாகிய கோலைக் கொண்டு செலுத்துகின்ற ஆன்மாவாகிய மேய்ப்பான் ஒருவன் உண்டு.  அவன் வருந்திப் போகும் வழி
உடம்பினுள் ஒன்பதாகும். இந்திரியங்கள் புறத்தே சென்று பற்றாமல் அவற்றை அடக்குதல் வேண்டும்.
 
2026: உடம்பாகிய காட்டில் இந்திரியங்களாகிய சிங்கங்கள் ஐந்து உள்ளன.  அவ்வைந்தும் புறம் சென்று புறப்பொருளைப் பற்றி அகம் வந்து சேரும்.  விஷயங்களைப்பற்றி நிற்கும் மனத்தையும் விஷயங்களில்
 
ஈடுபடும் கருவிகளையும்  செல்ல வொட்டாது அடக்கி நிறுத்தி விட்டால் தவறாது இறைவனை அடைதலும் கூடும்.  மனம் பொறி வழிச் செல்லாது தடுத்து விட்டால் இறைவனை அடையலாம்.
 
2027: ஐந்து இந்திரியங்களாகிய அமைச்சர்களும் அவர்களுக்கு அடங்கித் தொண்ணூறு தத்துவங்கள் ஆகிய பணியாளரும் உள்ளனர். இவர்கள் அனைவரும் காண்டல், கேட்டல், உண்டல், உயிர்த்தல், உற்றறிதல் என்ற ஐவகையான தூபத்துடன் நம்மை ஆள முயற்சிப்பார்கள்.  இந்திரியங்களை இப்படி செயல்பட அனுமதித்தால் பின் அவைகளை அடக்குவது கடினம்.
 
2028: நாள் தோறும் பேரொளியாய் ஒளிரும் சிவத்தைத் துதிக்கும் வல்லமை இல்லாதவனும், திருவருள் அம்மையும்  அங்கிருப்பதைச் சொல்லும் வல்லமை இல்லாதவனும், ஐம்பொறிகளையும், அவற்றின் வயப்பட்டு அலையும் உள்ளத்தையும் வெல்லும் ஆற்றல் இல்லாதவனும்  கொல்வதற்குக் கொண்டு போகும் குதிரைமேல் ஏறியவனைப் போல் ஆவான்.
 
2029: உடல் அளவிடமுடியாத தொளைகளை உடையதாகும்.  மனம் எண்ணில்லாத தொளைகளை யுடைய உடல் இன்பத்தைத் தேடி ஓடினால் உயிருக்குக் குற்றம் உண்டாகும். உயிரானது மனம் வழிச் சென்று எண்ணில்லாத  தொளைகளை யுடைய உடல் இன்பத்தை நாடாது இருக்குமானால் எண்ணமற்ற உள்ளத்தில் ஓர் இன்பம் உண்டாகும்.
 
2030: கடலால் சூழப்பட்ட உலகத்தில் உள்ள மக்களுக்கு அவரவர் புண்ணிய பாவத்துக்கு ஏற்ப வாழ்வானது அமையும்.  சிவத்தைத் துதித்துப் பெருமையுடைய வல்லமை பெற்றவர்க்குப் பழமையான வான் உலகம் அமையும்.  காம வாழ்வில்ஈடுபடாது சந்திர மண்டலத்தைப் பற்றி நிற்கும் வல்லமைக்கு ஏற்ப மக்கள் வாழ்க்கை உள்ளது.
சந்திர மண்டல அறிவில் மனம் பதிந்தபோது கீழ் நோக்குதல் இராது.  அட்டமா சித்திகளை அடைவதே அழகான நிதியின் பெருவலியாகும்.
 
33.ஐந்து இந்திரியம் அடக்கும் முறை.
 
2031: சந்திர மண்டலமாகிய குளம் ஒரு முழம் அகலமும் அரை முழம் ஆழமும் உள்ளது. வட்ட வடிவமாக அமைந்த அக்குளத்தில் விஷய வாசனைகளாகிய மீன்கள் வாழ்கின்றன.  சிவபெருமானாகிய வலைஞன் வலையைக் கொண்டு வீசினான்.  வலையில் மீன்கள் அகப்பட்டுக் கொண்டன.  யாம் இனிப் பிறவித் துன்பம் நீங்கினோம்.  சந்திர மண்டல ஒளியில் ஆன்மா நிலைபெறுதலின் விஷய வாசனையால்
வரும் பிறவி இல்லை.
 
2032: அறிவற்றுக் கிடக்கும் உடலில் கிளர்ந்து எழுகின்ற இந்திரியங்களை அடக்க வல்லவனே அமரனாவான்.  உடம்பில் உணவை அருந்துதலிலும் பெண்ணைப் பொருந்துதலிலும் ஆகிய இரண்டு இன்பங்களிலும் மனம் பொருந்தி நிற்கும் அளவுக்கு உடம்பில் சுவாச இயக்கம் இருந்து கொண்டே இருக்கும். இந்த இரண்டு விருப்பத்தையும் நீக்கியவரே பிராண செயம் பெறுவார்.
 
2033: இந்திரியங்கள் ஐந்தையும் அடக்க வேண்டும் என்று வற்புறுத்திச் சொல்வார்கள் அறிவில்லா தவர்கள்.  அவ்வாறு ஐந்தையும் அடக்கிய தேவர்களும் இல்லை.   ஐந்தையும் அடக்கி விட்டால் சடப் பொருளாகும் என்று கருதி ஐந்தையும் அடக்காது இயங்கச் செய்கின்ற உபாயத்தை உணர்ந்து கொண்டேன்.  அறிவு மயமான சிவத்தை அறிவினால் நாடுவதே உபாயம் என்று அறிவதே
அஞ்சும் அடக்கா அறிவு எனப்படும்.
 
2034: இந்திரியங்களாகிய மும்மதயானைகள் பிளிறிக் கொண்டு எழுகின்றன. அவற்றைஅடக்க அறிவாகிய கோட்டையை வைத்தேன்.  ஆனால் அவை அக்கோட்டையை விட்டுத் தப்பியோடி வெளியே கேடு தரும் புலன்களில் மண்டி உடம்பாகிய கரும்பை அழித்துத் திமிர் கொண்டு அலைகின்றன.
பிரணவமான விந்து நாதங்களில் அறிவு பொருந்தில் இந்திரியங்கள் வசப்படும்.
 
2035: பிரணவமாகிய ஐந்தில் ஒடுங்கினால் நாதாந்தமாகிய அகலிடம் அமையும்.   இதுவே மேலான தவமாகும்.  இதுவே சிவபதமாகும்.  இதில் ஒடுங்கி நின்றவரே அருளுடையவர் ஆவர். நாதாந்தத்தில் ஒடுங்கினவரே புலன் நாட்டமின்றி அருளுடையோராவர்.
 
2036: நிரம்பப் பேசி பயன் என்ன?  கானல் நீரைப் போன்று தோன்றி மறையும் உலகை நினைந்து என்ன பயன்?  பரவலாக விரிந்துள்ள பொருளுக்கெல்லாம் வித்தாக உள்ளம் இருக்கிறது.  உலகப் பொருளை மிகுதியாக நினைக்கின் உலகைப் பற்றிய சிந்தனை மிகுதியாகி விடும்.  அவற்றை நினையாது சிவத்தை
நினைக்கின் உலகப் பொருள் அங்குச் சுருங்கி விடும்.  இதனை ஆராய்ந்து தெளிவோர்க்கு இவ்வளவு தான் உண்மைப் பொருளாகும்.  மனம் சிவத்தைப் பற்ற உலகத்தைப் பற்றிய சிந்தனை சுருங்கி விடும்.
 
2037: பாச வழி நீங்கிப் பெருமை பெற்ற சீடன் பொறி வழிச் சென்று கெடுகின்றமையை அறிந்து இனிய உயிர்கட்காக அடியார் கூட்டத்தை வைத்து அவரோடு பொருந்தியிருக்கும் ஈசனிடம் பாசத்தினின்றும் விடுபட்ட மனத்தினது ஐவகைச் சேட்டைகளையும் ஒடுக்கி நிற்க, "ஐம்பொறிகளாகிய தொளைவழிச் சென்றது - பிரமரந்திரமாகிய தொளையில் இன்பத்தைப் பெற்று ஓய்ந்திருக்கும்."   பிரமரந்திரத்திலே மனத்தை இருத்தலே இந்திரியங்களை அடக்கும் முறையாம்.
 
2038: ஐம்பூதங்களின் தூலத்தன்மை மாறிச் சூக்குமமான ஐவகை ஒளிகளாய் சார்ந்து விளங்கும் ஊர்த்துவ சகஸ்ரதளமாகிய தறியினில் கட்டப் பெறும் பேற்றை அடைவாயாக!   ஆனந்த சத்தி உன்னிடம் பதிந்தால் "இதுவே முடிவானது" என்று சிரசின் மேல் சூடிக் கொள்வாயாக.  இதுவே மிகப் பழமையானது.
ஞானேந்திரியங்கள் சகஸ்ரதளத்தில் ஒன்றிவிடுதலால் இன்பம் உண்டாகும்.
 
2039: எல்லா உயிர் வகையிலும் பொருந்தி இயங்குகின்ற சிவத்தை நாடோறும் தியானிப்பதால் எல்லாப் பொருளிடத்தும் சென்று பற்றும் மனத்தை மிகவும் மெதுவாக ஒடுக்கி ஊர்த்துவ சகஸ்ரதளத்தைக் குறியாகக் கொண்டு அதன் வழியே மனம் பதிவுண்டால் சிரசிலுள்ள இடப்பாகமாகிய வடக்கும் வலப்பாகமாகிய தெற்கும் வளர்ந்து மனக் கோயிலாக அமையும்.
 
2040:சகஸ்ரதளமாகிய மனக் கோயில் வழிபாட்டுச் சாதனையில் சில நாழிகைகள், சில நாள்கள், பின் பல நாள்கள் கழிந்தால் உலகப் பொருள் எல்லாம் நீர் மேல் எழுத்துப் போல அழிவனவாகத் தோன்றும். இவ்வகையே புலன்களின் மேல் செல்லும் விருப்பத்தினை விரைந்து விட்டபின் மலை போல் துன்பம்
வந்தாலும் தாங்க முடியும்.
 
2041: சகஸ்ரதளத்தில் விளங்கும் சிவபெருமானது ஒளியான திருமேனியை நினைத்து அதனோடு மனத்தைப் பொருத்தி மனம் ஐம்புலன்களில் செல்வதனின்று அறிவினால் மீட்டு வழிபடுக.  நான்கு புறங்களுக்கும், பின் எல்லாவற்றுக்கும் தலைவனை அமுதம் போன்று சுரக்கும் உள்ளத்தில் ஒடுங்கி இன்புறலாம்.  ஈசான முகம் சிறப்புற்ற போது சுட்டியறியப்படும் பிரபஞ்சம் காணாதொழியும்.
 
2042: உடம்பினுள் தாங்கிக் கொண்டிருக்கும் உள்ளத்தினால் உடம்பை அரித்துத் தின்னுகின்ற ஐம்பொறிகளாகிய கள்வரை யாரும் உணரவில்லை. ஐம்பொறிகளின் இயல்பை உணராமல் நகைக்கின்றவாறு உலக விஷயங்களில் சில பலவற்றைப் பேசிக் கொண்டேயிருப்பின் உயர்ந்துள்ள அண்ட கோசம் கரியஇருளால் சூழப்பட்ட எல்லையாகவே இருக்கும்.
எதை நினைக்கிறோமோ அதுவாக ஆவது தான் வேத முடிவு.
 
2043: ஐம்பொறிகளை அடக்கி விட்டால் விட வேண்டியது ஒன்றுமில்லை. அகத்தினில் பொருந்தி யிருக்கும் பரம்பொருளை இயல்பான முறையில் தொழுங்கள்.   இல்லையேல் ஐம்பொறிகளின் விருப்பத்தில் விளந்த பொய்யினையே பொருந்தும்புலன்கள் ஐந்து புறத்தே கவர உள்ளன.         இறைவனை அகத்தில் எண்ணி இருந்தால் புறத்தேயுள்ள ஐம்புல ஆசைகள் தோன்றா.
 
34.அசற்குரு.   (சன்மார்க்கம் அறியாத குரு)
 
2044: சிவத்தை நினந்து அதனால் அமையும் பரிச உணர்வைத் தன்னிடம் பெறாத குருவும்,  உண்மைப் பொருளை ஆராயாதவனும், சிக்கலின்றி வேத ஆகமங்கள்உணர்த்தும் நெறியினைக் காணாதவனும், அடக்கமில்லாதவனும், பிறரை நிந்திப்போனும், ஆன்மபோதம் உடையவனும் சன்மார்க்கம் அறியா அசற்குரு ஆவர்.
 
2045: மந்திரம், தந்திரம் மாட்சிமையுடைய யோகம் பாசம் முத்தி ஆகியவற்றைக் கண்டு உணர்ந்திருப்பாரை மனத்தினால் நினைத்தும் உண்மை ஞானம் பெற செய்யாமல்வயிற்றுப் பாட்டுக்காகக் குருடராய்த் திரியும் குருமார்கள் அசற்குரு ஆவர்.
 
2046: பேரின்பத்தை அடைவதற்குரிய உபாயத்தை அறியாதவனும்,அறிவில்லாதவனும்அறிவில்லாத செயலைச் செய்பவனும், காமம் முதலிய ஆறு பகைகளை நீங்கப் பெறாத கீழ்மகனும், பாவிகளுக்கு மெய்யை உணர்த்தாது பொய்யை உணர்த்துபனுமாகிய அறிவற்றவன் சிறந்த குரு ஆக மாட்டான். அவன் அசற்குருவே.
 
2047: உலகவாழ்வு பற்றிய எண்ணங்களை நீக்காமல் மந்திரோபதேசம் செய்தால் சிவபாவம் சிறந்து வெளிப்படாது சுருங்கி நிற்கும். அந்த மந்திரோபதேசம் தனக்கே பகையாகும்.  சிவத்தியானமும் உலக போகமும் ஒன்றுக்கொன்று முரணானது.  இத்தகைய குருமார்கள் வாழும் நாட்டுக்கும், அரசனுக்கும்
தீங்கு வரும் என்று முன்னமே சிவபெருமான் திருவாய் மலர்ந்தருளினான்.
 
2048: கண் பார்வையற்றவர்க்குக் கோலைக் கொடுத்து வழி காட்டிச் செல்லும் கண் பார்வையற்றவர், வழியல்லாத வழியில் போய்ப் பழைய குழியில் வீழ்வார்.  அதன் பின்பு அவரைப் பின் பற்றி வந்த குருடரும் அதே குழியில் விழுவார்.  அதைப் போல் அசற்குருவுடன் கூடிய ஞானத்தை உணராத மாணவரும் அசற்குருவோடு சேர்ந்து அஞ்ஞானத்திலேயே வீழ்வார்.  காமத்தை வென்ற குருவே இல்வாழ்வானுக்கு காம ஜெயத்தைத் தரும் சிவயோகத்தைப் போதிக்க முடியும்.
 
35. சற்குருநெறி.  (சத்தை உணர்த்தும் குரு.)
 
2049: சிவத்தின் திருவடியான சிவ உணர்வைச் சீடன் சிரசில் அமையுமாறு செய்யும் ஆற்றல் உடையவனே உத்தம குருவாவான்.  அவனே சிவத்தின் திருவடியைப் பதிப்பித்து சீவனின் உண்மை வடிவத்தை அறியும்படி தனது சங்கற்பத்தால் செய்ய வல்லவன்.  சிவத்தின் திருவடி பதித்தலால் முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து விளங்கும் சீவனின் பாசங்களை ஞானம் தந்து தணிக்க வல்லவன்.  அவனேஉத்தம குரு ஆவான்.  தன்னை அறிதல் என்பது  ஆன்ம முப்பத்தாறு தத்துவங்களுக்கும் வேறானது என்று அறிதல்.
 
2050: பிறவித் துன்பம் அகலச்செய்வார்.
சற்குருவானவர் தன்னிடம் உபதேசம் பெற்ற சீடரது வினைகள் நீங்கும் படி திருவருள் புரிவார்.  வினையால் வரும் தீமை அணுகாதவாறு சீடனது தலையில் திருவடி சூட்டி யருளுவார்.  இயமனும்  அவனது தூதுவரும் சீடன் பால் அணுகாமல் திருவருள் செய்வார். அவ்வழியே சீடனது பிறவித் துன்பம் நீங்கச் செய்வார்.
 
2051:குருவின் அருளைப் பெற்றவன் மீண்டும் பிறவிக்கு வாரான்.
கருமையான இரும்பு ரசவாத முறையால் பொன்னாகும்.  அப்பொன் திரும்ப இரும்பு ஆகாது.  அது போல பக்குவம் வந்த பொழுதே குருவினது அருளைப் பெற்ற சீடன் மீண்டும் பிறவிக்கு வாரான்.
 
2052: ஆரவாரம் இல்லாஅனுபவம் உள்ள குருவே நல்ல குரு.
பாசத்தினைக் களைந்து பரசிவத்துக்கும் தனக்குமுள்ள உறவை ஆராய்ந்து பாசக்கூட்டம் முழுவதும் அகற்றும் அனுபவமுடையோரே குற்றமற்ற சற்குரு ஆவார்.  சிவானுபவம் இல்லாது வாய் வாதம் பேசுவோர் சிவஞானமுடைய குரு ஆக மாட்டார்.
 
2053: உயர்ந்த குருவின் செய்கை.
நேயப் பொருளான சிவத்தோடு பொருந்தியிருக்கும் மலமற்றவனே மலம் நீங்கப் பெற்ற நேயப் பொருளை அளிக்க வல்லவன். அவனே நிலையானவனும் தூய்மையுடையவனும் ஆவான்.
அவனே ஆராய்கின்றவரது குணத்தை அறிந்த போது செறுக்குற்ற அன்பர்க்கு உபதேசிப்பவன் ஆவான்.
 
2054: சற்குருவால் உலகத்தவர் உய்வார்.
உலோகங்களைப் பொன்னாக மாற்றும் மருந்து, பட்ட இடமெல்லாம் மேன்மையைத் தருகின்ற பொன் தன்மை பெறுவது போல சற்குருவின் திருவடிபட்ட உலகத்தவரெல்லாம் மும்மலங்களும் நீங்கி எல்லாப்பத முத்திகளுக்கும் மேலான சிவகதி பெறுவர்.
 
2055: குருவே சிவத்தன்மை பெற அருள்வார்.
சிவமே தானாக எழுந்தருளிய சற்குருவின் திருமுன்பு, ஆன்மாவின் தன்னுண்மை தோன்றுமாயின் ஆன்மாவே சிவத்தைப் பெருமை பெற அறிவதாகும்.  அவ்வறிவே உன் உடம்பில் இருக்கும் சிவம் என்று தெரிந்து கொள்வாயாக. ஆன்மா தான் தத்துவங்களுக்கும் வேறானவன் என்று உணர்ந்திருக்கும் போது தேகத்தில் இருந்த அறிவும் தேகம் கடந்த அறிவும் ஒன்றே என்று தோன்றும்.
 
2056: குரு உபதேசத்தால் பெறுவது.
கரு இடுவதையே செயலாக காம இச்சையில் உள்ளவர் "பிறப்பும் இறப்புமற்ற இறவாத நெறியை" அறிய மாட்டார்.  நந்தி எம்பெருமான் பெருந்துறையாகப் பேசுகின்ற அந்த இறவாத நெறியை அனுபவமிக்க குரு உபதேச வழிச் சென்று அடையலாகும்.
 
2057: குருவே மாணவனுக்கு நன்னெறியைக் காட்டுவார்.
குரு என்பவன் வேதாகமம் கூறுகின்ற பேரின்ப வடிவு பொருந்தியவன். சிவமாகத் தன்னைப் பாவித்துக் கொண்டு வேறு எண்ணமின்றி சீடனின் பாசத்தை அகற்றி அகத்தே தோன்றுகின்ற மேலான சிவத்திடம் சீடனை வருவித்துச் சேர்ப்பவன் ஆவான்.
 
2058:குரு மாயை நீங்கிச் சிவத்தைச் சேர அருள் உபதேசம் செய்வார்.
சத்தாகிய சிவமும், அசத்தாகிய மாயையும், சத்தோடு கூடிச் சத்தாகவும் அசத்தோடு கூடி அசத்தாகவுமுள்ள ஆன்மாவும் ஆகிய முப்பொருள் களின் இயல்புகளை உணர்த்தி, சித்தாகிய ஆன்மாவையும் அசித்தாகிய முப்பத்தாறு தத்துவங்களையும் சிவத்தோடு சேர்த்து சுத்தமாயையும் அசுத்தமாயையும் நீங்க, இன்ப வடிவான பிரணவ உபதேசம் செய்யும் தலைவனே அருட்குரு என்று சொல்லப் பெறுவான். பிரணவ உபதேசம்:  வானத்தில் ஸ்பந்த ரூபமான அசைவும் ஒளியும் உள்ளன என்பதை உணரச் செய்வது பிரணவ உபதேசம்.
 
2059: பேதஞானம் நீங்கியவர் இறையடியைச் சேர்வார்.
உயிர்களிடம் உள்ள பாச உணர்வினால் ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி ஆகிய ஐம்மலங்களும் பொருந்தும்.   சிவபெருமானது திருவடியைப் பணிவதால் அவை நீங்கும்.  சிவப்பற்றை ஆதார மாகக் கொண்டு ஆன்மாவைச் சுற்றியுள்ள பேதஞானத்தைச் சீவதுரியம், சிவதுரியம், பரதுரியம் ஆகிய மூன்றினாலும் கெடுத்துத் தற்பரம் என்ற மேலான சிவத்தைச் சார்வோர் சாதகராவார்.
 
2060: பக்குவம் பெற்ற உயிர்க்குப் பிறவாநெறி அளிப்பது சிவசத்தி.
எல்லா உயிர்களும் இன்பம் நுகர்வதற்குரிய வலிமை மிக்க புலன் உணர்வோடு பொருந்த வரும் காலத்து, இறைவன் இறைவியோடு உள்ளத்தில் தோன்றவே, சொல்லாமலே ஐம்மலச் சேட்டைகள் அடங்கி உயிர் சிறந்து மீண்டும் வாரா நெறி அடைவித்தல் இறைவனுக்கு விளையாட்டாகும்.
 
2061: எல்லாம் சிவத்தின் அருட்செயல்.
இழிந்த பிறவியில் செலுத்தி, பின்பு அதனின்றும் மீட்டு, வினைப் போகங்களை அனுபவிக்கச் செய்து, பத முத்தியினை அடையப் பண்ணி, பதவி களின் சுகங்களைத் துய்க்கும்படி செய்து, உயிர்களை பிறவிக் கடலில் ஆழ்த்துதலும், பின் சிவஞானத்தில் மீளச் செய்தலும், அதிலேயே நிலை நிறுத்தலும், வீட்டினைப் பொருந்தி மௌனம் என்ற பேசாப் பெருவாழ்வு அளித்தலும் எல்லாம் சிவனது செயலேயாம். பிறவியில் செலுத்தி வினைப்போகம் நுகரச் செய்வதும், ஞானத்தை நல்கி வீட்டினை அருளுவதும் சிவத்தின் செயலாம்.
 
2062: ஐந்தொழிலை சிவம் இயற்றக் காரணம்.
சிவபெருமான் ஐந்தொழில் புரிந்து விளையாடும் இடம் உடம்பாகும். அறிவு-அறியாமையை நீக்கி சீவனைத் தெளிவித்து, மலத்தினைப்போக்கித்தூய்மையுடையவனாக்கித் தன் வண்ணம் ஆக்கலே சிவத்தின் ஐந்தொழில் காரியமாகும்.
 
2063: இறைத்தன்மையை அடைய இறைவனைப் பற்றிக் கொள்க.
ஈசுவரத்தன்மை பெறுவதற்கு மேல் பேறு இல்லை என அப்புறமாகி நின்ற சதாசிவமூர்த்தியைப் பாசத்தில் உள்ள போதே பற்றி நில்லுங்கள். பாசத்தின் கண் அவன் அன்போடு பொருந்தியிருப்பினும் அதில் ஒட்டாத நின்மலன் ஆவான்.  அவன் தங்கியிருந்த பாசமயமான புவனங்களை ஒளிமயமாகச் செய்தான்.  தேகம் உள்ள போதே இறைவனைப் பற்றிக் கொள்ளுங்கள்.
 
2064: பிறப்பற்ற நெறியை அறிந்து வாழ்க.
சிவந்த மாணிக்க மாலையைப் போல ஒளி விட்டு எழுகின்ற புருவ நடுவாகிய மண்டலத்தில் மாற்றுயர்ந்த பொன் போன்ற சிவம் பொருந்தி  நின்று பேரின்பமான அமுதை விளையச் செய்தது.  இதனைத் தெரிந்து விந்து செயத்தால் அமுதத்தைப் பெருகச் செய்து கொள்பவரே பிறப்பற்ற நெறியை அறிந்து வாழ்பவர்.  இதனை உணராத விலங்கனைய மற்றவர் சோற்றுக்குக் கேடாய் வாழ்பவர் ஆவார். விந்து செயத்தால் அமுதத்தைப் பெருக்கிக் கொள்பவரே பிறப்பற்ற நெறியை அறிந்து வாழ்பவராவார்.
 
2065: சிவனே உபதேசம் செய்கிறான்.
மலத்தோடு கூடிய ஆன்மா சீவத்தன்மை நீங்கவும், கட்டப்பட்ட பாசப்பற்றுக்கள் அற்று ஒழியவும், சுத்தமாயை, அசுத்தமாயை ஆகிய இரு மாயைகளையும் நெகிழ்வித்து அணுவாகிய ஆன்மாவை அங்கே கூட்டியவனும், பிரணவ உபதேசம் செய்பவனும் இறைவன் ஆவான்.
 
2066: சிவம் ஒளி வீட்டை அளிப்பான்.
மூலாதாரத்தில் இருந்து சிரசை நோக்கி ஏறும் பாதையில் உயிரைப் பிரிக்கும் மலத்தன்மையை சுட்டு எரித்து மேலே செலுத்தலாலும், முடிவற்ற நாத முழக்கத்தால் இருளை அறுத்தலாலும், பசுவின் இயல்பான பாசத் தன்மை கெடும்படி வாட்டுதலாலும், வீட்டுலகை அடையுமாறு  உபதேசிக்கும் பரசிவமே குருவாம்.
 
36.  கூடாவொழுக்கம்.  (வஞ்சகச் செயல்)
 
2067: சிவன் கண்காணியாய் எங்கும் உள்ளான்.
உலகவர் தாங்கள் செய்யும் நன்மை தீமைகளை மேல் பார்க்கும் அதிகாரி இல்லை என்று பலவிதமான வஞ்சகச் செயல்களைச் செய்வர்.  எல்லாரையும் மேற்பார்வை செய்யும் இறைவனாகிய கண்காணி இல்லாத இடமே இல்லை. உலகவர் இயற்றும் காரியங்களை மேற்பார்வை செய்து எங்கும் நிறைந்து விளங்குகின்ற இறைவனை கண்ணை இடமாகக் கொண்டு கண்டவர்கள் தாம் செய்யும் வஞ்சகச் செயல்களை விட்டு நீங்குவர்.
2068: சிவத்தை உணர்ந்தோரை விண்ணோரும் தொழுவார்.
கருமை நிறம் பொருந்தி எங்கும் விளங்கும் நீலகண்டப்பெருமான் செழுமையுள்ள கடல் சூழ்ந்த உலகில் பொய்யானவற்றையே பேசித் திரிகின்ற மனிதர்கள் உண்மையானவற்றைப் பேசுவார்களாயின் தேவரும் தொழும் தகுதி வழங்குவான்.  இவ்வுலகினைப் படைத்த அவன் பொய் யையும் மெய்யையும் நன்கு அறிவான்.
 
2069: பத்தியை விற்று உண்ணாதே.
பத்தியை விலை பேசி விற்று உண்டு பலவாறு பொழுதைக் கழிக்கின்ற மதம் கொண்டவர்க்கு  மறுபிறப்பு அமைந்துள்ளது.  பிறப்பை உண்டு பண்ணுகின்ற காமாதி விதையை நசுக்கிக் கண்டத்துக்கு கீழேயுள்ள பகுதியாகிய வினை புலத்தைக் கெடுத்துத் தரிசாக்கும் இறைப்பித்து உடைய வர்க்கு என்று பிறவியாகிய பயன் விளையாது. விதையைக் குற்றியபின் பலன் விளையாதது போல காமாதியைக் கெடுத்த பின் பிறவி வாராது.
 
2070: மூர்த்தி, தலம், தீர்த்தமெல்லாம் உள்ளத்திலேயே உள்ளன.
பத்தியை விலை பேசி விற்று உண்டு பலவாறு பொழுதைக் கழிக்கின்ற பௌராணிகர் வடக்கேயுள்ள மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவை பெருமையை உடையவை என்பர்.  வடக்கே உள்ளது ஒன்றும் இல்லை. எனினும் அறிவில்லாதோர் பிறரையெல்லாம் அங்குச் செல்லும்படி தூண்டுவர். வடக்கேயுள்ள தலமெல்லாம் ஞானியின் உள்ளத்திலேயே அடங்கியுள்ளன. கயிலை என்பது சிரசில் உள்ள ஈசான திக்கு.  கயிலாயபதி - ஈசானர். கங்கை, யமுனை, சரஸ்வதி என்பது இடைகலை, பிங்கலை, சுழுமுனை.
 
2071: இறைவனைக் காயத்துள் தேடவேண்டும்.
உயிரை உடலோடு சேர்த்து வைத்திருப்பவனும் உடலையே தான் வாழும் நாடாகக் கொண்டவனும் உடலுக்குள் இருந்து வெளிப்படும் குருமண்டல தலைவனும் ஆகிய இறைவனை தேசம் எங்கும் தேடிப் புறத்தே அலைவார்கள்.  அவன் அவரவர் உடலில் பொருந்தி நிற்கும் உண்மையை உணரமாட்டார்கள்.  என்னே அறியாமை? இறைவனைக் காயத்துள் தேடாமல் தேயத்தில் தேடுவது அறியாமை.
 
2072: இறைவன் உடலில் இருந்து இன்பம் அளிக்கின்றான்.
சிவன் மேற்பார்வை செய்பவனாக மூலாதாரத்தில் இருந்து எழுகின்ற அக்கினியிலும், சீடரது உள்ளத்திலும் உடலிலும் கலந்துதிருந்து சீடரை நெறிப்படுத்துவான்.  சிவத்தின் பால் காதல்
கொண்ட உயிர்களுக்கு அவர்களைக் கண்காணித்து நடத்தும் காதலனும் அவனே தான்.
 
2073: இறைஅனுபவம் இல்லா கற்றோரும் மற்றோரும் ஈசனை அறியார்.
காமத்துக்குக் காரணமான கன்னியரின் வலையில் வீழ்ந்தோர் ஒருவகையில் சிறைப்பட்டவர்.  வேதங்களை ஓதுபவர் ஒருவகையில் சிறைப்பட்டவர். உடலை வருத்தித் தவம் செய்பவர் ஒருவகையில் சிறைப்பட்டவர். தத்துவ விசாரணையால் தன்னையும் தலைவனையும் உணர முற்படுவோர் ஒருவகையில் சிறைப்பட்டவர்.  இவ்வகையாக உள்ள நால்வரும் இறை அனுபவம் இல்லாமையால் ஈசனது இயல்பு அறியாதவர் ஆயினர்.
 
2074: ஞானம் அடைந்தவர் காம வழிச் செல்லார்.
ஒன்றையும் காணமாட்டாத படலத்தால் மறைப்புண்ட கண்ணுக்கு இருட்டே அதன் ஒளி.  சிவ ஒளி எங்கும் வியாபித்திருந்தாலும் அவ்வொளி சாதாரண மக்களுக்கு காணப்படாததாகவே உள்ளது. காணாதவர்க்கு அகக்கண்ணாய் இருந்து காட்டும் பெரிய கண்ணொளியாகும் கடவுளை ஊனக்கண்ணால் காணாது ஞானக் கண்ணால் கண்டவர் தாம் புரியும் களவு ஒழுக்கத்தினின்றும் உய்ந்து ஒழிந்தார்.
 
2075: குருவின் அருளால் சித்தம் தெளியும்.  சீவபோதம் கெடும்.
பித்துப் பிடித்தவன் மருத்துவன் கொடுத்த மருந்தால் பித்தம் தெளிந்து தன்இயல்பான தன்மையைப் பெறுதல் போலவும், படலம் மறைத்த கண் படலம் நீங்கி ஒளி பெற்றுக் காணும் தன்மையைப் பெறுதல் போலவும் சிவகுருநாதன் அருள் பாவிக்கச் சித்தம் தெளிந்தேன்.  சீவ சுபாவமான கீழ் நோக்கு செயல்களை விட்டு நின்றேன்.
 
2076: கள்ளுண்ணும் தீவினையாளர் இறைவனை மறந்து கெடுவர்.
நிலம், நீர், நெருப்பு, காற்று, விண், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய எட்டும் சிவத்தினது உறுப்புகளும் அவனது சத்திகளும் என்பதை எண்ணி அஞ்ஞானமாகிய தூக்கத்தினின்று மக்கள் விழித்தலைச் செய்யார். கள்ளுண்ணும் தீவினையாளர் இன்பமயமான இறைவனது நினைப்பை
விட்டவர் ஆவார்.
 
2077: சீவனும் சிவனும் ஒன்றேயென்றுணர்க.
கலப்பினால் ஒன்றாயும் பொருள் இயல்பால் சீவனும் சிவனும் என்று இரண்டாயும் நின்று சீவத்தன்மை கெட்டுச் சிவமாயினோர்க்கு ஒன்று இரண்டு என்னும் பேதஞானம் ஒருபோதும் வாராது.  அவ்வாறன்றி ஒன்று இரண்டு என்னும் பேதஞானம் உடையவர் எல்லோருக்கும் பிரிப்பின்றியுள்ளது ஒன்று என்றும் இரண்டு என்றும் வேறாக பிரித்து எண்ணும் நிலையில் வேறாகவே இருக்கும்.
 
2078: உயிருக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பை அறிவாயாக.
மூச்சு நின்று விட்டால் உணர்வு எங்கு இருக்கும்?  அயர்ந்து அறிவில்லாமையால் பரிச உணர்ச்சி நிறைந்த இந்த உடல் அகன்று கீழே வீழும். உயிரும் உடலும் இவற்றோடு பொருந்தியிருக்கும் உணர்வாகிய சிவப் பயிரும் அமைந்து கிடந்த உள்ளத்தின் தன்மையை உலகவர் அறிய மாட்டார். உலகவர் உயிருக்கும் உடலுக்கும் உள்ள சம்மந்தத்தை அறியமாட்டார்.
 
2079: உணர்வில் மறைந்திருக்கும் சிவத்தை அறிந்து கொள்வாயாக.
உயிர் என்பது உடலின் வேறாய் உணர்வாக எங்கும் நிலை பெறும் தன்மை உடையது.  உயிர் எத்தன்மையது என்று அறியில் அதனாலாய உணர்வு அறியப் பெறும்.  உடலை வியாபித் திருப்பது பிராணன் அன்று. உணர்வே. அவ்வுணர்வில் "மறைந்திருக்கும் சிவம் ஒன்று உள்ளது" என்பதை யாரும் அறியமாட்டார்.
 
2080: நாதசத்தியைத் தலையில் வாக்கு ரூபமாக அறிக.
உலகம் நிலை பெறுவதற்குரிய அச்சாணி போன்றவனும்,ஒளி பொருந்தியமேலான அறிவு சொரூப மானவனும் ஆகிய இறைவன் நிலம் முதலாகிய ஐம்பூதங்களின் தன்மையாய் அவற்றுள் உள்ளும் புறம்புமாகக்  காணப்படுவான்.  சில வாக்கு ரூபமான சத்தியுடன் பொருந்திய தேவர்களுக்குத் தலைவனை தலையில் வாக்கு ரூபமாக அறிவதே தன்னை அறிவதாகும்.
 
2081: நிலையான இன்பத்தை இறைவன் அருள்வான்.
விருப்பத்தையும் பின் முடிவில் சோர்வினையும் நல்கும் சிற்றின்பத்தை நீ விடுவாயானால் – உலகப் பொருள் எல்லாவற்றுக்கும் ஒடுங்குமிடமாக உள்ள ஒப்பில்லா சுயம்சோதியும், உடல் உலகு எல்லாமாய் நின்ற ஒளி பொருந்திய சுடரும் ஆகிய தலைவன், தனது எல்லையற்ற கருணையால் விளையும் நிலைபேறுடைய இன்பத்தை உனக்கு அருளுவான்.
 
2082: உடம்பில் உயிர் பொருந்துதல் இறைவனை அடையவே.
உனக்கு முதல்வனாய் உடம்பில் உயிர் நிலை பெறச் செய்த, ஒளி மண்டலத்தில் விளங்கும் இறைவனது கருத்தை அறிவார் இல்லை.  நல்ல முதல் வனாகிய சிவம் மிக்குத் தோன்றத் தனக்கெனப் பெயரின்றி அவனோடு ஒன்றி நின்றால் தனக்கு முதல்வனாகிய சிவத்தினது பண்பு உண்டாகும். தன் நாமம் கெட்டு சிவன் நாமம் பெறுதல் என்பது இதுவேயாகும்.
 
2083: ஆன்மாவானது இந்திரியங்களோடு பொருந்தும் முறையை அறியாதிருப்பது கூடா ஒழுக்கம்.
இந்திரியங்களும் அந்தக்கரணங்களும் வந்தனவாகிய சூக்கும உடலும் உயிர் அன்று. இவை மகத் தத்துவத்தினின்று தோன்றியவை.  புருடனும் கலை, காலம், நியதி, வித்தை, அராகம் ஆகிய ஐந்தின் கூட்டத்தால் பொருந்துவதாகும்.  அனாதியாய் உள்ள ஆன்மாவானது முப்பத்தாறு தத்துவத்தின் முடிவில் நிலை பெற்றிருக்கும்.
 
37.  கேடு கண்டிரங்கல். (அழிவு கண்டு வருந்துதல்)
 
2084:வினையைப் போக்கிக் கொள்ளாமல் கெடுகின்றனர்.
ஒவ்வொரு கணமும் தம் வாழ்நாள் கழிகின்றதை அறியாத பாவிகள் வினையாகிய வித்தைச் சேமிப்பார்.  வினைப் போகத்தை அறுவடை செய்ய உடம்பாகிய நாற்றங்காலில் அவ்விதையை முளைக்கச் செய்வார். தமக்குற்ற வினைப் போகத்தால் வரும் துன்பத்தைச் சிறிதும் உணரமாட்டார்.     கொழுந்து விட்டு எரிகின்ற தீயில் கெடுகின்றது போல் வினையை அதிகரிக்கும் அவர்கள் வாழ்நாளுள்ள போதே வினையை நீக்கிக் கொள்ளாத பாவிகள்.
 
2085: வாயினால் பேசி வாதிட்டு என்ன பயனைப் பெறுதல் கூடும்?
அகண்டமாகிய மலமற்ற சிவத்தினது திருவடியை வணங்கி அவன் பால் அன்பாய்ப் பொருந்தும் நெறியை அறியும் ஆற்றல் இல்லாதவர்களாய் இருக்கும் மக்கள் வாழ்நாள் திடீரென்று முடிவதைப் பார்த்தும் சாதனை யின்றி வாயினால் பேசி வாதிட்டு என்ன பயனைப் பெறுதல் கூடும்?
 
2086: அறிவில்லாதவர் உடலை நினைந்து போற்றிக் கெடுகிறார்கள்.
விசாலமான மலைச் சரிவில் நெருப்புப் பொருந்திய முருட்டுக் கட்டையின்மேல் இவ்வுடல் கிடக்கும் என்பதை அறியா மக்கள்- கடன் வாங்கியேனும்நெல்லைப் பெற்றுக் குத்தி உண்டு - கயவராகிய பொறிகளைத் திருப்தி செய்து உடம்பை வளர்த்து - அந்த உடம்பையே உயிரென மதித்து அறிவில்லத வராகத் திரிவார்.  அறிவில்லாதவர் இறைவனை நினைந்து போற்றாமல் உடலை நினைந்து போற்றிக் கெடுகிறார்கள்.
 
2087:குருவின் கருத்தின் வழிச் செல்லாமல் தம் அறிவு வழி நடந்து கெடுகின்றனர்.
முன் காலத்தில் சனகர் முதலிய முனிவர்  நால்வர்க்குக் கயிலாயப் பதியில் சேர்ந்து இருந்து கல்லாலின் மரத்தின் கீழ் இருந்து அறக் கடவுளான குருநாதன் விரைந்து உபதேசித்த "சிவத்தை"  உணராமல், பழமொழி களைப் பேசும் மக்கள் தமது சீவபோத (உயிர் அறிவையே) அறிவையே இயல்பாகக் கொண்டு ஒருப்பட்டு நின்றனர்.
 
2088: சிவன் விரும்பியவற்றை எல்லாம் அளிப்பான்.
எம் சிவபெருமான் நிலையான புகழையும் நிறைந்த தவத்தின் பயனையும் எப்போதும்  அடியவர்க்கு அருள்வான்.  அ•து அறிந்தும் உலகத்தவர் "முதற்கடவுள் அது என்றும், இது என்றும்" பேசிப் பேசி நிலை கெட்டுக் குறைவடைந்தனர்.
 
2089: சிவத்தை மறந்து உலகத்தார் கெடும் விதம்.
இன்பச் சூழ்நிலையில் பிறந்து, இன்பச் சூழ்நிலையில் வளர்ந்த மக்கள் உண்ணும் போதும், உறங்கும் போதும், உடல் உறவு கொண்டு இன்பம் அனுபவிக்கும் போதும் இன்பப் பொருளாகிய சிவத்தை நினைப்பதை விட்டு  இன்பத்தை விரும்பி சோறு, ஆடை என்கிற துன்பத்துளே நின்று துன்பத்தையே நினைத்துக் கொண்டு அறியாமையில் உழலுகின்றனர்.
 
2090: அருமையான மானுடப் பிறவியைப் பெற்றும் பயனில்லை.
பெறுவதற்கு அருமையான மானுடப் பிறவியை இறையருளால் பெற்றிருந்தும் பெறுவதற்கு அருமையான சிவத்தினது திருவடியைப் போற்றாதவராயினர்.  பெறுவதற்கு அருமையான பிறவியைப் பெற்றும் விலங்கினை ஒத்த இந்த மக்கள்  பெறுவதற்கு அருமையான இன்பப் பேற்றினை இழந்தனர்.
 
2091: இளமையில் மேற்கொள்ள வேண்டிய யோக நெறியை அறியாது கெடுகின்றனர்.
வேட்கையுடைய மனமும், அளவில்லாத இளமையும் அன்பும் ஆகிய இவை நல்லனவாகவுள்ள இன்பமான காலத்தில் மாற்றம் தருவதொரு உடலுறவு (பரியங்க யோகம்) கொண்டு நிலை பெற்று மாதவனாகிய சிவத்தை நினைந்து இன்பம் பெறாது, உலகவர் கெடுகின்றனர். சிவத்தை எண்ணிக் காமத்தொழிலில் நின்று விந்துசெயம் பெற்றுப் பேரின்பம் பெறுக.
 
2092: மனத்தகத்தே விளங்கும் இறைவனை அறியாமல் அழிகின்றனர்.
முன் கூறிய முறையில் சிவத்தை எண்ணிக் காமத்தொழிலில் நின்று விந்துசெயம் பெற்றுப் பேரின்பம் பெற இளஞ்சூரியன் போன்ற உருவம் அமையும். அவ்விதம் அக்கினிமண்டலத்துள் அமர்ந்துள்ள தலைவனும் இம்முறையில் சுவாதிட்டான மூலாதாரங்களில் பொருந்தி விளங்கும் ஈசனும் ஆகிய இறைவனது உண்மைத் தன்மையை இதுவரை விசாரியாமல் இருந்தோம். என்ன அறியாமை!
 
2093:குரு காட்டிய வழியில் செல்லாதவர் அடைவது.
குருவானவர் காட்டிய வழியில் பொருந்திச் சீவனைக் கூட மாட்டார். சிவத்தை நாடி அடைய மாட்டாதவர் நூல்களில் தாம் கண்ட நயத்தைப் பேசித் திரிவார். இறைவன் செய்த உதவிகளை எண்ணி அவனது புகழைப்பாட மாட்டார்.  வீணாகக் களியாட்டம் ஆடுவதில் வல்ல இவர்கள் அடையும் பயன் ஏதுமில்லை.
 
2094: மனத்தில் நிறைந்து உயர்ந்து எழுகின்ற சோதியை நம்முடைய செம்பொருளாகியசிவன் என்று நம் நாதனை நாள் தோறும் உறங்கும் அளவு துதியுங்கள்.  அங்ஙனம் துதிக்காவிடில் நமது ஐந்து இந்திரியங் களும் கட்டினை அறுத்துக் கொண்டு திரியும் யானை போலாகும். சிவ சிந்தனை இல்லாவிடில் மனம் உலகவிஷயங்களைப் பற்றித் திரியும்.  மன மண்டலத்தில் சிவத்தையே நினைத்திருப்பவர்க்கு மூலாதாரம் முதல் துவாதசாந்தம் வரை சோதி அமைந்து ஒளி விடும்.
 
2095: விலங்கு, மனிதர், தேவர், பறவை ஆகியோர் ஒப்பற்ற இறைவன் பால் ஆன்பு பூண்டு நினையாதது இல்லை.   ஞானத்தோடு பொருந்திய மாதவம் செய்த ஞானியரோ எண்ணுதலொடு நில்லாது சிவாமுதத்தை உண்டு திளைப்பர். மகிழ்ச்சியால் ஓடுவர்.  பூமியில் பிறந்ததனால் ஆகிய பயனைப் பெறுவர்.
 
2096: நேர்மையில்லாதவர் தமக்குக் கிடைத்த பொன்னைப் போற்றார்.  அது போன்று முறைப்படி இறைவனைப் பேரொளியாய் அறிந்து போற்றுபவர் இல்லை.  ஆனால் நான் அவனை நாம் பெறும் முதற் பயன் என்றும் தேவர்களுக்கும் மேலான தேவன் என்றும் அநாதி காலம் தொடங்கி மனத்துள் வைத்து
அவனையே விரும்புகின்றேன்.  நேர்மையுள்ளவர்  இறைவனை முறைப்படி பேரொளியாய் அறிந்து போற்றுவார்.
 
2097: மிக்க தேனை உடைய மலரினைப் பொருந்தி மகிழ்வதற்காக வண்டுகள் மிகுதியாகத் தேனைச் சேகரிக்கும் தன்மையை மக்கள் உணரார்.  சுற்றி வரும் வண்டு நுகராது வாயில் வலிய வந்து சொட்டும் தேனும், எல்லாராலும் பெறுவதற்கு அரிய தேனும் போல்பவராகிய இறைவனை ஒருவரும் உணர மாட்டார்.
 
2098: இறைவனை அறியும் நெறியை அறியாமல் இத்தனை காலம் வீணே கழிந்தது. 
வானவரின் தலைவனான அவன் ஒருவனே உயிர்கள் எல்லாவற்றிலும் உயிராய்உள்ளவன்.  அவ்வாறு இருந்தும் அறிவற்றவர் அவனைத் தங்கள் அனுபவத்தில்வருவித்துக் கொள்ளாமல் தவறி விடுகின்றனர்.
 
2099: வாழ்நாளைக் குதித்தோடச் செய்கின்ற கூற்றுவனுக்குச் சார்பாக வரையறுக்கப்பட்ட நாள்களும் பயன் இல்லாமல் கழிந்தன.  அதற்கென நடுக்கம் கொண்டு இருந்து என்ன செய்யப் போகிறீர்கள்?  நீவிர் ஆறுதல் அடைய விரும்பினால் மூலாதாரத்தில் கொதிக்கின்ற கூழில் உள்ள அமுதத்தைப் பக்குவப்படுத்தி
உண்ண அகப்பையை இடலாம்.  மூலாதாரக் கனலைத் தூண்டிச் சுழுமுனை வழியாகச் செலுத்தி அமுதம் பெற்றால் நீண்ட காலம் வாழலாம்.
 
2100: குண்டலினி யோகம் செய்யின் நரை திரை உண்டாகாது.
இடைகலை பிங்கலையாகிய கரைபக்கம் சுக்கிலமாகிய வயல் விளைந்தது.  சுக்கிலத்தின் வளமை சுருங்கிக் கெடுவதற்கு முன்பு அச்சத்தியைப் பயன்படுத்திப்பேரின்பத்தை அடையுங்கள்.  குண்டலினி சத்தி மேல் முகமாகத் தலையை அடைந்து இன்பம் ஊறுகின்ற தவத்தைச் செய்தால் மயிர் நரைத்து முதிர்ந்த பருவம் இல்லாமல் நீங்கும்.
 
2101: இருள் உலகத்தில் மக்கள் கெடுகின்றனர்.
உயிர்கள் எல்லாம் உடலுடன் கூடித் தோன்றும் ஆதிப் படைப்பை அறிபவன், அறியாமை உடைய அவ்வுலகத்தில் அதன் தன்மையை அறிபவன், தானே எழுந்து விளங்கும் சோதி, இத்தகைய இறைவனைக்  - குண்டலினி யோகம் பயில்பவர் - முன் விளங்கும் ஒரு தெய்வம் என்று அதை அடைய வகை அறியாமல் இருள் மிக்க உலகத்தில் ஆசை வைத்து மக்கள் கெடுகின்றனர்.  ஒளியில் நிலைபெற்ற சிவத்தைஅடைய வழி அறியாமல் இருளாகிய பிரபஞ்சத்தில் கிடந்து மக்கள் கெடுகின்றனர்.
 
38. இதோபதேசம்.  (உயிருக்கு உறுதி பயக்கும் நன்மொழி.)
 
2102: பிறவி நீங்க இறைவனை நினைக்க வேண்டும்.
இறைவனை மறந்தொழிகின்ற இவ்வுலகில் நிலையற்ற உடம்பு இறக்கும் காலத்தும் இறைவனை எண்ணுங்கள்.  வாழும்போது அலைந்து நிலை கலங்கிப்படும் துன்பங்களை எல்லாம் தீர்ப்பதற்காக் மேன்மையான சிவநெறியை எண்ணத்திலே  கொண்டு நாடுவீராக.  வாழும் காலத்தில் இறைவனை இடைவிடாது எண்ணி வந்தால் இறக்குங் காலத்து எண்ணுவது கூடும்.  பிறவி நீக்கத்துக்கு இறைவனை இடைவிடாது எண்ணியிருக்க வேண்டும்.
 
2103: சிவ நெறியை நாடுங்கள்.
முடிந்த அளவு சித்தத்தைச் சிவன் பால் வையுங்கள்.  முடிந்த தன்மையால் சிவத்தையும் ஆத்மனையும் எடுத்துக் கூறுங்கள். இறைவன் ஒருவன் இல்லை என்று சிலர் சொல்லிக் கொண்டிருந்தாலும் எம்மிறைவன் என்றும் உள்ளான்.  ஆதலால்சிவநெறியைத் தேடிப் பெறுங்கள். நீக்கமற நிறைந்த இறைவனை  இடைவிடாது எண்ணுவதோடு முடிந்த அளவு அவனது தன்மையை இயம்பவும் வேண்டும்.
 
2104: ஒன்றே குலம்.  ஒருவனே தேவன்.
குலமும் ஒன்றே.  தெய்வமும் ஒன்றே.  நல்லனவற்றையே எண்ணுங்கள்.  உமக்கு எமன் இல்லை. நீங்கள் வெட்கப்படாமல் சென்று அடையும் கதியும் வேறு இல்லை.  உங்கள் மனத்துள் இறை எண்ணம் நின்று நிலைபெற நீங்கள் இறைவனை நினைந்து உய்யுங்கள்.  ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று
இறைவனை எண்ணியிருந்தால் உய்தி பெறலாம்.
 
2105: உச்சியில் விளங்கும் சிவனை துதித்துக் காலனை வெல்வீர்.
இறைவன் அனைவரும் வணங்கும் கயிலை மலையில் விளங்கும் பேரொளி வடிவானவன்.  தலையின் நாற்புறமும் விளங்கும் சத்தியோசாதம், வாமதேவம், அகோரம்,தற்புருடம் என்னும் நான்கு முகங்களுக்கும் நடுவேயுள்ள ஈசான முகத்தினன்.  நம்பத் தகுந்தவன்.  உள்ளே போகும் வெளியே வரும் மூச்சுகளைஉடைய உடலைப் பற்றி நின்று கூற்றுவனைக் காய்ந்தவன். இத்தகைய சிவனைத் துதித்து நின்று உய்தி பெறுங்கள்.
 
2106: மல நீக்கம் பெற்று பிறவி அறச் சிவனை நினையுங்கள்.
இவ்வுடலை நீத்து இனி ஓர் உடலில் புகுந்து பிறவாத வண்ணம் உய்ந்து போகும் நெறியை விரும்புங்கள்.  எப்போது இவ்வுடல் நமக்கு வந்தது என்று அக்காலத்தை எண்ணி ஆராய்ந்தால் இறைவனது அருளைப் பெறலாம்.  பிறவியின் காரணத்தை ஆராய்ந்து சிவனை நாடினால் மலநீக்கம் பெற்று பிறவி அறுதல் உண்டாகும்.
 
2107: பிறவிக் கடலைக் கடக்கச் சிவன் அருள்வான்.
சீவர்களின் விருப்பம் செல்லுகின்ற முறையிலே உடனாகின்ற பொருளாகிய சிவன் பக்குவமாகிற காலம் அறிந்து இன்பம் செய்பவனாகவும் உள்ளான்.  ஆதலால் இறக்கின்ற காலத்தும் அத்தலைவனையே நினையுங்கள்.  அப்பொழுது அப்பரம்பொருள் பிறவிக் கடலை நீந்தி அக்கரை சேர உதவும்.  சிவன் சீவர்களோடு உடனாய் இருந்து பக்குவம்வந்த போது பிறவிக் கடலை கடக்க உதவும்.
 
2108: சாயுச்சியப் பதவி கிட்டும்.
உடம்பை விட்டுப் பிரிந்து செல்லுகின்ற இச்சீவன் இதனுள் வாழ்ந்த பயனைப் பெற வேண்டின் இறக்கும் போதாவது ஈசனை எண்ணுங்கள். அதனால்  சிறப்போடு சிவனெறியும் தானே வந்து அடையும். பிறகு பிறப்பில்லா பேருலகம் கூடலாம்.  இறக்கும் காலத்திலாவது ஈசனை நினைப்பின் சாயுச்சியப் பதவி கிட்டும்.
 
2109: பக்குவத்துக்கு ஏற்ப இறைவனை வழிபடுக.
அடியார் கூட்டத்தோடு நின்றும் தனித்து நின்றும் தொழுது எமது இறைவனை உடலாகிய பாசறையில் நின்று அவனது திருவடியைப் பணியுங்கள்.  க்ண்ணாடி போன்ற முகத்தின் முன்னுள்ள ஒளியில் நிலை பெற்று அறிவினால் தொழுபவர்க்கு கன்றையுடைய பசு பாலைச் சொரிவது போல் சிவ ஒளி சீவன் பால் பெருகி நிற்கும்.  கன்றையுடைய பசு பாலைச் சொரிவது போல அறிவால் தொழுபவர்க்கு சிவன் ஒளியினைப் பெருக்கி நிற்பான்.
 
2110: யோக நிலையில் நிராதாரத்துக்குச் சென்று தலைவனை வணங்குங்கள்.
உடலை விட்டுச் சீவன் நிராதாரம் செல்லும் போது பிரமரந்திரத்தின் நடுவே நின்று இறைவனது விந்து நாதமான திருவடியைத் தியானியுங்கள். வலிய வினைகள் கெடும்.  அழியாப் புகழை உடையவனாகிய இறைவன் உங்களைத் தேவர்களோடு கூட்டி இறவாப் பெருனிலையை எய்துவிப்பான்.  மூலவாயுவை எழுப்பி நிராதாரம் செல்லும் யோகம் சிவரூபத்தை அளிக்கும்.
 
2111: சிவத்தைப் பேரொளியாய்க் கண்டு வழிபடுவோர்க்கு வினை இல்லை.
'ஒளிமயமான இடபத்தின் மேல் திகழ்பவனே! சீவ ஒளிக்கு ஒளியாய் விளங்குபவனே! எம்மை இயக்கி நடத்துபவனே' என்று வெண்ணீற்றை முகத்திலே தரித்த அடியார் தேவரைப் போன்றவர்.  கங்கை அணிந்த சிவந்த சடையையுடைய சிவபெருமானது விந்து நாதமாகிய திருவடிகளைத் தனியாய்  இருந்து தியானிப்பவர்க்கு வினை இல்லை. இறைவனை ஒளியாகக் கண்டு உலக சிந்தனை நீங்கி வழிபடுவோர்க்கு வினை இல்லை.
 
2112: இன்பம் அளிக்கும் இறைவனை எண்ணித் தவம் செய்ய வேண்டும்.
ஓயாமல் பிறவியில் பொருந்தி நின்று துன்பம் தரும் பாசத்தில் உழன்று இருப்பவரே! எமது இறைவனை நாடி இன்பத்தை அடையுங்கள். அன்பைச் செலுத்தித் தவத்தைச் செய்யுங்கள். அதனால் உண்மை ஞானம் பெற்று இறைமைக் குணத்தை அடைவீர்.
 
2113: உண்மை ஞானம் வேண்டும்.
பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்ள நினைப்பவர்க்கு மேற் கொள்ளத் தக்க உண்மையான தவம் உள்ளது.  அடையத் தக்க திருவடியும் உள்ளது.  அதனால் கிட்டும் உண்மை நெறியும் உள்ளது.  பிறவித் துயர் நீங்க இறைவனை எண்ணித் தவம் செய்ய வேண்டும்.
 
2114:சிவம் தன்னை அடைந்தவர்க்கு இன்பம் தந்து பிறவியை நீக்குவான்.
மூலவாயுவுடன் மேலே போய் ஆழ்ந்தவர்க்கு அவர்களிடம் தனது சிலம்புஅணிந்த பொன்னடியைக் காட்டி நாதத்தை எழுப்பும்.  அவ்வாறு சேர்ந்தவர் நாத சம்மியம் செய்வதால் சிவத்தை உணர்ந்திருப்பர்.  மூலவாயுவை மேலெழுப்பி அதனுடன் போய் மதி மண்டலத்தை அடைந்தவர்க்கு அக்கினி வடிவான சிவம் இன்பத்தைத் தரும்.  அவ்வாறு சராமல்பிரிந்தவர்க்குத் துன்பம் தருவதான பிறவியைத் தந்து விடும்.
 
2115: குருவின் வழிபாடு சிவகதியை அளிக்கும்.
இறைவன் வீடு பேறாகவும் அதன் வழியான ஞானமாகவும் ஞானத்துக்குத் துணை செய்யும் முத்தமிழ் ஓசையாகவும் இருப்பவன். அத்தகையவனைப் பலகாலம் புறத்தில் வணங்குவர்.  ஆனால் பாலில் கலந்திருக்கும் நெய் போல் நின்மலச் சிவனும் அவருடன் மறைந்திருப்பான்.  அத்தகைய சோதிப் பிழம்பான அச்சிவனை உள்ளத்தில் கண்டு வழிபட அறியார்.
 
2116:உயிர்கள் உண்மையை உணராமல் பிறப்பிறப்புக்கு ஆளாகின்றன.
தனுகரண புவன போகங்களை உயிர்களுக்கு நியமிப்பவன் இறைவன். அவன் அமைத்தருளிய காலம் எவ்வளவு என்று எவரும் உணர்வதில்லை. பிறப்பிலே வந்து படுவதைத் தவிர சிவமாகிய பரம்பொருளின் பெருமை யை உணராமல் கெடுகின்றனர்.
 
2117: அஞ்ஞானியர்க்கு அரிய செயல்.
இங்குள்ள வாழ்வு எவ்வளவு துன்பம் ஆயினும் இறப்பு வந்த காலத்தில் தூய செம்மணி போன்ற சிவபெருமானை விஞ்ஞானத்துறையும் விகிர்தனேஎன்று நைந்து உருகிப் போற்றும் பற்றற்றவரை சிவன் வந்தடைவான். அங்ஙனம் இன்றேல் பற்றுள்ளவரை சிவன் உம்மை அடைய இயலாது.
 
2118:வஞ்சகமுடையோர் சேர்க்கை இம்மைக்கும் மறுமைக்கும் தீமைதரும்.
நற்குருவை நாடி வஞ்சகமுடையோர்அடைவாராயின் அவர்களைக் கண்டு இறைவனே அஞ்சுவான்.  கொடிய நரகத்தில் அவர்களைச் சேர்ப்பான். உலகில் பஞ்சம் ஏற்படும்.   வஞ்சகமின்றிச் செம்மையான ஒழுக்கத்து நிற்போரைக் காண்பதே எல்லா சித்திகளையும் தரும்.
 
2119: சிவகதி கிட்டும்.
அளவற்ற தேவர்கள் சிவனை கிரியை நெறி நின்று வழிபட்டனர். அவ்வாறு வழிபட்டு ஆகும் பயன் ஒன்றும் இல்லை. அவனை வழிபடும் நெறியான ஞான நெறியினை உபதேசிக்கும் சற்குருவை வழிபட்டால் சிவனை அடையலாம்.
 
2120: பாச நீக்கத்துக்குரிய உபதேச மொழி தத்துவமசி என்பதாம்.
மக்களும் தேவர்களும் ஆகிய பசுவர்க்கம் பாசத்தைப் பொருந்தி வினைகளைச் செய்து அழிவதைப் பார்த்து குருவாகிய ஞானி பாசம் நீங்கினவனாய் இருப்பானாகில் நீ பரத்தோடு கூடிப் பரமாவாய் என்று சீடனுக்கு உபதேசிப்பதன்றி சொல்லக் கூடியது வேறு ஒன்றும் இல்லை.  நீ அது ஆகிறாய் என்ற தத்துவமசி மகாவாக்கியமே பாச நீக்கத்துக்குரிய உபதேச மொழியாகும்.
 
2121: சிவமே குருவாய் வந்து வினை கெடச் செய்வான்.
குருவாய் எழுந்தருளி வந்தவன் ஒப்பில்லாத சிவனே ஆவான்.  அவன் பால் அன்பு கொண்ட சீடரது வினைகள் நாள் தோறும் தேய்ந்து ஒழியும். நீரையுடைய நீண்ட செஞ்சடையையுடைய சிவபெருமான் குருவாக உருவம் கொண்டு எழுந்தருளி வந்து சீடரை ஆட்கொண்டு அவரது வினையைக் கெடுமாறு செய்வான்.
 
எட்டாம் திருமந்திரம்
 
1. உடலில் பஞ்ச பேதம்:
ஐந்து வகைப் பேதமாவன: 1. அன்னமய கோசம், 2. பிராணமய கோசம் 3. மனோமய கோசம், 4. விஞ்ஞானமய கோசம், 5. ஆனந்தமய கோசம்.
 
2122: மனோமய கோசமே மற்றக் கோசங்களுக்கு ஆதாரம்:
உடம்பு என்னும் அன்னமயகோசம் ஒன்று உண்டு. பலவினைகள் என்னும்  பொருள்களையுடைய பிராணமய கோசம் என்று ஒன்று உண்டு.  இவை அல்லாத வேறொரு மனோமய கோசம் என்று ஒன்று உண்டு.  அறிவு விளங்கும் மனோமய கோசம் உடம்பை விட்டு நீங்கினால் மாயப்பை ஆன இரண்டு உடலும் மண்ணுடன் மண்ணாய்க் கலந்து விடும்.
 
2123: நுண்ணுடலின் அமைப்பு:
சிவன் அமைத்தது தூலம், சூக்குமம் என்ற இரு கூறால் ஆன உடல்.  இதில் சுத்தமான சூக்கும உடலைப் பற்றிச் சொல்லும் போது சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்பவையும் புத்தி மனம் அகங்காரம் என்பவையும் ஆகிய எட்டும் புரியட்டக (சூக்கும) உடலாகும்.
 
2124: சிவபெருமான் மலநீக்கம் செய்வதற்காக இவற்றைப் பொறிகளுடன் சேர்த்துப் பிரிப்பான்:
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் ஆகிய ஐந்து தன்மாத்திரைகளிலிருந்து மெய் வாய் கண் மூக்கு செவி ஆகிய ஐந்து பொறிகள் தோன்றும். புத்தி மனம்அகங்காரம் ஆகிய அந்தக்கரணங்கள் மூன்றும் அவற்றுடன் பொருந்திய உட்கருவிகள் ஆகும்.  இவற்றுடன் சேர்ந்த பாசத்தை உணர்வு மயமாய்
விளங்கித் தூல உடலில் கூட்டியும் பிரித்தும் சிவன் அருளுவான்.
 
2125: தூல உடலின் அமைப்பு:
தூல உடல் உண்ட உணவின் சாரம், ரத்தம், ஊன், தோல், நரம்பு, எலும்பு, கொழுப்புடன் மூளைஅ, பரந்துள்ள சுக்கிலம் என்பனவற்றால் ஆனது.   பாழாம் காரியத்தின் உருவமான மயக்கம் தரும் இந்த உடலை ஒரு பொருள் என்று சொல்லமுடியாது.
 
2126: அண்ணலின் பெருமையை அறிய இயலாது:
சிவபெருமானின் திருவடிப் பெருமையை எவர் அறிவார்?  உடலை இடமாய்க் கொண்டு அவர் திகழ்வதை யார் அறிவார்?   அறுபது பொதுத் தத்துவங்களுடன் எட்டுச் சிறப்புத் தத்துவங்களும் விளங்கும் இருவகை உடல்களையும் எவர் அறிவார்?   அவர் மூலாதாரத்திலிருந்து காப்பதை யார் அறிவார்?
 
2127: உடல் தூல உடல், சூக்கும உடல் என இரண்டு:
எட்டுச் சாண் அளவுடைய உடலுள் அமைந்த கண் கால் முதலிய உறுப்புகளை அவ்வுடலில் மறைக்கின்ற ஒழுங்கில் நிண வழியாய் அறுபத்தெட்டு வடிவான வான் கூற்றை ஒன்று சேர்க்கின்ற மாயத்தினால் தூல உடலும் அதைத் தாங்கிய சூக்கும உடலும் அமையும்.
 
2128: உயிர் ஐந்து கோசங்களிலும் பொருந்தி அனுபவம் பெறும்:
தூல உடம்புக்கும் தூல உடம்பல்லாத பிராணமய மனோமய விஞ்ஞானமய ஆனந்தமயமான நான்கு உடம்புக்கும் உயிராக விளங்குவது சீவன் ஆகும்.  அந்தச் சீவன் பரத்துடன் நீங்காத சிவத்தில் ஒடுங்கும்.  அந்தப் பிரமமான சிவம் உடல் உயிரில் கலந்து வியாபித்திருப்பதைப் போல் சீவன் ஐந்து கோசங்களிலும் அடங்கியிருந்து தொழிற்படுவதையும் இவற்றை விட்டு நீங்கும் முறைமையையும் எவர் அறிவார்?
 
2129: சீவன் தொழிற்படும் விதம்:
மூலாதாரம் முதற்கொண்டு ஆறு ஆதாரம் கடந்த சகஸ்ரதளத்தில் நடு நாடி வழியாய்ப் போய்க் கூடினால், பத்து வாயுக்களும், சூக்கும உடலும் நன்றாக அடைக்கப்பட்டு விடும்.  இவ்வகையான பதினெட்டுக் கலைகளும் சேர்ந்த சீவன் தன் பரிச உணர்வுடன் கூடிய தூல உடலைக் கருதி நடத்துகின்றது.
 
2130: சிவனது திருவடியில் ஒன்றிய போது தூல உடல் கண்ணுக்குப் புலப்படாது:
உண்மையில் காணப்படுகின்ற உடம்பையும், பொய்ய் போல் காணப்படாமல்பொருந்திய பிராணமய கோசத்தையும், மூலாதாரம் முதலாகச் செல்லும் சுழுமுனை உச்சியில் விளங்கும் ஒளி உடலையும் மூலவாய் கடக்கின்ற போது இவ்வுடல் காணப்படாது அடங்கும்.
 
2131: பிராணமய கோசம் முதலிவை இயங்கும் விதம்:
போர்க் குதிரை ஒன்று மிக்க வேகத்துடன் பாய்ந்து மீளல் போல், சூக்குமஉடல் அண்மையிலும் தொலைவிலும் போய் மீள்கின்ற ஆற்றல் உடையது.  ஒருவர் உடலில் உள்ள பல நூலாடைகளை ஒவ்வொன்றாக நீக்கி அணிவதால் அவரது உடம்புக்குக் கெடுதல் வாராதது போன்று சூக்கும உடலுக்கு
கேடு இல்லாது சென்று மீளும் தன்மை உள்ளது.
 
2132: இறக்கும் போது சூக்கும (நுண்ணுடல்) உடல் பிரியுமாறு:
நாகப் பாம்பு தோலை உரித்துவிட்டுச் செல்வதைப் போல்,     முட்டையில் உள்ள குஞ்சு அதை விட்டு வெளி வருவது போல்,  கனவில் கண்டவை நனவில் விளங்காது மறந்து விடுவது போல், உடலை விட்டு உயிர் போகும்.  சிவனது ஆணையால் உடம்பை விட்டு உயிர் பிரிந்து அதன் தகுதிக்கு ஏற்ப நல்வினை தீவினைகளைச் சொர்க்கம் நரகங்களில் பொருந்தும்.
 
2133: பிறக்கும் போது சூக்கும உடல் தூல உடலைப் பற்றுதலின் இயல்பு:
எடுத்த உடலின் பயனை அனுபவித்து உடலை விடுபவர், சூக்கும உடலில் பொருந்தி, நரகம் சொர்க்கப் பயனைத் துய்ப்பர்.  பிற உடலில் உலவும் திறம் பொருந்திய யோகி மீண்டும் தன் உடலில் வந்து புகுவதைப் போன்று - பழமையான வினை தொடர - சூக்கும உடலைப் பற்றி வந்து,  மீண்டும்
உடலை எடுத்துப் பிறந்து இறந்தும் பிறவிச் சக்கரத்தில் வருத்தப்படுவர்.
 
2134: பிறவியை மாற்றிப் படைக்கும் வல்லமை உடையவர்:
அவனே தான் ஆன அந்நெறியில் நின்று பரம் பொருளைத் தன்னிடம் கண்டவர், உடலுக்கு இயல்பாய் வரும் இயல்பை மாற்றிப் பரமம் என்ற மேலான நிலையை அடைவார்.  இவ்வாறு செய்யாத மற்ற உயிர்கள் அவரவர் வினைகளுக்குரிய பதநிலகளைப் பெற்றுச் சொர்க்கம் நரகம் அடைந்தும் மிண்டும் இவ்வுலகில் பிறந்தும் வருந்துவர்.
 
2135: மூவரின் உடல் இயல்பு:
யோகி சிவத்தையே எண்ணியிருப்பதால் உடம்பு சிவதனுவாகும்.  உடல் தர்மத்தை மறந்திருத்தலால் ஞானிக்குரிய உடல் சிவத்தினுடையதாகும்.  உச்சித்தலையின் மீது சிந்தித்திருக்கும் யோகிக்கு விந்துவும் நாதமும் உடலாகும்.மோனம் பிரணவ யோகத்தை முடித்தவர் ஆணவம் கன்மம் மாயைஆகிய மூன்றுமான உடம்பு கெட்டுச் சிவசாயுச்சியத்தை அடைவர்.  புருவ நடுவுள் பொருந்தும்  வைகரியாதி வாக்குகளும் போய் அடைய நெடியவாயில்கள் ஒன்பதாம்
 
2136: ஆணவம் முதலிய மலங்களை ஞானிகளே நீங்கப்பெறுவர்:
தெளிந்த அறிவினையுடைய விஞ்ஞானகலர்க்கு (ஒரு மலம் உடையவர்)  ஆணவம் ஒன்றே உடம்பாகும்.  அறிவினைப் பெறும் பிரளயாகலர்க்கு (இருமலம் உடையவர்) மாயையே உடலாகும்.  அஞ்ஞானத்துடன் மூன்று மலமுடைய சகலர்க்குக் கன்மத்தால் விளைந்த போக போக்கியமே உடல் ஆகும்.  உண்மையான ஞானிக்கு அகண்ட சிவமே உடலாய் அமையும்.
 
2137: பூத உடலை விட்டு நிற்பதே ஞானநெறி:
இந்த உடல் மலத்தால் ஆனது என்று உணர்ந்து இதனை ஒதுக்காத அறிவற்றவர், இதுவே சிறந்த இடம் என்று எண்ணிக் கொண்டிருப்பதைப் பார்ப்பீர். இந்தஉடலே நன்மை அளிப்பது என்று எண்ணியிருப்பவர்
களுக்கு இவ்வுலகத்தில் தொடர்ந்து பிறவி வந்து கொண்டே இருக்கும்.
 
2138: இன்பமும் துன்பமும் பெறுபவர்:
நல்ல மொழியைப் பேசும் வாக்கு வன்மையும்,  நல்லதையே எண்ணித் தெளியும் மனம் முதலியவும் உடையவரின் உள்ளத்தில் மலம் அற்ற சிவம்மெல்ல விளங்கியருளுவான்.  அங்ஙனம் அல்லாதவற்றைக் கேட்கும் செவியும் பேசும் வாக்கு முதலியனவும் நினைக்கும் மனமும் மெல்லப் பெறுபவர் சிவம் பிரகாசியாது வாட்டம் அடையும் முகம் கொண்டவரே ஆவார்.
 
2. உடல் விடல்:  (உடலினைப் பற்றிய நினைவை விடுவது):
 
2139: உடல் நினைவு அற்றுப் போதல்:
இன்பம் தரும் காமத்தை உண்டாக்கும் பேச்சும் வான் கூற்றில் செல்லும் பிராணனும் அங்கு உண்டாகும் ஓசையும் ஊன் பொருந்திய உடலில்  பொருந்தும் மனமும் தலையின் மீது நிலை பெறச் செய்ய உடம்பின்
பிரக்ஞையும் போய் விடும்.
 
2140: தானம் முதலியவை உடல் அழியும்போது உதவா:
அழியும் இயல்பை உடைய உடம்பிலே உள்ள செவி கண் முதலியவை அழியும்.  கால வயப்பட்டுச் செய்யும் விரதம், அறம், வைகரி, வாக்கு, இடைகலை, பிங்கலை நாடி ஆகியவையும் முடிவை அடையும்.  ஆகவே இவை அழிகின்ற உடம்புக்குத் தக்க துணையாகா.
 
2141: சிவத்தை முன்னிட்டிருக்கின் உடல் வேதனை நீங்கி இன்பம் உண்டாகும்:
அரச இலை போன்று விளங்கும் பெண்களின் இடையில் போகும் காம உணர்வு, தனங்கள் பொருந்திய மார்பில் மூழ்கி வருந்தும். ஆயின் மலைபோல் அசையாத சிவத்தை முன்னிட்டுச் சிந்தித்திருக்கின்றதாயின் சிறந்த ஒளியுடலைத் தாங்கி விளங்கும்.
 
3.அவத்தை பேதம்;
(சீவன் உடம்பில் வாழும் போது அடையும் வேறுபாடு.
இவை சாக்கிரம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் அன்ற ஐந்து வகை.  சாக்கிரத்திலிருந்து கீழ் நோக்கித் துரியாதீதத்துக்கு செல்வது கீழாலவத்தை.)
 
2142: சாக்கிரம் முதலிய நான்கு நிலைகளுக்குரிய இடமும் கருவியும்:
இருபத்தைந்து கருவிகளுடன் சீவன் புருவநடுவில் உள்ள போது விழிப்பு (சாக்கிரம்) நிலை ஆகும். 
பழகிய பதினான்கு கருவிகளுடன் சீவன் கழுத்தில் தங்கும் போது கனவு (சுழுத்தி)  நிலையை அடையும்.
அழிவில்லாத புருடன் இதயத்தைப் பற்றியுள்ள போது உறக்கம் ஆகும்.  அழியாதவனான ஆன்மா உந்தியில் பொருந்தும் போது துரியம் ஆகும்.  ஆன்மாவே உடலைப் பற்றிய போது புருடன்.
ஆன்மா ஒளி ஒலி ஆகியவற்றை பற்றிய போது சீவன்.  ஒன்றையும் பற்றாத போது ஆன்மா.
 
2143: சாக்கிரம் முதலிய ஐந்து நிலைகளில் சிவதத்துவம் தொழிற்படுவது:
சாக்கிரத்தில் முப்பத்தாறு தத்துவங்களுடன் சிவ தத்துவம் ஐந்துமாக, அவற்றை அடுத்துக் கூறப்படும் கனவு நிலையில் மகேசுவரம் சாதாக்கியம் சத்தி சிவம் என்னும் நான்கும் விளங்கும். துரியத்தில் சத்தி சிவம் என்னும் இரண்டும் துரியாதீதத்தில் சிவம் ஒன்றுமாக அச்சிவம் முதலாய்த் தொழிற்படும்.  இப்படி சுத்தவித்தை முதலாகச் சிவம் ஈறாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
 
2144: சாக்கிரத்தில் முப்பத்தைந்து கருவிகள் உள்ளன:
ஞானேந்திரியம் கன்மேந்திரியம் பத்தும் அவற்றின் விடயங்களான சத்ததாதி வசனமாதி பத்தும் மறை பொருளாக உள்ள வாயுக்கள் பத்தும் அந்தக்கரணங்கள் நான்கும், இவற்றுடன் ஆன்மா கூட முப்பத்தந்தும் பந்தத்தைச் செய்கின்ற சாக்கிராவத்தையில் உள்ளனவாகும்.
 
2145: ஐம்பூதங்களின் நிறங்கள்:
மண்ணின் நிறம் பசும் பொன் நிறம். நீர் வெண்ணிறம் உடையது. நெருப்பு செந்நிறம் வாய்ந்தது.  மேகம் போன்ற கரிய நிறம் கொண்டது காற்று.  வானம் புகை நிறம் பொருந்தியது.  இவ்வகைப்பட்ட நிறங்களில் ஐம்பூதங்களும் மறைந்து நிற்கும்.
 
2146: சாக்கிரத்தில் தொழிற்படுபவை:
ஐந்து பூதங்களும் ஐந்து பொறிகளும் உயிரைக் குற்றம்படச் செய்த புறக் கருவிகள். இவற்றுடன் சொல்லப்படும் மலம் காரணமாக விளையும் குணம் முதலாகக் கொண்ட சாக்கிராவத்தைக்குரிய கருவிகள்
தொண்ணூற்று ஆறாகும்.
 
2147: சாக்கிரத்தில் புருடன் புருவ நடுவில் இருந்து தொழிற்படும்:
சாக்கிரத்துக்குரிய இடத்தைக் கூறுமிடத்து, ஆன்ம தத்துவமான இருபத்தைந்து யானைகளும் வசனாதியாதியான காலாட்படையும், சத்தாதியான ஐந்து குதிரைகளும், புருடனும் ஆக முப்பத்தாறும் புருவ  நடுவுள் பொருந்தும்.
           
2148: பிராண செயம் உயிர் உள்ள போதே பெற வேண்டும்:
தூல உடலுக்குத் தான் பிராணன் இயக்கம் உள்ளது.  சூக்கும உடலுக்கு பிராண இயக்கம் இல்லை.  சூக்கும உடலில் அறிவு பதிந்து நிலை பெற்றால் தூல உடலின் அறம் கெடும் என்பதை அறியாதவர் - உடம்பில் உள்ள உயிரின் இயல்பை அறியார்:  உடம்புக்கும் பிராணனுக்கும் உள்ள தொடர்பை அறியாதார் ஆவர்.  அவர்கள் மடத்தில் புகுந்த நாய் வெளியே வருவதற்குரிய வாயிலை அறியாமல் மயங்குவதைப் போல தூல உடலைக் கடக்க வழி அறியாது கலங்குவர்.
 
2149: ஒளியுடலைப் பெறுபவர்:
அறிவிலிகள் உடலை நெடுநாள் வைத்திருக்கும் வழியை அறியமாட்டார்கள்.ஆனால்உள் முகமும் வெளி முகமும் ஆகச் சென்று கொண்டிருக்கும் பிராண அபானனது இயக்கங்களை மாற்றி உள் முகம் ஆக்கி, விந்துவெற்றி பெற்றுச் சுழுமுனை வழியாகச் சிவனை அடையும் வழியை அறிந்தவர் ஒளி வடிவான உடலைப் பெற்று என்றும் அழியாது நிலைத்திருப்பர்.
 
2150: சிவன் குருவாக வந்து உணர்த்திய போது சாமானிய தத்துவங்கள் புலப்படா.
கொப்பூழில் அடங்கியிருக்கும் அகரக்கலை சிறிது சிறிதாகப் பதினான்காவதான உட்லைக் கடந்தும் விளங்கும் அநாசிருதையாக மாறும் உபாயத்தை சீவனுக்கு சிவன் விளக்கி கூறியருளுவான்.  அங்ஙனம் அளிக்கும் கலைஞானத்தால் பொதுவான அறுபது  தத்துவங்களையும் ஒளியில்லாமல் செய்து
ஒன்றிய உள்ளத்தில் ஒளித்து வைப்பான்.
 
2151: பூத வெற்றி அமையுமாறு:
மண் தத்துவமான சுவாதிட்டான சக்கரத்துக்கு அருகில் நீரை முகமாகக் கொண்ட மணிபூரகம் உள்ளது.  அந்தச் சுவாதிட்டானத்துக்கு அருகில் பொன்போன்ற மூலாக்கினியும் உள்ளது.  இவ்விடத்துள்ள மூல வாயு மனம் புத்தி அகங்காரம் என்பனவற்றை  கடந்து மேலே போய் வானத்தைப் பொருந்தும் போது 
பூத வெற்றி உண்டாகும். 
 
2152: பூத வெற்றி பெற்றால் ஆன்மாவின் உண்மை நிலை விளங்கும்:
முதல் பூதமான வானுக்கு ஓசை என்ற ஒரு மகன்.  அதினின்று உருக் கொண்ட காற்றுக்கு ஓசையும் பரிசம் என்ற இரு மக்கள்.  காற்றினின்று வந்த தீயினுக்கு ஓசை, பரிசம், உருவம் என்ற மூன்று பிள்ளைகள்.  பின்பு  நீர் என்ற பெண்ணுக்கு ஓசை, பரிசம், உருவம், சுவை என்ற நான்கு பிள்ளைகள்.   கன்னியான பூமகளுக்கு ஓசை, பரிசம், உருவம், சுவை, நாற்றம் என்ற ஐந்து மக்கள்.  இத்தகைய பிள்ளைகள் சிவத்துக்கும் சத்திக்கும் முதலில் இல்லை.  அப்பெருமாட்டியே படைப்பைக் கருதிய போது ஐந்து பிரிவாய்ப் பிரிந்து அவற்றின் வேறாயும் அவற்றின் ஊடேயும் நின்றாள்.
 
2153: உலகமே தானாய் நிற்கும்:
மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஞானேந்திரியங்களால் பெற்ற காட்சி ஐந்தும், வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்  என்ற கன்மேந்திரியங்கள் ஐந்தும், மனம், புத்தி, அகங்காரம் என்ற அந்தக்கரணம் நான்கும் ஒரு சேரக்கண்ட பின்னர், பழையமேலான விழிப்பு நிலையில் உலகமே தானாய் நிற்கும்
 
2154: கனவு நிலையின் இயல்பு:
மேல் பாடலில் உரைத்தபடி நின்றவன் ஞானேந்திரியங்கள் கன்மேந்திரியங்கள் பத்தையும் விட்டு, ஒருமையுடைய அந்தக் கரணங்கள் நான்குடன் புருவ நடுவில் இந்த உடலால் அனுபவித்த வாசனா ரூபமானவற்றை ஒளி மயமாகக் கழுத்துக்கு மேல் கனவாகக் கண்டான்.
 
2155: சுழுத்தி நிலை: (உறக்க நிலை):
ஆன்மா முன் சொல்லப்பட்ட கண்ட தானத்தை விட்டுச் சித்தம் ஒன்றுடன் தனியே இதயத்தில் புகுந்த அகங்காரமும் தன் வலிமை குன்றிப் புத்திதத்து வமும் கெட்டு ஒன்றையும் அறிய மாட்டாது மயக்கம் அடைந்து உலகத்தை அறியாத வியத்த நிலையில் உடல் தன்வசம் அற்ற நிலையில் கெடுதல்
சுழுத்தியாகும்.
 
2156: துரிய நிலை:
உறக்கத்தின் நிலைக்களமான நெஞ்சத்தில் பிராணனும் சித்தமும் புருடனும் ஆகிய மூன்றும் தொழிற்படும்.  சித்தம் பிராணன் ஆகியவற்றால் உண்டான அறிவு நீங்க, உந்திக் கமலத்தின் உள்ளே இருந்து பெருமையுடைய மூலப்பிரகிருதியுடன் புருடன் பொருந்தியிருந்தான்.      
ஆன்மா பிரகிருதியுடன் பொருந்தியிருப்பது துரியம் ஆகும்.
 
2157: துரியாதீத நிலை:
கொப்பூழ்த் தாமரையை விட்டுக் கடந்து மூலாதாரத்துத் துரியாதீத  நிலையில் வான் மண்டலத்துக்குப் போய்,  பூமியை விட்டு நாதமயமான சங்கற்ப வாசனையும் கடந்து, உடலின் காரியமான அவத்தையை விட்டு ஊமனாக ஆன்மா நின்றான். இது சாதாரண மக்கள் நிலை.  ஆன்மா அறியாமையை விட்டு நிற்கும் நிலை துரியாதீதம்.
 
2158: துரியாதீத நிலை:
பேச இயலாத எழுத்தான மகாரத்துடன் பேசும் எழுத்துக்களான அகார உகாரங்கள் பொருந்தில், ஆன்மா அதன் உறுப்புகள் அடங்குபவனபோல் ஐம்பொறிகளும் தொழிற்படாது அடங்கி விடும்.    அப்போது ஆன்மா பிரணவத்தில் பொருந்தி ஒளி பெற்று விளங்கும். இது யோகியர் நிலை.  அப்போது அகங்காரம் கெடும்.  அதனை நாம் அறிய மாட்டோம்.
 
2159: துரியாதீத அனுபவம் கூற இயலாது:
பிரணவ யோகிகளின் துரியம் நின்மலச் சாக்கிரம் ஆகும்.  அங்குள்ள நீல ஒளியில் வஞ்சனையைச் செய்யும் ஞானேந்திரிய,  கன்மேந்திரிய அந்தக் கரணங்கள் செயற்படாமல் அடங்கி விடும். வேகமுடைய மூலவாயு வேகமாய் ஓடி வான் கூற்றை அடையும். இனித் துரியம் கடந்த துரியாதீத நிலை பற்றிக்
கூற இயலாது.
 
2160: பக்குவம் வரும் வரை பிறவியில் சுழன்று கொண்டிருக்கும்:
எல்லா உயிர்களும் பக்குவம் அடையும் வரை அவற்றிடம் மாறாமல் இருக்கின்ற  ஐம்மலங்களால் சாக்கிரம் முதலிய ஐந்து நிலையை அடையும். உயிரின் வேறான மாயையால் விளைந்த உடல், கருவி முதலியவற்றுக்கு முடிவு இல்லை.  எல்லா உயிர்களும் பிறப்பு இறப்புகளில் அகப்பட்டு முடிவில்லாத வலிய வினையால் துன்பம் அடைந்த வண்ணமே இருக்கும்.
 
எட்டாம் திருமந்திரம்
 
2161: சிவஞானத்தால் ஐந்து அவத்தை நீங்கிப் பிறவி முடியும்.
வினைப் பயன்களை நுகர்விக்கும் மாயையானது தன்னை வருத்தாதபடி சிவத்தின்அருளைப் பெற்றதே வீடு பேறாகும்.  வீடு பேறு அடையாத உயிர் கருவிலேயே திருவுடையராய்ப் பிறந்து சிவத்தையே நினைத்துக் கொண்டிருப்பதால் ஞானம் ஏற்படும்
 
2162: ஆன்மா பரம் ஆகும் வரை ஐந்து அவத்தைப்படும்.
அநாதி கேவல நிலையில் ஆணவம் சிறிதே கெட அதனால் கருவிகளுடன் கூடிய சகல நிலையில் உணர்வோன் அரிய செயல்களில் பொருந்திய நிலையானகேவல நிலைக்கு இப்படிச் சென்று மேன்மையற்ற ஐந்து அவத்தையை அடைவர்.
 
2163: கேவல நிலையில் ஆன்மாவைச் சிவன் எழுப்புவான்.
பாடம் கற்பிக்கும் போது உறங்கும் மாணவரை ஆசிரியர் ஒளியுடைய பிரம்பால்தட்டி எழுப்புவர். அதைப் போன்று நேயப் பொருளான சிவனும் அநாதியாகவேஆணவ மலத் தொடக்குடையவரைச் சுத்த மாயையால் ஒளியை உண்டாக்கி எழுப்புவான்.
 
2164: ஆன்மா பக்குவம் அடைந்து உடல் நீங்கும் வரை ஐந்து அவத்தை அடையலாம்.
மேகத்துடன் பொருந்திய வான் கங்கை குடத்தில் உள்ள நீரே ஆகும் என்பது அறிவற்ற ஒருவன் மிக்க அறிவுடையவன் போல் சொல்லும் கூற்று.   குறைவு இல்லாத பிரமமும் ஆன்மாவும் ஒன்று என்பதற்கு மாறாக இந்த உடலுக்குத் தலைவனான ஆன்மா பக்குவப்பட்டு நீங்கும் வரை ஐந்து அவத்தைக்கு
உட்பட்டுக் கொண்டிருக்கும்.
 
2165: ஆன்மா சகஸ்ரதளத்தை அடைந்து பொருந்தும் வரை பிறவியுண்டு.
நிலத் தத்துவத்தை இடமாகக் கொண்ட சீவன் மூலவாயுவுடன் பொருந்தி அழகான ஊர்த்துவ சகஸ்ரதளத்தை அடைந்த போது அதற்குக் கீழ் நிலையில் உள்ள பிரமன் முதலிய ஐவரும் அவரைச் சார்ந்தவரும் நாத தத்துவாத்துடன் பொருந்தி உறக்கத்தை அடைந்தனர்.
 
2166: பரத்துடன் நிற்பதே அழியாத நிலை.
புறக் கண்ணுக்குப் புலப்படாத மலத்தை சுத்தாவத்தையில் புலப்படும் வண்ணம் மலக்குற்றத்துக்குரிய காரணத்தை நினைந்து, நின்மல சாக்கிரத்தில் கண்களுக்குப் புலப்படாமல் இருந்த ஆணவம் முதலிய ஐந்து மலங்களையும் காட்சியில் கண்டு தமது முகத்துக்கு முன் விளங்கும் சிவத்துடன் பிரியாமல் நிற்பதே
அழியாத நிலை என்க.
 
4. மத்திய சாக்கிராவத்தை.
அதாவது, புருவ நடுவில் சீவன், சாக்கிரம் முதலிய ஐந்து அவத்தையை உணர்தல்.  அவையாவன: சாக்கிரத்தில் சாக்கிரம், சாக்கிரத்தில் சொப்பனம், சாக்கிரத்தில் சுழுத்தி, சக்கிரத்தில் துரியம், சாக்கிரத்தில் துரியாதீதம்.  இவை அனைத்தும் விழிப்பு நிலையில் வருவன.
 
2167: சாக்கிர சாக்கிரம் முதலிய நான்கில் ஆன்மா நிற்கும் நிலை.
(சாக்கிர) விழிப்பு நிலை விழிப்பு நிலையில் திரோதான சக்தியால் ஆன்மா விளக்கம்அறிய இயலாதபடி மறைக்கப்பட்டு நிற்கும்.  விழிப்பு நிலையில் கனவு நிலையில் ஆன்மா மாயாகாரியங்களில் அழுந்தி
நிற்கும். விழிப்பு நிலையில் சுழுத்தியில் உறக்கத்தில் கருவிகள் ஓய்வு அடைந்து விரும்பியதில் அதுவாக நிற்கும். விழிப்பு நிலையில் துரியநிலையில் (பேர் உறக்கத்தில்) விரும்பிய பொருளில் அதுவாக நிற்றலை இழந்து மாயை வயப்பட்டு நிற்கும்.
 
2168: சாக்கிர சாக்கிரம் முதலிய ஐந்திலும் கருவிகள் பொருந்தும் விதம்.
மாயை ஆன்மாக்களுக்குக் கலை முதலியவற்றைத் தூண்டி எழுப்பும்.  அதனால் இராகம் முதலியவற்றுக்கு ஏற்பச் சீவதுரியம் பொருந்தும்.    பின்பு சுழுத்தி, கனவு, நனவு, ஆகிய நிலைகளைப் பொருந்திச் சகல
நிலையில் உள்ள ஆன்மா ஆயினான்.
 
2169 சகல நிலையில் உள்ள ஆன்மா பிறவிக் குருடனைப் போன்று பயிற்சியால் செயலை இழக்கும்.
பிறவியிலேயே குருடனும் இடைக்காலத்தில் குருடானவனும் ஆகிய இருவரும் நடந்து செல்லும் போது முன்பு போன வழியை அறிந்து பொருந்திய தடியைக் கொண்டு வழியை அறிந்து நடப்பர்.  அங்ஙனமே மூன்று வகைப்பட்ட உயிர் இனங்களும் செயலில் பொருந்தும்.    பிறவிக்குருடன் பழக்கத்தால் பொருளை அறிவன்.  பிரளயாகலர் சிறிது காலப்பயிற்சியால் பொருளை அறிகின்றனர்.  விஞ்ஞானகலர் பிறப்பிலேயே அறிவு உடையவராய் எடுத்த பிறவியைப் பயன் அடையச் செய்கின்றனர்.
 
2170: சிவன் மூளையில் ஆன்மாவுடன் இருந்து
சத்தம் முதலிய புலன்களை அனுபவிக்கின்றான்.
சிலந்திப் பூச்சி தான் கட்டிய வலையின் நடுவுள் பொருந்தியிருந்து அங்கு நெருங்கி வரும் உயிர் இனங்களைப் பிடித்துத் தின்னும்.  அதைப் போல் சிவ பெருமானும் ஐம்பொறிகளும் வந்து பொருந்தும் மூளைப் பகுதியில் உடன் இருந்து சத்தம் முதலிய புலன்கள் ஐந்தையும் அனுபவிக்கின்றான்.
 
2171: சிவன் ஆன்மாக்களைச் சாக்கிரத்தில் கருவிகளுடன் சேர்த்து உடன் இருந்து உய்யச் செய்கின்றனன்.   வைக்க வேண்டியபடி இருபத்தைந்து தத்துவங்களைச் சாக்கிர நிலையில் வைத்து அவற்றையே உபாயமாகக் கொண்டு பொருந்தி எங்கும் உள்ள சிவன் பொருந்தி இருக்கின்றான்.  நான் அவனைப் பித்தன் என்றும், பெரியவன் என்றும், பிறப்பில்லாதவன் என்றும் எப்போதும் விரும்பிப் போற்றி அவனது அருளைப் பெற்று உய்தி பெற்றேன்.
 
2172: சாக்கிரத்தில் (நனவில்) இருபத்தெட்டுத் தத்துவங்கள் செயற்படுதல்.
ஆன்ம தத்துவங்களை இருபத்து நான்குடன் புருடன் என்ற தத்துவத்துக்கு வேறாக உள்ள இருபத்தைந்துடன் ஆன்மா, பிரமம், சொல்ல முடியாத வானம் என்பனவற்றைச் சிறந்த தத்துவங்களாகப் பிரம வாதிகள் கண்டனர்.  இவ்வாறு வேறான இருபத்தெட்டும் வேதாந்தத்துக்குரிய தத்துவங்கள் ஆகும்.
 
2173: சோதியைக் காணல்.
ஆன்மா பொருத்தமாக உடலுள் இடைகலை பிங்கலை நாடிகளில் முறையாகப் பொருந்தி, அங்குச் சத்துவ குணத்துடன் புகுந்து, மூலாதாரம் முதலாக மூன்று முடிச்சுகளையும் கடந்து, கலாதீதப் பொருளான சிவ பெருமானின் திருவடியைக் காணலாம்.
 
2174:சுழுமுனையில் ஆன்மாபொருந்தியிருந்தால் இன்பமும்அமைதியும் ஏற்படும் பத்து நாடிகளும் நன்மையைத் தரும் பிராணன் முதலிய வாயுக்களும் மூலாதாரம் முதலாக மேலே செல்லும் சுழுமுனையில் ஒடுங்கி இருக்கும் அப்போது காமப்புணர்ச்சியில் பெறும் இன்பமும் நன்மையை நாடிய மனமும் இவ்வுடலில் பொருந்தும்.
 
2175: ஆன்மாக்களைப் பக்குவத்துக்கு ஏற்ப வினைப் போகத்தைத் தந்து போக்கியருள்வான்.
ஆகவேண்டியவை ஆகும்.  போக வேண்டியவை போகும்.  வர வேண்டியவைவரும்.  காக்கும் இறைவன் ஆன்மாக்களுக்கு அனுபவத்தைத் தந்து சாட்சியாகக் கண்டிருப்பான். இறைவன் சீவனுக்குத் தக்கபடி செய்யும் அருளாளன் ஆவான்.
 
2176: வேதாந்த தத்துவம் இருபத்தெட்டு.
பத்துப் பொறிகளுடன் தொழில்கள் பத்தும் நான்கு அந்தக்கரனங்களும்  இவை பொருந்திய சீவனும் தலையில் மோதும் பிராணனும் உண்மையான வானமும் மேல் முகத்தில் விளங்கும் பிரமமும் வேதாந்தத் தத்துவங்கள் இருபத்தெட்டு என எண்ணத் தக்கனவாம்.
 
2177: ஆன்மா துரியாதீத நிலையில் விளங்கும் நிலை.
விளக்கம் உடைய முப்பதுடன் பத்தாகிய முந்நூற்றையும் சேர்த்து அறுநூற்றை வன்மை ஆறை இரட்டிய முப்பத்தாறுடனே பெருக்குவதால் வரும் 21600 (சுவாசம்) மூச்சு நடந்தால் ஆணவம் முதலிய மலங்களும் வணங்கி நீங்கும்.  மூலவாயு மேல் எழுந்து துவாதசாந்த வெளியை அடையும் போது சுவாசஇயக்கம்
சீவனில் இயல்பாய் அடங்கும்.  உடம்பைக் கடந்த போது உடலின் செயலான பத்தும் நீங்கும்.  எஞ்சியிருப்பவை எட்டுத் தத்துவங்கள். இவையும் துவாத சாந்தத்தை அடைந்த பிறகு அகன்று விடும்.  ஆன்மா தனித்து விடும்.  அதனால் ஆணவம் முதலிய ஐந்து மலங்களும் அகன்று விடும்.
 
2178: தத்துவங்களின் தொகையும் வகையும்.
தத்துவங்களை வெவ்வேறாகக் கணக்கிட்டால் அவை நான்கு கோடியே நாற்பத்தெண்ணாயிரத்து ஐந்நூறு என்று சிறப்பாய் அடங்கும்.  அவற்றைப் பகுத்துத் தொகுத்தால் தொண்ணூற்று ஆறுள் அடங்கும்.  அவற்றை மேலும் சுருக்கினால் இருபத்தைந்துள் அடங்கும்.
தத்துவங்கள் 40048500. இவை 96இல் அடங்கும். பின்னும் அவற்றைச் சுருக்கின்25 ஆகும்.
 
2179: சமயங்களுக்குரிய தத்துவங்கள்.
மாயையின் காரியம் ஆன தத்துவங்கள் பொதுவாகத் தொண்ணூற்றுஆறு ஆகும்.அரிய சைவர் கொண்டுள்ளது முப்பத்தாறு தத்துவங்கள்.   வேதாந்திகளுக்கு இருபத்தெட்டு தத்துவங்கள்.     
வைணவ சமயத்தார்க்கு இருபத்து நான்கு தத்துவங்கள்.  மாயாவாதிக்குரிய தத்துவங்கள் இருபத்தைந்து.
 
2180: தத்துவங்கள் தம் வசம் நிற்குமாறு.
தத்துவங்களைத் தம் வசம் அடங்கி நிற்கும்படி செய்தால் மிகவும் சமர்த்தன் உடையவனாக விளக்கம் பெற்று விளங்கலாம். பிராணவெற்றி மற்றப் பொய்யானநெறி அகன்று விடும்.  அதை உணர்த்தும் நெறி அகார எழுத்து அறிவாகும்.
 
2181: தத்துவங்கள் அறிவற்றைவையாகும்.
முப்பத்தாறு தத்துவங்களும் ஆன்மா பொருந்தாத போது அறிவற்றவை.  அங்ஙனமிருந்தும் அவற்றை அறியும் என்னை நான் அறியாமல் இருந்தேன்.  என் குரு நீ அதை அறியும் ஆற்றல் வாய்ந்தவன் என்று உரைத்தான். அதனால்நான் அதை அறியும்  ஆற்றல் உடையவன் என்பதை உணர்ந்தேன்.
 
2182: தத்துவங்களைக் கடந்து சிவத்துடன் பொருந்த வேண்டும்.
நனவில் நனவு முதலிய அவத்தையில் (நிலையில்) சிவதத்துவம் ஐந்தும் பொருந்தும்.  அவற்றை மலத்தைக் காரணமாக உடைய இந்த நனவு முதலிய ஐந்து அவத்தைகளால் போக்கி இவற்றுடன் பொய்யான முப்பத்தாறு தத்துவங்களையும்அகற்றி ஆன்மா பிரணவ நெறி நின்று சிவத்துடன் பொருந்தி நிற்கும்.
 
2183: ஐவர்க்குள் உள்ள வேறுபாடு.
நான்முகனுக்கு  ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி என்னும் ஐந்து மலங்களும் உள்ளன. திருமாலுக்கு ஆணவம், கன்மம், மாயை, திரோதாயி என்னும் நான்கு மலங்கள் உள்ளன. உருத்திரனுக்கு ஆணவம், கன்மம், திரோதாயி என்னும் மூன்று மலங்கள் உள்ளன.  மகேசுவரனுக்கு ஆணவம், ,
திரோதாயி என்னும் இரண்டு மலங்கள் உள்ளன.  சதாசிவனுக்கு ஆணவம் மலம்ஒன்று மட்டும் உள்ளது.
 
5. அத்துவாக்கள்.  (வழிகள்) வினையை ஈட்டுதற்கும் துய்ப்பதற்கும் உள்ள அத்துவாக்கள் அதாவது வழிகள் மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை என்ற ஆறாகும்.
 
2184: ஆறு அத்துவாக்களின் தொகையும் வகையும்.
தத்துவங்கள் முப்பத்தாறு. மந்திரங்கள் ஏழு வகையான முடிவைக் கொண்டன.   உண்மையில் வழங்கும் எழுத்துக்கள் ஐம்பத்தொன்றாகும். புவனங்கள் இருநூற்றுஇருபத்து நான்கு. பதங்கள் என்பவை எண்பத்தொன்று.  கலைகள் ஐந்து.  இவை படைப்பில் வந்தவை.
 
2185: ஆறு அத்துவாக்களின் இயல்பை அறிந்த பின் உண்டாவன.
திங்கள், கதிரவன், அக்கினி மும்மண்டலங்களின் நன்மையை அறிந்து மூலாதாரம் முதலாக மேலே செல்பவர் தங்களுடன் உடம்பில் உள்ள இருபத்தைந்து தத்துவங்களை அறிந்து கூடுவர்.  அவ்வாறு கூடிச் சகஸ்ரதளத்தில் மேல் ஏறும் வழியை அறிந்து போய்த் தேடி அடைந்த பின் தத்துவங்களின் வழிச் செல்லாதவராய் விளங்கினர்.
 
2186: ஆன்மா மலநீக்கம் பெற்றுச் சிவசத்தியுடன் பொருந்தியிருக்கும்.
சாக்கிரத்தில் சாக்கிரம் முதலிய நிலைகளில் சிவ தத்துவ உணர்வை முதன்மையாகக் கொண்டு, இந்தப் பருவுடலின் எல்லையான பிரமரந்திரம் வரை போய், அதன் மேல் உள்ள துரியாதீதம் ஆன துவாதசாந்தப் பெருவெளியில் கலந்த அன்பு வடிவான ஆனந்தக் கூத்தைக் கண்டு, அந்த இன்பம் விளங்கும் சுத்த
வித்தை முதலிய ஐந்தும் ஆன்மா சிவசத்தியோடு கூடிப் பொருந்தியிருக்கும்.
 
6.சுத்த நனவாதி பருவம்.(சகல நிலையில் சுத்த சாக்கிர முதலிய ஐந்து நிலைகள்)
 
2187: சுத்த சாக்கிரம் முதலியவற்றின் தூல தத்துவம் கனவு போல் விளங்குதல். 
சுத்த சாக்கிரம் முதலிய ஐந்து நிலைகளில் தூல தத்துவங்களே நுண்மையாய்த் தோன்றும்.  அத்தகைய இருபத்தைந்து தத்துவங்களே விந்துவின் சத்தியாகும்.   தன் உயிரானது விந்து என்ற ஒளி மண்டலத்தினின்று வெளிப்பட்டு நனவில் கனவு போல் தூல தத்துவங்களைக் காணும் முறை இத்தன்மையனவாம்.
 
2188: சாக்கிரத்தில் அதீதம் முதலிய நான்கு நிலைகள்.
நனவு நிலையில் துரியாதீதம் அடைந்தவர் குழந்தையைப் போல் கிடப்பர்.  நனவில் துரிய நிலை அடைந்தவர் தவழும் குழந்தையைப் போல் சிறிது அறிவு உள்ளவர் ஆவர். நனவில் உடலை உறங்கச் செய்பவர் வளர்ந்த பருவம் பெற்றவர் ஆவார்.  நனவில் கனவு நிலையில் உள்ளவர் ஓடுதல் போன்ற
செயலைச் செய்பவர் ஆவர்.
 
2189: நனவு நிலையில் அதீதம் சென்றவரின் பெருமை.
நனவில் துரியாதீதம் சென்றவரிடம் கிரியை சிறந்து விளங்குவதால் சிவ தத்துவம் உணரப்படுவதாக இருக்கின்றது.  அத்தகையவரிடம் பிரிவின்றிச் செறிந்திருக்கும்சுகரூபமான யோகம் சிவத்தின் பேரருளாலே ஆகும். அவரிடம் சிறந்த கல்வியும்நல்ல திருமேனியும் நற்குணங்களும் காணப்படும்.  அவர்களுடைய அறிவில் அண்ட கோசத்தில் அசைவனவும் அசையாதனவும் விளங்கும்.
 
2190: பரசிவத்தின் அருள்.
ஆதியான பரசிவம், சிவம்சத்தி, சதாசிவம், குற்றமில்லாத மகேசன் சுத்தவித்தையான தத்துவமும்,வித்தை, கலை, காலம், நியதி, மாயை என்னும் தத்துவமும், முறைமையும் முடிவும் உடையனவாய் அமைத்துள்ளான் என்று நீ அறிக.
 
2191: ஆன்மாவின் வினை நீக்கத்துக்காக அமைக்கப் பெற்ற கருவிகள்.
ஒளிமிக்க சிவம், சத்தி, சதாசிவம், மகேசன், சுத்தவித்தை, இராகம், கலை, காலம்,குற்றமற்ற வித்தை, நியதி, மாயை, குற்றம் அற்ற புருடன் முதலாக முப்பத்தாறு தத்துவங்கள் ஆன்ம தத்துவங்கள் ஆகும்.
சிவதத்துவம் 5 + வித்தியா தத்துவம் 7 + ஆன்மதத்துவம் 24 = 36.
 
2192: பாசங்களைப் போக்க இறைவன் திருவடியைப் பற்ற வேண்டும்.
ஆணவம், கன்மம், மாயை என்னும் மலங்கள் உமியையும் தவிட்டையும் முளையையும் நிகர்க்கும்.  உமி முதலியவற்றால் மூடப்பட்டு உள்ளே இருக்கும் அரிசியைப் போல் ஆணவம், கன்மம், மாயை என்னும் மலங்களால் ஆன்மா மூடப்பட்டு இருக்கும். சூழவுள்ள பாசத்தை நீக்கி சிவத்தின் திருவடியைப்
போற்றுவதன் மூலம் ஆன்மா சிவத்தைப் போல் வியாபகம் பெறலாம்.                                                                            
                                                                                                                                                                     2193: ஆன்மா பற்றற்றான் பற்றினைப் பற்ற வேண்டும்.                                                                             பசுக்கள் பல நிறங்களை உடையனவாயினும் அவற்றின் பால் ஒரே நிறம் உடையன.  .  அந்தப் பசுக்கள்
பல ஆயினும் மேய்ப்பவன் ஒருவனே ஆவான்.  அம் மேய்ப்பவன் மேய்ப்பதை நிறுத்தினால் பசுக்கள் அவனைச் சுற்றியே சூழ்ந்துஅகலாமல் நிற்கும்.
 
2194: ஆன்மா அறியாமையுடன் இருப்பின் உய்தி இல்லை.
உடம்பில் உள்ள கன்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள், மனம், புத்தி, சித்தி, வலிமையுடைய அகங்காரம் என்ற அந்தக்கரணங்கள், அறியாமையைப் பொருந்திக் கெடும். அத்தகைய உயிரினது மயக்கம் மேலும் பெருகினால் அந்தஉயிர் ஏழு நரகத்திலும் சென்று துயரம் அடையும்.
 
2195: ஆன்மா அனுபவக்கும் கீழாலவத்தை.
துரியாதீதத்தைப் பொருந்திப் புருடன் கிடப்பது தன்னை அறியாத துரியாதீதம் ஆகும். கொப்பூழைப் புருடன் அடையும் போது பிரணவம் விளங்கும்.  அகரக்கலையைப் பொருந்தி நிற்பான்.  இதயத்தில் புருடன் சுழுத்தியை அடையும் போது காமிய வாசனையுடன் விளங்குவான்.  அவ்வாசனையே அனுபவமாகக் கனவு நனவு நிலைகளில் பொருந்தும்.
 
2196: சுத்தாவத்தையில் கனவும் உறக்கமும் இல்லை.
சுத்த சாக்கிர நிலைகளில் கனவு இல்லை.  சுத்தாவத்தை ஐந்தில்  கனவில்லாச் சுழுத்தி பொருந்திய போது விந்து நாதம் உணரப் பெறும்.  அங்கு நன்றாக அனுபவிக்கப்படுகிற விந்து நாதங்களை மாயை ஆன்மாவுடன் சேர்க்கும்.  பின்புநனவில் துரியமும் துரியாதீதமும் வந்து பொருந்தும்.
 
2197: அவத்தையில் நீங்குவன.
முப்பத்தாறு தத்துவங்களில் உடல் சார்பான ஆன்ம தத்துவமும் புருடனும் ஆகிய இருபத்தைந்து தத்துவங்களும் நீங்கினால் சுத்த நனவு நிலை பொருந்தும்.மேல் உள்ள வித்தியாதத்துவத்தில் உள்ள ஆறும் முன்புள்ள இருபத்தைந்தும் ஆக முப்பத்தொன்றும் நீங்கின் நனவில் கனவு உண்டாகும்.  இவற்றின் மேல் உள்ள வேறான சிவதத்துவம் ஐந்தும் கழன்ற போது உறக்கம் உண்டாகும்.  இந்த நிலையில் எஞ்சியிருப்பது தூய மாயை ஒன்றேயாகும்.
 
2198: நின்மல துரியத்தில் உடம்பாலான பயன் ஒன்றும் இல்லை.
மிசிர மாயையில் விளங்கும் புருடன் நின்மலத் துரியத்தில் அந்தக் கூட்டத்தை நீத்துத் தானும் அங்கு இல்லையாகும்.  அப்போது புருடனுக்கு அப்பால் உள்ள விந்து மண்டல ஒளியில் ஆன்மா விளங்கும்.  அந்நிலையில் ஆன்மாவுக்கு இவ்வுடம்பால் ஆகும் பயன் ஏதும் இல்லை.
 
2199:ஆன்மா நின்மலச்சாக்கிராதீதத்தை அடைந்தால் சிவச்சோதியாக விளங்கும்.
ஆன்மா சாக்கிரத்தில் துரியாதீத நிலையிலே அறிவே வடிவமானவனாம்.  அந்நிலையில் நனவில் அதீதம் புரிந்தால் சாக்கிராதீத நிலையைக் கடந்து அறிவு மயமாய் உள்ள ஆன்மா சிவச் சோதியில் கலந்து ஒளி மயமாய் விளங்குவான்.
 
2200: கனவு துரியம்.
நனவில் தொழிற்படும் கருவிகள் பொறிகள் பத்து, புலன்கள் பத்து, பிராணன் முதலிய வாயுக்கள் பத்து, அந்தக்கரணம் நான்கு, புருடதத்துவம் ஒன்று ஆக முப்பத்தைந்து.  கனவு நிலையில் தொழிற்படும் கருவிகள் புலன்கள் பத்து, பிராணன் முதலிய வாயுக்கள் பத்து, அந்தக்கரணம் நான்கு, புருடதத்துவம் ஒன்றுஆக இருபத்தைந்து. உறக்கத்தில் தொழிற்படும் கருவிகள் புருடன், பிராணன், சித்தம் ஆகிய மூன்று.   துரியத்தில் பிராணனும் புருடனும் உந்தியில் தொழிற்படும்.    துரியாதீதத்தில் புருடன் ஒன்றே தொழிற்படும்.
 
2201: புரியட்டகத்தில் ஐந்து அவத்தைகளில் பொருந்தும் கருவிகள்.
நனவில் (சாக்கிரம்) புருடனுடன் பொருந்துவன ஐந்து தன்மாத்திரைகள், மனம், புத்தி, அகங்காரம் என்னும் எட்டு.  கனவில் புருடனுடன் பொருந்துவன  மனம், புத்தி, அகங்காரம் என்னும் மூன்று.  உறக்கத்தில் (சுழுத்தியில்) புருடனுடன் பொருந்துவது அகங்காரம் ஒன்று மட்டுமே.
 
2202: நனவில் நனவு முதலிய ஐந்தில் ஆன்ம அனுபவம்.
சாக்கிரத்தில் நனவு நிலையில் புலன் அறிவு சிறந்து விளங்கும்.  புலன்களுடன் தொடர்பு இல்லாமல் அவற்றின் வாதனைகளுடன் கூடியிருப்பது நனவில் கனவு நிலையாம்.  அவ்வாதனைகளையும் மறந்து நிற்கும் போது நனவு உறக்கம் உண்டாகும்.  எதையும் பற்றிய நாட்டம் இல்லாமை நனவில் பேருறக்கம். 
நனவில் அதீதத்துச் சிவானுபவம் ஒன்றே.
 
2203: கனவில் நனவு முதலிய ஐந்து நிலைகளில் ஆன்ம அனுபவம்.
கனவில் நனவு போல் காண்பது கனவில் நனவாகும்.  கனவில் கண்டு அவற்றை மறப்பது கனவிலே கனவாகும்.  எல்லாவற்றையும் கண்டும் காணாதிருப்பது கனவில் உறக்கம் ஆகும். கனவில் கண்டவற்றைக் கொண்டு காணாதவற்றை அனுமானத்தால் அறிவது கனவில் பேருறக்கம் ஆகும்.
 
2204: உறக்கத்தில் நனவு முதலியவை.
உறக்கத்தில் (சுழுத்தியில்) நனவு என்பது எதுவும் தோன்றாமல் உறங்குவது.  உறக்கத்தில் கனவு என்பது ஆன்மா உடலுக்கும் தனக்கும் உள்ள உறவை அறிந்து தன் இருப்பை மட்டும் தோன்ற விளங்குதல்.   உறக்கத்தில் உறக்கமாவது அறிவு அறிவால் அழிதல் அதாவது சிவபோதத்தால் சீவபோதம்
அழிதல்.  உறக்கத்தில் பேருறக்கம் (துரியம்) என்பது கூற இயலாத சூனியம் ஆகும்.
 
2205: துரியத்தில் நனவு முதலிய ஐந்து நிலைகள்.
துரியத்தில் நனவு என்பது நன்மையைத் தரும் சிவ உணர்வில் நிற்பது.  துரியத்தில் கனவு என்பது தலைக்கு மேல் சீவனை அண்டாகாயத்தில் அறிவது.  துரியத்தில் சுழுத்தி என்பது தலைக்கு மேல் உள்ள நிராதார வானத்தில் விளங்கும் ஊர்த்துவ சகஸ்ரதளத்தில் மனம் பொருந்தி உடம்பை விட்டு நிற்பது.
துரியத்தில் துரியம் என்பது எல்லாத் தத்துவங்களையும் கடந்தபோது தன்னைப் பரமாய் உணர்வது.
விளக்கம்: சுத்தாவத்தையில் ஆன்மாவின் யாத்திரை நிலை.
            பந்தமான உடலைக்கடப்பதே நல்லஅறிவு என்று குருவால் உணர்த்தப்பெற்ற பின் உணர்வு தொண்டையில் இருந்து சிரசின் உள் முகம் பாயும்.  பின் உடலைச் சூழத் தொம்பைக் கூடு போன்றுள்ள மன மண்டலத்தை அறிதல் நடக்கும். நிராதார ஆகாயத்தில் விளங்கும் ஊர்த்துவ சகஸ்ரதளத்தில் மனம் பதிவுண்டு உடலைவிட்டு நிற்கும்.  துரியத்தில் எல்லாத்தத்துவங்களையும் விட்டு நிற்பது பரநிலை.
 
2206:அதீதத்தில் நனவு முதலிய நிலைகளில் ஆன்ம அனுபவம்:
ஆன்ம அறிவு சிவஅறிவில் கூடி அறிவதை உணரும் நிலை அதீதத்தில் விழிப்புநிலையாகும்.  அங்ஙனம் அறியும் அறிவு அறியும் இயல்பு மடங்கிச் சிந்தனை நீங்கியிருப்பது அதீதத்தில் கனவு ஆகும்.  ஆன்ம அறிவு சிவ அறிவில் அடங்கிஅறிவதை விட்டு அதுவே தானாய் நிற்பது அதீதத்தில் சுழுத்தியாகும்.தன் அறிவு வேறாக இன்றி இறை அறிவாகவே ஆகும்போது அதீதத்தில் துரியம் ஆகும்.
 
2207: ஆன்மா அடையும் மேலான பத நிலை:
பராகாயம் போல் எங்கும் விளங்கும் நிலையை அடைந்தவன் ஐந்து மலங்களில்இருந்தும் விடுபட்டு,- ஞானமே தன் வடிவாய்ச் சிவத்தை விரும்பி அடைந்தவன், தான் எங்கும் நிற்கிற இயல்பையும் விட்டு, மேலாய் விளங்கும் நுண்மை நிலையான பிரணவ உடலை எய்துவான்.
 
2208: இதுவரை உரைத்தவை:
முப்பத்தாறு தத்துவங்களுள் இருபத்தைந்து நீங்கிய போது சாக்கிரமும்,  ஆறு நீங்கிய போது கனவும், ஐந்து நீங்கிய போது சுழுத்தியும் முடிவுறும். இவையே நனவில் நனவு கனவு உறக்கம் ஆகும்.  பின்பு தூலமும், சூக்குமமும் சுத்தமாயையிலாம்.   அத்துரிய நிலையில் தத்துவங்களுக்குத் தலைமை தாங்குபவனாய்த் தான் அவனாய் நிற்பான்.
 
2209: தூய அவத்தையைத் தவிர அடையக் கூடியது வேறு இல்லை.
இந்த உண்மையை இவ்வளவு காலம் நான் அறியவில்லை.  இதை உணர்ந்த பின்பு வேறு அறிவதற்கு எதுவும் இல்லை.  அகண்ட வடிவான சிவமே முதல் என்றும், அ•து அறிவுக்கும் அறிவுருவாகும் என்றும் அறிந்த பின்பு இது தான் நாம் அடையத்தக்க பேறு என்று அறிந்த இயல்பு உடையவன் ஆனேன்.
 
2210: சிவன் சத்தியுடன் கூடி அருள்வான்.
சிவபெருமான் உயிருக்கு உயிராகியும் உருவமாகியும் அருவமாகியும் அயலாகியும் அயலிலிருந்து கூடும் பொருளாகவும் எவ்விடத்தும் நிறைந்த பொருளாகவும்விரும்பும் சத்தியாகவும் நாதனாகவும் உலகம், உடம்பு, கருவி என்பனவற்றை சத்தியோடு கூடி இயக்காவிடில் அவை அனைத்தும் அஞ்ஞானத்தால் அறிவு பெறாது போகும்.
 
2211: இறைவன் தொன்று தொட்டே ஆன்மாக்களைப் பற்றிய மலமானது நீங்கும்படி ஆன்மாக்கள் மீது வைத்த அருளால், சத்தியுடன் பொருந்தி அவளுக்கு உயிராய் விளங்கி, பாசத்தை விளைவிக்கும் ஐந்து மலக் கூட்டத்தையும் முப்பத்தாறு தத்துவ பேதங்களையும் படைத்தான்.  அவற்றை அனுபவிப்பதற்குரிய உள்கருவியும் புறக் கருவியும் உயிருடனே கூட்டி வைத்தனன்.
 
2212: ஆணவத்தின் வலிகெட்டால் சிவன் அருள் நிலை பெறும்.
சாக்கிராதீதத்தில் ஆணவமலமும் தன் உண்மை என்ற ஆன்மாவும் உள்ளன.  சாக்கிராதீதத்துப் பொருந்திய ஒளியில் ஆன்மாசேர, சாக்கிராதீதத்தில் பொருந்திய ஆணவமலம்  நீங்கப்  பெற்றுத்  திருவருளைப் பொருந்தி  நின்றால் பரத்தின் உண்மை இவர்களிடம் தங்கி நிலைக்கும்.
 
2213: மதி மண்டல ஒளி பெற்றால் சிவப்பேறு கிட்டும்.
ஆன்மாவுடன் மலம் கலந்திருப்பதால் சிவ தத்துவம் விளங்கும் மாமாயை மறைந்துள்ளாள்.  மலத்தின் கலப்பாலே தெளிவான ஞானம் விளங்கவில்லை.  மலத்தின்கலப்பாலே சிவனும் மறைந்திருந்தான்.  ஆன்மாவிடம் பொருந்திய மலக்குற்றம் அகன்றால் சுத்த வித்தை விளங்கும் மதி மண்டலம் ஒளிபெற்று விளங்கும்.
 
2214: மனம் புறத்திலும் போகும் அகத்திலும் போகும்.
நன்மை தீமை என்பனவற்றைப் பிரித்து அறிய இயலாத சிந்தையில் காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்று சிங்கங்கள் இருக்கின்றன.  விடயங்களை மகிழ்ச்சியுடன் போய்ப் பற்றி வஞ்சகமாய் அவற்றை அடையும் முயற்சியில் ஈடுபடுத்தும் மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்னும் அந்தக்கரணங்களாகிய
நரிக்குட்டிகள் நான்கு உள்ளன. வெளிப்பொருளை அனுபவிக்கும் முறையில் வகைபடுத்தி அனுபவிக்க முயலும் கண், செவி, மூக்கு, வாய், மெய் என்னும் பொறிகளான யானைக் கன்று ஐந்து உள்ளன.  வெளியிலும் உள்ளேயும் செலுத்துகின்றஇரு தன்மைகள் மனத்துக்கு உண்டு.
 
2215: சிவனருள் கிட்டும் வழி.
பத்து வாயுக்களும், புரியட்டகமும் பொருந்திய உடம்பு வெளியுலகில் விரும்பிச் செல்லச் சிதறுண்டு எழும் உள்ளத்தை, நீங்கள் அப்படிக் கடு அடைந்து உடம்புஅழியும் முன் இறைவனை அடையும் உண்மை நெறியைப்பற்றி நின்றால் மேலேகண்ட பதினெட்டும் அதிர்ச்சியை அடைய ஒப்பில்லாத ஆன்மாவின் தலைவன் சிவபெருமான் வெளிப்படுவான்.
 
2216: நின்மல சுழுத்தி பொருந்தும் விதம்.
நனவில் ஞானேந்திரியம் கன்மேந்திரியம் என்னும் பத்தும் அவற்றின் செயல்கள் பத்தும் நீங்கக் கனவில் புகுந்து அந்தக் கரணங்களுடன் முன் மூளையிலிருந்து சிந்திப்பதையும் மறந்து உள்ளம் என்னும் மனமண்டலத்தில் நிலைபெற்றால் நினைவும் இல்லாமல் ஆன்மா நின்மல சுழுத்தியில் (உறக்கத்தில்) பொருந்தும்.  இந்நிலை சிரசின் மேல் போவதில் அமையும்.  இதை"அறிதுயில்" என்பர்.
 
2217: குருவின் அருளால் துரியம், துரியாதீதம் ஏற்படும்.
நின்மல உறக்கத்தில் பொருந்திய ஆன்மா குருவருளால் துரியாவத்தையில் பொருந்தி, உலகில் நியமம், தாரணை, தியானம் முதலிய நிலைகளைப் பெற்றுத் துரியாதீதத்தில் துரியாதீதமான சமாதி நிலையில் கூடிச் சில காலம் தங்கிச் சென்று, பரன் என்ற பெயரைப் பெற்று மலநீக்கம் பெற்ற தூய ஆன்மா
வாகும்.
 
2218: பரன் நிலையடைந்த ஆன்மா சிவமாய் விளங்கும்.
பரநிலையை அடைந்தவன் எல்லா அறிவும் பெற்று அனைத்து உலகும் ஒருசேர அனுபவித்து சதாசிவமான பெருமையுள்ள சத்தியின் திருமேனியான ஐந்தும் போய் அவற்றைக் கடந்த சிவமாய்ப் பிரணவ உடலை அடைந்து சுயம்பிரகாச ஒளியாய் விளங்குவான்.
 
2219: மும்மண்டலங்களையும் கடந்து நிராதாரம் சென்ற போது எல்லாம் ஒளியாய் விளங்கும்.       உடலுள் உள்ள திங்கள் ஞாயிறு அக்கினி என்னும் மூன்று மண்டலங்களுள்  மாயத்தைச் செய்கின்ற பெருமானைக் கண்டு உள்ளே எண்ணி நீங்கி மலர்ந்து விளங்கும் சகஸ்ரதளத்தைக் கடந்து
மேலே போனபோது அண்டம் யாவும் தானாகவே உள்ளத்தினுள் விளங்கும்.
 
2220: பிரணவ யோகியர் இறைவனை உச்சியில் எண்ணித் திளைப்பர்.
ஞானேந்திரியமாகிய பறவைகள் தங்களுக்கு ஒளி வரும் இடத்தை அறியாது திகைத்தன. சீவனின் நோக்கம் அகண்டத்தில் பதியாமையால் திருவருள் சத்தி இவரது அறியாமையை நோக்கி உதவி செய்ய இயலாமல் மயங்கி நின்றனள்.  இறைவனான சிவன் இத்தகைய அறியாமையுடையோரை மாற்றியருள வகை அறியாது உதவி செய்யாது நின்றனன்.ஆனால் உண்மையை உணர்ந்த பிரணவயோகியர் தமது சிரசில் அகலாது சிவத்தைத் நினைந்து திளைத்தனர்.
 
2221: நவகண்டங்களை மாற்றிப் படைக்கத் தெரிந்தபின் சிவன் மனத்தில் நீங்காதிருந்தான்.
சிவம் விளங்கும் நுண்மையை அறிந்து மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களும் கதிரவன், திங்கள், அக்கினி ஆகிய மூன்று மண்டலங்களும் சேர்ந்து ஒன்பது பிரிவுகளும் உடலுள் பொருந்துவதை அறிந்தேன். புவனங்கள் எல்லாவற்றுக்கும்தலைவனான பரம்பொருளை நாடி ஒன்பது மண்டலங்களையும் புலன் வழி போகாமல் திருத்தி அமைத்தேன். சிவனை உள்ளத்தில் வருவிக்க அறிந்தேன்.  அவன் என் மனத்தையே பொருந்தி நிலையாய் நின்று விட்டான்.
 
2222: அக்கினி மண்டல ஒளியைச் சந்திர மண்டல ஒளியாய் மாற்றுதல்:
உலகத்தில் உள்ள விளக்கை எண்ணெய் வார்த்துத் திரியிட்டுத் தூண்டுபவனின் செயலைப் போன்று மூலாதாரத்தில் உள்ள அக்கினி மண்டல ஒளி மூல சாதனையினால் தூண்டப்படும். அங்ஙனம் தூண்டப்பட்ட மூலாதாரத்தில் உள்ள அந்த ஒளி மற்ற சூரிய சந்திர மண்டலங்கள் ஆகியவற்றைக் கொண்டு பேரொளியாய் விளங்கும்.    சிரசின் மேல் விளங்கும் மதி மண்டலத்தை ஒளி பெறச் செய்வதற்குரிய நெறி மூலசாதனம்.  மூல சாதனை செய்து அக்கினி மண்டல ஒளியைச் சந்திர மண்டல
ஒளியாக மாற்ற வேண்டும்.
 
2223: மெய்ப் பொருள் தோன்றும்.
உள்நாட்டம் உடைய ஐம்பொறிகளை உடையவர்க்கு மண்டைக்கு மேலாக விளங்கும் மேல்முகமான சகசிரதளத்தில் வான் மண்டலத்தை ஆராயின் மேல் நோக்கிய அகத்தில் ஐம்பொறிகளும் கூடிய சந்தியில் அது கண்ணால் சிந்தையில்நாடிக் காணும் தன்மையது என்றான்.  ஐம்பொறிகளும் அடங்கும் இடத்தில்
கண்ணால் நாடிக் கண்டால் மெய்ப் பொருள் தோன்றும்.
 
2224: ஆன்மாக்கள் பக்குவம் பெறவே அவத்தைகள் அமைந்து உள்ளன.  எளிய கண்ணுக்குப் புலப்படாத பொருளையும் சிவன் அறிவான்.  சிவத்தைப் பொருந்தி அறியும் அறிவை அடையாதவன் தன் அறிவு நிரம்பியவன் ஆக மாட்டான்.  நிரம்பிய அறிவில்லாது ஐந்து அவத்தைப் படும் சீவனைத் தன்னோடு சேர்த்து அந்த சீவனை அது அறியாமல் கண்காணித்து வரும் பேரறிவுடைய சிவனை அறிபவர் யார்?
 
2225: நின்மல துரியம், துரியாதீதம் ஆகியவற்றின் பெருமை.
இதுகாறும் நின்மல சாக்கிரத்தில் துரிய நிலையைப் பற்றிச் சொன்னோம்.  துரியாதீதம் உண்டாவது அரிதாகும். சாக்கிரம்(நனவு), கனவு, சுழுத்தி (உறக்கம்) ஆகியவை கழியத்தக்கன.  பின்பு துரியத்தில் (பேருறக்கம்) கால பரமானது மிகப்பெரிய நிலையாகும்.  அரிய துரியாதீதம் மிகவும் கடந்த நிலையாகும்.
சிரசின் மேல் சகஸ்ரதள வெளியில் நிலை பெறுவது மிக அருமை. இது காலத்தைவென்ற பரம நிலை.  இது கேவல கும்பகத்தால் மூச்சு  இயக்கம் தடைப்பட்டு நின்ற பெரிய நிலை.
 
2226: நின்மல நனவு நிலையை உற்றவர்க்குப் பிறவி இல்லை.
அசுத்த மாயையில் அறிவுடைய ஆன்மா முப்பத்தொன்று தத்துவங்களில் நிலை கொண்டு பொருந்தும். சுத்த மாயையில் அறிவுடைய ஆன்மா சிவ தத்துவத்தை அறிவதில் பொருந்தும்.  தொண்டைக்கு மேல் பிரமரந்திரப் புழையில் பிராணன் செல்லும் போது தடவுதல்போன்ற உணர்வு ஏற்படும். இவ்வுண்மையை அறியாதசகலர் கேலாவத்தையைச்  சேர்ந்து பல யோனிகளில் புகுந்து வருந்துவர்.  சுத்தமாயையுள் பொருந்தியுள்ளவர் நின்மலத் துரியத்தைக் கண்ட சீவனாவார்.
 
7.கேவல சகல சுத்தம்.
கேவலமாவது கருவி கரணங்களோடு கூடாது நிற்கும் நிலை.  சகலமாவது கருவி கரணங்களோடு கூடி நிற்கும் நிலை.
 
2227: ஆன்மா பக்குவத்துக்கு ஏற்ற மூன்று நிலைகளில் நிற்றல்.
தன் உண்மையை அறிந்த சுத்தனும், தான் ஒன்றையும் அறியாமல் கிடக்கும் கேவலனும், இவர்களுக்கு வேறான பலவகைப்பட்ட பரிபாகம் உள்ள சகலனும் முறையே சத்தையும், அசத்தையும், சதசத்தையும் உடனாகத் தத்தம் அறிவுக்கும் திறனுக்கும் ஏற்பப் பொருந்தி நிற்பர்.
 
2228: ஆன்மாக்களின் வினைகளுக்கு ஏற்ப அனுபவம் பயன் அமைதல்.
தனக்குப் பகைவனும் நண்பனும் தானே ஆவான்.  அங்ஙனம் தனக்கு உரிய மறுமைப் பயனும் இம்மைப் பயனும் தன்னாலே ஆகும்தான் செய்த புண்ணிய பாவச் செயல்களின் பயனை அனுபவிப்பனும் தானே ஆவான். தானே தனக்குத் தலைவனும் ஆவான்.
 
2229: ஆன்மா சகல நிலை அடைதல்.
கருவிகளுடன் கூடிப் பிறப்புக்கு வாராத கேவல நிலையில் கிடக்கும் உயிர் சுத்தமாயையில் பொருந்தி, பின் பக்குவமாகின்ற உயிர் மாயையின்   தொடர்பால் விளக்கம் பெற அறிவுற்று, முந்தைய வினைகளும் அவற்றை அடைவதற்குரியவைகளும் பெற்றுத் தாம் அடைந்த பாசத்தால் சகல நிலையை அடையும்.
 
2230: சகலர் இயல்பு.
சகல நிலையில் கருவிகளுடனே வந்தவர் சகலர் ஆவர்.அவர்கள் ஆகமங்களால்சொல்லப் பெறும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று வகையான மலங்களுடன் பொருந்தியவர்கள். நிகர் இல்லாத நான்முகன், திருமால் முதலாகவுள்ளதேவர்கள் இந்த உலகில் வாழும் மக்கள் புழு ஈறாகச் சகலர் ஆவார்.
 
2231: பிரளயாகலர்.
அசுத்த மாயையில் தங்கியிருக்கும் பிரளயாகலர் பொருந்திய அந்த அசுத்தமாயையே உடம்பாகக் கொண்டு மற்ற மாயேயங்களை விட்ட தன்மையுடையவராவர்.  அவர்கள் சிவத்தோடு பொருந்திய சீகண்டரும் நூற்றெட்டு உருத்திரர்களும்  ஆவார்கள்.  பிரளயாகலர் ஆணவம், மாயை என்ற இரண்டையும் உடையவர்.
 
2232: விஞ்ஞானகலர்.
ஆணவ மலம் ஒன்றை மட்டும் உடையவர் விஞ்ஞானகலர்.  இவர் பேரறிவினர்.  விஞ்ஞானகலர் அனந்தர், சூக்குமர், சிவோத்தமர், ஏகநேத்திரர், ஏகருத்திரர், திருமூர்த்தி, சீகண்டர், சிகண்டி என்ற அட்ட வித்தியேசரும், சப்தகோடி மகா மந்திரர்களும், மந்திரேசர் பலரும் விஞ்ஞானகலர் ஆவர்.  இவர் தூய
வித்தைக்கு மேல் உள்ளவர்.  சீவர்களுக்குத் தனுகரணம் புவனம் போகம் படைப்பவர்.  மந்திரங்கள் பல.  அதனால் மந்திரேசர்கள் பலர்.
 
2233: விஞ்ஞானகலரில் பக்குவம் உடையவர் விந்து நாதங்களைக் கடந்து சிவத்துடன் கூடுவர்.
விஞ்ஞானகலரில் மிக்க பக்குவத்தைப் பெற்றுச் சிவத்தின் அருளுக்குப் பாத்திரம் ஆனவர், வலிமை ஒடுங்கிப் போகும் ஆணவ காரியமான விந்து நாதங்களைக் கடந்து பிரணவ வடிவான சிவத்தில் இலயமாவர்.  அங்ஙனமாதலால் மலக் குற்றம் அற்ற சுத்த நிலையை எய்துவர்.
 
2234: விஞ்ஞானகலர்க்கு இறைவன் அருள்வான்.
பிரளயாகலரில் ஆன்மாக்கள் உத்தம, மத்திம, அதம நிலையில் மூன்று வகையாகவும் விஞ்ஞானகலரில் உடலுடன் கூடி இருந்த போதே சிவத்தைப் பொருந்திய சீவன் முத்தராகவும், உடலைப் பிரிந்த பின்பு சிவத்துடன் பொருந்திய உத்தம, மத்திம, அதம நிலையடைந்த நான்கு வகையாகவும் ஆன்மாக்கள் உள்ளன.  இந்த ஆன்மாக்கள் மாயையுடன் பொருந்தி விருப்பத்தைச் சார்கின்ற தன்மையால் ஆனவை.  என்றாலும் இந்த ஆன்மாக்கள் பக்குவம் அடைந்த போது இச்சை முதலியவை எல்லாம் தாமே நீங்கும். 
அந்நிலையில் இறைவன் அருளைக் கூட்டி மலத்தை நீக்கியருளிவான்.
 
2235: பரவெளியில் கலந்திருக்கும் நிலை சுத்தம்.
நிலை இல்லாத மண் முதல் நாதம் இறுதியாயுள்ள முப்பத்தாறு தத்துவங்களின் அறிவையும் விட்டு நீங்கி அவற்றுள் பற்று சிறிதும் இல்லாது நீங்கவே எய்தப் பெறும் பொருளான சிவமே தானாகி, நித்தியமாய் சரம், அசரம் என எங்குமாய்ப் பரவெளியுள்ளும் கலந்து சென்று அடையாமல் தானே வந்து அடையும்
நிலை சுத்தாவத்தை ஆகும்.
 
2236: இறைவன் ஆன்மாவைத் தூய நிலைக்கு அழைத்துச் செல்லல்.
தொன்று தொட்டே பசு தத்துவத்தில் கட்டுப்பட்டிருக்கும் ஆன்மாவை, இறைவன்அனாதியாயுள்ள ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரொதாயி  என்ற ஐந்துமலங்களில் வருந்தும்படி செய்து அனாதியில் இருந்த கேவல நிலையினின்றும் நீக்கிச் சகல நிலையில் பொருந்தச் செய்து - தொன்று தொட்டுப் பற்றி வரும் பிறவியை இறைவன் நீக்க அந்த ஆன்மா தூயநிலையைப்  (சுத்தாவத்தையைப்) பொருந்தியவன் ஆவான்.
 
2237: சிவம் என்ற பொருளை அறிபவன்.
ஞானம் பற்றிப் பரவெளியைச் சென்று அடைந்தவர் தம் சுத்த கேவல நிலையில் கடந்த தற்பர சிவத்திடம் சுத்த துரியத்தே தம் அறிவு பொருந்த ஆன்மாவான தன்னிடம் சிவமாகிய பொருளை அறியும் உண்மையானவன்.  (துரிய நிலை: ஆன்மா சிவத்தை அடைந்து சிவத்தோடு இலயம் அடையாமலும்
அதே சமயம் மலத்தைப் பற்றி நில்லாமலும் இருக்கும் நிலை துரிய நிலை.)
 
2238: சுத்தாவத்தையில் தத்துவங்கள் ஒடுங்கும் நிலை.
நிலம் முதல் புருடன் ஈறான இருபத்தைந்து தத்துவங்களும் ஆன்மாவில் ஒடுங்கும். ஆன்மாவும் தூயநிலை அடைந்து தன் உண்மையை உணர்ந்து வீட்டை அடையும். சிவ தத்துவத்தில் உள்ள சுத்த வித்தை, மகேசுரம், சாதாக்கியம் என்னும் மூன்றும் பழமையான சத்தியிலும் ஐயனான சிவத்திலும் ஒடுங்கும்.  படைப்பு முறையில் சிவனிடமிருந்து சத்தியும் பிறவும் அங்ஙனமே தோன்றும்.
 
2239: ஆன்மா சுத்த நிலையில் முப்பத்து நான்கு தத்துவங்களையும் கடந்து சிவன் சத்தியுள் பொருந்தி விளங்குதல்.   
சுத்த நிலையில் ஆன்ம தத்துவம் 24, புருடன் 1, வித்தியா தத்துவம் 6, ஆக
31 தத்துவங்களும் ஆன்மாவில் அடங்கும்.  உண்மையில் கண்டத்தில் விளங்கும்தூய வித்தையும், புருவ நடுவில் விளங்கும் மகேசுரமும், தலை வரை விளங்கும் சதாசிவமும் ஆகிய மூன்றும் உண்மையான யோகத்தில் சுழுமுனைக்கு மேல் விளங்கும் சத்தி சிவ பாகமாய்க் காணும்படி 28 தத்துவங்களும் அடங்கும் முறையிலே அடங்கும்.
 
2240: விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர்.
ஆணவ மலம் ஒன்று மட்டும் உடையவராய் மாயை கன்மங்களை அறியாதவர் விஞ்ஞானகலர் ஆவார்.  ஆணவம், மாயை ஆகிய இரு மலங்களையும் உடையவர் பிரளயாகலர் ஆவார்.  காணும் வடிவம் உடையவராய் உள் நோக்கம் இல்லாமல் வெளி நோக்கம் உடையவராய் ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று மலங்களையும் பொருந்தியவர் சகலர் ஆவார்.
 
2241: விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் ஆகியவர்களின் குற்றங்கள்.
விஞ்ஞானகலரின் குற்றம் ஆணவ மலம்.  மாயையைப் பற்றிக் கொண்டு நிற்பது பிரளயாகலரின் குற்றம்.
ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றையும் பற்றி நிற்பது சகலரின் குற்றம்.
 
2242: விஞ்ஞானகலர் பராசத்தியைப் பொருந்தி நிற்றல்.
ஞான வடிவ நிலையில் கிளர்ச்சியுடைய விஞ்ஞானகலர், ஞானவடிவம் கிளர்ந்து எழும் விந்து சத்தியால், அங்குக் கேவல நிலையில் எல்லாச் சகல நிலையையும் பிரணவ வடிவுடையவள் ஆன மாமாயையாகிய சத்தியைச் சார்ந்து பொய்யான உடலை விட்டு மெய்ம்மையான பரசத்தியைப் பொருந்தி நிற்பர்.
 
2243: பிரளயாகலர் நூற்றெட்டு உருத்திரர் ஆதல்:
தூவா மாயையில் பொருந்தியுள்ள பிரளயாகலர் அம்மாயையும் அவரை வந்து தளைப்படுத்தாத வகையில் இருக்க, ஆணவத்தோடுகூடிய நிலையில் விருப்பத்தை ஏற்படுத்தும் தூமாயை பொருந்த நிலைபேறுடைய நூற்றெட்டு உருத்திரர் ஆவார்.
 
2244: சகலர் பிறவிக் குழியில் சிக்கித் துன்புறுவர்:
ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களுடன் கூடி அவற்றில் மயங்கி நிற்பவர் உண்மையான சகல ஆன்மாக்கள் ஆவர்.  அவர்கள் தேவர், அசுரர், மனிதர், உண்மை பேசாத நான்முகன், விரிந்து மிகுந்து கிடக்கும் புழு ஈறாக அம்முறையில் பிறவிக் குழியில் சிக்கிக் கட்டுப்படும் சகலர் ஆவார்.
 
2245: சிவக்கதிரவன் ஒளியால் மும்மல இருள் நீங்கும்:
தூய நிலையில் பொருந்திய சகல இன ஆன்மாக்கள் மும்மலங்களில் நித்தமாகியஆணவமும் அநித்தமாகிய மாயை கன்மங்களும் நீங்க, இவற்றில் தனித்தனியாய்நிலை பெற்ற ஆசையும், மயக்கம் உடைய இருளும் சிவக்கதிரவன் ஒளியால் தொடர்பற நீங்கிடத் தூயர் ஆவார்கள்.
 
2246: தூய நிலையில் மூன்று நிலையும் அவற்றின் பயனும்:
ஆன்மா, பிரமம் ஆன சிவத்தில் ஞான வடிவாய் பொருந்துவதில் தனித்துள்ள வீடு பேற்றை அடையும்.  பிற்பட்ட சகல நிலையில் கலை முதலிய தத்துவங்கள் பிரிவது அமையும்.  பிரணவத்தில் நின்று ஞான வடிவ தரிசனம் செய்வது தூயநிலையில் நின்மல சாக்கிரம் ஆகும்.  இம் முறையில் பிரமத்திடம் பொருந்துவது தன்னைத் தூய்மை செய்து கொள்வதாகும்.
 
2247:கேவல நிலையில் உள்ள ஆன்மாவின் நிலை:
கேவல நிலையில் உள்ள ஆன்மா அறிவில்லாமலும், உடம்பு இல்லதவனாகவும்,அராகாதி குணங்களுடன் பொருந்தாதவனாகவும், கொள்கை ஒன்றும் இல்லாதவனாகவும், கலை முதலிய அசுத்த மாயை கூடாதவனாகவும், தத்துவங்களுடன் பொருந்திச் செயல் செய்யாதவனாகவும், இன்பம் அனுபவிக்க அறியாதவனாகவும், இருந்தும் இல்லாதவன் ஆகவும், ஆணவ மலத்தால் கூடப் பெற்றவனாகவும் உள்ளான்.
 
2248: பிரளயாகலராக இருந்தவர் பிறவிக்கு வந்து அடையும் பேறு:
ஒளி மண்டலமும் அதை மறைக்கும் மாயையும் அதை வெளிப்படுத்தும் கிரியை யும்,  அதனால் விளையும் ஞானமும், உடலின் உள்ள சத்திக்கேற்ப அமையும்.  விந்து மண்டல ஒளியில் உண்மை ஞானத்தைப் பொருந்தும் பிரளயாகலர் உலகில் பிறவிக்கு வந்த தூய ஆன்மாக்கள் ஆவர்.
 
2249: கேவலம் முதலிய நிலைகள் ஒன்பது வேறுபாட்டை உடையன.
கேவலம் முதலிய நிலைகளின் வேறுபாட்டைச் சொல்லுமிடத்து, கேவல கேவலம்,கேவல சகலம், கேவல தூய்மை என மூன்றும், கிளர்ச்சியுடைய சகலத்தில் சகலகேவலம், சகலசகலம், சகலதூய்மை என மூன்றும்மேலான தூய்மையில் தூய கேவலம், தூய சகலம், தூய தூய்மை என மூன்றுமென ஆராய்பவர்க்கு நிலைகள் நீங்காத ஒன்பது வகையாகும்.
 
2250: கேவலத்தின் மூன்று நிலைகளின் ஆன்ம அனுபவம்:
கேவலத்தில் கேவலம் கருவிகளை விட்டு உறங்குவது போல் உள்ள நிலை.  கேவலத்தில் சகலம் ஒளி மண்டலத்தில் அறிவு குன்றாதிருத்தல்.   கேவலத்தில் தூய்மை கேடற்ற அகன்ற ஞானம் உடையவர்க்குத் தன்னையும் உலகத்தையும் அறியும் நிலை. அந்நிலையில் சிவம் இவர்களுக்கு அருள் செய்வான்.
 
2251: சகல நிலையில் ஆன்மாவின் அனுபவம்.
சகலர்க்கு அறிவு ஆராய்ச்சியால் விழிப்பில் கருவி கரணங்கள் செயற்படாமல் உறங்குபவனைப் போன்று விளங்கும்.  இது சகலத்தில் கேவலம் ஆகும்.   சகலர்க்குப் பொருந்தும் விழிப்பு நிலையே சகலத்தில் சகலம் ஆகும்.  விழிப்பு நிலையில் ஞானேந்திரியங்கள் பிரணவ ஒலியில் இலயமடையும்.  இது சகலத்தில்
தூய்மை ஆகும்.  இவ்வாறு சகலத்தில் மூன்று இயல்பும் பொருந்தும். 
 
2252: சுத்த நிலையில் ஆன்மாவின் அனுபவம்.
சுத்த நிலையில் தூய்மையாவது பழமையாய் உள்ள அனைத்துக் குற்றங்களையும்நீக்கும் சிவம் ஆதல். சுத்தத்தில் கேவலமாவது கரணங்களை விட்டு மலங்களைப்போக்குவதற்கு இறைவனது வியாபகத்தில் அலையில்லாத நீர் போல் அடங்கி இருத்தல்.  சுத்தத்தில் சகலம் தன்னையும்தலைவனையும் அறிந்து அவன் அருளில் நிற்றல்.  இவ்வாறு சுத்த நிலையில் இம்மூன்று நிலைகள் உள்ளன.
 
2253:தூய நிலையில் சாக்கிரம் முதலிய 5 நிலைகளில் சிவதத்துவம் தொழிற்படல்.
விழிப்பு சாக்கிரத்திலே புருவ நடுவில் சிவ தத்துவம் ஐந்தும் தொழிற்படும்.  நனவில் உண்டாகும் கனவில் பின் மூளையில் மகேசுரம் சாதாக்கியம் சத்தி சிவம்என்னும் நான்கும் தொழிற்படும்.         
விழிப்பு உறக்கத்தில் தலையின் மீது சாதாக்கியம் சத்தி சிவம் என்னும் மூன்றும் தொழிற்படும்.
விழிப்பு பேருறக்கத்தில் நிராதாரத்தில் சத்தியும் சிவமும் என்ற இரண்டும் தொழிற்படும். 
விழிப்பு சாக்கிராதீதத்தில் துவாதசாந்த வெளியை அடைந்த போது சிவம் ஒன்று மட்டுமே தொழிற்படும்.  இவ்வாறு மறைகளுக்கு ஆதியான சிவம் ஐம்மலம், பாசங்களில் இருந்து ஆன்மாக்களைப் பிரித்து ஆக்கம் தருவான்.
 
2254: சுத்த சாக்கிராதீத நிலையில் ஆன்மா:
மேற்சொன்னபடி ஆன்மா சாக்கிராதீதத்தில் சிவத்துடன் பொருந்துகிறது.  அதனால் ஆணவ மலக்குற்றம் நீங்கும்.  சாக்கிராதீதம் நாதாந்தமாகையால் நாத தத்துவம் தங்காமல் போகும்.      பரோபதியானால் உபசாந்தமான நிறைவான அமைதி கிட்டும்.    நாத தத்துவத்தைப் பற்றி நிற்கும் ஆன்மா மலங்களையும்
அவற்றால் விளையும் குணங்களையும் நோக்காது.
 
2255:சீவன், அத்தனருளை உணர்ந்தபோது, அதன் சித்தமும்செயலும் ஒடுங்கும்.
மலங்களால் கட்டுண்ட பெத்த நிலையும், அவற்றினின்று நீங்கிய முத்தி நிலையும்,தன் இருப்பை உணரும் துரியமும்,    சுத்தாவத்தையில் உள்ள துரியாதீதமும் தோன்றாதபடி சிவன் சீவனை விழுங்கி விடும் என்று அவன் அருளால் உணர்ந்தபின்பு,  சீவனிடம் உள் கருவிகளின் செயலும்  வெளிக்கருவிகளின்  செயலும்
இல்லாமல் போகும்.
 
2256: ஆன்மாக்களுக்கு சிவன் அருளல்:
உயிர்கள் அடையும் கட்டுண்ட நிலையும் முத்தியும் என்பவை சிவபெருமானின் அருளால் அமையும். 
அச்சிவபெருமானின் அருள் விளையாட்டோடு பொருந்தும் உயிர் இது சுத்த நிலைக்குச் செலுத்தும் நெறியாகும் என அடையும்.   இவ்வாறு அடையும் உயிர் இறைவனிடம் அறிவாய்த் திகழும்.
 
2257: இறைவன் கன்மப் பயன்களை ஊட்டுதல்:
ஆணவம் முதலிய ஐந்து மலங்களையுடைய சீவர்கள் தம்மைத் தாமே மதித்த சகலத்தர் ஆவார்.
அன்னார் ஐந்து மலப்பாசங்களால் கட்டுண்டவராய்க் கொடியவினைகளைத் துய்க்க வேண்டியவராய் விளங்குகின்றனர்.  இவர்கள் வீட்டுலகை விரும்பாமல் தேவ உலகை விரும்பி அடைவர். இவர்கள் சிவத்தை அறியாது இருப்பினும் இவர்களைச் சிவம் அறிந்தே உள்ளார்.
                                                                                                                                                                    2258: மனோமயகோசம் பரு உடலுடன் அமைதல்: கேவல அதீதத்தில் ஆன்மாக்களைப் பிறவிக்குச் செலுத்தச் சிவசத்தி மாயையைக் கலக்கச் செய்யும். பின்பு துரியநிலையில் அந்த ஆன்மாவுக்கு விருப்பமானவற்றை உண்ணும் ஆசை ஏற்படும்.  அந்த ஆன்மாவின் விருப்பத்திற்கேற்ப, பிரமரந்திரமும் அதைச் சூழவுள்ள எட்டு நிலைகளும் சூக்குமமாய்ப் பொருந்தும்.   பின்பு குணம் என்ற மனோமயகோசம் இணைக்கப்பட்ட போது நனவு நிலை ஏற்படும்.
 
2259: ஐம்மலங்களும் பற்றும் முறை:
கேவல துரியாதீதத்தில் ஆணவ மலம் அகலாமல் நிற்கும்.     பின்பு துரியத்தில் மாயை பொருந்தும். கேவலசுழுத்தியில் பொய்யான கன்மங்கள் பிணித்து நிற்கும்.  கேவல கனவில் மாயேயங்கள் பொருந்தும்.    காணப்படும் நனவில் திரோதாயி மற்றும் ஐந்து மலங்களும் இவ்விதமாக ஆன்மாவைப் பொருந்தும்.
 
2260: சுத்தாவத்தை அடைந்தோர் பிறவிக்கு வரும் நிலை:
அதீதத்தில் உள்ள சுத்த ஆன்மா சிவத்தை முதலாக அறிபவன் ஆகின்றான்.   அந்த ஆன்மாக்கள் படைப்புக்கு வரும் போது சுத்த மாயையில் தங்கிப் பிரமப் புழை விளங்கும் சுழுமுனையில் தங்கித் தவம் செய்ய வேண்டிய கருமத்தை உணர்ந்து எப்போதும் பராவத்தையில் பொருந்தியவர் இவ்வுலகில் உள்ளவர்க்குஅருளைப் பற்றி எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கும் சகலத்தார்.
 
2261: சீவன் சகல நிலையில் மாயையைப் பொருந்திக் கருவிகளுடன் கூடி அனுபவம் பெறுதல்:
மாயையின் காரியமான உடலைப் பெற்று, எடுத்த உடம்புக்கு ஏற்றவாறு இன்பப்பொருள்களை அனுபவித்துப் பூதங்களைச் சார்ந்து, மனம் முதலிய  அந்தக்கரணங்களைப்  பொருந்திச்  சத்தம்  முதலிய  தன்மாத்திரைகளில்  தங்கிக்  கருவை அடைந்த சீவன் சகல அவத்தையில் தோன்றும்.
 
2262: பிறவாமை பெறுவதே தூயநிலை.
ஞானம் கிரியை என்பவை ஒத்து விளங்கும் போது இன்பம் விளைக்கும் சிற்சத்தி பொருந்தி ஞான வடிவான தூயநிலை (சுத்தாவத்தை) பொருந்தவே, அச்சமயம் தக்க குருவினால்  உணர்த்தும்படி  செய்து  திருவருட்சத்தி பொருந்தி  மூலம் நீங்கும்.  மீளவும் பிறவியை அடையாமல் இருப்பதே தூய நிலை ஆகும்.
 
2263: சீவன் நின்மல துரியாதீதத்தில் சிவத்திடம் விளங்கும்:
முப்பத்தாறு தத்துவங்களின் வழியாக இருபத்தைந்து நிலைகளையும் அவற்றின் இறுதியான நின்மல துரியாதீதத்தை இச்சீவன் அடையச்,  சுத்த தத்துவத்துக்குரியசுத்தவித்தை, மகேசுரம், சதாசிவம், விந்து, நாதம் என்னும் ஐந்தும் நீங்கும்.  ஒளியினை உடைய சீவன் பரமாகி சிவத்திடம் உள்ளதாகும்.
 
2264: தன்னை அறிந்து ஈசனொடு ஒன்றியவர்க்குப் பிறவி வாராது.
உடம்பின் வேறானது ஆன்மா.       அத்தகைய ஆன்மாவே தான் என்பதை ஒருவன் அறியாமல் தன் உடலையே தான் என்று மயங்கி இருந்தான். நிராதாரத்தில் உணர்வு சென்ற போது தான் ஓர் எளிய வடிவினன் என்பதை அறிந்தான்.   உள்ளும் புறமும் ஒளியாய்த் தன்னைக் கண்டான். அவ்வொளியே இவ்வுடலைத்தாங்கி நிற்பதையும் அறிந்தான்.  அந்த ஆன்மா அகண்டத்தில் ஒன்றிய போது இரண்டு இல்லாமையால் பிறவியே இல்லை. அதைவிடுத்து அவ்வாறுள்ள ஒளி உடல் சிவத்துடன் ஒன்றாவிடின் திரும்பவும் வந்து தன் வினைக் கீடாக அந்த ஆன்மா பிறப்பான்.
 
2265: சாக்கிரத்தில் அதீதம் தலைப்பட்டவரிடத்து வாக்கு மனம் இல்லை:
நின்மல சாக்கிராதீதம் கூடுமானால் அதைத் தோற்றுவித்த சுத்த தத்துவம் ஆனந்தத்தை ஏற்படுத்தும். எதிர் நோக்கியுள்ள பிறவி நீங்கும்.  பெருமையுடையவீடு பேறு கிட்டும். அந்த அதீத நிலையில் நுண்மையான வாக்கும் மனமும் பொருந்தமாட்டா.  வாக்கும் மனமும் கடந்த நிலை மோனநிலை.   இதையே முத்தி நிலை என நூல் கூறும்.
 
2266: அப்பும் அனலும் கடந்த நிலையில் ஆன்ம ஒளி விளங்கல்:
நீரின் குளிர்ச்சியும் நெருப்பின் ஒளியும் அகண்ட வானத்துள் விளங்கும்.  ஆனால்அவற்றின் நெகிழ்ச்சியும் சுடும் தன்மையும் அவ்விடத்தில் இரா. விரிந்த வானத்தில் நீரும் நெருப்பும் எது என்று வினவினால் நீரின் தன்மையும் நெருப்பின் தன்மையும் கலந்து அவ்வாறு ஆகும்.
(சிதாகாய வெளியில் நீரின் தன்மையான குளிர்ச்சியும் தீயின் குணமான ஒளியும் பொருந்திச் சந்திர மண்டலமானது விளங்கும். மேல் சந்திரமண்டலம் இருப்பதால்அதன் கீழ் உள்ள தீயின் தன்மையான வெப்பம் (காமத்தீ) கெட்டு ஒளியாகவும்,நீரின் தன்மையான நெகிழ்ச்சி (வீரியம்) கெட்டுக் குளிர்ச்சி யாகவும் விளங்கும்.)
 
2267:மாயைஒன்றே மூன்று கண்டங்களாய்ப்பிரிந்து ஆன்மாவைப் பொருந்தியது.
முப்பத்தாறு தத்துவங்களில் ஆன்ம தத்துவம் இருபத்து நான்கும் அசுத்தம்.  மிசிர மாயையோடு கூடிய வித்தியா தத்துவங்கள் ஏழும் சுத்தாசுத்தம் சிவ தத்துவங்கள் ஐந்தும் சுத்தமாகும்.  இம்மூன்றையும் ஆன்மா அடையும்படி மூன்று பிரிவுகளாகப் பிரிந்து பிரகிருதி மாயை, அசுத்த மாயை,  சுத்த மாயை ஆன்மாவிடம் பொருந்தும்.
 
2268: சிவம் சத்தி ஆன்மாக்களைக் கேவல சகலங்களில் பொருந்திச் சுத்த நிலையை அடையச் செய்யும்.
செவிலித்தாய் போன்ற அசுத்த மாயையான ஆன்ம தத்துவம் இருபத்து நான்கும்ஆன்மா முதிர்ச்சி அடையும்வரை தொடர்பு கொண்டு ஆன்மா முதிர்ச்சி அடைந்ததும் அதன் செயல் முடிவு பெற்று விடும்.   பெற்ற தாய் போன்ற சுத்த மாயையான வித்தியா தத்துவம் ஏழும் ஆன்மா உயிரின் அறிவு விளக்கம் அடையும்வரை இருந்து பின் நீங்கும்.  இவை பொருந்தும் வகையில் சிவம் தந்தையாய் அமைய, ஆன்மா சகல நிலைகளையும் அடைந்து ஆராய்ந்து தெளிவு பெற்ற பிறகு  சுத்தமாயையான  சிவதத்துவங்கள்  ஐந்தைப்  பெற்றுச் சுத்தாவத்தையை அடையும்.
 
8. பராவத்தை. (சத்தியுடன் உள்ள நிலை)
2269: சிவம் மறைந்து அருளுதல்.
ஐந்து சிவ தத்துவத்தையும் கடந்த நிலையில் உள்ள அநாதியான பரமே தெய்வம்ஆகும்.  இதுவே எல்லாரின் மனமண்டலத்தில் பொருந்துவதாய் மலம் அற்றதாய்பிறப்பில்லாததாய் உள்ளது.  இது அகண்டப் பொருளானபடியால் உடலினுள் இருந்து உயிரை வேறுபடுத்துவதற்காக மறைந்திருந்த உண்மையை நான் அறிந்தேன்.
 
2270: பராசத்தி சீவனுக்கு அருளுமாறு:
பராசத்தியே சுத்தமாயை அசுத்தமாயையில் விரவித் தன்னிலை கெடாத சாந்திகலையில் உள்ளது.  மேலான ஆனந்த நிலையில் அந்தச் சத்தி ஒளிமயமாய் உள்ளது. அந்தச் சத்தியே அசுத்த மாயையில் பொருந்தி உடம்பின் சத்திகளான ஐந்துடன் சீவன் உடலால் பெறும் பயனுக்குக் காரணமாகவும் இருக்கின்றது.
2271: எல்லா அறிவும் உடையவர்:
முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து அறிபவரே அறிபவர்.  அவ்வாறு கடந்த நிலையில் அவர் சத்தியின் அருளைப் பெறுபவர்.      அதனால் அவர்களுக்கு அங்கு எல்லா அறிவும் உண்டாகும்.  அப்போது அவர் சிவனோடு இனிதாகப் பொருந்தி இருப்பார்.
 
2272: பொறிகளின் செயல் அடங்கி இன்பம் அடைதல்:
ஞானேந்திரியம் ஐந்தும் அந்தக்கரணம் நான்கும் தத்தம் செயல் ஒடுங்கி உள்ளத்தில் அடங்க, ஐந்து இந்திரியங்களையும் அணிகலமாகக் கொண்டு உறக்கத்தை அடையும் அறிவு மயமான ஆன்மா, சிற்சத்தியுடன் நீல ஒளியில் மனம் தொழிற்படாமல் நிற்பதில் இன்பத்தை அனுபவிக்கும்.
 
2273: நனவு முதலிய மூன்றும் கடந்து துரியத்தில் சிவன் பரமாகும்:
நின்மல சாக்கிரத்தில் அமைகின்ற துரியமே சீவனது சுத்த நிலையாம்.  அத்தகைய பெருமை மிக்க சுத்த நிலையில் நனவு கனவு உறக்கம் என்னும் மூன்றையும் விரைவாய்க் கடக்கவே, நின்மலத் துரியத்தில் சீவன் பரனாகும்.   சீவன் எனவும் சிவன் எனவும், என்றும் அறியாத மேல் நிலையில் அச்சீவன்
சிவம் ஆவான்.
 
2274: தத்துவங்களை விட்ட் சீவன் பரம்:
நின்மல சாக்கிராதீதத்தில் சீவன் தத்துவங்களை விட்டுப் பரமாகும்.    இவ்வகையான அதீதத்தில் பலகாலம் பழகப் பழகப் பரம் பொருந்தும்.  இங்ஙனம் நிட்டையில் பொருந்தி அதீதத்தை அடையாதவர் பரம் ஆக மாட்டார். அத்தகையவரைவிட்டுப் பாசமும் அதனால் ஆன பற்றும் நீங்கமாட்டா.
 
2275: பராவத்தையில் நிகழ்வன:
ஆராய்ச்சியினால் அறியப்பட்ட போது மாயை உடலின் உள்ளும் உடலும் புறமுமாய்ப் பொருந்தி யிருக்கும்.   நின்மல துரியாதீதத்தில் வாயுவும் மனமும் கடந்த நிலையில் மயக்கம் நீங்கின போது சுத்த அறிவு சிவானந்தமாய்  மேலே நிறைந்து மாயையை மூடும் பொருளாக அமைய மாயை அதனுள் அடங்கும்.
 
2276: பராவத்தையில் உள்ள சீவன் வினைத் துய்ப்பின்றி இருக்கும்.
துரியம் என்ற குதிரை மீது இருந்த சீவனை மென்மையான பராவத்தையில் புகும்படி செய்து,  இந்திரியங்களான நரிகளை விரட்டி,  நாதத்தைத் தரிசனம் செய்த   அடியாரை உரிய வினைகள் தளைப்படுத்த மாட்டாமையால் நின்று ஓலம் இட்டன.
நாத தரிசனம் செய்த ஞானியர் பராவத்தையில் வெளிப்படும் நாத சம்மியத்தால் நாதாந்தம் போய்த் துரியாதீதத்தை அடையும் போது ஞானேந்திரியங்கள் கன்மேந்திரியங்கள் அந்தக்கரணங்கள் எல்லாம் உடலை விட்டு ஓடி விடும்.  எனவே பராவத்தையில் உள்ள சீவன் வினைத் துய்ப்பின்றி இருக்கும்.
 
2277: சீவன் சிவன் போல் எங்கும் நிறைந்திருக்கும்:
மேற் சொன்ன வண்ணம் சாக்கிரத்தில் அதீதம் செய்யும் போது பரந்த பூத நாயகனான இறைவன் சீவனுடன் கலந்து நிற்பான்.  இறைவன் சீவனுடன் பொருந்தி விளங்கும் போது மாயையான இருளானது விலகி விடும்.  அப்போதே சீவனும் சிவனைப் போன்ற அகண்ட வடிவை அடைவான்.
 
2278: உலக நோக்கு உள்ளவரை மாயையின் தீமை அகலாது.
விழிப்பு நிலையில் உலக நோக்கில் மனம் விரியின் மாயா காரியமான உலகம் விளங்கும்.  அப்போது வன்மை  மிகுந்த மாயை இருந்த இடத்தில் இருந்து கொண்டு தன்னைச் சார்ந்தவரைப் பற்றிக் கொள்ளும்.   ஆனால் சீவன் சிவப்பேற்றை அடையும் வகையில் சிவத்தைப் பற்றி மேலே செல்லின் சிவமாகும். 
மாயையுடன் கூடிய துரியத்தில் மாயையின் தீமை அகலாது.
 
2279: ஆன்மாவை அறிந்து சிவ வியாபகத்தில் பொருந்தினால் மலம் நீங்கும்.
நீ ஆன்ம ஒளியை அறியாமல் உடல் அறிவுடன் முன்பு நின்றாய்.  பின்பு ஆன்ம ஒளியை அறிந்து துரியத்தில் நின்றாய்.  தன் இயல்பை அறிந்தும் சிவப் பரப்பில் பொருந்தவில்லை என்றால் பிறவியானது நீங்காது.  அவ்வாறு சிவத்தின் பரப்பில் அடங்கி விடுதலே மலமற்ற நிலையாகும்.
 
2280: பருவுடல் நுண்ணுடல் இரண்டும் நீங்கப் பெறுபவர்:
கருவின் எல்லைக்கு உட்பட்டது துரியத்தில் உள்ள நுண்ணிய வித்தியா தேகம். பிறப்புக்கு உரிய காரணம் அகற்றப்படாதவரை நுண்மையும் பருமையும் பொருந்திச் சீவர்கள் பிறவியில் அகப்பட்டு வருந்துவர். குருவின் உதவியால் சிவத்துடன்பொருந்தும் அருளைக் கூடியவர் நுண்மையான வித்தியா உடலையும் பருவுட
லையும் விட்டுச் சிவ தத்துவத்தில் சிவத்துடன் ஒன்றாவார்.
 
2281: ஆன்மாவின் உடலறிவும் வாசனா மலமும் நீங்கிய பின் பரமாதல்.
ஆன்மாவின் நின்மல சாக்கிரம் என்ற நனவு நிலையும் அதன் வழி ஏற்படும் கனவும் அதைக் கடந்து அதீதமான ஒளியில் அழுந்தித் தன்னை மறந்த நிலை உறக்கம் - சுழுத்தி - ஆகும். அந்தச் சுழுத்தியும் கடந்தவர் மேலான துரியத்தில் ஆன்ம தத்துவங்களைக் கை விட்டுப் பரம் என்ற பெயரை அடைவர்.
 
2282: சாக்கிரம் முதலிய நிலைகள் நீங்கிய போது ஆன்ம லாபம் உண்டாகும்.
பரை ஒளியான சாக்கிரமும், பரவி விரிந்த தூல நிலையான கெட்ட கனவும், உண்மையான சாந்தியில் ஏற்படும் பரை உறக்கமும் நீங்கின் சிவ துரியனாக உயிர் விளங்கும்.
 
2283: உலகை மறந்து உபசாந்தம் பெறுதலே உண்மைத் தவம்.
பராவத்தையில் அமையும் நின்மல சாக்கிரத்தின் பின்னான உலகம் காட்சிப்படாது ஒளியில் நிலை பெற்றுப் பொருந்தும் கனவும் அதன் பின் உண்டாகும் நின்மலசுழுத்தியில் சுட்டறிவும் நீங்கி உபசாந்தம் பொருந்துவதே துறவு நிலை.  அதன் பின் அந்த நிலையில் தங்கியிருப்பவனே சிவத்துடன் கலந்திருப்பவன்.
 
2284: சீவதுரியம் பராவத்தையில் தொடங்கிப் பராபரனோடு பொருந்தும் வரை.
துரியம் முதலாக பெருமை பெற்ற சிவதுரியம் இறுதியாக பத்து நிலைகளும் சீவனை விட்டு நீங்கும். அந்தக்கரணம் நான்கையும்  வித்தியாதத்துவம் ஏழையும்விட்டு மேலான சிவத்தின் நிறைவில் சீவன் அடங்கி  நின்றான்.
 
2285: அவத்தைகளைக் கடந்து நிற்பது சிவமே!
எல்லாவற்றிலும் மேலாக விளங்குபவன் சிவன்.  அதனை விட மேலானது சிவன் சத்தியின் பிரிவில்லாத நிலையான பரம். இது மேலானவற்றுக்கெல்லாம் மேலானது. அந்த இறைவனது நினைவாக விரிந்து காட்சி தந்த சுகத்தைச் சூக்குமமாகப் பெற்ற கனவு நிலையை விட்டுப் பொருந்தும் பிரமரந்திரம் சீவனுக்குப் பற்றுக்கோடாக உபசாந்தம் அளிக்கும்.  இதன் மேல் மேலான சிவம் உண்மைக் காட்சியாம்.
 
2286: மேல் மந்திரத்தின் விரிவு.  உயிர்களுக்குப் பற்றுக்கோடு.
ஆராய்வோமானால் உயிர்களுக்குப் பற்றுக் கோடாக அருவ நிலைகளான பரம்,சிவம், சத்தி, பரநாதம், பரவிந்து, சதாசிவமும், உருவ மூர்த்திகளான நான்முகன், திருமால், தேவர் தலைவனான உருத்திரன், மகேசன் எனப் பத்துப் பேர் உள்ளனர்.
 
2287: இறைவனது உண்மையை அறிந்து துதிக்க வேண்டும்.
மேலே சொல்லப்பட்ட திருமேனிகள் உயிருடன் ஒன்றியிருந்து இயங்குவதை உலகத்தார் அறிய மாட்டார்.  கடலால் சுழப்பட்ட எல்லா உலகங்களும் அழிந்துவிடுவதையும் இவர்கள் அறிய மாட்டார்கள்.  உடலோடு உயிர் பொருந்தியிருக்கும் இயல்பை அறிந்து இங்கு மேன்மை அடைய மாட்டாதார், மேலே கண்ட
திருமேனிகளைத் தியானிப்பது வலிமை கொண்டது ஆகுமோ?  ஆகாது.
 
2288: குருவின் இன்னுரையால் உண்மை உணர்ந்த போது இன்பம் உண்டாகும்.
குருவின் உபதேசத்தில் பின் விளங்கும் பெரிய தவத்தின் பயனாகிய பரவிந்து மண்டலத்தை உணர்ந்தால் கருணை வடிவினனான எம் தலைவன் பழமையான சுட்டறிவு நீங்கும் காலத்தில் என் அகண்ட கலப்பை உணரும்படி செய்து நான் இன்பம் அடைந்து உய்ந்தது என்னே!
 
2289: பராவத்தையில் அந்தக்கரணக் குரும்புகள் செயல்படா. எஞ்சியிருப்பது ஆன்ம ஒளி மட்டுமே.
பொன்னால் இயற்றப்பட்ட அணியைக் காணும் போது பொன்னைப் பற்றிய காட்சி இல்லை.  பொன்னின் தன்மையை நோக்கும் போது பொன்னால் செய்யப் பட்ட அணியின் காட்சி பொன்னில் மறைந்து விடும்.     அது போன்று அந்தக் கரணங்கள் பகிர்முகமாக வியாபகம் பெற்றிருந்த போது ஆன்மாவின் காட்சி இல்லை.  ஆன்மாவின் இய்லபை உணர்ந்த போது அந்தக் கரணங்களின் பரப்புஇயல்பு ஆன்மாவில் ஒடுங்கி விடும்.
 
2290: குருவின் அருளால் ஆன்ம ஒளியை அறிந்த போது  பார் முதல் பூதங்கள் ஒடுங்கும். மரத்தால் செய்யப்பட்ட யானைச் சிற்பத்தைப் பார்க்கும் போது மரத்தைப் பற்றியஉணர்வு அறிவு இருப்பதில்லை. மரத்தின் நிறங்களை உற்றுப் பார்க்கும் போது யானைக் காட்சி மரத்தில் மறைந்து விடுகின்றது. அதுபோல் பரத்தால் விளக்கம் பெற்ற பார் முதலிய பூதங்களைப் பார்க்கும் போது பரமானது உணர்வுக்கு      வருவதில்லை;  குருவருளால் பார்க்கும் போது பரமே காட்சி தந்து பார் முதலியபூதங்கள் பரத்தில் மறைந்துவிடும்.
 
2291: ஆன்மா 'நம' என்பனவற்றை விட்ட போது சிவா(சத்தி)வுடன் பொருந்தும்.
ஆன்மா 'நம' எனச் சுட்டி அறியும் பொருள்களை நோக்கில் 'சிவா' என்ற பரை விளங்காது. ஆன்மா முப்பத்தாறு தத்துவங்களைவக் கடந்து சுட்டி அறிதலை விட்டு அறிவான சிவத்தை நோக்கி மேல் சென்ற போது 'நம' என்பது மறைந்து 'சிவா' என்ற பரை விளங்கும்.  அதுவுங்கூட ஒரு சுட்டியறிகின்ற நிலையே! 
இதையும் விட்டு நிற்கில் சிவாய என ஆன்மா சிவசத்தியுடன் அடங்கி நின்று வீடு பேறடையும்.
 
2292: பராவத்தையில் சாக்கிரம் முதலிய ஐந்தும் பொருந்தும்.
பராவத்தையில் சாக்கிரம் முதலிய ஐந்தும் பின் கண்டவாறு ஆகும்.  பரையில் சொற் பிரபஞ்சத்துக்குக் காரணமான நாதமானது தோன்றும்.  கனவில் நாதம் ஒடுங்க, பரையில் நின்மல சுழுத்தியான உறக்கம் அமையும். நின்மல சுழுத்தியில்அழுந்தாது மேல் விளங்கும். மேல் விளங்கவே மேலான சிவதுரியம் உண்டாகும்.
 
2293: மலம் நீங்குமாறு.
பராவத்தை ஐந்தும் சகல நிலையில் சீவர்களுக்கு அருள் கொண்டு பந்தம் நீங்கச்  செய்து சுத்த அவத்தையில் பொருந்துமாறு செய்யும்.  இந்த நிலையில் பொருந்தும் பிரமரந்திரத் துடிப்பால் மனம்  பதியச் சிவத்தை அடைதற்குரிய விருப்பம் உண்டாக மாலைக் காலத்தில் நில ஒளியின் முன் இருள் நீங்குவது போன்று தலையின் முன்பு உள்ள வெண்மையான ஒளியில் ஐந்து மலங்களும் நீங்கி விடும்.
 
2294: எங்கும் செல்லவும் யாவற்றிலும் பொருந்தவும் ஆற்றலாஇப் பெறும்.
தூவா மாயையில் இருக்கும் புருடனுடன் சேர்ந்த ஆன்ம தத்துவங்கள் இருபத்தைந்தும் பொய்யாகும்படி மாமாயையில் உடலுக்குரிய ஆன்மன் கண்டு எல்லாப்பொருளும் அறியும்படியாய் அவைகளேயாய் அவற்றினின்று விலகி இருக்கவும் உய்தியைத் தரும் பராவத்தையே எண்ணிக் கொண்டிருத்தல் சுத்த நிலையாகும்.
 
2295: நாதனான சிவன் சீவனுடன் கலந்து விளங்குதல்.
ஞானத்தில் விளங்கும் நாதனான சிவபெருமான் ஆன்மாக்களிடம் அருள் உடையவனாயும், ஆன்மாக்கள் சிவனிடம் அன்புடையனவாயும் விளங்கின.  ஆன்மாக்களுடன் பிரிவின்றிக் கலந்து வடிவத்தில் பொருந்தியிருந்தும் ஆன்மாக்களின் சாக்கிரம் முதலிய உபாதிகளில் பொருந்தாமல் விளங்கினன். சீவர்களைப் பருவுடல், நுண்ணுடல் ஆகியவற்றின் பிடிப்பினின்று விடுவித்தாலும் சிவன் சீவர்களை விட்டு அகலாதவனாகவும் உள்ளான்.
 
9. முக்குண நிர்க்குணம்.     நிர்க்குணம்= குணம் இல்லாத தன்மை.
   சாத்துவிகம்=மனஅமைதி; தாமதம்=மனமயக்கம்;  இராசதம்=மனஎழுச்சி.
 
2296: அவத்தைகளில் பொருந்தியுள்ள குணங்கள்.
பல நிலைகளில் பொருந்திய உயிர்க்கு நனவினில் சாத்துவிக குணம் பொருந்தும்.ஐம்பொறிகளும் உட்கரணங்களும் செயற்படும்.  கனவில் அதற்குரிய இராசத குணம் பொருந்தும். ஐம்பொறிகள்
செயற்படாது.  ஆனால் உட்கரணங்கள் செயற்படும்.  சுழுத்தி எனும் உறக்கத்தில் தாமதகுணம் பொருந்தி கருவி கரணங்களை செயல்படாது வைத்திடும்.  குற்றம் இல்லாத துரிய எனும் பேர் உறக்க நிலையில்  ஐம்
பொறிகளும் உட்கரணங்களும் செயற்படாமல் அழிந்திடும்.
 
10. அண்டாதி பேதம்.  (அண்டத்தின் வகை)                                                                                       மனிதனின் உடம்பு தொம்பைக் கூடு போன்ற ஒளி மண்டலத்தால் சூழப்பட்டுள்ளது. பக்குவத்தைப் பெற்ற போது குஞ்சு முட்டையை உடைத்து வெளியே  செல்வதைப் போல் அண்ட கோசம் என்ற
பிரணவத்துக்குள் வளர்ந்து வரும் ஆன்மா பக்குவம் பெற்ற போது பிரணவத்தக் கடந்து போகின்றான்.
 
2297: இறைவனின் அண்டகோசத் தொடர்பு.
தேவர் தலைவன் சிவன் அண்டத்தை இருக்கையாகக் கொண்டு அதன் மேல் வீற்றிருக்கின்றான்.  பேரண்டத்தில் வேறு வேறாக உள்ள அண்ட கோசங்களில் அலை வீசுகின்ற கடல் ஏழிலும் உள்ள மணலின் அளவாக ஒளிக்கிரணங்களில் பொன் அணியில் பொன் செறிந்து ஒளிர்வது போல் சிவன் அண்ட கோசத்தில் உள்ள அணுக்களில் நிறைந்து ஒளிர்வான். வெளியே ஏழு கடல்கள் உள்ளவை போல் அகத்தே அண்ட கோசத்தில் ஏழுவகையான ஒளிகள் விளங்கும்.  யோகியரின் பக்குவத்திற்கேற்ப ஊதா முதல் பொன் நிறம் வரை விளங்கும்.
 
2298:ஆன்மா அண்ட கோசத்தின் மேல் சிவசத்தியுடன் ஆனந்தமாக விளங்கும்.
அண்ட கோசத்துக்குரிய ஆன்மா அண்டத்தை இருக்கையாகக் கொண்டு ஆனந்தமாகத் தத்துவம் கடந்து உள்ளான்.  அந்த ஆன்மனுக்கு உதவும் பொருட்டாகச்சத்தியானவள் சத்தியோசாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் எனஐந்தாக அண்டத்துள்ளே முப்பத்தாறு தத்துவங்களாகவும் அனந்த சத்தியாகவும் அண்டத்தின் எட்டுமடங்கு அளவு கொண்டதாகவும் விளங்குகின்றது.
 
11.பதினோராம் தானமும் அவத்தை எனக் காணல்.
   பதினோராம் தானம் என்பது துவாதச கலையில் பதினோராவது கலையாகிய "சமனை"  இச் சமனைக்கு உரிய இடம் தலைக்கு மேல் ஆகும்.  அவத்தை என்பது ஆன்மா பொருந்தியிருத்தைக் குறிக்கும்.  பதினோராம் தானமும் அவத்தை என்பது தலைக்கு மேல் ஆன்மா பொருந்தியிருத்தலைக் குறிக்கும்.
 
2299: சத்தி ஆன்மாக்களை உலகநோக்குடன் செலுத்தின் நாதம் விளங்காது.
ஐந்தாம் கலையான அர்த்த சந்திரனுக்குரிய இடமான புருவ நடு, விழிப்படைந்தால் அமுத மயமான ஒளி பெருகும்.  தலையில் ஏழாம் கலையான நிரோதினி கலையை உணர்ந்த போது ஆனந்தம் உண்டாகும்.  வீரிய இழப்பு ஏற்படாத நிலையில் அந்த வீரியமானது மாறிச் சிரசில் ஒளியையும் நாதத்தையும்  ஏற்படுத்
தும்.  இவ்வகையில் விந்து வெற்றி பெறுவதே பிரணவம் ஆகும்.  ஒன்பதாம் கலையான உன்மனையை விளங்கச் செய்யாமல் ஆன்மாவை உடல் பொறிகளின் வழிச் செலுத்தும் மூலாதாரச் சக்கரத்தில் உள்ள குண்டலினி சத்தியே கேட்டு அருள் செய்வாயாக.
 
2300: ஆன்மா துரியம் முதலிய நிலைகளில் பொருந்துவது.
புருடனுடன் அருவமான சிவதத்துவம் ஐந்துமாக ஆறும் விளங்கும் நிலையே ஆன்மாவுக்குத் துரியாதீதம் ஆகும்.  உறக்க நிலையில் புரியட்டக உடல் (நுண்உடல்) விரிந்து விளங்கும்.  நனவு கனவு நிலைகளில் அரிய வித்தியா தத்துவம் ஏழும் அந்தக் கரணம் நான்கும் பொருந்திய நிலையில் அமையும்.
 
2301: சிவ நினைவில் நின்றால் செயல்படாதவை.
வித்தியா தத்துவம் ஏழும் அந்தக்கரணம் நான்கும் ஆகப் பதினொரு தத்துவங்களும் உறவாகில் உடல் அமையும்.  இவற்றைச் செயல்படாமல் அழித்திட்டால் சிவம் விளங்கும்.  அந்தக்கரணங்களின் வழியாய்ச் சென்று அலையாது நிற்பதே முறையாகும் என நீ உணர்வாய்.  பின்பு சிவத்தின் வழி நிற்பதே உறுதி தரும்
என  எண்ணுதல் நன்மை தருவதாகும்.     சிவ நினைவில் நின்றால் வித்தியாதத்துவம் ஏழும் அந்தக்கரணம் நான்கும் ஆகப் பதினொன்றும் செயல்படா.
 
12. கலவு செலவு.  கலவு என்பது கலத்தல்; செலவு என்பது பிரிதல்.  கருவிகளுடன் கலத்தலும் அவற்றினின்று பிரிதலும் இங்குச் சொல்லப் பெறும்.
 
2302: ஆன்மா கருவி கரணங்களை விட்டு நீங்கி இருத்தலே தூய நிலையாகும்.
கெவலாவத்தையில் விளங்கிய ஆன்மா கருவி கரணங்களுடன் கலந்தால் அது சகலாவத்தையைப் பொருந்தும்.  கருவி கரணங்களை விட்ட போது அச்சகலம் பிரிதலைப் பொருந்தும்.  இந்த இர்ண்டையும் விட்டு ஆன்மா தனது அகண்ட வடிவத்தைப் பெறுதல் ஆகிய மூன்றாவதும் படருதலில்லாத தீமை நீங்கும்
சாக்கிராதீதத்தில் ஆன்மா பொருந்தியிருத்தலே தூய நிலையாகும்.
 
2303: சினத்தை விடுவதால் வரும் பயன்.
மூன்று குற்றங்களில் ஒன்றான சினத்தை முடிகின்ற வரையில் அடக்கிக் கொண்டிருங்கள்.  உள்ளத்தை இயன்ற வரை இறைவன் நினைவில் நிறுத்துங்கள்.  இரவும்பகலும் சிவ நினைவில் சிவ ஒளி பெற்றுத் துரிய சமாதி பொருந்தினால் கல்போல் உருதியான பாசமான இருள் அகலும்.  பரமாகாய மண்டல ஒளியில் இருப்பீர்கள்.
 
13. நின்மலாவத்தை.  மலம் இல்லாது ஒடுங்கிய நிலை.  ஆன்மா சிவத்தை அடைந்து தன்னையும் மறந்து வியாபகமாக இருக்கும் நிலை.
 
2304: பிரணவ உடல் பெற்று மரணம் இலாப் பெரு வாழ்வு வாழ்பவர்.
வானமான வாயில்லாக் கிணற்றுள் உறையும் பிரணவ வழிபாட்டாளரிடம் உறைப்புடன் தங்கும் நின்மல சாக்கிரம் முதலிய ஐந்து நிலைகள் உண்டு.  அந்நிலையில் ஆன்ம ஒளியுள் நழுவாது அறிவு ஒடுங்குமேல் அவர் பிரணவ உடலுடன் மேலும் ஓர் ஆயிரம் ஆண்டு உயிர் வாழ்வார்.
 
2305: எண்ணமிலா அன்பில் திளைப்பவர்.
காற்று தீ நீர் நிலம் வானம் என்ற ஐந்தையும் மகேசன் உருத்திரன் திருமால் நான்முகன் உருவச் சதாசிவர் ஆகியவர் முறையே இயக்குபவர் ஆவர்.  இவர்களை விட்டு இவர்களுக்கு மேல் உள்ள அருவச் சதாசிவம் விந்து நாதம் சத்தி சிவம் என்ற ஐந்தையும் பொருந்தும் ஆற்றல் உடையவர்க்கு இயமனும் இல்லை.றுதி தரும்உலகம் பற்றிய எண்ணம் இல்லாமல் திருவடிச் சார்பில் பொருந்தி விளங்குவர்.
 
2306:ஆன்மா சிவமாம் தன்மை அடைதல்:
ஆன்மாவே சிவகுமாரன் ஆனான் என்று பெரிய மறையானது கூறும் உண்மையை உலகவர் அறியவில்லை!  ஆனால் ஆன்மாவே சிவகுமாரன்.  நின்மல அவத்தையில் ஆன்மா சிவத்தன்மையை அடைந்து விடுவதால் ஆன்மாஎன்று ஒன்று இல்லை.  சிவமாகிய தந்தைக்குள்ள குணத்தை ஆன்மாவாகிய
மகன் பெற்றிருப்பதால் ஆன்மாவை சிவனுக்கு மகன் எனவும் சிவகுமாரன் எனவும் கூறலாம்.  அந்நிலையில் இருபத்தைந்து தத்துவங்களும் இல்லை.
 
2307: பேருறக்க நிலையில் ஆன்மா பேரின்பம் அடையும்:                                                                           ஒளி தோன்றுதல், உலக சிந்தனையற்று அதில் அழுந்துதல், ஐம்பொறிகள் ஓய்ந்து அடங்குதல்  என்ற
மூன்றும் முறையே நின்மல சாக்கிரம், நின்மல கனவு, நின்மல உறக்கத்தில் ஆகும்.  இவை பொருந்திய சித்துப் பொருளை ஆன்மா தனக்குப் பற்றுக் கோடாக விளங்கும் பேர் உறக்க நிலையில் மிக்க மங்கல
வடிவாய் அழியாத பேறு அடையும்.
 
2308: ஞான வடிவாய்ச் சென்று சிவகதியை அடையும்:
மாயேயம் ஆகிய எல்லாத் தத்துவங்களும் சீவ ஒளியில் அடங்கத் தத்துவங்களில்உள்ளும் வெளியுமாகிய சீவஒளி, தானாய், அது நன்மையைத் தரும் துரியநிலைமேற்கொண்டால் சுத்த ஆன்மா ஆகும்.  அப்போது அது தீமையைத் தரும் முப்பத்தாறு தத்துவங்களுடன் கூடாமல் தனித்து விடும். ஆன்மா ஞானவடிவாகி அடைவதற்கு அரிய சிவசத்தியைச் சென்றடையும்.
 
2309: கிரியை ஆன்மாவை விட்டு அகலாமல் நிற்றல்:
தீயிலே காய்ந்த இரும்பு தீயை விட்டு நீங்கினாலும் தீயினது தன்மை இரும்பில் இருக்கும். அதுபோல் பொருந்திய கரணங்கள் நீங்கி நிற்கும் நின்மலத்துரியத்தின் முன்னர் அவை நடத்திய கிரியா வாசனை ஆன்மாவை விட்டு நீங்காமல் இருக்கும்.
 
2310: நாதாந்தம் பொருந்திய போது ஆன்மா பரமாம் தன்மை அடையும்.
ஞானத்தை அளிப்பதான மறைக்கு ஆதியான நாதம் வெளிப்பட்டு வந்து பிறவற்றைப் புலப்படுத்தும் நனவு நிலையில் இந்த வகையான நாதத்தைக் கடந்துநாதாந்த நிலையில் பொருந்திய போது உண்டான மலமற்ற தன்மையே ஆன்மா பரமாகும் என்பதாம்.
 
2311: நாதத்தை மேற்கொண்டவர் சமாதி அடையத் திருவருள் துணையாகும்.
மேலே உரைத்தபடி நாத வெளிப்பாடு பெற்றுச் சகல நிலையில் நின்மலதுரியாதீதத்தில் பொருந்தினால் அத்தகையவரை விட்டுச் சிவத்தின் அருட்சத்தி நீங்குவது இல்லை.  அந்த நாதத்தையே தியானப் பொருளாகக் கொண்டு மனம் விரும்பும் உலக போகத்தின் வழிப் போகாது நாதாந்தத்தில் போய்ச் சமாதி
அடைந்து சிவத்துடன் பொருந்துவதற்குத் திருவருட்சத்தியே முதல் காரணம்.
 
2312: உமையொருபாகனே கேவல நிலையில் அர்த்த நாரியாய் உடனிருந்து அருள்செய்கிறான்.
சிவன் உமையொருபாகனாக விளங்குவதால், உலக உயிர்களை ஆணும் பெண்ணுமாக இருகூறு செய்தான். அர்த்தநாரியாய் ஒன்றாக இருக்கும் போது அவனேஎன்னை உலகக் கவர்ச்சியினின்று மீட்டான். அகண்ட வடிவம் ஆக்கினான். எங்கும் போகும் ஆற்றலை அளித்தான். மேலும் அவன்
என்னை விட்டு நீங்காதஅருட்கோலத்தில் தந்தையாய் இருந்தான்.
 
2313: உயிர்க்கூட்டம் பிறவிக்கு வாராமை:
காற்றாடியின் ஓலையும், கொள்ளிக் கட்டையின் வட்டமும், கடலின் அலையும், அழகு நிறைந்த தயிரின் மத்தும் போல், இறைவனால் இயக்கப்படும் உயிர் மலத்தால் சுழன்று, தத்தம் புண்ணிய பாவத்துக்கு ஏற்பப் பொருந்தும் சொர்க்கம் நரகம் கூடிப் பூமியை அடைந்து வருந்தி, இறைவன் அருளைப் பெற்றால் பிறப்பு இறப்பு நீங்கும்.
 
2314: சிவமாம் தன்னைப் பொருந்தின் மலம் முதலியவை அகலும்:
ஆன்மாவில் சிவம் என்னும் தன்மை வெளிப்பட்டால், பழமையான மலமும் அதனால் அமையும் பாச வேறுபாடும் அதனால் ஆன குணமும் மேலான ஆன்மா தன் உண்மை அறியாது அடையும் தடையும், கதிரவன் ஒளியின் முன் சந்திர ஒளி போன்று ஒளிராமல் அகன்று விடும்.
 
2315: நின்மலத் துரியத்தில் செயல் அற்றிருப்பவை:
நின்மலத் துரியத்தில், சீவ ஒளியில் நுட்ப நிலையில் தீயும் நீரும் காற்றும், சூரிய சந்திர கலைகளும், படைப்புத் தொழிலை ஆற்றும் பிரமனும், காக்கும் திருமாலும்அழிவைச் செய்யும் உருத்திரனும் தத்தம் செயல் ஒழிந்து அங்கே அடங்கி இருப்பர்.
 
2316: சீவ ஒளியில் நிலை பெற்றவர் முத்தியை அடைவர்:
ஐந்து பொறிகள் என்னும் யானைகளை அடக்கி அறிவாகிய ஞானத்தீயைத் தூண்டி, காணும் ஒளியுள் புகுந்து ஊனால் ஆன உடலைச் சோதி வடிவாகக் காண்பவர்க்குச் சிவவுலகம் ஏற வழி மிக எளிதாகும்.
 
2317: தலையின் மீது நாதம் விளங்குமாறு:
சந்திரகலையில் இயக்கம் பெறும் பிராணனும் அது போல் போவதால் உண்டாகும் சிறுபறை ஒலியும், ஒலிக்கின்ற வேத ஆகமங்களால் உண்டாகும் ஒலியும், என்இடைகலை நாடியில் சகஸ்ரதளத்தில் நான் கண்டு கொண்டேன்.
விளக்கம்: மூச்சின் இயக்கம் மேல் முகமான போது சகஸ்ரதளத்தைச் சென்று
மோதும்.  இதுவே நாதம் என்பர். நிராதாரத்தில் விளங்கும் சந்திர மண்டலத்தில் மனம் பதிந்த போது, மனத்தின்ஓட்டம் நின்று மூச்சு நின்று விடும்.
 
2318: சிவஞானத்தைப் பெற்றுத் தன் உண்மை உணர்ந்தால் பிறவி நீங்கும்:
முன் பிறவியில் ஞானத்தால் பயிற்சி செய்த நல்வினை காரணமாக இப்போது உண்டாகிய பிறவியில் அந்த அறிவு ஒளி பெற்று விளங்கில்,  தன் இயல்பான அண்ட வடிவை அதாவது தன்னை அகண்ட வடிவினனாக அறிய முடியும்.  இவ்வாறு தன்னை அகண்ட வடிவினனாக அறிவதே தன்னை அறிவதாகும்.  அங்ஙனமின்றிப் பிற அறிவைப் பெற்றால் பேய் போல் சொர்க்க நரகங்களிலே அலைந்து பின்பு பிறவி எடுக்க வேண்டியதாகிவிடும்.
 
2319: நின்மலத் துரியத்தில் செயலற்று இருப்பவர்க்கு சிவனருள் கிட்டும்:
நின்மலத் துரியத்தில் ஆன்மா உட்கருவிகளின் குறும்பு இல்லாமல் இருந்தால் சிவானந்தம் ஏற்படும். இந்நிலை கைவரப் பெற்றவர் பிரசாதம் முதலிய சிவயோகநெறியைச் செய்ய மாட்டார்.  இவ்விதம் செயல் அறுதலைப் பெற்றவர் உலகத்துடனும் சேர மாட்டார்.   இவ்வாறு செயல் இல்லாமல் வாளா இருப்பவர்க்கே சிவனருள் கிட்டும்.
 
2320: ஒளியான திருமேனியில் நீடூழி வாழ்வார்:
ஆன்மா தான் சிவமாம் தன்மை எய்திச் சமாதியிலிருக்கையில் ஆன்மாவைப் பிணித்துள்ள மலம் நீங்கும்.  அதன் கட்டுப்பட்ட இயல்பும் நீங்கும்.  பிறப்பைத் தரும் புரியட்டக உடலையும் ஒழித்துச் சிவத்துடன் ஒன்றுபவர்க்கு மேலான நிலத்தில் குற்றமற்ற ஒளியுடல் அழியாதிருக்கும்.
 
2321:நாத சத்தியே  கிரியையிலும் ஞானத்திலும் செலுத்திப் பெத்த முத்திகளில் உதவும்.
ஆன்மாவை விட்டு நீங்காத சிவத்தின் அருட்சத்திப் பதிவால் நாதம் ஏற்படும்.  அந்நிலையில் ஆன்மாவை விட்டு நீங்காத சிவத்தின் அருட்சத்திப் பதிவால் நாதம் ஏற்படும்.  அந்நிலையில் ஆன்மாவை விட்டு நீங்காத இருளும் ஒளியும் விளங்க முறையே அவ்வான்மாவும் நீங்காத கிரியையிலும் ஞானத்திலும் தங்கும். தங்கி, மாளாத பெத்த நிலையிலும் முத்தி நிலையிலும் அருட்சத்தியுடன் தோய்ந்து விளங்கும்.
 
2322:பெத்தத்திலும்முத்தியிலும் சூழ்ந்துவரும்சத்தியே ஆன்மஒளிக்கு ஒளியாகும்.
பெத்தத்திலும் முத்தியிலும் தொடர்ந்து உதவும் சத்தியை உயிரானது முறையே மயங்கியும் விளங்கியும் உணரும்.    பெத்தர்கள் மயங்கியிருப்பதால் அருட்சத்தியை உணர முடியாது. முத்தர்கள் தெளிவுடன் இருப்பதால் சத்தியை உணரமுடியும்.  அவ்வாறு அந்த உயிர்களுக்குச் சத்தியால் அளிக்கப்படும் அறிவே ஆன்மசத்திக்கு நல்ல துணையாகும். அப்போது அந்தச் சத்தியே நிலையில்லாத சீவர்களின் ஒளிக்கு ஒளியைத் தருவதாகும்.
 
2323: அறிவு வடிவம் குருவருளால் உண்டாவதாகும்.
முப்பத்தாறு தத்துவங்கள் அறிவற்றவையாம்.  அவற்றுடன் பொருந்தி அவையாகவே இருந்த போது நான் எல்லாவற்றையும் அறியும் அறிவு வடிவம் என்பதை அறியாமல் இருந்தேன். சிவத்தை நாடினபோது 'நீ அறிவின்வடிவம். சடம்அன்று' என்பதை நாத சத்தி வழியாக நந்தி எனக்கு அறிவித்தனன். பின்பு  நான் வான்- மயமாய் என்னையும் தத்துவங்களையும் அறிவேன் ஆயினேன்.
 
2324: நின்மலாவத்தையில் ஆன்ம ஞானம் பெற்றவர் சிவசத்தியை உடலில் காண்பர்.
சிவன், என்னை அவனாகச் செய்த ஞானத்தலைவன்.  வானவர் கூட்டத்துக்கு முதன்மையானவன்.  மாட்சிமை பொருந்திய சிவந்த ஒளிக் கூட்டமானவன்.   இத்தகைய சிவனையும் குற்றம் இல்லாத மெய்ஞ்ஞானத்தில் அருட்சத்தியான நாதசத்தியையும் உடல்வடிவு இல்லாதவளுமான சத்தியையும் எனது உடலில் நான் கண்டேன்.
 
2325: சிவானந்தம் உண்டாதல்:
சத்தியின் அருள் வந்த பின் பொருந்தும் ஒளி என்பதும், சத்தியின் அருள் இல்லாத போது விளங்கும் இருள் என்பதும், பரைஎன்பதும், பரையுள் விளங்கும்அருளேயாகும்.  இந்த ஒளியும் இருளும் ஆன்மாவின் அண்டகோசத்தில் விளங்குபவை. ஆன்ம அறிவு கழன்ற போது அண்ட கோசம் விரிந்து விளங்கும். 
சுட்டறிவு மறையும். அந்த அருளைச் செய்யும் அருட்சத்தியான  நாத சத்தி விளைந்து  சிவானந்தம் உண்டாகும்.
 
2326: அருட்சத்தியில் திளைத்திருக்கும் ஆன்மாவின் சுட்டறிவு நீங்கும்.அகண்ட வியாபகம் உண்டாகும்.
சிவத்தின் அருட்சத்தியில் ஆன்மா தன்வயம் அற்று அழுந்தினால் ஆனந்தம் ஏற்படும்.  உடம்பைக் கடந்து சமாதி செய்து உணர்வு மயமாய் உள்ளுணர்வு மயமாய் உள்ளுணர்வில் கலந்து அகண்டமாய் விளங்கும் அறிவைப் பெற்றால் உடலின் தலைவனான ஆன்மாவின் சுட்டறிவு முடிந்து விடும்.     இது "நீ அது ஆகின்றாய்! எனும் பொருள் கொண்ட தத்துவ மசி " என்ற பெரு வாக்கியத்தின் பொருள் ஆகும்.
 
2327: யாருக்கு உபதேசம் செய்யலாம்:
ஆன்ம ஞானம் இல்லாது தாமத குணம் பொருந்தியவர்களுக்கு ஞானோபதேசம் செய்ய வேண்டா.  முன் பிறவி காரணமாக இயல்பாகவே ஞானம் பெற்றவர்க்கும்ஞானோபதேசம் செய்ய வேண்டா.  ஆன்ம ஞானத்தைக் கல்வியினால் அறிந்தும்அனுபவம் கூடாமல் அறியாமையில் உள்ளவர்க்கே ஞானோபதேசம் செய்ய வேண்டும்.  அவர்கள் அனுபவம் பெற்றுத் தமது உண்மை வடிவை அறிவார்.
 
2328: ஆன்மா சிவத்துடன் பொருந்தி தூய்மை அடையும்.
தான் எனப்படும் ஆன்மா,  சத்து, அசத்து, சதசத்து என்னும் மூன்று பொருள்களுடன் கூடி, முறையே அறிவுப் பொருளாகவும், அறிவற்ற பொருளாகவும் பேரறிவுப் பொருளாகவும் விளங்கும் தன்மை உடையது.
 
2329: அருட்சத்திப் பதிவால் ஆன்மா தன்னை உணர்ந்து சிவமாகும்.
அருட்சத்தி பதியுமுன் ஆன்மா முப்பத்தாறு தத்துவ வடிவாக அசத்தாக விளங்கியது.  அப்போது ஆன்மா தனது உண்மை வடிவத்தை அறியாது. தான் அறிவற்றவன் அல்லன்.  தன் அறிவு அறிவும் அறியாமையும் உடையது என்பதை ஆன்மா தனது உண்மை வடிவத்தை அறிந்த பின் அறிவான்.  அருட்சத்திப்
பதிந்த பின் ஆன்மா தத்துவங்களை அசத்து எனவும் தான் வேறாய் அறிபவன் என்பதை உணர்ந்து தலைவனான சிவத்துடன் பொருந்திப் பேரின்பத்தை அடையும்.
 
2330: தத்துவ ஞானத்தில் தலைப்பட்டவர் சிவப்பேறு அடைவர்:
முப்பத்தாறு தத்துவங்களையும் அவை செயல்படும் தன்மைகளையும் அறிந்து வாழ்பவர்க்கே தத்துவ ஞானம் வாழ்க்கையில் அமைந்து விளங்கும்.  அங்ஙனம் தத்துவ ஞானம் பெற்று ஆன்மா சிவமானால் தத்துவ ஞானத்தால் சிவானந்தம் உண்டாகும்.
 
2331: ஆன்மா தன் உண்மையை அறிந்தால் சிவமாகும்! பிறவி அறும்!
ஆன்மா தனது பரந்த நிலையை உணர்ந்து அதனின்று விடுபடச் சிவத்தை நினைந்து சிவமாகும் பேற்றை அடைந்தால் -  ஆன்மாவிடம் நின்ற மலமும் அதனால் ஆன குணமும் அழியும்.  மேல் வரும் பிறவி நீங்கும்.  பின் அந்த ஆன்மா நல்ல முத்தியும்சன்மார்க்க ஞானமும் நன்மையைத் தரும் ஞானத்தின் அடையாளமும் பொருந்தும்.
 
2332: சீவனிடம் பொருந்தும்போது தம் செயலற்று ஞானம் உண்டாகும்:
சிவத்தின் திருமேனி ஞானம் ஆகும். கிரியையில் அவன் நடு அங்கமாகவுள்ள இதயத்தில் உறைபவனாக இருக்கின்றான்.  உயிரின் இச்சையில் தனது இச்சையைப் பொருத்தி அந்த மேலான சிவம் உயிர்களிடம் ஒளியில் பொருந்திப் படைப்பு முதலியஐந்தொழிலுக்கும் காரணமாய் உள்ளதால்,  பிரணவ யோகம் செய்தவர் அவன் அறிவுடன் பொருந்தித் தம் இச்சை கிரியைகளை விட்டு சுட்டு விரல் பெருவிரலுடன்
இணைந்து  மற்ற மூன்று விரல்களைப் பிரித்துக் காட்டும் (சின் முத்திரையைப்) ஞான முத்திரையைப் பெற்றனர்.
 
2333: சீவர்கள் செயல் அனைத்தும் சிவன் செயலாம்:
உயிர்க்கு உரிய அறிவு சத்தியப் பொருள் உடையது.  உயிருக்கு அபிமானம் அதன்விருப்பம் ஆகும். உயிரின் செயல் உயிருடன் பிணிக்கப்பட்ட மாயையின் அளவாகும்.  இவை எல்லாம் பரவிந்துவில் நுண்மையாய் இலங்குவன.  இவற்றை உயிருடன் புணர்த்தியவன் யாவற்றையும் புணர்த்தும் சிவமேயாகும்.  அதலால் உயிரின் செயல் அவற்றின் செயலாகாது; உள்ளத்தில் உள்ள சிவத்தின் செயலாகும்.
 
2334: சிவன் வியாபகமான சாந்தியாதீத கலையில் விளங்கும் சிவன் ஆவான்:
முன்னம் சிவமாம் தன்மை அடைந்து சீவரின் இச்சா ஞானச் செயல்கள் நீங்காத சுத்தாசுத்த மாயை செயல்களால் உண்டாவன.  அச்சீவன் பழியற்ற காரண காரிய தத்துவங்கள் பாழாக நிலை பேறான வியாபகமான சாந்தியாதீதக் கலைகள் விளங்குபவனான சிவம் ஆவான்.
 
2335: சிவன் யாவற்றிலும் கலந்தும் வேறாயும் உடனாயும் உள்ளான்:
சிவன், நிலையற்ற காரியப்பொருளான மாயா வடிவங்களிலும் நிலையான கரணமான பரவிந்துவிலும்  யாவற்றிலும்  கலந்து, தானாகி, பொருள் தன்மையால் இல்லதும் உள்ளதும் அப்பொருள்களின் வேறாயும் உள்ளவன்.  அப்பெருமானை வாக்குக்கு,  அப்பாலுக்கு அப்பாலாய் உள்ளவன் என்று விரைவில் சிவஞானத்தால் உணரின் அவன் உயிர்க்கு உயிராய்த் திகழ்பவன் ஆவான்.  
 
2336: சத்தியின் அருட்செயல்:
உயிர்களிடம் விருப்பத்தை உண்டாக்கி மாயையை இடமாய்ப் பொருந்தும்படி செய்யும் சத்தி, ஞானமான போது உயிரின் விருப்பத்தை அழித்து விளங்கும்.  உயிர்களுக்கு இறைவனிடம் அன்பு ஏற்படச் செய்து உடனாய் இருத்தலால் உயிரானது உலக விருப்பங்களை அழித்து மேலான சிவபதம் சேரும்.
 
2337: சிவசத்தியால் தன் உண்மை உணர்வர்:
உயிர் விருப்பத்தை வாட்டிச் சிவமாம் பேற்றைப் பெற்றவர் உயிர்க்குற்றங்களுக்கு உரிய  ஐந்து மலங்களையும் நீக்கியவர் ஆவர்.  அவ்வாறு சிவத்துடன் ஒன்றுதல் இல்லாதவர் உயிர்க்குற்றமான ஐந்து மலக் குற்றங்களையு பொருந்தி இருள் உடையவராய் இருப்பர்.  இத்தன்மையுடையவர் புவியிலும் சொர்க்கத்திலும் நரகத்திலும் உழல்பவராய் இருப்பர்.  இத்தன்மையுடையவர் புவியிலும் சொர்க்கத்திலும்  நரகத்திலும் உழல்பவராக உள்ளனர்.  இப்படிப் பிறந்து உழல்வது சிவசத்தியால் என்பதையாரும் உணர்வதில்லை.
 
2338: இறையருளால் சீவர்கள் இன்பங்களை அனுபவித்து ஞானத்தை அடைந்து இன்பம் அடைவர்:
சுத்த மாயை அசுத்த மாயைகளைப் பொருந்தி அதனதன் இயல்புக்கு ஏற்பப் போகபோக்கியங்களை சீவர்கள் எய்தினர்.  பெருமையான ஞான சத்தியை அடைந்து ஞானத்தைப் பெற்றனர். புவி சத்தியின் கவர்ச்சியில் ஈடுபட்டு அதனால் உண்டான நன்மைகளை அடைந்தனர்.  இவ்வாறு பொருந்துவது சிவத்தின் அருளால் ஆகும்.
 
2339:திருவடிஞானம் பெற்றவர் சொர்க்கநரக விருப்பின்றி மலம் நீங்கிச் சிவம் ஆவர்.
திருவடி ஞானத்தால் திருந்திய உயிர்கள் இன்பம் அல்லாத நரகத்தையும்,  இன்பமயமான சொர்க்கத்தையும் விட்டனர்.  அவர் தம்மோடு பொருந்தியுள்ள மலக் கூட்டத்தையும் விட்டனர். அவர் பயனற்ற பிறவியையும் விட்டு சிவமாய் ஆவர்.
 
2340: அருளே சீவர்க்கு நன்மையும் தீமையும் அமைப்பது:
நல்ல அறிவு இல்லாதவர் 'எது பயனற்றது, எது பயனுள்ளது' என்பனவற்றை அறியமாட்டார்.  அறிவுடையவர் பயனற்றதையும் பயன் உள்ளதையும் பிரித்து உணர்வார்.   அவ்வாறு பிரித்து அறிவால் தெளிந்தால் சீவர்களுக்கு உண்டான கேடும் நன்மையும் அவனது அருளால் ஆகும் என்று உணர்வர்.
 
2341: அருட்சத்தியின் இயல்பு:
தீயும் அதனை விட்டு அகலாத வெம்மையும் போல் அருள் என்ற சிவசத்தி அவன் பொருளாய்த் தான் ஞானமாய்ப் பொருந்தும்.  ஆன்மாவில் சிவசத்தி இருளாகவும் ஒளியாகவும் பிரிந்து பின் மும்மலங்களாக விரியும்.  சிவானந்தத்தை விளைக்கும் சத்தியே சிவம் ஆகும்.
 
2342: சத்தியின் பதிவால் சீவர் ஒளி பெறுவர்:
சூரியன் தோன்ற வளரும் தாமரை முதலிய மலர்கள் பக்குவ வேறுபாட்டுக்கு ஏற்ப அவ்வவற்றின் இயல்பு மாறுபட்டு சூரியனது ஒளிக்கதிர்களால் அரும்பாகவும் போதாகவும் மலராகவும் விரியும். ஆனால் அவற்றின் புணர்ச்சி புலப்படாது.  ஆனால்  மலர்ந்த பின்னர் விளங்கும். அதைப் போன்று அருட்செயலும் புலப்படாது ஆனால் முழுமை அமைந்த பின்பு விளங்கும்.
 
2343: பேதம் முதலியவை இச்சா சத்தியினால்:
கண்களில் காணப்படும் உலகை வேற்றுமையாகவும், ஒற்றுமையாகவும், வேற்றுமையும்  ஒற்றுமை யாகவும் காணும் இயல்பும்,  இயற்கை அறிவும்,  கல்வி கேள்விகளால் ஆன அறிவும், ஞானமும், நாதமும், நாதத்தைத் தொடர்ந்து ஆதிநாதம் என்ற நாதாந்த  நிலை பெறுதலும் ஆன்மாவுக்கு அருளில் அமைந்த இச்சா சத்தியின் கருணையாகும்.
 
2344: சீவர்களுக்கு ஞானம் உண்டாக அருட்சத்தி உடனிருந்து உதவுதல்:
யானையினது வடிவைப் போல் ஒரு வடிவம் செய்து அதனுள் இரு மனிதர் புகுந்து ஆட்டும் செயலைப் போன்று பரந்த ஐம்பூதங்களைக் கொண்டு சீவர்களை ஆடச் செய்து, படைப்பு முதலிய தொழில்களால் புவி சொர்க்கம் நரகம் முதலியவற்றுடன் கூடச் செய்து, ஞானம் உண்டாகச் செய்து பூத உடலில் உயிரை நிற்கவைப்பது  சிவனருட்சத்தியாலேயே ஆகும்.
 
2345: தத்துவங்களைக் கடந்த ஆன்மா வீட்டின்பம் அடைவான்:
முப்பத்தாறு தத்துவங்களையும் விட்டுத் தன் உண்மையை அறிந்த ஆன்மா, எல்லா உயிர்களிடம் போக வல்லவனாயும் எல்லா உயிர்களையும் தன்னிடத்தே காட்டுபவனாயும், அவற்றின் வேறாயும் பரவெளியில் புகுந்து வீட்டை அடைவான்.    முன்பு   இருந்த மயக்கம் தேறித் தெளிவுற்று அருட் சத்தி பதியின் சிவம் ஆவான்.
 
2346: திருவடி இன்பத்தை அருளால் பெறமுடியும்:
தற்போதத்தால் அடைவதற்குரிய அரிய திருவடியை முற்பிறவியின் தொடர்பாக இப்பிறவியில் அருள்கூட்ட உணர்ந்து அந்த நெறியிலே போய் மூலாதாரத்திலிருந்து மேல்ஏறும் வாசி என்ற குதிரையில் ஏறி ஆறு ஆதாரங்கள் கடந்து நிராதாரம் போய்ச்சிவனுடன் அடைதல் கூடும்.
 
2347: சிவத்தைச் சார்ந்தவர் சாரணர் முதலியவர்:                                                                         சிவபெருமானைச் சார்ந்தவர்கள் சாரணர்கள் சித்தர்கள் சமாதி பொருந்தியவர்கள்.   
உண்மைச் சிவஞானத்தை உணர்ந்தவரும் சார்ந்தவரே!  சிவத்திடம் அன்பு பூண்டு சிவானந்தத்தை அனுபவிப்பவர்களும் சார்ந்தவரே!     நாதமாகிய அருளில் திகழ்பவரும் சார்ந்தவரே!
 
2348: சுத்த கேவல நிலையில் உள்ளவர்:
சகலர் ஆன்மாவான தான் என்றும் சிவமாகிய அவன் என்றும் ஆக உண்மைப் பொருள் இரண்டு என்று சொல்வார்.  கேவலத்தில் இருப்பவர் தான் என்றும் அவன் என்றும் இல்லாமல் ஒன்றானதன்மையை  உணர்வார்.  அவர் தன்னைச்  சிவத்துக்கு வேறான பொருள் என நினைக்க மாட்டார்.  அவ்வாறு ஆன்மா தற்போதம் கெட்டுச் சிவமேயாகத் தத்துவத் தூய்மை ஆகும்.
 
2349: ஆன்மா சிவத்தை உணருமாறு:
தத்துவத் தூய்மையுடைய ஆன்மா தன் உண்மையில் தன் தலைவனான சிவத்தை அறிய அது வளர்ந்து தோன்றும்.  அங்ஙனம் தன்னிடத்தே அதன் உண்மையை அறிந்து பொருந்தின் தன்னிடத்தே தனது தலைவனையும் அடைதற்கு அரிதாகும்.
 
2350: சிவனருள் கிட்டவில்லையே என்று ஏங்காமல் நெறியில் நிற்க வேண்டும்.
சிவனருள் கிட்டவில்லையே என்று நீ கவலை கொள்ளாதே!  ஞான நெறியில் நின்று திருவருளைப் பெறும் வாய்ப்பு கிடைத்த பின்பு சூரியன் சந்திரன் கலை அன்று நடத்தியவன் என் உள்ளத்தில் மிகப் பெரிய சந்திர மண்டல ஒளியாக விளங்குவது போல் உன்னிடமும் விளங்கும்.
 
2351: புலப்படா வண்ணம் மறைந்துள்ளான்:
மண் என்னும் ஒரு பொருள் பானை சட்டி முதலிய பல பண்டங்களாக    ஆகின்றது.  அது போல் இறைவன் ஒருவனே எல்லா உயிர் இனங்களிலும் நிறைந்துள்ளான்.  கண் ஒரு பொருளாக இருந்தும் உடல் பல பொருள்களைக் கண்டும் அதனை அவை காணா.  அது போல் உயிர்களின் தலைவனான இறைவனும் தான் எல்லாவற்றையும் அறிந்தும் தான் அவற்றால் அறியப்படாதவனாயும் இருக்கின்றான்.
 
2352: மனம் குவிபவரின் வேதனையைச் சிவன் போக்கியருள்வான் :
இறைவன் இந்த ஏழு உலகங்களையும் உயிர்க்கு உயிராய் நின்று காத்து வருகின்றான். மனம் குவிந்த மெய்ஞ்ஞானியர் இந்த உண்மையை அறிந்துஉயிர்க்கு உயிராய் எடுத்துச் சொல்வர். சிவபெருமானைப் பற்றி எண்ணாதவர் அவனை அறிய மாட்டாது புலம்புகின்றனர்.  மன ஒருமைப்பாடு இல்லாதவர் சிவனை அடைய முடியாது.
 
2353: அம்சம் ஆகுங்கள் :
உயிர்க்கு உயிராக இருக்கும் சிவத்தைத் அதாவது சிவம் தன்னிடம் இருப்பதை பரவிந்துமண்டலம் வெளிப்படாத போது சீவர்கள் அறிய மாட்டார். இவ்வாறு சிவம் தன்னிடம் இருப்பதை  அறியாதவர் உடம்புடன் கூடிப் பல பிறப்பெடுப்பர்.   சிவன் வேறு தாம் வேறு என்று நினைக்காமல் சிவத்துடன் பிரிவின்றி இறைவனுடன் நில்லுங்கள்.     அவ்வாறு கூடிச் சுட்டி அறிதல் இல்லாது அதுவாகவே  இருந்து அம்சம் ஆகுவீர்.
 
2354: இறவா நிலை எய்துவர்:
துரிய நிலையில் உள்ளவர் தேன் உண்ட வண்டைப் போல் ஒளியில் பொருந்தி நிற்பர். சிவானந்தத்தை அடைவது எது? உடம்போ? உயிரோ?இவ்விரண்டில் எது?  வான் ரூபினியான சத்தியுடன் பொருந்தி இவை ஒன்றும் அறியாது இருக்கத் - "தாம் மிகவும் அறிகின்றோம்" எனக்கூறும் மக்கள் மேலும் மேலும்உண்டாகின்ற பிறப்பு இறப்புகளில் பொருந்தி அவற்றை நீக்க அறியமாட்டார்.
 
14. அறிவுதயம்.
(ஆன்மாவுக்குச் சுட்டறிவு இன்றி எல்லாமும் அறியும் அறிவு  உள்ளது) :
 
2355:  ஆன்மா சிவ வடிவமாக இருக்கும்:
ஆன்மாவான தன்னை அறிவுரு என அறிந்தால் கருவி கரணங்களுடன் பொருந்தி மயங்க வேண்டிய தீமை வராது .  தான் அறிவுரு என்பதை அறியாமல் ஆன்மா தனது அஞ்ஞானத்தால் கருவி கரணங்களுடன்
பொருந்திப் பிறவியில் சிக்கி வருந்துகின்றது.  கருவி கரணம் இல்லாமல் தானே எல்லாவற்றையும் அறிய வல்ல ஒளி வடிவு என்ற அறிவை ஞான சாதனத்தால் அறிந்த பின்,  தன்னை உலகவர் வணங்கும்படியான சிவவடிவமாகத் தான் இருந்தான்.
 
2356: அறிவு பெற்ற ஆன்மா சிவசத்தியினிடையே விளங்கும்:
"அறிவு பெற்ற ஆன்மாவை" அவ்விடத்து வலிமையும் பெருமையும் மிக்க பிரமன், திருமால் முதலான தேவர்கள் அனைவரும் வணங்க, அரியணையில் சிவபெருமானே வீற்றிருக்கின்றான் எனக் கருதி, சங்கால் ஆன வளையலும் கால் சிலம்பும் ஓசை எழுப்ப, மிக்க கூந்தலை உடைய பராசத்தியும் தேவர்க்கும் பிறர்க்கும் அருளுவாயாக என்று சொன்னாள்.
 
2357: தான் அறிவு மயம் என்பதை ஆன்மா உணர்தல் :
எதையும் கருவி கரணம் இல்லாமல் அறியும் ஆற்றல் எனக்கு உண்டு என்பதை நான் அறியாதிருந்தேன். இத்தகைய என்னை என்னுடைய  இயல்பான வடிவம் அறிவு தவிர வேறு இல்லை என்று அவன் அருளால் உணர்த்தினான். நான் அறிவு வடிவானவன் என்பதை அவனது சத்தியால் உணர்ந்து நான் கருவி கரணங்களை விட்டு அறிவாகவே இருந்தேன்.
 
2358: சத்தி உணர்த்த ஆன்மா தான் அறிவு மயம் என்பதை உணரும் :
அறிவு, வான மண்டலத்தில் நுண்மையாய் உள்ளது.  ஆதலால் அது எவ்விதமான தூல மாறுதலாலும் பாதிக்கப் படுவது இல்லை.  அதனால் அதற்கு வளர்ச்சியும் இல்லை.  ஆன்மா என்ற அறிவுப் பொருளுக்குப் பேரறிவான சிவத்தையே அல்லாமல் வேறே ஆதாரம் இல்லை.  ஆதலால் அருவுருவமான ஆன்மா பேரறிவான சிவத்தை அறிய முற்படுகின்றது என்று வேத முடிவுகளான உபநிடதங்கள் கூறுகின்றன.
 
2359: ஆன்மா சிவத்தை அறியும் முறை:
ஆதார கமலங்களில் சிறந்த அனாகதச் சக்கரத்தின் மீது பரந்த விசுத்திச் சக்கரத்தில் பதினாறு இதழ்கள் கண்டத்தில் உள்ளன.   தூய்மையான ஆன்ம அறிவு சிவானந்தம் பொருந்தி விசுத்தி சக்கரத்தைக் கடந்து
பேரறிவாய் அதனுடன் கலந்து விளங்கும். 
                                                                                                                                                                     2360: சிவனை நினந்தவர் மேலான பதம் பெறுவர்:
சிவ சிந்தனையில் இடைவிடாமல் நிற்பவரிடம் வந்து - சுத்த மாயா காரியமான நாத தத்துவத்தில் வெளிப்படும் சிவனை நினைந்தேன்.  அந்த முதல்வனும் பொன்னொளியில் சிறந்து விளங்கினான்.  அப்பெருமானின் நிகர் அற்ற புகழையுடைய பொன்னார் மேனியைக் கூடி நின்றேன்.  அவனும் நீபெரியவன் என்று அருள் கூர்ந்தான்.
 
2361: சிவனிடத்து அன்பு செய்து அகண்ட வியாபகம் பெற வேண்டும் :
ஆன்ம அறிவு என்பது பேரறிவின் வயமானது என்று ஊர்ந்து அதனிடம்  அன்புகாட்டுங்கள்.  அப்போது அகண்டாகாரப் பேரறிவுப் பொருளான சிவமும் உங்கள்  அறிவில் பொருந்துவான்.  உங்களது அறிவு அவனது அறிவாக அறிந்தால் அணிமா முதலிய சித்திகள் யாவும் கை கூடப் பெறும்.  அப்போது சிவன் உங்கள் அறிவைத் தன் அறிவாகக் கொண்டவன் என்பது புலனாகும்.
 
2362: உலக ஞானம் விளங்கச் சிவஞானம் தேவை:
உலகத்தவர் அறிவு அறிவு என்று ஓயாமல் கூறுகின்றனர்.  அவர்கள் சொல்லும் அறிவு பாச அறிவாகிய அறியாமை என்பதை எவரும் அறியவில்லை.  பாசஅறிவைக் கடந்து சிவ ஞானமாகில் உயிர்களிடமுள்ள பாச அறிவு என்ன இலக்கணம் உடையது என்பது புலனாகும்.
 
2363: அறிவு அறியாமை நீங்கியவனே பேரறிவில் நீக்கமற நிற்பான்:
அறிவையும் அறியாமையையும் நீங்கிய சீவனே ஞானேந்திரியங்களைக் கடந்து அகண்டத்தில் ஒன்றான நிலையில், அவ்வறிவாய் அவ்வறிவுள் அடங்குபவனாக சிவ அறிவில் நீக்கம் இல்லாமல் நிறைந்தவன்  ஆவான்.
 
2364: ஞானியரின் உள்ளமே சிவன் வீற்றிருக்கும் கோயில்:
ஞானியரின் உள்ளமே பரந்த உலகம்.    அவ்வுள்ளமே செயற்கரிய தவம் நிறையப் பெற்றது.  அவர்களின் உள்ளத்தைக்  கோயிலாகக் கொண்டு ஆதி மூர்த்தி சிவன் அங்கே எழுந்தருளியிருகின்றான்.
 
2365: ஞானியர்க்குக் கரும்பாகவும் அமுதமாகவும் இருந்து சிவன் அருளுதல்:
திருமால், பிரமன், உருத்திரன் என்ற மூன்றுவடிவமாய் உடல் உற்பத்திக்குக் காரணமான சிவபெருமான், தொலைவில் இருப்பவனாகவும் அண்மையில் உள்ளவனாகவும் சுவையான கரும்பானவனாகவும் அமுதமாகவும் நின்று இனிப்பவனாயும் உள்ளான்.
 
2366: ஞானியர் முதல்வனின் துணையைப் பெறுவர்:
நான் பாச நிலையில் பொருந்திய போது என் உண்மைச் சொரூபம் ஒளியேயாகும் என்பதை அறியாமல் இருந்தேன்.  நான் ஒளி வடிவினன் என்று அறிந்த பின்பு என்னை முன்னம் தளைப்படுத்தியிருந்த தத்துவங்களை - இருளை - நான் அறியவில்லை.  அவ்வாறு நான் என் உண்மை வடிவத்தை அறிந்திருந்தும் என் முதல்வன் என்னைக் கை விடாது என்னுடன் இருந்தே என் நிலையைக் கேட்டுக் கொண்டு உள்ளான்.
 
2367: சிவம் என்னும் விளக்கு உடலில் மறைந்திருந்து ஒளியைத் தந்து கொண்டிருக்கிறது :
பெத்த நிலையில் உள்ளவர்க்கு ஆன்ம வடிவம் உடலுடன் பொருந்தியிருந்தும் விளங்காதபடி மறைந்திருக்கும்.  ஞான நிலையில் உள்ளவர்க்கு ஆன்ம வடிவம் விளங்கி ஒளி பெற்று நிற்கும். 
அது உடம்பிலே இருந்து சூட்டைத் தந்து கொண்டிருக்கும்.   அத்தகைய செம்மையான சோதியான விளக்கினைத் தேடுகின்றேன்
 
2368: இறைவனை விரும்பிக் கூடுகின்றேன்:
சிவம் என்ற விளக்கை எட்டுத் திக்குகளிலும் மேல் கீழ் என்ற இடங்களிலும் தேடுகின்றேன்.  இன்பமே வடிவான இறைவனின் திருவடிக் கரணங்களைத் தேடுகின்றேன்.  பரம்பொருளே தக்க துணை என அதைப் பாடுகின்றேன்.  நிறைந்த மனத்தால் அந்தப் பரம் பொருளைக் கூடுகின்றேன்.
 
2369: ஞானியர் சிவமாம் தன்மை அடையப் பிறப்பு உண்டாவதில்லை:
பிரமன் படைப்பில் முதலில் படைக்கப் பெற்ற உயிர்கள் பெரிய ஆணவ மலச் சார்புடையனவாக இருந்தனர்.  அத்தகையவர் அரன் அருளால் அதனை நீக்கி ஆன்மாவான தன்னை அறிந்து, பழமையான தலைவனின் திருவடியைப் பொருந்திச் சிவமாம் பெருநிலையை அடையின் பிறப்பு வாராது.
 
2370: அந்தங்கள் ஆறு.
மறையின் முடிவான உபநிடதங்களின் கூற்றும், மேன்மையான சித்தாந்த மான சிவாகம முடிவும், நாத தத்துவத்தின் முடிவும், கூறத்தக்க அட்டாங்கயோக நெறியின் முடிவும், முதலாவதான நிவிருத்தி முதலிய கலைகளின் முடிவும் என்ற இவை ஆறு அந்தங்கள் ஆகும்.
 
2371: ஆறு அந்தங்களை அறியும் சுத்தரே உலகங்களின் தோற்ற ஒடுக்கங்களை அறிவார்:
ஆறு அந்தங்களையும் தம்மில் கொண்டு அறிபவர் மேலான சுத்ததத்துவத்தையும் உணர்ந்தவர் ஆவார்.  மலம் அற்றவரே ஆறு  அந்தங்களையும் அறிய இயலும். இவ்விதம் கூறப்பெற்ற ஆறு அந்தங்களையும் அறியாதவர்க்கு உலகங்களின் தோற்ற ஒடுக்கங்களை அறிய முடியாது.
 
2372: வேதாந்த சித்தாந்த முடிவு :
நான் முழுமுதற் பொருள் என்னும் வேதாந்தமும், நான் சிவம் என்னும் சித்தாந்தமும் நீங்காத துரிய நிலையில் ஆன்மா தனது உண்மை வடிவானஒளியைக் கண்டு, இனிய மேலான பரம், அபரமாக விளங்கும் சிவத்துடன்சேர்வதாய், ஆன்மா தன் மலங்களை அகற்றி, எட்டுப் பெரும் சித்திகள் அடைவது பயனாகும்.
 
2373: சித்தாந்த நெறி :
உயிரானது சிவத்துடன் பொருந்தி நின்று நீண்டு செல்லும் மனமும், சத்தம், பரிசம் ரூபம் இரசம் கந்தம் என்ற புலன்களின் உண்மையை அறிந்திட்டுச்சுத்த மாயை அசுத்த மாயைகள் பற்றாத வகை நினைத்துத் தலைவனான முழுமுதற் பொருளை அடைவதே சித்தாந்த நெறியாம்.  உள்ளம் ஐம்புலன்களைச் சேர்ந்த போது உலகம் உள்ளது.  நாதத்தைக் கடந்து நாதாந்தம் சென்றவரிடம் உள்ளமும் அவற்றால் பற்றப்படும் புலன்களும் இல்லை.  மனம் அழிந்த போது பருநுண் கரணங்கள் கெடுக்கப்படுகின்றன.  உள்ளம் அகண்ட சிவத்தில் பதிந்த போது கண்டமான தன்கரணங்களை அழித்து விடுகின்றது.
 
2374: நாதாந்தம் அடைந்தவர்க்குப் பிறவி இல்லை :
பொருந்தும் பிரமன் திருமால் உருத்திரன் ஆகியவருக்கு மறைப்பையும் அருளையும் செய்யும் மகேசுவரன் சதாசிவன் ஆகியோருக்கும் அப்பால் மிக்கு விளங்கும் பரவிந்து  பரநாதம் முதலிய நீங்காத  முப்பத்தாறு தத்து வங்களையும் விட்டு நீங்கும் போது ஆன்மா ஒன்றே இருப்பதாகும்.
 
2375: நாதாந்தப் போதம் பொருந்துதல் :
மேலே சொன்ன வண்ணம் முப்பத்தாறு தத்துவங்களான பிணிப்பைத் தெளிந்து அழித்து நாதாந்தத்தைக் கடந்து மேல் உள்ள ஆணவம்  என்ற இருளும் நீங்கிடச் சிவத்துடன் ஒன்றிய உணர்வாகப் பொருந்தி நிற்பின், இகழ்வு இல்லாத நாத முடிவில் அறிவு பொருந்தும். 
 
2376: யோகாந்தத்தின் இயல்பு :
ஞானியரால் உணர்த்தப்படும் இயமம் நியமம் முதலிய எட்டு உறுப்புகளையுடைய அட்டாங்க யோக நெறியில் சென்று நீங்கி, சமாதியில் பொருந்தி, அங்குள்ள சிவத்துடன் பொருந்திடச் -  சீவன் தத்துவங்களை விட்டுப் பரமாகப் பற்றுகளை நீங்கிய போது விருப்பு வெறுப்பு அற்ற உபசாந்த நிலை பொருந்தும்.
 
2377: கலாந்தத்தின் இயல்பு :
சித்தாந்தக் கொள்கையில் கூறப்பெறும் கலாந்தத்தை ஆராயின், நீங்குகின்ற நிவிருத்தி முதலிய கலைகள் உள்ளனவாகிய விந்து சத்தியில் ஒடுங்கியிருத்தலும் தெளிவாய் அராய்ந்து அதைத் தெளிவு பெறுதலும்
ஆகும்.
 
2378: சிவானந்தம் உண்டாகுமாறு :
முன்பு தெளிந்த நிவிருத்தி முதலிய கலைகள் மேதை முதலிய சோடசக் கலைகளே அன்றி,  ஆராயும் ஐங்கலைகள் வேறு ஒளியில் அமைந்திருப்பன என்பதை அறிய வல்லார்க்கு-அருளையுடைய சிவனாகிய மந்திரமும்,முத்திரை பாவனை முதலியவற்றுடன் செய்யும் பூசையாகிய தந்திரமும் தத்துவங்களைப் பற்றிய முடிவுகளை மாணவனுக்கு அறிவுறுத்தி அவற்றை விடுவதற்கு வேண்டிய வைரக்கியத்தைத் தெரிவிக்கும் தெளிவும், மௌன உபதேசமும் சிவசீவ ஒன்றிப்பை உணர்த்தும் ஞானத்துடன் ஐந்து பிரிவில் அடங்கும் என்று உணர்வர்.
 
2379: மந்திரம் முதலிய ஐந்து கலைகளின் விளக்கம் :
ஆகமங்களும் வேதங்களும் பழமையானவை.  தந்திரக் கலை அந்நூல்  கூறும் சடங்குகளைச் செய்து அதன் பயனை எதிர் நோக்கியிருப்பது.
            "அ, உ, ம, விந்து, நாதம்" என்ற ஐந்து பிரிவுகளைக் கொண்ட பிரணவ மந்திரம் உடல் அல்லா மந்திரம் எனப்படும்.  இதனை ஆசான் வாயால் மாணவனுக்குச் சொல்ல இயலாது - உணர்த்தவே முடியும். 
இந்த உபதேசம் மிக்க தீவிர பக்குவம் உடையவர்க்கே உரியது.
 
2380: அனுபூதி பெற்ற சிவம் ஆவார்:
சிவஞானக் கலை என்பது பேரொளிப் பிழம்பாய் உள்ள சிவம்.  எனவே இதுகாறும் மேற்கொண்டு வந்த ஒழுக்கமும் அன்பும் மறையும் சிவகலையின் இறுதியில் தன்னை வேறாகக் காணும் உணர்வை விட்ட ஞானியர் சொல்லுக்கும் உள்ளத்துக்கும் எட்டாத சிவம்.
 
2381: சிவமாய்த் தான் விளங்குதல் :
சீவன் சிவனாகும் தன்மையை அடைந்தால் பயிற்சியாலான கலாந்த நாதாந்த யோகாந்தமும், மற்றப் போதாந்த வேதாந்த சித்தாந்தமும் ஞானமாக அமைய அந்தச் சிவமே சீவனாய் விளங்கும்.
 
2382: குரு உபதேசப்படி நின்றால் சிவானந்தம் உண்டாகும்:
மேல் கூறப் பெற்ற ஆறு அந்தங்களும் நேயப் பொருளில் போய் அடங்கிவிடும்.  ஆறு அந்தங்களால் அடையப் பெறும் பொருளான சிவத்தில் காண்பவனான சீவன் அடங்கும்.  மற்றத் தத்துவங்களை விட்டு நிற்க, தெளிந்த, பிரணவ யோகத்தால் உண்மையான சிவானந்தம் ஏற்படும்.
 
2383: கலைகள் யாவும் ஒரு முடிவுடையவை :
உண்மையான ஆறு அந்தமான கலைகளும் பிரணவத்தின் உறுப்புகளான அ, உ, ம, விந்து, நாதம் என்பனவற்றுள் அடங்கும்.  உண்மையான கலாந்தமான இரண்டுள் (அதாவது நிவிருத்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியாதீதை என்ற ஐந்தும், இவற்றைக் கடப்பதற்கான மந்திரம், தந்திரம்,தெளிவு, உபதேசம், ஞானம் என்னும் ஐந்தும்) சிவ தத்துவம் ஐந்துடன் வித்தியாதத்துவம் ஏழும் முடியும்.  உண்மையான சிவகலைஒருமித்து முடிவான நாதாந்தத்தில் உண்மைக் கலையைச் சொன்னால்
அ•து முடிவை அடையும்.
 
2384: சிவகுருநாதனை சிந்தித்திருக்க வேண்டும் :
ஆன்மாக்களை இயக்கும் சத்தியான குண்டலினியை நாதத்தின் தலைவன் ஆன சிவன் ஏற்றுக் கொண்ட பின்,  அநேக  வானவரை  நடத்தும் எம் பெருமையுடைய அச்சிவனின் திருவடிகளை முடிமேல்சூட்டி அழிவில்லாத வேதாந்த  சித்தாந்தங்களின் சிறப்பை,  நாதாந்தத்தால் உணர்த்தியருளிய
சிவ குருநாதனை எண்ணியிருங்கள்.
 
2385: உயிர்களின் பக்குவ நிலைக்கு ஏற்பச் சமய முடிவுகள் :
வணங்குபவரின் வழிபாட்டுக்கு ஏற்பச் சிவபெருமான் அருளிச் செய்த ஆகமங்களில் உணர்த்தப் பெறும் உண்மைச் சமயத்துக்கு ஏற்பப் புறம்பாய் இருக்கும் மாயை மகாமாயை என்பனவற்றைக் கடந்ததே வேதாந்தம்சித்தாந்தத்தால் உணர்த்தப் படும் உண்மையாகும்.
அசுத்த மாயை, சுத்த மாயை என்ற இரண்டையும் கடந்து சிவப்பேற்றை அளிப்பதானாலும் - சீவர்கள் காமிய பத்தியால் பல பிறவிகளில் சிறிது சிறிதாக சிறு வழிபாட்டில் நின்று பின்பு தூய மாயையில் விளங்கும் பெருந்தேவதைகளை வணங்கி முடிவில் சிவத்தின் மீது விருப்பம் எய்தி வேதாந்த சித்தாந்த  உண்மைகளை அறிவர்.  இப்படிப்பட்ட முறையிலே சீவர்கள் வளர்ச்சி அமைந்துள்ளது.
 
2386: வேதங்கள் முதலியவை:
வேதாந்த சித்தாந்தம் என்னும் இரண்டும் வேற்றுமை இல்லாத ஒரு தன்மைஉடையவை.  போதாந்தம் கூறுவது "ஆன்ம அறிவே முடிவான ஞானம்."
யோகாந்தம் பொதுவாக (ஞேயப் பொருளை)காணும் பொருளைக்காட்டும்.நாதாந்தம் ஆனந்தமாய் இன்பத் தோற்றம் தருகின்ற ஒலி ஏற்படுத்தும். 
மூதாந்த முத்திரையாவது பிரணவசமாதியில் பொருந்தியிருக்கத் தக்கது. 
2387: சீவன் பிரமத்துடன் ஒன்றாகும் என்பது வேதாந்தம் :
வேதாந்த நெறியில் சீவனுக்கு உரிய காரிய உபாதிகளான அஞ்ஞானம், ஆவரணம், விட்சேபம், பரோட்ச ஞானம், நித்தியாரோப ஞானம், துக்க நிவிருத்தி, தடையற்ற ஆனந்தம் ஆகிய ஏழின் பிணிப்பு நீங்க, நாதாந்தத்தின் பசுத்தன்மை கெடும்படியான தொம்பதம் பொருந்தும்.  
சர்வஞ்ஞத்துவம், சர்வ காரணத்துவம், சர்வாந்திரிக யாமித்வம், சர்வேசுவரத்வம், சர்வ சிருஷ்டி, சர்வ திதி, சர்வ சங்காரம்  ஆகிய ஏழு காரண உபாதிகளுக்குரிய உண்மையான பரனான சிவமே அறிவின்
முடிவான தற்பதம் ஆகும்.  பின்பு இவ்விரண்டான தன்மைகளும் நீங்கி ஒன்றான அசிபதம் பொருந்தும்.
 
2388: சிவன் அண்டம் ஏழையும் கடந்தும் வேறாயும் உள்ளான் :
சிவன் ஏழு அண்டங்களையும் கடந்தவன்.   அதற்கு அப்பால் விளங்கும் பேரொளியில் கலந்தவன்.  பேரொளிக்குள் இருக்கும் ஒளியினை, பழமையாய்ப் பொருந்தி நின்ற பராசத்தி என்றே கொண்டவன்.       தன் வடிவ நிலையில் தனித்து வேறாயும் விளங்குபவன் எம் தலைவன் ஆவான்.
 
2389: தோத்திரங்களால் வழிபடச் சிவம் விளங்கும் :
சிவத்தை உணர்த்தும் நாதத்தை இலட்சியமாகக் கொண்டு தெய்வத்தால் அருளப்பட்ட செயலையே தம் செயலாய்க் கொண்டு செய்து, தோத்திரப் பாடலைக் கொண்டு வழிபட, பிரணவத்தின் உறுப்புகளாகிய அகர, உகர, மகர, விந்து, நாதங்களைக் கடந்து இவற்றை அடக்கிய சிவம் அமையும்.
 
2390: எல்லாத் தத்துவங்களுக்கும் நிலைக்களம் சிவமே!
ஒருவனாக உள்ள சிவத்தை நினைக்கமாட்டார்!  உயிரைப் பற்றிய உண்மையை அறிய மாட்டார். அவரவர் துய்க்கும் இன்ப துன்பங்களுக்கு முன் செய்த வினையே காரணம் என்பதை உணரமாட்டார்.       அசுத்த மாயை சுத்த மாயை என்னும் காரணம் இவற்றால் கட்டுண்டிருப்பதை  எண்ணிப் பார்க்கமாட்டார்.  ஏகனாய் விளங்கும் சிவபெருமானே இவை யாவற்றையும் ஆன்மாவின் உள்ளே நின்று உணர்த்தி அவ்வினை கழியும்படி செய்து, அருவமாய் நின்று யாவற்றுக்கும் ஆதாரமாய் உள்ளான். 
 
15. ஆறந்தம் = ஆறு முடிவுகள் : அவை கலாந்தம், நாதாந்தம், யோகாந்தம், போதாந்தம், வேதாந்தம், சித்தாந்தம்.
 
2391:சிவன் சத்தியைக்கொண்டே ஆன்மாக்களுக்கு சிவானந்தம் அளிக்கின்றான்:
சிவபெருமான் அன்பர்களை இடமாகக்கொண்டு எழுந்தருளுகின்றான். அவர்கள் பக்குவம் அடையப் பல சக்திகளை அவர்கள் ஆன்மாவிடம் பொருத்துகின்றான்.  வன்மையுள்ள சிவ சங்கற்பத்துக்கு ஏற்ப அவை தொழிற்பட, ஆன்ம சங்கற்பம் உருவத்தைப்  பற்றாத  போது  அந்தச்  சத்தியின்  செயல்  நீங்கச் சிவானந்தம் உண்டாகச் செய்வான்.
 
2392: வேதாந்தத்தில் சீவனும் சிவனும் ஒன்றாதலே சிவசாயுச்சியம் ஆகும்:
வேதாந்தத்தில் சொல்லப்படும் தொம்பதம் பசு என்னும் ஆன்மாவைக் குறிக்கும் என்பர்.   நாதாந்தத்தின் பசுத்தன்மை இயல்பாய் நீங்கி நின்ற நல்ல பதியே அறிவின் முடிவான "தத்" என்ற சொல்லாகும். சீவன் சிவன் என்னும் இரண்டும் இரண்டறக் கலத்தல் இயல்பாய்ச் சிவசாயுச்சியம் என்ற அசிபதமாகும்.
 
2393:வேதாந்தமும் சித்தாந்தமும் பிறப்பு இறப்பு நீங்கிச் சிவமாதலை விளக்கும்:
வேதாந்தம் சித்தாந்தம் என்னுமிரண்டும் சீவன் சிவமாதலைப் பற்றி உரைக்கும்.  பயனற்ற பிரமன் திருமால் உருத்திரன் மகேசுவரன் என்ற நால்வரும் சிவமாகும் தன்மையுடைய சதாசிவ மூர்த்தியின் ஆணை வழி செய்த படைத்தல் முதலிய தொழில்கள் முடிவுற்று ஒன்றாகுமானால் வியப்புக்குரிய வேதாந்தம் ஞானம் தரும் சித்தாந்தம் ஆகும்.
 
2394: சித்தாந்தமும் வேதாந்தமும் செம்பொருளைக் காணத் துணை செய்யும் :
சித்தாந்த சைவத்தில் சீவன் முத்திநிலை கை கூடுவதால் சித்தாந்த சைவ நெறியில் நிலைத்து நிற்பவர் முத்தி நிலை (சிவப்பேறு) பெற்றவர் ஆவார்.  சித்தாந்தம் வேதாந்தம் இரண்டு நெறிகளும் செம்பொருளான சிவத்தைக் குறித்தனவே. ஆதலால் சித்தாந்தமும் வேதாந்தமும் சிவத்தையே காட்டும்.
 
2395:வேதாந்த சித்தாந்தம் சீவனுக்கும்சிவனுக்கும் உள்ள தொடர்பை விளக்கும் :
சிவத்தைப் பரமாகவுள்ள சீவனில் உள்ளாகவும் வெளியாகவும் விளங்குவது குற்றம் அற்ற வேதாந்த நெறியும் சித்தாந்த நெறியும் என்று ஆனால், தோழமை கொண்ட துரியாதீதத்தில் விளங்கும் ஞானம் சிவமேயாகும்.  இத்தகைய சிவஞானத்தை உணர்ந்து, கடைப் பிடிப்பவர் சிறந்த தத்துவ உணர்வுடையோர் ஆவார்.
 
2396: ஆன்மா சாயுச்சியத்தைப் பெறும் விதம் :
ஆன்மா நிறைந்துள்ள முப்பத்தாறு தத்துவங்களும் உருவம் உடையனவாயும் உருவம் அற்றனவாயும் உள்ளன. இவற்றுள் விந்து நாதம் ஆகிய தத்துவங்களில் விளங்குபவர் சதாசிவர்.   சீவனின் நாதாந்த நிலையில் உள்ளது தற்பரம் என்ற மெய்ப் பொருளாகும்.  இந்த நிலையை அடைவதே சிவ சாயுச்சியம் ஆகும்.
 
2397: வேதாகம முடிவுகள் யாவும் ஒன்றே!
வேதங்களும் ஆகமங்களும் இறைவனால் அருளிச் செய்யப்பட் உண்மையை விளக்கும் நூல்களாகும்.  வேதங்கள் பொதுவாகவும்  ஆகமங்கள் சிறப்பாகவும் உள்ளன.  சிவ பெருமானால் உணர்த்தப்பட்ட அவற்றின் முடிவுகள் வெவ்வேறானவை எனச் சிலர் மொழிவர்.  தத்துவத்தால் உணர்ந்த சான்றோர்க்கு இவற்றுள் வேறுபாடின்மை விளங்கும்.
 
2398: பரநிலை அடைந்த ஆன்மா பேரின்பத்தில் திளைக்கும் :
பரமான சீவன் பெறும் சிவானந்தம் எல்லாவற்றிலும் மேலான ஆனந்தமாகும்.  மேல் மூன்றாயுள்ள ஆன்மாவானது பாழாகிய மாயையில் பொருந்தாது பெறும் ஆனந்தமும்,  சாம்பவி, கேசரி  முதலான முத்திரைகளால் அடையும் ஆனந்தமும்,சிவ நடனத்தை இடைநாடியில் கண்டு களிப்பதால் வரும் ஆனந்தமும் ஆகியவற்றைப் பெற்ற உள்ளமானது அழகுடையதாகும்.
 
2399: சிவனே கலைகளின் முடிவை உணர்த்தியவன் :
கலாந்தமாவது மேதை முதலிய பதினாறு கலைகளும் நிவிருத்தி முதலிய ஐந்து கலைகளுமாகும்.  நாதாந்த நிலையில் அகர, உகர, மகர, விந்து, நாதம் என்ற ஐந்து கலைகளாகும்.  ஆதலின் அரனே பிரணவமாகப் பொருந்தி அவற்றை முடிவு செய்வானாதல் பற்றிப் பஞ்சாந்தகன் அவன் என்று அவனே வேதங்
களிலும் ஆகமங்களிலும் மொழிந்துள்ளான்.
 
2400: வேதாந்த சித்தாந்த நெறிகளில் தலைப்பட்டுச் சமாதியில் இருப்பின் திருக்கூத்தைக் காணலாம் :
பஞ்ச கலைகளின் முடிவு வேறாகும் என எண்ணாது எல்லாம் ஒரே முடிவை உடையன என்று சித்தாந்த வேதாந்த நெறிகளில் தலைப்பட்டு நின்றால் யோகத்தின் முடிவான சமாதி அமையும்.  அங்ஙனம் அமைந்தால் வானத்தை இடமாகக் கொண்டு நடிக்கும் கூத்தப் பெருமான் திருவடியை அடையலாம்.
 
2401: சீவன் ஐந்து மலங்களையும் நீக்கி உண்மையுணர்ந்து அரனாகும் !
சிவனின் திருவடியைப் பொருந்தும் பழமையான சீவன் ஐந்து மலங்களும் கெட்டு அநாதியாய் உள்ள ஆன்மாவின் சுட்டறிவை அழித்துத், தன் உண்மையான பரநிலையைக் கண்டு சிவ வடிவு கொள்ளும்.  தன் ஆதி மலமான ஆணவம் நீங்கச் சகல தத்துவங்களையும் கடந்த நிலையில் நீர் பாலுடன் சேர்ந்து பாலாகவே இருப்பதைப் போன்று சீவன் சிவத்துடன் சேர்ந்து சிவமாகி இருக்கும் என்பது
வேதாந்தம் கூறும் உண்மையாகும்.
 
2402: வேதாந்த சித்தாந்தம் காட்டும் நெறி :
உயிரையும் பரனையும் மேன்மையான சிவனையும் மயக்கம் நீங்கிய "நான் அதுவானேன்" என்னும் வாக்கியப் பொருளாக உணர்க.  அதனால் சுட்டிஅறியும் தன்மை கெட்டு அறிவாகிப் பேரறிவுடன் அடங்கி நிற்பதே மயக்கம் அற்ற சித்தாந்தம் என்க.
 
2403: மறையும் ஆகமும் கருதச் சொன்னது ஒரு பொருளையே!
நிலையான அகண்டப் பொருளான "அது நான்" என்ற பாவனை, அந்தணர் சிறந்ததாகக் கொண்டு ஒழுகும் சிவயோகம்.  இதனையே தான் சித்தாந்தம் பாவிக்கச் சொன்னது.  ஆதலால் சிறந்த வேதத்தினால் ஆராயப்பட்ட பொருள் செறிவு உடையது ஆகம நூல் என்பது விளங்கும்.  அது நான் என்பதன் பொருள் சிவோகம் சிவத்துடன் கூடுதல்.  சோகம் என்பதும் சிவோகம் என்பதும் ஒன்றே.  புருவ நடுவில் 'ய"கரமான ஆன்மாவையும் "வ"கரமான அருளையும் "சி"கரமான சிவத்துடன் பொருத்திக் கண்டால் ஆன்மா குறும்பு அற்றுச் சிவமாந்தன்மையைப் பெறும்.
 
2404: வேதமே வேதாந்தமும் சித்தாந்தமும்!
வேதம் காலத்தால் முற்பட்டது.  ஆகமம் முழுமைத் தன்மையுடையது.  ஆன்மாக்களுக்குத் தலைவனான இறைவன் அருளியவை இரண்டுமேயாகும். பழமையான வேதம் படிப்படியாக வந்து மிக மேம்பட்ட வேதாந்தமும் சித்தாந்தமும் ஆகும்.
 
16. பதி பசு பாசம் வேறின்மை :
பதி பசு பாசம் = இறைவன் உயிர் தளை. இவற்றின் தொடர்பு விளக்கம் :
 
2405: பதி பசு பாசம் தொன்மையானவை :
அறிவு அறிவு என்று கூறப்படும் உயிர் மிகவும் பழமையானது.  உயிர்க்குத்தலைவனான சிவமும் ஆன்மாவைப் போன்று மிகவும் பழமையானது.  உயிரைப் பிணித்துள்ள பாசம் பழமையானது.     பேரறிவுப் பொருளான சிவம் விளங்குமானால் பாசமானது நீங்கிப் பிறவி இராது.  மிகப் பழமையான பாசம் ஆன்மாவைப் பற்றி நின்றாலும் சிவம் பதிந்தபோது பாசத்தின் வன்மை கெட்டுப் பிறவி நீங்கும்.
 
2406: உயிர்கள் பாசம் விட்ட போது தலைவனைப் பற்றி நிற்கும் :
பிரமன், திருமால், உருத்திரன், மகேசன், சதாசிவன் முதலிய பெருந்தேவர்கள் முதலாக உயிர்கள் பல கோடியாகும்.  பசுக்களைப் பிணித்துள்ள ஆணவம் கன்மம் மாயை என்ற மலங்கள் மூன்று.  உயிர்கள் தம் அறிவை விட்டு மலங்களை அகற்றினால் பதியினைப் பற்றி விடாமல் நிற்கும்.
 
2407: பாசத் தொடர்பு அறுமாறு :
பாசத்தில் கட்டுண்டு கிடக்கும் உயிர்கள் காமியத்தோடு செய்த சரியை கிரியை யோகத்தால் முத்தி கிட்டாது.  ஆனால் முத்திக்கு வாயிலான சாலோகம் சாமீபம் சாரூபம் ஆகிய மூன்று பயன்கள் கிட்டும்.  அவற்றின் முடிவான ஞானத்தைப் பெற நாள்தோறும் தியானம் செய்து தொடர்பு சிறிதும் பற்றாமல் விருப்பம் இன்றி வணங்குங்கள்.  அங்ஙனம் வணங்கினால் குடத்தின் உள்ளே வைக்கப்பட்டிருந்த விளக்கைக் குன்றின் மீது வைத்ததைப் போல் ஒளி பெற்று விளங்குவீர்கள்.
 
2408: சிவத்துடன் கொண்ட தொடர்பால் பாசவலி கெட்டு நீங்கும் :
சிவன் ஆன்மாக்களின் ஆணவமல வலிமை கெடக் கன்மத்தையும் மாயையும் பொருத்தியவன்.  பரந்த கதிர்களையுடையவன்.  இத்தகையவனைப் பற்றுள்ளம் கொண்டு ஞானியர் எண்ணுவர்.  அங்ஙனம் நினைக்கும் தியான பலத்தால் மனம் கூசும் பாசத்தை நினைப்பது எப்படி?  பழமையாகவே தொடர்ந்து வந்துள்ள பாசத்தில் மீண்டும் சீவனை விடுவது எப்படி?
 
2409: பாச நீக்கத்தால் வரும் பயன் :
மந்திர ஆற்றலால் நீங்கிய விடம், தீண்டியவனை மீண்டும் பொருந்தாது.
அது போன்று ஞானத்தின் பசுத்தன்மையும் பாசத்தன்மையும் விட்டு மெய்ம்மை கண்டான் மீண்டும் அவற்றைப் பொருந்தான்.  தன்னைக் கேவலாவத்தையிலும் சகலாவத்தையிலும் பிணைத்திருந்த பாசத்தைச் சுட்டழித்து நின்மல துரியாதீதத்தில் விழிப்பு நிலையில் அந்த உண்மையான ஞானியர் இருப்பர்.
 
2410: சைவர்களுக்கே விளங்குபவை :
ஆராயப்படும் பதியுடன் நன்மை பெறும் பசுவும் பாசமும் எக்காலத்தும் நிலையாய் இருப்பவையாம்.  எனினும் நித்தியப் பொருளான சிவத்தின் தன்மை இன்னவாறு என்று அறிபவர் ஒருவரும் இல்லை. பசு பாசங்களின் நித்தியத் தன்மையும் அவற்றின் நீக்கமும் அருட்கண்ணால் நாடிய சைவர்க்கு விளங்குமாறு சிவன் அருள் செய்தான்.
 
2411: பதி பசு பாசம் என்பனவற்றை ஆலயத்தில் குறியாய் வைத்தமை :
கோயிலுள் மூலத்தானத்தில் உள்ள சிவலிங்கம் அருளுடன் கூடிய சிவலிங்கம் ஆகும்.  அங்குள்ள வலிய காளை பசுவாகும். அங்கு இடபத்துக்குப் பின்னே உள்ள பலி பீடமே பாசமாகும்.  இவ்வுண்மை சிவாலயத்தின் அமைப்பை ஆராய்ந்து பார்க்க விளங்கும்.
பசு என்ற உயிர் பாசத்தைப் பின்னிட வைத்துச் சிவத்தை நோக்கி நிற்பதால் பாசக் கூட்டம் பலியிடப் பெறுகின்றது.அருளைப் பெறுவதற்கு இதுவே உபாயம்.  கொடி மரத்துக்கு அருகில் உள்ள பசுத்தன்மையுடன் கூடிய நந்தி பெரியதாகவும்உள்ளே உள்ள நந்தி பருத்தன்மை குறைந்திருப்பதால் சிறியதாகவும் இருக்கும்.
 
2412: முப்பொருள் உண்மையை உணர்பவர்க்குப் பசு பாசம் நில்லா :
பதி, பசு, பாசம் என்பனவற்றை உணர்த்தும் ஞான நூல்களை நாள் தோறும் ஆராய்ந்து உணர்பவர்க்கு நெறியைக் காட்டி, பதிப் பொருளானது பசு ஞானத்தையும் பாச ஞானத்தையும் பற்று நீங்கக் கெடுக்கும்.  பதி பசு பாசம் என்பனவற்றைக் குறியீடாகக் கொண்டு தியானித்தால் பசு ஞானம் பாச ஞானம் நிலை
பெற மாட்டா.
 
2413: சிவனைக் காணும் உபாயம் :
பதிப் பொருளான சிவத்தையும் பசுவான உயிரையும் பாசமான மலத்தையும் முத்தி நிலையையும் பசு பாசம் நீங்கும் வகையையும், சந்திர கலையில் வீரிய மயனாக இருந்து உடலுக்கு காம இன்பத்தை அளிப்பவனாய் உள்ள சிவமே ஒளியுருவாய் தலைக்கு மேல் சென்ற போது சிவானந்தத்தை விளைவிப்பவனாய் உள்ளதையும் அறியும்படியான நூல்களை தூயசைவத்தில் சிவன் வைத்துள்ளான்.
 
2414: உயிரினம் எல்லாம் சிவன் பரப்பில் அடங்கி ஐந்தொழில்களை அடையும்:
அறிவு வாய்க்கப் பெற்ற விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என்று மூவகைப்பட்டவர் எங்கும் உள்ளனர்.  இத்தகைய உயிர்கள் எங்கும் இருக்க எல்லாம் அறிந்த சிவன் அவற்றில் நிறைந்துள்ளான்.  ஆன்மாக்களின் தகுதியை அறிந்த சிவம் அவ்வவற்றின் பக்குவத்துக்கு ஏற்பப் படைக்கின்றான்.
 
2415:சிவன் ஆன்மாக்களுக்குப் படைப்புக்குரிய முதற்காரணத்தைச் செய்தருளல்:
படைப்பின் தொடக்கம் என்பது பரம் சிவம் சத்தி என்பனவற்றை இறைவன் உயிர்க் கூட்டங்களிடையே பொருத்தி உறக்கத்தில் வைப்பதாகும். பின்பு படைப்புக்குரிய தற்பொருளான சிவம் சங்கற்பத்தினால் செய்யப் படைப்பின் முதல் நிலை சுத்த மாயையிலே அந்தப் பரத்தில் ஆகும்.
 
2416: நுண்ணுடலுக்குரிய ஐந்தொழிலும் இறைவன் அருளுதல் :
இத்தகைய நுண்மையான உடலை விந்து நாதம் சத்தி சிவம் பரம் ஆகிய அருவத்தில் உள்ள ஐந்தினால் சூக்குமமாகிய படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், துடைத்தல் ஆகிய ஐந்து தொழிலைச் செய்பவன் தூய ஈசான மூர்த்தியாகும்.
 
2417: அரனிடம் யாவும் இடம் பெற்று விளங்கும் :
பொருந்தும் பரசிவம் சத்தி நாதமும் மேலும் பரவிந்து சதாசிவன் மகேசனும் இன்னும் பிரமன், திருமால், உருத்திரன் ஆகிய ஒன்பது நிலைகளும் உலகத்தில் விளங்கும்படி படைப்பவன் அரன் என்னும் சிவமே!
 
2418: உயிர்களுக்குச் சிவன் செய்யும் ஐந்தொழில் :
படைத்தலும், காத்தலும், இளைப்பாற்றும் பொருட்டு செய்யும் அழித்தலும், மறைத்தலும், வாழ்கின்ற போது விளங்க அருளலும், உடலை விட்ட பின்பு  முத்தியில் நிகழும் அருளலும் எனச் சிவபெருமான் சகலர்க்கு இணைத்த அநாதியான தொழிலை ஐந்து எனக் கூறலாம்.  
 
2419: சிவனின் அருட்செயல்:
முப்பத்தாறு தத்துவங்களையும் குண்டலினி சத்தியில் தொடர்பாக்கி, வேறான மாயையில், சிவ தத்துவம் வித்தியா தத்துவம் ஆன்ம தத்துவம் என மூன்று பகுதியாக்கி, இறுதியாய் ஆன்ம தத்துவத்தில் உயிர்களுக்குக் கருவிகளையும் வகுத்து, தன்மையால் வேறான பதிப் பொருளால் பசு பாசத்தினின்று மீளும்.
 
2420: சிவம் உயிர்களுக்குப் பாசத்தைக் கூட்டி நன்மை தீமைகளைத் துய்க்கும்படி செய்யும் :
பதியானது பசுவிடம் பாச பந்தங்களில் விருப்பம் உண்டாகச் செய்யும்.  அதனால் இரு வினைகளைச் செய்யும்படி ஆழ்த்தும்.  அங்குச் செய்யும் வினையின் பயன்களாகிய பாவ புண்ணியங்களை நரகம் சொர்க்கம் ஆகியவற்றில் அனுபவிக்கும்படி செலுத்தும்.  நாளாக ஆக நான் என்னும் ஆணவம் மட்டும்
பொருந்தி நிற்கும்.
 
2421: நாதோபாசனையால் ஆணவமலம் வலி குன்றும் :
பொருந்திய பாசமான மாயையில் தனுகரணங்களுடன் கூடி அவற்றையே தான் என்று எண்ணியிருப்பது ஆணவம்.  அத்தகைய மயக்கம் கெடவே இறைவன் உயிர்களை மாயையுடன் பொருத்தி வைத்தான்.  ஆணவ மல வலி குன்றிட அறிவுடைய ஆன்மாவின் புலப்பட்ட நாத சத்தியே சிவபெருமானின் திருவடி
களை அடைவதற்கு உரிய வழியாகும். 
 
2422:  நாத வழிபாட்டால் உயிர்கள் தூய்மை பெறும் :
நாத வழிபாடுனுயிர்களுக்கு வினைகளை ஊட்டிக் கழித்து சிவபோகத்தை அனுபவிக்கும் உபாயம் அல்லாமல் ஆணவ மலமான உயிர்க் குற்றம் நீங்கி அவா நீங்கித் தூய்மையன் ஆவதற்கும் இதுவே மூலமாகும்.  அழுக்குத் துணியை மேலும் அழுக்காகவுள்ள உவர் மண் முதலியவை தூய்மை செய்வது போல் இறைவன் உயிர்களுக்குப் பாசத்தைச் சேர்ப்பதெல்லாம் பாசத்தைப் போக்குவதற்கே ஆகும்.
 
2423: உயிர் நாதமாய் விளங்கும் நந்தியை வழிபட்டுப் பதி நிலை அடையும் :
பாசத்திலே உள்ள உயிர்க் கூட்டமே தத்துவங்களை விட்ட நிலையில் பரம் முதலாகும்.  பாசத்தில் கட்டுப்பட்டு இருக்கும் உயிரே பசு எனச் சொல்வர்.  பாசத்தைப் பயிலும் போது சிவமே நற்பாசமாகிய நாதமாக விளங்குவதால் நாத வழிபாட்டால் பசு பதியாக ஆகும்.
 
2424: ஒளி வடிவில் திகழ்வர் :
சனகர், சனந்தனர், சனற்குமாரர், சனாதனர் முதலிய முனிவர் நால்வரும் வேதப் பொருளின் உண்மை குறித்துத் தட்சிணாமூர்த்தியை வினவினர்.      அவர்க்கு அருள் மேனியை உடைய பெருமான்சுட்டு விரலைப் (ஆன்மாவை) பெருவிரலோடு (சிவத்தோடு) சேர்த்துக் காட்டி அவர் கேட்டவற்றின் பொருளை ஞான முத்திரைகளால் உணர்த்தினார். சின்முத்திரை ஆணவம் முதலிய மலங்களை நீங்கச் சிவத்தை அடைய வேண்டும் என்பதை உணர்த்துகிறது. சின் முத்திரையின் நுண் பொருளை அம்முனிவர்கள் உணரவில்லை.  வானம்  ஒலிக்கும் ஒளிக்கும் நிலையான ஈசான மூர்த்தியின் நிலையாகும் என்பதை ஆதலால் அவரது தலையைத் தீண்டித் தீட்சை செய்தார். அவர்கள் அம்முத்திரையை உணர்ந்து தம்உண்மையான ஒளி வடிவில் நிலை பெற்றுத் திகழ்ந்தனர்.
           
சின்முத்திரை: ஆணவம் முதலிய மலங்களை நீங்கச் சிவத்தை அடைய வேண்டும் என்பதை உணர்த்துகிறது.  பெருவிரல் - சிவம்; சுட்டுவிரல் - ஆன்மா;  நடுவிரல் - ஆணவம்; மோதிரவிரல் - கன்மம்; சிறுவிரல் - மாயை.
 
17. அடிதலை அறியும் திறம் கூறுதல் :
    (திருவடியைத் தலையில் உணரும் இயல்பைக் கூறுதல்)
 
2425: குண்டலினி சத்தி ஊர்த்துவ கதியை அடைந்து ஞானத்தைக் காட்ட முத்தி கிட்டும் :
மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சத்தி ஊர்த்துவ கதியாக மேலே தலைக்குப் போகும் வழியை அறிந்து கொள்ளாத வீணர்கள் கால் எது, தலை எது என்பதை உணர்ந்து கொள்வதில்லை.  கால் என்பது குண்டலினி சத்தி. மூலாதாரத்தில் குண்டலினி விளங்குவதற்குக் காரணம் அருள் என்பர்.  ஒளி விளங்கும் ஞானமேபண்பு நிறைந்த தலையாகும்.  சத்தி யானது அந்த ஞானமான சிவத்தைக் காட்ட உயிர் வீடு பேறு அடையும்.
 
2426: பேரறிவாய்த் திகழ்பவர் :
உடலில் அடியானது தலையில் வந்து பொருந்துவதை வீணர்கள் அறியவில்லை. தலை உச்சியிலும் அடி மூலாதாரத்திலும் இருக்கின்றன.  மூலாதாரத்தில் உள்ள குண்டலினி தலையை அடைந்து பொருந்தும் அறிவையுடைய ஞானியர் சிற்றறிவுநீங்கிப் பேரறிவுடையவராக இருந்தனர்.
 
2427: சிவம் அடியார்கள் தலையில் திருவடி சூட்டி அருள் செய்தான் :
நிலத்திலும் வானத்திலும் உள்ளும் புறமுமாய்க் கலந்து நின்றவன் சிவபெருமான்.அவன் அந்த அந்த அண்டங்களில் வாழும் வன்மை மிக்க அசுரரும் தேவரும் உய்யும்படி தான் பின்னே உலகத்தைப் படைத்தான்.    அவனது பெயர் நந்தி என்பது. அவன் விந்து நாதம் என்ற தன் இரு திருவடிகளையும் என் தலையின் மீது சூட்டினான்.
 
2428:சித்தத்தைச் சிவன்பால் வைத்திருப்பவர்க்கு அவன் விளங்கித்தோன்றுவான்:
என் மனத்துள்ளே சிவத்தின் விந்து நாதமாகிய திருவடியுள்ளது.  என் உள்ளமும் தன் செயல் அற்று அவனது திருவடியை வணங்கிக் கொண்டிருந்தது.  மனத்தின் உள்ளும் வெளியிலும் பரவியிருக்கும் சிவன் என்னை அறிந்து உணர்த்தாவிடில் என் தந்தையை நானும் உணராதவன் ஆவேன்.
 
2429: சிவன் திருவடியைப் பதிப்பித்து உண்மையை உபதேசித்தருள்வான் :
சொல்ல அரிய ஆறு ஆதார ஒளிக்கு மேலுள்ள பரமாகாயத்தில் என் தலைவனான சிவன் விரும்பி எழுந்தருளியிருந்தான்.   உள்ளத்தினால் எண்ணிக் காண முடியாத பிரணவத் தெளிவை அங்கு எனக்கு உணர்த்தினான்.  பின் நான் அவன் திருவடிகளான விந்து நாதங்களை என்தலையில் அணிந்து நின்றேன்.
 
2430: சிவத்தைக் காலம் அறிந்து இடம் அறிந்து போற்ற வேண்டும் :
பதியின் பொருள் விளங்கும் தலையின் மேல் உள்ளத்தை வையுங்கள்.  சந்திரகலை விளங்குமாறு செய்து அந்தத் திருவடியை எண்ணித் துதி செய்யுங்கள்.  கங்கையாற்றைச் சடையில் அணிந்த உமையொரு பாகன் முத்தியை அளிப்பான்.  அப்பெருமானை வழிபடுகின்ற காலங்களில் கண்டு வழிபடுங்கள்.
 
2431: இறைவன் தன்னை வழிபடுபவரைக் காப்பான் :
சிவனது திருவடிக் கமலங்களை இடைவிடாமல் நினைப்பவரின் உள்ளத்தில் அப்பெருமான் விளங்கித்,  தன்னை நினையாதவரின் மனத்தில் அவனும் வெறுப்பு அடைந்து ஒளிந்திருந்தான்.  அங்ஙனம் பக்குவம் செய்பவனே ஆன்மாக்களைப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றான்.
 
2432: இறைவனை வழிபடுபவர் சிவப்பேற்றை அடைவர் :
உடலில் சிவன் விளங்கும் சகசிர தளமான தாமரை மலர் ஒன்று இருக்கின்றது.அங்கு வழிபடச் சந்திரன்,சூரியன்,அக்கினி (இடக்கண்,வலக்கண்,பிடரிக்கண்)ஆகிய மூன்று கண்மலர்கள் உண்டு. அவ்வழிபாட்டால் இறைவன் திருவடியாகிய விந்து நாதம் விளங்கும்.அங்கே நிலைத்து நின்று திருவடிகளை வணங்கும் திறம் உடையவர்க்கு இப்பொழுது சிவப்பேற்றை அடைதலும் கூடும்.
 
2433: இறைவன் திருவடியைத் தலையில் பொருத்த ஆணவ இருள் கெட்டு இன்பம் உண்டாகும் :
விந்து நாதம் என்ற திருவடியை என் தலையின் மீது வைத்ததும் ஆணவ மலக்கட்டு நீங்கியது. உலகப் பொருளை விரும்பும் மயக்கம் பொருந்திய உள்ளத்தில் தளர்ச்சியுற்று கெட்டது. பால் போன்ற வெண்மையான ஒளியைப்பற்றிக் கொண்ட என்னைச் சிவபெருமான் அடிமையாய்க் கொள்ள எண்ணி
னான்.   அதன் மேல் அடைந்த மேலான பலன்களை என்னால் சொல்ல முடியவில்லை.
 
2434: இறைவன் திருவடியை நினைப்பவரின் குணத்தை ஏற்று நற்கதி அளிப்பான் சிவன் :
தாங்கள் பெற்று வளர்த்த மக்களிடம் கொண்ட சம்பந்தத்தையும் அவர் செய்யும் குற்றத்தையும் உணர்ந்து அவரது குற்றத்தைப் பாராட்டாமல் குணத்தைக்கொள்ளும் பெற்றோரைப் போல், இறைவனும் உயிரின் தன்மைக்கு ஏற்ப வெறுப்பற்ற செயலுக்குப் பொருந்தும்படி ஏற்றுக் கொண்டு தக்கபடி அருள்
செய்வான்.
 
18. முக்குற்றம். (காமம்=ஆசை, வெகுளி=சினம், மயக்கம்=அறியாமை)
 
2435: முக்குற்றங்கள் உயிர்களுக்கு அழிவைத் தரும் :
காமம், வெகுளி, மயக்கம் என்ற மூன்று குற்றங்கள் உள்ளன.  அவை யாவும் உயிர்களுக்குத் துன்பத்தைத் தருவன.  அதனால் உயிர்கள் தங்களின் உண்மை வடிவத்தை அறியாமல் மாயா காரியமான இருளில் ஆழ்ந்து மயங்கியுள்ளன.  காமம், வெகுளி,மயக்கம் என்ற மூன்று குற்றங்களிலிருந்தும் விடுபட்டவர் பிறப்பு இறப்புகளைநீக்கினவர் ஆவர்.  அங்ஙனம் நீங்காதவர் அம் முக்குற்றங்களின் காரியமான மாயையில் துன்புற்று அழிவர்.
 
2436: முக்குற்றங்களை நீக்கும் வழி :
காமம் வெகுளி மயக்கம் என்னும் மூன்று குற்றங்களையும் நீக்கிப் பாதுகாவலான திருவடி பற்றியிருந்தவர்க்கு மணியோசை போன்ற பிரணவத் தொனியினுள் பொருந்துவதான ஒளியைத் தலைப்படுதல் இயலும்.  ஒளியிலே நிலைபெறுவதே ஆசை, சினம், அறியாமை நீங்குவதற்கான வழி.
 
19. முப்பதம். தத்பதம்=சிவத்துக்குரிய பதம் (அது), தொம்பதம்=ஆன்மாவுக்குரிய பதம் (நீ); அசிபதம்=ஆன்மாவும் பரமும் பொருந்திய பதம்(ஆகிறாய்)
 
2437: முப்பதங்களையும் கடந்தவன் பிறப்பு அறியாது விளங்குவான் :
தோன்றிய "நீ" என்ற பதம், "அது" என்ற பதத்தால் சூழ்ந்திருக்க. ஏற்றுக்கொள்ளப் பெற்ற "ஆகிறாய்" என்ற பதமும் என்ற இம் மூன்றோடும் பொருந்தியவன் பிறவி நீங்க அகண்டப் பொருள் ஆவான்.  இவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்டவன் இவ்வுடல் ஒழியச் சிவன் ஆவான்.
 
2438: உயிர் தன்னை அறிந்து நிற்பதே தொம்பதம் :
திருவருளால் பெறும் நாத உபாசனையில் நின்று பூதம் முதலாகப் பேசப்படும்தொண்ணூற்றாறு கருவி பேதங்களையும், நாதாந்த நிலையில் நீங்கி, வேதம் உணர்த்திய நீ என்ற பதமாதல் உண்மையான நிலையாகும்.
 
2439: சத்தியுடன் சிவம் கலந்திருக்கும் அசிபத நிலையை வாக்கால் சொல்ல  இயலாது!
'தத்பதம்' என்பதும், 'துவம்' 'பதம்' என்பதும் திருவருளால் பொருந்தியிருப்பதும் 'அசிபதம்' ஆகும்.  எல்லாவற்றாலும் அளவினால் அளவிட்டுக் கூற முடியாத சிவபெருமான், பரையின் விளக்கத்தில் கற்பனையாக இல்லாமல் உண்மையாகவே அசிபத நிலையில் கலந்தருளுகின்றான்.  உயிர்களைப்
பந்தத்தில் சேர்ப்பதும் பந்தத்தினின்று நீக்கிப் பரத்துடன் சேர்ப்பதும் பரையே ஆகும்.
 
2440: உயிர் சிவத்துடன் கலந்திருக்கும் இன்பத்தைச் சொல்லால் சொல்ல இயலாது :
உயிரும் பரமும் அசிபதத்தில் பொருந்தித் - தங்கு தடையற்ற சிவமும் கலந்தால் உவமம் காட்ட இயலாத பாலும் தேனும் அமுதமும் போன்று  அந்த இன்பப் பொருளால் வாய் பேசா மௌனத்தில் திகழ்வதாகும்.
 
2441: சீவன் சினாக ஆவது அசிபதத்தால்  அகும் :
தொம்பதம் (சீவன்) தத்பதமாக (பரமாக) மாறுவது அசிபத நிலையில் உள்ளது.   சிவனை நம்பிய சீவன் சிவத்தன்மை விட்டுப் 'பரன்' என்ற பேரைப் பெற்றுச் சிவன்ஆகின்றான்.  மேலான உண்மையுடைய பெருவாக்கியத்தில் அழகிய அசி என்ற பதத்தின் செம்பொருளை உணர்த்திச் சிறப்பு மிக்க நந்தியின் சிவ
பெருமான் எங்களை ஆண்டருளினான்.
 
2442: முப்பதத்தில் உணர்வைச் செலுத்தி நிற்பவர் சிவமாய் விளங்குவர் :
ஐம்பது எழுத்துக்களும் வாக்கின் வடிவான சத்திகள் என்பதை மக்கள் அறியாதவர் ஆவர்.  அவருள் அறிந்தவர் சிலர் சத்திகளைக் கொண்டே இறைவனை நாடி உரைக்கப்படும் முப்பதத்தால் உணர்த்தப்படும் பொருளில் பிராணயாமப் பயிற்சி செய்து உணர்வைச் செலுத்தி விந்து நாதமாய்ச் சிவமாய் விளங்குவர்.
 
2443: ஆன்மா ஐம்பொறி அறிவை விடுத்துப் பக்குவம் அடைதல் :
நாதஒலியை அறியும் ஆன்மாவின் நிலை நழுவினால் சாக்கிராதீதம் உண்டாகும்.  ஐம்பொறிகள் ஐந்தும் சத்தம் முதலியவற்றை விடப் - பரம் ஆகும்.  இந்த ஐம்பொறி அறிவு மூன்றும் இரண்டும் ஒன்றும் நீங்கவே சிவன் அநாதியான நின்மலச்சாக்கிரம் முதலியவற்றைக் கூட்டி உயிர்களைப் பக்குவப்படுத்துகிறான்.  உள்ளம் நாதாத்தில் பதிந்த போது சத்தம், பரிசம், ரூபம், கந்தம், இரசம் முதலிய ஐந்தும் புலப்படாது.
 
2444: உயிர் துரியாதீதத்தில் பொருந்தியிருப்பது அசிபத நிலையாகும் :
ஆன்மா மேலான நின்மலத் துரியத்தில் நனவு நிலையில் விரியாத காலத்து நின்மலக் கனவு அமையும்.  இதில் அலையில்லாத கடல் போன்று அசைவின்றி இருக்கும் நிலையே துரிய சுழுத்தியாகும்.  சிவத்திடம் பொருந்திய போது அதுவும் நீங்கிய நின்மலத் துரியமே அசிபதமாகும்.
 
20. முப்பரம்.  மூன்று பரம். சூரியமண்டலம், சந்திரமண்டலம், அக்கினிமண்டலம் என்னும் மூன்றிலும் ஆன்மா நிற்கும் நிலை :
 
2445: குண்டலினி சீவர்களைப் பக்குவம் செய்தருளல் :
என் உடலில் இயல்பாகவே சுற்றி எழுகின்ற அக்கினிமண்டலம், சூரியமண்டலம், சந்திர மண்டலம் என்பனவற்றுள் விளங்கும் சிவனை, இளங்கொடி போன்ற குண்டலினி சத்தி தாங்கி நின்று உயிர்கட்கு இன்பத்தை விளைவித்து,  கீழ் முகம் கொண்டு அக்கினி மண்டலத்துள் பக்குவம் அடையச் செய்து நன்மை அருளுகின்றாள்.
 
2446: குண்டலினி மேலே சென்ற போது சிவக்காட்சி பெற்று  ஆன்மா சாந்தியடையும் :
குண்டலினி சத்தி தலையைக் கடந்த போது வான் மண்டலம் முழுவதும் பரவி உள்ளது. அது மிகவும் மேம்பட்ட பொருளாக விளங்கும்.  அவளுடன் பொருந்திய சிவன் அங்கு எல்லாப் பொருளிலும் முழுமையாய் நிறைந்துள்ளது.  கன்று கதறிய போது ஓடி வரும் தாயைப் போன்று சீவன் நினைந்த போது அருள் பொழிவன் இறைவன்.  அவன் அருளிய பின்பு, அந்தச் சீவன் குன்றின் மீது இட்ட விளக்கைப் போன்று ஒளி பெறும்.
 
2447: சிவமே குருவாக வந்து இன்பத்தை அருள்வான் :
முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்த நிலையில் விளங்கும் பரம், சொல்லாமல் சொன்ன உபதேசத்தைச் சொல்லப் புகுந்தால், சிவபரம்பொருள் வேறாய் வெளிப்பட்டுக் குருமேனி தாங்கி அருளிய இன்பத்தைப் போற்றிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
 
2448: தத்துவங்களின் குறும்பு நீங்கி, ஆன்மா மிக மேலான நிலையை அடையும்:
தத்துவங்களின் பற்று நீங்கப் - பொருளைப் பற்றிய விஞ்ஞானகலர் நிலை அடைந்து ஆன்மாக்கள் சதாசிவம் ஆவார்.  அப்படிப் பற்று நீங்க, நாதத்தைத் தொழுவதால் நாத வடிவான சிவத்தின் அறிவே ஆன்மாவின் அறிவாகும்.  சீவ போதம் கெடச் சிவப்பற்று மிக மேம்பட்டவர்க்கே, பழைய தத்துவங்களின் பற்று நீங்கிப் பற்றிக் கொண்டுள்ள சிவ அறிவு மிக்குப் பரமாகக் கூடும்.
 
2449:ஆன்மாவுக்கு இன்பத்தைத்தந்து மிக மேன்மையாகச் செய்வது சிவம்:
மேலான சதாசிவ பதவி அடைந்தவர் பாசம் பற்றாத மிக மேன்மையான நிலையை அடைந்தவர் ஆவார். அவர் சிவத்தைச் சார மிக மேன்மையானசிவானந்தம் விளங்கும்.  இவ்வாறு ஆன்மாக்களை மிக மேன்மையாய்ச் செய்வது அறிவின் வடிவான சிவமாகும்.
 
2450: உயிர் தற்பரமாய் நிற்கும் :
நின்மல சாக்கிரத்தில் (நனவில்) கலை வித்தை அராகம் புருடன் மாயை என்னும் ஐந்து தத்துவங்களும் நீங்கி கருவி அறிவையும் விட்டு, ஆன்மா தனித்து நின்ற போது, நினைவையும் விட்டு நீங்கிய துரியாதீதத்தில் நேயப்பொருளான சிவத்தைச் சார்ந்து அறிவு வடிவான உயிர் தற்பர நிலையை
அடையும்.
 
2451: பராதீத நிலையில் சிவத்தை நாடியிருக்க வேண்டும் :
தன்னைத் தூய்மையாகக் காணலும், தன்னிடம் விரிவாகக் காணலும், பின்பு  கருவி கரணங்களைக் கொண்ட ஆன்மாவின் நிலை, மாறிச் சிவனும் சீவனும் கலந்து தத்துவங்களை விட்ட நல்ல பராதீத நிலையில் அகரத்தை ஆதியாகவுடைய பிரணவ வடிவான சிவத்தை நாடுக.
 
21. பரலட்சணம்.  (பரையின் இயல்பு)
 
2452: ஆன்மா ஒளி பெற்று இருள் கெடப் பரவுதல் :
நின்மல துரியாதீதத்தில் விளங்கும் நந்தி ஆன சிவம் பரந்து நிற்கும் தன்மையும் அறிவும் கொண்டது.  ஆன்மா துரியாதீதத்தில் தன் அறிவை இழந்து நிற்பன்.  ஆன்மாவில் சந்திர மண்டலம் விளங்கி ஆணவமாகிய இருளை விட்டுச் சிவத்துடன் ஒன்றாய்ப் பொருந்தினால், சிவம் உயிரில் பதிந்து தனது பரப்பையும் அறிவையும் பொருந்தும். 
            உட்பார்வையில் ஆன்மாவுக்கு முதலில் விளங்குவது காரிருள் மண்டலம்  ஆகும்.  அதுவே ஆன்மாவின் வடிவம்.  ஆன்மாவின் இச்சா ஞானச் செயல்கள் கெட்ட போது விளங்கும் ஒளியில் உள்ளம் பதிவது பரை யோகம்.  மிகவும் பதிந்து அறியும் நிலை விட்ட பொழுது "பரை போகம்" என்பர்.  அதற்கு 'முத்தி சாக்கிரம்' என்ற பெயரும் உண்டு.
 
2453: பக்குவம் உடையவர் :
சிவன் முதலும் முடிவும் இல்லாத மேலான தலைவர்.  அவர் பேரொளி வடிவம் உடையவர்.  எங்கும் நிறைந்தவர்.  நல்லவர்க்குத் தோன்றுபவர்.  அல்லார்க்குத் தோன்றார்.  செம்மையோடு விளங்குபவர்.  அந்தச் சிவஞானத்தை அவ்வாறு உணர்வில் பெற்றவர் நல்வினை உடையவர் ஆவர்.
 
2454: ஆடும் பெருமானைக் காண வல்லார்க்கு மலம் நங்கிப் பிறப்பு இல்லையாகும்.
நின்மல துரியத்தில் (பேருறக்கத்தில்) சீவன் பரையோகத்தில் ஆழ்ந்து ஆணவம் அற்று விளங்கும் நிலையைக் கடந்து அது தூய்மை அடையும் துரியாதீதத்தில் (உயிர்ப்பு அடக்கத்தில்), அந்தச் சீவர்களுக்கு வீடு பேற்றை அளிக்கப் பரவெளியில் நடனம் செய்யும் பெருந் தலைவனான சிவத்தைப் பிரணவச் சுனையில் துருவிக் காண வல்லவர்க்கு  எவ்வகைப்பட்ட  குற்றமும் இல்லை. 
 
2455: உயிர் சிவத்துடன் பொருந்திய பின் குண்டலினி சத்தி செயல்படாது:
செந்நிறமான நாதத்தின் முன்பு வெண்மையான இயல்பு கெட்டு ஒடுங்கும். அது போன்று, உண்மையான பரசிவத்துடன் சீவன் தன் முனைப்பு அற்று ஒடுங்கும்.  பொய்யான உலகம் என்று கண்டு உலக முகத்து  ஓடாத உள்ளத்துடன் நிற்பதுடன்  எண்ணுவதை கைவிட்ட பாழில் குண்டலினி சத்தியாகிச் சிவமேரு என்ற பிரணவ உச்சியில் விளங்கும் தன் கணவனுடன் ஒன்றாவாள்.  
 
2456: சிவமேருவை அடைந்த சீவர்களுக்கு சிவன் அச்சத்தைக் கெடுத்து ஆட்கொள்வான் :
சிவமேருவில் நாத சத்தியுடன் பொருந்திய சீவர்க்கு கலை முதலிய தத்துவங்கள் ஒடுங்கும்.  ஒடுங்க எஞ்சியுள்ள சுத்த மாயை அசுத்த மாயையின் பிணிப்பு அடியுடன் மீண்டும் முளையாதபடி நீங்க, துவாதசாந்தத்தில் உண்மைப் பொருளான சிவம் விளங்க அப்பெருமான் அச்சத்தை நீக்கி  என்னை அடிமையாய் ஏற்று ஞான நிலை பெறுமாறு செய்தான்.
 
2457: சிவன் அன்பர்களின் வடிவத்தை உணர்த்தித் தன் சத்தியைப் பதிப்பித்து அருள்வான் :
என் உண்மை நிலை இன்னது என உணர்த்தினான் நந்தியெம்பெருமான்.  அவன், என் உண்மை வடிவை அறிந்தும் இதுவரை சொல்லாத பரவெளியுடன் அறிவுடன் செல்லுமாறு செய்து பின் பிரணவ ஒளியில் ஆன்ம வடிவம் வேறாய் விளங்கத் தன் சத்தியை அளித்துத் தற்பரம் ஆக்கினான்.
 
2458: இறைவன் தன்னை அளித்த போது தான் எல்லாமாய் இருப்பது தெரியும் :
நுண்மையான பூத நிலையில் விரிந்தும், பெரும் பூத நிலையில் சுருங்கியும், மண்,விண்,தீ, நீர், காற்று, சூரியன், சந்திரன் என எங்கும் நிறைந்து அகண்ட வானத்தில் எல்லாவற்றையும் இறைவன் ஒருவனே தாங்கி நின்றனன்.
 
2459: பரையே ஐந்தொழில் நடத்துபவன் :
அருவத் திருமேனி நிலையில் பரன் என்பது பரை என்பது ஒரே இடத்தில்உள்ளவை.       இலயத்தில் பரனாக உள்ளது சீவ சங்கற்பம் அமைந்த போது பரன் என்ற நிலையிலிருந்து பரை நிலையை அடையும். அந்தப் பரையே பரனுக்கு உடல் ஆகும்.  தனு கரண புவன போகங்களைச் சீவர்களுக்குப் படைத்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தால்  பரை ஆதிசத்தி, இச்சாசத்தி, ஞானசத்தி, கிரியா சத்தியாக ஆகி பெருமை மிக்க பரனிடத்து அகலாமல் இருந்து படைப்பு முதலிய ஐந்தொழில்களைச் செய்து நடிப்பாள்.
 
2460: விந்துவின் செயற்பாடு :
உடம்புக்கு மேல் கீழ் சூழ இருந்து மெய் வாய் கண் மூக்கு செவி என்பன வற்றைக் காக்கும் விந்து சத்தி, பரையுள் பரையாக, அருவமான சிவம் சத்தி நாதம் விந்து ஆகிய நான்கின் ஞானத்தைப் பெறும்படி செய்து ஆணவ மலத்தில் கட்டுண்டவர்களை நடத்தும்.
 
2461: பரையினது ஒளியில் இருப்பவர் மாயையால் துன்புறல் இல்லை :
பரையினது ஒளி வேறு வேறு இயல்பு உடையதாய், ஆறு ஆதாரங்களில் பொருந்தி ஆறு வகையான வேறுபாடுகளை அளிப்பதாய் வேறு வேறு தத்துவங்களை மாயையால் தொழிற்படுத்துகிறது.  மாயை ஒளியைத் தூண்டுவதாய்ச் சீவனை அசைவித்து மூச்சை இயக்கி உணவை உண்பித்து உறக்கத்தையும் அடையுமாறு செய்யும்.  ஆனால் மாயையின் செயலான  தத்துவங்களைக் கடந்து பர ஒளியில் பொருந்தியிருத்தலே ஆன்மா அடையத்  தக்க பேறாகும்.
 
2462: ஆன்ம அறிவு கெட்டுச் சிவ ஒளியில் நிற்பதே மேலான நிலை :
தனது பரம் என்றநிலை ஒப்பில்லாத பேரொளியில் நிலை பெற்று உள்ளது.  அதுவே மேலான ஒப்பில்லாத ஞானமும் தத்துவங்களை அழித்து நிற்கும் அறிவும் ஆகும்.  ஆன்ம அறிவு நீங்கித் தன் ஒளியை அறிந்து சிவப்பேரொளியில் புகுந்து சுட்டி அறிகின்ற அறிவை விட்டு நிற்பதை விட இங்கு ஒப்பாகச் சொல்லக் கூடியது ஒன்றும் இல்லை.
 
2463: துரியாதீத நிலையில் பொருந்திக் காரணத்த அழிக்காதவர் தூய்மை உடையவர் ஆகார் : பரவெளியில் சிவத்தைத் துரியாதீத நிலையில் கண்டு ஒன்றானவர் பரம் ஆவார்.  தூய மாயையைப்பொருந்திக் காரணத்தை அழிக்காதவர் தூய்மை உடையவர் ஆக மாட்டார்.
 
2464: ஆன்மா சிவ சத்தியுடன் பொருந்தியிருக்கும் :
வான் காற்று தீ நீர் நிலம் என்பவை இலயமாகும்.  கோயிலான தற்பரமே அந்தத் துரிய நிலையில் விளங்கும் சிவம் ஆகும்.  வான் காற்று தீ நீர் நிலம் என்பனவற்றில் நிறைந்து நிற்கின்ற வெளியாகிய சத்தியே அவனது வடிவம் ஆகும். 
 
2465: துவாத சாந்த வெளியில் சிவனை எண்ணியிருப்பின் அருள் தானே பொருந்தும் :
பன்னிரண்டாம் நிலையான துவாத சாந்தப் பெருவெளியில் பரவிய கதிர்களையுடைய சிவத்தைப் பொருந்தும் வண்ணம் நினைக்கின்ற அருமையான சிவயோகிக்குச் சிவனருள் தானாகவே வந்து பொருந்தும்.  எனவே இந்த நிலையை நழுவ விடாமல் இருங்கள்.  உயிர்களுக்குச் சொல்லக் கூடியது இதை விட வேறு ஒன்று இல்லை.
 
22. முத்துரியம்:  சீவ துரியம்; பர துரியம்; சிவ துரியம்.
 
2466: சிவதுரியத்தில் சீவன் பொருந்தியிருத்தலே தொந்தத்தசி நெறி :
உயிர் கேவல சாக்கிரம் கனவு உறக்கம் என்பனவற்றைக் கடந்து சீவதுரியத்தை அடையும்.    சீவனுக்கு ஆதியான பரமும் நனவு கனவு உறக்கம் என்ற மூன்றையும் கடந்து பர துரியத்தை அடையும். சிவனும் பரனைப் போன்று நின்மல நனவு முதலிய மூன்றைக் கடந்து துரியத்தை அடையும்.   இப்படி 'தொந்தத்தசி' என்ற பெருவாக்கியம் விளைக்கும் நெறி அமையும்.   "தொந்தத்தசி" என்பது "தத்துவமசி" ஆகும்.
 
2467: சீவ பர துரியம் அடைதல் :
சீவனின் நனவில் பொருந்தும் துரிய நிலையே தொம்பதம் ஆகும்.  சகல சாக்கிரத்தில் உள்ள துரியத்தில் ஆன்மா பரதுரியம் பொருந்தும்.  சீவன் அப்பர நிலை நீங்கிச் சிவனிலை அடைவது நின்மல நனவில் ஏற்படும் துரியம் (பேருறக்கம்) ஆகும்.  மேன்மை பொருந்திய மேல் கூறப் பெற்ற சீவ பர சிவ துரிய நிலைகள் இவ்வாறு அமையும்.
 
2468: நனவில் சீவன் அடையும் பத்து நிலைகள் :
சீவன் விளங்கும் துரியத்தில், நனவு, கனவு, உறக்கம், பேர் உறக்கம் என நான்கும், பணியும் பரதுரியத்தில் பொருந்தும் நனவு, கனவு, உறக்கம், பேர் உறக்கம் என்னும் நான்கும், மேலான பரமாகிப் பொருந்தும் சீவ பரசிவச் சேர்க்கையில் சீவதுரியம், பரதுரியம் என்ற இரண்டும் சேர்த்து சீவபர துரியத்தில் உள்ள விரிவாகிய நிலைகள் பத்தாகும்.
 
2469: சீவன் சிவத்தின் இரு திருவடியைப் பொருந்தியிருக்க வேண்டும் :
பத்து நிலைகள் பொருந்திய சீவ பர துரியத்தில், சிவத்தை அடையும் பொருட்டு உபதேச முறைப்படி நின்று பராபரச் சேர்க்கையில் ஒரு முடிவை அடையச் செய்கின்ற நாத விந்துக்களான இரண்டு திருவடிகளையும் சேர்த்து நிற்பாயாக!
 
2470: துரியத்தில் இறைவனை இடைவிடாமல் நினைத்திருக்க வேண்டும் :
சீவ ஒளி விளங்கும் துரிய நிலையில் நீங்காது பொருந்தியிருங்கள்.  இதை நீங்கள் அடைய முடியாது என்று எண்ணினால், அடையக் கூடிய நெறியை உணர்த்தும் ஞான நூல்களைச் சிந்தித்திருந்தால் உதடுகள், பல், நா பொருந்திச் சொல்வதற்கு மேற்பட்ட சிவ தத்துவம் நாதமாய் அமையும்
 
2471: உண்மை அறிந்தவர் :
அசத்தான முப்பத்தாறு தத்துவங்களையும் விட்டுச் சித்து வடிவான பரமாய், சார்ந்திருந்த சுத்த மாயை அசுத்த மாயைகளை அருள் சத்தியால் சிதைத்து அதன் விளைவான பிரிவற்ற சிவசத்தியைப் பொருந்திடும் இயல்பை, நெறி காட்டும் முடிவைச் சிவ நெறியில் ஈடுபட்ட அன்பர்  அறிந்திருந்தனர்.
 
2472: சீவன் பரதுரியத்தில் தற்பதமாய் விளங்கும் :
நனவில் நான்காம் நிலையான துரியத்தில் தன் உயிர் விளங்கும் 'தொம்பதம்' என்ற ஒளி நிலை ஆவது போல் வினைகளினின்றும் நீங்கிய சிவன் நின்மலச் சாக்கிரத்தை ஆதியாக உடைய நான்காம் நிலயான நின்மல துரியம் அடைய பரதுரியம் அமைந்து அதனையும் கடந்த துரியாதீதத்தில் தற்பதம் என்ற
நிலையை அடையும்.
 
2473: முத்துரியம் கடந்து விளங்கும் சிவம் ஆன்மாக்களை ஆட்கொள்ளும் :
முத்துரியத்தில் திருவருளை நம்பி வாழும் வாழ்க்கையை உடைய உயிர் 'தொம்பதம்' என்றும்; ஆருயிரைச் சிவத்துடன் கூட்டும் திருவருள் 'தற்பதம்' என்றும் சொல்வது போல் நம்பத் தகுந்த மூன்றாம் துரியமான சிவ துரியம் அழகிய உலகை நினையாத மிக நுண்ணிய நிலையாகும். அங்கு அப்பால் விளங்கும் பரம் பொருள் ஆன்மாக்களை ஆட்கொள்ளும் சிறப்பு மிக்க நந்தியாகும்.
 
23. மும் முத்தி : சீவ முத்தி ; பர முத்தி ; சிவ முத்தி :
 
2474: சீவ முத்தி, பர முத்தி, சிவ முத்தி :
சீவன் தன் முத்தி நிலையைத் துரியாதீதத்தில் பெறும்.  ஆன்மா தன் செயலற்று அருள் வழியே நிற்கும் நிலையே பர முத்தி எனப்படும்.  சிவ முத்தி என்பது சிவானந்தம் ஆகும்.  மேற் சொன்ன முறையில் மூன்று இடங்களிலும் சீவ முத்தி பர முத்தி  சிவ முத்தி என்று மூன்று வகைப்படுவதாய்ப் பிரணவத் தொனியின்
வழியே செயலின்றி எண்ணியிருப்பின் நாதாந்தம் அமையும்.
 
சீவன் முத்தி : ஓர் உயிர் தான் பிறப்பதற்குரிய காரணத்தை விட்டு விட்டபடியால் பிறக்க வேண்டிய காரியம் இல்லாது ஒழிதல்.   அதாவது உலகம் பொய்என்றும் தீமையைத் தருவது என்றும் கொண்டு வைராக்கியத்தால் உலகத்தை விட்டு நிற்பது நிகழும்.
 
பர முத்தி : உயிர் தத்துவங்களை விட்டுப் பர நிலையில் தங்கும் போது பொருந்துவது.  இதன் பொருள் பிறக்க வேண்டிய நியதியைக் கடந்து அறிவு வடிவாய்ச் சிவத்தில் கலக்காமல் நிற்பது என்பதாம்.  இந்நிலையில் உள்ளவர் பிரளயாகலர் மற்றும் விஞ்ஞானகலர்.
 
சிவ முத்தி = சிவானந்த முத்தி : உடல் உள்ள போதே சிவானந்தத்தில் திளைத்து உடலை மறந்து வாழ்ந்து சிவத்துடன் ஒன்றாதல்.
 
2475: சிவத்துடன் பொருந்தியிருத்தலே முத்தியாகும் :
பிறவிப் பயனை அறியாதவரின் உயிர் பிறவியில் வந்து கூடும்.  பிறவிப் பயன் இறைவனை வழிபடுதல் என்று அறிந்த உயிர் இறைவன் திருவருளை நாடிப் பயன் பெறும்.   உலகில் உள்ளத்தே உள்ள கருவி கரணங்களாலும் வெளியே உள்ள கருவி கரணங்களாலும் உயிருக்கு நன்மையாவது ஏதுமில்லை என்பதை அறிந்து உலகையும் கருவி கரணங்களையும் விட்டு நீங்கி நின்று சிவத்துடன்
பொருந்துதலே முத்தியாகும்.
 
2476: மும்மலங்களை அழித்துச் சோகம் பாவனையில் நிற்பவர்க்குச் சிவன் வெளிப்படுவான் :
சிவத்தை நினைந்து சிவமாகி, ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்று குணங்களையும் அழித்து, தாமத இராசத சாத்துவிகம் ஆன முக்குணங்களையும் தொலைத்துத் தவத்தால் அடையும் மும்முத்தி என்ற "அது நீ ஆகின்றாய்" என்ற அறநெறி நின்று, சோகம் பாவனை செய்பவர்க்கு மலம் இல்லாச் சிவன், தானே வெளிப்பட்டருள்வான்.
 
2477: சித்தி முதல் சமாதி ஈறாக எல்லம் சிவம் :
தளையைப் போக்கும் பரசிவனே, எண் பெருஞ்சித்திகளும் வீடு பேறும் மேலான  சிவமுமாகும். நின்மல துரியாதீதமும், தன்னைப் பற்றி வரும் துன்பம், பிற உயிர் பற்றி வரும் துன்பம், தெய்வத்தைப் பற்றி வரும் துன்பம் என்ற   மூன்று துன்பங்களைத் தொலைக்கும் சிவானந்தமும் மேலான சமாதியாகும்.
(காமம், வெகுளி, மயக்கம் என்பனவற்றையும் மூன்று துன்பங்கள் எனலாம்.)
 
24. முச் சொரூபம்.  சீவசொரூபம் ; பரசொரூபம் ; சிவசொரூபம் :
 
2478: சிவன் வீடு பேற்றை அளிக்கும் முறை :
ஆணவ மலத்தில் கட்டுண்ட உயிர்கள் பக்குவமாதற் பொருட்டு, இறைவன் கன்மம், மாயை, மாயேயம் திரோதாயி என்பனவற்றைக் கூட்டி, ஆணவம், வலிமை கெட, நன்மை தீமை இரண்டையும் சமமாய் எண்ணும் இருவினை ஒப்பு வந்த நிலையில், சிவோகம் பாவனை மேற்கொண்டு செய்து, மேலும் ஒரு நிலையாக்கிச் சீவ பர சிவ நிலைகளை அடைந்து நீங்கி, அவ்விடத்து இறுதியில் பழமையான பரம் பொருளின் உண்மையில் அந்த உயிர்களை நிலை பெறச் செய்வான்.  (உண்மையான உயிரின் வடிவம் ஒளி வடிவானது.  அ•து அகக் கண்ணுக்கே புலாப்படக் கூடியது.  சீவ பர சிவ ரூபங்கள் எல்லாம் அணுக்களால் ஆனவை.)
 
2479: பிறப்பினின்று நீங்கும் ஆன்மாக்கள் :
சகலர்,  பிரளயாகலர்,  விஞ்ஞானகலர்  என்னும் மூவர்கள் வாழ்கின்ற இடம் பிரகிருதி மாயை, சுத்த மாயை, அசுத்த மாயை ஆகும்.  இந்த மூன்று மாயைகளிலும் முப்பத்தாறு தத்துவங்கள் தோன்றியுள்ளன.  சீவனின் அண்ட கோசத்தில் உள்ள இம் மூன்று மண்டலங்களிலும் பொருந்தி நிற்கும் ஆத்ம பேரொளியைக் கண்ட போதே எடுக்க வேண்டிய உடலின் கணக்கு முடிந்து பிறப்பு நீங்கும்.
 
2480: சிவன் சீவர்களுக்குச் செய்யும் அருளைச் சொல்ல முடியாது :
உலகம் தோன்றிய வண்ணமே ஒடுங்கிப் பல ஊழிகள் போயின.  அப்போது ஊழிமுடிவில் சீவன் பரன் சிவன் என்ற மூன்றும் ஒன்றாய் ஆராய்ந்து உணரும் தன்மையில் சீவன் உடனாயிருந்து உபகரிக்கும் அளவையும் பெருமையையும் உணர்ந்து தெளிய வல்லவர் யாரும் இல்லை.
 
2481: இறைவன் உயிர்களைப் படைத்து அவற்றுடன் ஒன்றாய் வேறாய் உடனாய்க் கலந்தருளல் :
உயிர் இனங்களைப் பெரிதாய் முதலாக எண்ணப்படும் வேறுபாடுகளாய் விகாரப்படுத்தித் தான் அருவமாயும் உருவமாயும் அருவுருவமாயும் ஒளிவடிவாய் வெளிப்பட்டு அருள் செய்யும் நாதசத்தியின் தலைவனான இறைவன் உயிர்களின் தொகுதி உருவமாயும் உடன் இருப்பவனாயும் அங்ஙனம் இருந்தாலும் அவற்றால் அறியப்படாதவனாயும் விளங்குகின்றான்.
 
2482: சிவனது திருவடிகளைப் பற்றி வாழ்க :
மாணிக்க மணியின் முன் வெண்பளிங்கு அதன் வண்ணம் தன்மை என்பனவற்றைப் பெற்று மாணிக்கம் என்று கூறுமாறு நிற்கும். அது போல் தணிந்த இயல்புடைய ஆன்மா சீவ சொரூபம் பர சொரூபம் சிவ சொரூபம் என்ற சத்திகள் பொருந்திய போது அவையேயாய் ஆகும்படி செய்த பெருமை உடைய சிவனது
திருவடிகளைப் பற்றி நிற்கும்.
சீவ சொரூபம் = உயிர் மும்மலங்களுடன் கூடிய நிலை.
பரசொரூபம்= உயிர் மலங்களின் குற்றம் நீங்கித் தத்துவங்களைக் கடந்து பரவி உள்ள நிலை.
சிவ சொரூபம்=உயிர் சிவத்துடன் கூடிச்சிவனது இயல்பைப் பெற்றிருக்கும் நிலை
 
2483: அறியாமை நீங்குமாறு :
பளிங்கைப் போன்ற ஆன்மா மாணிக்கம் போன்ற சிவ ஒளியின் பிரகாசம் தோன்ற நன்மையைச் செய்யும் கண்மணியில் நாடி, ஒளியுடைய "தத்துவமசி" என்னும் முப்பதத்தால் போதப் பாழ் சீவப்பாழ் சிவப்பாழில் நின்று, சொல்லால் அடைய முடியாத பிரணவத்தால், ஞான முத்திரையின் முடிவில் பெறும் அனுபூதியால்
அறியாமை ஆன இருள் நீங்கிப் பிறவி அறும்.
போதப்பாழ் = உயிர்க்குரிய சுட்டறிவு பாழாவது.
சீவப்பாழ்   = தான் எனும் அகங்காரம் கெடுதல்.
சிவப்பாழ்   = சிவம் என்றும் உயிர் என்றும் பிரித்து அறிய இயலாத நிலை.
 
2484: முச்சொரூபம் கடக்கும் :
உயிரின் பக்குவத்துக்கு ஏற்பக் கவிழ்ந்தும் நிமிர்ந்தும் இரண்டு மாறுபட்ட தன்மையுடைய ஆயிரம் இதழ்த் தாமரையுள் விளங்கும் பேரொளியைச் செல்லும் மூலாதாரத்தினின்றும் தோன்றும் நாதமானது அருளால் கிட்டுமானால்,  அங்கே பொருந்தும் சந்திர மண்டல ஒளியை வழங்குபவளான அமுதேஸ்வரி வெளித்
தோன்ற முன்பு அடைத்திருந்த மேல் வாசலைத் திறந்திருப்பாயாக!
 
25: முக்கரணம்;  ( மனம், வாக்கு, காயம் என்ற மூன்று கரணம் ) :
 
2485: சீவன் பரன் சிவம் மூன்றும் வேறானவை அல்ல :                                                                              தான் தங்குவதற்குரிய இடமான தூல உடல், சூக்கும உடல், காரண உடல் என்ற மூன்றில் பொருந்திய ஆன்மா, தனக்கு அந்த உடம்புகள் வேறானவை எனக் கூறும் தன்மையைப் போல், சிவன் என்றும்
பரம் என்றும் சீவன் என்றும் உள்ள வேறுபாட்டையும் ஒன்று என்று உணர முடியுமோ?
 
2486: இரு கண் மலர்களையும் சேர்த்துச் சகஸ்ர தளத்தில் பார்வையைச் செலுத்தினால் சிவபதம் கிட்டும் :
ஒளியை உடைய கண் பார்வையை மேலும் ஒளியைப் பெறும்படி செய்து, பிரணவத் தியானத்தால் மூலாதாரக் கனலை எழுப்பி, சூரிய கலை சந்திரகலை ஒன்றாகுமாறு சுழுமுனையில் சேர்த்துத் தலைக்கு மேல் உள்ள சகஸ்ரதள வெளியில் பொருந்தித் தியானம் முதிரச் சிவபதம் பொருந்தும்.
(சகஸ்ர தளத்தில் பார்வையைக் குரு காட்டிய வழியில் செலுத்தினால், மூக்குத் துளையின் வழி மூச்சு புகுந்து மேலே பிரமரந்திரத்தை அடைந்துகருவிகளின் செயல் நீஙித் தலைக்கு மேல் ஒளி தோன்றும்.)
 
2487: நந்தியெம்பெருமானின் அருட்செயல் :
மனம் வாக்கு காயம் என்னும் மூன்று கருவிகளின் சோர்வை நீக்கி அங்ஙனம் சோர்வு அடையாமல் எல்லாவற்றையும் ஒரு சேர அறியும் திறத்தைச் சிவபெருமான் தந்தான்.  உடம்பைப் பற்றிய சதாசத்தியான
மனோன்மணி கவிழ்ந்த சகஸ்ர தளத்தில் நின்று விட அதன் மேல் விரிந்த சகஸ்ரதளத்தில் உன்மனி கலையில் சமாதி பொருந்தும். 
 
26. முச் சூனிய தொந்தத் தசி :
(தொம்பதம், தத்பதம், அசிபதம் ஆகிய முப்பதமும் நீங்கிய பெரு நிலை)
 
2488: தொந்தத்தசி :
'அது' என்ற தற்பதம், 'நீ' என்ற தொம்பதம், 'அதுவாக ஆகின்றாய்' என்ற அசிபதம் என்ற பழைய மூன்று பதங்களும் நின்மல துரியத்தில் விளங்க, அத் தோற்றத்தில் உயிர் பரன் சிவம் நிற்கும்.  இம்மூன்றில் சொல்லப்படும் பதமே தொந்தத்தசி ஆகும்.
 
2489:தொந்தத்தசி பதத்தில் மலமும் குணமும் நீங்க ஆன்மா ஒளி பெறும் :
தொந்தத்தசி என்னும் மூன்றில் பழைய கன்மமும் மாயையும் ஆணவமும், தொந்தத்தசி மூன்றில் பழைமையான தாமதம், இராசதம், சாத்துவிகம், என்பவையும் ஆகிய மலமும் குணமும் கெடச் சிவன் தோன்றினால்  முழுமதியின் முன்பு இருள் கெட்டு ஒளி உண்டாவதைப் போல் ஆன்மப்
பேரொளி அமையும்.
 
2490: தொந்தத்தசியை இறைவன் முன் தத்துவமசி எனக் கூற வேண்டும் :
தொந்தத்தசி (நீ அது ஆகிறாய்) என்ற வாக்கியப் பொருளை சந்திரகலை சூரிய கலைச் சேர்க்கையால் அமையும் உணர்வான வாசியில் பொருந்திக் காண, அம்முறையில் யகரம் விளங்கும்படியாகச் செய்து, முடிவற்ற நிலையை அவ்வாக்கியத்தில் மேலே ஏறும் முறையில் சிவன் முன் வைத்துத் தத்துவமசி ( அது நீ ஆகிறாய்) என உச்சரிப்பாயாக.
 
2491: சிவனை முன் வைத்துத் தியானிப்பதால் உண்டாகும் பயன் :
சிவத்தை முன் வைத்துச் சந்திர மண்டலம் விளங்குமாறு செய்து, பிரணவமான உபதேசத்தை உண்மையான இதயத் தானமான சகஸ்ரதளத்தில் பொருத்தி நிற்பாயாக.  அவ்வாறு நின்றால் உண்மையுணர்ந்து சிவனுக்கு அடிமை என்று ஆன்மா இன்பமயமாய் விளங்கும். 
 
2492: உயிரிடத்தில் சூரிய சந்திரச் சேர்க்கையால் சோம மண்டலம்  உண்டாகிச் சாந்தி அமையும்.
மாயையில் தோன்றும் சீவனான தொம்பதமும் மேலான பரையிடத்து விளங்கும் பரமான பதமும், விரும்பப்படும் சாந்தியில் பொருந்தும் ஆகிறாய் என்ற அசிபதமும் ஆன அந்த வாக்கியம் மேலான தொடராகும்.  அந்த உரையான நீ அதுவாகிறாய் என்பதில் வாசியான உணர்வு பொருந்தும்.
 (சகஸ்ரதளம் விரிந்து ஒளி உதித்த பின்பு தான் பரம் விளங்கும். அந்த ஒளியில் நாட்டம் அமைந்தபோது சாந்தி ஏற்படும்.  இதுவே நீ அதுவாகிறாய் என்ற பெரு வாக்கியப் பொருள்.)
 
2493:காலம் முதலிய வேறுபாடுகளைக் களைந்தபோது சீவன் சிவனாகும் :
தேவதத்தன் என்பவன் இடத்தாலும் காலத்தாலும் மாறுதல் அடைந்த போதிலும் அவனே இவன் என்பதில் ஐயம் உண்டாவதில்லை.  அது போல் உயிர் இடத்தால் காலத்தால் வேறுபாடு அடையினும் சிவனே ஆகும்.  உடல் மாயை நீங்கிய நிலையில் 'நீ அது ஆகிறாய்' என்பர்.  அப்போது உண்மை
அறிவான உயிர் பரமாய்ச் சிவனாகும்.
 
2494:சீவன் தொந்தத்தசியை உணர்ந்து பிரணவத்தைக் கடந்து விளங்கும்:
தாமதம் இராசதம் சாத்துவிகம் என்னும் மூன்று குணங்களும் ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்று மலங்களும் அகர உகர மகரம் ஆகிய பிரணவத்தால் நீங்கும்.  சீவன் அகாரமாய்த் தூல உடல், சூக்கும உடல் காரணஉடல்களைக் கடந்து விளங்கும்துரியமும் தொந்தத்தசியால் ஆகும்.
 
27. முப்பாழ் :
மாயைப்பாழ், போதப்பாழ் (சீவப்பாழ்), உபசாந்தப்பாழ் (வியோமப்பாழ்)
ஆன்ம அறிவு விளங்குதல் = போதப்பாழ் அல்லது சீவப்பாழ்.
பர வெளியில் நிற்றல்       = உபசாந்தப்பாழ் அல்லது வியோமப்பாழ்.
 
2495: மூன்று பாழ் நீங்கப் பிறவி அறும் :
மாயையின் செயலான வித்தியா தத்துவம் ஏழினையும் ஞான விசாரணையால் அவை பொய் என்று அறிய தத்துவத் தூய்மை உண்டாகி ஆன்மசொரூபம் விளங்கும்.  உடல் பிரக்ஞைக்குக் காரணமான சிவ நிலைகள் ஏழினையும் கண்டு நீங்க ஆன்மத் தூய்மை உண்டாகும்.  காரிய காரண வாதனை நீங்குதலில் உபசாந்தமும் அகலும்; முப்பழும் நீங்கப் பிறவி அறும்.
 
2496: 'தத்துவமசி' என்ற வாக்கியப் பொருள் :
மாயப் பாழும் சீவப் பாழும் உபசாந்தப் பாழும் நிலை பெற்ற பரனின் அறிவுக்கு அப்பாற்பட்ட முப்பாழ் என்னும்படி, சிவ சத்தியான அருளில் சீவன் அடங்கி நிற்கும் மூன்று பாழ்நிலைகளாம். அத்தகைய தூய்மையான  சிவ சொரூபத்தில் அடங்கி நிற்பதே 'தத்துவ மசி" என்ற வாக்கியத்தின் முடிவாகும்.
 
2497: சிவபெருமானைப் பொருந்த முப்பாழையும் கடக்க வேண்டும் :
தனக்கு ஒப்பு இல்லாத பரவிந்து மண்டலத்தில் விளங்கும் தலைவனான நந்தியின் திருவடியை அடைய, மாயைப்பாழ், போதப்பாழ், உபசாந்தப் பாழ் என்னும் மூன்றையும் கடப்பதுவே நெறி என்று கடந்து அதற்கு மேல் அளவிட்டு அறிய முடியாத நிலையில் ஒடுங்கி நின்றேன்.
 
2498: அறிவுடையவர் செயல் :
துரியம் கடந்த சொல்வதற்கு முடியாத பாழினை, 'அடைவதற்கு முடியாத மேலாம் நிலை' என்று அறிவற்றவர் உரைப்பர்.  ஆனால் அறிவுடையவர் அரிய மேலாம் பரம் என்றே வணங்குவது அரிய முப்பாழும் கடந்த நிலை என்பதை யார் அறிய வல்லார்?
 
2499: முப்பத்தாறு தத்துவங்களையும் நீங்கிச் சிவனை அடையும் முறை :
முப்பத்தாறு தத்துவங்களும் நீங்கத் திரோதானமான நகாரமும் மலமாகிய மகாரமும் நீங்கி, திருவருட்சத்தியான பரை என்னும் யகாரமாகிய ஆன்மாவை  உண்மையான பரநிலையின் முடிவில் சிவ சத்தியுடன் சேர்ப்பிக்கும். ஆராய்ந்தால் அது வல்லவர் உயிர்களால் அறிய இயலாத 'சிவாயநம'
என்பதன் கருத்தாகும்.
 
2500: உடலைக் கடந்து நிற்பவர் :
மன மண்டலமே உடல் என்றும், உடலே மன மண்டலம் என்றும் கூறும்தன்மை அறிந்து அவ்விரண்டுக்கும் உள்ள உண்மையான தொடர்பை உணரும் ஞானியர்க்குத் தம்மைக் கீழ்ப்படுத்தும் பள்ளமும் இல்லை. மேலாகச் செய்யும் மேடும் இல்லை.  காரியப்பாழ் காரணப்பாழ் உபசாந்தப்பாழ்
என்பவை இல்லை.  உள்ளமும் இல்லை.  அவரிடம் பிரகிருதி நாட்டமும் இல்லை.  ஆதலால் அவர்
உடல் அறம் கடந்து விளங்குவர்.
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free