பேரின்பம் உன்னுள்ளே.
நீயே தெய்வம் என்றுணர். உன்னையே நீ ஒளியாக தரிசனம் செய்.

1507 - 2000. திருமந்திர விளக்கம்.

  

13. சாலோகம்.

(சிவனது உலகம் சாலோகம்.  அதை எய்தும் நெறி கூறப்படுகிறது.)
 
1507: சரியையால் சாலோகம் பெறலாம்:
சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நெறிகளால் சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் ஆகிய நால்வகை நெறிகளும் அமையும்.
அந்நான்கனுள் சரியை என்ற நெறியைப் பற்றி நிற்பவர் இறைவன் வாழும் உலகத்தைஅடைந்து அவனது அண்மையில் விளங்குவர்.    அத்தகைய உலகில் இறைவனின் அண்மையை அடைந்தவர்  அவனது வடிவத்தை அடைவர்.    இவர் இறைவனைப் போன்ற ஒளி  வடிவைப்பெற்று இந்தப் பரந்த உலகில் இல்லாமல், எங்கும் நிலை பெறும் இறைவனின் உருவாகும்.    சரியைநெறி பற்றி நிற்பவர் சிவபெருமானுடன் இலயம் அடையாமல்,  இந்த உலகத்துக்கும் வாராது சிவன் வடிவு பெற்றிருப்பர்.
 
1508: நான்கு வகைச் செயல்கள்:
சமயத்தைப் பற்றி நிற்பவர் செய்யக் கூடிய முதல் செயல் தம் உள்ளத்தில் தாம் வழிபடும் கடவுளை வைத்தல். சமயத்தில் விசேடம் என்பது அந்த வழிபாடு, கடவுளுக் குரிய மந்திரத்தை நினைத்தல்.    சமயத்தில் உள்ள மூலமந்திரத்தின் தத்துவம் தெளிதல் மூன்றாவதான நிர்வாண தீட்சை ஆகும்.  சமயத்துக்குரிய முழுக்காட்டு (அபிடேகம்) என்பது வணங்கும் கடவுளை எண்ணியபடி சமாதி கூடல்.
 
14. சாமீபம்.  (இறைவனின் அண்மையில் தங்குதல்)
1509: சாமீபத்தில் பாசம் அருளாகி விளங்கும்:
சாலோகமுத்தியில் பாசத்தன்மை கெடாமல் பசுபோல் அடங்கி நின்று பிறவியைத் தரும் சாமீபத்தில் பாசம் வருத்தாமல், கட்டுப்படுத்தாமல் அருளாக விளங்கும்.  சாரூபத்தில் பாசமானது மேலும் மேன்மையைத் தரும். சாயுச்சியத்தில் பாசமானது முழுதும் குன்றிப் பதியை அடையச் செய்யும்.  சாமீபநிலையில் பாசம் அருளாகி மேன்மையை அளித்துப் பின்பு கரைந்து சாயுச்சியத்தை அடையச் செய்யும்.
 
15. சாரூபம். (இறைவனின் வடிவத்தைப் பெறுதல் சாரூபம் ஆகும்.)
 
1510: சாரூப இயல்பு:
சாரூபம் என்பது யோகத்தின் எட்டாம் உறுப்பான சமாதியால் அடைவது.  தங்கிய ஞான நெறி பற்றி நின்றவர்க்கு அல்லாமல் கைகூடாது. இந்த நெறியால் உறுப்புடன் கூடிய உடல் சித்தி கை கூடப் பெறுவர்.  இங்கு இவரது உடம்பு குற்றம் இல்லாத யோகத்தால் திருத்தி அமைக்கப்படும்.
 
1511: இறைவன் வடிவைப் பெறுவர்:
மேரு மலையைச் சார்ந்த பொழுதே உலகில் இயங்கும் பொருள்,  இயங்காத நிலைப் பொருள் அனைத்தும் மேரு மலையைப் போன்றே பொன் நிறம் பெறும். அது போன்று நாத தத்துவத்தில் விளங்கும் குரு மண்டலத்தை அடைந்த போதே கயிலையின் தலைவனான இறைவனின் வடிவத்தைப் பெறுவர்.
 
16. சாயுச்சியம்.  (இறைவனுடன் கலத்தல் சாயுச்சியம் ஆகும்.)
 
1512: முதல் நிலை சைவம் என்பது சிவனுடன் பொருந்தி நிற்றலாகும். 
இரண்டாம் நிலை சிவ தத்துவத்தை உணர்ந்தே அதில் விளங்கும்படியான சிவ பெருமானுடன் விளங்குதல்.  மூன்றாம் நிலை சமாதியில் பொருந்தாமல் சிவம் தம்மிடம் ஒளிர்வதை உணர்ந்து கொண்டிருத்தல்.    சாயுச்சிய நிலையில் சிவத்துடனே பொருந்தி இரண்டறக் கலந்து உலகைவிட்டுச் சமாதியில் நிலைப்பட்டுச் சிவானந்தப் பேறு அடைவர்.  இதுவே சாயுச்சியம் பெற்றவர் நிலையாம்.
 
1513: பேரானந்தம் அடைவது சாயுசியத்தில்:
விழிப்புடன் தன்னை மறந்திருத்தல் சாயுச்சியம் அடைதல் ஆகும்.  விருப்பு, வெறுப்பு அற்ற நிலையில் உள்ளவரும் சாயுச்சியம் அடைந்தவரே!  சிவத்துடன் இலயமாதலும் எல்லையில்லாத ஆனந்தத்தில் திளைத்திருப்பதும் சாயுச்சியமே.
 
17.சத்திநிபாதம்.  சத்தி நன்கு பதிதல். 
உயிரை விளக்கம் அடையாமல் கட்டுப்படுத்தியிருந்த மல சத்திகள் அழிந்து அருளைப் பெருக்கும் சத்திகள் பதிவது.   அருளின் பதிதலுக்கேற்ப அறிவு ஒளிரும்.  சத்திநிபாதம் நான்கு வகைப்படும்.  அவை.
1. மந்தம்    = அற்ப அறிவைப் பெற்றவன்.
2. மந்ததரம்  = மந்தமாய் இருந்து மந்திரங்களை உபாசிப்பவன். 
3. தீவிரம் = யோகப் பயிற்சி செய்பவன்  
4. தீவிர தரம்.= ஞான நெறியைப் பின்பற்றுபவன்.
 
மந்தம்: 1514: குண்டலினியின் செய்கை:
சுவாதிட்டானத்துக்குத் தொடர்புடைய மூலாதாரத்தில் இருந்த குண்டலினி சத்தி, அஞ்ஞானத்தில் உள்ள ஆன்மாவுக்கு ஞானம் ஏற்பட, அஞ்ஞானத்தை கற்றிப் பசுவின் இயல்பையும்  பதியின் இயல்பையும்  அறியும்படி செய்து  ஆசையை உண்டாக்கி உடன் இருந்தாள்.    குண்டலினி உயிருக்கு உலகத்தில் உள்ள துக்கம், நிலையாமை முதலியவற்றை நன்கு புலப்படச் செய்து அதனால் ஆனந்தமான நித்திய சிவபெருமானை அறிவை அடையும்படி ஆசையை உண்டாக்கிக் குண்டலினி உயிரைச் சிவத்துடன் சேர்க்கும்.
 
1515: பந்தத்தைத் தரும் மூலாதாரமே தெளிவை உணர்வார்க்கு அமுதமாய் விளங்கும்.  இனிமையை அளிக்கும் நிலையை எண்ணின்,  சிவத்தை அறியும் இடமாய் அறிபவர்க்கு மூலாதாரச் சக்கரமே இன்பம் தருவதாய் அமையும்.  தேனைப் போன்ற பொருளான தெளிவை அனுபவிக்கின்றவர்க்குப் பசுக்கள் விரும்பிய புன்செய் நிலமான மூலாதாரம் விளங்கும். 
 
1516: சத்தி இறைவனுடன் கூட்டுவாள்:
ஆணவமான இருளில் எடுத்த எண்ணில்லாத பிறவிகளையெல்லாம் கடக்கும்படி செய்யும் திருவருளினின்றும் எக்காலத்தும் நீங்காதபடி திருவருளம்மை அருளுவாள்.    மயக்கம் நீங்கப் பெறாத தேவர்கட்குத் தலைவனான சிவத்துடன் பொருந்தி விந்து கெடாத இன்பத்தைத் துய்க்கின்ற இடம் மூலாதாரம் ஆகும்.
 
1517: அம்மையும் அப்பனும் வெளிப்படுவர்:
குண்டலினி இத்தகைய இருட்டறையில் இருந்ததன் காரணத்தை ஆராய்ந்தால், இருளில் பொருளால் சூழப்பெற்ற அறையில் விளக்கு புகுந்து எரிவது போன்று ஆணவம் என்ற இருளில் குரு மண்டலம் அருளால் சூழப்பெற்ற சிவசத்தியாக ஆவதற்காகவேயாகும்.
 
மந்ததரம்.
1518: குண்டலினியின் செய்கை:
குண்டலினி சத்தி மேலே போய் ஆன்மாவின் பரப்பைத் தன்னுள் அடக்கி, ஆணவத் துடன் கூடிய மலத்தோடு மயங்கியிருந்த நிலையைப் போக்கிக்,  கன்மங்கள்  யாவற்றையும் விலக்கி அறியாமையை அகற்றிச் சிவம் விளங்கக் கூடிய அருட்குணங்களைப் பதிவித்து அருள்மயமான ஞானசத்தி விளங்கும்படி செய்தாள்.
 
1519: பிறப்பு உண்டாவதில்லை.
முன்னம் பெண்ணுடன் பொருந்திக் குண்டலினியின் ஆற்றலில் விளங்கிய ஆடவர் அதை மாற்றி அமைக்கும் உபாயத்தை உணரவில்லை.  அங்ஙனம் ஆண் பெண் கூட்டுறவைத் தெய்வக்கூட்டுறவாக மாற்றி அமைக்கின்ற வழியை அறியின், அறிந்தவர்க்குத் தொடர்ந்து உண்டாகும் பிறப்பு இல்லை.
 
1520: இருள் நீங்கி அக்கினி கலை விளங்கும்:
மூலாதாரம் என்ற நிலமான சுவாதிட்டானத்தில் விளங்கும் பிரமனையும், அதன் தொடர்பான மணிபூரகத்தில் விளங்கும் திருமாலையும், அநாகதத்தில் விளங்கும் உருத்திரரையும், தொண்டையில் இருந்து மறைப்பைச் செய்யும் மகேசுவரனையும் தக்கவாறு அறிந்தவர்  இறைவனை அடைவர். இறைவனான இவன் கரிய யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவாறு ஆணவத்தை அழித்து அக்கினி கலையில் விளங்குபவன் என அறிந்து உறுதியாய்க் காதல் கொள்ளுங்கள்.
 
1521: உண்மை ஞானம் விளங்கும்:
இவ்வுலகில் உள்ள உயிர்கள் எத்தனை முறை அழிந்து தோன்றினாலும் சத்தியும் சிவமும் என்றும் அழியாப் பெருமை கொண்டவை என மொழிவர். நாள் தோறும் விடியற் காலையில் சிவசத்தியை வழிபடுவோர்க்கு அவரது சுழுமுனையில் சிவசத்தி பொருந்தி உணர்த்துவாள்.
 
1522: பரத்தைப் பொருந்தியவர்க்கு இருள் நீங்கும்:
உடலில் பொருந்தியுள்ள சூரியன் சந்திரனைத் தொடர்ந்து போய் ஒளியைக் கண்டு கொண்டோம்.  அவை பழமையாய்த் தொடர்ந்து வரும் பரசிவமாகிய பேரொளிப் பிழம்பிடம் போய் முடிவடையும்.  வண்டுகள் ஒலிக்கும் இயல்புடையசகசிர தளத்தில் ஒளியுடன் ஒளிரும் அண்ணலை நிலைபெறக் கண்டவர்க்கு அவரது உள்ளத்தில் இருளை மாற்றியருளினான்.
 
1523: சிவக்கனிச் சுவையைப் பருகுங்கள்:
எல்லா உயிர்க்கும் தந்தை சிவன்.  அவன் வாழும் தோட்டமான சகஸ்ரதளத்தில் உலகியல் இன்பம் அளிக்கும் பெண்பிள்ளை விஷயானந்தம் சாதனமாக பயிற்சி யாளனின் ஏழேழுவகைத் தோற்றத்தில் எழுந்த பிறப்புக்களும் அவற்றில் செய்த நல்வினை, தீவினைகளும் ஒழிய,   தன் உள்ளத்தில் சிவம் ஒளிராது போன இடையூறு அனைத்தும் நீங்க முதல்வனைப் பொருந்திச் சிவக்கனியின் சுவையாக நீங்கள் ஆகுங்கள்.
 
1524: குண்டலினி சத்தி பிறவியைப் போக்கிப் பெருந்தவம் நல்கும்:
அறியாமையான காட்டில் வாழும் குவிந்த கொங்கையை உடைய குண்டலினி அம்மை சிறப்பாய்த் தம்மிடம் விளக்கம் அடையுமாறு பூசை செய்து காண்பவர்க்குப் பிறப்பை நீக்கிப் பயனைத் தருவாள்.  அறியாமை காரணமாய் உள்ள மறதியைப் போக்கித் தன்னை எப்போதும்வணங்கும்படி செய்வாள்.
 
1525: குண்டலியினை வணங்குவதால் உண்டாகும் பயன்:
எட்டுத் திசைக்கும்  தலைவனாகிய  சிவத்தை  ஆறு ஆதாரங்களாகிய தாமரை மலர்களை மாலையாகக் கொண்டு சித்ரணி நாடியில் விளங்கும் குண்டலினி சத்தியுடன் பொருந்தித் துதியுங்கள்.   அவ்வாறு பொருந்தித் தியானம் செய்பவர்க்கு மயக்கம் தரும் நீல ஒளியைத் தொடர்ந்து அருள் பெற முடியும்.  சாதகர்கள் நீலஒளியைக் கண்டு மகிழ்வதில் சிறு உறக்கம் போன்ற நிலை ஏற்பட்டு உலகியல் அறிவு குறையும். அருளில் பதிவதில் உள்ள மகிழ்ச்சிளுண்டாகி இளமை நலம் அடைவர்.
 
1526: தீவிரப் பக்குவம் அமைந்தவர் பெறும் பயன்:
சத்தியின் அருள் பெற்றவனை அடைந்த பிறர்க்கு ஞானம் அமையும். அவனை வணங்கினால் அவனும் மலர் தூவி வழிபடுவான்.    அத்தகைய மேலோன் தன்னை வணங்குபவரைக் கண்டு செருக்குக் கொள்ளாமல் சமத்துவ நிலையில் நிற்பான்.  அவன் உலகம் எங்கும் போய் வரும்ஆற்றலைப் பெறுவான்.
 
தீவிர தரம்:
1527: தமக்கு என ஒரு செயல் அற்று இருப்பர்:
நன்மையில் மகிழ்வும்  தீமையில் வெறுப்பும் இல்லாது இரண்டும் சமமாக ஒத்த காலத்தில் இனிய அருட்சத்தி குருமண்டலத்தில் விளங்குவாள்.  உயிர்  ஒளி  பெறுவதற்கு இடையூறான குணங்களை அருட்சத்திப் போக்கியருள்வாள் என்ற அறிவால் தன் முனைப்பால் செயல் அற்று இருப்பின் மும் மலங்களும் கெட்டுச் சிவமாய்த் திகழ்வான்.
 
1528: சத்தியின் அருளாட்சியில் விளங்குவார்:
விந்து நாதம் என்பவை இல்லாத இடமான நாதாந்தத்தில் ஒலியை உண்டாக்கும் சத்தியை வணங்கித் தியானித்து மந்திரம் அற்ற நாதாந்தத்தில் அவளுடன் ஒன்றினால் பராபரையான அவளும் அன்போடு இவனிடம் பொருந்துவாள்.
 
1529: மேனியைச் சிவச்சோதி ஒளிமயமாகுவான்!
ஒளிப்பொருள்களான சூரியனுக்கும் மாலைக் காலத்தில் விளங்கும் தீபமான சந்திரனுக்கும் மிகவும் ஒளியை அளிக்கும் ஒப்பில்லாத பரஞ்சுடரான அண்ணலும், உண்மை ஞானத்தை விளக்கிய தலைவனுமான சிவன் -  என் மனத்துள் புகுந்து ஊன் உடம்பை ஒளிரச் செய்து எனது உயிருடன் பொருந்தினான்.
 
18.புறசமய தூஷணம்: 
இறைவனை புறத்தே காண வேண்டும் என கூறும் சமயம் புறச்சமயம்.
 
1530: சமயக் கருத்துகள் சிவ சத்தியைக் காட்டல் வேண்டும்:
கூட்டமான ஆறு சமயங்களும் உடலுள் விளங்கும் இறைவனைக் காண உதவி செய்யா. அதனால் அத்தகைய சமயங்களை மேற்கொள்பவர் மயக்கத்தைத் தரும் குழியிலே விழுவர்.  மேலும் அவர் மனைவி மக்களான தளையில் கட்டுண்டு திளைப்பர்.
 
1531: வணங்குபவர்க்கு அருள்வான்:
எவ்விடத்தும் நிறைந்துள்ள இறைவன் ஒவ்வோர் உயிரிடமும் அவரவர் உள்ளத்தில் தன்னைக் காட்டாமல் மறைவாய் உள்ளான். அவன் கொடைத்தன்மையில் வள்ளல். தலையில் உள்ள சகஸ்ரதளத்தில் சத்தியும் தானும் பொருந்தி நிற்பான்.   ஒன்பது வாயிலைக் கொண்ட உடலுள் புகுந்து மேல் நோக்கிப் போகும் கள்வன். அவன் செயல்படும் வகையை உலகவர் அறியாதவராய் உள்ளனர்.
 
1532: இறைவன் பற்று வேண்டும்:
இறைவன் உயிரில் இருந்து அறிவு செம்மை பெற்ற ஞானியர்க்கு அவர் உயிரின் இடமாகி அருள் செய்வான்.   உயிருக்கு அன்னியமாய் இருந்து உயிர்களை நடத்துபவன் என்று பேத ஞானமுடைய அடியானுக்கு வேறாக வெளியில் நின்று அருள் அளிப்பான் எம் இறைவன்.   உள்ளும் வெளியும் இல்லை என்ற நாத்திகர்க்கு இரண்டிடத்தும் இல்லாதவன்.
 
1533: இறைவனை அனுபவத்தால் அடைய முடியும்:
ஆறு சமயங்களையும் உணர்ந்தவர் இறைவனை உள்ளபடி உணர்ந்தவர் அல்லர். எனவே ஆறு சமயங்களால் முடிவாகக் கூறப்பட்ட பொருளும் அவன் அல்லன் என்பது துணிபு.  ஆகவே இறைவனைப் பற்றிய அறிவை ஆராய்ந்து தெளிவு  கொள்ளுங்கள்.  தெளிவு கொண்டபின்னர் முத்தி இன்பத்தை அடையலாம்.
 
1534: பிறவி நீங்கும் முறையை அறியாதவர்:
சிவனைக் காட்டிலும் எங்கும் நிறைந்த மேலான பொருள் இல்லை. ஆன்மாவில் மறைந்துள்ள சிவத்தை அறிந்து அனுபவத்தைப் பெற்றுச் சிறப்படைதலே தவமே தவிர பிற இல்லை.  இவ்வுண்மையை அறியாது சமயத்துறையில் புகுந்து சிறப்புப் பெற விரும்புபவர்க்கு ஆறு சமயங்களும் வீண் ஆனவை.  தவத்தின் பயனை அளிக்கவல்ல  உங்கள்  குரு மண்டலத்தில் விளங்கும் சிவத்தை அடைந்து உய்யுங்கள்.
 
1535: அடைமின் இறைவன் தாள் அறுமின் பிறவி:
ஆறு சமயங்களும் பிறவி நீங்கும் வழியைத் தெரிவிக்கமாட்டா.   ஆதலால் ஈசனைத் தேடி ஆறு சமய நெறிகளில் நின்றோரும் பிறவியையுடைய தேவராவதற்கு மிகவும் விரும்பி மயக்கம் கொண்டு அழிவர்.   அவர் தேவனான இறைவனை அடைய முயலாதவர்.   அதலால் பிறவி நீங்கும் உபாயத்தை அறியாதவர் ஆவார்.
 
1536: சிவநெறியே மேலான நெறி:
மேலான நெறி சிவநெறியாகும்.  மற்றவை யாவும் பிறவியைத் தரும் நெறிகள்.  அவற்றைச் சேர்ந்தால் மலத்தினால் உண்டாகும் பிறவி ஒன்று உண்டு.   தன் உள்ளத்தில் சிவ ஒளி தோன்றினால் தவ நெறியாகும்.  நான்முகன், திருமால்,உருத்திரர் என்ற மூவரும் பிறவியை அளிக்கின்ற நெறியினரே ஆவர்.
 
1537: முத்தியை அளிப்பது சிவநெறி:
கூறப்போனால் உலகில் நூற்றுக்கணக்கான சமயங்கள் உள்ளன. அவற்றுள் ஆறு சமயங்களும் அடங்கும்.  பல சமயங்களும் மேற்கொண்ட நெறிகளைக் கடந்தது சிவ நெறி.  இ•து ஒன்றே முத்தியை அளிக்கும் நெறியாகும்.
 
1538: பிறந்து இறந்து துன்பம் அடைவர்:
மூடர்கள் பொருள் அறியாமல் கத்தும் கழுதையைப் போன்றவர்கள்.  சிவன் எங்கும் நீக்கமற நிற்கின்றான்.  என்றாலும், தம்மிடம் குற்றம் நீங்கமாட்டாதவர் சிவனிடம் உள்ள குணங்களைப் பாராட்ட மாட்டார். உண்மையை இன்னது என்று உணர்ந்து கொள்ளாமல் மயக்கம் கொண்டு பிறந்து இறந்து வருந்துவர்.
 
1539: பிரமரந்திரத்தில் பொருந்துதல் மேலான நெறி!
ஞான நூல்களைக் கற்றுத் தெளிந்தவரும், ஓதாமல் பத்தி நெறியில் நின்றவரும் பிறப்பு இறப்பு பற்றிய அச்சம் நீங்கி நிற்பவரும் இருவினை அனுபவித்துச் சுழுமுனை நாடியின்  வழியே போய் முடிந்த பிரமரந்திரத்தில் கூடி அருளைப் பெறுவது  ஒரு மேலான நெறியாகும்.
 
1540: வழிபட்டவர்க்குச் சிவன் அருள் செய்வான்:
நந்தி எனப் புகழப்படும் இறைவன் இயற்கையாகவே பாசங்களினின்றும் நீங்கியவன். அவன் பல தலங்களுக்குப் பயணம் செய்யும் அடியார்க்கு விரும்பிய இடங்களில் நின்று அருள்வான்.   அவன் மாயையின் கவர்ச்சி நீங்காதவரது கண்ணுக்குப் புலப்படாதவன்.  அதனால் மாயையின் பிடியிலிருந்து மயக்கத்தை விடாதவர் அந்த இறைவனைக் காண இயலாது.    எனவே அவர் தாம் எடுத்த உடம்பின் பயனை அறியாதவர்.
 
1541: பிரமப்புழை வழி செல்லும் உபாயத்தை அறிந்தால் பிறவி இல்லை:
நல்ல நெறியை அறிந்து வாழ்பவர்க்கும், அறியாது வாழ்பவர்க்கும் வினைக்குட்பட்ட உடம்பு வித்தாகும்.  புவியில் வாழ்ந்து மீண்டும் பிறவியையும் இறப்பையும் அடைதல் பழிநெறியாகும்.   பிராணனைப் பிரம புழைக்குப் போக்கும் வழியைக் கற்பிக்கும் குருவின் வழியே நின்று தம்மைப் பரந்த வெளியில் ஒன்றுபடுத்திக் கொண்டு பிறவாமையாகிய சுழிநெறி பெறவேண்டும். 
 
1542: இறைவன் வெளிப்படுவான்:
பெருந்தவத்தை உடையவர் எல்லாரும் மகாதேவனான பரம சிவனைத் தம்மைச் செலுத்துபவன் என வழிபடுவர்.   அவன் குருமண்டலத்தில் நாத வடிவாய் வெளிப்படுவதால் அறியப்படத் தக்கவன்.    அந்த நாத உணர்வே அவன் என்று வீணாத் தண்டின் வழியாய் வணங்குவாயானால் அவனும் அங்கே வெளிப்பட்டருள்வான்.
 
1543:இறைவன் உணர்த்தாவிடில் அவை அரிதாகிவிடும்:
அனைத்துச் சமயங்களுக்கும் தலைவனான, எல்லாவற்றுக்கும் முன்னாவனான, பத்தியால் விரும்புபவர் களின் உள்ளத் தாமரையில் விளங்குபவனான சிவன், மேலான மார்க்கத்தை நாடிய பத்தர்கள் சித்தம் விரும்பித் தேடியபோது  அதனை அறிந்து தன்னை வெளிப்படுத்தாது போனால் பத்தர்கள் உண்மையை அறிய இயலாது போய்விடும்.
 
1544: மனத்தில்  மாசைப் போக்குவாயாக!
உயிர்களுக்கு அளிக்க வேண்டியவற்றின் தன்மையை அறிந்தவன்;    விரும்பியவரை ஆதரிக்கும் இயல்பை உடையவன்;  ஒளி வடிவானவன்;  வானவர் பெற்றிருக்கும் பேறுகளுக்கு எல்லாம் அவனே பெருந்தலைமையாய் உள்ளவன்.  தூய ஒளிக்கல்லைப்  போன்ற பேரொளி  உடைய அந்த இறைவனை உனது ஐயஅறிவை அகற்றி நினைவாயாக!  அவன் வைத்த அற நெறி அரியதாகும்.
 
1545:சமயச் சூழலை நீக்கி நாதாந்தத்தில் விளங்கும் இறைவனை நாட வேண்டும்:
சமயங்களுள் அது சிறந்தது,  இது சிறந்தது  எனக் கூறும் மயக்கத்தை உடைய மக்களின் மயக்கச் சூழலை விட்டு நீங்குக.   நாதாந்தத்தில் விளங்கும் சிவபெருமானை நாடுங்கள். பல மாயைச் செயல்களுடன் கலந்திருக்கும் ஊன் உடம்பைக் கடந்திருக்கும் நுண்மையான பஞ்சபூதங்களால் ஆன பிரணவ உடலை நீவிர் பெறுவீர்.
 
1546: முதல்வனின் கருணையைப் பெறாது திகைப்பது ஏன்?
நாத மார்க்கத்தை அறிந்து நல்ல நெறி இதுவேயாகும் என்று கண்டு தேவர்களும் முனிவர்களும் சிவமாம் பேற்றை அடைந்தனர்.   அங்ஙனமிருக்க இறைவனான முதல்வனின் கருணையைப் பெறாதவர்,  மக்கள் வகுத்த  வேறு நெறிகளை நாடி செல்ல வேண்டிய நாத மார்க்க நெறியில் செல்லாமல் திகைப்பர்.
 
1547: உள் நின்ற சோதியை அறிய வேண்டும்!
நாம் அடையத்தக்க நெறியாய் அறியத் தக்கதும், உயிருக்கு உயிராய் நின்ற சோதியைப் பெறுவதற்கரியது மாகிய  நெறியில் நின்று அறிந்தால் யாதொரு மாறுபாடும் ஏற்படாது.   நம் கன்மங்கள் நீங்குவதற்குரிய வழியாய் இருக்கும் சிவந்த தீயுள் நின்று சுயபோதம் கழிவதை மக்கள் அறிவதில்லை. இவர்கள் அறிவற்றவர் தாமே!   அக்கினி தான் நாதமாகவும் விந்துவாகவும் அமைவது.
 
1548: நாத நெறி போல் பயன் தாரா!
இறைவனை அடைய வகுக்கப்பட்ட நெறி மேலே கூறப்பட்ட நாத நெறியாகும். உலக இன்பத்தைப் பழித்துப் பிறப்பு என்ற சுழியில் அகப்பட்டு நடக்கும் துன்பத்தைப் போக்கி நடப்பவர்கள் நாத நெறியைப் புகழவும் கூடும்.  உலக இன்பத்தில் மிகவும் நாட்டம் கொண்டு நடப்பவர் மற்றவர் கூறும் கற்பனையைக் கேட்பர். நாத நெறி நடந்து பயன் பெற மாட்டார்.
 
1549: தேவ தேவன் வெளிப்படல் அமையும்:
சிவநெறி பற்றி அத்தவம் நிலை பெற்ற போது பழி பாவங்களில் புகுத்தும் வன்மையான வினைக் கட்டுகளை அழித்து, அந்த வினை வழியே போகும் தீவினையாளரையும் புறக்கணித்து நீங்கிப் பிரமரந்திரத்தொளை வழி சென்றால் தேவதேவனான சிவம் வெளிப்படுவான்.
 
19. நிராகாரம். ( வடிவு இல்லாமை.  அருவமான உயிர் உணர்வில்  அருவமான இறைவன் கலந்துள்ளமையை உணர்த்துதல்.)
 
1550: அடங்கியவர் உள்ளத்தில் சிவன் வீற்றிருப்பான்:
இமயமலை போல் மிகவும் பாராட்டத் தக்க தெய்வத்தன்மை பொருந்தியவர் அவரவர் இயல்புக்கு ஏற்ப ஆறு சமயங்களைச் செய்தனர். அக்காலத்தில் உள்ள சாத்திரங்களை ஓதிப் பொருந்த அறிந்தோம் என்பர்.   என்றாலும் ஆதியான சிவன், பொறுமையுடன் அறிந்து அடங்கிய ஞானியரது உள்ளத்தில் தான் கலந்து நின்றான்.
 
1551: சிவனை நினையாதவர் துன்பம் அடைவர்:
அன்பர்களின் போன்னொளி மண்டலம் என்னும் அறிவு மண்டலத்தில் திகழும் சிவபெருமானை எண்ணித் தம்மிடம் வேறுபாடின்றி விளங்குபவர் இவ்வுலகத்தில் சிவபெருமானைப் போன்றவர் ஆவார்.  அவனை வேறு என்று எண்ணி நீங்கி நினையாமல் இருப்பவர் துன்பத்துள் முழுகி உய்ய நெறியறியாது வருந்துவர்.
 
1552: சிவத்தை நினைத்தால் இம்மையில் பெருந்தகுதி உண்டாகும்.
இவ்வுலகத்தில் இருந்து பொருள் இல்லாமை, அறிவு இல்லாமை, ஆற்றல் இல்லாமை, அமைதி இல்லாமை ஆகியவற்றை எண்ணி வருந்தி அழுபவரும், நல்ல இயல்பு இழந்து வருந்துவோரும், பெருமையுடைய சிவத்தை நினைந்து அருந்தவத்தை மேற்கொண்டால் தேவரின் தலைவனும் பிறப்பில்லாதவனுமான சிவன் அவரவர்க்குரிய துன்பங்களைப் போக்கி வருந்தாமல் செய்து  பெரிய தகுதியை அளிப்பான்.
 
1553: மேகம் போல் உதவுபவர்:
"இறைவன் தொலைவில் இருக்கின்றான்" என்று வணங்கும் பக்தர் அவன் துணையாய் இருந்து வேண்டியவற்றை அளிப்பதை அறியாதவர் ஆவார்.   புவியில் உள்ள இன்பப் பொருளை விரும்பினவர் அதனால் வரும் துன்பப் பயனை அடைந்து வருந்துவர்.  அறியாமை உடைய இந்த இருவரும் உலகப் பொருள்களுடன் பொருந்திப் பிறவியில் விழுபவர்கள். சிவன் தம்மை விட்டு அகலாதவன் என்னும் தன்மையை அறிந்தவர் உலகத்துக்குக் கைம்மாறு கருதாது மேகம் போல் பயன் அளிப்பவர்.
 
1554: சிவன் வினைக் கூட்டத்தை அழிப்பதை அறியாது உள்ளனரே!
சீவன் பிரணவத்தில் உள்ள சிவத்தை  அறிந்து அனுபவித்து இந்த உலகத்தைக் கடக்க உதவும் ஒரு தோணியாக உள்ள சிவம், வினைகளின் சேமிப்புக்கு இடம் ஆன காரண உடலை அழிக்கும் தூணான பேரொளி என்று சிவத்தின் இயல்பை அறிந்திருந்தும் கூட கொடிய வினைக் கூட்டத்தை உடையவர் சிவத்தின் திருவடியைப் பொருந்த நினைக்க வில்லையே!
 
1555: வணங்கினால் சிவப்பேற்றை அடையலாம்!
நிலைபேறுடைய சிவபரம்பொருள் மனத்தில் பொருந்தியவன் என்றாலும் மக்கள் அறியாது இகழ்வார்கள்.   இவர்கள் உண்மையான செல்வத்தை உணராதவர்கள். அவ்வாறு இகழாமல் உள்ளம் பொருந்தி வணங்குங்கள்.    வணங்கினால், உவமை இல்லாச் சிவத்தைக் கண்டு சிவப்பேற்றை எய்தலாம்.
 
1556: மயக்கம் தரும் சமயம் தேவையற்றது.
அன்பர்கள் பிரணவத்தில் சிவத்தைக் கண்டு தம் தனித்தன்மையை நீக்கி ஒன்றாம்தன்மை போல் விளங்குகின்ற அனுபவம் கைவரப் பெறார்.  உடல் அழியும் என்பதை எண்ணிப் பார்ப்பதில்லை.  பிறவாமையைப் பொருந்தார்.  மயக்கம் அளிக்கும் சமயத்தினின்று நீங்காதவர்களாக அழிந்து போவார்கள்.
 
20.உட்சமயம். ஒளிநெறி.  சீவனில் விளங்கும் சிவச் சோதியை அறியச் செய்தல்:
 
1557: சமயங்கள் நாட விளங்குபவன்:
சிவனே மிகப் பழமையானவன்.    வானவரையும் சீவர்களாகிய எம்மையும் பழமையாகவே தனுகரணங்களை அளித்து உலகத்தில் பொருந்தி அனுபவிக்கும்படி வைத்தவன்.  அகச்சமயங்கள் ஆறும் தன் திருவடியை நாட, அவற்றில் கலந்து நின்று விளங்குபவன்.  அவனே முதல்வன் ஆவான்.
 
1558: சமயக் காழ்ப்பால் பரம் பொருளை அடைய முடியாது:
ஒரே ஊருக்குச் செல்ல ஆறு வழிகள் இருக்கின்றன.  அது போல் ஆறு சமயங்களும் ஒரே பொருளை அடைய உள்ளன.    இது நன்று,  இது தீது  என உரைப்பவர்கள் மலையைப் பார்த்துக் குரைக்கும் நாயினைப் போன்றவர்களே ஆவார்கள்.
 
1559: ஒப்பற்ற சிவனை அடைந்து உய்தி பெறுக!
பெருமையுடைய சைவ சமயத்தின் ஒப்பில்லாத தலைவனை, உயிர்கள் உயிர் உய்யும் வண்ணம் உயிர்க்கு உயிராய் உள்ள இறைவனை,  உண்மை உணர்வு பெற்றவர்க்கு  அன்பனை,  இன்பம் தரும்  உலகத்து முதல்வனை வந்து கூடி உய்வைப் பெறுவீராக!
 
1560: பழவழியே சென்றால் அவன் வெளிப்படுவான்!
சிவபெருமான் உயிர்கள் உய்தி பெறும் பொருட்டு அமைக்கப்பட்ட நெறியில் கடவுளாகிய அவன் வைத்த பழைய வழியில் போய், இந்தச் சீவனே சிவன் என்று உணர வல்லார்க்கு, அந்தந்தச் சமயத்திலும் உள்ள அப்பெருமான் அங்குத் தோன்றுவது அதன் கடமையாகும்.
 
1561: சிவனருள் ஆற்றல்:
சீவர்கள் உய்தி அடையும் வண்ணம் அமைக்கப்பட்ட ஆறு சமய உச்சிக்குச் சீவர்கள் தாமாகச் செல்லும் வழிதான் இல்லை.  அவர் செய்த புண்ணியமே அவ்வழியை அங்கு அமைப்பதாம்.  அங்ஙனம் சீவர்கள் மேல் ஏறிப் போகத் தாங்கி நிற்பது திருவருளின் ஆற்றலாகும்.
 
1562: எண்ணமாகிய கடலைக் கடக்கத் துணைபுரியும்:
சிவத்தை அடைவதற்குரிய வழியாவதை அறிந்தவர்களும் வேறு சில நெறிகளைத் தேடித் திரிந்த அக்காலத்திலும் உண்மை மிக்க நெறியில் எண்ணம் என்ற கடலை நீந்தி ஏறுதற்கு மேன்மையான நெறியாய் நிற்பது நிகரற்ற சுடரே ஆகும்.
 
1563: சிவநெறியே பர முத்தியை அருளுவதாகும்!
ஆராய்ச்சியாலும் அனுபவத்தாலும் சிவனே பரம்பொருள் எனத் தெளியப்பட்ட  சிவநெறி அயல் சமயத்தார் ஆராய்ந்து மீண்டும் வந்து சேர்ந்த பெருநெறியாகும்.   அகச் சமயத்துள் பொருந்தியவரும் அவரவர் பக்குவ நிலைக்கு ஏற்ப அனுபவம் பெற அந்த அந்த அண்டங்களுக்குச் செல்ல அருளும் நெறி அந்தந்த முத்திகளிலே நின்று மீண்டும் வந்து பொருந்தி உய்வு பெறுகின்ற நெறியாகும்.
 
1564: ஐந்தெழுத்துச் சாதனை செய்யின் நமச்சிவாய மூர்த்தி தோன்றும்:
புறப்பொருளில் சென்ற மனத்தை அகப்பொருளான சிவத்தில் பொருந்துமாறு செய்யுங்கள்.   அதற்காக மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கிப் படரும் சிகாரத்தால் உணர்த்தப்படும் திருவைந்தெழுத்தைக் கூறுங்கள். சிவநெறியைப் பொருந்தி இந்தச் சாதனையைச் செய்து வாருங்கள்.    நெற்றிக்கு முன்னே சிவந்த நிறம் பொருந்திய ஒளி தோன்றவும் கூடும்.
 
1565: சிவத்தைப் பர ஞானத்தால் ஒளிமயமாய்க் காண வேண்டும்:
யோகப் பயிற்சியாளர்க்கு மின்னல் போன்ற ஒளியில் வெளிப்படுபவனும் அந்தணர் வளர்க்கும் வேள்வித் தீயிலே வெளிப்படுபவனும், எந்த உருவில் நினைத்தாலும் அந்த உருவில் வெளிப்படுபவனும் ஆனவனைப் பர ஞானத்தால் ஒளி மயமாகக் காணின் அதுவே அரனெறியாம் சைவ நெறியாகும்.
 
1566: அரன் நெறியில் புகுபவர் ஒப்பில்லாத இன்பம் காண்பர்:
ஒளிநெறியே சிறந்தது என்று ஆராய்ந்து தெளிவு கொள்ளாத உயிரின் ஆற்றல் பலவாகும்.   அவர் சேர்ந்து அறியாவண்ணம் நின்ற அரன் நெறி புகுந்து அறிபவர் சிவனது திருவடியைப் பற்றி நின்று பொருந்தி உணர்வது ஒப்பில்லாத இன்பம் ஆகும். 
 
1567:சிவநெறியைச் சிவன் அமைத்துத் தந்தான்:
சைவ சமயத்தின் ஒப்பற்ற தலைவன் சிவபெருமான்.  அவன் உயிர்களுக்கு வகுத்துத் தந்த ஒளி நெறி ஒன்று உண்டு.  இதுவே தெய்வத்தன்மை பொருந்திய சிவநெறியான சன்மார்க்கம்.  அதைச் சேர்ந்து உய்வு பெறுவதன் பொருட்டாய் உலக மக்களுக்குச் சிவன் அளித்தது.
 
1568: முத்தியூரை அடைபவர்:
இந்தத் தவம் நல்லது, அந்தத் தவம் நல்லது என்று எண்ணுகின்ற பேத ஞானம் படைத்த அறிவற்றவரைக் கண்டால் சிவன் நகைப்பான்.  எந்த தவமாக இருந்தால் என்ன?  எங்கே பிறந்தால் என்ன?  வேறுபாடு அற்று நின்று உணர்பவர் முத்தியை அடையக்கூடும்.
 
1569: மாயைத் தன்மையில் உள்ளவரை தெய்வத்தன்மை பெற இயலாது:
சதாசிவம் ஐந்து முகங்களுடன் எல்லா உயிர்களிடமும் பொருந்தி விளங்குவான்.  அப்பெருமானுக்கு தத்புருடம், அகோரம், சத்தியோசாதம், வாமதேவம், ஈசானம் என்னும் ஐந்து முகங்களுடன் "அதோமுகம்" என்ற முகம் ஒன்றும் கூட ஆறுமுகங்கள் ஆகும்.  சிவத்தை அறிந்து வழிபடுபவர்க்குச் சதாசிவத்தைப் போன்று ஆறு முகங்களும் ஒன்றாய் விடும். 
சிவத்தை அறிந்து வழிபடாத போது அதோ முகம் கீழ் நோக்கியே விளங்கும்.
 
1570: சத்தியின் உண்மை நிலையை உணரவேண்டும்:
முதல்வனான சிவன் உலகு முழுவதும் கலந்து விளங்குகிறான்.  அலைகடலும் கடல் சூழ் உலகு உயிர்களுமாய் நிற்கும் சிவத்துடன் பிரிப்பில்லாது நிற்கும் பராசத்தி ஆதியில் உலக உற்பத்திக்கு உபகாரியாகவும் இறுதியில் ஒடுக்கிக் கொள்பவளாயும் இருக்கின்றாள்.  சத்தியே உலகத்தைப் படைப்பவளும் ஒடுக்குபவளும் ஆவாள். அன்பர்கள் சிவத்தை நினைத்த போது கீழ் நிலையில் தொழிற்படுத்திய சத்தியானவள் செயலை ஒடுக்கிக் கொள்வதால் உலக நிகழ்வு
யாவும் முடியும்.
 
1571: அன்புடனே சிவனை வணங்கினால் பிறவி நீங்கும்:
தன்னறிவு முனைப்பினால் ஆராய்ந்து அறிபவர் தேவர் கந்தருவர் முதலியவர். ஆராய்ச்சியால் அறிய இயலாத வகையில் நின்ற சைவத்தை அவன் திருவடியை வழிபடும் பேறு பெற்றவர்  ஆராய்ந்து அறிய முடியும்.    அதன் காரணத்தால் அவர் இப் பிறவியிலேயே மறுமை இன்பத்தை அடைய முடியும்.
 
1572: சீவனுடன் பொருந்திய சிவத்தை அறிவதே மேலான சமயம்:
உடலைப் பெற்றதன் பயன் இறைவனை அறிந்து வழிபடுவதே என்பதை மக்கள் அறியவில்லை.  அறிய இயலாமல் ஒன்றாக விளங்கும் வானத்தை ஆறு அதாரங்களில் இயங்கும்படி வைத்து, அறிய இயலாத வகையாய்  ஆறு  கோசங்களில் அனுபவம் அடையச் செய்து, வான் மயமான சிவன் - மக்கள் அறிய ஒண்ணாது அண்டமாய் உள்ளது.
 
ஆறாம் தந்திரம். 1573 –1703
1. சிவகுரு தரிசனம்: உள்ளத்தில் உறையும் சிவனைக் குருவாகக் காணல்:
 
1573: உள்ளத்தில் உள்ள சிவனே குரு ஆவான்:
பத்தியை ஏற்படுத்தி இறையடியை வணங்கச் செய்து பிரணவ உபதேசத்தால் குற்றங்கள் எல்லாம் நீங்கும்படி செய்து சித்து, அசித்து, சதசத்துமானபொருள்களின் உண்மையான இயல்புகளை உள்ளே  நின்று  உணர்த்தியதால் உள்ளத்தில் உள்ள இறைவனே குரு ஆவான்.
 
1574: பாசம் நீங்கும்:
ஆணவத்தால் மறைந்து கிடந்த சீவனை மாயாமலத்தைக் கூட்டி ஆணவத்தைப் நீக்கி, "உடம்பே நான்" என்று இருந்த ஆசையைப் போக்கி, நேருக்கு நேரே நிலை குலையாத முத்தியில் கூட்டுவதற்கு உபகாரப்படுவது உபாசகனின் ஒளி மண்டலத்தில் உருவம் கொள்ளாதிருக்கும் குரு ஆகும்.
 
1575: சிவகுருவினால் விளைவன:
அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் முதலிய எட்டு சித்திகளுடனே பயிற்சியாளனைச் சிவம் ஆக்கிய பக்குவ நிலையும்,  வாமை,  சேட்டை, ரௌத்திரி, காளி,  கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரமதனி, சர்வபூத தமனி முதலிய எண்சத்திகளால் கட்டுப்படுத்தாத தூய்மையும், யோகத்தால் ஏற்படும் ஆற்றலும் மந்திரங்களைத் தியானம் செய்வதால் உண்டாகும் ஞானமும் இறைவனிடம் உண்டாகும் அன்பும் ஆகிய அனைத்தும் சிவகுருவின் அருளால் நிகழும்.
 
1576: எல்லார் உள்ளத்தும் உள்ளவன் சிவன்:
எல்லா உலகங்களுக்கும் அப்பால் விளங்குபவன், இவ்வுலகிலும் இருப்பவனாய் நல்லார் உள்ளத்தில் சிறந்து விளங்கி அருளுவதாலும், யாவரும் உய்யுமாறு அருளுவதாலும், அனைவரும் உய்யும்படி இவ்வுலகிலேயே அருளுவதாலும் பிரணவ வடிவாய் உள்ள நல்ல குரு சிவமே ஆகும்.
 
1577: அன்பு கொண்டு முத்தியில் அருளுவான்!
தேவனும் தூய குருவாகவும் விளங்கும் சிவன் நூல்களில் எல்லாம் பதி, பசு, பாசம் என்று மூன்றாகக் கருதுவது அறிந்து உபதேசத்தால் அழிவில்லாத சீவனின் பாசத்தை நீக்கிக் குருபரன் அன்பு கொண்டு முத்தியில் யாவையும் அருள்வான்.
 
1578: சிவனே குருவாய் வந்து அருள்வான்:
சிவபெருமானே சீவர்களிடம் அருள் கொண்டு குருவாக வந்து மலக்குற்றத்தை அகற்றி அருள் செய்யும்.   அத்துணை செய்யும் சிவத்தின் அருளைக் காணாத அறிவிலிகள், பொய் மிக்க உலக இன்பங்களையே பொருளாய்க் கண்டறியும் பாசம் பற்றியவர்க்ள்.  அவர்கள்   குருவை நம்மவர் என்று தம்முடனே நிகராக வைத்து எண்ணுவர்.  ஞானியரோ  "இவன் சிவனே" என்று வணங்குவர். 
 
1579: குருவருளால் அஞ்ஞானம் நீங்கும்:
ஞானத்தால் பொய்மை நீங்குதலும், பிருத்வி தத்துவத்தின் வன்மையும், சிவமான அப்பெருமானின் உதவியும், அறுபத்து நான்கு கலைகளால் உண்டாகும் மயக்க அறிவும் அண்ணலின் சத்தி பதியாது யாரும் அறிய முடியாது.
 
1580: சிவகுருவை வழிபட்டவர் பிறவி எடுக்க மாட்டார்:
சிவமே சிவ ஞானியாய் உள்ளான்.  ஆதலால் தனக்கு உபதேசம் செய்யும் குருவைச் சிவன் என சினைத்துத் திருவடியை அடைபவர்க்குச் சிவத்தினது நட்பும் நல்ல முத்தியும் அமையும்.  அவர் பிறப்பில்லாமல் மேலான சிவவுலகத்தைப் போய் அடைவர்.
 
1581: குருவின் வாக்கு மனம் கடந்ததாய் உள்ளது:
என் குரு மண்டலத்தில் விளங்கும் நந்தி குருவே சிவம் எனக் கூறினான்.  குருமண்டலமே சிவனாய் உயிர்க்குத் தலைவனாய் உள்ளது குருமண்டலமே வாக்கு உணர்வைக் கடந்து விளங்கும் மன்னன்.    இத்தகைய பெருமை கொண்ட குரு மண்டலத்தில் சிவம் உள்ளே இருந்து விளங்குவதை எளியவர் அறியாதவராய் உள்ளனர்.
 
1582: சித்தத்தை சிவன் பால் வைக்க!
அன்பர்களிடம் உள்ள சித்த மண்டலம் தன் அறிவுக்குட்பட்ட  எல்லாவற்றையும் நினைத்துக் கொண்டிருக்கும்.   அருள் சத்தி பதிவு உடையவர்க்குச்  செம்பொருளே உணர்த்துவதாகும்.    அந்நெறியே சித்தம் முழுமையும் வேறு பொருளுக்கு இடம் இல்லாது சிவத்துக்கு மட்டும் இடமாக்கினால் அத்தனான சிவனும் அங்கு அமர்வான்.
 
1583: இறைவனின் குறிப்பை அறிபவர்க்குச் சுடராய்க் காட்சி தருவான்:
சிவமான தானே விளங்கும் குரு மண்டலத்துள் பொருந்துவதால்  உண்டாகும் பெருமையை வைத்த நந்தியம்பெருமானின் குறிப்பை உணர்பவர் இலர். வானில் குருமண்டலத்தில் திகழும் இறைவனின் குறிப்பை அறிபவர் முன்னம் அக்கினி மண்டலத்தில்  விளங்கிய  ஒப்பில்லாத ஒளியான சிவம் அவனே தான் என்றுணர்வர்.  அவர்க்கு சிவன் வெளிப்பட்டருள்வான்.
 
1584: குருவின் அருளால் ஞானம் கிட்டும்!
குருநாதன் இறைவனின் வடிவாய் அருளாவிட்டால், மனித உடல் தாங்கி வராவிட்டால் ஞானம் என்னும் பேறும், அதன் விளைவான முத்தியும், அச்சிறப்பில் மயங்காத அருளும், அஞ்ஞானம் நீங்கும் உண்மைப் பொருளான "அது நீ ஆகின்றாய்" என்ற வேதாந்த  ஞானமும் அறிய இயலாததாய் விடும்.
 
1585: குருபத்தியால் விளைவன!
சிவனிடத்துப் பத்தியும் அதனால் ஞானம் பெற வேண்டும் என்ற வைராக்கியமும் வீடு பேறு அடையச் சாதனங்கள் ஆகும்.  அவற்றால் சிவமே தான் என்ற எண்ணம் முதிர்ந்து, வீடுபேற்றுக்குக் காரணமான ஞானம் உண்டாகி அந்த ஞானமான பயிர் சத்தியின் அருளால் எளிதாய் வளர்ந்து முத்தி உண்டாகும்.
 
1586: இறைவன் சீவனில் வெளிப்படுவான்:
எனக்கு முன்பு உதவிய முதல்வனான இறைவனை, இந்த உலகத்தில் நான் வீடுபேற்றை அடைவதற்காக உண்டாக்கப்பட்ட இன்பப்பிறவியை  ஞானத்தால் அடையும் போதில் அப்பெருமான் என்னிடமே வெளிப்படுவான்.  அங்ஙனம் என் தலைவனை அடையத் துணையானது என் உள்ளமே ஆகும்.
 
1587: சிவானந்தம் உண்டாகும்!
அகண்டமான சிவஞானம் தெளியவே நல்ல சித்திகள் உண்டாகும்.  அத்தகைய சிவஞானத்தில் சிறந்து மேலும் தெளியச் சிறந்த முத்தி கிட்டும்.   சிவமான ஞானத்தால் சிவானந்தம் உண்டாகும்.    உயிர் சிவத்தில் நிலை பெறுவதே முத்தியாகும்.
 
1588: பிறவியை ஒழித்தேன்!
நான் நூல் அறிவாலும் அனுபவத்தாலும் இந்தப் பரந்த உலகங்களை எல்லாம் கண்டேன்.    சிவத்துடன் பொருந்தித் தியானம் செய்து சிவத்தினது அருளைப் பெற்றேன்.    அறிவற்றவர் கூட்டத்தை விட்டு விலகினேன்.   அதன் காரணமாய் இப்பிறவியை நீங்கினேன்.
 
1589: இறைவனைக் கண்டு கொண்டேன்!
வினை காரணமாகப் பெற்ற உடல் முதலியவற்றைச் சுமக்கின்ற உயிர்களுக்கெல்லாம் தலைவனானவன் இறைவன்.  அவன் எங்ஙனம் சீவனிடம் பொருந்தியிருக்கின்றான் என்பதை எவ்வகையினாலும் பலர் அறியார்.   தடைகளை விலக்கி உயிர்கள் அறியா வகையில் பிரிக்கின்ற, எல்லா உயிர்களையும் தன் கருவில் கொண்ட அச்சிவனை நான் அறிந்து கொண்டேன்.
 
2. திருவடிப்பேறு. குண்டலினி சிரசை நோக்கிப் பாய்ந்து சிரசில் பொருந்தி இருப்பதே திருவடிப்பேறு.
 
1590: அன்புடன் இறைவனை வழிபடின் இன்பம் உண்டாகும்:
அன்பு கொண்டு இறைவனை நினைக்க நினைக்க, சுவாதிட்டானத்தில் இருக்கும் செவ்வொளி உணர்வானது மூலாதாரம் போய்ப் பிடரி வழியாய்ப் பிரமரந்திரம் சேரும். அப்போது குருமண்டலம் விளங்கி மிக்க ஆனந்தம் ஏற்படும்.   விரும்பிய திருவடி உள்ளத்தில் இன்பமாக விளங்கும் இதுவே "சென்னியில் வைத்தல்" எனப்பட்டது.
 
1591: இறைவன் திருவருள் கிட்டின் வீடு பேறு கிட்டும்:
சிவன் திருவருளை அளித்த போதே பொறி புலன்களுக்கு அடிமையாய்க் கிடந்த எனக்கு ஞானத்தைத் தந்தான்.   எம் தலைவனவன் ஞான வாளினை எனக்குத் தந்து "வீட்டுலகத்தை அளவற்ற காலம் ஆள்வாயாக" என்று அருள் செய்தான்.  சுவாதிட் டானத்தில் வந்து அருட் சத்தியை இன்பமாய் என் தலையில் பொருந்தினான்.
 
1592: சிவ வடிவு பெறுவர்:
என்னைச் சிவம் வந்து ஆட்கொண்டு அவனாகச் செய்த போது சிவ வடிவமாய் நான் ஆனேன்.  அப்போது முன்பு சிவமாய் விளங்கிய நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுவரன் அன்ற நான்கு வடிவங்களும் என்னை விட்டு நீக்கப் பெற்றன.  மற்ற அடையாளங்களான அருவச் சதாசிவர், விந்து, நாதம், சத்தி என்பவை என்னிடம் நன்கு விளங்குமாறு செய்து, தன் திருவருளை நான் முன்னமே பெற்றவன் என்பதை நிறுவினான்.
 
1593: பேச்சற்ற அனுபவம்:
இன்பத்தை அனுபவிக்கும் போது பேச்சு இல்லாமல், உணர்வு அழிந்து, தான் என்ற நிலை அறியாமல், தெளிந்த நீரைப்போல் அசைவு இல்லாமல்இருக்கும் சிவமான தன்மையும் கெட்டு,  நுண்மை முதலிய நான்கு வாக்கினால் தோன்றும் நாதத்தைக் கடந்து எல்லையற்ற தன் வடிவுடன் ஒன்று ஆக்கினான்.  ஆதலால் பிறப்பு, இறப்புக்கு எல்லையான பிரணவத்தைக் கடந்து விட்டோம்.
 
1594: சமாதியில் பொருந்தச் செய்தல்:
தீட்சை செய்ய வந்த குரு மாணவனின் பரு, நுண், காரண உடல்களில் உள்ள தடைகளை நீக்கி,  உயிரைக் குருவிடம் பொருந்தச் செய்து, எல்லாருக்கும் தலைவனான சிவத்துடன் மௌன யோகத்தில் பொருந்தச் செய்து என்னை ஆட்கொண்டான்.
 
1595: குரு இன்பத்தில் திளைக்கச் செய்தான்:
முன் நிலையில் பொருந்திய குரு, மௌனமான பேரானந்தத்தில் என் பசு கரணங்களை அழித்து, என்னிடம் அகண்ட அறிவாகிய சிவத்தைப் பதிப்பித்து, என்னை நான் அறிந்து கொள்ளாமல் செய்து, வெப்பம் இல்லாத சந்திர மண்டல ஒளியில் மனம், வாக்கு, காயம் என்ற மூன்றையும் கைக்கொண்டு அவற்றாலுண்டான பெருமைகளை அழித்துத் திருவடிகளைச் சூட்டி என்னிடம் நிலை பெற்றனன்.
 
1596: குருநாதன் அருளிய பெருமை:
என் ஆன்மாவிலும் பார்வையிலும் என் தலையின் மீதும் திருவருளைப் பதிப்பித்த குருவானவர், கீழ்முகமாகச் சுருண்டு கிடந்த குண்டலினியை மேல் நோக்கி விளங்கு வதாய் அமைத்தருளினார்.  விந்து நாதங்களை உணர்த்தியருளினார்.  எம்முறையில் விந்து நாதங்கள் தொழிற்படுமோ அம்முறையில் உணர்த்தியருளினார்.  இவற்றையெல்லாம் மற்றவர்க்கு எடுத்துக் கூற இயலாது.
 
1597: குரு அளித்த ஞான தீக்கை:
என் தலை மீது திருவருள் சத்தியைப் பதியச் செய்து, சத்தியைப் பார்வையினால் பொருந்தச் செய்து, எங்கும் விளங்கும் பெருவுருவத்தைத் தந்த சிவபெருமானை, குரு வடிவில் வந்த தலைவனை, எம் மன்னனை, பிறவியானது உண்டாகும் வழி உலர்ந்து போக அறிந்து கொண்டேன்.
 
1598: குருநாதன் இன்பம் துய்க்கும்படி செய்தல்:
திருவடி ஞானம் என்பது சிவமயமாகும்.  திருவடி ஞானம் சிவ உலகத்தில் சேர்க்கும். திருவடி ஞானம் உயிரைச் சிறைப்படுத்தியிருந்த மலத்தினின்றும் விலக்கும்.  திருவடி ஞானம் அணிமா, இலகிமா முதலிய சித்திகளையும் முத்திப் பேற்றையும் தரும்.
 
1599: துன்பம் நீங்கி இன்பம் அடையுமாறு செய்தான்:
குருநாதன் கீழ் நோக்கும் தன்மையுடைய குண்டலினி சத்தியை மேல் நோக்கும்படி செய்யுமாறு உபாயம் அமைக்காவிடில், முன் காலத்தில் செய்த வினைகள் அறியாமையால் மயங்கிய உள்ளத்தை மாயையின் வழிச் செலுத்திவிடும்.  அங்ஙனம் இன்றிப் பால் போன்ற வெண்மையான ஒளியாய் விளங்கும் மதிமண்டலத்தில் விளங்கும் சதாசிவம் தன் திருவடியைப் பதிப்பித்தான்.  தன்னை விட்டு அகலாது நிலை பெறவும் செய்தான்.
 
1600: திருவருள் பெற்றதால் உடல் பற்று விட்டது:
கழலை அணிந்த தாமரையில் விளங்கும் திருவடி நிழலை அடைந்தேன்.  திருமாலும் காணமாட்டாத வெம்மையுடைய அக்கினி மண்டலத்தில் உள்ள உருத்திரரும் என் உடல் பற்றை அழித்துச் சுழுமுனை உச்சியில் ஒளியுடைய சிவமாக அமைந்தது.
 
1601: இறைவன் அருள் பெற்றவர் நிலையான இன்பம் அடைவர்:
முடிமன்னர் என்றால் மூவுலகையும் ஒன்றாக ஆள்பவர்.  ஆராயின் சிவனடியாரான மன்னர் பெறும் இன்பத்துக்கு ஓர் அளவே இல்லை.  முடி மன்னரான தேவர்களும் இறைவனுக்கு வழி வழி ஆள் செய்கின்ற குடி மன்னராயின் குற்றம் நீங்கி நின்றவர் ஆவர்.
 
1602: உண்மை இன்பம் பெற்றேன்.
நான் என் மன மண்டலத்தில் இறைவனின் திருவடிகளான விந்து நாதங்களைப் பதிய வைத்துக் கொண்டேன்.  அதனால் பொய்யை மெய் போல் காட்டி அக்கினியைத் தூண்டிச் செலுத்தும் புலன் வழிச் செல்லாமல் உள்ளத்தை மீட்டு, இளைத்தவனான நான் படும் இருவினைத் துன்பத்தை மாற்றி மறையின் முடிவான ஞானானந்தத்தை அடைந்தேன்.
 
1603: சிவத்தின் அருளைப் பெறுபவர் இன்பத்துள் திளைத்திருப்பர்:
இறைவன் திருவருளைப் பெறலாம்.  சிவ குருவின் இரண்டு திருவடிகளையும் முனிவர் முடிவில் பூண்டு கொண்டனர்.  படி முறையிலே அடைந்த பேரின்ப வெள்ளத்தில் குடியாகக் கொண்ட வழியில் கூடி நிற்பவரின் கொள்கை இதுவேயாகும்.
 
1604: இறைவன் திருவடியால் விளைவன:
நினைப்பவனைக் காகும் மந்திரமாவதும் பிறவி என்ற நோய்க்கு மருந்தாவதும், திருவருளைப் பெறக் கூடிய செயலாவதும், அடைந்தவர் பெறும் புண்ணியத் தலங்களால் ஆவனவும், அழகாவதும், வீடு பேற்றை அளிக்கும்  மேன்மையான நெறியாவதும் எம் சிவபெருமானது இரண்டு திருவடிகளே ஆகும்.
 
3. ஞாதுரு ஞான ஞேயம்:  ஞாதுரு-பார்ப்பவன்.
   ஞானம்-பார்க்கும் அறிவு.  ஞேயம் - பார்க்கப்படும் பொருள்.
 
1605: அமுத நிலை உண்டாகும் விதம்:
என்றும் நீங்காத சிவானந்தமான சிவத்திடம் பொருந்தி நிற்க, ஆணவமலம் அறிவை மறைக்காது.  அங்ஙனம் மறைப்பினும் தன் முனைப்பு நீங்கிச் சிவானந்த நிலையில் நிற்கவே எப்போதும் தன்னை
விட்டு நீங்காத பேரின்பமான அமுதத்தில் நிலை பெறலாம்.
 
1606: பர நிலையை உணர்வர்:
அறியப்படும் பொருள் சிவம் என்று துணிந்து அந்த நெறியில் நிற்பவர்க்கு ஞானத்துக் குரிய பிறவும் பொருந்தி நிற்கும்.  அறியப்படும் பொருளான சிவத்தை ஆன்மா அறிந்து அதுவாகவே அமைவது வீடு ஆகும்.  ஞேயப்பொருளான சிவத்தைப் பிரியாத சத்தியை உணர்ந்தவர் இக்கூட்டத்தால் விளைந்த மெய்ஞ்ஞான அறிவை அறிபவர் ஆவார்.
 
1607: தானே அவனாதல்:
உண்மைப் பொருள் தான் என்ற ஆன்மாவும் அவன் என்ற சிவமும் ஆகியவை இரண்டு உள்ளன.   தன்னையும் அவனையும் தன் ஒளியில் கண்டு தானாக விளங்கும் கவிழ்ந்த சகஸ்ரதள உணர்வை தலைக்கு மேல் பன்னிரண்டு விரற்கடை உயரத்தில் அவன் விளங்கும் நிமிர்ந்த சகஸ்ரதளத்துக்கு மாற்றினால் நான் எனவும் அவன் எனவும் வேறுபடுத்திக் காணும் உணர்வு மாறி நானே அவன் எனச் சொல்லும் நிலையுண்டாகும்.
 
1608: இறைவன் தத்துவங்களை மாற்றி அச்சத்தைப் போக்கி ஆண்டான்.
என் குருநாதன் தனக்கு உபகாரமாக வைத்த முப்பத்தாறு தத்துவங்களின் தொழிலையும் மாற்றி, சந்திர மண்டலத்தில் விளங்கும் அநந்தை, அநாதை,அனாசிருதை, சமனை, உன்மனை ஆகிய கலைகளை விளங்கச் செய்து, என்னை சிவனின் பரப்புள் நிலை பெறுமாறு செய்து, இறப்பதற்கு அஞ்சும்அச்சத்தைக் கெடுத்து, என்னைச் சிவமாக்கி ஆட்கொண்டான். 
 
1609: தற்சிவம் ஆன்மாவைப் பரனாக்கியது.
சிவ தீட்சைக்கு முன் அகண்டத்தை அறியாத அம்மூடரைப்போல் சிவ தீட்சைக்குப் பின்பு நந்தியாகிய குருநாதன் சுட்டியறியும் அறியாமையை மாற்றினான்.  தன்னை அறிந்த ஆன்மாவைப் பரம் என்று ஆக்கித் "தத்" என்ற பொருளான சிவமாகிய என் இயல்பை எனக்கு அறிவித்தான்.
 
1610: சிவபெருமான் பரந்த அறிவை ஏற்படுத்தினான்:
கண்ணாகிய பொறியால் காணாத காட்சியும், செவியாகிய பொறியால் கேளாத கேள்வியும், மாறுபடாத சிவானந்தமும், கூடிப் பிரியாத சேர்க்கையும், நாணம் இல்லாத பற்றும், நாதாந்தத்தில் விளங்கும் அறிவும் என்பனவற்றைச் சிவபெருமான் "காண்பாய்" எனக் காட்டியருளினான்.
 
1611: பிரணவ யோகசித்தி பெற்றவர் ஐந்தொழில் ஆற்றுவர்:
பிரணவ யோகத்தை (மோனத்தை) பழகி வந்தவர்க்கு முத்தி கிட்டும்.   அவர்க்குப் பெருஞ்சித்திகளும் அவர் முன்னின்று தொழில் செய்யும்.  அன்னார்க்குப் பேசா அனுபூதி பிறந்து சிவ பாவனையில் பொருந்தியிருக்கக் கூடும். இந்நிலை பெற்றவர் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் முதலிய ஐந்து தொழில்களையும் செய்வர்.
 
1612: பிராண வெற்றி கண்டவர் ஒளியில் நிலைபெற்றிருப்பவர் பிறந்து இறக்கமாட்டார்:
சாம்பவி, கேசரி, பைரவி ஆகிய மூன்று முத்திரையின் காரியம் காண்பவன், காட்சி, காட்சிப் பொருள் என்ற மூன்றின் வேறுபாடு அற்ற போது முடிந்தது.  அமைத்த இடைகலை, பிங்கலைவழியாய்ச் செல்லும் காற்றை உள் நாக்கின் வழி நான்கு விரற்கிடைப் பகுதியில் உலவும்படியாய் மாற்றி, ஒளி மயமான குருவின் திருவடியில் பொருந்தித் தளைகளை விட்டவர் மீண்டும் பிறந்து இறக்கமாட்டார்.
 
1613: மேலை நிலத்தில் ஆனந்தத்தில் திளைத்திருப்பவன்:
நவந்தரு பேதங்களில் மேலான விந்து, நாதம், சாதாக்கியம் ஆகிய மூன்றும் மிக்க சத்தி விளங்கும் அடையாளம்.   இதனைப் பற்றியுள்ள பரம ஞானி ஒலிக்கின்ற நடனமே சிவத்துடன் கலந்து தன் நிலை கெட்ட மூலமான பரன் எனக் கூறப்பெற்ற காண்பான் ஆகும்.
 
4. துறவு:
(அன்பால் இறைவனைப்பற்றி இயல்பான முறையில் பாசங்களினின்று நீங்குதல் துறவாகும்.)
 
1614: சிவன் சிவ உலகு அருள்வான்.
சிவன், பிறப்பு இறப்பு என்ற இரு தன்மைகளும் நீங்கி உலகத்து இன்பங்களை இயல்பாகத் துறக்கின்ற தவத்தை அருளிச் செய்த ஒளி வடிவானவை மறவாதவராய்  நாள்தோறும்  நாத வழிபாடு செய்பவர்க்குச் சிவவுலகம் அருள்வான்.
 
1615: வினை நீக்கமும் இருள் நீக்கமும் துறந்த உயிர்க்கு உண்டாகும்:
வினையின்படி பிறந்தும் வினை நீங்கிய வழி இறந்தும் பலவகைப்பட்ட அறியாமையால் செய்வன விலக்குவன மறந்து அறியாமை நீங்க அறியாமையில் மறைந்து அறிவிற்சிறந்த  சத்திநிபாதம் உண்டான காலத்துப் பற்றுகளைத் துறந்த உயிர்க்குச் சோதியாய் விளங்கும்.
 
1616: துறந்தவர்க்குப் பிறவியை நீக்கியருள்வான்:
சிவன் அநாதியானவன்; அதனால் தனியன்; அவன் தங்கும் இடம் எல்லாத் தத்துவங் களும் சுட்ரெிக்கும் இடம்.  அவன் ஏற்பது சீவ போதம்.  எனவே, அவன் துறவி என்பதை அறிந்து கொள்ளுங்கள்.  பற்றுகள் நீத்தவரின் பிறவியை ஒழிக்கும் பித்தன் அவன் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்!
 
1617: அறத்தை நாடி மறத்தை விலக்க வேண்டும்!
அநாதியான இறைவன் உயிர்கள் அடைய வேண்டிய நெறியையும், நெருஞ்சில் முள் போன்று ஒதுக்கித் தள்ள வேண்டிய செயலையும் படைத்திருக்கின்றான்.  அறவழியில் நில்லாமல் தவறுமாயின் நெஞ்சில் முள் குத்துவதைப் போன்று துன்பத்தை அடைவர்.  ஆனால் அறநெறி தவறாது நடக்க வல்லவர்க்கு வழியிலே உள்ள நெருஞ்சில் முள் குத்துவது போன்று துன்பங்கள் ஏற்படமாட்டா.
 
1618: உடலைக் கடந்து நிற்பதால் உடல் தர்மம் பற்றாது!
நான், அசைந்தாடிக் கொண்டிருக்கும் ஒளி மண்டலத்தில் இறைவனின் விந்து நாதமான திருவடிகளை என்றும் பிரியாமல் கூடும் தவம் செய்த கொள்கையுடையவன்.  ஆகவே, அறத்தால் வரும் கேட்டையும் அறத்தால் செய்யும் கடமையையும் உணர்ந்திருப்பதால் ஐம்புல ஆசையால் விளையும் பயனுக்கு உட்பட்டவன் அல்லன்.
 
1619: பயிற்சியாளன் பயிற்சியால் பெற வேண்டியதைப் பெற்றபின் சாதனை இல்லை!
ஞான்ப்பயிற்சி மேற் கொண்டவன் மேலும் மேலும் சாதனையை விரும்பிச் செய்ய, வானமண்டலம் விளங்க, ஞான சாதனையில் பொருந்திய நீலோற்பவ ஒளி இது அருள் சத்தியின் ஒளி என்று ஞான சாதனை செய்தவன் உணர்ந்து, ஞானப் பயிற்சியாளன் மேலும் சாதனையற்று அருளில் நாட்டம் கொண்டு விளங்கினான்.
 
1620: திருவடியைத் தந்தருள்வான்!
இயல்பாகவே பற்றும் வெறுப்பும் அற்றவன்.    காலத்தைக் கடந்தவருக்குஅவன் நண்பன்.   அவன் எல்லாவற்றையும் உடையவனாதலால் ஆசை இல்லாதவன்.  அஞ்ஞானமான இருளை விட்டு ஒளி பெறுபவர்க்குத் தன் நெற்றி விழியினால் அருளுபவன்.  பூமி தத்துவம் என்கின்ற பால் உணர்ச்சியைத் துறந்தவர்க்கே தனது திருவடியை அளித்தருளுவான்.
 
1621: உலகத்தைத் துறக்கும் வாய்ப்பு.
குண்டலினி சத்தியாகிய பாம்பு ஒன்று; அதற்கு மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற பொறியாகியப் படம் ஐந்து.  அது அனுபவிக்கின்ற போகம் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நான்கு.  அது புற்றுக்குள் பொருந்தி நிறைந்திருக்கின்றது. குண்டலினி சத்தி ஆற்றல் ஒழிந்து சிற்சத்தியுடன் கூடி ஊர்த்துவமுகமான போது சிதாகாயக் கூறு விளங்குவதில் அதற்குரிய பருவுடல், நுண்ணுடல்ஆகிய இரண்டு உடல்களிலும் படம் விரித்து ஆடுவதை விட்டு ஒரே படமாய்ச் செய்து கொண்டு உடலை இடமாய்க் கொண்டு கிடக்கும்.
 
1622: சிவன் அன்பரின் தகுதிக்க்ற்ப அருளுகிறான்:
துறந்தாரது வழி முதல்வனும் துறவாதாரைப் பிறவிக்கு விடுபவனுமாகிய ஆதியை யுடைய பிரான் இவன் என்று சுட்டியறியும் எளிமையுடையவன் அல்லன்.    சிவனது திருவருளே பக்குவத்துவக்கேற்ப பல பல சீவன்களிலும் ஆகும்.   அவன் செய்யும் நன்மைகள் வரும் வழி நம்மால் அறிய முடியாது.  சீவர்களை இலயம், போகம், அதிகாரம் அன்ற முத்திறத்திலும் ஆட்கொள்ளும் சிவம் இலயத்தை விரும்பியோர்க்கு இலயத்தையும் போகத்தை விரும்பியோர்க்குப் போகத்தையும் அளித்தும் அதிகாரத்தை விரும்பியோர்க்கு அதிகாரத்தில் நிறுத்தியும் சீவர்களின் தகுதிக்கேற்ப அருளுகிறான்.
 
1623: உலகம் கசந்தது:
உடலைக் கடந்த போது கண் முதலிய ஒன்பது வாயில்களால் வரும் அறிவு விடுபட்டது சந்திர மண்டலத்தில் அமைந்த தொனியில் சம்மியம் செய்த போது தேகமாகிய சட்டையின் அநுபவம் முடிவுற்றது.  பிரபஞசம் இனித்த நிலை மாறிக் கசப்பாயிற்று.  உடலைச் செலுத்திய ஆன்மா சிரசின் உச்சியில் தலைவன் வாழும் ஊர்த்துவ சகஸ்ரதளத்தில் விளங்கியதே.   சிரசின் உச்சியில் சகஸ்ரதளத்தில் ஆன்மா விளங்கிய போது உலக இன்பம் கசந்தது.
                                                           
5. தவம்
தவமாவது தன்னுள் மறைந்துள்ள பொருளைக் காணச்செய்யும் முயற்சி.  அ•து இறைவனை இடையறாது எண்ணியிருத்தலால் கை கூடும்.
 
1624: இன்பமாய் வாழ இறைவன் துணை தேவை:
சிவத்தினிடம் மனத்தை வைத்து நிலைபெற்ற உத்தமர்களின் உள்ளமானது உலகிழுள்ள  எத்தகைய துன்பத்தையும் கண்டு அஞ்சுவதில்லை.   அத்தகையவர் எமனுக்கும் பயப்படு வதில்லை.  அவர்களுக்குத் துன்பமும் இல்லை.  இரவு பகல் என்ற வேறுபாடும் இல்லை.  பிற பொருள்களின் மேல் பற்று நீத்தவர்க்கு விளைகின்ற பயன் வேறொன்றும் இல்லை.  உடல் உள்ள போதே உடலைக் கடந்திருக்கும் ஆற்றல் பெற்றமையால் உடல் இருப்பினும் இறப்பினும் அஞ்சுவதில்லை.     பெறுதலின்மையால் முயற்சியால் வரும் துன்பம் இல்லை.    சிவத்தை சார்ந்தோர் துன்பமான உலகிலும் துன்பமற்று வாழ்வர்.
 
1625: தவம் உடையவர் அமைதி பெறுவார்:
எமது அரிய உயிர் உடலோடு புணர்ப்பதாகிய பிறப்பின் ரகசியத்தையும்  அது உடம்போடு கூடி அநுபவிப்பதற்கு இடனாகிய உலகப்படைப்பின் காரணத்தையும் சிறப்பான தவத்தின் மேன்மையையும் இயல்பையும் சிவனது அருள் பெற்றவரே அறிய முடியும்.  தவமுடையோர் வினைவழியே பிறப்பும் சூழ்நிலையும் ஆகும் என்று அமைதி பெறுவர்.
 
1626: இம்மையில் இன்பம் பெறுபவர்:
பல வகையாகப் பிச்சை எடுக்கின்ற மனிதர்கள் பிறப்பின் நோக்கத்தை  அறியமாட்டார்.  ஆனால் இறைவனை மறவாது பெரிய தவத்தைச் செய்பவர்கள்  இப்பிறப்பில் சிறப்போடு வேண்டிய செல்வத்தைப் பெறுவதோடு பிறப்பினை நீக்கும் பெருமையும் பெற்றவர் ஆவர்.
 
1627: தவத்தவர் சிவத்தைக் கைவிட மாட்டார்.
தனித்திருந்து சிவப்பேற்றை அடைய அரிதின் முயன்று அழகிய தவத்தினை இயற்றும் மன உறுதி பூண்டோரை மனத்தை மாற்ற வேண்டும் என்று இந்திரனோ பிற தேவரோ சூழ்ந்து வந்தாலும் மயங்காது தம்முடைய மனத்தைச் சிவத்தின் பால் உறுதியாக வைத்துத் திருந்தியிருப்பர்.  வைராக்கியமுடைய தவத்தோர் ஆசைக்கு ஆளாகாது சிவப்பற்றை விடார்.
 
1628: தவமுடையவர் இறைவனின் இயல்பை அறிவார்.
பக்குவமடைந்த ஆன்மாக்களால் விரைந்து தொழப்படும் சிவன்,  தவமிலார்க்கு மறைந்தும் தவமுடையோர்க்கு வெளிப்பட்டும் உள்ளான்,   அகக்கண்ணுக்கேயன்றிப் புறக்கண்ணுக்குத் தோன்றாதவன் பரந்த ஒளிக்கிரணத்தையுடையவன்.  பசும் பொன் போன்ற நிறமுடையவன். 
அரிய தவத்தினையுடையவர்க்கன்றி அணுகுவதற்கு முடியாதவன்.  அருந்தவமுடையோரே சிவத்தின் இயல்புகளை அறிவர்.
 
1629: உயிர் தன்னை அறிய நாடும்போது இறைவன் வெளிப்படுவான்
ஆன்மா தன்னை அறியப்புகும் போது (ஆன்மாக்கள் பின்னே அடைய வேண்டிய இன்ப பிறப்பை முன்னமேயே நியதியாக வைத்த முதற்பொருளாகிய) - எமது  இறைவன்  தானே வந்து வெளிப்பட்டருளும்.
 
1630: தவத்தவர் எந்த நிலையிலும் தம் நிலையினின்று மாறுபட மாட்டார்.
தம்மையும் தமது தலைவனையும் கண்ட தவத்தோர் அமைச்சும் யானைக்கூட்டமும் அரசும் ஒன்றுக்கொன்று மாறுபட்டு எழும் போரின் நடுவிலும் திருவருளில் அமைத்த ஞானமும் அதனால் பெறவெண்டிய ஞேயப் பொருளாகிய சிவத்தையும் நோக்கி இமையாது நிலை பெற்றிருந்தார்.  தவமுடையோர் எத்தகைய சூழ்நிலையிலும் தம் நிலைமை குன்றாது இருப்பர்.
 
1631: பற்று நீங்கிப் பிறவி அறும்
சாத்திரம் படித்துக்கொண்டு பெருமை அடைவதை விட்டு நீங்கள் ஒரு கணமாவது புறத்தே செல்லும் மனத்தைத் தடுத்து அகத்தே நோக்குங்கள்.  அந்த அகமுகப் பார்வையானது பசு மரத்தில் அடித்த ஆணி போல் நிலை பெற பிணித்த பிறவியானது கட்டுகளினின்றும் அகன்று விடும்.   சாத்திர அறிவைக் காட்டிலும் அகமுகப்பார்வையே அநுபவத்தைக் கொடுத்துப் பிறவியைப் போக்கும்.
 
1632: தவத்தினால் பயன் அடைந்த பின் தவம் வேண்டியதில்லை.
ஞானம் பெற வேண்டுமாயின் தவம் வேண்டும்.  தன்னை மறந்திருக்கும் ஞான சமாதி கூடிய பின்னர் அதற்குரிய சாதனை வேண்டியதில்லை.   இல்லறத்திலிருந்து யோகம் பயிலுவோர் இறைவனை இடையறாது சிந்தித்திருத்தலின் சமாதி பெறுவதர்க்குரிய தவம் வேண்டியதில்லை.
 
6.தவதூடணம்.  தவநிந்தை.  புறநோக்கை விட்டு அகநோக்கு உடையவர்க்கு வெளியில் செய்யக்கூடிய செயல் வேண்டாததாகும்.
 
1633: தவம் உடையாரின் சிறப்பு:
உயிர்க்கு உயிரான பொருளை உள்ளே கண்ட பின்பு கற்று அறிந்து கொள்ள வேண்டியது எதுவும் இல்லை.  உண்மைப் பொருளான சிவத்தை உடலில் கண்டால் அன்பு செலுத்தலும் வேண்டியதில்லை.    தன்னை மறந்த சமாதி நிலை கிட்டிய பின்பு இறப்பதும் வேண்டியதில்லை.   உள்ளத்தைப் புலன் வழிப் போகாது தடுத்து நிலை நிறுத்தும் ஆற்றல் உடையவர்க்கு மற்ற இடங்களுக்குப் போய்த் தவம் செய்ய வேண்டியதில்லை.
 
1634: சமாதி கூடியவர்க்கு வேண்டாதவை:
மெய்ப்பொருளை உணர்த்தும் நூல்களின் கருத்துக்களை உணர்ந்து ஐம்புலன்களும் அடங்கினால் கற்க வேண்டிய தேவை இல்லை.  அவ்வாறு அறிந்து மெய்ப்பொருளான சிவத்துடன் கூடினால், மந்திர உச்சரிப்பும் ஆரவார பூசையும் வேண்டியதில்லை.  இங்ஙனம் நிற்பவர் உள்ளம் அசுத்தம் இல்லாமையால் தூய்மை செய்யும் செயலும் வேண்டா.    சித்தம் எண்ணுவதை விட்ட போதே சித்தமும் வேண்டியதில்லை.       
 
1635: தவத்தவர் விண்ணவரை விட மேம்பட்டவர்:
தவத்தின் பயனை அறிபவரே உண்மையான தவத்தைச் செய்பவர்கள் ஆவார்கள். இத்தன்மை வாய்ந்தவர்களே உண்மையை அறிந்து மாணவனுக்கு எடுத்துக் கூறும் உண்மைக் குரு ஆவார்கள்.   இவர்களே பழைய நுண்ணுடலை உறுதி செய்பவர்கள்.  எனவே இவர்கள் விண்ணிலும் மண்ணிலும் சிறந்தவர்கள்.
 
1636: பொறிகள் வழி போகாமல் மனத்தைத் தடுத்து நிறுத்துதல் தவம்:
திருவருளுடன் கூடி நிற்கும் தவத்தைச் செய்து ஒலிக்கும் நாத வடிவான திருவடியைக் கண்டேன்.  நீண்ட காலம் அந்நிலையிலிருந்து தேடிச் சிவகதியை அடைந்தேன். இங்ஙனம் பொறிகளைத் தன் வழிப்படுத்தி ஒடுங்கி நிற்பதே தவம்.   இப்படியின்றி மாறுபட்டுப் பொறிகள் வழி மயங்கிய உலகத்தவர் எத்தகைய தவம் உடையவர் ஆவர்?
 
1637: தவத்தவரைச் சார்ந்து ஒழுகினால் சிவத்தைக் காணலாம்:
உள்ளத்தில் சங்கற்பத்தால் ஆன பெரிய கடலாய் உள்ள ஏழினையும் கடந்து தவத்தவர் வழி சார்ந்து அவரொடு இணங்கியிருப்பவர் பிறப்புக்கு வரமாட்டார்.  பின்பு அத்தவம் உடையவர் ஏவலைக் கேட்டு நடந்தால் சிவத்தைத் தன் முகத்தின் முன்பு கண்டு சிவப்பேறு அடையவும் கூடும்.
 
1638: ஞானத்தால் பந்தத்தை நீக்கிட வேண்டும்:
உள்ளம் என்ற உறைக்குள் உள்ள வாளை உருவி, செருக்கு, சினம் முதலியவற்றை அறுத்து உலகியலை விட்டுச் சிவத்துடன் வேறுபாடின்றிப் பொருந்தி ஞானேந்திரியங்கள் ஐந்தும் வெளிச் செல்வதைத் தடுத்தால், தவத்தில் காணும் சிவ ஒளியே தன் ஒளியாகும்.
 
1639: சிவத்தைச் சிந்தித்திருப்பதே தவம்:
சீவர்களின் அறிவில் பொருந்தி நிற்பவனை உணர்வது சிவபத்தியை ஏற்படுத்தும். மேலும் அடியவர்
நாள் தோறும் தொழுவதால் வீடுபேறும் கிட்டும்.  அவ்வாறு உலகியல் நோக்கை வெறுப்பவன் என்ற சொல்லை மெய்ம்மை ஆக்குவதே தவம் ஆகும்.
 
1640: புறச் செயல்களால் சந்திரகலை தோன்றாது.
பத்திரங்கள் எடுத்தும் மலரைக் கொய்தும் எம் இறைவனுக்கு ஆகும் என்று எண்ணி மலர்களைத் தொடுத்துக் கொண்டிருந்தேன்.    அவ்வமயத்தில் வான்கங்கையான ஒளியைக் காணவில்லை.    மூலாதாரத்திலிருந்து தலைவரை போகும் சுழுமுனை நாடியைப் பார்த்து என்னுள்ளம் அடங்கியது.    தலையில் சந்திரகலை விளங்குமாறு செய்து தவத்தின் பொருளை உணர்ந்தேன்.
 
1641: நிராதாரத்தில் நிற்பவர் பிறவி எடுக்கமாட்டார்:
இறைவன் படர்ந்த ஒளிக்கிரணத்தையுடைய அன்பர்க்குத்  துன்பம் வராத வண்ணம் காத்தருள்வான்.    துன்பம் வராதபடி செய்தவரின் தவத்தை ஆராய்ந்தால் உடலை மீண்டும் பெருமை செய்வது அவரது மனதின் ஒருமைப்பாட்டால் ஆகும்.
 
1642: தவம் செய்வதே துன்பம் நீங்கும் வழி:
நூலைக் கற்று அறிந்து பொறுமையுடன் தவம் செய்வதற்கு அஞ்சி  வயிற்றுக்கு உணவு தேடி வருந்தி அலைவது என்பது, ஆற்றில் உள்ள முதலைக்கு அஞ்சி ஓடி அண்மை யில் குட்டியை ஈன்ற கரடிக்கு முன் போய் அதனிடம் அகப்பட்டுத் துன்பம் அடைந்து வருந்துவதைப்  போன்றதாகும்.
 
1643: மூச்சு நின்று விடும்:
சிவயோகத்தால் சிவக்கனி பழுக்குமாறும், அதை உண்ணுமாறும் , உயிர் பல முறை உலவுகின்ற உடம்பில் உயிர்க்காற்றைச் சுழுமுனையில் நிறுத்தவல்லவர்க்கு மூச்சு இயங்கும் தன்மை கெட்டு மேல் முகமாக விளங்கும் சகஸ்ரதளத்தில் ஒன்றி விடும்
 
1644: சித்தம் சிவமாதலே தவம்:
சித்தம் இடைவிடாமல் சிவத்தை நினைந்து சிவமாவார்க்குச் செய்ய வேண்டிய தவம் ஒன்றும் இல்லை.  அங்ஙனம் சித்தம் சிவமாகியவர் உறவு உண்டானால் அவர்களின் சித்தம் சிவமாய்ச் சித்தியும் முத்தியும் உண்டாகும்.  எனவே சித்தம் சிவமாவது முன்னைத் தவத்தின் பயனாகும்.
 
7. அருளுடைமையின் ஞானம் வருதல்:
(நாத விந்துவான திருவடி பொருந்திய போது ஞானம் விளங்குதல்.)
 
1645: அடியார் உளப்பாங்கின்படி இறைவன் அளித்தல்:
சிவபெருமானின் அருளானது உண்டாகுமானால் நல்ல செல்வம் உண்டாகும்.   சிவபெருமானின் அருள் உண்டானால் நல்ல ஞானம் உண்டாகும்.  சிவபெருமான் அருளில் பெருந்தன்மையுண்டாகும்.  அவர் பெருந்தெய்வமும் ஆவர்.
 
1646: உலக சத்திகள் அனைத்தும் உடலில் உள்ளன:
சரியை வழி நிற்பவர் தமில்நாடும் அதனைச் சுற்றியுள்ள கன்னடம், மலையாள, துளுவம், தெலுங்கு ஆகிய மண்டலங்களில் உள்ள பதிகளை அடைந்து வழிபடின் அவர்களிடம் மறைந்துள்ள ஞானம் வெளிப்படும் என எண்ணி அலைந்து திரிவர்.  ஞானியர் இவ்வுண்மையை தம் உடலில் உணர்ந்து ஒரு பொருளான சிவமே பல சத்திகளாக விளங்குகிறது என அறிவர்.    அறிந்து எங்கும் போகாமல் இருந்த இடத்திலேயே சிறந்த வழிபாட்டை ஆற்றிப் பெரும் பயனை அடைவர்.
 
1647: வினையைக் கடக்க வேண்டும்:
இவ்வுலகில் புண்ணியம் பாவம் என இரண்டு உள்ளன.   அவை வினை காரணமாக இன்ப துன்பமாய்ப் பொருந்துகின்றன என்று சிவஞானியர் உணர்வார்.   இங்ஙனம் உணர்ந்து இவற்றுக்குக் காரணமான வினை வேரினை அறுத்து அண்ணலை ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள்.
 
1648: முன் நின்றும் பின் நின்றும் அருள்வான் இறைவன்:
வினைகள் முடியும் காலத்தில் சிவம் தன் சத்தியைப் பதிப்பித்து ஆள்வான்.    அந்த நிலை வாராத இடைக் காலத்தில் உயிர்க்கு உயிராய் நின்று வினைகளைத் துய்க்கச் செய்வான்.   உயிர்க்குப் பின் நின்று பிறவியை நீக்கும் அவனே முன் தோன்றி வீடுபேற்றை அளிப்பான்.
 
1649: சிவனுலகு பெறலாம்:
சிவத்தின் அருள் பதிவதால் சிலர் தேவ வடிவம் பெறுவர்.  சிலர் அவன் அருளால் தெய்வத்தன்மை பெறுவர்.     சிவத்தின் அருளால் சிலருக்கு வினை சேராது.  சிவனருள் பற்றிச் சொல்லப் போனால் மேலே கண்ட மூவரும் சிவவுலகத்தவர் ஆவர்.
 
1650: இறைவனது அருளால் மண்ணுலக வாழ்வும் விண்ணுலக வாழ்வும் கிட்டும்:
புண்ணியத்தின் பயன் ஆனவனும் என் தந்தையுமான சிவத்தின் விந்து நாதமாகிய இரு திருவடிகளைப் பொருந்திய போது விளக்கொளி போல் ஞாலம் விளங்கியது.  இவ்வுலகில் ஞானியர் ஆவதும் விண்ணுலகில் தேவ வடிவில் விளங்குவதும் எம் அண்ணலான சிவனது அருளைப் பெற்ற போதே ஆகும்.
 
1651: சீவன் சிவனாகும்:
உடல் என்ற தேரில் ஏறி மனம் என்ற பாகன் இயக்க அழியும் தத்துவ உணர்வுகளில் தலைப்பட்டு மயங்கும் உயிர்கள் - அவை உணர்வில் விளங்கும் ஒளி மண்டலத்தில் அமர்ந்து மலம் அற்ற சதாசிவ குருவின் அருளைப் பெற்றால் அடியவர் கூட்டத்தில் ஒருவனாகி இவனும் சிவ வடிவு அடைவான்.
 
1652: சிவஞானியர் சிவனடியைச் சேர்வர்:
சிவன் உலகு ஞானத்தோடு பிறந்தால் எடுத்த உடலிலேயே சிவவுலகு சேர்கின்ற அரிய தவத்தை நாடுவர்.    சிவவுலகத்தில் சிவன் அடியை அடைவர்.    சிவவுலகத்தில் சிவசத்தியின் ஆற்றலை அடைவர்.
 
1653: சிவம் அழகிய ஒளியுடன் விளங்கும்:
பகலவனைக் கண்ட சூரிய காந்தக்கல் தீயின் வடிவம் ஆகும்.  சந்திரனைக்கண்ட சந்திர காந்தக்கல் முத்தினைப் போன்ற நீரின் வடிவம் ஆகும். மோதுகின்ற சக்கிமுக்கித் தீயை உண்டாக்கும் தீயின் வடிவம் ஆகும்.  ஆனால் அக்கினி மண்டலத்தைத் தன்னகத்தே கொண்ட சிவன் அக்கினித் தன்மையை விட்டு அழகிய திங்கள் ஒளிமயமாய் விளங்குவான்.
 
1654: பொய்க் கூட்டத்தை நீங்கினேன்:
நான் தேடும் உறவாய் எம் குருநாதனான சிவத்தைப் பொருந்தித் தேடுவேன்.  சிவபெரு மான் என்று கூடுவேன்.  அங்ஙனம் கூடி ஒலிக்கும் கழலை அணிந்த திருவடிக்குச் செல் வதற்கு உடலை விட்டு உயிரைப் பிரிந்து அறிகின்ற வரையிலே யான் விடேன்.
 
8. அவவேடம்: பயனில்லாத சின்னங்களையுடைய கோலம் அவவேடம்.
 
1655: பயனில்லாத கோலங்களை விட்டு இறைவனைத் தேடுங்கள்:
ஆடம்பரத்துடன் சோறு உண்பதையே பயனாகப் பயனில்லாத கோலங்களைப் பூண்டு உலகத்தோரை மயக்கும் அறிவற்றவர்களே!  உங்கள் பொய்யான கோலங்களைக் கை விடுங்கள்.  கைவிட்டுச் சிவனை நினைந்து ஆடியும் பாடியும் ஆனந்தக் கண்ணீர் விட்டும் மகிழ்வுடன் பிதற்றியும் சிவபெருமானின் திருவடிகளைத் தேடிக் காணுங்கள்!
 
1656: பொய்க் கோலம் கொண்டவர் வாழும் நாடு வளம் குன்றும்:
சிவஞானம் இல்லாதவர் தவத்தை மேற் கொண்டு இந்த நாட்டில் இழிவான செய்கையைச் செய்து பிச்சை ஏற்று உயிருடன் வாழ்ந்தாலும் அந்த நாடானது பெருமை குன்றும்.  எனவே இழிவுடைய அவரது கோலத்தை அரற்றுவது இன்பம் தருவதாய் அமையும்.
 
1657: உலகு நலம் பெறும் வழி:
இன்பம் துன்பம் என்னும் இரண்டும் நாட்டு மக்கள் செய்த நல்வினை  தீவினையால் அந்நாட்டிற்கு ஆகும் என இயம்புவர்.  எனவே மன்னன் இதனை நன்றாக ஆராய்ந்து நாள் தோறும் நாட்டில் பொய்க் கோலம் கொண்டவரை வழிப்படுத்தினால் நாடு நலம் அடையும்.
 
1658: விலக்கப்பட வேண்டியவர்:
தாழ்ந்த குலத்தில் பிறந்தவர் மேன்மை அடையும் பொருட்டாகக் கோலம் கொள்வர். வழி வழி அடிமை செய்யும் குலத்தவர் தெய்வநிலை எய்துவதன் பொருட்டாய்க் கோலம் மேற்கொள்வர் பழிக்கக்கூடிய செயலைச் செய்யும் குலத்தே தோன்றி செயலால் கீழானவர் கோலம் பூண்டால் கழிக்கக் கூடிய குலத்தவர் ஆவர்.  ஆதலால் இத்தகையவர் நீக்கத் தக்கவர் ஆவார்.
 
1659: உண்மை ஞானத்தால் தான் தவப்பயன் கை கூடும்!
பொய்யாய்க் கோலத்தைப் பூண்டு தவம் செய்பவர்  நரகத்துக்குப் போவர்.   அவ்வாறு பொய்த் தவம் செய்தவர் எப்போதும் புண்ணியர் ஆகமாட்டார்.    பொய்யான தவமானது மெய்த்தவத்தைப் போன்று இவ்வுலக இன்பங்கள்  சிலவற்றை அளிக்க வல்லது.  ஆயினும் உண்மை ஞானத்தினால் தான் தவத்தின் பயன் கைகூடும்.
 
1960: பிச்சை எடுப்பவரும் கடைத்தேறலாம்:
வயிறு நிறைய உண்பது ஒன்றையே எண்ணிப் பொய்யாய்த்தவம் பூண்பர்.  உண்மையாய்த் தவ வேடம் பூண்டவர் உயிர் உடலை விட்டு நீங்காமல்  இருக்கப் பிச்சை ஏற்பர்.  பொய்யான கோலத்தை மெய்யான கோலம் போல் கொண்டாலும், கோலத்தில் உண்மை மேன்மையானவற்றால் அதுவே அவர் உய்தி பெறுவதற்குரிய கோலம் ஆகும்.  
 
9.தவவேடம். தவத்துக்குரிய சின்னம்: விபூதி, உருத்திராக்கம், குண்டலம் முதலியன.
 
1661: தவம் உடையார்க்கே கோலம் சிறக்கும்:
தவத்தில் சிறந்தவரே முதன்மையான வேடம் பூண்டவர்கள்.  அங்ஙனமின்றி பொய்யான வேடத்தைப் பூண்டவர் கொடுமை மிக்க கொலை பாதகராவார்.  அத்தகைய கீழான செயலுடையோர் வேடத்துக்குப் பொருந்தார்.   அவ்வேடம் தவத்தால் சிறந்தார்க்கன்றித் தாங்க முடியாது.  உண்மையை உணர்ந்த தவமுடையோரே முதன்மையான சிவவேடம் உடையவர்.
 
1662: கோலத்துக்குரிய சின்னங்கள்:
சிவ அடையாளங்களில் முதன்மையானது திருநீறு, காதில் அணியும் தாமிரத்தாலான குண்டலம், கழுத்தில் அணியும் உருத்திராக்கமாலை.  இவை வேதாகமங்களை ஓதியவர்க்கு உரிய சிவ சின்னங்கள்.
 
1663: சிவச் சின்னங்கள்:
தீமையில்லாத சிவயோகிகளுக்கு உரிய சின்னங்கள் உள்ளாடையும் கைப்பையும் தோகையாலாகிய சட்டையும் சுற்றிய சடையும் உடம்பு முழுவதும் அணியும் திருநீறும் அங்கையில் மண்டை ஓடும் அழகிய வலக்கையில் பிரப்பம் கோலும் ஆம்.
 
1664: சிவயோகிக்குரிய சின்னங்கள் பத்து:
காதணியாகிய குண்டலமும், கழுத்தணியாகிய உருத்திராக்கமும், ஊதுகின்ற வெண் சங்கும், காமாதி அறுபகையும் கட்டியதற்கு அடையாளமாகக் காதில் ஆறு குண்டு களைக் கோத்த காதணியும், மண்டையாகிய சட்டியும், குற்றமில்லாத பாதக்குறடும்,  சிவயோகத்துக்குரிய இருக்கையும், யோகம் புரியும் போது முழங்காலையும் முதுகையும் சுற்றிக் கட்டப் பெறும் பட்டிகையும், யோகம் செய்யும் போது முட்டுக் கொடுக்கும் கவை வடிவான யோக தண்டமும் ஆகிய பத்து அடையாளங்களும் சிவயோகிக்கு உரியன.
 
10.திருநீறு.விபூதி. (1665-1667) விபூதி என்பது ஒளியை நினைவு படுத்தும் சாதனம்.
 
1665: ஓங்காரத்தை ஓதி உய்வு பெற வேண்டும்:
பூணூல் என்ற முப்புரிநூல் இடை பிங்கலை சுழுமுனையாகிய மூன்றையும் தொழிற்படுத்தும் ஆற்றல் உடையோர் என்பதற்கு அடையாளம்.  சிறு குடுமி நிராதாரத்தில் உள்ள பிரமத்தையே நினைத்திருப்பவர் என்பதற்கு அடையாளம்.  பூணூலையும் குடுமியையும் அணிந்திருந்தும் அவற்றின் உண்மையை மூடர்கள் அறிவதில்லை. 
பூணூல் என்பது வேதாந்தத்தைக் குறிப்பது.  நுட்பமான குடுமி வேதாந்த ஞானத்தை உணர்த்துவது.
பிரமத்தின் (சிவத்தின்) பால் இரண்டற்று ஒன்றின அந்தண்மையுடையோர் பரமும் உயிரும் ஒன்றென்று பார்ப்பார்.  அவ்விதம் ஒன்றாகாது நின்றவர் ஓங்காரம் ஓதில் ஒன்றாவார். (பிரம சொரூபமடைய தூல உடல் சூக்கும ஒளி உடலாக மாறுவது அவசியம் என்றும் அவ்வொளியே சைவர்கள் அணியும் திருநீற்றின் தத்துவம் என்பர்.)  திருநீற்றின் உண்மையை உணர்ந்து ஓங்காரத்தை ஓதி இரண்டற்ற நிலை அடைய வேண்டும்.
 
1666: ஆனந்தமயமான திருவடியை அடையலாம்:
சிவபெருமான் பூசும் கவசத் திருநீற்றை ஒளி கெடாமல் பூசி மகிழ்வீராயின் பண்டைய வினைகளும் உங்களிடம் தங்கா.  சிவகதியும் உங்களிடம் வந்து பொருந்தும்.  ஆனந்த மயமான திருவடியை அடையலாம்.
 
1667: திருநீற்றின் பயன்:
அரசு, ஆல், அத்தியின் சமித்துகள் வேள்வித்தீயில் பொருந்தி உருவம் மாறி விபூதியாதல் போல் அவயவம் இல்லாதவனும் மலம் இல்லாதவனும் ஆகிய சிவத்தின் திருவடியை உணர்ந்து அநுபவிக்கும் நியதியுடையவர் உருமாறி வெண்ணீற்றொளி உடலைச்சூல இருப்பதை உணர்ந்த பிரம உயர் குலத்தோராவார்.
 
11. ஞான வேடம்: ஞானத்தை விரும்பி மேற்கொள்ளும் கோலம்:
 
1668: சிவஒளியில் பொருந்தி நிற்பவர்:
உண்மையான சிவஞானம் இல்லாதவர் உண்மையான சிவஞானியரைப் போன்று கோலம் தாங்கினால் நாதத்தை அடைவர்.  உண்மையான  சிவஞானம் உடையவர் சிவஞானிக்குரிய கோலத்தைக் கொள்ளாது போயினும் நல்ல முத்தரே ஆவார்.  சிவஞானப்பேறு உண்டாக வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர் சிவபெருமானிடம் என்றும் நீங்காத பேரொளியை உடையவராய் நிற்பர்.
 
1669: சிவஞானியர்  வேடம் இன்றி மௌனியாய் இருப்பர்:
இழிவான ஞானம் உடையவர் கோலத்தைத் தாங்கியும் அதனால் ஏற்படக்கூடிய பயன் ஏதும் இல்லை. நல்ல ஞானம் உடையவர் இறையருளில்  தோய்ந்து கோலம் ஏற்பதில் கருத்தின்றி இருப்பர்.  திரிபு உணர்வு உடையவர் சமயக் காழ்ப்புக் கொண்டவர்.  பின் அனுபவ ஞானம் உடைய ஞானியர் சமயக் காழ்ப்புக் கொண்டவரிடம் வாதிட விரும்ப மாட்டார்.
 
1670: உவமையில்லாத பொருளைப் பொருந்தி வாழலாம்!
சிவஞானியருக்கும் சிவயோகியருக்கும் பயனில்லாத புறச்சாதனங்கள் தேவையற்றவை.  அன்னார்க்குத் திருநீறு, உருத்திராட்சம், சடைமுடி, ஐந்தெழுத்து என்னும் நான்கு புறச் சாதனங்களும் வீணேயாம்.  அவர்கள் உவமை கூற இயலாத பொருளை உள்ளே பொருந்தி வாழலாம்.
 
1671: ஆசையை வென்றவர் ஞானியர்:
செப்பிடு வித்தைக்காரர்கள் கழுமரத்தின் அடியில் இருக்கின்ற நாய் போல் சுற்றித் திரிவார்கள். அதுவேயன்றிக் கழுகு போல் ஏமாளிகளைப் பிடுங்கித் திரிவார்கள்.  ஆனால் சிவஞானியரோ ஐம்பொறிகளும் உடம்பும் அனுபவத்துக்குரிய தக்கவையாக ஒத்திருந்தும் இன்பங்களை விரும்பாமல் இறந்தவரைப் போல் திரிவர்.
 
1672: திருவடி ஞானம் பெற்றவர்:
திருவருளால் முனைப்பில்லாது அதன் வழி இயங்கும் சிவமெய்யுணர்வு உடையவர் உண்மை அடியார். அத்தகுதி அற்றவர் அடியவரும் ஆகார்.  அவர் கொள்ளும் சிவக்கோலமும் சிறந்த சிவக்கோலம் ஆகாது.  திருவடிஞானம் பெற்றோரே உண்மை அடியார்.  அடியார் தன்மையில்லாதவர் ஒருகாலும் மெய்யடியார் ஆகமாட்டார்.
 
1673: கோலத்தின் கருத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்:
சிவஞானியர்க்கு அழகிய கோலமும் நல்லவையாகும்.  தான் கொண்ட அக்கோலத்தின் உட்கருத்தை உணர்ந்து அதன்படி ஒழுகில் அதுவே சிவயோகமாகும். அவ்வாறு அமைந்த அவ்வேடம் ஞனத்தை அளிக்கும் சாதனமும் ஆகும்.  அதை ஞான சாதனம் என்று உணராதவனுக்கு கோலம் மட்டிலுமே பொருந்தும்.
 
1674: சிவஞானியின் பெருமை:
திருவடி உணர்வால் ஞான உணர்வால் சிவன் நிலை எய்துவோன் சிவஞானியாவான்.   இவன் நடமாடும் கோயிலினுள் சிறந்த ஒப்பற்ற கோயில் ஆவான்.  வீணாய் உரையாடாத மோனம் உடையவன் ஆதலால் வீடு பெற்ற முத்தன் ஆவான்.  மேலும் திருவடிப் பேறு அடைந்த  சித்தனும் ஆவான்.      உண்மைக் கோலம் அற்ற மற்றத் தவத்தவர் இவனைப் பேசிடத் தகுதி அற்றவர் ஆவர்.
 
1675: ஞானியர் உலகினர்க்கு நன்மை அளிப்பர்:
தன் அறிவு அற்ற தன்மையும், தான் சிவமே ஆகி விளங்குதலும், உலகில் உள்ள எப்பொருளுக்கும் உரிய முக்காலத்தையும் அறிகின்ற ஆற்றலும், பக்குவம் வாய்ந் தவர்க்குப் பார்வையினாலோ அல்லது பரிசத்தாலோ ஞானத்தை வழங்குதலும், பிரணவ சித்தியும், சிவபதவி அடைந்தவர்க்கு உரியவை ஆகும்.
 
12. சிவ வேடம்; சிவபெருமானுக்கு அடிமை என எண்ணுபவர் கோலம்:
 
1676: உண்மைச் சிவ வேடத்தார்:
சிவனது திருவருளால் அவனுக்கு அடிமையாகிப் பொருளான தனது உடலுக்கு மேல் விளங்கும் பொன் ஒளி மயமான அண்ட கோசத்தை  உணர்ந்து இருள் நீங்கித் தம் செயல் அற்றவரே தெளிவான அடிமை பூண்ட சிவ வேடத்தார் ஆவர்.
 
1677: புற வேடத்தில் மயங்குபவர் வருந்துவர்:
உடலில் கொண்ட புறக் கோலங்கள் ஒளி மயமான உயிருக்குப் பயன்படமாட்டா. உடலை விட்டு உயிர் பிரிந்த போது உடலைச் சார்ந்த அறிவற்ற சாதனங்களும் பிரிந்து நீங்கி விடும்.   உடல் அசத்துப் பொருள், உயிர் சத்துப் பொருள் என அறியாதவர் கடலில் சிக்கிய மரக்கட்டையைப் போன்று துன்புறுவர்.
 
1678: ஆசை நீங்கி இருப்பர் சிவ வேடத்தார்:
ஆணவ மலத்தின் காரியமானது மயக்கம்.  அவை விட்டு அதன் விளைவான இருளையும் அகற்றி உண்மையுள்ள மனம்எண்ணுவதை விட்டுக் கயல் மீன் போன்ற கண்ணையுடைய பெண்டிரின் கையால் தழுவப் பெறுதலையும் நீங்கி, மயக்கம் இல்லாதவருடன் இணங்கித் தமக்கு எனச் செயல் அற்று இருப்பர் சிவ வேடத்தவர் ஆவர்.
 
1679: இன்பப் பொருளை அடையலாம்:
மானிடரே! பிராண வடிவமாய் உங்களிடம் ஓடிக் கொண்டிருக்கும் குதிரையைக் கடிவாளத்தைப் பிடித்து நிறுத்துங்கள்.  கோலம் மட்டும் கொண்டு என்ன செய்வீர்?  வீண் கோலத்தைக் கை விடுங்கள்.  நம் தலைவன் நந்தி தங்கியுள்ள குரு மண்டலத்தில் மனத்தை வையுங்கள்.  நீங்கள் தேடுகின்ற இன்பப் பொருளான சிவத்தைப் போய் அடையலாம்.
 
13. அபக்குவன்:  பக்குவமற்றவன்:
 
1680: ஞானம் அளிக்கும் குருவை நாடாமல் கெடுவர்:
அறிவால் அறியாமையைப் போக்கும் குருவினைக் கொள்ள மாட்டார்.   அறியாமையை நீக்காத குருவைக் கொள்வர்.  அது குருடன் ஒருவனும் மற்றொரு குருடனும் சேர்ந்து குருட்டுத் தனமான ஆட்டமாடி இரண்டு குருடர்களும் அறியாமையால் குழியில் விழுவதைப் போன்றதாகும்.
 
1681: பக்குவமற்றவர் பல எண்ணங்களை எண்ணிக் கெடுவர்:
மானிடர் நினைப்பவை எல்லாவற்றையும் பிரதிபலித்துக் கொண்டிருப்பது காரண உடல். எண்ணங்கள் நிறைந்த மனம் உடையவர் காரண உடலின் நிழலைக் கூட அணுகி அனுபவிக்க மாட்டார்.  எண்ணங் களால் உண்டாகிய வினைப் பயன்களை மாற்றிக் கொள்ளவும் அறியார். அறியாமையால் மீண்டும் காம வழியை விரும்பிப் போய் எண்ணங்களைப் பெருக்கிக் கொள்வார். 
 
1682: உயிரை நிலைக்கச் செய்பவன் சிவன்:
"ஏய்" என்று கூப்பிட்டால் "என்ன" என்று கூட மக்கள் விடை கூறமாட்டார்.  உலகத்தின் இயல்பு இதுவாகும்.    குழந்தையின் வாயில் தாயின் மார்பகத்தை வைக்கப் பால் சுரக்கும். ஆனால் எவ்வாறு தாயின் மார்பில் பால்சுரக்கிறது என்பதை நம்மவர் யாரும் அறிவதில்லை.    அவ்வாறு அமுதத்தை ஊனில்  அளித்து  உயிரை  நிலைக்கச்  செய்பவன்  உருவம்இல்லாத சிவனே ஆவான்.
 
1683: பக்குவம் அற்றவர் முக்கரண சுத்தியுடன் இருக்க மாட்டார்:
உறுதியுடைய பெருந்தன்மை உடையவனே!  வாய் ஏதோ ஒன்றைச் சொல்ல,  மனம் வேறோன்றை எண்ண, நீ பிறிது ஒன்றைச் செய்யாதே!  முக்கரணத் தூய்மையுடன் இருந்தால் நீ சிவாக்கினியைப் பெற்றவன் ஆவாய் என நான் சொல்வேன்.  அப்படித் தெளிந்த பின்பு என் சொல் பித்தனின் சொல் என்று யாரும் சொல்ல மாட்டார்.
 
1684: ஐம்பெருங் குற்றம் செய்பவரை மன்னன் தண்டிக்க வேண்டும்:
ஐம்பெருப் பாவங்களைச் செய்பவரைக் அஞ்சும்படி தக்க சமயத்தில் அறிந்து ஒரு மன்னன் மிக்க தண்டனை தந்து நாட்டினின்று கடத்தா விட்டால் நாடானது வறுமைக்குள் சிக்கி முற்றிலும் பாழாகும்.
 
1685: தவத்தை மேற் கொள்ளாதவர் பிறவியில் அகப்பட்டுத் துன்புறுவர்:
தவத்தை மேற்கொண்டவர் தாம் முன் வினை காரணமாய் அனுபவிக்கும் துன்பமான கன்மம் சிவத்தினால் தனது பிறவி நீக்கத்துக்காக அமைக்கப்பட்டது என்று உணர்வார்.  இதை மற்ற தேவரும் அறிய மாட்டார்.   தவத்தில் நிலையாய் நின்று அறியாதவர் எல்லாம் பிறவித் துன்பத்தில் அகப்பட்டு வருந்துவர்.
 
1686: பக்குவர்க்குக் கூடாதவை:
பிறரிடம் சினம் கொள்ளுதல், எதையாவது சிந்தித்தல், செயல்களைச் செய்தல், தின்னுதல், சுவைத்தல், மற்றவர்க்குத் தீமை செய்தல், குறைவு படுதல், நிறைவு படுதல், தன் பெருமையைச் சொல்லுதல் என்ற இந்த ஒன்பதும் இறைவனிடம் அன்பு கொண்டவர்க்குக் கூடாதவையாகும்.
 
1687: ஒளியாய்ச் சிவம் விளங்கும்:
அபக்குவிகள் தமக்கு அனுகூலமானதை அறிய மாட்டார்.  பரமாகாயத்தைக் காண மாட்டார்.தமக்கு அனுகூலமான பரவெளியில் தம் பார்வையைச் செலுத்த மாட்டார்.  எனவே, பக்குவம் அற்றவர்களே, காவலோடு உள்ளகண் இமைகளை வெளி  நோக்கிலிருந்து தடுத்து நிறுத்துங்கள். அக நோக்கை நோக்குங்கள்.தொடர்ந்து வரும் இடையூற்றைத் தவிக்கும் ஒளியாய்ச் சிவம் உங்களுக்கு விளங்கும்.
 
1688: முத்தியில் விருப்பு உடையவனுக்கே ஞானத்தத் தர வேண்டும்:
அனாதி காலம் முதல் ஆன்மாவுடன் கட்டப் பெற்றது ஆணவ மலம்.   அதை மாற்றும் வழியை உண்டாக்கி மலக்குற்றம் நீங்க முத்தியில் விருப் பம் உடையவனாகி உலக இயலில் மாறுபட்டு உண்மையான பொருளை நாடி மேன்மையை அடையாதபடி மன உறுதி இல்லாதவனுக்கு ஞானத்தைத் தரக் கூடாது.
 
1689: மாணவனாக ஏற்கத் தகாதவன்:
ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி  முதலிய ஐந்து மலங்களையும் நீங்கும் வகையை ஆராயாதவன், பொய் கலந்து பேசுபவன், பிறப்பு இறப்புகளுக்கு அஞ்சாதவன் ஆகிய இயல்பினன் மாணவனாய் ஏற்கத் தக்கவன் அல்லன் என்று விலக்கத் தக்கவன்.
 
1690: நன் மாணவர் செயல்:
நல் முத்தியை விரும்பும் அறிவுடைய பக்குவமுள்ள சீடர் வேதாகம முறை உணர்ந்து குற்றமே அறியாத நல்ல குருவை நாடி உபதேசம் பெறுவர்.
 
1691: என்னை ஆண்டருள்க:
பக்குவமுள்ள சீடர் பரமனை விரும்பி பரபரப்பு நீங்குவர்.  உலகவாழ்வில் அலுத்துப் போவர்.   ஞானத்தில் விருப்பம் கொள்வர்.   யாரிடமும் சென்று சேரமாட்டார். வினையைக்  கெட,   கவலை தீர இறைவனிடம் தன்னை ஆட்கொண்டு அருளும்படி வேண்டிக்கொண்டே இருப்பர்.
 
1692: உபதேசத்தை அளிக்கும் முறை: 
தன்னோடு பொருந்துகின்ற பக்குவமுள்ள சீடன் பரபரப்போடு உள்ள போதே சீடனது சிதறுகின்ற சிந்தையை ஒருமுகப்படுத்தி மேலான ஞானத்தை அளிக்கின்ற ஒளியை ஆசாரியன் சகஸ்ரதளத்தில் பொருந்தித் தியானித்து அளிக்கவேண்டும்.
 
1693: நல்ல குருவை மாணவன் நாடியடைய வேண்டும்: பிராணனை செயித்த, சீடனுக்குத் தன்னிடமுள்ள சிவ ஒளியைக் கொடுக்கக் கூடிய நல்ல குருவை சீடன் ஏற்று  தனது உடல், பொருள்,ஆவி மூன்றையும் குருவுக்கு காணிக்கையாக்கி எள்ளளவு காலமும் இடை விடாமல் அவர் காட்டிய வழியில் நின்று தெளிந்து உணரச் சிவபதம் தானே விளையும்.
 
1694: உபதேசம் பெறக் கூடிய நாட்கள்: 
சுவாதி, விசாகம், விருச்சிகம்,கடகம் நட்சத்திரங்கள் கொண்ட நாள்கள் குருவினிடம் உபதேசம் பெறத் தகுந்த நாள்கள்.
 
1695: குருவின் உபதேசப்படி சிந்தித்திருந்தால் வினை நீங்கி இறையருள் பெறலாம்:
குரு உபதேசம் பெற்ற தூய்மையான சிந்தையில் இறைவன் எளுந்தருளிய போதே சீடனின் வலிமை மிக்க வினை நீங்கும். இறைவனது திருவடி அருள் கிட்டும்.
 
1696. நல்ல மாணவன் இயல்பு:
சத்துவ குணமுடையவனாகி சிவதத்துவத்தைத் தியானித்து ஆத்திகர்களால் கொள்ளப் பட்ட ஏதேனும் ஒரு துவைத நெறியைப் பற்றினவனாய் வினையால் பிணிக்கப்பட்ட  பிறவிக்கு அஞ்சி மேலான தரும நெறியைக் கைக்கொள்பவனே நல்ல பக்குவமுள்ள சீடனாவான்.
 
1697: உயிர் இறைவனுடன் பொருந்தி நிற்றல்:
உலகில் நித்தியமாய் அழியாத பொருள் எவை, அநித்தியமாய் அழியும் பொருள் எவை என்று சிந்தித்து உணர்ந்து  அநித்தியத்தை விட்டு  நித்தியப் பொருளான சிவத்தையே சிந்தித்து சிவத்தின் சத்தி பதியப் பெற்றுச் சிவத்தை உணர்த்த உணர்த்த  சிவத்தினிடம் சிவஞானம் பெறப் பணிந்து ஆனந்தமே வடிவான சிவசத்தியின் இச்சைக்குத் தக்கவாறு தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்பவனே நல்ல சீடனாவான்.
 
1698: குருவை வழிபட இறைவனைக் காணலாம்:
'குருநாதன் இன்று தங்களது திருவடியைச் சூட்டி அருளும்' என்று குருவினது வடிவத்தை தம்முடைய சிரசின் மேல் தியானிக்க  மாயப்பிறவியை நீக்கியருளும் அருட்சத்தியாலே அருள் பெற்ற ஞானமுடை யோனே குற்றம் நீங்கிய சீடன் ஆவான். குருவை வழிபடில் இறைவனைக் கூடலாம்.
 
1699: திருவடி தீட்சைக்குப்பின் நிகழ்வன:
சீடன் இறை அநுபவ ஞானத்தில் விருப்பம் மிகுந்து சிவத்தின் பால்  இதுவரை கண்டறியாத காதல் உண்டாக இதுகாறும் அமையப்பெறாத ஒழுக்கம், நோன்பு, சிவத்தின் மேல் காதல், சிவத்தை அடைய வேண்டுபவர்க்கு வேண்டிய சிவத்தைப் பற்றிய ஞானம் ஆகியவை அமையும்.   திருவடி தீட்சைக்குப் பிறகு ஞானத்தின் அநுபவத்தை சீடன் ஆராய்பவன் ஆவான்.
 
1700: மாணவனின் பக்குவத்துக்கு ஏற்ப உபதேசம் அமையும்:
சீடனின் பக்குவத்துக்கேற்பக் குரு பராசக்தியை நினைந்து சிவத்தை உணர்த்த வேண்டும்.  குரு தனது உணர்வைக் குண்டலியின் துணை கொண்டு துவாதசாந்த வெளிக்குச் செலுத்திச் சீடனது உணர்வையும் சிரசுக்கு மேலுள்ள சகஸ்ரதளத்தில் நிலைபெறச் செய்தல் வேண்டும்.   சிவத்தின் ஈசான முகமாகிய ஊர்த்துவ முகத்தை  விழிப்பிக்க  வேண்டும்.   இவ்விதமாக சதாசிவத்தின் பஞ்ச முகங்களையும் கீீழேயுள்ள மூலாதாரத்தையும் ஒன்றாக இணைத்தால் சதாசிவத்தைக் கடந்த சிவம் சீடனுக்கு விளங்கும்.
 
1701: சன்மார்க்க உபதேச குரு!
குருவின் திருவடிகளை வணங்கி அருளுபதேசம் வேண்டும் சீடனுக்கு "உடலையே உண்மை யென்று நம்பி சிறைப்பட்டுள்ள மாணவ, நீ அகண்ட சிவமாவாய்." என்பதை ஒன்றுபடுத்தும் நெறியை அறிவிப்பவனே சன்மார்க்க குரு ஆவார்.  குரு சீடனை அகண்டத்திலே நிலைக்கச் செய்தலே உண்மை உபதேசமாகும்.
 
1702: பக்குவம் பெற்ற மாணவன் இயல்பு:
உலகவாழ்வுக்குத் துணைபுரிகின்ற புலன் வழிச் செல்லுகின்ற பொறிகளை மாற்றி சிவத்தைச் சார்ந்து பாசம் நீங்கப் பெற்றுச் சிவமாகும் சிந்தாந்தச் செந்நெறியிலே நின்று விருப்பத்தை விடுகின்ற வேதாந்தி யான குருவின் திருவடிகளில் வணங்குகின்ற தலையினை உடையவனே சிறந்த பக்குவமுள்ள சீடனாவான்.   சிவத்தைச் சார்ந்து, பாசம் பற்றாது, வேட்கையற்ற குருவினிடம் வணங்கி ஞானம் பெற வேண்டும்.
 
1703: பக்குவம் பொருந்திய மாணவன்!
சத்துவகுணம், உண்மை, கருணை, நித்தியத்தையும், அநித்தியத்தையும் ஆராய்ச்சி செய்து நித்தியப் பொருளைப் பிரித்து அறியும் தன்மை, குருவை விட்டு நிழலைப் போல நீங்காமை, உண்மையான பரஞானத்தைச் சிந்தித்துத் தெளிந்து அறிதல்,  அநுபவத்தில் சிவம் பதிவதும் அதனால் சீவபோதம் கழலுவதும் பக்குவமுள்ள சீடனுக்குரிய தகுதிகள்.
 
 
======================ஐந்தாம் தந்திரம் முடிந்தது.============================
1.  ஆறு ஆதாரம்.
 
1704: சிவத்தின் திருவடியைக் காணலாம்:
நான்கு இதழ்த் தாமரை வடிவமான மூலாதாரம், ஆறு இதழ்த் தாமரை வடிவமான சுவாதிட்டானம், பத்து இதழ்த் தாமரை வடிவமான மணிபூரகம், பன்னிரண்டு இதழ்த் தாமரை வடிவமான அநாகதம், இவற்றுக்கு மேல் இருக்கும் பதினாறு இதழ்த்தாமரை வடிவான விசுத்தி என்னும் ஐந்து ஆதாரங்களும் மூலாதாரம் முதல் தரிசித்து முடிந்த இரண்டு இதழ்த் தாமரை வடிவான ஆஞ்ஞையில் பழம் பொருளாகிய சிவத்தின் திருவடியைப் பயிற்சியாளன் காணலாம்.
 
1705: பதினாறு கலைகளையும் கடந்து பரசிவம் விளங்கும்:
நாத தத்துவத்தில் பன்னிரு கலைகளுடன் கூடியது சூரிய மண்டலம்.  இதனது வீதி தலையைச் சூழவுள்ள வான வீதி. மேதை முதலிய பதினாறு கலைகளுடன் கூடியது சந்திர மண்டலம்.  இதனது வீதி மூலாதாரத்திலிருந்து நேரே மேல் நோக்கிச் செங்குத் தாகச் செல்வது.  மேதை முதலான கலைகளில் உடல் முடியும் இடமான நாதாந்தத்துக்கு (தலையின் உச்சி) மேல் விளங்குபவள் பராசத்தி.  அறிவேயான பிரசாத நெறியில் வேற்றுமை இல்லாத அறிவால் செல்ல, மேதை முதலான ஆதாரம் கடந்த நிலையில்
சிவன் விளங்குவான்.
 
1706: கார்மேகம் போன்று அருள் பொழிவான்:
பிரசாத நெறியில் நின்று மேல் கீழ் பக்கம் என்ற பாகுபாட்டைக் கடந்து, இறைவனை ஒரே பேரொளி யாய்க் காணும் போது, அவனே தான் ஆன,  அவா இல்லாமை, இறைமைத்தன்மை, கீர்த்தி, செல்வம், ஞானம், வீரியம் ஆகிய இறைமைக் குணங்கள் ஆறும் பொருந்திய,  எங்கும்  நிறைந்த  பரம்பொருள், 
கார்மேகம் தங்கும் கற்பக மரத்தைப் போன்று  அருள் பொழிவான்.
 
1707: சகமார்க்கத்தின் தன்மை:
ஆறு ஆதாரங்களைத் தூய்மை செய்வதால் இடை, பிங்கலை நாடிகள்  தூய்மை அடையும்.  மேலும் மேதை  முதலாகவுள்ள பதினாறு கலைகளின் முடிவில் வானத்தில் ஒளி ஏற்படும்.  பின் அறிவாலயமான சாதகனின் ஆன்மாவில் வெளி நோக்குடைய ஐம்பொறிகள் அந்தக்கரணங்கள், புத்தி என்பவை அவற்றின் கீழே இழுக்கின்ற இயல்பை விட்டு நிற்கும்.  இங்ஙனம் நிற்பதே சகமார்க்கம் ஆகும்.
(பதினாறு கலைகள்:மேதை=அகரம், அர்க்கீசம்=உகரம்,விடகலை=மகாரம், விந்து, அர்த்தசந்திரன், நிரோதினி, நாதம், நாதாந்தம், சத்தி, வியாபினி, வியோமரூபினி, அநந்தை, அநாதை, அநாசிருதை, சமனை, உன்மனை)
 
1708: பிரணவ உபாசனையால் இன்பம் உண்டாகும்:
மேதை முதலிய பதினாறு கலைகளில் பிரணவ தியானத்தில் நின்று தூண்டினால் குண்டலினி சத்தி முறையே மூலாதாரம் முதலிய இடங்களிலிருந்து மேலே சென்று வழியை உண்டாக்கும்.  வீரியத்தை இடமாய்க் கொண்ட கலையை மடை மாற்றி மேல் ஏறச் செய்யின் ஆறு ஆதாரங்களிலும் ஒளி பெருகும்.  உடலில் இன்பம் விளையும்.
 
1709: ஐம்பது எழுத்துக்களும் ஒடுங்கி நாதம் ஆகும்:
ஆறு ஆதாரங்களையுடைய உடம்பில், மேலே கூறிய வண்ணம் அந்த ஆறு  ஆதாரங்களை அறிந்து தியானம் செய்து மேலே ஏறுங்கள்.  அந்த ஆதாரங்களில் அமைக்கப்பட்ட எழுத்துக்கள் ஐம்பதையும் கடந்த போது பொருந்திய ஆதாரமாக உள்ள ஓர் எழுத்து நாதமயமான "ஓம்" என்ற பிரணவம்.
 
1710: எழுத்துக்களாலும் தத்துவங்களாலும் சூக்கும உடலும் தூல உடலும் பொருந்தும்:
தூல உடலும் பிரிகின்ற அவ்வுடலுடன் போகும் சூக்கும உடலும் பொருந்துவது - சூக்குமமாய் நாதத்தில் ஒடுங்கி விரியும் ஐம்பது எழுத்துக்களாலும் தத்துவங்களாலும் ஆகும்.  சூக்கும உடல் தன் இயல்புக்கு ஏற்ற தூல உடலைப் பெற்றுப் பிறவிக்கான  தூல உடலாக அமையும். இந்த உடம்புக்கும் ஆறு ஆதாரங்களும் அவற்றை எல்லாம் கடந்த பிரணவமும்   பொருந்தி அமையும்.
 
1711: ஆன்மா பரிபூரணமாய்த் திகழ்வது.
பதினாறு இதழ்களோடு கூடிய விசுத்தியாகிய தாமரை கண்டத்தானத்தில் உள்ளது.
அக்கண்டத்தானத்தில் தூய்மையான அறிவாகிய ஆன்மா சிவானந்தமே தன் வடிவாய்ச் சென்று எங்கும் பொருந்திய அறிவாய் நீக்கமற நிறைந்தது.  ஆன்மா விசுத்திச் சக்கரத்துக்கு மேல் நிராதாரத்தில் பற்றுக் கொண்ட போது பரிபூரணமாய்த் திகழ்கிறது.
 
அண்டலிங்கம்: யாவும் எங்கும் சிவம்: உலகமே சிவனது அடையாளம்.
 
1712: யாவும் எங்கும் சிவமாகும்.
எட்டுத்திசைகளிலும் வியாபித்திருப்பது அண்டலிங்கம் என்ற பெயரையுடைய சிவமேயாகும்.   அறுபத்தி நான்கு கலைகளை உடைய பிரணவமும் சிவமேயாகும். உலகனைத்துமே காரணநிலையில் சிவத்தினிடம் உள்ளமையால் அதுவே சிவலிங்கமான வடிவமாகும்.    ஆயினும் உலகத்துக்குக் காரணமான இலிங்கம் என்ற பெயரையுடைய சிவத்தை யாரும் அறியார்.
 
1713: சிற்சத்தியினால் அறிவையும்
குண்டலினி சத்தியால் வடிவையும் தோற்றுவித்தல்.
உலகினைப் படைக்கக் கருதிய சதாசிவம் தன்னை விட்டு நீங்காத சத்தியின் துணை கொண்டு உலகத்தைத் தோற்றுவித்தருளினான்.  குண்டலினி சத்தியின் ஆற்றலால் உலகம் உருவமாகக் காட்சியளிக்கிறது.   சிவசத்தியினாலே அவை உலகில் வெவ்வேறு அறிவுடையனவாகக் காணப்படுகின்றன.    சதாசிவம் சிவத்தின் உருவத்துக்கும் அருவத்துக்கும் இடையே உள்ள
அருவுருவ இடைநிலை.   சதாசிவன் சிற்சத்தியினால் அறிவையும் குண்டலினி சத்தியால்
உருவத்தையும் தோற்றுவித்தருளினான்.
 
1714: இன்பம் முதல் வீடு பேறு வரை நல்குபவன் சிவமே.
போகத்தையும் வீடு பேற்றையும் அதற்குரிய ஞானத்தையும் அதன் பயனாகிய இன்பத்தையும் உடம்பையும் நிலம் முதல் நாதம் ஈறாகவுள்ள முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து ஏகமாய் இருக்கும் நிலையையும் அருளுகின்றவன் சதாசிவன்.  ஆகமங்களால் உணர்த்தப் பெற்ற அந்த ஆறு அத்துவாமூர்த்தி சிவமேயாகும்.
 
1715: பெருமான் அண்டங்களைக் காத்தலை யரும் அறியார்.
எண்ணற்ற தேவர்களும் இன்பம் கருதி சிவபெருமானை வள்ளல் என்று மகிழ்ச்சி பொங்க வாழ்த்தினாரே யன்றி சிவபெருமான் அண்டங்களைக் கடந்து நின்று காக்கின்றான் என்ற உண்மையினை அறிந்து கொள்ளவில்லை.
 
1716: கண் ஒளி போலவும் உணர்வு போலவும் சிவன் விளங்குகின்றான்.
அக்கினி, பிரமன், திருமால், தேவகுரு, சூரியன், இந்திரன் போன்ற தேவர்களிடம் சிவபெருமான் கண்ணொளி போன்றும், மற்ற தேவர்களிடம் உணர்வைப் பெருக்கும் சந்திர ஒளி போன்றும் எல்லா இடங்களிலும் சிவன் நீக்கம் இல்லாது நிறைந்துள்ளான்.
 
1717: சிவன் அருளும் விதம்.
சிவபெருமான் ஸ்தாபித்த லிங்கத்தில் இருந்தும் அருள் செய்ய வல்லவன். ஞானாகாயத்தில் இருந்தும் அருள் செய்ய வல்லவன். அவ்வாறு ஞானாகாயத்தில் உள்ளவன் என்று அறிந்து வழிபாடு செய்வோர்க்கு ஆறாதாரத்திலும் விளங்கும் குண்டலினியாக இருந்து அருள் செய்வான்.
 
1718: கோயில் அனைத்தும் லிங்கமாகும்.
சிவாலயத்தில் கருவறையின் மேல் உள்ள விமானம் தூலலிங்கம்.
கருவறையில் உள்ள லிங்கம் சூக்குமலிங்கமாகும்.
இலிங்கத்திற்கு முன்னால் உள்ள பலி கொள்ளும் பீடம் பத்திரலிங்கமாகும்.
 
1719:  லிங்கம் அமைத்தற்குரியவை.
இலிங்கம் அமைத்தற்குரிய பொருள்கள்:  முத்து, மாணிக்கம், பவளம், செதுக்கிய
மரக் கொம்பு, கல், திருநீறு, மரகதம், சிவாகமம், சாதம், அரிசி, பூ மற்றும் மணல்.
 
1720:தயிரால் லிங்கம் அமைத்து வழிபடலாம்.
கட்டித்தயிர், நெய், பால், தூய்மையான பசுஞ்சாணம், விளக்கிய செம்பு, அக்கினி,பாதரசம், நீர், நன்றாக வெந்தசெங்கல், அழகிய வில்வம் பொன் ஆகியவற்றாலும் லிங்கம் அமைத்து வழிபடலாம்.
 
1721: வழிபடற்குரிய இலிங்கங்கள்.
அந்தணர் பூஜிக்கத்தக்கது வளமையுடைய ஸ்படிகலிங்கம்.
மன்னர் பூஜிக்கத் தக்கது பொன்னாலாகிய லிங்கம்.
குறையில்லாத வருவாயுடைய வைசியர் பூஜிக்கத் தக்கது மரகதலிங்கம்.
தொண்டு செய்யும் வேளாண் தொழில் உடையவர் பூஜிக்கத்தக்கது வாணலிங்கம்.
 
1722: சீவனின் உடலே கோயிலாகும்.
சிவனை லிங்கத் திருமேனியில் மட்டும் உணர்ந்தவனால் சிவன் எங்கும் கலந்துள்ள வியாபகத் தன்மையை உணரவே முடியாது.    சிவன் நிலம், நீர், நெருப்பு,  காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய எட்டிலும் வியாபகமாகக் கலந்திருத்தலை ஒருவன் உண்மை  அறிவால் உணர்ந்த போது சீவனது உடம்பே சிவனின் கோயில் என்பதையும் உணர்வான்.
 
1723: சிவன் தேடுபவர் உள்ளத்தைக் கொயிலாகக் கொண்டவன்.
முன்னம் ஈட்டிய பாவங்களைப் போக்குபவனும் அனைத்தும்  ஒடுங்குதற்கு இடமாய் நின்ற புண்ணியனுமாகிய சிவமே அகன்ற பிரபஞ்சமாய் அவற்றுள் பிறர் அறியாமல் கலந்திருக்கும். 
சிவனை நாடியவர்க்கு, நாடியவரது உடலையே கோயிலாகக் கொண்டு சிவன் ஒளியினை நல்குவான்.
 
1724: சிவன் விளங்கும் தன்மை.
சிவனின் திருவடி பூமியாகும்.  திருமுடி வானமாகும். சிவன் யாவற்றுள்ளும் கலந்திருக்கும் முறையில் சிவனது உடம்பு வானமானது.  இதுதான் ஆதிபகவானாகிய சிவன் அண்டத்தையே திருமேனியாக தரித்து நிற்கின்ற தன்மையாகும்.
 
1725: அண்டலிங்கத்தின் பெருமை.
நிலமாக உள்ள சத்தி பீடத்தின் மீது விளங்கும் லிங்கம் வானை அளாவி நிற்பதாகும்.  அலை வீசும் கடலே திருமஞ்சன சாலையாகும்.  மலை மீது விளங்கும் மேகமே திருமஞ்சன நீராகும்.  வானத்தில் சிறு ஒளியாய் விளங்கும்   விண்மீன்களே அண்டலிங்கத்துக்குரிய மாலையாகும்.எட்டுத் திசைகளே அளவிடுதற்கரிய சிவத்துக்கு ஆடையாகும்.
 
3.பிண்டலிங்கம்.    உடம்பே லிங்கம்.
 
1726: மக்கள் உடம்பு சிவலிங்கம்.
மானிடர் உடம்பின் வடிவமே சிவலிங்கம் ஆகும்.  மானிடர் உடலும் உடலைச்   சூழவுள்ள பகுதியும் அறிவாலயம் ஆகும். மானிடரின் உடல் சதாசிவரின் உருவத் திருமேனி.  மானிடர் உடம்பில் உள்ள அசைவெல்லாம் கூத்தப் பெருமானின் நடனமேயாம்.  உடலும் சிவலிங்கமும் கால் முதல் அரை வரையில் பிரமபீடம் உடல் பகுதி சத்தி பீடம்.   தலைபாணம் என்ற வகையில் உடம்பு சிவலிங்கம்.  சிரசின் மேல் ஞானாகாயம் விளங்குதலின் சிதம்பரம். அருவும் உருவுமாகிய சதாசிவத்தை வணங்கி அறிவையும் ஆற்றலையும் பெற்ற போது மனிதன் சதாசிவன்.  மானிடரின் உடல்
பிண்டலிங்கமாகும்.
 
1727: ஐம்பூதத் தலைவரை வணங்குங்கள்.
ஒன்று கூடும் முறையில் நிலம் நீரிலும், நீர் நெருப்பிலும், நெருப்பு வாயுவிலும், வாயு ஆகாயத்திலுமாய் ஒடுங்கித் தூய்மை பெறும்.  அது போல ஐம்பூதங்களுக்குக் காரண மாகிய சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்து தன்மாத்திரைகளும் ஒடுங்குமாறு வலிமையினை அருளும் ஐம்பூதநாயகரான சிவனை வணங்குங்கள்.  அவ்வாறு செய்பவர் தேகம் அழியினும் பின்னும் அழியாது சூக்கும உடலில் நிலை பெற்றிருப்பர்.
 
1728: சிவனே உடம்பை இடமாய்க் கொண்டு அருள் செய்கிறான்.
உடல் வந்த போதே உடம்பினுள் ஐம்பூத நாயகர்களும் குடி புகுந்து அவரவர் தொழிற்படும் நுழைவாயிலில் நின்று உயிருக்கு வேண்டிய அறிவை வழங்கியருளுவர்.  தாய் மனையிற் புகுவது
போல ஈசன் விருப்பத்துடன் என் உள்ளத்தில் புகுந்து அவ்வாயில்களைத் தனதாக்கிக் கொண்டு
சிவம் ஆண்டருளினான்.  சிவனே உடம்பை இடமாகக் கொண்டு ஆண்டருளி வருவதால் பஞ்சபூத நாயகர்களால் வரும் பஞ்சக் கிருத்தியம் இல்லையாம்.
 
1729: நாடிகள் பத்தும் இயங்கச் செய்தான்.
சிவன் இவ்வுடலை அவன் விளங்குவதற்கு ஏற்ற கோயிலாகக் கொண்டான். பின்புற முள்ள நான்கு இதழ்களையுடைய மூலாதாரச் சக்கரத்தைத் தன் இடமாகக் கொண்டான். இவ்வுடலில் உள்ள இடை, பிங்கலை, சுழுமுனை, காந்தாரி, அத்தி,அலம்புடை, சிங்குவை, பூடை, சங்குனி, குகு என்ற பத்து நாடிகளின் செயல்களையும் தான் ஏற்றுக் கொண்டான். புலன்களின் காரியங்கள் தொழிற்படாதவாறு வென்று வாயில் கொண்டான்.
 
4.சதாசிவலிங்கம்.
 
1730:சதாசிவத்தின் வடிவம்.
திருவருளோடு கூடிய திருவடி இரண்டும் பூமியின் மேலாக, புகழ்ந்து பாடப் பெற்ற பத்துக் கைகள் திசைகளெல்லாம் பரந்து எழுவதாக, எங்கும் பார்க்கின்ற முகங்கள் ஐந்தாக, சிவந்த கண்கள் பதினைந்தாக, நல்ல ஒளி பொருந்திய முத்தின் நிறத்துடன் கூடிய சதாசிவத்தைத் தியானியுங்கள்.
 
1731: யாவரும் சதாசிவம்.
பிரமன்,   திருமால்,  ருத்திரன்,  மகேசுவரன்  இவர்களுக்கு  மேல்  உள்ள ஐம்முக சதாசிவன், விந்து, நாதம், ஆதாரசத்தியாகிய குண்டலினி, முடிவாகவுள்ள சிவன் யாவும் பொதுவாக சதாசிவம் எனப்பெறும்.
 
1732: சதாசிவம் சிவனின் அண்டகோசத்தில் ஒளியாய் விளங்கும்.
சதாசிவமே சிவத்துக்கு சத்தி. சதாசிவமாகிய சத்தியினிடம் நிவிருத்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியதீதை ஆகிய ஐங்கலைகள் இடம் பெறும்.  இவ்வைந்து கலைகள் சார்பாகச் சிவசூரியன் எழும்.   அதன் கிரணம் உள்ளும் வெளியும் சூழ அண்டகோசம் நிறைந்து விளங்கும்.   அந்த ஒளியில் எட்டுத் திசைகளும் மேல் கீழ் என்ற இரண்டு திசைகளும் பொருந்தி ஒரே ஒளிமயமாக விளங்கும்.
 
1733: அண்டாகாயம் சதாசிவனின் அறிவு நிலையாகும்.
பத்துத் திசைகளோடு கூடிய அண்டகோசத்தில் சிட்சை, கற்பம், வியாகரணம், சந்தோபிசிதம், நிருத்தம், சோதிடம் ஆகிய ஆறு சாத்திர அறிவு அமைந்துள்ளது.  அங்கே ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களின் அறிவும் உண்டு.  சரியை முதலிய மார்க்கங்களோடு, சமய அறிவும் அண்ட கோசத்தில்  அடங்கும். மனிதனைச் சூழவுள்ள அண்டாகாயத்தில் பத்துத் திக்குக்களுக்கு உட்பட்ட உலகத்தில் கற்ற அறிவெல்லாம் சூக்குமமாய் அடங்கியுள்ளது.
 
1734: உருவமும் அருவமும் ஆகும்.
சமயத்தில் கீழாழவத்தை ஐந்தும் மேலாலவத்தை ஐந்தும் உண்டு.  சமயத்தில் சூரியனின் பன்னிரெண்டு ராசிகளும் உண்டு.   சமயத்தில் பெருமையுடைய சந்திர கலை பதினாறும் சொல்லப்பெறும்.  சமயத்தில் காணப்பட்ட உருவத்துக்கும் காணப்படாத அருவத்துக்கும் இடையே சதாசிவ நிலை இருக்கின்றது.   சதாசிவம் உருவமும் அருவமுமாக இருந்து உயிருக்கு உதவி செய்யும்.   சீவனது அறிவு அவத்தை மாறுதலாலும் கலை வேறு பாட்டாலும் மாறும்.
 
1735: சதாசிவமூர்த்தியின் ஐந்து முகங்களும் அவற்றின் நிறங்களும்.
சதாசிவத்துக்கு ஐந்து முகங்கள். அவை
உச்சிமுகம்         -           ஈசானம்    -        வெண்பளிங்கு நிறம்.
கிழக்கு முகம்      -           தற்புருடம்             -        நல்ல குங்கும நிறம்.
தெற்கு முகம்      -           அகோரம்              -        செறிந்த மை நிறம்.
வடக்கு முகம்    -            வாம தேவம்          -        சிவந்த ரத்த நிறம்.
மேற்கு முகம்      -           சந்தியோசாதம்  -   பால் போன்ற நிறம்.
 
1736: சதாசிவத்தின் உருவத் தோற்றம்.
சதாசிவமூர்த்திக்கு ஐந்து முகங்கள், பதினைந்து கண்கள், பத்து கைகள் மற்றும் பத்து வகைப் படைகள் உள்ளன.  சதாசிவ மூர்த்தியின் உருவம் இத்தகையது.
 
1737: சதாசிவம் சத்தியுடன் கலந்து உலகமாய் விளங்கும்.
சிவசத்தியாகிய குண்டலினி பூமியாகும்.  சதாசிவம் ஆகாயக் கூறாய்ப்  பூமிக்கு மேலும் கீழும் எங்கும் பரவியிருப்பதான அண்ட கோளகையாகும்.  சத்தியும் சிவமும் மிகுந்துள்ள நிலைப் பொருளும் இயங்கும் பொருள் யாவும் சத்தியின் வடிவமாகும்.  சதாசிவம் அருவமாக இருக்கும்.  இவ்வாறு சத்தியும் சிவமும் பொருந்திய தத்துவங்கள் முப்பத்தாறு ஆயின. (முப்பத்தாறு தத்துவங்களில் ஆன்ம தத்துவம் இருபத்து நான்கு; வித்தியாதத்துவம் ஏழு; சிவதத்துவம் ஐந்து) சதாசிவர் சத்தியோடு கலந்து பிரபஞ்சமாய் விளங்குவார்.
 
1738: சதாசிவம் உருவமும் அருவமும் ஆகும்.
தத்துவம் என்பது அருவம் ஆகும்.
அத் தத்துவம் சரம், அசரமாய் விரிந்து நிற்கும் போது உருவமாகும்.
உருவமாய் விரிந்த போது சுகத்தின் விளக்கமாகும்.
இவை அனைத்துமாக விளங்கும் தத்துவமென்பது சதாசிவமே ஆகும்.
சதாசிவமே உருவத்தையும் அருவத்தையும் தாங்கி நிற்கும்.
 
1739: உள்ளத்தில் சதாசிவத்தை வழிபட வேண்டும்.
நூல்களால் அறியப்படாதவனும், தாம் மேலேறுவதற்காகப் புகழும் தேவர்களில் இருந்து மாறுபட்டு நிற்பவனும், உள்ளத்தில் பொருந்தியவனும் ஆகிய சதாசிவனை அகத்திலே ஏத்தி வழிபடுங்கள்.
 
1740: சதாசிவத்தை உள்ளத்தில் கொண்டேன்!
இருள் பொருந்திய கழுத்து, வலக்கையில் ஏந்திய மழு, சுருண்ட செஞ்சடையில் ஒளி விடுகின்ற பிறைச்சந்திரன்,  அருள் பொழிகின்ற சிந்தையை உடைய ஆதியாகிய சதாசிவ மூர்த்தியை உள்ளத்தில் தெளிந்து வழிபடுங்கள்.
 
1741: சதாசிவத்தைத் தலையில் இருந்து திருவடி வரை துதிக்க வேண்டும்.
சீவர்களுக்கு அருள் பொழிவதற்காகச் சத்தி விளங்கி நிற்கும் ஐம்முகங்களில் வடக்கு நோக்கிய முகம் வாமதேவம் உத்தமமானது.  இது சொல் இல்லாது மௌனமாக இருந்திடும்.  கிழக்கு நோக்கியுள்ள முகம் தத்புருடம்.  இது உடலிலுள்ள தத்துவங்களை இயக்குவது. தெற்கு நோக்கிய முகமான அகோரம் சிரத்தைப் போன்றது.  சிரசின் முடியில் வட கீழ்த்திசை நோக்கி  விளங்குவது ஈசான முகமாகும்.
 
1742: சதாசிவத்தை வணங்கும் முறை.
ஈசானத்தை சிரசின் நடுவில் சுட்ட வேண்டும்.  தாணுவினது தற்புருடத்தை முகத்தில் சுட்ட வேண்டும். அகோரத்தை இதயத்தில் சுட்ட வேண்டும்.  வாமத்தைக் குறியில் பொருத்த வேண்டும். சத்தியோசாதத்தைப் பாதங்களில் பதிக்க வேண்டும்.
 
சதாசிவரின் மந்திரம்.
ஈசான மூர்த்தாய நம;  தற்புருட வக்த்ராய நம;  அகோர இருதயாய நம;
வாமதேவ கு‹யாய நம;  சத்தியோசாத மூர்த்தயே நம."
என்று சதாசிவ மூர்த்தியை சிரம், முகம், இருதயம், குறி, பாதம் ஆகியவற்றை முறையே தொட்டுப் பாவிக்க வேண்டும்.  இம் மந்திரங்களைக் கூறிய வண்ணம் தியானிக்கில் குண்டலினி ஒளிமயமாக விளங்குவாள்.
 
1743: குண்டலினி சத்தி விளங்கும்.
இருதயம், தலை, முடி, கவசம், கண் ஆகியவை அங்கங்களாம்.  இவற்றைக் குறிக்கின்ற மந்திரங்கள் வஞ்சனையற்ற சீவர்களுக்கு அறிவு விளக்கம் தரும் சுத்த மாயையாகும். உடம்பெல்லாம் ஒளி மயமான போது செவ்வொளியில் குண்டலினி மின்னொளி போன்று விளங்குவாள்.   சதாசிவனிடமுள்ள பத்து ஆயுதங்களும் உதயகாலை சூரியனைப் போன்று பிரகாசிக்கும்.
 
1744: சிவனின் ஐந்து சத்திகள்.
சிவனுக்கு இதயம் ஞானசத்தி.. சிரம் பராசத்தி.. சிகை ஆதிசத்தி.. கவசம் இச்சாசத்தி.
நேத்திரம் கிரியா சத்தியாகும்.  இவை அனைத்தும் சிவனது ஐந்து சத்திகளாகும்.
 
1745: சதாசிவம் விளங்கும் விதம்.
குண்டலினி சத்தி நாற்கோணமாகிய மூலாதாரத்தில் உள்ள போது சலதாரையை நோக்கியதாக இருக்கும்.    குண்டலினி கழுத்தை அடைந்த போது உறக்க நிலை ஏற்படும்.    அச்சத்தியே நெற்றியை அடைந்தபோது நீரோட்டம் போன்ற உணர்வாக விளங்கும்.  இப்படி ஒளிவடிவாய் விளங்கும் சத்தி வடிவே சதாசிவமாகும்.  மூலாதாரம் முதல் உடலைச் சூழவும் சிரசின் மேலும் ஒளியாக விளங்குவதே சதாசிவமாகும்.
 
1746: சதாசிவமே பஞ்சப் பிரமம்; ஒன்பது நிலை.
மகத்துவம் மிக்க சதாசிவரை எவ்வளவு காலம் தொழுதாலும் அவர் பஞ்சப் பிரமமாகவே விளங்குவார்.  அவர் மூலவாயுவாக எழும்பி ஆதாரங்களைக் கடந்து ஊர்த்துவ சகஸ்ரதளத்தின் மேல் சென்ற போது ஒன்பது நிலைகளிலும் பொருந்தி விளங்குவார்.   சதாசிவமே பஞ்சப் பிரமமாய் நவந்தரு பேதமாய் உள்ளது.
 
1747: உடம்பிலும் உயிரிலும் சிவன் கலந்து உடன் நிற்கிறான்.
உடலின் உள்ளும் உடலைக் கடந்தும் உயிரோடு உடனாய்ப் பொருந்தியிருப்பதும் ஈசனுக்கு இயல்பாகும்.  அவ்வுணர்வு உண்டான போது சிவனது திருவடியாகிய சூரிய சந்திரகலைகள் திருந்தித் தலைக்கு மேல் செல்ல மனத்தினுள் தியானித்து நின்று தொழுதேன்.
 
1748: இறைவன் நாதமாய் விளங்குகிறான்.
உலகனைத்தும் ஒளிப்பொருளாய் விளங்கும் பரசிவத்தை புருவ நடுவில் உணர்ந்தேன். சீவர்கள் உய்யும் வண்ணம் பரசிவத்தை (மூலாதாரம்) பூமித் தத்துவத்துக்குக் கொண்டு வந்தேன்.    மனமாகிய கோவிலில் பரசிவத்தைக் கூடினேன்.    அத்தூய்மையே உருவானவன் நாதரூபமாய்க் காட்சி  தந்தனன்.   சிவசூரியனைப் பாட்டால் நான் பணிய அவன் ஒலியினால் என்னுடன் ஒன்றியிருந்தான்.   ஆக்ஞையில் பிரகாசம் கண்டு மூலாதாரத்தில் இருந்து மூலவாயுவை மேல் எழச்செய்வது ஆசிரியரின் தீட்சை முறை.
 
1749: உடலில் சந்திர மண்டலம் விளங்கச் சதாசிவம் விளங்கும்.
அக்கினி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம் ஆகியவற்றுள் அக்கினி ஒளியுண்டாக ஒன்பது பேதத்தில் நடுவில் உள்ள அருவுருவமான சதாசிவம் பதினான்கு உலகங்களையும் தாங்கி நிற்கும்.  
அந்தச் சதாசிவமே ஆதியாவும் அந்தமாகவும் ஆகி உடம்பில் சந்திரமண்டலம் விளங்க உதவும்.
 
1750: உடலை ஒளிப் பிழம்பாய்க் கண்ட ஞானியர் சிவமாவார்.
சதாசிவத்தை ஆதியாகவும் அந்தமாகவும் அறிந்த சிவஞானியின் உடம்பு சிவலிங்கமாக விளங்கும்.    அவ்வுடம்பே சதாசிவமாய் அமையும்.  அவ்வுடம்பே சத்தி, சிவம் பொருந்திய சிவானந்த நிலையாகும்.   அவ்வுடம்பே எல்லாவற்றுக்கும் மேலான சிவமாகும்.    தனது உடம்பை ஒளிப் பிழம்பாகக் கண்ட ஞானியரிடம் சதாசிவமாதி பொருந்தும்.
 
1751: அகரம் உகரம் சேர்ந்தது சதாசிவநிலையாகும்.
மேதா கலையாகிய அகரத்தைச் சிவம் என்று யாரும் அறியமாட்டார்.   அர்க்கீச கலை யாகிய உகரத்தால் குறிக்கப்படும் சத்தி எல்லாப் பொருளிடத்தும் கலந்து நிற்பதாம்.  இத்தகைய சிவமும் சத்தியும் பொருந்தி உலகமாய் உருவானது.   இச்சிவசத்தி சிரசைத் தாண்டின போது நாத ஒலி உண்டாகும்படி செய்தது.   அகர உகரம் அல்லது சிவன் சத்தி சேர்ந்த நிலையே சதாசிவமாம்.   இதயத்தில் இடம் பெற்ற சிந்தனை காமத்தைக் கருதாது சிவத்தை நோக்கில் கீழ் உள்ள நிலை கெட்டுத் தலையின் மீது நாதம் விளங்கும்.
 
1752: அகர உகர மகர விந்து நாதமாகிய பிரணவம்.
சதாசிவ லிங்கத்துக்குரிய பீடம் அல்லது அடிப்பாகம் ஓங்காரம்.
இலிங்கத்தின் நல்ல கண்டம் மகாரம்.
சிங்கத்தின் உள் வட்டமாகிய பகுதி உகாரம்.
லிங்கத்தின் மேற்பகுதி அகாரமும் விந்து நாதமுமாகும்.
சிவலிங்கத் திருமேனி அகர உகர மகர விந்து நாதமாகிய பிரணவமாம்.
 
5.ஆத்மலிங்கம்.   ஆன்மாவே லிங்கமாதல்.
 
1753:சிவசத்தி வடிவம் அகரம் உகரம்.
அகரமாகிய சிவம் எல்லாவற்றுக்கும் முதலாய் எல்லாவற்றோடும் கலந்து இருக்கும்.  உகரமாகிய சத்தி எல்லாவற்றுக்கும் முதலாய் உயிர் பெற்று நிற்க உதவும்.  இவ்வாறு அகாரம் சிவம் என்றும் உகாரம் சத்தி என்றும் அறியின் அகார உகாரங்களே இலிங்க வடிவமாம் என்பது விளங்கும்.  இலிங்கம் சிவசத்தி வடிவம்.
 
1754: நாதம் விந்து கலப்பே ஆன்மலிங்கம்.
அண்டகோசத்தில் வடிவமான படைப்புக்குக் காரணமாயும் அதனுள் நிலைத்ததாயும் உள்ள விந்துவும் மேதை முதலான சோடச கலைகளாகிய நாதமும் அடுக்கடுக்காய் விரிந்தன.    ஆதாரமான விந்து உயர்ந்ததான நாதத்தை இடமாகக் கொண்டு நிலை பெற்றுள்ளது.    இவ்வகையாக உயர்ந்து செல்லுவதில் விந்து நாதங்களின் புணர்ச்சி யுள்ளது.    நாதமும் விந்துவும் கலத்தலே ஆன்மலிங்கமாம்.
 
1755: தாவரங்கள் சத்தி சிவமே.
அசைந்து செல்லாத மலை, பூமி, மரம், செடி, கொடிகள் எல்லாமும் சிவசத்தி சேர்க்கையே.
அசையும் இயல்பினையுடைய உயிர்ப் பொருள்களும் சிவசத்தி சேர்க்கையே ஆகும். 
அறிவான மண்டலநாதனான சதாசிவமும் சிவசத்தி சேர்க்கையே ஆகும்.
தாவர சங்கமங்கள் அனைத்தும் சிவசத்தி சேர்க்கையே ஆகும்.
 
1756: ஆன்மா அண்டகோசத்தின் உச்சியில் உள்ளது.
சிவசத்தி வடிவமான ஆத்ம லிங்கத்தில் சோதியைக் காணலாம்.   ஆகாயக் கூற்றில் ஐம்பது எழுத்துகளும் தோன்றும் இடம் சகஸ்ரதளம்.   சகஸ்ரதளத்தில் பொருந்தி விளங்கும் சோதியில் சத்தியோடு சிவமும் கலந்து விளங்கும்.   சிவசத்தி சொரூபமான ஆன்மா அண்ட கோசத்தின் உச்சியில் உள்ளது.
 
1757: விந்து நாதம் என்பவை கூடியதே ஆத்மலிங்கம்.
ஆத்மாவிடம் பொருந்திய விந்துவும் நாதமும் ஆத்மலிங்கமாகும். அந்த விந்துவே  நாதத்துக்கு இடமாய் இவ்விரண்டும் பொருந்தி ஆன்ம லிங்கமாகவும் உள்ளது.   நாத விந்து இரண்டையும்  ஆதாரமாய்க் கொண்டே பிரமனாதி ஐவரும் ஐந்தொழில் களைச் செய்கின்றனர்.  விந்துவே பீடமாகவும் நாதமே பாணமாகவும் ஆத்மலிங்கம் அமைந்துள்ளது.
 
1758: முப்பத்தாறு தத்துவங்களே ஆத்மலிங்கம்.
நல்ல ஆன்ம தத்துவமே சத்திக்கு நல்ல பீடமாகும். பொருந்தும் வித்தியா தத்துவம் சத்திக்கு நல்ல கண்டமாகும். பொருந்தும் சிவதத்துவம் சத்திக்கு நல்ல லிங்கமாக அமையும். சதாசிவ லிங்கத்திற்கு பீடம் ஆன்ம தத்துவம். கண்டம் வித்தியா தத்துவம். பாணம் சிவ தத்துவமாகும். முப்பத்தாறு தத்துவங்களே ஆத்மலிங்கமாகும்.
 
1759: சிவசத்தி விளங்கும் இடம்.
சிவன் என் மனத்தில் புகுந்து என் உயிர் நிலை பெறும் வாழ்வில், மனத்தினுள் பேரின்பம் சுரக்கின்ற காலத்து நன்மை பெருக நான் என்னையும், நாதனையும் நாடுகின்ற போது எனது சிரசின் உச்சியில் விளங்கி அவன் ஆட்கொண்டு அருளினான். சிவதத்துவத்தில் விளங்கும் பாணம் போன்ற தலையில் உள்ளது மனமண்டலம்.   சிவத்தை நாடிய ஆன்மாவினது மனமண்டலம் சிவசத்தி விளங்கும் இடம்.
 
1760: மனத்துள் விளங்கும் பேரொளியே ஆத்மலிங்கம்.
மேலானவற்றுக்கும் மேலானவனும் எம் தந்தை போன்றவனும் குளிர்ந்த பிறையைச் சூடினவனும் உலகனைத்தையும் தாங்குபவனும் தன் அடியாரது மனமாகிய கோயிலின் உச்சியில் விளங்குபவனும் தேவர்கள் சிரத்தினுள் ஒளி மயமாக விளங்கும் குண்டலி னியின் தலைவனுமாகிய அரன் என் மனத்தினுள் நீங்காது எழுந்தருளினான். உள்ளத்தில் விளங்கும் சோதியே ஆத்மலிங்கம்.
 
1761: உள்ளத்தைக் கோயிலாகக் கொண்டவனே உலகநாதன்.
பசுவின் தன்மையுடைய என் மனத்தைக் கோயிலாகக் கொண்ட ஈசனும், பாம்பு அணிந்த சடையும் அக்கினியும் நீரும் பொருந்தியவனும், செய்கின்ற புண்ணியம் அனைத்தும் ஆகியவனுமாகிய இறைவன் தலைவனல்ல.    நாமே தலைவன் என்று கூறுபவர் அறியாமையுடையோர் ஆவர்.
 
1762: என்றும் வணங்கிக் கொண்டிருப்பேன்.
சிவன் அன்று அங்கு நின்றான்; இங்கு கிடந்தான் என்று எட்டுத் திசைகளிலும் திரிந்து போய் தேவர்கள் வணங்குவார்கள்.  அவன் என் உயிர்க்குயிராய் என் உள்ளத்தில் பொருந்தி நின்றான்.  அத்தகைய எம்பெருமானை என்றைக்கும் வணங்கிக் கொண்டே யிருப்பேன்.   உள்ளமே சிவன் விளங்கும் இடமாதலால் அதுவே ஆத்மலிங்கம்.
 
6.ஞானலிங்கம்.   உணர்வுச் சிவம்.
 
1763:வேண்டியற்றை வேண்டியாங்கு அளிப்பவன்.
உருவம் அருவம் அருவுருவம் என்று மூன்று வகையான திருமேனி கொள்ளும் பரசிவன் நிலை பெற்ற பல உயிர்களுக்கும் குருவாகவும் நிற்கும் தன்மை உடையவ னாம்.  அவனே கற்பகமரம் போல் சதாசிவமாய் வேண்டுவோர்க்கு வேண்டியதை வழங்கியருளுவான்.  அருவமாய் உள்ள பரசிவனே உருவ வடிவில் குருவாய் அருள் புரிவான்.
 
1764: உருவமும் அருவமும் ஆனவர்கள்.
சதாசிவத்துக்கு கீழ் உள்ள மகேசுவரன், ருத்திரன், விஷ்ணு, பிரமன் ஆகிய நான்கும் உருவம்.  சதாசிவமாகிய நடுவை விட்டு மேலுள்ள விந்து, நாதம், சத்தி, சிவம் ஆகிய நான்கும் அருவம்.  நடுவேயுள்ள சதாசிவம் அருவுருவம். இவ்வொன்பது வகையும் பரசிவமேயாம்.
 
1765: சதாசிவம் அருள்வார்.
தேவர்கள் அனைவர்க்கும் நாதனும் நான்கு திசைகளிலும் முகமுடைய தலைவனும் உருவ மூர்த்திகள் நால்வரையும் செலுத்துபவனும் உருவுக்கும் அருவுக்கும் இடையேயுள்ள அருவுரு மூர்த்தியுமாகிய சதாசிவரை யார் பெருமான் என்று வணங்குகின்றாரோ அவ்விடத்திலே பிரானாகிய சதாசிவர் தோன்றுவார்.  அப்படி அவரது திருவடியை அடையவும் கூடும்.   சதாசிவரைப் பிரான் என்று உணர்ந்து வணங்குவோர்க்கு அவர் அருளுவார்.
 
1766:  வினை நீங்கும்.
ஆண்டு மாதம் நாள் ஆகியவற்றைச் செய்கின்ற சிவசூரியனாகிய சதாசிவரோடு சத்தியை வழிபடினும் இருவரையும் வேறு வேறாக எண்ணிடாது ஒருவராகத் தியானிக்கினும் பயன் ஒன்று தான்.  ஆதலின் வினை நீங்கும்படி இவ்வாறு தொழுதேன். சிவலிங்கத்தைச் சிவசத்தி வடிவமாகக் கண்டு வழிபடின் வினை நீங்கும்.
 
1767: சதாசிவத்திடம் பராசத்தி பொருந்தியுள்ளாள்.
ஆதியான மேலான தெய்வமாகிய சதாசிவரே அவரவர் மனமண்டலத்தில் விளங்குபவர். அவர் சோதியாக அடியார்கள் வணங்கும் பெருந்தெய்வமாகும்.    ஒவ்வொருவரின் அண்டாகாயத்தில் நீதி வடிவாக விளங்கும் பெருமையுடைய தெய்வமாகும்.   அவர் யாவருடைய உடலையும் இடமாகக் கொள்ளினும் மலம் அற்றவர்.    இத்தகைய எமது இறையின் ஒரு பாதியில் பராசத்தி உள்ளாள்.   ஆதியாகவுள்ள சதாசிவரிடம் பராசத்தி பொருந்தியேயுள்ளாள்.
 
1768: சதாசிவ நிலையைக் கடந்து சிவம் விளங்கும்.
உடலாகிய சத்திக்கு மேலே, சிரத்தின் மேலே, பராசத்தி விளங்கும் அண்ட கோசத்தி லுள்ள வெளியிலே, விளங்கும் வகையில் தூய்மையானது சிவபதம்.    இங்கு ஏனைய தத்துவங்களிலே தோய்வின்றி நிற்கின்ற வெளி உள்ளது.  அத்தன்மையுடைய இறைவன் திருவடி விளங்கும் இவ்வெளிக்கு அப்பாலுக்கு அப்பாலாயும் ஒத்ததாயும் இருக்கும் சிவத்தின் உண்மையான நிலை.   அண்டகோசத்தில் விளங்கும் சதாசிவ நிலை (ஒளி) யைக் கடந்து சிவம் உள்ளது.
 
1769: ஞானலிங்கம் விளங்கும் இடம்.
ஞானலிங்கமாகிய ஒளி மயமான சதாசிவரை அறிந்தால் உலகமெல்லாம் அங்கு சூக்குமமாய் விளங்குவது தெரியும்.     எழக்கூடிய வல்லமை இருக்குமாயின் என்றும் அழியாது இவ்வுலகில் இருத்தலும் கை கூடும்.   த த்துவங்களை விட்ட ஆன்மாவை உறுதியாகப் பற்றின் சத்தி வடிவில் அமைந்த சிவம் சிந்தையுள் விளங்கும்.   சத்திக்கு மேலே அருவமாய் நிராதார கலைகளில் விளங்குவது ஞானலிங்கம்.
 
1770: சிவசத்தியை உணர்தலே ஞானம்.
எம் தந்தையாகிய சதாசிவத்தையும் என் அம்மையாகிய பிரணவ சத்திகளின் கூட்டத் தையும் முதன்மையாகச் சிந்தித்து முறையாக உணர்தலே ஞானமாகும். அவை பொருந்தி இருந்த புருவ நடுவில் விளங்கும் விசாலாட்சியை இறைவன் உயர்ந்த இடத்தின் கண் வைத்து விருப்பத்துடன் விளங்கினான்.   பிரணவத்துக்குரிய அறுபத்து நான்கு உறுப்புகளும் அறுபத்து நான்கு சத்திகளாம்.   சிவசத்தி கூட்டுறவை உணர்தலே ஞானமாம்.
 
1771:  சிவமாம் தன்மை அடைதல்.
சத்தி சிவத்துடன் விளங்கும் தகுதிக்கேற்ப உயிரின் நிலை விளங்கச் செய்து அதற்கேற்பச் சுத்த மாயை, அசுத்த மாயை என்ற கூட்டத்தில் சேர்த்து உயிர் பக்குவ மான போது சுத்த மாயையில் விளங்கும் ஒளி மண்டலத்தை (துரியம்) உணர்த்தி அதனைக் கடக்கும்படிச் செய்து சீவனின் சித்தத்திலே  சிவம் தங்கிச் சீவனைச் சிவனுறையும் கோயிலாக்கும்.    சத்தி சிவன் விளையாட்டால் சீவன் சிவமாந்தன்மை எய்தும்.
 
1772: சிவத்தின் உரு சத்தி.
இப் பூமி சிவசத்திகளின் விளையாட்டாகும்.  உருவமுடைய சத்தி அறிவான சிவமாம்.
அறிவான சிவன் உருவமான சத்தியுமாம்.   சத்தி சிவமின்றி உடலுடைய உயிர்கள் ஒன்றும் இல்லை.  சத்தியே தேவைப்பட்ட விதம் சமைந்து எக்காலத்தும் உருவத்தைப் பெறும்.   அறிவான சிவத்துக்கு உருவம் சத்தி; உருவமான சத்திக்கு அறிவு சிவம். எடுத்த தேகத்தில் சாதனை செய்து ஞானலிங்கத்தை பெற வேண்டும்.
 
7. சிவலிங்கம்.
1773: ஒரு குறியில் வைத்து வணங்க இயலாது.
ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த உலகமும், நீரும், பரவுகின்ற காற்றும், அக்காற்றில் இருந்து தோன்றுவதாகிய நெருப்பும், இந்நான்கும் தத்தம் நிலையும் முறையும் மாறாமல் ஒழுங்கு பெற நிலைத்திருப்பதற்குரிய ஆகாயமும் ஆகப் பரந்து விரிந்து விளங்குபவன் சிவன்.  அத்தகையவனை ஒரு குறியினிடமாக வைத்து வணங்கும் முறை நான் அறியவில்லை.  பஞ்சபூத மயமாக விரிந்த பொருளை ஒரு குறியில் வைத்து வணங்க முடியாது.
 
1774: சிவன் நாமத்தைக் கூறுபவரை விட்டு நீங்கான்.
எங்கும் பரந்துள்ள சிவத்தை ஓர் எல்லைக்குட்படுத்தி வணங்கும் முறை ஒன்று உள்ளது.  உணர்வாகிய நீரைக் கொண்டுள்ளது சுவாதிட்டானச் சக்கரம்.  இங்கிருந்து உணர்வை மேலே சிரசுக்கு கொண்டு செல்வதே சிவ ஓளியைக் காணும் வழியாம்.  அப்போது உணர்வு நவத்துவாரங்களின் வழி வெளியே போகாது.
 
1775: சிவன் அருள்வான்.
எம் ஈசனாகிய பரம்பொருளை உலக முதல்வனாக நான் உணர்ந்தேன். அவனது திருவடிகள் நன்மை தருபவை என்று உணர்ந்து தொழும் போது ஐம்பொறிகளின் வழியாக அறிவு செல்லாது.   அவைகளைக் கடந்து சிவத்துடன் பொருந்தி இன்பமுறும். அப்பொழுது ஆதிப் பிரானாகிய சிவன் அவனது  சத்தியைப் பதிப்பான்.   சிவத்தை வணங்கி இன்புறும் போது அவன் அருள் புரிவான்.
 
1776: ஒன்பது வடிவான சிவலிங்கம்.
மலர்ந்த பிரமன், திருமால், உருத்திரன், மகேசன், பலத்தினைத் தருகின்ற  சதாசிவன், பரவிந்து, பரநாதம், நன்மையைத் தருகின்ற சத்தி, சிவன் என்ற ஒன்பது வடிவமாகி பயன்களைக் கொடுக்கின்ற இலிங்கமே மேலான சிவமாகும்.   பரசிவமே ஒன்பதும் சேர்ந்த இலிங்கமாகும்.
 
1777: சிவகதி உண்டாகும் முறை.
மூலாதாரத்திலிருந்து நடு நாடி வழியாகச் செல்லுகின்ற செவ்வொளியோடு கூடி, ஆவி எழுகின்ற
அளவு வரை, உடம்பிலுள்ள ஆதார கலைகளிலும், உடம்பை விட்டு நீங்கிய நிராதார கலைகளிலும் பொருந்துவதும் நீங்குவதுமாக மனத்தை நிறுத்திப் பழகுவதில் மேலான சிவகதி விளையும்.  மூலாதாரம் முதலாக உன்மனி நிலை வரையில் தம்பம் போன்றுள்ள ஒளியே சிவலிஙகம் என்று பாவிக்கலாம்.
 
8. சம்பிரதாயம்.  மரபு.  தீட்சை முறை.
 
1778: தீட்சை ஐக்கும் முறை.
முன்பாக அமைந்த குருவானவர் சீடன் தனது உடல்,பொருள்,ஆவி மூன்றையும் நீரோடு தத்தம் செய்வதை ஏற்றுக் கொண்டு, படர்ந்த வினையால் வரும் பற்றினை அறும்படி கண்ணினால் நோக்கி, சீடனது சிரசில் கையை வைத்துத் திருவடி ஞானத்தை விளக்கியருளி, நுட்பமான உணர்வை எழுப்பி, விரைவில் கட்டினையுடைய பிறவியை அறுத்தருளினான். (குரு தீட்சை செய்யும் முறை).
 
1779: குருநாதன் ஆட்கொண்டமை.
உயிரும் உடம்பும் ஒளிப் பொருளான வயப்புப் பொருந்திய பரமும் பின் பொருந்தி யுள்ள பிராணனும் இவற்றை இயக்குகின்ற சிவமும் சத்தி ஆகியவற்றை அறிந்து உய்யும் வண்ணம் குருநாதன் ஆட்கொண்டருளினான்.
 
1780:  சிவன் உள்நாக்குப் பகுதியுள் உள்ளான்.
மேற்குத் திக்கினைப் பிரகாசிக்கச் செய்த குருநாதன்:  "நாள் தோறும் என்னை இங்கு நினைப்பாயாக" என்று உணர்த்திய அப்பொருள் (சிவன்) உச்சிக்குக் கீழேயும் உண்ணாக்குக்கு மேலேயும் உள்ளது.   இதுவே மேலான பதமாகும்.   இதனை வாயினால் சொல்ல ஒண்ணாது.
 
1781:  குருவருளால் குற்றம் நீங்கித் தூய்மை ஏற்படும்.
விரும்பியவாறு அனுபவமின்றி பிதற்றித் திரிந்து கொண்டிருந்த என்னை உடல் பொருள் ஆவி மூன்றையும் அர்ப்பணம் செய்த போது மூன்றாலும் உண்டான வினைகளை யெல்லாம் அகற்றிப் பின்னர் குருநாதனாகிய தன்னையும் சீடனாகிய என்னையும் துலாத்தட்டு நேராதல் போலச் சமமாகச் செய்தான்.  நாணயமாற்று நடந்து வியாபாரம் சித்தித்தது.   சீவன் சிவமாந்தன்மை எய்தியது.
 
1782: இறை இயல்பை உணர்ந்தால் இறைவனைக் காணலாம்.
உலகில் வாழ்கின்ற எல்லா உயிர்களுக்கெல்லாம் தலைவனாகிய சிவம், உடனாய் இருக்கின்ற இயல்பினை உலகவர் சிறிதும் அறியார்.  சுத்த மாயையின் மாறுபாட்டைப் போக்கி எல்லாவற்றையும் கருவாகக் கொண்ட சிவத்தை நான் கண்டு கொண்டேன். இறை இயல்பை உணர்ந்த போது தடை நீங்கி இறைவனைக் காணலாம்.
 
1783: சிவன் அருளால் உடல் பற்றை நீக்கிச் சிவத்தன்மை அடையலாம்.
வினைக்கீடாக உடல் பொருளோடு கூடிய உயிரை உய்விக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டு தனது ஞான சத்தியால் விந்து நாதங்களாகிய திருவடியை விரும்பிப் பதித்துப் பெருமையில்லாத உடம்பின் பற்றினை அறுத்து சிவம் சீவனில் கலந்து மறைந்து அவனே தானாய் நிற்கும்.   சிவன் தனது திருவருளால் சீவன் உடல் பற்றினை நீக்கிச் சிவமாந்தன்மை எய்தும்படி செய்யும்.
 
1784: சீவனைச் சிவன் ஏற்றுக் கொண்டான்.
எனக்குப்  பக்குவம் வந்தபோது என்னை அடிமையாக ஏற்றுக் கொள்ள எண்ணம் கொண்ட சிவன் எனது உயிர், பொருள், உடம்பின் கருவிக் கூட்டம் ஆகியவற்றை அவனுடையதாக ஆக்கிக் கொண்டான்.  எல்லா வல்லமையையும் தந்தவனே எடுத்துக் கொண்டான்.    தந்தவனே எடுத்துக் கொள்வதால் என்னிடம் உள்ளவற்றை அவன் எடுத்துக் கொண்டான் எனச் சொல்வதற்கில்லை.
 
1785: பேய் போல் அலைவர்.
குறியாகக் கொள்கின்ற உடம்பும் உடம்பையுடைய ஜீவனும் கூடி, நெறிப்பட இயங்கும் பிராணன்
நிலைபெற்ற சீவன், இயமனால் நீக்கப்படுகின்ற உடம்பை எடுத்துக் கொண்ட தன்மையை உடம்போடு  கூடியிருக்கும்  போதே அறிந்து தேகத்தை  நீக்கி நிற்கும் ஆற்றல் பெறாதவர் பேய் போல் அலைவர்.     உடம்பு உள்ள போதே சீவனது இயல்பை உணர்ந்து தேகத்தை நீக்கி நிற்கும் ஆற்றல் பெற்றவனை "பரமஹம்சன்" என்பர்.  தேகம்: உடம்பு. தேகி: உடம்பையுடைய உயிர்.  தேகம் வேறு: தேகி வேறு.
 
1786: தம்மையும் தலைவனையும் உணர்தல் வேண்டும்.
சீவன் என்ற ஒளியை உணரும் தன்மை உடையார்க்கு எல்லா சூக்கும உலகங்களும் விளங்கும்.  அத்தகைய உணர்வுடையார் இந்த உலகை அனுபவப் பொருளாகக் காணாமல் சாட்சியாகக் காண்பதால் எவ்வகையான துன்பமும் அவர்க்கு இல்லை. இப்படி உணர்வுடைய ஞானிகள் உலகை அறிந்த போது அவர்கள் தம்மையும் தலைவனையும் உணர்ந்தவராவர்.   ஞானியர் தம்மையும் தலைவனையும் உணர்ந்து துன்பமின்றி இருப்பர்.
 
1787: சிவன் சகல நிலையில் இருந்து சுத்த நிலையை அடைய உதவுவான்.
உடல் பரப்பில் அலைந்து துரிய நிலையில் ஒளி மண்டலத்தில் மிக விரிந்து சிவத்துடன் பொருந்திக் குவிந்து சகலநிலையில் முப்பத்தாறு தத்துவங்களோடு பொருந்தியிருந்த சீவர்க்கு, தூய்மையான தனது அருள் சத்தியைப் பதிப்பித்த சிவபெருமானை என்ன சொல்லி வாழ்த்த முடியும்?    சிவபெருமான் சகல நிலையிலிருந்து முப்பத்தாறு தத்துவங்களையும் விட்டு  சிவத்துடன் ஒன்றுபட உதவினான்.
 
1788: சிவனை வேறாக நினைத்து வழிபடுபவர்க்கு இன்பம் இல்லை.
நான் என்றும் நீ என்றும் நீ வந்து அடைதல் என்றும் வேறாக பிரித்து உணரக்கூடிய நிலை இல்லை.  உடம்பும் உடம்பிலுள்ள உயிரும் போல நாம் உடனாயிருக்கிறோம்.  இதை உணராமல் இறைவன் ஆகாயத்தில் வேறாக இருப்பதாக எண்ணி ஆகாய மண்டல வாசிகள் வந்து பொருந்தி நின்று மனிதர்கள் நுகர்கின்ற இன்பங்களைத் தேன் போல சுவைத்து அழுந்தியிருப்பார்கள்.   சிவனை வேறாக எண்ணி வழிபடுவோர்க்கு இன்பம் பொருந்தாது.
எவன் ஒருவன் நான் பிரம்மமாய் இருக்கிறேன் என்று அறிகிறானோ அவன் இது அனைத்துமாக இருக்கிறான்.  அவனது பெருமையைக் குறைவு படுத்த தேவர்களாலும் ஆகாது.  ஏனெனில் அவன் அவர்களுக்குக் கூட ஆத்மா ஆகிறான்.
 
1789: சீவனுடன் சிவன் பிரிவில்லாது உள்ளான்.
இறைவனை துவைத பாவனையில் வணங்கும் சரியை கிரியை வழி நிற்போர் அவனை அறிய மட்டார்.  ஆணப்படுபவனை காண்பவன் அறிந்தால் அது இரு பொருளாக இல்லாமல் ஒரே பொருளாகக் காண்பவனும் காட்சியும் ஒன்றாகி விடும்.  இவ்விதமாகச் சரியை வழி நிற்போரும் அந்நியமாக உணரில் காணப்படுபொருளான சிவமும் காண்பானும் ஒன்றாகச், சீவனார் சிவனாகி விடுவார். சீவனோடு சிவன் பிரிப்பின்றி உள்ளார்.
1790: சீவன் சிவனாம் தன்மை எய்துதல்.
"நான் இந்தச் சீவனே" என்று உள்ளங் கொள்பவனாகிய சிவன்,  "உடலாகிய இதனைத் தான் என்றே எப்போதும் கருதும் உயிர் போல" உள்ளான்.  அவன் வானத்தில் பரவும் பெரிய மேகம் போலக் கருணையைப் பொழிபவனாக உள்ளான்.  அதனால் நான் ஆகாய நாயகனாக ஆயினேன். சிவன் சீவனோடு வழியாய் நிற்றலால் சீவன் சிவமாந்தன்மை எய்தும்.
 
1791: சிவன் சீவன் வேறு இல்லை.
பெருந்தன்மையுடைய "தான் என்ற சிவனும்", "யான் என்ற சீவனும்"  வேறாக ஒரு போதும் இருந்ததில்லை.  அத்தன்மையை இறைவன் இயல்பாகவே அறிவான்.  உண்மையாகவே உயிர்களைத் திருத்தமடையச் செய்கின்ற சிவபெருமான் நம்மை உடல் உயிர் போலப் பிரிப்பின்றிப் பொருந்தியிருப்பான்.   சிவன் உயிரோடு பொருந்தித் திருந்துமாறு செய்வான்.
 
1792: சீவனின் பண்புக்கு ஏற்ப நெறி அமையும்.
சீவர்கள் அறிய வேண்டிய நெறி. (1) சூரிய நெறி (2) சந்திர நெறி.  இத்தகைய சூரியகலை விளங்கவே உயிருக்கு உருவமான உடல் அமைந்தது.   அருள் என்ற தெய்வ சத்தியைப் பெற சந்திரநெறி பற்றியவர்க்கு  அறமும் சூரியநெறி பற்றியவர்க்குத் தவமும் அமைந்துள்ளன.
 
1793: அஞ்ஞானம் நீங்கும்.
ஊனக்கண்ணால் காண்பதற்கு அரியவனும் மனத்தால் பாவித்து அறிவதற்கு அரியவனும், குருமண்டலத்தில் விளங்குபவனுமான நந்தி தொடுவதற்கு அணுகுவதற்கும் தூரத்தில் உள்ளவனாகத் தோண்றுவான்.  அவனையே வேண்டிக் கிடப்பார்க்கு அகநோக்கில் விளக்கொளியாவான்.  அப்போது அவனையே உள்ளத்தில் செறிந்திருத் தலால் உள்ளத்திலிருந்த அஞ்ஞானம் நீங்கும்.   அகநோக்கில் தியானித்து ஒளிபெறுவது திருவருள் வைப்பால் அமைவது.
 
1794: ஒளியை அறிந்தால் எல்லாப் பொருளையும் அறியலாம்.
விளக்கொளி கண்டு நின்ற போது அகக் காட்சியில் உலகிலுள்ள உயிர்ப் பொருள் எல்லாம் கருவாய்த் தோன்றும். வெறுக்கத் தக்க ஆணவ இருள் நீங்கினால் உயிர்க்கு உயிராய்க் கலந்திருக்கும்  பரசிவன் உண்மையைக் காணலாம்.  அவ்வாறு அவனிடம் செறிந்த சிந்தையை ஆராயின் ஞானமே வடிவான காட்சி உண்டாகித் தேவஉருவம் சித்திக்கும்.
 
1795: ஞானத்தைத் துணையாய்க் கொள்பவரின் அறிவில் சிவம் விளங்குவான்.
ஞானத்தின் திருவுருவைத் தெளிந்து அறியாமையால் காலங்கள் வீணே கழிந்தன. எங்கள் சிவனாகிய தலைவன் தன் சொரூப நிலையினின்றும் பெயர்ந்து குருவாக வந்து காட்டிக் காண்பான்.  அவ்வாறு உண்மை அறிவே துணையாகப் பொருந்தி உணர்வாரிடம் சார்ந்து விளங்கும் பெருமையுடையவன் சிவன்.  நெஞ்சத்தில் விளங்கும் விளக்கொளியே சிவன்.   சிவன் ஞானமே துணையாகக் கொள்வாரது அறிவில் சிறந்து விளங்குவான்.
 
1796: இறைவன் இன்பத்தை அளிப்பான்.
சீவர்களைப் பந்தித்திருக்கும் வினைகள் அழிந்த பின்னர் ஒளிமயமான சிவன் தானே அறிவான்.  நான் அறியாதிருந்தும் எனது பக்குவத்தை என் குருநாதனாகிய அவன் அறிவான்.  ஆனால் ஊனே உருகி உணர்வு மயமான பொருளை உணர்ந்த பின் இறைவன் தேனைப் போன்று நோயை நீக்கி இன்பத்தை வழங்குவான்.   சிவன் ஊனே உருகி உணர்பவர்க்கு பாசத்தை நீக்கி அழியாமையை அருளுவான்.
 
1797: சீவரிடம் ஒளியாய் உயிர்ப்பாய் உள்ளான் ஈசன்.
உடல் தோன்றிய போதே ஒளியாய் உயிர்ப்பாய் உள்ள ஈசனை நான் அறிந்தே இருந்தேன்.  ஆகாய மண்டலவாசிகள் இவ்வுண்மையை அறியாது மயங்கி இருந்தனர்.  தேகத்தின் உள்ளே உயிர்ப்பின் இயக்கத்தை நடத்துகின்ற ஒளிமிக்க சுடராகிய இறைவனை தான் அறியவில்லையெனில் பின் யார் அறிந்து உபகாரம் செய்ய முடியும்?   ஊனில் உயிர்ப்பாய் விளங்கும் பொருளே சீவர்களுக்கு உதவி செய்யும்.  தேவர்களுக்கு பூத உடல் இல்லாமையால் உயிர்ப்பின் இயக்கத்தை அறியமுடியாது.
 
1798: சிவசத்தியே எங்கும் உள்ளது.
அருளே எங்குமாயுள்ளது என்ற தன்மையை உலகவர் அறியார். அருளை  அறிவோர்க்கு அது அமுதம் போன்ற இனிமையைத் தரும் என்பதனையும் சிந்தித்துத் தெளியார்.  சத்தியே மிக சூக்குமமாய்ப் படைப்புத் தொழில் முதலிய ஐந்தொழிலுக்கும் காரணமானது என்பதனை எண்ணிப் பார்ப்பதில்லை.  அருள் சத்தியானது கண்ணாயிருந்து அனைத்தையும் ஒரு சேரக் காண்பதையும் உணரார்.
 
1799: திருவருள் சிவத்துடன் அடியார் கூட்டத்தைக் கொடுக்கும்.
அறிவே உருவான சிவத்திடம் பொருந்துவதற்கு ஏற்ற அறிவினைக் கொடுத்து, கருவிகள் வழிப் புலன்களைப் பற்றும் ஆசையை உண்டாக்கி, ஆன்ம அறிவோடு திருவருளும் கலந்து, கருவிகளுடன் பொருந்தாமலே கூடிப் புலனறிவு பெறும் தூய்மையான அறிவைத் தந்து, அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியும் தன்மை பொருந்தி நின்றவர் சிவமாயினர்.   அறிவு மயமான சிவத்துடன் பொருந்த திருவருள் அடியார் கூட்டத்தினை நல்கும்.
 
1800: சீவர்களைப் பிறப்பில் செலுத்தி ஒளிபெறச் செய்வது சிவசத்தியே.
அருட்சத்தியால் பிறந்து வளர்ந்து அருளால் அழிந்து இளைப்பினை நீங்கி மறைந்துள்ள சீவனை ஒளிமயமான ஆனந்தம் பெறச் செய்து பின்னர் தானே எழுந்தருளி எனது குருமண்டலத்தை விளங்கச் செய்தான்.   சிவசத்தியே பிறப்பினில் சீவர்களைச் செலுத்தி ஒளி விளங்கச் செய்தது.
 
1801: என் குருநாதன் மனத்தில் எழுந்தருளினான்.
என் குருநாதன் என்னைத் தனது அருட்சத்தியால் மரணத்தைத் தவிர்க்கும் ஒளி மண்டலத்திலிட்டு திருவருட்சத்தியைப் பதிப்பித்து என்றும் ஒரே விதமான அன்பையும் தந்து சிவானந்தத்தால் விளையும் சிவபோகமாகிய அமுதையும் உண்ணச் செய்து அருளினால் என் மனத்தில் எழுந்தருளினான்.
 
1802: உயிரின் நிலைக்கு ஏற்பச் சத்தி அருள் செய்யும்.
அருள் என்னைப் பாசத்தில் பொருந்தி அனுபவிக்கச் செய்தது; அந்தப் பாசத்தினால் பற்றாகக் கொண்ட என்னை அதிலிருந்து வேறுபடுத்தியது.   அந்தப் பாசத்தில் பற்றுவிட்டவுடன் அன்புப் பொருளாகிய சிவத்துடன் பொருந்தும்படி செய்தது.   காண்பானும் காட்சிப் பொருளும் கூடிய கூட்டத்தில் காட்சிப் பொருளோடு பிரிப்பின்றி நிலை பெறச் செய்ததும் அருளேயாகும்.
 
1803: இறைவனின் கருணையை நினைக்க அவன் அருளுவான்.
பிறவிக்குக் காரணமாகிய இருளைப்போக்கி ஒளியினைத் தந்த பெருங்கருணையாளனும்  சீவனை இன்பத்தில் ஆழ்த்தி மறைக்காத வண்ணம் சத்தியைப் பதிப்பித்தருளிய பெரிய பிரானாகிய சிவனும் உதவுவதால் குறையாத தன்மையுடைய கடல் போன்ற கருணையா ளனும் மேலான பொருள்களுக்கு எல்லாம் மேலானவனும் ஆகிய இறைவனை நான் விரும்பினேன்.  அவனை நான் விரும்பியதால் உறவாக வந்து எனது உள்ளம் புகுந்தான்.
 
1804: அடியவர்களை  ஆனந்தமயமாக்குவான்.
நந்தியாகிய சிவன் தன் அருளால் என் மத்துள் புகுந்தான்.  அருளில்லாது இருளில் அழுந்தியிருப்பவர்க்கு மனம் புகுந்தாலும் அவரால் அறியப்படான். என் மனத்தில் புகுந்து ஆனந்த மயமாகிச் சிவமாகச் செய்தான். மனத்தினுள் சிவன் புகுந்தமையால் நானும் ஆனந்த வடிவு பெற்றவன் ஆனேன்.
 
 
1805: ஆன்மாவுடன் தத்துவங்களைப் பொருத்தியது சிவத்தின் அருளே.
ஆராய்கின்ற அறிவுமயமான ஆன்மாவோடு அறியப்படாத மகாமாயையும் மாயையின் காரியமான அந்தக் கரணங்களையும் ஐம்பூதங்களையும், இந்திரியக் கூட்டங்களையும், அவற்றோடு பராசத்தி, ஆதிசத்தி, இச்சாசத்தி, ஞானசத்தி, கிரியாசத்தி ஆகிய ஐந்து சத்திகளையும் பொருந்தியது இறைவனது திருவருட்செயலாகும்.
 
1806: இறைவன் அருளே திருமேனியாகக் கொண்டவன்.
பூத காரியம் அனைத்தும் அருளாலே ஆவன.  அவை மலக்குற்றத்தால் அசைவனவாகவும் அசையாதன வாகவும் அருளில் நிலை பெற்றுள்ளன. இருள் என்றும் ஒளி என்றும் கூறும்படி எங்குமுள்ள ஈசன் தனது அருள் சத்தியே திருமேனியாகக் கொண்டு திகழ்வான்.  அத்தகைய திருவருள் அன்றிச் சிவம் வேறாக இல்லை.
 
1807: சிவனே ஒன்பது பேதமாய் விளங்குவான்.
சிவமும் சத்தியும் மேலான விந்துவும் நாதமும் மேன்மையான சதாசிவனும் மகேசுவரனும் உருத்திரனும் பிறவியில் படும் திருமாலும் பிரமனும் ஈறாக ஒன்பது வேறுபட்ட வடிவங்களாகப் பிரிந்தும் பிரியாதும் ஏகனாய் ஒன்றிருந்தும் நடிப்பவன் சிவனேயாவான்.
 
1808: அருள் உடையவர் அரனைக் காண்பர்.
குருட்டுத் தன்மையுடைய கண்ணுடையார்க்குச் சூரியன் முதலியவை விளங்கமாட்டா. தெளிந்த கண்ணுடையார்க்குச் சூரிய ஒளியால் எங்கும் ஒளியாய் விளங்கும். அது போல அருட்கண் இல்லாதார்க்குஅரும் பொருள் தோன்றா.
 
1809: சத்துடன் கூடிய சிவனே ஐந்தொழிலை நிகழ்த்துபவன்.
சிவத்தின் சத்தியே தனுகரண புவன போகங்களைப் படைக்கும்.  சத்தியே படைத்தவை காக்கும். அதுவே காத்தவற்றை அழிக்கும்.     அழித்தவற்றை ஓய்வு தந்து அதுவே மறைத்திடும். அதுவே இவற்றுடன் முத்தியையும் அளிக்கும். அத்தகைய அருளோடு கூடியவனே பரந்துள்ள பொருள்கள் எல்லாவற்றுக்கும் மேலான தலைவனாக உள்ளான்.
 
1810: பரசிவத்தின் இயல்பு.
சிவம், சத்தி, நாதம், விந்து ஆகிய நான்கும் சிவத்துக்குரிய அருவ நிலையாகும். நீங்குதல் இல்லாத அருவுருவம் சதாசிவமாகும்.  நிலை பெறுவதற்குரியவான மகேசுரன், அரன், அரி, பிரமன் ஆகிய நான்கும் நீடிய உருவ நிலைகளாம். அழியாத இந்த ஒன்பதுமாயும் அவற்றைக் கடந்தும் நின்று இவற்றை இயக்குவதாயும் உள்ள பரசிவம் ஒன்றேயாம்.
 
1811: சிவன் சீவர்களுடன் துணையாக நின்று அருளும்.
ஒப்பற்ற தன்மையால் கேடில்லாத சிவம் தானேயாகி நிற்கின்றது. அது போல சிவம் உயிர்க்குயிராக உயிர்களோடு பொருந்தி அவற்றின் தன்மையின்றாய் நிற்கும். ஆனால் என்னுள்ளத்தே நேயப் பொருளான சிவம் துணையென்று சொல்லும் வண்ணம் உடன் நின்று செலுத்தியது தான் விளையாட்டாகும்.
 
1812: சிவம் சத்தியுடன் கூடி நாதம் முதலாய் விரியும்.
அன்பினால் நிலைபெற்றுள்ள மலமற்ற சிவன் சத்தியோடு கூடி அதனைத் தொழிற்படுத்தவே, சுத்தமாயையினின்று நாதம் தோன்றி விரிந்து நிவிருத்தியாதி பஞ்ச கலைகளாகக் கூடி அழிவில்லாத விந்துவாக விளையும்.
 
1813:சொல்லுலகு பொருளுலகு தோன்றும் விதம்.
அனைத்துமாய் பரவிந்து வடிவில் நிலைத்திருக்கும் சத்தியே எல்லாத் தத்துவங்களிலும்
நிறைந்துள்ளாள்.  அவளிடமிருந்தே அசுத்த மாயையும் மேலான சுத்த மாயையும் விளையும்.  இவ்விருவகையான மாயையில் தேவக் கூட்டமும் விரிவாகச் சொல்லப்பட்ட பிரணவமும் அதன் வெவ்வேறான மந்திரங்களும் நான்கு வேதங்களும் அளவற்ற அண்ட கோடிகளும் தோன்றும்.
 
10.அருளொளி.
 
1814: திருவருளே இன்பத்தைத் தரும்.
திருவருளே ஏற்ற துணையென்று உணர்ந்து அதன் வழி நின்று தன் செயல் நீங்கப் பெறாதவர் திருவருள் இயக்கத்தில் பொருந்த மாட்டார்.  அவர் ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரொதாயி ஆகிய ஐம்மலங்களையும் நீங்க மாட்டார். அருளின் பெருமையை அறியாதவர் அதனுள் அழுந்தமாட்டார்.  திருவருளால் தோன்றி அருளே கண்ணாக அறிபவரே அறிந்தவராவர்.
 
1815: 'சிவ' என்ற நாமத்தைச் சிந்தித்திருக்க வேண்டும்.
குருநாதனான சிவம் மீண்டும் பிறவிக்கு வாராத நெறியை அருளியவன்.  ஆயிரம் திருப்பெயரையுடைய பெருமானின் பெயர்களுள் ஒன்றான "சிவ" என்ற தெவிட்டாத இன்பத் திருவருட் கடலிலே முழுகி ஆடுக என்று இன்ப அமுதத்தை அருள் செய்தான்.
 
1816: ஆடுங்கள்; பாடுங்கள்; இறைவன் அருள்வான்.
ஆனந்தத்தினால் ஆடியும் பாடியும் கண்ணீர் மல்கியும் அலறியும் சிவனது பேரியல்பினைத் தேடி நான் கண்டு கொண்டேன். கண்டு பொருந்திய அப்போதே உருவமற்ற ஒளியை நல்கி அவன் தன் அருளால் எனக்குள் மேல், கீழ், உள் என்ற பாகுபாடற்று விளங்கினான்.
 
1817: பாச ஞானம் நீங்கினால் பதி ஞானம் உண்டாகும்.
குருநாதன், ஆணவ மலத்தால் உண்டான பிறப்பும் பிறப்பால் உற்ற மாயா காரியங்கள் இடையே வந்து பற்றிய பொய்க்கூட்டம் என்று உணர்த்தி,  "நீ இவற்றை நீங்கினாய்" என்று திருவடி ஞானம் தந்தருளினான்.  அதனால் இதுகாறும்  கற்றவற்றை விட்டு விட்டேன்.  அவனருளால் கிட்டிய நாதத்தை நான் பணிந்து அதன் வழியிலே நின்றேன்.
 
1818: சிவ ஒளியில் சீவ ஒளி விளங்கும்.
ஞானம் எனும் விளக்கை ஏற்றி எல்லையில்லாப் பரம்பொருளை அறியுங்கள். பரம்பொருளின் திருமுன் மல மாயா கன்மங்களாகிய உடம்பின் துன்பங்கள் யாவும் நீங்கும்.  பேரொளியை வெளிப்படுத்தும் ஒளி உடையார்கள் சிவ ஒளியும் தம் சீவ ஒளியும் கலந்து விளங்குவார்கள்.
 
1819: அக ஒளியில் கூடியிருப்பவர் சிவம் ஆவார்.
ஒளியும் இருளும் எந்தக் காலத்திலும் கெட - ஒளியில் கலந்திருப்பவர்க்கு அருளொளி நீங்காது. புறக்கண் எதையும் இருளில் அறியாது ஒளியில் அறிவது உலகியல்.  அது போல புறக்கண்ணுக்கு வேறான அகக்கண் விளங்கும் அண்ட கோச அறிவில் இருள் நீங்கி உயிர் ஒளியைப் பெற்றால் சிவமாகும். ஆன்மா புறத்தே காணும் அனைத்தும் இருள்.  அகத்தில் கண்டால் ஒளி.
 
1820:  திருவருளை நினந்து மயங்கியிருப்பாயாக.
இறைவா, ஆணவத்தால் புற உலகில் திரிந்து கொண்டிருந்த எனக்கு உன்னுடைய பொன்னொளியில் விளங்கும் நாதத்தை அளித்து, எனது அண்ட கோச ஒளியில் புகுந்து, என்னை மலமற்றவனாகச் செய்து, என்னுடைய அறவாழ்வில் புகுந்து, எனக்கு கிட்டுதற்கு அரிய அமுதைக் கொடுத்த திறம் என்ன என்று மயங்கியிருந்தேன்.
 
1821: சிவசத்தியின் உண்மையை அறிந்தால் சிவகதி உண்டாகும்.
அருள் என்ற பரவெளி ஒன்றும் மெய்ப்பொருள் என்ற புகுமிடம் ஒன்றும் வேறு என்ற மயக்கம் நீங்க மனத்துள் புகுந்த பேரொளியைச் சிவமெனத் தெளியுங்கள்.  பின்னர்ச் சிவகதி உண்டாகும்.  பரவெளியில் ஒளியும் நாதமும் உண்டு என்று உணர்க.  சிவசத்தி உண்மை உணர்ந்த போது சிவகதி உண்டாம்.
 
1822: பிற தெய்வங்களால் நன்மை ஏற்படாது.
இவ்வுலகில் சிவமானது பிறந்து இறந்த கதை இருந்தால் சொல்லுங்கள்.  செத்துப் பிறக்கின்ற பிற தெய்வங்களை மெய்ப்பொருள் என்று கருதுவதை விட்டு விடுங்கள். பருந்து வட்டமிடும் உடலைக் கீழே விழச் செய்து அருமையான உயிரைத் தெளிவடையச் செய்வோம்.  இந்த உண்மையை பிறருக்குச் சொல்லுங்கள்.
 
11. சிவபூசை.
1823: பேரொளியாய் அமையும்.
அரிய உயிரின் உள்ளமாகிய மன மண்டலம் சிவனுறையும் கருவறையாகும்.  உடம்பு ஆன்மாவின் ஆற்றலைக் குறைத்து வைத்து  உள்ள இடமாகும்.  வள்ளலாகிய தலைவனைச் சென்று வழிபடுவதற்கு வாய் கோபுர வாசல் ஆகும்.  நன்றாக அறிந்து தெளிவு பெற்றவர்க்குச் சீவனே சிவலிங்கம்.    இவ்வாறு அறிந்து வழிபடுவோர்க்கு  வஞ்சனையைச் செய்யும் ஞானேந்திரியங்கள் ஐந்தும் மிக்க ஒளி பொருந்திய விளக்காகும்.
 
1824: பாடலைப் படைப்போம்.
வேள்வியில் இடப்பட்ட நிவேதனத்தை ஏற்கின்ற விரிந்த கிரணத்தையுடைய சிவபெருமானுக்கு படைக்கத் தக்க பொருள் நம்மிடம் இல்லை.  காலையிலும் மாலையிலும் படைக்கப்படும் பொருளாவன: "மனத்தை மகிழச் செய்யும் பாடலாகிய உணவாம்".அதுவே அவருக்கு பால் நிவேதனமாம்.
 
1825: சதாசிவத்தின் ஈசான முக தரிசனத்தால் சிவம் ஆகலாம்.
பால் போன்ற இனிய மொழியையுடைய பராசத்தியின் பாகனாகிய பராபரனை, ஐம்முகனான சதாசிவமூர்த்தியைச் சிரசில் நிலை பெறச் செய்து, உச்சி முகத்தை ஈசான முகமாகச் சுழுமுனையில் தியானித்து சீலமான முகத்தைச் செய்ய சிவமாவர்.
 
1826: இடைவிடாமல் சிவத்தை நினைப்பவர் சிவமாவார்.
சிவத்தை நினைத்துக் கொண்டிருப்பதும் சிவத்தைப் பற்றிப் பிறர்க்கு எடுத்துரைப்பது மாகிய இருவழிகள் அல்லாது நாத சொரூபமான சிவத்தைக் காண்பது அரிதாகும்.  நாத சொரூபமான சிவத்தைக் கண்டு களிக்க வல்லவரே நீரினை முகமாகவுடைய சுவாதிட்டா னத்தில் விளங்கும் மூலவாயுவை மேலே எழுப்பிச் சிவத்தைப் பரிச யோக்கத்தால் அடையத் தக்கவராவர்.
 
1827: இறைவன் வீற்றிருக்கக் காரணம்.
அபிசேகத்திலும், அலங்காரத்திலும் பிரியமுள்ள இறைவன்  தேவர்களது நெஞ்சத்திலும் இடைவிடாது வீற்றிருப்பதற்குக் காரணம் - பஞ்ச கவ்விய உபசாரத்துடன் நமஸ்கார முத்திரையுடன் பக்தர்களோடு தேவர்களும் கலந்து வழிபட்டமையாலாம்.  சூக்கும வடிவில் உள்ள தேவர்கள் சிவபூசையில் கலந்து வழிபட்டமையால் தேவர்கள் நெஞ்சில் இறைவன் எழுந்தருளினான்.
 
1828: சுவாதிட்டானத்திலிருந்த உணர்வைச் சிரசுக்குச் செலுத்தி வழிபடல் நன்று.  சிவ பூசையாகிய புண்ணியச் செயலைச் செய்பவர்க்கு பொருந்தும் நீரும் பூவும் உண்டு.  அண்ணலாகிய சிவம் அவ்வித பூசை (சுவாதிட்டான மலரில் இருந்து உணர்வைச் சிரசுக்குச் செலுத்தி அகத்தே வழிபாடு செய்தல்) செய்பவர்க்கு அருள் வழங்கி நிற்பான்.  கணக்கற்ற பாவிகள் எமது தலைவனாகிய சிவத்தைப் பொருந்த அறியாமல் காலத்தை வீணே கழிக்கின்றனர்.
 
1829: முத்தி கிட்டப் பெறும்.
சிவனது ஒன்பது தீர்த்தத்திலும் ஆடித் திளைக்கும் தன்மையைக் கேட்பாயாக!   அவ்வாறு பொருந்தி உண்மை ஞானம் பெற்று உயர்ந்தோர் திருவடியைத் தூய்மையாகக் கழுவித்  தெளித்துக் கொள்ள முத்திகிட்டும்.   ஞானிகளின் சேர்க்கை சிவத்தை விளக்கி வீடுபேறு அடைவிக்கும்.
 
1830: மறவாமல் சிவனை வழிபட வேண்டும்.
தேவர் பெருமானே! அறிவு பூர்வமற்று ஞானிகளின் உறவு கிட்டினாலும் சிறப்பான பூவையும் நீரையும் நான் திருந்தும்படி வெளிப்படுத்தி மறவாமல் உன்னை வழிபடுகின்ற தன்மையை மிகுதியாகப் பெறுவதற்கு அருள் புரிவாயாக.
 
1831: சிவம் விளங்க அனைத்தும் ஆனை வழி நிற்கும்.
ஆயிரம் திருநாமங்களையும், சிவனது சிறப்புத் திருநாமமாகிய "சிவ சிவ" என்பவற்றையும் தியானிக்கும் போது எம் இறைவன் விளங்குவான்.   அப்போது வழிபாடுகளும், தேவர்கள் கூட்டமும், அலை ஓயாத கடலும் நீங்கள் வாழ்கின்ற நிலத்தில்  உங்கள் ஆணை வழி நிற்கும்.
 
1832: சிவம் ஐம்பூதச் செயல்களிலும் விளங்கும்.
ஆன்மாவிடம் ஐந்து ஐந்தாகப் பொருந்தியவற்றைப் பக்குவம் செய்து தேவர் கூட்டம் வணங்க, தனக்கு ஓர் இறுதியுமில்லாத் தலைவன் சிவத்தின்அருளோடு  விருப்பத்தை மிகுவிக்கின்ற  சுவாதிட்டானச் சக்கரத்தில் பொருந்தி தெளிந்த உலகத்தில் ஐந்து இயல்புகளை அமைத்தருளினான்.
 
1833: இறையருள் வழிபடுவோர்க்கு கிட்டும்.
சுவாதிட்டானச் சக்கரத்திலிருந்து ஊர்த்துவ முகமாய்ப் பாயும் ஆகாய கங்கையின் நீரைக் கொண்டு கருக் கொண்ட மேகம் நீரை முகந்து மேல் செல்வது போல மேலே சென்று வழிபடுவார்க்குத் தவறாமல் எம்பெருமான்அருள் வாய்க்கப் பெறும்.
 
1834: சுவாதிட்டான மலரை ஏந்தி வழிபட வேண்டும்.
நீர்ப் பெருக்கினையுடைய சுவாதிட்டானச் சக்கரத்தில் இருந்து விரிந்து மேல் ஒளி மண்டலத்தில் விளங்கும் சதாசிவருக்கு உள்ளமான ஆகாய மண்டலத்தில் புகுந்து நீண்டு  உயர்ந்த சகஸ்ரதளப் பூவை ஏந்தி வஞ்சகத் தன்மையுடைய பிறவிக் கடலை விட்டு உண்மையோடு வணக்கம் செலுத்த மாட்டாதார் துன்பக் கடலுள் விழுந்து கெடுகின்றார்கள். சகஸ்ரதள மலரே சிவனுக்குரிய பூ.
 
1835: வழிபடுவாரிடம் சிவன் விளங்குவான்.
கழித்தலைச் செய்யும் குளிர்ச்சி பொருந்திய சுவாதிட்டானமாகிய கடல் கள்ளாகிய இன்பப் பெருக்கினை யுடையது.  அதனை வழிபடுபவர்கள் விரிதலும் குவிதலும் உடைய மலர் மொட்டுகளின் இயல்பை அறிய மாட்டார்கள்.  அதனால் அவர்கள் பழியில் வீழ்வர்.  ஆனால் பலரது பழிச்சொல்லும் கெட உடலைக் கடந்து மேலே செல்வோரது ஊர்த்துவ சகஸ்ரதளத்தில் சிவன் பொருந்தி நிற்பான்.
 
1836: மலர் வழிபாட்டுக்குச் சிவன் அருள்வான்.
பயன் தரக் கூடிய அறிவு ஒன்று உள்ளது.  பயனை அறிந்து பலகாலும் மலரைத் தூவி வழிபட்டவர்க்குச் சிவன் தானே தன் வரவினைச் சொல்லும். கண்கள் மூன்று உடைய சிவனது திருவடியைச் சார்ந்ததும் அதுவே வழியாக  சிவன் எப்போதும் வெளிப்பட்டு நின்றான்.  சுவாதிட்டான மலர் வழிபாட்டின் பயனை அறிந்து வழிபட்டவர்க்குச் சிவன் வெளிப்பட்டு அருளுவான்.
 
1837: புறத்தே ஆரவாரத்துடன் பூசிப்பதால் பயன் இல்லை.
பெருமையுடைய மலர்களைப் புறத்தே தூவித் தொழுது நின்று ஆரவாரம் செய்து எமது ஈசனது அருளாகிய திருவடிகளை வழிபடுபவர் யாரும் எனது உடலை இடமாகக் கொண்ட தலைவனும் மூப்பில்லாத முதன்மையான திருவுருவத்தைத் தாங்கி நின்ற பரிசுத்தமானவனும் ஆகிய சிவனை உள்ளத்தே துதித்து உணரவில்லை.   சிவனைப் புறத்தே ஆரவாரமாகப் பூசிப்பதால் மட்டும் பயன் இல்லை.
 
1838: சிவனே மூவராய் நின்று அருள்கிறான்.
தேவர்களோடு கலந்து பிருத்வி தத்துவத்தில் பொருந்திய சுவாதிட்டான மலரிலிருந்து ஆகாய கங்கையாக மேலெழும் உணர்வில் வெளிப்படும் தூய இறைவனை அறிந்து எண்ண வல்லார்கள் யார்? பிரமன், விஷ்ணு, ருத்திரன் என்ற மூவரோடு கலந்தும் வேறாயும் விளங்கும் முதல்வனான சிவன் அருளும் முறைமையினை அறிந்து எண்ண வல்லார்கள் யார்?
 
1839: சிவத்தைத் தியானிக்கும் முறை.
முதல்வனை நினைக்க வல்லோர் சுவாதிட்டான மலரிலிருந்து சுழுமுனை வழியாக மேல் நோக்கிப் பாயும் உணர்வாகிய நீரை ஏந்தி தவறின்றி இறைவனது பெரிய தவத்தை விரும்பி இரு கண்மலர்களைச் சேர்த்தலால் தோன்றும் திருவடியைப் பற்றி மழையைப் பொழியும் மேகம் போன்ற ஒளியில் பொருந்தி நில்லுங்கள்.   இதுவே சிவனைத் தியானிக்கும் முறை.
 
1840: காமத்தை வென்று விந்து செயம் பெற வேண்டும்.
காமத்தை வென்று காலந் தாழ்த்தாது விந்துவைத் தர்ப்பணம் செய்யும் என்று முன்னோர் கூறியுள்ளனர். அவ்வாறு செய்து சிவன் விளங்கும் முறையில் இறைபணி அமைய விந்து நாதம் கலப்புறும் சுவாதிட்டான மலரைக் கொண்டு நாள்தோறும் வழிபடில் சிவன் உங்களை ஏற்றுக் கொள்ளும். விந்து தர்ப்பணம் என்பது விந்துவைத் திருத்திக் கொடுத்த லாகும்.  காமத்தை வென்று சிவபூசை செய்ய விந்து செயம் அமையும்.
 
1841: வீட்டுலகம் செல்லும் வழி.
சுவாதிட்டான மலர், சூரிய சந்திரர்களாகிய கண் மலர்கள் ஆகியவற்றை இறைவனுக்குச் சாத்தியும், நிலை பெற வைத்தும், எவராலும் தோற்றுவிக்கப்படாதவன் என்று துதித்தும், வணங்கியும் நாள் தோறும் உலகத்தினர் ஈறைவனை அறியமாட்டார்.  மனத்தின் கண் உள்ள மாசினை நீக்கி சிவத்தை வழிபட்டால் அதுவே துன்பத்தைப் போக்கி பெரிய திசையாகிய வீட்டுலகம் செல்வதற்குரிய வாயிலாகும்.
 
1842: மந்திர தியானத்தில் சிவத்துடன் பொருந்தியிரு.
ஆன்மாவின் கமலமாகிய சகஸ்ரதளத்தின் மேலாக இன்பம் உண்டாகுமாறு பொருந்தி எங்கும் விளங்கும் விரிந்த கிரணங்களையுடைய நந்தியை மந்திர சாதனை செய்து கொண்டு கூவித் திரிவதில் பயனில்லை.    சிவம் விளங்கும் நாதாந்தத்தில் பொருந்தும் பிரணவ மந்திரம் உலகினர் அறியார்.    பிரணவத்தின் உச்சியில் ஆன்மா, சிவம், சத்தி மூன்றும் இருக்கின்றன.   பிரணவ மந்திரம் தாபிக்கும் மந்திரம்;   கூவும் மந்திரம் அல்ல.
 
1843: வணங்குபவரின் மனத்தில் சிவன் புகுவான்.
சாண் அளவு உடம்பினுள்ளே மறைந்து கிடந்த மாணிக்கத்தைக் காணும் அளவு அதன் உண்மை இயல்பை அறிவார் இல்லை. அதனைப் போற்றி வளர்த்து எண்ண வல்லார்க்கு  மாணிக்க சோதியாக மனத்தே புகுந்து சிவன் விளங்குவான். செவ்வொளி போன்ற சிவன் போற்றி நினைய வல்லார் மனம் புகுந்தான்.
 
1844: தேவர் தங்கி நின்றனர்.
சிவன், பெருந்தன்மையுடைய நந்தியும், மாறுபாட்டைச் செய்யும் இருளைப் போக்கும் சக்கரப் படையை உடையவனும், பேரருளால் என் மனத்தை இடமாகக் கொண்டு எழுந்தருளுபவனும், வேண்டுவோர்க்கு வேண்டியதை அருளும் தன்மையுடையவனும் ஆவான்.  அச் சிவனை ஆகாய மண்டலவாசிகளாகிய  தேவர்கள் தாங்கி நின்றார்கள். பெருந்தன்மையுடைய நந்தியை அருளுடைமையால் வானவர் நலம் பெறத் தாங்கி நின்றார்கள்.
 
1845: சிவபூசையால் ஞானம் கைவரப் பெறும்.
சமய தீட்சையால் உடல் தூய்மை அடைந்து தன் செயல் நீங்கிடும்.  விசேட தீட்சையால் மந்திரத் தூய்மை உண்டாகும்.  சமயத்தில் சிறந்த நிர்வாண தீட்சையால் கலை சுத்தியாகும்.   அமைதி பொருந்திய சிவஞானம் உடையவர்க்குச் செய்வது ஆசாரிய திருமுழுக்காட்டாம்.
 
1846: சிவத்தை உணர்ந்து வழிபட்டவர்க்கே சிவபூசை அமையும்.
ஊழிக்காலம் தோறும் உணர்ந்து வழிபட்டவர்களுக்கு அல்லாமல் அழியாத ஆன்மாவை உணரவும் முடியாது.  பாற்கடலில் அமரும் திருமாலும் பிரமனும் ஆகியோர் ஓர் யுகம் சென்றாலும் அவர்களால் அறியப்படாத சிவன் ஞானிகளின் உச்சியில் விளங்குவான்.  சிவத்தை உணர்ந்து வழிபட்டவர்க்கே சிவபூஜை அமைகிறது.
 
12.குருபூசை. குருமண்டல பூசை. ஒளிவடிவில் எங்கும் உள்ள சிவத்தைவழிபடும்  முறை குருபூசை.
 
1847: நிராதாரத்தில் பொருந்தி இருப்பாயாக.
மூலதாரத்திலிருந்து நந்தியின் திருவடியைப் பற்றி சுழுமுனை வழியாக மேலெழுந்து செல்லும் போதனையும், அங்குப் பூசிக்கும் முறையும், ஆதாரமாய் உள்ள முப்பத்தாறு தத்துவங்களையும்
கடந்து ஆன்மா விளங்கும் அடியையும் கண்டு மனத்துள் போற்றுவேன்.
 
1848: உடல் பற்றினை விட்டு விடு.
காட்டில் வளர்கின்ற உறுதி பொருந்திய மணம் நிறைந்த சந்தனக் கட்டையாலாகிய சாந்தையும் சிறந்த மலர்களையும் வானளாவத் தூவி வழிபட்டாலும் உடல் பற்றை ஞானத்தால் உணர்பவர்க்கே அல்லாமல் தேன் போன்ற ஊர்த்துவ சகஸ்ரதளத்தை அடைய முடியாது.  இறைவன் திருவடியைப் பெறுவதற்கு உடல்பற்றை விட வேண்டும்.
 
1849: தன் செயல் அறும் நிலை.
பொருந்திய ஞானத்தில் சிறந்திருந்தால் மெய்ப்பொருள் காட்சியாம்.   அவ்வழி ஞானத்தில் பொருந்தி நிற்றலே அர்ச்சனை.  இடையறாது அகத்தே வழிபாடு செய்யின் அதுவே சிறந்த வழிபாடு.  அவ்வாறு திருவடி அடைதலே தன் செயலற்று இருத்தலாகும்.  மெய்ப் பொருளை உணர்ந்திருப்பின் தன் செயல் அறும்.
 
1850: சிவப் பயிர் செய்க.
காலை, நண்பகல், மாலையாகிய மூன்று வேளைகளிலும் இறைவனை விரும்புங்கள்.  விரும்பி நமசிவாய என்று அவனது திருநாமமாகிய விதையினைத் தெளியுங்கள்.   அந்த விதை அக்கினி, சூரியன், சந்திரன் ஆகிய மும்மண்டலத்திலும் விளைந்து பயிராவதை விரும்பி நில்லுங்கள்.  இவ்வாறு வளர்ந்ததே நந்தி என்ற பெயரையுடைய தலைவனாகும். முப்போதும் நமசிவாய என்ற விதையைத் தெளித்துச் சிவப்பயிர் செய்ய வேண்டும்.
 
1851: சிவஞானிக்கு உணவளித்துப் பார்ப்பது எல்லாவற்றிலும் சிறந்தது.
சிவத்தலங்களில் சிவபூசை செய்தால் நூறு மடங்கு உயர்ந்ததாகும்.  தவம் பண்ணுவார் சந்நிதியில் சிவபூசை செய்தால் ஆயிரம் மடங்கு உயர்ந்ததாகும். இனி எவற்றிலும் எண்ணமில்லாத சிவயோகிக்குப் பிச்சையிடில் கோடி மடங்கு உயர்ந்ததாகும்.  ஆனால் சிவஞானிக்கு உணவளித்து உண்ணுவதைப் பார்த்தால் அது மிகவும் விசேடமாம்.
 
1852: சுழுமுனை தியானமே சிறந்தது.
சந்திர கலை சூரிய கலை ஆகிய இரண்டிலும் பிராணன் இயங்கும் போது வழிபாடு செய்யின் அசுரர்க்குப் பிரியத்தைத் தரும் செய்கையாகும். சந்திர கலை சூரிய கலை ஆகிய இரண்டின் வழியாகப் பிராணன் இயங்காது பொருந்தியிருக்கும் நிலையில் வழிபாடு செய்வது நந்திக்குப் பெரும் பூசையாகும்.
 
1853: நினைவில் அதீதத்தைப் புரிந்து பூசை செய்ய வேண்டும்.
சந்திரகலை  சூரியகலையுமாகி எழுகின்றவை ஒரு விந்துவும் நாதமுமாகி மேலிடத்தில் நிலைத்த சிந்தனையானது.  மேலும் சாக்கிரதாதீதத்தைப் பொருந்தி நந்தியைப் பூசிக்க அதுவே நல்ல பூசையாகும்.  அறிவு ஊர்த்துவ சகஸ்ரதளம் சென்ற போது விழிப்பு நிலையில் இருந்தாலும் உடல் தொழிற்படாது.  இதைச் சாக்கிராதீதம் என்பர்.  நினைவில் அதீதத்தைப் புரிந்து பூசை செய்யவேண்டும்.
 
1854: கருவி கரணங்கள் ஒடுங்கிப் பூசை செய்ய வேண்டும்.
மனம் பிராணன் ஆகியவற்றை மூலவாயு மேல் செல்வதால் மாற்றி அநித்தியமான உடலை அவற்றின் காரணமான பூதங்களிலும்,  பூதங்களை அவற்றின் காரணமான தன்மாத்திரையிலும் ஒடுக்கி, சிவனருளில் தோய்ந்திருந்து இன்ப நுகர்ச்சியோடு செய்யப் பெறும் தனிப் பூசையே சதாசிவ மூர்த்திக்கு உரியதாம். கருவி கரணங்கள் ஒடுங்கி இருந்து செய்யப்படும் பூசையே சதாசிவர்க்கு உகந்ததாம்.
 
1855: இறைவன் விருப்பமுடன் ஏற்கும் பூசை.
சூரியகலை சந்திரகலை இயங்கும் போது செய்கின்ற பூசையானது இயல்பாக உள்ள ஈசனுக்கு இணந்த மலராக மட்டும் அமையும். சூரிய சந்திரகலைகள் இயங்காமல் அக்கினி கலையில் (சுழுமுனையில்) இயங்கும்போது செய்யும் பூசையை ஒளிக்கிரணங்களையுடைய ஈசன் விரும்பி ஏற்றுக் கொள்வான்.
 
1856: இரவு பகல் அற்ற இடத்தில் இன்பமும் துன்பமும் இரா.
இரவு பகல் பேதமற்று சாக்கிராதீதத்தே நின்று வேறு எண்ணமற்றுச் சிவானந்தத் தேனைப் பருகி இரவும் பகலும் இல்லாத திருவடி இன்பத்தில் திளைத்து இரவும் பகலும் உள்ள அசுத்த மாயை சுத்த மாயை இரண்டையும் அகற்றி நின்றேன்.
13.மகேசுவர பூசை (சிவனடியார் வழிபாடு)
1857: அடியார்க்கு செய்வது இறைவனுக்கு செய்வதாகும்.
சித்திரம் போன்று அமைந்த மாடங்களையுடைய கோயிலிலுள்ள இறைவனுக்கு ஏதேனும் நைவேத்யம் செய்தால் நடக்கின்ற மாடக் கோவிலாக உள்ள சிவனடியார்க்கு வந்து அமையா.  ஆனால் நடமாடும் கோயிலாகவுள்ள சிவனடியார்க்கு ஏதேனும் கொடுத்தால் அது மாடக் கோயிலிலுள்ள இறைவனுக்கு திருப்தி அளிப்பதாகும். நடமாடும் கோயிலாக உள்ள அடியார்க்கு செய்யும் பூசை படமாடக் கோயில் இறைவனுக்குத் திருப்தி அளிப்பதாகும்.
 
1858: மகேசுவரராகிய அடியார்க்கு அளிப்பன புவனங்களில்உள்ளோர் அனைவர்க்கும் அளிப்பனவாகும். 
தீமையில்லாத சிந்தையுடைய தவத்தினையுடைய ஞானிகள் தாம் மகிழ்ச்சியோடு உண்டது  மூன்று புவனங்களும் முழுமையாக உண்டது போலாகும்.  அவர்கள் ஏற்றுக் கொண்டது மூன்று புவனங்களும் ஏற்றுக் கொண்டது போலாகும் என்று நந்தி கூறினான்.
 
1859:மகேசுவரருக்கு அளித்தவை மும்மூர்த்திகளுக்கும் மூவேழு சுற்றத்தார்க்கும் ஆகும்.
ஒரு மாத்திரையாகிய அகரத்தில் பொருந்தி உறைகின்ற யோகிக்கு கொடுத்த அருமையான பொருள் மும்மூர்த்திகளுக்கும் மூவேழு தலைமுறையினருக்கும் அர்ப்பணித்ததாகும்.  அதனைத் தெளிந்து அறிந்து கொள்வீர். செயல்படுவீர்.
 
1860: ஞானிக்கு அளிப்பது பயன் மிக்கது.
பார்ப்பனச்சேரி அந்தணர் ஆயிரம் பேருக்கு கொடுப்பதைவிட,  ஆயிரம் கோயில்கள் கட்டி முடிப்பதை விட, சிவஞானி ஒருவருக்கு ஒரு பகல் வேளை உணவளித்து அவரை உண்ண வைப்பதால் விளையும் பயன் ஒப்பற்றது.
 
1861: நீறு பூசிய அடியவர்க்கு அளிப்பது சிறந்தது.
ஆற்றுப்படுத்தும் வேள்வியினைச் செய்யும் அருமறை நூல் வல்லார் என்று கூறப்பெறும் அந்தணர் கோடிபேர் உண்பதில், திருநீற்றினை நிறையப் பூசும் தொண்டர் ஒருவருக்கு உணவு அளிக்க வேண்டும் என்று நினைப்பதில் உள்ள பயன் இல்லை. பேறு எனில் தொண்டருக்கு உணவளிப்பதே பேறாகும். வேள்வியினைப் புரியும் அந்தணர்க்கு அளிப்பதை விட திருநீற்றினைப் பூசும் தொண்டருக்கு அளிப்பது மேலானது.
 
1862: சிவனடியாரைச் சிவன் எனக் கருதி வழிபட வேண்டும்.
வெண்ணிற ஒளியில் விளங்குபவனே, இறைவனே, எம்பிரானே என்று, திருநீற்றை அணிபவர்களாகிய அடியார்கள் பூமியில் விளங்கும் தேவர்களாவார்கள்.  கங்கையைத் தரித்த சிவந்த சடையையுடைய சிவன் இவரே என்று கருதிப் பூசிப்பவர்க்கு வினை இல்லையாம்.
 
1863: சிவன் திருபெயரை இடைவிடாமல் எண்ணிக் கொண்டிருப்பாயாக.
சிறந்த ஒளி மண்டல நினைவைக் கொண்டு தன் சந்நிதியில் இட்டுச் சென்ற பெரிய நந்தி என்று பேசப்படும் ஒளிக்கதிர்கள் விளங்கும் சடையுடையவனை நான் மிகவும் நெகிழ்ந்துருகித் தோன்றும் அளவு கூறுவதற்காக நந்தியான சிவனது திருபெயரைத் திரும்பத் திரும்ப எண்ணிக் கொண்டிருப்பேன்.
 
1864: சிவன் அடியாரை வணங்கினால் இன்பம் ஏற்படும்.
அழியும் தன்மையற்ற சிவனின் அடியவரைத் தொழும் தகுதியுடைய உலகத்தவர்க்கு அறியாமையான இருள் நீங்கும்.  அந்நிலை கெடாதபடி அறியாமை நீங்கிய பண்பு கொண்ட சிவத்தை நாடி வணங்கி மேல் ஏழ் உலகத்தில் துன்பம் நீங்கியதுடன் இன்பமும் ஏற்படும்.
 
1865: உள்ளத் தெளிவை மகேசுவர வழிபாடு அளிக்கும்.
இறைவனை அறிவதற்குரிய பண்பு சிறிதும் இல்லாதவர் ஆனாலும் உள்ளே மகிழ்வு உடையவராய் நின்று வழிபடும் உபசாரங்களுடன் பலகாலம் பொருந்தி நிற்பின், உள்ளத்தில் களிப்புடையவராய் நிலை பெற்று நின்று ஆராய்ந்து தெளிந்து பாசம் நீக்குவர் ஆவர்.
 
1866. மகேசுவரர் உண்டதில் மிச்சத்தை உண்டால் முத்தி கிடைக்கும்.
திருத்தமான கோலத்தை உடைய மகேசுவரர் உண்ட உணவு, உருத்திரன் திருமால், நான்முகன் என்னும் மூவரும் உண்ட பெருமை உடையதாகும். சித்தம் தெளிவு கொண்டவரது  மிச்சத்தை உண்டால் முத்தி உண்டாகும் என்று நம் மூலன் உரைத்த மொழி உண்மையாகும்.
 
1867: மகேசுவரர்க்கு செய்யும் அறம் மூவினைகளையும் அகற்றும்.
மகேசுவரர் தம் முயற்சியில் குன்றாமல் அருந்தவத்தச் செய்து கொண்டே இருப்பர். உம்மைத் துன்பத்தில் ஆழ்த்தும் பிராரத்துவ வினை நீங்க அவருக்கே அறத்தைச் செய்யுங்கள்.  அங்ஙனம் செய்தால் அது பிராரத்துவ வினையை நீக்கி மேல் ஏறும் ஆகாமிய வினையுடன் மிஞ்சி நிற்கும் சஞ்சித வினையையும் ஒரு சேரஅழித்து விடும்.
 
14. அடியார் பெருமை.
 
1868: அடியார் வாழும் நாடு வளமாய் இருக்கும்.
திசைகளை உரிமையாய்க் கொண்ட ஒரு பரம்பொருளை நாடும் தன்மையுடைய அடியார் நீங்காமல் இருப்பின் அந்நாட்டில் பகைப்பதற்கு ஒருவரும்  இல்லையாகும்.  அந்நாட்டில் பருவ மழை முறையாய்ப் பொழியும். அந்நாட்டில் விளையும் பொருளின் விலை தக்கதாய் விளங்கும்
 
1869: அடியார் எடுத்த உடலிலேயே சிவனடி சேர்ந்து அரும் பெறுவர்.
முன்னைய புண்ணியப் பயனால் மண் உலகில் சிவ லோக ஞானத்துடன் பிறந்து எடுத்த உடலிலேயே சிவவுலகத்தை அடையும் தவத்தைச் செய்வர்சிவ உலகத்தில் சிவசத்தியின் ஆற்றலைப் பெறுவர்.
 
1870: அடியவர் ஒளி மண்டலத்தில் அண்டங்கள் விளங்கும்.
நாம் மேற்கொண்ட ஒளி மண்டலத்தில் எட்டுக் குலமலை உச்சியும், கீழ் உள்ள நாகர்களும், அண்டங் களில் வாழும் தேவர்களும், ஆதிப்பரம்பொருளும், எட்டுத் திக்குகளில் உள்ள அனைவரும் வந்து, என் கையில் உள்ளார் என்றால் நாம் இனி உய்வு பெற்றோம்.
 
1871: ஏழு உலகங்கள் முதலியன ஒளி மண்டலத்தில் உள்ளன.
ஏழு உலகங்களும், எல்லையில்லாத வானமும், உயிர்களும், உலகத்தில் உள்ள இயங்குபவை இயங்காதவையான எல்லாமும், அவற்றின் குண விசேடங்களும், பழைய வேதங்களும், படைத்தல், காத்தல் முதலிய தொழில்களும், அவை முறையாய் நிகழும் படி  காண்கின்ற சிவனும் என் இடம் அல்லாமல் இல்லை.
 
1872: அடியார்கள் பரந்த அறிவு உடையவர்கள்.
இறைவன், பெண், ஆண், பேடு என்ற பாகுபாடு இல்லாதவன்.  அண்ட கோசத்தால் மூடியிருக்கும் போது உள்ளே உள்ள அச்சோதியை எவராலும் அறிய இயலாது.  கண்ணான கருவி இல்லாமலேயே காணும், செவி இல்லாமல் கேட்கும், சோதிக்குள் சோதியாய் விளங்கும் அத்தகைய சிவத்தின் பெருமையை ஆராய்ந்து அறிந்ததே முதிர்ந்த ஞானம் ஆகும்.
 
1873: அடியார் எல்லாம் அறியும் ஆற்றல் உடையவர்.
இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தில் சிவனடியார்கள் அறியாமையின் வழிப் பட்டு மயங்காமல் அறிவு வயப்பட்டுச் செல்வர்.  அதனால் அவ்வடியார் வான் உலகத் தையும் ஆள்வர். அவ்வடியாரின் தோள்களும் எட்டுத் திசையாம்.   அவ்வடியாரின்  திருவடித் தாமரைகள் பாதாலத்தில் இருப்பவை. மயக்குந்தன்மை இல்லாத வெளி அண்டமே அவர் சிரமாகும்.
 
1874: அடியார் நுண்ணுடலையும் அழிக்க வல்லவர்.
மனத்தின் கண் விளங்கும் இறைவனை எண்ணி மனம் அடங்கப் பெற்ற அடியார் துன்பத்தினால்
வருந்த மாட்டார். ஆகவே அகங்காரம் அடங்கப்பெற்று, உள் புகுந்து, இறைவனை அறியும் உள்ளம் தன்முனைப்பு அற்றுப் புரியட்டகம் ஆன நுண்ணுடலை அழிக்கவும் அவரால் இயலும்.
 
1875: அடியார் உள்ளத்தைப் பண்படுத்துபவன் இறைவன்.
எனக்குச் செலவாகவும், வரவாகவும், காதலுக்குரிய துணையாகவும், அழிவாகவும் உள்ளவன் இறைவன்.  இத்தகைய இறைவனை யான் எண்ணிய போது பழியும் புகழும் அவற்றால் ஏற்படும் பயனும் ஆகிய அனைத்தையும் நீங்கிய என் உயிராகிய நிலத்தை அவன் பக்குவம் செய்தான்.
 
1876: சிவனுக்கு வழி வழி அடிமையர் அடியார்.
என் தாயுடன் என் தந்தை ஏழேழ் பிறப்பும் முன்னமே சிவனுக்கு அடிமை என்று எழுதிக் கொடுத்த அடிமை ஒலையை, தான் ஒருவனாய் நின்று உலகம் அனைத்தையும் படைத்த முதல்வன் எழுதினான். மேகம் போன்ற கரிய நிறம் உடைய திருமால் சாட்சிக் கையெழுத்திட்டான்.
 
1877: அனுபவம் உடையவர் இடையில் அதனைக் கைவிட மாட்டார்.
ஐயம் கொள்ளாமல் தன்னையே தம் முதல்வன் என்று வழிபட்டவர் நெஞ்சில் இறைவன் பொருந்தித் தங்குவான்.  தன்னை வணங்குபவர் மனத்தில் பொருந்திய விருப்பத்தை நிறைவேற்றி வைப்பான்.  தன்னை அணியாகக் கொண்டவர் மனத்தில் வீற்றிருக்கும் அந்த முதல்வனை நினைத்துக் கொண்டே இருப்பவர் கைவிட முடியுமோ?
 
1878: சிவன், அடியாரைப் பொன்னுலகை ஆளச் செய்வான்.
தேவரின் முடி மீது விளங்கும் ஒளிக்கதிரையுடைய சிவம் தனக்கு அடிமை செய்யத் தன் திருவடியை அடியார்க்குச் சூட்டியருளினான். பின்பு, ஊன், உடல் நீங்கிய உணர்வு கொண்டு ஒளி மண்டலத்தை ஆளுகின்ற அப்பெருமான் பயனை அடையச் செய்தான்.
 
1879: திருவடி உணர்வில் பொருந்துவது பெருந்தவம் ஆகும்.
இளம் பருவம் உடைய அடியவரை அவர்கள் மேற்கொண்டிருக்கும் கோலத்தைக் கொண்டு அன்னாரை இறைவன் அடிமை கொள்கிறான். அந்நிலையிலேயே அவர்க்கு ஒரு பேரின்பத்தை அருள்கின்றான்.  சிவக்கோலம் உடைய அடியார் ஒளிக் கதிரையுடைய சடைஒளி நீங்காதபடி கட்டிக் கொண்டிருப்பர்.  அவ்வடியார் திருவடி உணர்வில் பொருந்துவது பெரிய தவம் ஆகும்.
 
1880: சிவனடியாரை அணுகியவர் சிவத்தைப் பொருந்துவர்.
சிவன் அடியார்,  தம்மை நெருங்கி அன்பு செய்பவர்களைச் சிவனிடம் அணுகும்படி செய்யவும் வல்லமை உடையவர் ஆவர்.     சிவனடியாரை அணுகி அவனையே விரும்பும்  அடியாரிடத்தில்  சிவனடியாரின்  பெருமை  வந்து  அடங்கி  விளங்கும்.
 
1881: மக்கள் வழிபாட்டில் தேவர் வந்து கலந்து கொள்வர்.
முன்னே உள்ள பதினெட்டுக் கணத் தேவர்கள் எல்லாம் எல்லையில்லாத அன்பினால் இப் பெரிய பூமியில் வருவார்கள். அவரது வரவினால் பூமியினது எட்டுத் திக்கும் வானத்தைப் போன்று விளங்கப் பன்னிரண்டு காத எல்லை வரை உள்ளவர்க்கு நன்மை உண்டாகும்.
 
1882: சிவன் அடியார் உள்ள இடம் மேல் உலகமாகும்.
சிவன் அடியார் தங்கியிருக்கும் அப்பகுதி தீயவர் சேர்க்கையானது இல்லாது அறிவுடையவர் தோன்றக் காரணமாகும்.   புதிய யோகப் பயன்கள் கிட்டி மக்களிடம் நல்ல பண்புகள் விளங்கும். பிறவிக்குக் காரணமான மலத்தின் சேர்க்கை இல்லாமல் மேல் உலகும் கிட்டும்.
 
1883: சிவன் அறிவின் வடிவு என்று எண்ணி வழிபட வேண்டும்.
மேலான அறிவு வடிவான சிவன் பல உலகங்களைப் படைத்தான்.   அப்பெருமான் தான் படைத்த அவற்றைக் கடந்தும் உள்ளான்.   பல அண்டங்களில் வாழும்  தேவர்கள் அவனை அறிவார்.   சிவத்தின் மெய்யடியார் அவனை அறிவர்.
 
15. போசன விதி  (உணவு விதி)
 
1884: அடியார் உடலைப் போற்ற உணவை ஏற்பர்.
இந்த உலகத்தில் எட்டுத் திசையிலும் இறைவன் அடியவர்க்கு அளித்த உணவை அவர்கள் அமுதம் என்று ஏற்பர்.  ஏனெனின் உடலான ஒரு நிலத்தைப் பொருந்தி அதைப் போற்றுபவர் அவ்வாறு அதனைப் பாதுகாக்காமல் பாழாய்க் கிடக்க விரும்ப மாட்டார்.
 
1885: ஒரு போது உண்பர்.
அடியார், அச்சிவன் உடலுள் உயிர்க்கு உயிராய் விளங்கும் அருளை உணர்ந்தவர்.  உச்சிப் போதில் மனத்தில் அமர்ந்திருக்கும் தலைவனுக்கு பிச்சை ஏற்று உண்டு வேறுபாடில்லாத ஞானம் கைவரப் பெற்று ஆசையை விட்டுத் தனியே சகஸ்ரதளத்தில் இருப்பர்.
 
16. பிட்சா விதி  (பிச்சை எடுத்தலின் முறை)
 
1886: உடலைக் காப்பதற்காகப் பிச்சை எடுக்கக் கூடாது.
விந்துவான விதையைச் சேமிக்க உடம்பான பாத்திரம் உண்டு.  விதையை விதைப்பதற்குப் பாதுகாப்பான சகஸ்ரதளம் என்ற நிலம் உண்டு. ஆஞ்ஞை சக்கரமான உச்சிக்கு முன்பு தியானமான வடிவு அமைந்தது. அச்சம் இல்லாமல் மேல் முகமாய் விளங்கும் சகஸ்ரதளமான அந்த நிலத்தில் பொருந்தச் சமாதியான பயனை அடையமாட்டாதவர் விருப்பம்காரணமாய், வெளியே போய்ப் பிச்சை ஏற்றுத் திரிகிறார்களே! என்னே!
 
1887: வீரியத்தை ஒளியாய் மாற்றிடவே பலி ஏற்றான்.
சுவாதிட்டான சக்கரத்தில் உள்ள பிரம்மபடைப்பான வீரியத்தை இறைவன் ஏற்றான்.  காமஉணர்ச்சியால் கழியாமல் நன்மை பெற இவ்வாறு பலி கொண்டான்.  பிரமனின் தலையைக் கொண்டே காமக்கலையை மேலே எடுத்துக் கொண்டு போகப் பலி ஏற்றான்.  நான்முகன் பரமாகவே தான் இப்படிப் பலியைக் கொண்டான்.
 
1888: அடியவர் உய்தற் பொருட்டே இறைவன் இருக்கின்றான்.
நீக்கம் இல்லாமல் நிறைந்து ஏழு உலகையும் படைத்த இறைவனை உலகத்தார் யாசித்து உண்பவன் என இகழ்ந்து நகையாடுவர்.  அப்பெருமான் ஏன் இரக்கின்றான்?  அடியார்கள் உய்தற் பொருட்டே.    இடைவிடாமல் தன்னையே எண்ணிக் கொண்டிருக்கும்  அடியார்கள் வீரியத்தை ஏற்று ஒளியாய் மாற்றத் தன் திருவடியை அருளினான்.
 
1889: சிவன் தன் திருவடியை அடியார் அடைய உதவுவான்.
சிவபெருமான் தன்னை அடியவர் வந்து அடையும் நெறியில் நின்று உதவுவான். தன் நல்ல மெய்யடி யார்க்குத் தன்னை இன்பவடிவில் தர இருந்தான்.   அடியார்க்கு அடைக்கலமாக அடையும்படி இருந்தான்.  இங்ஙனம் அவன் தம் வரவை நோக்கியிருத்தலால் அவனை அறியாதவன் எனக்கூறலாமோ?
 
1890: சிவனடியார் உடல் இன்பத்தை விரும்ப மாட்டார்.
சிவனடியார் தீயை ஒத்த பசி, ஆசை, சினம் என்ற குற்றங்களில் தங்கார். உடல் இன்பத்தை அவர்கள் நாட மாட்டார்கள். இந்த உலகத்திலும் பொன்னுலகத்திலும் தங்க விரும்ப மாட்டார்கள்.  சிவத்தையே கூடிட விரும்புவார்கள்.
 
1891:எல்லாம் சிவன் செயல் எனச் சிவனடியார் விளங்குவர்.
உண்மையான ஆன்மஞானத்தைப் பெற்று அறிவில் தெளிந்தவர்களும் கொடுக்கும் வள்ளன்மை உடையவர் வாயிலுக்கே செல்வர்.  பிச்சைக்குச் செல்லாமல் ஈசன் செயல் என்று இருந்த தவம் உடையவர்  "உலகவர் எல்லாம் தம்மிடத்தே வருவதற்கு இருந்தவர் ஆவர்."
 
17. முத்திரை பேதம்.  (கருவி கரண அறிவை விட்டு மாற்றி முதல் நிலைக்குச் செல்வதற்குரிய வழி வகை.)
 
1892: சிவத்தை அடைதல் சிறந்தது!
பதினொரு கருவிகளும் சீவபோத வழியினின்று சிவபோத வழியில் மாறவே வந்த முத்திரை, அமுதாம் சுரக்கும் பிரணவத்தில் அழுந்தச் செய்யும்; யாவற்றுக்கும் மேலான சிவன் திருவடியை அடையச் செய்யும். ஆரவாரம் அடங்கி மேலான வீடு கிட்டச் செய்யும்.
 
1893:சாம்பவியும் கேசரி முத்திரைகள் ஞானம்விளங்கும் முத்திரைகளாம்.
கேசரி,  சாம்பவி என்பவை சிவத்தை அடையும் முத்திரைகள் ஆகும்.  சீவ துரியம், பர துரியம், சிவ துரியம் என்னும் மூன்று துரியங்களும் அடங்கும் இடமாகி, அருமையாய்ப் பேசும் நாவின் செயலை அடக்கிப் பொருந்திய சாம்பவியும் கேசரியும் உண்மை நெறியைப் பெருக்கி ஞானம் விளங்கும் முத்திரைகளாம்.
 
1894: கேசரி சாம்பவி முத்திரைகளின் பயன்.
சாம்பவி முத்திரை குருநாதனின் அருட்பார்வையை உண்டாக்குவதாம்.  அது ஒன்றன் பின் ஒன்றாய்த் தொடர்ந்து வரும் பிறவியை அகற்றி அருள் அமுதம் வழங்கும் முத்திரை.   பிரணவத் தியானத்துடன் பொருந்தியிருக்கும் கேசரி, சிவ யோகமாகிய நாம் பயிலக் கூடிய ஞான முத்திரை.
 
1895: பிரணவ யோகத்தின் இயல்பு.
ஓர் ஆதாரத்தில் விளங்குவது சதாசிவம். ஆதாரம் இல்லாமல் நிராதாரத்தில் அறிவு வடிவாய்த் திகழ்வது பரசிவம்.  ஆதலால் வடிவம் உடைய நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுவரன், உருவச் சதாசிவர் ஆகியவரின் நிலையைக் கடந்த மௌனநிலையே முடிவுடைய முத்தி நிலையாகும்.
 
1896:மௌனத்தின் இயல்பு.
வாய் பேசாமல் மட்டும் இருப்பது ஊமையாகும்.வாக்கு மனம் இரண்டும் தொழிற்படாது இருப்பது மோன நிலையாகும்.   வாக்கு மனம் ஆகியவை தொழிற்படாதவரே தூய்மையுடையவர் ஆவர். அங்ஙனம் ஆக்கும் அத்தூய்மையான நிலையை அறிபவர் யார்?
 
1897: கேசரி முத்திரையே யோகத்திற்கும் ஞானத்திற்கும் ஏற்றது.
யோகம் ஒருவருக்கு வந்து அடைந்ததற்கு அடையாளம் எண் பெருஞ்சித்திகளைப் பெறுதலாம். இறைவனுடன் ஒன்றுபடும் ஞான முத்திரைகளை ஆராயும் போது வேதத்தில் கேசரியும் சாம்பவியும் சிறப்பாய்ப் பேசப்படுவனவாகும். யோக நிலையில் எண்ணிப் பார்க்கில் கேசரியே யோக முத்திரையாகும்.
 
1898: கேசரி யோகத்தின் பயன்.
ஒரு யோகியானவன் எட்டுப் பெருஞ்சித்திகளையும் பெற்று அருள் ஒலி வாசனையில் இருப்பவன். அவனே அறம் பொருள் இன்பம் ஈடாகிய பொருள்களை அறிந்து அனுபவிப்பவன். அவனுக்கு சோதனையும் நல்ல சத்தியும் அமையும். அவனே ஏகமாகிய சிவத்தைக் கண்டு அதனுடன் பொருந்தி ஒன்றாய் நிற்பவன் ஆவான்.
 
1899: கலைகளைக் கடந்து சிவத்தை அடைய வேண்டும்.
யோக நெறியில் கூறப்படும் பன்னிரண்டு கலைப் பிரசாத நெறியே பதினாறு கலைப் பிரசாத நெறியாகும்.  இதனால் ஞானேந்திரியங்கள் கன்மேந்திரியங்கள் என்பவை காமம் முதலிய அறுபகை வழிச் செல்லாமல் அவற்றின் விருப்பத்தை விட்டு நிற்கும். இதுவே கேடில்லாத வேதாந்த சித்தாந்த இயல்பாகும்.  இறைவனைத் துணையாக மனத்துடன் சிந்தித்தல் நல்ல சுத்த சைவம் ஆகும்.
 
1900: முத்திரைகளின் பயன்.
முத்தர்க்கு உரிய அடையாளம் மோன முத்திரையாகும்.  குருவாய் விளங்குபவர்க்குரிய அடையாளம் ஞான முத்திரையாகும். சித்தம் இனிக்கும் குண்டலினி யோகம் சித்தாந்த நெறியின் அடையாளமாகும். காற்று நிற்பதற்குரிய சமயம் கண்ட முத்திரையாகும்.
 
1901: மூலவாயு சகஸ்ரதளத்தை அடையும் நெறியறிந்து உய்ய வேண்டும்.
தூய்மையான  நெறியான  கண்டத்தை  இடமாகக் கொண்டு உயிர் வளி உச்சிக்குப் போகும்.  அது சகஸ்ரதள நெறியைக் கண்டு பொன் போன்ற இதழ்களின் நடுவில் பொருந்தி நின்றது.     அதன் மேல் வெண்மையான மதிமண்டலம் விளங்கியது. உயிர்வளி  போகும் நெறியைக்  கண்டு உள்ளம்  தூயன் ஆகலாம்.
 
8.  பூரணக் குகை நெறிச் சமாதி  (முடிவின் பின் எய்தும் பயன்)
 
1902: யோகியின் உயிர் பிரிந்த பின்பு செல்லும் இடம்.
சிவயோகி வினைப் போகத்துக்காகத் தாங்கிய இவ்வுடலை விட்டானாயின் அவனது ஆன்மா சோடச கலையாகிய வளர்பிறையாகில் தேவர்களோடு தங்கி, ஒளியில் நின்று பழகினவனாயின் சூரிய மண்டலத்தில் சில நாள் தங்கி தளர்ச்சியில்லாத பிதிர் உலகில் சில நாள் தங்கி சந்திரமண்டலத்தை அடையும்.
 
1903: சமாதி கைகூடாப் பெறாமல் உயிர் விட்டவர் மீண்டும் பிறந்து யோகம் பயின்று முத்தி அடைவர்.
யாவும் ஒத்துச் சமாதி கூடாது உடலை விட்டவர் செல்ல வேண்டிய இடத்துக்குச் சென்று அங்குள்ள நியதி முடிந்த பிறகு பூமியில் பிறந்து பிராரத்துவ வினைகளை அனுபவித்து மாயோகமான சாம்பவியும் கேசரியும் பயின்று திருவருள் கொண்டு முத்தி அடைவர்.
 
1904: சித்தி பெற்று மதிக்கத் தக்க உடலைப் பெறுவர்.
சிவயோகி மக்கள் அறியத்தக்க நற்பண்புகளுடன் வாழ்ந்து எல்லாற்றுக்கும் மேலான சிவயோகத்தில் தலைப்படும் போது ஆகின்ற அந்த ஒளியில் ஒளியுருப்பெறுமுன் காயசித்தி பெற்று மதிக்கத் தக்க உடலை பெறுவர்.
 
1905: சிவஞானம் பெற்றவர் தேவராலும் போற்றப் பெறுவர்.
சிவயோகியாகிய ஞானியர் யோகம் பூர்த்தியாகாமல் உயிர் நீங்கி உடலைவிட்டால் தவலோகத்தை அடைந்து பின்னர்ப் பிறந்து சிவயோக வாயிலாக சிவஞானம் பொருந்தி நிலை பெற்று அவர் விளங்குவர்.  அவர்கள் ஒளி உலகத்தாரால் போற்றப் பெறும் புண்ணியர் ஆவர்.
 
1906: மோனச் சமாதியில் இருந்து வீடு அடைவர்.
குறைவில்லாத சிவஞானியாகிய நல்ல யோகி தமது உடலை விட்டுப் பிரிவாராயின் தான் என்ற நினைவற்று மோன நிலையில் தங்கியிருந்து சிவமாந்தன்மை எய்துவர்.  அவர் பிரிவதொரு உடலில் புகாது நின்மல முத்தராய் விளங்கி உலக வாசனையோடு மீண்டும் பிறவிக்கு வரமாட்டார். சிவயோகம் நிறைவு பெற்ற ஞானி மோனச் சமாதியில் தங்கி வீடுபேறு அடைவர்.
 
1907: மும்மலத்தை அழித்தவர்.
இறந்தார் அடையும் பயன் எது என்றால் இறந்த பின் நீங்கள் அடைவது "சித்தி"யாகும்.  அது கூடுமாயின் இறந்தவர் உலகில் இருந்தவரேயாவார். அச்சித்தர் தாமே மும்மலங்களையும் அழித்தவராவர்.
 
1908: குரு மாணவனுக்கு அருள்வது.
பிரணவ யோகத்திலிருந்து பிரணவத்துக்குரிய சர்வ வல்லமையுள்ள சிவத்தின்  அருளைப் பலகாலும் சிந்திக்க, பரசிவமே அச்சிவஞானிக்குச் சத்தியின் கூட்டத்தை அருளுவான்.  அங்ஙனம் பெற்ற அருளை எத்தகைய பக்குவமுள்ள சீடர்க்கும் வேண்டி அளிக்கும் ஞானி தன் விருப்பத்துக்கேற்பச் சீடனை ஈசன் உருவாக அமைத்தருளுவான்.
 
1909: ஈசன் உருப் பெற்ற ஞானி எங்குமாய் எல்லாவற்றையும் அறிவார்.
ஒளியைப் பற்றியுள்ள சிவ ஞானிக்கு எங்கும் சிவமே தோன்றும்.  எங்குமாயுள்ள சிவத்தில்
பொருந்திய போது எங்கும் உள்ள பொருளை அறிய முடிகிறது. ஈசன் உருப் பெற்ற ஞானி எங்குமாய் எல்லாவற்றையும் அறிவார்.
 
19. சமாதிக் கிரியை.  ஞானி உடலை விட்ட பின் செய்ய வேண்டிய சடங்கு.
 
1910: ஞானியின் உடல் கெடின் வரும் கேடுகள்.
அழிவில்லாத சிவஞானியின் உடல் தீயில் வெந்து கெடுமானால் நாட்டு மக்கள் எல்லாம் சுர நோயினால் பீடிக்கப்பட்டு வருந்துவர்.  கவனிப்பாரின்றி அழுகி நாய், நரி  உண்ணூமாயின் நுட்பமான உட்பகை மூண்டு நாட்டில் உள்ளோர் அழிந்து நாய் நரிக்கு உணவாவர்.  எனவே ஞானியின் உடல் சமாதி செய்யப்பட வேண்டியது அவசியம்.
 
1911: ஞானியின் உடலைக் கொழுத்துவதால் உண்டாகும் தீங்கு.
எண்ணமிலா ஞானியின் உடல் தீப்பட்டு வெந்தால் சிவனுறையும் சிவாலயத்தை தீக்கொளுத்தியதை ஒக்கும்.  பூமியில் மழை பொழியாது உலகத்தில் பஞ்சம் உண்டாகும்.  எண்ணுவதற்கு அருமையான அரசர் தன் பதவியை இழப்பர்.  ஞானியின் உடலை எரித்தால் பெருந்தீங்கு வரும்.
 
1912: சிவஞானியின் உடலைப் புதைக்க வேண்டும்.
சிவ ஞானியின் உடலைப் புதைப்பது புண்ணியமாகும்.    அவ்வுடம்பை நெருப்பை வைத்துச்சுட்டு எரித்தால் நாட்டில் அழிவு உண்டாகும். அவ்வுடம்பை புதைக்காமல் மண்ணிலேயே கிடந்து அழியின் உலகில் அழகு கெடும். உலகு அனைத்தும் தீப்பிடித்துக் கெடும்.
 
1913: மன்னரும் மக்களும் நன்மை அடைவர்.
அழிவில்லாத சிவஞானி அருள்பெற்று உடம்பை விட்டால் அவ்வுடம்பைக் குகை ஒன்று கட்டி அதில் அமைப்பின் - அரசரும் பழங்குடி மக்களும் எல்லையில்லா இன்பத்தை விளைக்கின்ற இறைவன் அருளைப் பெறுவர். மண்ணைத் தோண்டி குழி அமைத்து ஞானியின் உடலை அதில் வைக்க வேண்டும்.
 
1914: சமாதிக் குகையின் அளவு.
ஒன்பது சாணுக்குக் குறையாது குழி தோண்டி ஆழம் செய்து, தோண்டிய மண்ணைக் குழியைச் சூழ
ஐந்து சாணுக்கப்பால் வளைத்துக் கொட்டி தவம் மிக்க குகையை முக்கோண வடிவாகப் பக்கம் ஒன்றுக்கு மூன்று சாண் நீளமுள்ளதாய்ச் செய்து பிறவி நீக்கும் நல்ல குகையில் சிவஞானியின் உடலைப் பதுமாசனமாக இருத்துக.
 
1915: குகை அமைப்பதற்குரிய இடங்கள்.
சமாதி செய்விப்போன் வீட்டின் பக்கம், நடைச்சாலையின் பக்கம், குளக்கரை, ஆற்றின் படுகை, பூந்தோட்டம், நகரிலே நல்ல பூமி, நினைத்தற்கு அருமையான காடு, உயர்ந்த மலைச் சாரல் ஆகிய இவ்விடங்களே குகை செய்வதற்குரிய இடங்களாகும்.
 
1916: சமாதிக்குரிய மற்றொரு வகை.
நல்ல குகை நாற்புறமும் காலடியால் ஐந்தடி அகலமும் நிற்கின்ற உயரம் ஒன்பது அடி நேராக அமைய குறுக்களவு மூன்றுக்கு மூன்றாக அணுக்கமாக உள்ளோர் செய்யும் முறையாம்.  சமாதிக் குகாஇக்கு மற்றொரு அளவு.
 
1917: குகையில் இட வேண்டியவை.
ஐவகை உலோகங்களையும் ஒன்பது வகை மணிகளையும் குகையினில் பரப்பி மிகுதியாகப் போட்டு அதன் மேல் ஆசனத்தை அமைத்து தருப்பையைப் பரப்பித் திருவெண்ணீற்றை நிறைய போட்டு அதன் மேல் பொற்சுண்ணப் பொடியைப் போடுதலுமாகும்.  குகையில் இட வேண்டிய பொருள்கள் விவரம்.
 
1918: நறுமணப் பொருள்களுடன் தூபம் காட்ட வேண்டும்.
குகையின்  நடுவில்  நான்கு  சதுரமாகச்  செய்து   அதன்  மேல்  தேன் ஒழுகும் மலர், சந்தனம், சாந்து, கஸ்தூரி, புனுகு, பன்னீர் ஆகியவற்றைச் சேர்த்துத் தெளித்து ஒளி பொருந்திய தீபத்தை அக்குகையில் காட்டுங்கள்.  குகையில் பொருள்களை எல்லாம் போட்ட பின் வாசனைத் திரவியங்களை தெளித்துத் தூபத்தைக் காட்ட வேண்டும்.
 
1919: உடலில் வெண்ணீற்றைப் பூசி
மலர் முதலியவற்றை அணிவித்துச் சமாதியில் வைக்க.
திருவெண்ணீற்றுப் பூச்சாகிய சட்டையை மேலே இட்டு ஞானியின் உடலை ஆசனத்தின் மேல் அமர்த்தி மலர், அறுகம்புல், வாசனைப் பொடி, திருவெண்ணீறு ஆகியவை அணிவித்து குகையின் மீது வைத்து நாற்புறமும் மண்ணை விரித்து சமன் செய்வீராக. ஞானியின் உடலை திருவெண்ணீற்றுக் கவசமிட்டு மலர் முதலியவை அணிவித்துக் குகைக்குள் வைக்க வேண்டும்.
 
1920: குகையின் மீது குருவைப் போல் அணி செய்க.
மேலே கூறப்பட்டது போல வெண்ணீறு முதலியவை விரித்த பின்பு நான்கு பக்கங்களி லும் நன்றாக பரப்பி பொரிக்கறி உணவு இளநீருடன்குருவின் திருவடியையும் வைத்து காதணி, முகம், கண் இவற்றைச் சாத்தியபின் மேலே அங்கவஸ்திரம் சாத்திவீராக.  குகையின் மேல் குருவைப் போல் அலங்காரம் செய்து நிவேதனம் படைக்க வேண்டும்.
 
1921: உபசாரம் செய்ய வேண்டும்.
திருவெண்ணீற்றையும் வாசனைப் பொடியையும் மேலே சொரியும் தருப்பைப்புல் மலர் கொண்டு பாத்தியம், ஆசமனம், அர்க்கியம் கொடுத்து நிலத்தின் மேல் மூன்று அடி மேடை செய்யுங்கள்.   (ஞானியர் வீட்டுக்கு வந்தால் பாத்தியம், ஆசமனம், அர்க்கியம் கொடுத்தல் மரபு.) அலங்காரம் செய்த பின் உபசாரம் செய்ய வேண்டும்.
 
1922: ஞானியின் மீது சிவலிங்கம் அல்லது அரசங்கன்று அமைத்து வழிபட வேண்டும்.
மேடை மீதினில் அரசங்கன்று அல்லது சிவலிங்கம் ஆகிய இவற்றுள் ஒன்றைத் தாபித்து சமாதியின் மேன்மையான சன்னதி வடக்கு நோக்கியேனும் கிழக்கு நோக்கியேனும் அமைய அன்போடு பதினாறு வகை உபசாரம் செய்க.
 
20. விந்துற்பனம்.  விந்துவின் தோற்றம்.
(அண்டத்துக்குக் காரணமான விந்துவும் பிண்டத்துக்குக் காரணமான விந்துவும்)
 
1923: நிவிருத்தி கலை முதலியன தோன்றுதல்.
சிருட்டிக் காலத்தில் விந்துவில் உயர்தலைச் செய்யும் குண்டலியும் சிருட்டிக்குக் காரணமான பரமாகாய மண்டலத்தில் விந்து காரியமான ஒன்பது பேதமாகிய பிரமன் முதலியோரும் அவர்களது சத்திகளும் இவற்றின் இயக்கத்தில் அந்தக்கரணங்களும், நிவிருத்தியாதி பஞ்சகலைகளும், வைகரியாதி வாக்குகளும் தோன்றின. ஒளி மண்டலத்தில் குண்டலினி உயர்தலைச் செய்யும். சிருட்டிக் காலத்தில் விந்துவினின்று எல்லாத் தத்துவங்களும் தோன்றின.
 
1924: விந்துவினின்று பிரிந்த தத்துவங்களின் இயக்கம்.
விந்துவின் காரியத்தால் பிரமன், விஷ்ணு, உருத்திரர், மகேசுவரர், சதாசிவராகிய ஐவரும் ஐந்து கொத்தாக உடலிற் பொருந்தித் தொழிற்படுவர்.  நாத பேத காரணத்தால் அது ஆறு வகையாகப் பிரியும்.  இவ்விதம் அமைவதால் உருவ மூர்த்திகளான பிரமன், விஷ்ணு, உருத்திரர், மகேசுவரர் ஆகிய நால்வர்பால் மற்ற தத்துவங்கள் பொருந்தும்.  இவ்விதமாக முப்பத்தாறு தத்துவங்களும் பொருந்தும்.
 
1925: பர விந்துவில் இடம் பெறுபவை.
தோன்றும் வேறுபாடுகள் அனைத்தும் பரவிந்துவால் அமையும்.  தோற்றத்தினைத் தரும் சுத்த மாயையும் வாக்கு சத்தியும் தற்பரையும் உய்ரச் செலுத்துகின்ற பிரணவத்தில் களிப்பினை உண்டாக்கும் குண்டலினியும் விந்து சத்தியினிடமாக இந்நான்கும் பொருந்தி விளங்கும். பரவிந்து என்பது ஒப்பற்ற ஆற்றலுள்ள ஒளி மண்டலம். பரவிந்துவில் தற்பரை, சுத்தமாயை, நால்வகை வாக்குகள், பிரணவத்தில் விளங்கும் குண்டலினி ஆகிய நான்கும் இடம் பெறும்.
 
1926: மனம் அந்தம் அடையும்.
விளங்குகின்ற நிவிருத்தியாதி கலை அகராதி கலையில் பொருந்தும். வளமை மிக்க உகாரம் மகாரத்துள் அடங்கும்.  விந்து குற்றமில்லாத நாத முடிவை எய்தி அந்தக் கரணமாகிய மனம் முதலியவற்றுள் அந்தம் அடையும்.
 
1927: பராபரன் மாயையினின்று பிரபஞ்சத்தைத் தோற்றுவிக்கும் விதையாவான்.
இறுதியும் முதலுமாகிய பராபரன் எல்லாவற்றையும் தன்னகத்தே கொண்டு வியாபித் துள்ள அந்நெறியில்,  கிழங்கு போன்ற முதற் காரணமாகிய மாயையில் இருந்து பிரபஞ்சமாகிய காரியத்தைத் தந்து அவனே ஐந்தொழில்களையும் செய்கின்ற வித்து ஆகிறான். பராபரன் என்ற சிவமே ஆதி.   அந்த சிவத்தினிடம் இருந்து சத்தி பிரிந்து பரை, மகாமாயை, சுத்தமாயை, மிசிரமாயை, பிரகிருதி மாயை என விரிந்து  படைப்புத் தொடங்கும்.
பிரகிருதி மாயை மிசிரமாயையில் ஒடுங்கும். மிசிரமாயை சுத்தமாயையில் ஒடுங்கும். சுத்தமாயை மகாமாயையில் ஒடுங்கும். மகாமாயை பரையில் ஒடுங்கும். பரை சிவத்தில் ஒடுங்கும். பரையில் இருந்து பிரகிருதி மாயை வரை அனைத்தும் சிவத்தினிடம் இருந்து தோன்றி சிவத்தினிடமே ஒடுங்குவதால் சிவமே ஆதியும் அந்தமுமாகிறது.
 
1928: விந்து உள்ளும் புறமுமாம்.
வித்தாகிய விந்துவின் ஆற்றலால் ஆகின்ற அண்டமும் அகண்டமும் விளங்க ஆகாய முதலிய ஐம்பூதங்களும் காரிய மாயையில் தோன்றிட விந்து அவற்றின் உள்ளும் புறம்புமாய் விளங்கும்.  அண்டம் எல்லையுடையது.  அகண்டம் எல்லையற்றது.  இவ்விரு நிலைகளிலும்விந்து மண்டலம் உள்ளது. விந்து காரிய மாயையிலும், காரண மாயையிலும் உள்ளதால் அது உள்ளும் புறமுமாகவுள்ளது.
 
1929: விந்து நாதப் புணர்ச்சியின் பயன்.
அகத்தும் புறத்தும் விளங்கும் விந்துவின் நிறம் வெண்மையாகும்.  நாதத்தின் நிறம் செம்மையாகும். அவை பொருந்தினால் சிவசத்தி பதிதலாகும். இச்செயலால் ஆயுள், திறமை, வீடு அமையும். ஆயுள், திறன், வீடு அமைவது என்பது உடலில் உள்ள விந்து நிலை மாற்றத்தால் வெளியேயுள்ள அண்டத்தில் ஒளிநிலை மாற்றமடைந்து ஆயுள் முதலிய பலன்கள் அமையும்.
 
1930: விந்துவே சிவமாக விளங்கும் மாமாயை.
உடலுக்கு வெளியேயுள்ள ஒளி நிலையே குற்றமில்லா ஆடையும் குடமும் உருக் கொண்டு  நிற்றல் போல் நிலை பெற்ற பஞ்ச கலைகளாகிய காரணத்தினின்று காரியமாகிய பிரபஞ்சம் அனைத்துமாய் விரிந்து மாமாயையாகும். விந்துவே மேலான சிவமாக அண்டத்தில் விளங்கும் மாமாயையாகும்.
 
1931: விந்து கெடாது காத்தவர்க்குச் சிவன் காட்சி தருவான்.
அகண்டத்தில் வித்தாக விளங்கித் தோன்றும் சிவமே பிண்டத்தில் விந்துவாக உள்ள முறைமையை மக்கள் உணரார். இன்பம் பொருந்திய சுவாதிட்டான மலரில் அன்னரூபமாக (ஹம்ச) உள்ளவனே பரமாகாயத்தில் விளங்கும் புண்ணியனாகிய சிவமாகும்.
 
1932: விந்துவும் சிவமும் ஒன்றே.
வித்தின்றி  வேறிடத்தில் முளையில்லை.  அதனால் அம்முளை வித்திலிருந்து அல்லாமல் வேறிடத்தில் இருந்து தோன்றுவதில்லை. வித்தும் முளையும் ஒன்றோடு ஒன்று பிரிவது இல்லை.  ஆதலால் இரண்டையும் ஒரே பொருளாகக் கருத வேண்டும். வித்தும் முளையும் போல விந்துவும் சிவமும் ஆகும். படைப்புக் காலத்தில் ஒளியில் இருந்து உடல் அமைந்து வீரியம் அமைகிறது.  அதைப் போல் லயக்கிரமத்தில் வீரியமாற்றம் அமைந்து ஒளி உண்டாகிறது.  அதனால் வீரியம் வித்தாகவும் ஒளி அதன் முளையாகவும் உள்ளன. முளைக்குக் காரணம் வித்தானாலும் முளை நீண்ட பின் வித்தில் யாதும் இல்லை. அது போல ஒளி மணடலம் அமைந்த பிறகு வீரியத்தின் உருவம் இல்லாது போகும். இம்முறையில் சிவயோகம் (அரனெறி) உள்ளது.
 
1933: உணவால் உடலும் மனமும் அமையும்.
உண்ட உணவுகள் பொருந்தும் உடல், உயிர் பொருந்துவதற்குரிய உடல், மனம், கழியும் மலம் என்று மூன்று பகுதியாகும்.  திருந்தும் உடலும் மனமும் ஆகிய இருபகுதியும் சேர்ந்து முன்னாள் உண்ட உணவின் சாரத்தால் அமைந்து இருந்தன. உண்ணும் உணவில் உள்ள சத்தே உடலையும் உள்ளத்தையும் வளமாக்குகிறது.  உணவின் தன்மைக்கேற்பவே உடலும் ஊள்ளமும் அமைகிறது. சத்துவ உணவு நல்ல உடலுறுதியும் மன அமைதியும் தந்து யோகம் பயில உதவும்.  உணவின் சாரத்தால் உடலும் மனமும் அமையும்.
 
1934: விந்துவின் வளர்ச்சி..
உணவு 1. இரசம். 2.ரத்தம். 3.எலும்பு. 4.தோல். 5.இறைச்சி. 6. மூளை. 7. சுக்கிலம் என
ஏழு வகை தாதுக்களாகிறது.   ஏழு வகை தாதுக்களில் உணவு இரசம், இரத்தம், சுக்கிலம் ஆகிய மூன்றினால் உரிய நாளில் இரசம், ரத்தமாகி, ரத்தம் சுக்கிலமாக மாறி ஒரு புல்லின் நுனியில் ஒட்டிய பனிபோல் அருமையான துளி விந்து அமையும்.  இவ்வாறாகிய விந்து இருபத்தோரு நாட்கள் உடம்பில் வளரும்.
 
1935: விந்து வெற்றியும் விந்து நீக்கமும்.
விந்துவானது உடம்பில் மூன்று நாட்கள் கலந்திருந்து உடம்புள் மன மண்டலமாகிய ஒளி மண்டலமாகும்.  திருவடியின் கண் பொருந்தி நின்றவர்க்கு ஒளி மண்டலம் நீங்காது நிலையாக அமையும்.    அங்ஙனமின்றி மாயா காரியமாகிய புவன போகத்தில் ஈடுபடு வோர்க்கு மனத்துடன் ஒளி மண்டலமும் அழியும்.    நேயத்தை நாடிச் செல்லுபவர்க்கு விந்து செயமும் மாயத்தை நாடிச்  செல்வோர்க்கு விந்து  நீக்கமும் உண்டாகும்.
 
1936: விந்து அழிவு தீயது.
அழிகின்ற விந்துவின் அளவை அறியமாட்டார்.  இறந்து அழிகின்ற தன்னை உள்ளே காத்துக் கொள்ளு தலையும் தெளியமாட்டார். அழிகிற உடலில் அழிந்து சோர்வுற்றோர் அழிகின்ற தன்மையை அறிந்தும் விந்து நீக்கத்தினின்றும் ஒழியார்.  பன்மடங்கு ரத்தமே மாறி ஒரு துளி விந்துவாகிறது.  எனவே விந்து நீக்கம் இன்பம் தருவது போல் தோன்றினாலும் அது அழிவையே தருகிறது.
 
 
21. விந்து ஜயம். -  போக சரவோட்டம்.
விந்து ஜயம் என்பது விழ்துவைக் காத்தலால் உண்டாகும் செயம். 
போக சரவோட்டம் என்பது போக காலத்தில் அமையும் பிராண இயக்கம்.
 
1937: யோகி ஆவதற்குரிய மூன்று சாதங்கள்.
நம்மை விரும்பிப் பார்க்கும் பெண்களை கண்ணின் வழியாகச் சென்று பார்க்கும் விருப்பம் பாழாக, நாம் பாராமல் அகன்று சென்று ஆராய்கின்ற மனம் உருக மூலக் கனலை எழுப்பி மூலமாகிய புருவ நடுவில் கண்ணைச் சேர்க்கின்ற யோகியே சிவயோகியாம்.
யோகியாவதற்குரிய சாதனங்கள்:1.மாதரைப் பாராதிருத்தல் 2.மனம் உருக மூலக்கனலை எழுப்புதல் 3. ஊர்த்துவ திருஷ்டியால் புருவ நடுவை நோக்கியிருத்தல். இவையே காமத்தை வெல்லும் சாதனங்களாகும்.
 
1938: காமத்தால் வரும் தீமைகள்.
காமமிகுதியில் பொருந்தினால் திருவருளால் வரத்தக்க சிவயோகம் பொருந்தாது. அக் காமம் முதலியவற்றுள் பொருந்துவோனும் மனவலி இழந்து அஞ்சுவான். இனி உடம்பும் தன்னியல்பு கெடும். உடலில் உள்ள தாதுக்கள் உயிரினைப் பாதுகாக்காது அழியும்.  காமாதி செயலில் ஈடுபடுவோன் அழிவான்.
 
1939: மங்கையருடன் கூடுவதற்குரிய காலம்.
மாத விலக்கான நாளிலிருந்து பதினான்கு நாள்கள் வளர்பிறை. பதினைந்தாவது நாளிலிருந்து இருபத்தெட்டாவது நாள் வரை தேய் பிறை.  இரு மாத விலக்குக்கு இடையே உள்ள நாள்கள் இருபத்தெட்டு.
மாத விலக்கான நாளிலிருந்து எட்டு நாள்கள் கூடுவதற்குரிய நாள்கள் அல்ல. 
மாதர் வசப்பட்டுச் சென்று இவர் வளர்பக்கத்தில் பொருந்தாத முதல் எட்டு நாட்கள் கூடிய இன்பமானது துன்பமாம்.  
வளர்பிறையில் பின் ஆறு நாள்களும் சிறுமையில்லா தேய்பிறையில் முன் ஆறு நாள்களும் கூடுவதற்கு ஆகுமாம்.  
மாத விலக்கான நாளிலிருந்து ஒன்பதாவது நாள் முதல் இருபதாவது நாள் வரை கூடுவதற்கு உகந்த நாள்கள்.   ஒன்பதாவது நாளில் இருந்து இருபதாவது நாள் வரை பெண்ணின் உடலில் கரு உண்டாகி குழந்தை உண்டாக தகுந்த சமயம்.  அந்த நாளில் உறவு வைத்தால் குழந்தை உண்டாகும். 
மாத விலக்கான நாளிலிருந்து முதல் எட்டு நாள்களும், மாத விலக்கான நாளிலிருந்து இருபத்து ஒன்றாவது நாள் முதல் இருபத்தெட்டாவது  நாள் வரையும் கூடுவதற்குரிய நாள்கள் அல்ல.  அந்த காலங்களில் உறவு கொள்வதால் குழந்தை உருவாகாது.
 
1940: யோகியர் மங்கையருடன் கூடுவதற்குரிய காலம்.
யோக நெறி நிற்போர் வளர்பிறைப் பக்கத்தில் முன் ஆறு நாள்களும் தேய்பிறைப் பக்கத்தில் பின் ஐந்து நாள்களும் ஆகப் பதினொரு நாள்களையும் நீக்கி இடைப்பட்ட ஏனைய நாள்களில் கூடலாம்.  பூப்பு நாளில் இருந்து முதல் ஆறு நாள்கள் நிரை என்ற சத்தற்ற நிலை. இறுதியில் உள்ள ஐந்து நாள்களும் திரை என்ற சோர்வுற்ற நிலை. இவை நீக்கிய காலமே யோகியர் கூடுவதற்குரிய காலம்.
 
1941: பின்னிரவில் மங்கையரைக் கூட வேண்டும்.
பொருந்தும் அளவில் பொழுது புலர்வதற்கு முன்னுள்ள நான்கு முகூர்த்தமே விந்துவைப் பதிப்பதற்குரிய காலமாகும். சந்திரகலை சூரியகலையில் அடங்கிய பொழுது கலந்து காமநூலில் கூறியவாறு செய்க. விந்துவைப் பதிப்பதாயின் வலமாகவும் இடமாகவும் இல்லாமல்  சுழுமுனையில் பொருந்தி விடுக. முன்னிரவில் போகம் செய்வோர் வீரியம் இழப்பர். பின்னிரவில்  போகம் செய்வோர் உணர்வால் எய்தும் பயனை அடைவர். பின்னிரவில் சூரியகலையில் ஓடும் போது போகம் செய்ய வேண்டும்.
 
1942:ஆசையை விட்டு காதல் மாதரைக் கூட வேண்டும்.
மிக்க காதலையுடைய பெண்களின் பால் ஆசையை விட்டு மூலவாயுவையும் அந்தக் கரணத்தையும் அகமுகமாக்கி இறை நோக்கில் எழுச்சியுற்ற இந்திரியங்களைப் போல சலனமின்றி இருந்து பொறி புலன் ஒருமைப்பட்டு நிற்க விந்துவினை விடுக.
காம சிந்தயை ஒதுக்கி கருத்தை அகமுகமாக்கி காதல் மாதரிடம் கூட வேண்டும்.
 
1943: விந்துவை விடும் முறை.
புணரும்போது மனம் முதலிய அந்தக்கரணம் மாதரது நலம், நல்ல குணம், நல்இளமை, அழகான வடிவம், பகர்கின்ற பவளம் போன்ற வாய், மிண்டுகின்ற தனம் இவற்றுடன் பதியாது மனமானது அகமார்க்கத்தில் செல்லக் கண்டு விந்துவினை விடுவாயாக.  போக காலத்தில் புற அழகைக் கருதாது இறைவனை எண்ணி விந்துவினை விட வேண்டும்.
 
1944: போக காலத்தைக் கருதி இன்ப துன்பத்தை அறியலாம்.
விந்துவைக் கருப்பையில் விட்ட பிறகு கர்ப்ப உற்பத்தி விதியின்படி தீண்டிய காலம் முதலியவற்றை விளக்கமாக ஆராய்ந்து உடம்போடு பொருந்திய சிசுவின் வாழ்நாள் சாகும் நாளைப் பற்றியும் குணம் இழிவைப் பற்றியும் அமைக்கப்பட்ட மேன்மையான நெறியைப் பற்றியும் இது இது என்று எண்ணிப் பார்த்து அறிக. போக காலத்தை ஆராய்ந்து சிசுவின் இன்ப துன்ப அமைப்பை அறியலாம்.
 
1945: கர்ப்ப உர்பத்தி நியதியை எண்ணிப் பார்க்க இயலும்.
முற்கூறிய வண்ணம் பார்த்து, உலகத் தொடர்பின்றிக் கருப்பையில் உருப்பெற்று கச்சினை வருத்தும் தனங்களையுடைய பெண்ணினின்றும் நீக்கியே உலகில் சேர்க்கப் பெற்று அச்சிசு இரண்டு மாதங்கள் கூட வாழாமல் நீங்கினும் மூப்பு அடைந்து பின்னாளில் நீங்கினும் எல்லாம் கர்ப்ப உற்பத்தி நியதியை எண்ணிப் பார்ப்பதற்கு ஆகும்.
 
1946: விந்துவின் பயனை அறிந்து செயல்படுவோர்க்குச் சிவம் வெளிப்படும்.
வித்தினை விதைப்பவர்க்கல்லாது விதையாதவர்க்குப் பயனில்லை. வித்தின் பயன் அறிந்து ஒளி செய்வார்க்கு அல்லாது அறிவும் இல்லை.  விந்துவே ஒளியாக மாறுகிறது என்று சலனமின்றி உணர்வாராயின் தயிரில் இருந்த வெண்ணெய் போல உயிரில் இருந்த சிவம் தானே வெளிப்படும்.  விந்துவின் பயனைச் சலனமின்றி உணர்வார்க்கு சிவம் தானே வெளிப்படும்.
 
1947: கரு பதியும் போதே பின் விளைவுகள் யாவும் அமைந்து விடுகின்றன.
ஈசன் கருவில் பதியும் உயிரோடு பிரமலிபி, ஆயுள் முதலிய யாவும் கருத்தில் அமைத்துக் தானும் உள்ளான். உயிர் பல பிறவிகளில் எண்ணிய எண்ணங்கள் யாவும் மன மண்டலத்தில் அமையைப் 
பெற்ற காரணத்திலிருந்து  பருமையான  போக  போக்கியங்கள் அமைந்து விடுகின்றன. இந்த நிகழ்வை உணர்ந்து கொள்ளாமல் வெளியில் நிகழ்கின்ற  சூழ்நிலைக்கு ஏற்பக் காரண காரியங்கள் அமைகின்றன என்பது கற்பனையாகும்.
1948:விந்து வெற்றியால் உண்டாகும் பயன்.
என்றும் நீங்காத உள்ளத்தின் ஒளி மண்டலம் உடலுடன் கூடி நிற்க,  நிற்கின்ற அழியா உயிரும், அளவற்ற ஆற்றலும், குறைவற்ற புத்தி விலாசமும், தவமும், செபமும், பிரணவ சித்தியும், அழியாத எண்வகைச் சித்திகளும் தூல விந்து வற்றினால் அடையத்தக்கனவாம்.  விதை முளை ஆகும். அதுபோல தூல விந்து ஒளி ஆகும். ஒருவன் பன்னிரண்டுஆண்டு சாதனை செய்தால் ஒளி மண்டலம் உண்டாகும். அப்போது கீழ் உள்ள வீரியம் உலர்ந்து மேல் உள்ள ஒளி மண்டலம் விளங்கும்.
 
1949: சிவயோகியின் செயல்.
தூல விந்து வற்றிப் போகும்படி மூலாதாரத்தில் உள்ள குண்டலினியாகிய நெருப்பைப் பெருக்கி விந்து கீழ் நோக்காதவாறு தடுத்து மேலே ஏற்றுவதால் அமையும் பிரமரந்திர ஞானாக்கினியில் பொருந்தி அங்குள்ள ஒளியை அடைந்து பூரண சந்திர மண்டல அமுதைப் பல தடவைப் பெருக்கி உண்பவரே சிவயோகியாவர்.  
தூல விந்துவை மாற்றி ஒளி மண்டலம் அமைத்தவரே சிவயோகியாவர்.
 
1950: விந்துவை வென்ற வீரர் ஆவார்.
யோகவானும் ஞானியும் உத்தமமான சித்தனும் போகியும் ஞானத்தில் உயர்ந்த பதவி வகிப் போனும் காமம் வந்த போதும் கூறப்பட்ட முறை அறிந்து அமுதம் உண்பவனும் ஆகியவர் ஆக்கமாகிய விந்துவை வென்ற வீரர் ஆவர்.
 
1951: விந்து அமுதமாகி அறிவாகும்.
யோகியர்க்குச் சிவத்தின் உடலே தன் உடலாகும். சிவாக்கினியாகிய ஒளியும் மண்ணுலகத்தில் காமக்கனலாய் விந்து நீக்கம் செய்யும் மூலாதாரத்தில் உள்ள அக்கினியும் மூலக்கனலோடு சேர்ந்து விந்துவை ஒளியாக்கினால் அதுவே அமுதமாகி அறிவாகும்.
 
1952: தூல விந்து அழியும்.
மக்கள் விந்துவின் அருமையும் பெருமையும் அறியாது என்றும்  இந்திரியங்கள் வசப்பட்டு மனமழிந்து உடல் அழிந்து வருந்துகின்றார்கள்; கெடுகின்றார்கள். ஞானமே சொரூபமாய் நனவில் துரியாதீதத்தில் சிவத்தோடு செறிந்து  பொருந்த கீழுள்ள வீரியம் ஊர்த்துவ முகம் கொண்டு ஒளியாகித் தூலவிந்து அழிந்து விடும்.      சிவத்தைக் கண்டு களித்து அதில் விழித்திருந்து உடலை மறந்திருக்கும் நிலை நனவில் அதீதம்.  அறிவில் நின்று அதீதம் புரிவதால் ஞானிக்குச்  சூக்கும நிலையான ஒளிமண்டலம் அமைந்து தூல விந்து அழிந்து விடும்.
 
1953: காமக் கழிவு இன்றேல் பல ஆண்டுகள் வாழலாம்.
பெண்களைக் கொல்லும் எமன் என்று நினைக்க காதலால் விளையும் காமம் நீங்கும். காமக் கழிவு இல்லாமையால் நூறு கோடி ஆண்டுகள் சிவச் சோதியில் கலந்து ஆணவக் குற்றம் நீங்கி வாழலாம்.   காமக்கழிவு இல்லாமையால் இறப்பும் இல்லை.
 
1954:விந்துவை அழித்தவர் குண்டலினி மேல் எழும் இன்பம் அடையார்.
விந்துவை வென்றவன் காலத்தை வென்றவன்.  விந்துவை அழித்தவன் காலத்தால் வெல்லப்பட்டு அழிந்தவனாவான். விந்துவை அழித்த காலங்களில் குண்டலினி சத்தி மூலவாயுவில் பொருந்தி மேலெழும் இன்பத்தை அறியமாட்டார்.
 
1955:மங்கையரின் குடல் தூய்மையை அறிந்து யோகி கூட வேண்டும்.
பெண்ணோடு புணரும் நாளுக்கு முன்னாளிலே கணவன் தன்னிடம் காதலால் விளையும் இன்பத்தை அடைய வேண்டின் அப்பெண்ணின் வயிறாகிய பாண்டத்தில் மலத்தையும் வாத பித்த சிலேத்து மங்களையும் விலக்குமளவு விலக்கிப் பொருந்துவீராக. சந்ததி இன்பமும் கலவி இன்பமும் அமைய புணர்ச்சியின் போது குடல் சுத்தம் வேண்டும்.
 
1956:மேலாம் நிலத்தில் விந்துநாதங்களில் பொருந்தியிருப்பதே விந்துவைச் செயிக்கும் உபாயமாம்.
ஆக்ஞையில் உதிக்கின்ற விந்துவும் நாதமும் அதோமுகமாகாதவாறு சுழுமுனைத் தியானம் செய்து பிரமரந்திர வழியே சென்று பால் போன்ற வெண்ணிற மதி மண்டல ஒளியில் பொருந்திக் கீழேயுள்ள பற்றை விட்டால் கீழ்முகமான மயக்கம் கெட வீரியமும் வற்றி விடும்.
 
1957:விந்துவின் விளைவை அறிவார்க்கு விந்து ஜெயம் ஏற்படும்.
தூல வீரியம் விளையும் முறையும் அவ்வீரியம் முதிர்ந்து நிற்பதனால் எய்தும் பயன் முழுதும் அறியாதார் அடையும் அழிவும், அறிந்தவர் விந்துவை அடக்கி ஆள்வதால் அடையும் சிறப்பும், அதனால் பெருகிய நாதமும், அதன் வகையும் ஆகியவற்றை ஆராய்ந்து அறிவோர்க்கு விந்து ஜெயம் ஆகும்.
 
1958:விந்துவை மூலக் கனலால் எரித்து மேலே மதி மண்டலம் சாரச் செய்தால் ஒளி பெருகும்.
விந்து என்ற பெயரையுடைய வித்தை அது பொருந்தியிருக்கின்ற மூலாதாரத்திலே ஓங்கி எரிகின்ற குண்டலினித்தீயால் விரும்பி எரித்து அந்தச் சத்தியை முடிவற்ற சூரிய மண்டலத்தில் ஏற்றி மதிமண்டலத்தைச் சாரச் செய்தால் குளிர்ந்த அமுதமாம். மூலாதாரமும் சுவாதிட்டானமும் அக்கினி கண்டம்; மணிப்பூரகமும் அநாகதமும்  சூரிய கண்டம்; விசுத்தியும் ஆக்ஞையும் சந்திர கண்டம்.
 
1959:விந்துஜெயம் பெற்ற சிவயோகியர் அமுதப் பெருக்கில் திளைப்பர்.
அமுதமாகிய சந்திர மண்டலத்திலிள்ள விந்துவில் (ஒளியில்) உடற் கண் தோன்றிய விந்து (வீரியம்) கலந்து கெட உடம்பு முழுதும் அமுதப் புனல் பரவி சிவாக்கினியில் லயிக்க அமுதமயமான சிவபோகம் விளையும்.    ஆதலால்  அமுதப் பெருக்கமாகிய சித்தி சிவயோகிக்குப் பொருந்தும்.     தூலவிந்து மேலே சென்றபோது ஒளி மண்டலமாகும்.
 
1960:விந்து ஒழியாதபடி புணரவேண்டும்.
யோக நெறியால் விந்து அழியாதவாறு புணர்ந்து ஆணும் பெண்ணுமாகிய இரு உடலும் கலந்தாலும் விந்து நழுவிப் பெண்ணிடத்துப் போகாது அமையும் போகமே சிவபோகமாகும்.  இவ்வாறு நல்ல முறையில் போகத்தில் மாதர் ஆசையைத் தீர்க்க மாட்டார் மூடர்கள். என்னே அறியாமை? விந்து ஒழியாவகைப் புணர்வதே யோகமாம்.
 
1961: யோகியர் விந்து நீக்கம் செய்யார்.
யோக நெறியில் நிற்பவர் மாதரோடு புணர்ந்தாலும் அவ்விந்துவைக் காதலினால் விட மாட்டார்.  மாதர்களோ யோகியர்களை உயிர் போலக் கருதி ஆசை கொண்டு வருந்துவார்கள்.   சொல்லப் போனால் நெடு நாள் பழகிய காதலரைப் போல அப்பொழுதே உயிர்க் காதல் கொள்வர்.
 
1962: சாதக சத்தியால் மூலக் கனலை எழுப்பி அமுதம் உண்ண விந்து ஜெயம் உண்டாகும்.
முன்னே கூறிய சத்தியால் விந்து ஜெயம் உண்டாகும்.  தூண்டிய மூலாதாரத்தில் உள்ள கனலை மேலேறச் செய்து நாற்புறமும் சிதறிப் போகாத வண்ணம் வீணாத்தண்டினூடே ஸ்பந்த உணர்ச்சியில் ஒன்றச் செய்து அமுதம் உண்ண ஒளி மண்டலமாகும்.
 
1963:  சிந்தனை சிவமயமாக
மூலக்கனல் மயிர்க்கால் தோறும் பொருந்தி விந்து வற்றி விடும்.
சிரசின் மேலே விந்துவும் நாதமும் (ஓளியும் ஒலியும்) உயர்ந்து பொருந்த, வந்த மூலக் கனலின் வெப்பம் மயிர்க்கால் தோறும் நிறைய நம் சிந்தனை ஆன்ம போதத்தை விட்டு சிவோகம் பாவனையில் நிலைபெற உண்மையான உடம்பில் விந்து (வீரியம்) வற்றி விடும்.
 
1964: விந்து நீக்கம் கூடாது.
விதையைக் குத்தி அரிசியாக்கி உண்பவன் விதையாலாகிய பயனை அறிய மாட்டான்.   விதையைக் குத்தி உண்ணாமல் விதையை வறுத்து உண்ணுபவனும் விதையாலாகிய பயனை அறிய மாட்டான். விதையைக் குத்தியோ வறுத்தோ உண்ணாமல் விதையை விதைத்து விதையின் பயனைப் பெருக்கிக் கொண்டவனே மதியுள்ளவன்.  இல்வாழ்வில் இருந்து வீரியத்தின் பயனை அறியாது விரயமாக்கு கிறவனும் அடயோக நெறியில் நின்று முத்திரைகளாலும் பிறவற்றாலும் வீரியத்தைக் காய வைக்கிறவனும் பயனற்றவர்கள்.  இவ்விரு நெறியும் பற்றாது  வீரியத்தின் பயனை அறிந்து வீரியத்தை அழிக்காது ஒளி மண்டலம் அமைவு பெறச் செய்பவனே மதியுள்ளவன்.
 
1965: விந்து வற்றும் வகை.
அன்னமய கோசமான உடம்பில் விந்து வற்றும் முறையை அறிந்து பிராணசத்தியாகிய விந்து கீழ் நோக்காதவாறு தடுத்து மேலே பொருந்தும் வகையில் மின்னல் ஒளியுடன் கூடிய விந்து நாத மண்டலங் களில் சென்று நாதாந்தத்தில் நிலை பெற்றால் பிரணவ கோஷம் உதிக்கக் காரணமான தூல வீரியம் வெளிப்படாது உடம்பில் வற்றி விடும்.   நாதாந்தம் சென்று நிலை பெற்றால் விந்து வற்றும்.
 
1966: வீடு பெறுபவர்.
மக்கள் அனைவர்க்கும் அன்னசாரமான வீரியம் என்றும் பிராணசாரமான ஒளி மண்டலம் என்றும் இருவகை உண்டு.  பிராணசாரமான ஒளி மண்டலத்தை அறிந்து அதிலே நிலை பெற்று சாதிக்க வல்லார்க்கு பொன்னொளியுடன் கூடிய பிரணவ தேக சித்தியும் அட்டமா சித்திகளும் கிட்டும். அத்தகைய சிவயோகிகள் அழியாது நீடு வாழ்வர். விந்துவின் சூக்குமத்தை அறிந்து சாதிப்பார் நீடு வாழ்வர்.
 
1967: உண்மை உபதேசம்.
பஞ்சாக்கரத்தில் சிகாரம் கண்களில் பொருந்தக் காணில் ஒளிமண்டலம் அமையும்.  அகாரம் புருவமத்தியிலாக இருகண்களும் புருவமத்தியை நோக்க ஒளி அமையும்.  மகாரம் தொண்டை யைக் கடந்து வெளியான போது அ உ ம மூன்றும் ஒன்றாக, அவை பராசத்தி நிலையமாகிய புருவநடுவில் சென்று பொருந்துவதால் உண்டாகும் விந்து செயத்தினைப் பொருந்துமாறு உரைப்பதே உபதேசமாகும்.
பிரணவத்தில் அ உ ம என்ற மூன்று நிலைகளைக் கடந்தால் விந்து நாத மண்டலங்கள் அமையும். இவ்வொளிமண்டலமே ஆன்மாவின் நிலையமாகும்.
 
1968: ஆன்மா எல்லாவற்றையும் இயக்கி சிவத்துடன் பொருந்தும்.
"தானே எல்லாப் பொருளிலும் கலந்துள்ளவன்." என்பதும் "தன்னை அல்லாது வேறு பொருள் இல்லை" என்பதுமே ஆன்மாவாகிய தான் அடையும் உபதேசம். அத்தகைய  ஆன்மா விளங்கும் ஒளி மண்டலத்தில் உயர்ந்து செல்வதாகிய ஒளியாக, அதனால் காரியப்படும்  ஞானேந்திரியங்கள்,  கன்மேந்திரியங்கள்,  அந்தக்கரணங்கள்  ஆகிய பதினான்கும் புறநோக்கில் செல்வதை விட்டு உள்ளே அடங்க பின் அதன்
ஆன்ம அறிவும் அகண்ட அறிவுடன் ஒன்றாதல் அமையும். ஆன்மாவாகிய தானே ஒளியாகவும் அறிவாகவும் எல்லா தத்துவங்களிலும் வியாபித்துள்ளது என்பதே ஆன்மா அடையும் உபதேசம்.
ஆன்மாவே எல்லாவற்றையும் இயக்கிச் சிவத்துடன் ஒன்றாகும் தன்மை பெறும்.
 
1969: சிவம் விளங்கும் விதம்.
சூக்குமமான விந்து நாதங்கள் விளைதலால் இவ்வுலகில் தோன்றிய பல்லுயிர்க்கெல்லாம் உடலோடு கூடிய தோற்றம் உண்டாகியது. உயிர்களுக்கு தோற்றமும் முடிவும்  மந்திரங்களின் ஆற்றலும் விந்து நாதங்களில் உள்ளன.  விந்து அமைய அகண்டமான சிவம் அகமாகும்.  தோற்றத்துக்கும் ஒடுக்கத்துக்கும் காரணமாகிய விந்து மண்டலம் அமையச் சிவம் விளங்கும்.
 
1970: கொடிய வினை நீங்கிய பின்பு சிவக்கனி விளையும்.
விந்துவை மீண்டும் முளையாதவாறு வறுக்கும் முறைமையும், எங்கும் உலாவும் மனத்தைத் தடுத்து நிறுத்தலால் அமையும் வெற்றியைத் தரும் முறைமையும், அதனை உயர்ந்து செல்லுகின்ற சகஸ்ரதளத்தில் கொண்டு செலுத்திப் பக்குவம் செய்கின்ற முறைமையும் அக்கொடிய வினை களைப் போக்கும் நாளில் வரும். அப்போது உயர்ந்து சென்ற சிவாக்கினி பக்குவமான கனியாகும்.
 
1971: அமுதம் சுரக்கும்.
விந்துவும் நாதமும் பொருந்தி உயர்ந்து சென்று மதி மண்டலத்தில் அமையும் போது பராகாயத்தில் ஒளி மண்டலம் சிறப்புற்று விளங்கும். அங்கு உண்டாகும் பிரணவத்தொனியே ஆகுதிக்குரிய மந்திரமாகும். சகஸ்ரதளத்தில் உள்ள சிவாக்கினியில் பிரணவமாகிய மந்திரத்தால் செய்யும் யாகம் மகாவேதா எனப்பெறும்.  விந்து நாதம் பொருந்தி மதி மண்டலம் சென்ற போது அமுதம் சுரக்கும்.
 
1972: மனம் சிவனை நாட நாதம் அமையும்.
மனத்தின் சத்துப் பாகம் கேள்விப் புலன் வழியான நாதமயமாகப் பொருந்தியவற்றை  நாடி அதன் இனமான விந்துவில் விளங்குவர்.  மனத்தின் அசத்துப் பாகத்தில் தோன்றுகின்ற சூக்கும வாக்கும் தூல வைகரியான வசனமும் காமநோக்காய் இருக்குமாயின் தூலவீரியம் விளைந்து கெடுவர்.  இறைவனை சத்து வடிவானதாகத் துதித்தால் நாதம் சூக்குமத்தில் அமையும்.   சட மயமான உலகத்தை நாடில் சுக்கிலம் விளையும். அவரவர் மன எண்ணத்தின்படி துதிக்கலாம்.
 
1973: நாதாந்தத்தில் சீவன் சிவனோடு ஒன்றுபட்டு நிற்கும்.
நாதமும் அதனை உணர்கின்ற மனமும் மனக்கருத்து ஒருமித்துச் சிவம் உள்ள இடத்தையும் அறியார்.  அதனை உள்ளவாறு உணர்வாராகில் அத்தனாகிய சிவம் இருப்பிடம் அதுவே என்பதையும் அறிவார்.
 
1974: உடம்பில் பஞ்ச பூதங்களின் இடங்கள்.
வலிய பாதம் (கால் முதல் சுவாதிட்டானம் வரை) நிலமாகும்.  உந்தி (சுவாதிட்டானத்திலிருந்து உந்தி வரை) நீராகும். உந்தி முதல் மார்பு வரை நெருப்பாகும். மார்பு முதல் அக்குள் பிரதேசம் முடிய தோள் வரை காற்றாகும்.  கழுத்தும் அதன் மேல் பாகமும் ஆகாயமாகும். விந்து மாற்றத்தால் ஆகாயம் சிறப்புறும்.
 
22.ஆதித்த நிலை.அண்டாதித்தன்.சூரியன் அண்டத்தில் விளங்கும் நிலை.
 
1975: ஒளியுடையவர் சிவத்தை வழிபட்டு ஒளியைப் பெற்றனர்.
ஒளி வடிவான எமது ஈசனாகிய இறைவனது திருவடிகளின் ஒளி தம் ஒளியாக வேண்டும் என்பதற்காகவே சூரியன் முதலான ஒளி உருவுடைய  தேவர்கள் வெண்மேகம் சூழ்ந்த மேரு மலையை வலம் வருகின்றார்கள்.  கிரிவலம் வந்து வணங்குவதே அவர் செய்யும் தவமாம்.            உலகில் ஒளித் தன்மையுடைய தேவர்கள் எல்லாம் சிவத்தை வழிபட்டே ஒளியைப் பெற்றுள்ளார்கள்.
 
1976: கதிரவனே திருமாலாவான் சிவனுமாவான்.
சூரியனே திருமால் ஆவன்.  சூரியனே அனைத்துக்கும் நிலைக்களனாக விளங்கும் புண்ணிய நாதனாகிய சிவனும் ஆவன்.  பகைமை நீங்கி ஏழுலகங்களும் தழைத்து ஓங்கச் செய்யும் சூரியனே எல்லா உயிர்களுக்கும் முதற் பொருளும் ஆவன்.
 
1977: கதிரவனை வணங்கினால் சுடர் பெறலாம்.
சூரியனிடம் அன்பு கொண்டு அவனது ஆயிரம் நாமங்களையும் கூறி வழிபடின் சீவர்களின் அண்ட கோசத்தில் விளங்கும் சோதியில் சுடரொளியாய் நிற்பான்.   சூரியனைக் குறித்து அந்தணர் செபம் செய்வதும் தேவர்கள் தோத்திரம் கூறுவதும் சிவத்திடம் அன்பைப் பெற்று ஒளி பெறுவதற்கேயாம். சூரியனை வணங்கினால் சுடரொளியாய் சீவர்களிடம் நின்று அருளுவான்.
 
1978: ஆத்ம சூரியன்.
ஆன்மாவின் அண்ட கோசத்தில் விளங்கும் சூரியனே தத்துவத்தோற்றத்துக்குக் காரணமானவன்.  அந்தச் சூரியனே ஆத்மாவின் சத்தியாகும். அதுவே சிவமாகும். அதுவே குளிர்ச்சி பொருந்திய சந்திரனாகும். அண்ட கோசத்தில் விளங்கும் ஆத்ம சூரியனே சிவமாகவும் சத்தியாகவும் தண்மதியாகவும் பிண்டத்தில் பொருந்தும்.
 
1979: சூரியனுக்குரிய இடம்.
மூலாதார சுவாதிட்டானச் சக்கரங்களோடு ஒற்றுமைப்பட்ட தூய்மையான அகரகலை விளங்கும் மணிப்பூரகச் சக்கரத்துக்கு மேல் பதினாறு இதழ் களையுடைய துன்பந்தரும் விசுத்திச் சக்கரத்தில் ஐயமற விளங்குபவன் சூரியனாவான். மணிப்பூரகம் சூரியனுக்குரிய இடம். நாதம் உதிக்குமிடம் விசுத்திச் சக்கரம். இவ்வாதித்தன் வெளிப்பட்டவர்க்குத் தேகம் தானல்ல என்பதும் தான் ஆகாய வடிவினன் என்பதும் நிச்சயம் விளங்கும்.  விசுத்திச் சக்கரத்தில் தவம் செய்பவன் சூரியனாவான்.
 
1980: மூலாதாரத்து சூரியனே கண்டத்தைத் தாண்டிச் சென்று சோடச கலைகளையுடைய சந்திரனாவான்.
சூரியன் தன்னுள் விளங்கும் முக்கோணச் சக்கரமாகிய மூலாதாரத்தைப் பற்றி நின்று நல்ல சூரியனாக ஒளி செய்து கொண்டிருப்பான்.  அவன் நான்கு ஆதாரங்களையும் கடந்து துன்பம் தரும் கிணறு போன்ற விசுத்திச்சக்கரத்தை எட்டினால் மூலாதாரத்தில் ஒளி செய்யும் ஜோதி மேலெழப்பதினாறு கலைகளை யுடைய சந்திர மண்டலம் அமையும்.
விளக்கம்:
மூலாதாரத்தில் இருந்து நேரே ஆக்ஞையை அடைவதே திருமூலர் நெறி. இப்படி அடையும்போது சுவாதிட்டானம், மணிப்பூரகம், அநாகதம்,விசுத்திஆகியவை கடக்கப்பட்டு விடும்.  பிரணவத்தில் அகரம் உந்தியிலும் (மணிப்பூரகத்திலும்) உகரம் அநாகதத்திலும் மகரம் தொண்டையில் விசுத்தியிலும் விந்து ஆக்ஞையிலும் நாதாம் சிரசிலும் அமையும். மகரத்தின் நிலையே கண்டம் என்ற விசுத்தி.
 
1981: கதிரவனைக் கடந்த போது வேதப் பொருள் விளங்கும்.
உலக அறிவு ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று நிலைகளுக்குட்பட்டது. இவை மூன்றும் பேரொளியில் கலந்து இல்லாமற் போன போது அறிவினை உணர்த்தும் சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி  ஆகிய வாக்குகளும் இல்லை. எனவே சூரியனோடு உலக அறிவு கெட்டது. பராசத்தி அண்ட கோசத்தில் நிலை பெற்று உணர்த்துகின்ற வேதம் சூரியனைக் கடந்த போது விளங்கும்.
 
1982: சூரியன் உதிக்கின்ற இடம் மணிப்பூரகம்.
சுவாதிட்டானத்துக்குக் கீழுள்ள மூலாதாரத்தினின்று மேல் வருவது சூரியன்வரும் வழியாகும்.  அது யோகியர் அல்லாத பிறரால் காண முடியாத அருமையான பொருளாகும்.  அவ்வாறு யாராலும் காண முடியாத சூரியன் நீருக்குரிய மணிப்பூரகத்துக்கும் தீயினுக்குரிய அநாகதத்துக்கும் இடையில் உதிப்பவனானான். அரும்பொருளாகிய சூரியன் உதிக்கின்ற இடம் மணிப்பூரகம் ஆகும். (அதாவது ஸ்ப்ளீன் சென்டர் மண்ணீரல்)
 
1983: சூரியன் மண்ணீரலில் இருந்து கீழே சென்று
பின் மேலே ஆக்ஞையில் சோதியாய் வெளிப்பட்டுத் தோன்றும்.   மண்ணீரலில் இருந்து சூரியன் சுவாதிட்டானம் வந்து அங்கு அதைப் பிளந்து மூலாதாரம் சென்று அங்கிருந்து ஆகாயக் கூறான ஆக்ஞையில் பிளந்து உடலுக்கு வெளியே சோதியாய் நின்றிடும்.
 
1984: கதிரவன் சுற்றி வரும் பாதை.
பூமியைப் பிளந்து கொண்டு சூரியன் வருகின்றவழியை மிகவும் கீழ்ப்பட்டநூலை ஓதிய உலகியல் அறிவுடையோர் எவரும் அறிய மாட்டார்.  மகா மேரு மலையைச் சூரியன் சுற்றி வருவதாகாக் கூறுவார்.  ஆனால் மகா மேருவைச் சிரசு என்று அறிந்தவர் உடலில் உள்ள சூரியன் சுற்றி வரும் முறையை அறிவர்.  பிண்டத்தில் சூரியனை அறிந்து வழிபட வேண்டும்.
பிண்டத்தில் சூரியன் வலம் வரும் பாதை:
மண்ணீரலில் இருந்து புறப்பட்டு சுவாதிட்டானம் வழியாக மூலாதாரம் அடைந்து சுழு முனையாகிய வீணாத்தண்டின் வழியாக மேலேறி ஆக்ஞை அடைந்து வலக்கண் வழியே வெளிப்படுதலே சூரியன் வலாம் வருதல் என்று கூறுவது சித்தர் மரபு.
 
23. பிண்டாதித்தன்.  உடம்பில் விளங்கும் ஆதித்தன்.
                                                                                                                                                                    1985: என்னுடைய மனத்தில் பிரணவக் கடவுள் எப்போதும் இருந்தனன்.  நிற்றல், இருத்தல், கிடத்தல், நடத்தல் ஆகிய செயலைச் செய்யும் போதும்இளம் யானை வடிவுடைய  பிரணவக்கடவுள் என்னுடைய
பிரணவக்கடவுள் என்னுடைய மனத்தில் எப்போதும் இருந்தனன். அதனால் மலங்களைச் செற்று வீணாத் தண்டில் உணர்வு கீழ்நோக்காமல் மேல் நோக்கி எழ வெல்லுதலைச் செய்கின்ற விரிந்த கிரணங்களை யுடைய சூரியன் வெளிப்படுவான்.
 
1986: தம்மையுணர்ந்தவர்.
சூரியன் மேலெழுந்து சென்று அடங்கும் இடமாகிய ஈசான திக்கைக் கண்டு அங்கிருந்து மேற்சென்று ஊர்த்துவ சகஸ்ரதளத்தை அடைந்து அங்குள்ள ஒளியில் நிற்க வல்லவரே தம்மையுணர்ந்தவர் ஆவர்.  இவ்வுண்மையை உணராது பிதற்றும் உலகவர் எல்லாம் கீழுள்ள சூரியனை மேலெழச் செய்யும் வகையறியாது மாய்ந்தொழிபவரே ஆவர்.
விளக்கம்:
உடலில் ஈசான திக்கு என்பது இடக்கண்ணுக்கு மேல் உள்ள பகுதி. வலக்கண்புறம் உதித்த சூரியனை ஈசான திக்கில் செலுத்துவதே உத்தராயணம்.
 
1987: பெருந்துறையை அறிந்தவரே பேரன்புக்குப் பாத்திரமாவர்.
சூரியன் மூலாதாரத்திலிருந்து உருவிக் கொண்டு புறப்பட்டு உலகமாகிய உடலை வலம் வந்து சொருகிக் கிடக்கும் இடமாகிய ஈசான திக்கை அறிவார் யாரும் இல்லை.  அங்ஙனம் அறிகின்ற அறிவுடையோர்க்கு என்உள்ளத்திலுள்ள அன்பு அவர் பால் உருகி எழும். பெருந்துறையை அறிந்தவரே பேரன்புக்குப் பாத்திரமாவர்.
 
24. மனவாதித்தன்.  மன மண்டலத்தில் விளங்கும் சூரியன்.
 
1988: சூரிய சந்திரர் மாறி நின்றால் பௌர்ணமி.
கிரணங்களையுடைய சூரியனும் ஒளியோடு பனியையும் பொழியும் ஒளி விடுகின்ற கிரணங்களையுடைய சந்திரனும் மாறி நின்று விளங்க அவ்விரு கதிர்களும் விரிந்து விளங்குவதில் இயங்கிக் கொண்டிருக்கும் என் உயிரும் சேர்ந்து ஒரு கதிராகப் பூரணமானால் அதற்குப் பௌர்ணமி என்று பெயர்.   மன மண்டலத்தில் சூரிய சந்திரர் மாறி நின்று விளங்கும் போது பௌர்ணமியாகும்.
 
1989:   சிந்தை தெளிந்தவர்கள் சிவமாயினர்.
முன்னே சூரிய கலையில் சந்திர கலை வந்து பொருந்தும் வகையில் பொருந்தி, சந்திர கலையில் சூரிய கலை வந்து பொருந்துவது பூசனை முறையாகும்.  அவ்விறு கலைகளும் ஒத்து இயக்க மின்றி ஊர்த்துவ சகஸ்ரதளத்தில் பொருந்தி நிற்கச் சிந்தை தெளிந்தவர்கள் சிவமேயானவர்கள்.
சூரிய சந்திரர்களைச் சேர்க்கும் உபாயம் அறிந்து மேல் சென்றவர்கள் சிவமாயினர்.
 
1990: சூரியன், மூலக்கனல் சந்திரன் பொருந்த பௌர்ணமியாகும்.
சந்திரனும் சூரியனும் மூலக்கனலும் பொருந்தி மதி மண்டலமாகும். அவ்வாறு ஆகும் மதிமண்டலத்தில் தாரகை என்ற ஆன்ம ஒளியும் கலந்து நான்கு கலைகள் உள்ளதெனக் கூறுவர். ஆகின்ற சூரியன், மூலக்கனல் சந்திரன் ஆகிய இம்மூன்றும் பொருந்த அதுவே பௌர்ணமியாகும் என்று அறிந்து கொள்ளுங்கள்.
 
1991: அனல் மண்டலத்தில் காம உணர்வோடு வாழும் மக்களுக்கு அனல் மண்டலத்தையும் சூரிய மண்டலத்தையும் கடந்து விளங்கும் சந்திர மண்டல ஒளி புலப்படாததாகும்.  தலைக்கு மேல் விளங்கும் பிரமாண்டத்தில் உயர்ந்து போகும் ஒளியாய் நின்றது யார்?  அந்த நிலையை அடைந்த அவரே அந்த ஒளியைஅறியக் கூடியவர் ஆவார். காம ஜெயம் பெற்ற சாதகரே பேரண்டத்தில் விளங்கும் ஒளியை அறிவார்.
 
1992: மன மண்டலத்திலுள்ள சூரியான் பிருதிவி முதலிய ஒன்பது நிலைகளிலும் பொருந்தி உடம்பாகிய உலகத்தை வலம் வரும்.  இவ்வகையான ஒன்பது தத்துவங்களும் ஈசனது சத்தி நிலையாகும் என்பதை அறிபவர் இல்லை.  முன்னர் இவ்வகையான ஒன்பதிலும் ஆன்மா பொருந்தியுள்ளதாயினும் சிவத்தின் அருள் இல்லாதவர் இன்பமில்லாதவராய் இருள் சூழ்ந்த அண்டாகாயத்தைப் பெற்றுள்ளனர்.
பிருதிவி முதலிய ஒன்பது நிலைகள்: நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், அக்கினி மற்றும் தாரகை. மன ஆதித்தன் சுழன்று வந்தும் கூட ஈசன் அருள் இல்லாதவர் இருளில் அழுந்துவர்.
 
25. ஞானாதித்தன்.   ஞான சூரியன்.
 
1993:விந்து ஒன்றே தூலமாகிய அபரம் நிலையில் வீரியம் என்றும் சூக்குமமாகிய பரம்நிலையில் ஒளி என்றும் இரண்டாக விரிகிறது. அந்தத் தூல விந்துவே மேல் நோக்கிய போது பரநாதமாகி மேலான நிவிருத்தியாதி பஞ்ச கலைகளில் வந்துஞானசூரியனின் அருணோதயம் என்று சொல்லுமாறு உள்ளத்திலே மேலெழுந்து தோன்றும்.
 
1994:
உள்ளமாகிய மனமண்டலத்தில் அருணோதயம் போன்று எழுகின்ற ஓசையே தெளிந்த பரநாதத்தின் செயலாதலின் வள்ளலாகிய சிவனருளால் வைகரியாதி வாக்குகள் பரவிந்துவோடு கூடி தூலவைகரி, சூக்குமவைகரி, பைசந்தி, மத்திமைசூக்குமை ஆகிய ஐந்து கலைகளில் இருந்து தோன்றும். உள்ளத்து எழுகின்ற நாதமே அருணோதயமாகும்.
 
1995:
தேவதேவனாகிய சிவம் சுற்றியுள்ள எட்டு திசைகளிலும் மேல்,கீழ் என்ற இரண்டுபக்கங்களிலுமாகப் பத்து திசைகளிலும் வெளிப்படுவான்.  பழமையான காலத்தில்இவனை மூவர் பிரான் என்றும் பிற்காலத்தில் வந்தவர் பிரமன், விஷ்ணு, உருத்திரன், மகேசுவரன் என்ற நால்வர்க்கும் நடுநாயகமாக உள்ளவன் என்றும் உரைத்தனர்.  ஆனால் வானோர்கள் இவனையே  தங்கள் தலைவன் என்று கூறுவர்.
ஞானாதித்தனே ஸ்பந்த ரூபமாய் எல்லாத் திசைகளிலும் விளங்கும் சதாசிவமாகும்.
 
1996:
புவனங்கள் அனைத்துக்கும் தலைவனும் எந்தையுமாகிய சிவம் கற்பனைப் பொருள் அல்ல.  உண்மையில் உள்ளவனே தான்.  மை போன்ற இருளை நீக்குகின்ற சந்திரன், அக்கினி, சூரியன் ஆகியவை அண்டகோசத்தில் கீழ்முகமாகச் செயல்பட்ட போது உண்டான இருளை நீக்குகின்ற ஞானச் செல்வ
னாகிய சதாசிவன் என்னுடைய வீணாத்தண்டின் இருளை அகற்ற கீழிருந்து மேல்வரை கலந்திருந்தான்.
 
1997: ஒப்பற்ற சிவ ஒளியானது நிறைந்த அண்டகோச இருளை நீங்கச் செய்து பெறுதற்கரிய கனியினின்றும் ஊறுவதாகிய தேன் போலும் இனிய அமுதம் சுரக்கச் செய்யும்.  கனிந்த சுடர் போன்று நின்ற கயிலாயபதி நிறைந்த சுடர் போல் என் சிரசின் மேல் விளங்கும் தன்மையுமாவான்.
ஈசன் இருளை நீக்கி அமுதம் சுரக்கச் செய்வான்.
 
1998: அனுபவ ஞான வடிவாக ஆன்மாவினிடம் நிரம்பியுள்ள பேரொளியாகிய பிழம்பான சிவம் தங்கு தடையின்றி எல்லாப் புவனங்களிலும் வியாபித்து நிற்கும்.  சூரியனொளி படாத இடத்திலும் இவ்வொளி படர்ந்து நிற்கும்.  இதுவே அனைத்துக்கும் தலையானது.
 
1999: மண்தலமாகிய சுவாதிட்டானச் சக்கரத்திலிருந்து மலர்ந்து எழுகின்ற சூரியன் மன மண்டலத்தில் ஞான சூரியனாய் ஒளி மயமாவான்.  நின்ற இடத்தில் இருந்தே அனுபவ அறிவால் இதனை உணரவல்ல ஞானியர்க்கு இருந்த நிலையிலிருந்தே எங்கும் சென்று உணர்ந்து வரும் ஆற்றல் உண்டாகும்.
 
2000: கொப்பூழ், கண், மூக்கு, புருவமத்தி, உச்சித்துளை ஆகிய இவ்வைந்து இடங்களிலும் ஒளி விடுகின்ற சோதியை தேவ வர்க்கத்தினராகிய உருத்திரன், திருமால், பிரமன் ஆகிய மூவர்களும் வணங்கி வழிபட்டனர்.
 

This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free