பேரின்பம் உன்னுள்ளே.
நீயே தெய்வம் என்றுணர். உன்னையே நீ ஒளியாக தரிசனம் செய்.

2501 - 3047 திருமந்திர விளக்கம்.

  

28.  காரிய காரண உபாதி.  உபாதி =  பந்தம் = கட்டு.

இரண்டு உபாதிகள் =  சீவ உபாதி,  பர உபாதி, 
 
2501: உயிர் சிவமாகும் :
துன்பத்தைத் தருவதற்கு இடமான காரிய உபாதியான வித்தியா தத்துவம் ஏழும், பர உபாதியான சுத்த வித்தை, ஈசுவரன், சதாசிவன், விந்து, நாதம், சத்தி, சிவன் என்ற ஏழும் காரிய காரண நிலையினின்று நீங்கச் சிவாயநம என்ற திருவைந்தெழுத்து அமையும். அங்ஙனம் உபாதிகள் நீங்க உயிரானது சிவமாகும்.
 
2502: தொம்பத நிலை :
இறை சிந்தனையால் ஆன்மாவைப் பற்றியுள்ள காரிய உபாதியான முப்பத்தாறு தத்துவங்களும் நீங்க, தத்துவங்களுக்கு வேறான நின்மல நனவில் பொருந்தும் கனவு உணர்விலும் முப்பத்தாறு தத்துவங்களும் நீங்கிய நிலையில் உறக்கத்தை அடையாமல் அரிய இடமான துரியத்தே தங்கியிருக்கும் உயிரே தொம்பதம் ஆகும்.
 
2503: பிரணவமும் சிவாய என்ற காரண திருவைந்தெழுத்தும் உணர்த்துவன ஒரே பொருள் :
முப்பதமான 'ஓம்' என்னும் பிரணவமும் பிரணவத்தில் அகரம் அகந்தையுடன் விளங்கும் உயிர்.  உகரம் அகந்தை இல்லாத உயிராகிய பரம்.  மகரம்  அழிப்புக்குக் காரணமான  சிவமாய் விளங்கும்.  இனிச் 'சிவாய' என்பதில் உள்ள சிகாரம் சிவமாகும்.  வகரம் பரம் ஆகும்.  யகரம் உயிராகும்.
 
2504: இறைவன் கருணையால் காரிய உபாதிகள் நீங்கும் :
உயிர்க்கு உயிராய் நீக்கம் இல்லாமல் நிறைந்து அழிவுற்றுச் சோர்வைத் தரும் காரண உபாதிகள், உயிர்களின் பக்குவ நிலையிலே உடனாய் நிற்கும் இறைவன் கருணையால் அன்றி நடுக்கத்தைச் செய்யும் ஆன்மாக்களின் ஆணவத்தை நீக்குவது இயலாது.
 
2505: பரம் பொருள் நிலை :
காரிய உபாதி ஏழில் ஆணவ மலக் குற்றத்தினால் பசுத்தன்மை கொண்ட உயிர்
மயங்கி நிற்கும். காரணஉபாதியாகிய ஏழில் உயிர் ஒளியை அறிவதில் மேலான சிவம் கலந்து நிற்கும். காரியமாகவும் காரணமாகவும் உள்ள இவை கற்பனையாகும்.  அசிபதப் பொருளை உணர்ந்து அனுபவிக்கும் போது அது நீங்கியபாழில் மேலான பரன் உள்ளது.
 
29. உபசாந்தம்.  செயல் ஒழிதல்.  விருப்பு வெறுப்பு இன்மை :
 
2506:  வாயில்கள் :
சிவஞானமே வீடு பேறு அடைவதற்கு வாயில்.  சிவனிடத்தில் தன் முனைப்பு இல்லாமல் அவனது திருவடியைப் பொருந்தியிருப்பதே பத்தி செய்வதற்கு வாயிலாகும்.  சிவத்தைப் பொருந்திச் சிவமாவதே எண் பெருஞ் சித்தி அடைவதற்கு வழியாகும்.  உயிர் வெறுப்பு இல்லாது அடங்கி இருப்பதே சத்தியை
அடைவதற்கு உரிய வாயிலாகும்.
 
2507: உபசாந்தம் அமையும் விதம் :
காரிய உபாதி ஏழும் அசுத்த மாயையில் இலய முறைப்படி ஒடுங்கும்.  காரணஉபாதி ஏழும் பராகாயமான சிவத்தில் இலயம் அடையும்.     காரிய உபாதி காரண உபாதிகளின் வாசனை பற்று அற நீங்கினால் பெருமையுடைய உபசாந்த நிலை பொருந்தும்.
 
2508: சக்கிராதீதத்தில் ஆன்மா சிவசத்தியில் ஒடுங்கியிருத்தல் உபசாந்தம் :
ஆன்மா சிவ தத்துவத்தைக் கடந்து துரிய நிலையில் நிற்பது ஆன்மத் தூய்மையாகும்.  முற்படும் சாக்கிராதீத நிலையில் உடலில் பொருந்தும் பரம் வெளிப்பட்டு நிற்கும். அந்தப் பரம் தன்னில் உடனான சிவ வியாபகத்தில் நிற்பதே உபசாந்தம்.  தத்துவங்கள் இலயம் அடைந்த பின்பே உடலில் உள்ள பரம்
காட்சிப்படும்.
 
2509: உபசாந்தம் பெறுவதற்குரிய நிலைகள் :
உயிர் முப்பத்தாறு தத்துவங்களின் சேர்க்கையால்  ஆணவ மலத்தளையை நீக்கிக் கொள்ளுதல், கிடைத்தற்கரிய பேறான தன் இயல்பான வடிவத்தை அறிதல், தன் உண்மை அடைதல், அளவு படுத்திச் சொல்ல முடியாத இன்ப நிலை பெறல்,  ஒளிக்கெல்லாம் ஒளியைத் தரும் சிவனிடம் அடங்கி இருத்தல்
என்பவை தத்துவங்களின் மாறுபட்ட உபசாந்தம் ஆகும்.
 
2510: உபசாந்தப் படி நிலைகள் :
தனக்கு வாய்த்த உபசாந்தம் அமையப் பொருந்திய சிவமாய் ஆதலால், சிவானந்தத்தில் ஆழ்ந்து, அந்த நினைவு நீங்குதலும், மௌன நிலையாகிய சுக அனுபவத்தோடு நின்று அதையும் நீங்குதல் என்பது உபசாந்த நிலை அமைவதற்கு வேண்டிய பத்துப் படிகள் ஆகும்.
(ஆணவம் அழிதல், தன்னையுணர்தல், அதை ஒழித்தல், நனவில் அதீதம், வியாத்தம், சிவமாதல், சிவானந்தத்துள் அழுந்தல், தான் அறுதல், ஆனந்த அனுபவம் பெறல், அதையும் நீங்குதல் ஆகிய பத்தும் உபசாந்தப்படி நிலைகள் பத்து ஆகும்.)
 
2511:உபசாந்த நிலையின் ஆன்மா பெறும் அனுபவம் :
பரை ஒளியில் கலப்பைப் பெற்றப் பரத்துடன் பிரிவு இல்லாமல் அலையற்ற ஆழமான கடல் நீரை ஒத்து நின்று குருவின் உபதேசத்தை உணர்ந்து சிவானந்தத்தை அனுபவிக்கும் ஆன்மா பேச்சு அற்ற பேரானந்தத்தை அடைந்து பிறவிக்கடல் நீங்கியவன் ஆவான்.
 
30: புறங்கூறாமை :  உபசாந்தம் பெற்றபின் அதன் பெருமையை வெளியில் சொல்லல் கூடாது.  அகத்திலேயே அதன் அருமையைக் காண வேண்டும்.
 
2512: உள்ளத்தில் நீலகண்டனை வணங்கி நிறைவு பெற வேண்டும் :
சந்திரனில் உள்ள கறையை நீக்க மணி கட்டப்பட்ட வாளை எடுத்து வெளியில் செல்பவரைப் போல், திருநீகண்டனைக் காண மாட்டாதவர், உபசாந்த நிலையை அறிவோம் என்று சொல்லித் திரிவர்.  வெளியில் போய் சிவபெருமானைக் காணல் இயலாத ஒன்று என்பதை அறியாதவர் உபசாந்த நிலையை அறிவோம் என்று சொல்லித் திரிவது எல்லாம் வீண் ஆரவாரமே அன்றி உள்ளத்தில் அவர்கள் சிவத்தை அறியாதவரே.
 
2513: ஆன்மா உபசாந்த நிலையில் தன்மை கெட்டு இருத்தல் :
கரிய நிறம் உடைய காலையுடைய பருந்து, வான் வீதியில் செல்லக் கடுமையான தாள்கள் நிறைந்த குளத்தில் கிடக்கும் கரிய நிறம் உடைய பாம்பு அடங்கியிருத்தல் போல், மனமே, நின் பெருமையை நினைக்காது, பெருமை பேசுவதைக் கைவிட்டு அடங்கி இருப்பாயாக! நீர் அருந்த முடியாத அலை கடலில் ஆறு போய் ஒடுங்குவது போலவும் மனமே அடங்குவாயாக!
 
2514: அகத்தே பகைவரை வெல்வதே பேராண்மை :
பகைவர் இறந்து போகப் போர் முனையில் நிலைபெற்ற போர் செய்வது அற்ப அறிவுடையவர் செய்யும் ஆண்மைத் திறம் ஆகும்.  உபசாந்த நிலையில் பொருந்துதலை உடையவர் செய்யும் தவம் கை கூடினால் மக்கள் விரும்பிக் கேட்டவற்றை அளிக்கும் ஒப்பற்ற தேவர் ஆவார்.
 
2515: சிவனை வணங்குபவரைப் பதினென் கணத்தவரும் வணங்குவர் :
சிவத்தையன்றி மற்றத் தேவரிடம் பற்றுக் கொண்டு மாறுபட்ட கருத்தை அடையாதீர்.  எல்லா உலகங்களுக்கும் சிவனே ஒப்பில்லாத தனிப் பெருங்கடவுள் என்றுஎண்ணி வழிபடில் பதினென் கணத்தவரும் உம் அழகிய அடியைக்காண வணங்கி எழுவர்.  அங்ஙனம் இறைவனை நாடி இன்பம் அடையலாம்.
 
2516: நினைக்கும் வகை அறிந்து நினைக்க வேண்டும் :
என்னை விட எனக்கு இனிமை தரும் இறைவனை, பொன்னை விட மிக்க ஒளிஉடைய தூயவனை, விளங்கும் எல்லாவுயிர்க்கும் உயிராய் உள்ள விகிர்தனை, பொருந்தும் வகையால் மனத்தைத் திருவடியில் பதித்து நினைப்பீராக!
 
2517: சிவனை நினந்திரிப்பின் ஐம்புல அறிவும் ஒரு சேர விளங்கும் :
நிற்கும் போதும் அமர்ந்திருக்கும் போதும் படுத்துள்ள போதும் மலம் அற்ற சிவனைப் பொருந்தும் வகைகளை வாயால் கூறுவாராகிலும் ஐம்புல ஆசைகளைக் கெடுத்து,  அவற்றை ஒவ்வொன்றாய் அறியும் குணத்தைப் போக்கி ,   ஐம்புல அறிவையும் ஒரு சேரப் பெற்று விளங்கும் சிவத்துடன் உண்மையாகவே பொருந்தி ஐம்புல அறிவையும் ஒரு சேரப் பெறும் தன்மையைப் பெறுவீராக.
 
2518: ஞானியரை விண்ணவரும் விரும்புவர் :
உயிர்களின் உணர்வுக்கு உணர்வாய், எல்லா உலகமாய், ஏழ் உலகத்தவரும் எண்ணத் தகுந்த அறிவாய், விளங்கும் என் பெருமானாய்த் தகுதியுடையவரை அறிபவனாய் உள்ள இறைவனைத் தியானத்தில் பொருந்தியிருக்கும் ஞானியரைவிண்ணுலகத்தவர் உய்வு பெறுவதற்காக விரும்புகின்றனர்.
 
2519: பரனாம் தன்மை பெறலாம் :
 விண்ணவராலும் அறியப்படாத பெருமானை, காலை வேளையில் கண் மலரால் புறத்தே காணாமல், அகத்தே பார்வையைச் செலுத்திக் கண்டு, எண்ணத் தகுந்த தொடர்பாக மூன்று வேளைகளிலும் இச்சாதனையைச் செய்து வந்தால், மேலான பரனாம் தன்மையைப் பெறலாம்.
 
2520 : மாறுபாடில்லாத மனத்துள் இறைவன் விளங்குவான் :
சிவபெருமான் தன்னை ஒப்பவர் இல்லாமல் ஏழ் உலகங்களிலும் பரந்து நிறைந்துள்ளவன்.  அப்பெருமானின் திருவடியை அடைக்கலமாய் அடைந்த பின்பு பேரருளை அளித்த பெருமை மிக்க வள்ளலும் ஆவான்.  மாறுபாடு இல்லாத மனத்தை உடையவரின் அறிவுக்குள் விளங்குபவன். வாடாத சகஸ்ரதள மலரைப் பொருந்தி நிற்கும் புகழை உடையவன் ஆவான்.
 
2521: எந்தையைப் போற்றி ஒளி மண்டலத்தைத் தியானித்திருந்தால் நாத ஒலி கேட்கும் :
எம் தந்தையான சிவ பெருமானின் திருவடியைப் போற்றி என்றும் வணங்கினேன்.  அவ்வழிபாட்டுக்கு வைத்தது எந்நாளும் வீசும் ஒளியே ஆகும். அது பிராணனால் அமையும் விளக்காகும்.  அதனால் உடலுக்கு இன்பநிலை அருளும் நாதம் ஒலித்தது.  அப்போது தேவன் விளங்கும் திருச்சபையைக் கண்டேன்.
 
2522:சிவன் உடலில் இருப்பதை உணர்ந்தால் உலகு ஏழையும் காணலாம்
சகஸ்ர தளத்தில் இறைவன் இருப்பதைக் கண்டேன்.  அவ்விதம் உடலில் விளங்கும் அவனை உட்புகுந்து காண்பவர் இலர்.  எலும்புக் கூண்டைத் தாங்கி நிற்கும் பிரமதண்டின் வழியாக உச்சித் தொளையை அடைந்தேன்.  அவனது கோலத்தைக் கண்ணை மூடிக் கண்டேன்.  அப்போது உலகப்பொருள்கள் யாவற்றையும் நான் கண்டேன்.
 
2523: சகஸ்ர தளத்தில் பொருந்தியிருப்பவர்க்கு வீரனான சிவபெருமான் விளங்குவான் :
சிவபெருமானைப் புகழ்வதால் அமையும் ஞானமும் சிவானந்தத் தேனும் இருக்கும் சகஸ்ர தளத்தை அறிந்து உடலைக் கடந்து நினைவைப் பதித்தவர்க்கு வானத்தை உடலாக்கும் வீரனும் அங்கு விளங்குவான்.
 
2524: சந்திர மண்டலத்தில் நினைவு உடையவர் பேரின்பத்தில் திளைத்து அமைதி பெறுவர் :
மாண்பு மிக்க சந்திர மண்டலத்தில் நினைவு கொண்டு நின்ற பெருந்தவத்தினரின் அறிவுக்கும் அறிவு தருபவனாக விளங்கும் சிவன் பேரின்பத்தைத் தருபவனாய் உள்ளான்.  அத்தகைய சிவ அறிவில் தாம் அறிவு ஒன்றுபடுவதில் உபசாந்தம் அமைந்து ஆகின்ற மலம் நீங்கியவராய்த் திருவடியின் கீழ் அமைதி பெறுவர். 
 
2525:சிவனைச் சித்தத்தில்உடையவர் பிறவிநீங்கி அழியாநிலை அடைவர்
சரியை, கிரியை, யோகம் ஆகியவற்றால் முறையே அடையப்படும் பதமுத்திகளான சாலோகம், சாமீபம், சாரூபம் என்னும் மூன்றையும் குற்றம் உடையவை என்று நீக்கி, விருப்பு, வெறுப்பு அற்று, சொர்க்க நரகம்
அடையும்காரணத்தை அழித்து, இன்பத்தை  அளிக்க வல்ல மாயா காரியமான இருளைவிட்டு, ஆணவம் அற்று, 'எனது', 'யான்' என்னும் புறப்பற்று அகப்பற்று என்பனவற்றை அறவே நீக்கி, சித்தத்தில் சிவத்துடன் ஒன்றாய்நிலைத்திருப்பவர் சிவ சித்தர் ஆவார்.
 
2526: சித்தர் மாயையில் தோயாமல் குண்டலினியை வசப்படுத்திச் சதாசிவ நிலை எய்துவர் :
சித்தர் அகண்ட பரந்த சிவத்தைக் கண்டவர்.  சிவ சிந்தனையில் நின்று சுத்த மாயை, அசுத்தமாயையில் தோய்ந்தாலும் தாமரை இலை நீர் போல் பற்று இல்லாது விளங்குவர்.  இந்தச் சீவன் முத்தர் முன் கூறிய சாயுச்சிய நிலையை அடையும் தன்மை உடையவர்.   மூலாதாரத்தில் விளங்கும் குண்டலினி சத்தியை வசப்படுத்தியவர்.  இவர்கள் உருவத்தில் பொருந்திஅருவ நிலையில் விளங்கும் சதாசிவத் தன்மை வாய்ந்தவர் ஆவார்.
 
31. அஷ்ட தள கமல முக்குண அவத்தை :
தலையைச் சூழ்ந்துள்ள எட்டுஇதழ்த் தாமரையில் உயிரானது முக்குணவயத்தால் பெறும் நிலை அஷ்டதள கமல முக்குண அவத்தை :
 
2527: எட்டு இதழ்த் தாமரையில் எட்டுத் திக்குக் காவலர் காவல் செய்கின்றனர் :
கவிழ்ந்த நிலையில் உள்ள சகஸ்ரதளம் ஆன எட்டு இதழ்த் தாமரையில் சூரியன் தோன்றும் கிழக்குத் திசையில் இந்திரன், தென்கிழக்கு மூலையில் அக்கினி, தென் திசையில் இயமன், தென் மேற்குத் திசையில் துதிக்கின்ற நிருதி, மேற்குத் திசையில் வருணன், வடமேற்குத் திசையில் வாயு, வடக்கு திசையில் குபேரன், வடகிழக்குத் திசையான ஈசான திக்கில் ஈசானர் ஆகியவர் எட்டுத் திசையிலும் காவல் செய்யும்படி நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
2528: சுழு முனையில் பொருந்திய பேரொளியை நினைந்து உய்தி பெற வேண்டும். :
தலையைச் சூழ்ந்துள்ள சகஸ்ரதளமான தாமரை எட்டு இதழ்களை உடையது.  பெருமை மிக்க இந்த மாய உடலினுள் உள்ளே சிறிய வீணாத் தண்டின் நடுவில் உள்ள சித்திரணி என்ற பெயர் உடைய சுழுமுனை நாடியில்சேர்ந்துள்ள பேரொளியை நினைந்து உய்யுமாறு மேல் எழுவீராக!
 
2529: சகஸ்ரதளம் விரிவடைந்தபின் உடல் கனவு போல் இல்லாகி விடும்:
கவிழ்ந்த நிலையில் உள்ள சகஸ்ரதளமான தாமரையில் சூரியன், சந்திரன்,அக்கினியாகிய மூன்று கலைகள் உள்ளன.  அந்த மூன்றினும் பேரொளியாய்ப் பாய்ந்து சகஸ்ரதளத்தை விரியச் செய்து சுடர் ஒளியைப் பெருக்கி நின்றான் இறைவன்.  அங்ஙனம் எட்டு இதழ்களும் விரிவடைந்து வளர்ச்சிபெறும் வண்ணம் சந்திரகலை சூரியகலை அவற்றில் பொருந்தும் போது,  சகஸ்ரதளம் விரிவு அடைந்து
மலர்வதில், உண்மை போல் இருந்த உடல் கனவில் கண்டாற் போன்று இல்லையாகி விடும்.
 
2530: ஆறு ஆதாரங்களின் வழியே உணர்வு தலையைச் சென்றடையின் ஒளி மண்டலம் விளங்கும் :
இந்த உடலில் ஆறு ஆதாரங்களின் வழியாய்ப் பாயும் உணர்வு என்னும் நீர் போய் அடையும் பிரமரந்திரம் என்ற குளம் ஒன்று உண்டு.  இங்ஙனம் உள்ள ஆறு ஆதாரங்களையும் ஒருமுகப்படுத்துவதில் சிவகதி உள்ளது. இது மிகவும் நுண்மையான ஒளி நிலையாகும்.இவற்றை ஒன்றுபடுத்துவதில் கூறப் பெற்ற குண்டலினியும் உள்ளத்தோடு அவளினும் வேறாகச் சிவமும்உள்ளது.
 
2531: இறைவனைப் பொறிகளுடன் மனம் பொருந்தினால் அட்டதள கமலம் விரியும் :
எட்டுத் திக்குகளும் எட்டுத் திக்குப் பாலகர்களும் அத் தேவதைகளின் ஊர்திகளும் எட்டு மூர்த்தமாய் நின்றவன் சிவன்.  அப்பெருமானைக் கன்மேந்திரியம் ஐந்து, ஞானேந்திரியம் ஐந்து, மனம், புத்தியுடன் பன்னிரண்டும் பொருந்தி நிற்கில், கவிழ்ந்துள்ள எட்டு இதழ்களையுடைய தாமரை உள்ளிருந்து வெளி முகமாய் மலர்ந்து திகழும்.
 
2532: உயிர் இறைவனுடன் கலந்திருக்கும் தனித்தன்மை பெறல் :
எட்டு இதழ்களையுடைய தாமரையில் கிழக்கு முதல் வடக்கு வரையுள்ள ஏழு திக்குகளும் சீவன் பொருந்தும் உருவ நிலைகள்.  பரம் என்ற நிலை எட்டாவதான ஈசான திக்கில் உள்ளது.நடுவாகிய ஒன்பதில் தத்துவங்களை  முடிவு செய்யும் பரம் அபரமான சதாசிவம் இருக்கின்றது.  மேல் நோக்கி நிமிர்வதில் பத்தாவதான நிலையில் ஆணவம் அற்ற ஆன்மா சிவத்துடன் பொருந்தியிருக்கும் சிறப்பான நிலையாகும்.  (ஏழு வரையில் சீவனின் நிலை.எட்டாம் நிலை பரநிலை.ஒன்பதாம் நிலை.  பத்தாம் நிலை சிவனுடன் பொருந்திய நிலை.)
 
2533: பல ஊழிகளைச் செய்பவன் சிவன் :
உயிர்களின் நன்மைக்காகப் பல ஊழிகளைச் செய்யும் குணம் உடையவனே சிவக்கதிரவனும் இறைவனும் ஆவான்.  நன்மையைத் தரும் ஊழிகளான நிவிருத்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியாதீதை முதலிய  ஐந்து கலைகளில் உள்ள புவனங்களையும் தத்துவங்களையும் பல தேவர்
களைக் கொண்டு ஒடுக்குவது சீவனின் அண்டகோசத்தில் எல்லைக்குள் சிவன் செய்யும் ஊழியாகும்.   யாவும் ஒடுங்கிய பின் ஊழியைக் கடந்த நிலையில் இருப்பவனும் சிவனே ஆவான்.
 
2534: சிவனை உணர்பவர் அனைத்துலகும் விளங்குவதைக் காணலாம் :
பந்த பாசங்களால் சுற்றப்பட்ட உலகத்தில் எட்டுப் பெரிய  வடிவாய்த் திகழும் சிவனை எட்டுத் திக்குகளிலும் திரியும் திக்கு யானைகளுடன் தேவர் கூட்டமும் தீயும் மழையும் இயங்குவதற்கு இடமான வெளியும் பரமாகாயத்தில் பற்றுக் கொண்டனவாகும்.
 
2535: சிவபெருமான் விரும்பிச் சூடிக் கொள்வது சகஸ்ரதளமலர் :
ஒளி பெருகும் ஊற்றையுடைய தலையான மலையின் மீது ஆறு இல்லாது நிரம்பும் அரிய பிரமரந்திரம் என்ற குளம் ஒன்று இருக்கின்றது.  அங்குச் சேறு இல்லாது,   அருள் வெளியில் ஆதாரங்கள் என்னும் கொடியில் மலர்ந்த "சகஸ்தளமான தாமரை இல்லாது" ஒளிக்கற்றைகளைத் தலையில் சூடிய பெருமான் அணிந்து கொள்ள மாட்டான்.
 
 
2536: எப்போதும் சிவனை நினைத்திருப்பவர் :
சீவர்கள் அறிவையும், மனம், மொழி, மெய்யாகிய முக்கரணங்களையும் செயல்படுத்துபவள் சதாசிவ பத்தினியாம் மனோன்மனி.   சீவர்கள் நின்றாலும், இருந்தாலும், பலவிதமாய் உலக நிலையைப் பேசினாலும் மனம், மொழி, மெய் ஆகியமூன்றும் அடங்கிய போது ஐம்புலன்களை வென்று சகஸ்ரதளத்தில் மனத்தை இருத்தி வேறுபாட்டைச் செய்யும் இறைவனை நாடுவர்.  நடக்கும் போதும் அமர்ந்திருக்கும் போதும் இறையுணர்வு உள்ளதால் சிவத்திருவை உடையவர் ஆவார்.
 
32: நவாவத்தை நவாபிமானி :  சீவனின் ஒன்பது உணர்வு நிலைகள் :
சீவ சாக்கிரம், சீவ சொப்பனம், சீவ சுழுத்தி.
பர சாக்கிரம், பர சொப்பனம், பர சுழுத்தி.
சிவ சாக்கிரம், சிவ சொப்பனம், சிவ சுழுத்தி  ஆகிய ஒன்பது நிலைகள்.
 
2537: சீவன் ஒன்பது நிலைகளில் உள்ள போது பொருந்திய பெயர்கள் :
சீவன் ஒன்பது நிலைகளில்  உள்ளவனாகக் கூறப்படுவது உண்டு.
சீவன் தொம்பத நிலையில்
1. விசுவன்: உலக உருவினன். சாக்கிரத்தில் தூல உடலை உடைய சீவன்.
2. தைசதன்: தீ வண்ணன். கனவு நிலையில் சூக்கும உடலை உடைய சீவன்.
3. பிராஞ்ஞன்.  பேரறிவினன். சுழுத்தியில் காரண உடலைப் பற்றிய சீவன்.
சீவன் தற்பத நிலையில்
4. விராட்டன். உலக முதல்வன். தூல உடலுக்கு கர்த்தாவாய் இருப்பவன்.
5. பொன் கருப்பன். பொன் மேனியன். சூக்கும உடலுக்கு கர்த்தாவானவன்.
6. அவ்யாகிர்தன். பிரிக்கப்படாதவன். காரண உடலுக்கு கர்த்தாவானவன்.
சீவன் அசிபத நிலையில்
7. இதையன். கலப்பையன். தாமத குணம் பற்றி நிற்பவன்.
8. பிராபத்தியன். ஆருயிர் முதல்வன். இராசத குணம் பற்றி நிற்பவன்.
9. சாந்தன். தண்ணொளியோன். சத்துவ குணம் பற்றி நிற்பவன்.
ஆக மேற் சொன்ன ஒன்பது நிலைகளில் சீவன் அபிமானியாக, அதாவது
ஒன்பது நிலைகளைப் பற்றியிருப்பவனாக இருக்கிறான்.
 
2538:சீவன் ஒன்பதுஅவத்தையும் கடந்து துரியத்தில் உண்மைவடிவைப் பெறும்:
சீவ பரத்துக்குரிய சாக்கிரம் (நனவு) முதலிய நிலைகள் ஒன்பது வகைப்படுவதால் பிறவிக்குக் காரணமான மலம் குணம் ஆகியவற்றின் பற்றைஅறுத்துப், பற்றுதற்கு அரிய, தவத்தால் அடையும் மாறுதல் அற்ற, அறிவு மயமான வானில் - சீவ சிவ வேறுபாடு இல்லாமல் துரியம் பொருந்தினால் - அதுவே சீவனின் நிலையாகும்.
 
2539: சிவனாம் தன்மை அடையும் திறன் :
சீவன் சிவனையே நினைந்திருப்பதால் சீவனின் தனித் தன்மை கெட்டுப் பிறப்புக்குக் காரணமான ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களும் போய் ஒழியும்.  ஒன்பதாய்க் குறிப்பிட்ட  வகையின் இறுதியான துரியத்தில் தவத்தினால் அடையும் பயனாக சீவன், தான் என்பது இல்லாமல்,  நல்ல சிவ ஞானம் பெற்று சிவமாய் விளங்கும்.
 
2540: இறைவன் சீவனைப் பதினெட்டு நிலைகளில் பொருந்தி நீக்குவான்:                                       இறைவன் சீவர்களை  சீவ சாக்கிரம், சீவ சொப்பனம், சீவ சுழுத்தி., பர சாக்கிர, பர சொப்பனம்,
பர சுழுத்தி., சிவ சாக்கிரம், சிவ சொப்பனம், சிவ சுழுத்தி  ஆகிய ஒன்பது நிலைகள் பொருத்தி நீக்கிய பிறகு இந்த ஒன்பதையும் கடந்த சீவ துரியம், பர துரியம், சிவ துரியம் ஆகிய நிலைகளில் சீவர்களைப் பொருத்திநீக்கி சீவர்களைச் சிவமாக்குவான்.
 
2541: வினைகளை அழித்தனன் சிவன் :
விரும்பப்படுவனவான நான்கு வேதங்கள், ஆறு அங்கங்கள், நான்கு உபாங்கங்கள் ஆக பதினான்கு வித்தைகளும் உயர்ந்தவர் பொருட்டு உணர்த்தியவன் சிவபெருமான்.  அவனது உண்மை நிலையை விரும்பி இரவும் பகலும் மனத்தில் உணர்ந்து நிற்கும் சீவர்களின் வலிய வினைகளுடன் மூலத்தையும் சிவன் அழித்திட்டனன்.
 
2542: வழிபடுவார்க்கு அருளுபவன் சிவன் :
நெடுங்காலமாக நன்மைஅடையத் தொகுத்துச் சொன்னவை பல.  அவற்றுக்குரிய தெய்வமும் பல.  அவ்வாறு கூடுதலால் பெறும் பயனும் பல.  கூறப்பட்டவாறு பகலிலும் இரவிலும் எண்ணி வழிபடுங்கள்.  அங்ஙனம் நினைந்து அந்தந்த இடங்களில் வழிபடுபவர்க்கு அங்கங்கு நின்று அருள் செய்யும் அருளாளன் சிவன்.
 
2543: ஒன்பது பேதமாய் விளங்கி அருள் செய்வான் :
சிவ பெருமான் - ஆதிசத்தி, பராபரை, சோதியுடைய பரம், உயிர், நல்ல தத்துவங்கள், சொல்லப்படும் கலை, சுத்தமாயை, அசுத்தமாயை, நிகர் இல்லாத வீடுபேறு என்று எண்ணப்படும் ஒன்பது பேதமாக விளங்கி அருள்வான்.
 
2544: வினையில் பட்டுப் பிறவியை அடைந்து கொண்டே இருப்பர் :
இறைவன் - உயிர்கள் ஆராய்ச்சி அறிவால் அடைய முடியாத உண்மைப் பொருளை அனுபவத்தில் அடையுமாறு செய்து, வேறாக நரகமும் சொர்க்கமும் உலகத்தில் பிறப்பும் உயிர்களுக்கு அருள் காரணமாக அமைத்து வைத்தான்.  இவ்வுண்மையை அறியாதவர் வினையால் பிறவியை அடையும் உயிராகவே விளங்குவர்.
 
2545: சீவன் சிவத்தன்மை அடையுமாறு :
இறைவன் சீவர்களை  சீவ சாக்கிரம், சீவ சொப்பனம், சீவ சுழுத்தி., பர சாக்கிர, பர சொப்பனம், பர சுழுத்தி., சிவ சாக்கிரம், சிவ சொப்பனம், சிவ சுழுத்தி  ஆகிய ஒன்பது நிலைகள் பொருத்தி நீக்கிய பிறகு இந்த ஒன்பதையும் கடந்த சீவ துரியம், பர துரியம், சிவ துரியம் ஆகிய நிலைகளில் சீவர்களைப் பொருத்திநீக்கி சீவர்களைச் சிவமாக்குவான்.
 
33. சுத்தசுத்தம்: சுத்தம்=தூய்மை; அசுத்தம்=தூய்மை இல்லாமை
    சுத்தா சுத்தமாவது அகத்தூய்மையும் அகத்தூய்மையின்மையும்.
 
2546: சிரசின் மேல் விளங்கும் சிவனை அறிய வேண்டும் :
புருவ நடுவில் இருந்து பன்னிரண்டு விரற்கிடை உயரத்தில் உள்ள சகஸ்ரதளத்தில் உயிரின் காரண சரீர விருப்பினனான இறைவன் உள்ளான்.இதை யாரும் அறியவில்லை.  சிவத்தைப் பற்றிப் பேசி இருப்பது வேதம். எனினும் அவ்வியக்த வடிவத்தைப் பற்றி அறுதியிட்டுச் சொல்ல முடியாததாய்ச் சுருக்கிக் கொண்டுள்ளது அதன் இயல்பாகும்.
 
2547: கடமையாய் எண்ணிச் செயலைச் செய்யாமையால் வரும் பயன் :
உயிர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் செய்பவனின் கருத்தையும் உரிமையையும் செய்வதையும் பொறுத்து அமைவதாய் விளங்குகின்றது.இவ்வாறு செய்வதால் பிறவிக்குக் காரணமான வினையாய் அமைவதை அறிந்து உரிமை கொண்டாடாமல் அகன்று அன்பால் செய்பவை உயிர்களுக்குரிய கன்மத்தை அழிப்பதாகும்.
 
2548: மாயையின் செயல் :
மாயையான திரை சீவர்களை மறைக்க மறைந்துள்ள ஈசுவரன், அம்மாயையான திரை அகன்ற போது வெளிப்படுவான். மாயை நீங்குமாறு சிவத்தில்மறையவல்ல உத்தமஅதிகாரிகளுக்கு உடம்பும் இல்லை மனமும் இல்லை.
 
2549: சாதனையின் பயன் :
தியானத்தினால் புருவ நடுவை அடைந்து கபால வழியைத் திறந்து அதற்குள் புகுந்து கோழை வந்து அடைக்கும் இடத்தில் அண்ணல் ஒளி காட்டும் குறிப்பில் கீழே போகாமல் அடைத்து, அங்கு உண்டாகும் அக்கினிக் கலையை ஒளிப்படுத்தும் முறையில் உள்ளம் தாழ்வான மாயை வழிச்செல்லாமல் நிறுத்துவதே தன் சாதனையால் உண்டாகும் பலமாகும்.
 
2550: உடலில் இருந்த வண்ணம் உதவுபவன் :
உடம்பில் இருந்து கொண்டு நுண்ணிய உடலுடன் உறவு வைத்திருப்பவனை, உடலில் அக்கினி கலை விளங்கும் சிவத்தை, நாட்டில் போய்ப் புறத்தே வழிபாடு செய்வார்.   அவர் உடலில் சிவம் விளங்குவதை
அறியாதவரே ஆவார்.
 
2551: தூய்மையற்ற உடலைப் பற்றிக் கொண்டிருத்தல் ஆசூசம் ஆகும் :
அறிவற்றவர் மற்றவரைத் தீண்டுவதால் தீட்டு ஏற்படுகின்றது என்பர்.  தீட்டு எவ்விடத்தில் இருக்கின்றது என்பதை எவரும் அறியவில்லை.  தீட்டு எங்கு உள்ளது என்பதை அறிந்த பின்பு மனித உடலே தீட்டாக
உள்ளது என்பதை அறிவர்.
 
2552: தீட்டு இல்லாதவர் :
தத்துவ ஞானத்தால் தம்மை உணர்ந்தவர்க்குத் தூய்மையின்மை என்பது இல்லை.  எல்லாத் தத்துவங் களையும் அழிக்கும் அரனை வணங்குபவர்க்குத் தூய்மையின்மை இல்லை.  மூலாதாரத்தில் உள்ள கனலைத் தூண்டி ஒளி பெறச் செய்யும் அக்கினி காரியம் செய்பவர்க்கும் தூய்மையின்மை இல்லை.  மேலான மறையை உணர்ந்த ஞானிக்குத் தூய்மையின்மை என்பதே இல்லை.
 
2553:வீணாத்தண்டில் பொருந்தி அரனை வழிபடுபவர் தூய்மையர் ஆவர்.
சிவத்தை வழிபட்டு வணங்குபவர்க்கு உச்சிக்குழிக்கு மேல் இருக்கும் சகஸ்ரதளம் சிறப்பாய் அமைந்து ஒளி பெருகி நிற்பதில் உள்ளத் தூய்மை தொடங்கும்.  குழியில் விழுந்து விந்து நீக்கம் செய்பவர் ஆதார நிராதார யோகங்களால் உணர்த்தும் குறிகளைப் பொருந்தார். வீணாத்தண்டினைப் பொருந்தியுள்ள
கீழ் நோக்கிய முகத்தை மேல் நோக்கிய முகமாக ஆக்கியவர்க்கு அன்றிச் சிவம் தோன்றாததாகும்.
 
2554: பிடரிக் கண் விளங்கித் தூய்மை உண்டாகும் :
தூய பிடரிக்கண் உள்ள தூய அக்கினி தூய ஒளியுடன் விளங்கும்.  இத்தகைய இடத்தில் விளங்கும் அக்கினிக்கு ஆதாரம் எங்கே இருக்கின்றது என்பதை அறிபவர் இலர்.  அந்தப் பிடரிக் கண்ணில் விளங்கும் அக்கினியின் ஆதாரமான சுவாதிட்டானத்தை அறிந்து விந்து வெற்றி  அடைபவர்க்குத் தூய்மையான பிடரிக் கண்ணில் விளங்கும் அக்கினி தூய்மையைச் செய்யும்.
 
2555: சிவம் ஓங்காரத்தின் உட்பொருளைத் தெளிவித்துக் கருவிகளை ஓயச் செய்வான் :
தூய மணியான பிடரிக் கண்ணில் விளங்கும் சிவன் வைத்த தூய நெறி கரும நிவாரணம் செய்யும் பொருட்டு அமைத்ததாகும்.  அத்தகைய மணியைச் செழிப்படையச் செய்ய இறைவன் திருநாமமான ஒளி தேவை.  அம்மணி கருவிகளை ஓயச்செய்து எட்டுப் பெருஞ்சித்திகளை அளிக்கும்.  தூயமணி மோன எழுத்தின் பீடமாகும்.
 
2556: சிவத்தின் அருளைப் போற்றியிருக்கும் அடியவரே தூயவர் :
எம் தலைவனான சிவபெருமான் -  விரும்பிப் பெறுகின்ற சிறந்த பொருளாகவும் புண்ணிய வடிவாகவும் இருப்பவன்.  அவனது அருளைப் பெறப் போற்றி நிற்கும் அடியவர் அல்லாதவர் சொர்க்கம், நரகம், புவி
என்று சுழன்று வருகின்ற பிறவித் தளையில் மயங்கிய உள்ளம் உடையவராய்த் தூய்மையின்மை (அழுக்கு) உடையவர் ஆவார்.
 
2557: வினையாளரின் இயல்பு :
மயக்கத்தில் உள்ள உயிர்கள் வினையால் அசத்தானமாயை வலிவடைந்து அதன் பயனாக விளையும் துன்பச் சுழற்சியை அறியா.        ஞானத்தை உணர்ந்து அதன் வழி நிற்பதில் கொடியவினை நீங்குவதனையும் தெளிந்துஅறியா. வினைகள் உயிர்களைப் பற்றாது நிற்பதில் முத்தி நிலை உள்ளது
என்று வேதம் சொல்லும் உண்மையை அறியா.தீவினையில் பதிக்கப்பட்ட உயிர்கள் அதன் காரணத்தையும் அதனால் விளையும் பயனையும் அறியா
 
34.  மோட்ச நிந்தை : "வீடு பேறு இல்லை என்று இகழ்தல்" கூடாது. :
 
2558: இம்மை மறுமைகளில் துன்பம் அடைவர் :
பரகதி (வீடு பேறு) உண்டு என்பதை இல்லை என்று மறுப்பவர்கள் நரகத்தை அடைவதை உலகவர் அறிவர்.  மேலும் அவர் வீடு தோறும் போய் இரப்பர். நாள் தோறும் உணவுக்காக அவர் குதிரை போல் தாவிப் போய் அலையத் தொடங்குவர்.
 
2559: குரு உபதேசப்படி நெறி நில்லாதவர் இயல்பு :
குருவானவர் காட்டிய நெறியில் நில்லாதவர் இறைவனுடன் கூட மாட்டார்.  இறைவனிடம் விருப்பம் இல்லாதவராய் நூல்களில் உள்ள நயத்தை அலங்காரமாகப் பேசிக் கொண்டிருப்பார்.  இறைவன் உயிர்களுக்குச் செய்யும் உதவியை எண்ணிப் பாட மாட்டார். அவ்வாறு பாடி ஆடுபவர் எய்தும்
பேறு இப்படி ஆகுமோ.  ஆகாது.
 
2560: இறைவன் வெளிப்படும் அமயம் :
விழிப்பு நிலையில் உள்ளத்தில் எண்ணங்கள் தோன்றிக் கொண்டே இருக்கும்.  குரு காட்டிய வழியில் நின்று சகஸ்ரதளத்தில் பொருந்தினால் உள்ளத்தின் ஓட்டம் நின்று விடும்.  அது நின்று விட்டால் அதைச் செலுத்தும் அகந்தையும் அதை ஆராயும் புத்தியும் ஓய்ந்துவிடும். உள்ளம் நீர் நிலைபோல் ஓட்டம் இல்லாது இருக்கும்.  இதையே இறைவனின் இடம் என்று கொண்டு அங்குப் பொருந்தும் வகையில் நின்றால் இறைவன் எழுந்தருளி வந்து வேண்டியவற்றை அளிப்பான்.
 
2561: பிறவிக் கடலைக் கடப்பதற்குத் தோணியாவான் இறைவன் :
மேடான இடத்தில் தங்கியிராத நீரைப் போல் உடம்புள் பொருந்தி நில்லாமல் ஓடும் உள்ளத்தில் அருளைச் சேர்த்து வைத்துக் - கடலில் நில்லாமல் கடந்து செல்லும் மரக்கலம் கரை சேர்வதைப் போன்று - பிறவிக் கடலில் நில்லாமல் உயிர்களைக் கரை சேர்ப்பதற்குத் தீ வண்ணனான சிவன் வெளிப்பட்டு நிற்பான்.
 
2562: நன்னெறி காட்டியும் காணாத மூடர் :
தாமரைக் கொடியானது அந்நீர்நிலையைக் கடப்பவரைத் தடுப்பது போல் பரகதி இல்லை என்பவர் சீவரைத் தடுப்பர்.  அன்னார் சிவத்தை அடைய வேண்டிய வழி வெளியே உள்ளது என்று திரிவர்.  அடைவதற்கான வழியைக் காட்டினாலும் அதைக் காணாத மூடர் ஆவார்.  அவர்கள் நன்னெறி
யை நாடாமல் தீய நெறியை நாடித் தேடுகின்றனர்.  என்னே அறியாமை!
 
2563: அறிவிலார் எங்கும் நிறை இறைவனை அறியாமல் கெடுகின்றனர் :
அஞ்ஞானத்தால் மூடப்படாத ஞானியர் சிவபெருமானைத் தம் சிந்தையுள் நாடிச் சிந்தித்திருப்பர்.  ஆனால் அஞ்ஞானியர் காட்டிலும் மலையிலும் மருத நிலத்திலும் ஊடுருவி நிற்கும் ஒப்பில்லாதவனை நினையாமல் கெடுகின்றனர். 
 
2564: ஞானியர் சிவனுடன் உறைவர் :
செத்த பின்பு உயிர் பயணம் தொடங்குவது தெற்கு நோக்கி நரகத்துக்கும், வடக்கு நோக்கிச் சொர்க்கத்துக்கும் ஆம்.    ஆனால் அழியாத அமரத்தன்மை பெற்றவர் இலட்சியத்தை அடையக்  கிழக்கு நோக்கி அறிவு உதயமாகும் நெற்றிக் கண்ணுக்கும் மேற்கு நோக்கி அறிவு மறையும் இடமானபிடரிக் கண்ணுக்கும் போவார்.  இந்த இரண்டுக்கும் இடையே நாவினுக்குமேல் பிரமரந்திரம் என்ற உச்சித் தொளையாகிய மந்திரப் பொருள் இருக்கின்றது. அக்கினிக்கலையை ஒளி பெறச் செய்து அதில் பொருந்தி இருக்க உயிர் அங்கே சிவத்துடன் தங்கும்.
 
2565: ஞானியரைப் பழித்த தீவினையாளர் வருந்துவார் :
காம மயக்கம் ஏற்பட மங்கையர் பார்த்தாலும் அரிய தவம் செய்கின்ற ஞானியர், தம்மைப் பொருந்துமாறு சொன்னவற்றை மனத்தில் வைத்துக் கொள்ள மாட்டார். ஞ்ஞானியரைச் சினம் உண்டாகப் பேசிய தீவினையுடையவர், தமக்கு வல்வினைகள் பொருந்துமாறு தாங்கிக் கொண்டிருப்பர்.
 
 
35: இலக்கணாத் திரயம். = மூன்று இலக்கணை. 
            இது ஒரு பொருளின் இலக்கணத்தை மற்றொன்றுக்குக் கூறுவது. 
இது விட்ட இலக்கணை, விடாத இலக்கணை, விட்டும் விடாத இலக்கணை என்றுமூன்று வகைப்படும்.
கங்கையில் சிற்றூர் உள்ளது என்றால் கங்கை என்பது ஆற்றை விட்டு அதன் கரையைக் குறித்தது.  இது விட்ட இலக்கணை.
சிவப்பு ஓடுகிறது; வெள்ளை ஓடுகிறது என்றால் சிவப்பு, வெள்ளை என்ற நிறம் விடாமலே அந்நிறங்களையுடைய குதிரைகளைக் குறித்தன.  இது விடாத இலக்கணை.
அந்தத் தேவ தத்தனே இவன் என்றால்  தேவெ தத்தன் என்னும் பெயர் முன்பு பார்த்த இடத்தையும் காலத்தையும் விட்டுத்  தேவ தத்தனை விடாமல் குறிக்கிறது.  இது விட்டும் விடாத இலக்கணை.
 
2566: இலக்கணை பயன்படுமாறு :
ஆன்மா வானத்தில் செல்லும் என்பது விட்ட இலக்கணை. இங்கு போக்கு வரவுஇல்லாத ஆன்மா என்பது ஆன்மாவை விட்டு சூக்கும உடலைக் கொள்வதால் இது விட்ட இலக்கணை.  ஆன்மா உபசாந்தத்தில் அமைகிறது என்பது விடாத இலக்கணை.உபசாந்தத்தில் ஆன்மாவுக்கு இன்ப அனுபவம் உண்டு.  இங்குத் துன்ப நிலையில் இருந்த ஆன்மாவை விடாமலேயே இன்ப நிலையிலும் கொள்வதால் விடாத இலக்கணை.  
ஆன்மா சாந்தம் முதலியவற்றைக் கேட்டல் முதலியன செய்யும் என்பது விட்டும் விடாத இலக்கணை.  கேட்டல் என்பது ஐம்பொறிகளுக்கே அன்றி ஆன்மாவுக்கு இல்லை.  ஆதலின் அதனை ஒரு வகையிலே விட்டும் செவி முதலியவற்றைக் கேட்டல் முதலியவற்றில் செலுத்தி நிற்கிறது.  ஆதலால் ஒரு வகையில் ஆன்மாவை விடாதும் கொள்வதால் இது விட்டும் விடாத இலக்கணை.
 
2567: சொரூப நிலையை அடைவதற்குரிய வழி :
பிரணவ வில்லைக் கொண்டு புருவ நடுவையும் பிடரிக் கண்ணையும் சேர்க்கும் நாணின் விசையால் மேலே எழும் அம்பு போன்ற சிவனைப் பிரமம் என்ற இலட்சியத்தில் செலுத்தத், தம்மைக் கொல்வதற் காகக் காத்திருக்கும் ஞானேந்திரியம் என்ற  யானைகள் ஐந்தும் சீவன் கவிழ்ந்த சகஸ்ரதளத்தைக் கடந்த போது விழுந்து விட்டன.  பிரணவமான வில்லில் இருந்து உய்ர்ந்து சென்றவர்க்குப் பிரகாசமான நவமணி போன்று சிவம் வெளிப்பட்டு விளங்கும்.
 
36: தத்துவ மசி வாக்கியம் :
தத் + துவம் + அசி = தத்துவமசி.  இது சாம வேதப் பெரு வாக்கியம்.  இதன் பொருள் "அது நீ ஆகிறாய்"  இது குரு மாணவனுக்கு முன்னின்று உபதேசம் செய்வதால் அமையும்.
 
2568: தத்துவ மசி உண்மை :
உயிர் சீவதுரியத்தில் பொருந்தித் தத்துவங்களை விட்ட நிலை தொம்பதம்.
உயிர் அதன் மேலான பரதுரியத்தில் பரத்தொடு பொருந்திய நிலை தற்பதம்.
உயிர் சிவதுரியத்தில் பொருந்தியிருப்பது அசிபதமான உண்மை நிலையாகும்.
உயிர் இதில் எல்லாத் தத்துவங்களும் நீங்கித் தத்துவமசியால் பெறும் உண்மை
யான பேற்றை அடையும்.
 
2569: உபசாந்தம் பெற்றுச் சிவகதி அடைய வேண்டும் :
முப்பத்தாறு தத்துவங்களையும் நீங்கிய ஆன்மா பொருந்தும் தொம்பதம் தூய நிலையாகும்.  அ•து விருப்பு வெறுப்பற்ற உபசாந்த நிலையில் மேலுள்ள தற்பதநிலையை அடையும்.  இந்த நிலையைக் கடந்து சீவன் பெறும் அசிபதமான சிவகதி இறுதியான தொந்தத்தசி - தத்துவமசிப் பொருளாகும்.  தொம்பதம், தற்பதம், அசிபதம் முறையே பொருந்திச் சிவகதி அடைவதே தத்துவமசி உபதேசத்தால் அடைவதாம். 
 
2570: தொந்தத் தசி என்ற மூன்று பதங்களிலும் பொருந்திய சீவனே சிவன் :
'அவனே இவன்' என்ற தேவதத்தனிடத்துச் சொல்லப் பெறுவதான விட்டு விடாத இலக்கணை தொந்தத்தசி என்ற மூன்று பதங்களிலும் உண்மையான சாந்தம் பெற்ற சீவனுக்கும் ஆகும்.  அங்ஙனமாகிய சீவன் பரனாய்ச் சிவனாக இருக்கும்.
 
 
2571: வேதாந்தமும் சித்தாந்தமும் ஒன்று:
" துவம் தத் அசி " என்பதே " தொந்தத்தசி " ஆகும்.  அவை இரண்டும் இயைபு காரணமாகப் பொருந்தின ஒன்றேயாம்.   தவப் பயனான வேதாந்தத்தில் தத்துவமசி " நீ அது ஆகிறாய் " என்று கூறப்படுகிறது.  வேத முடிவான சித்தாந்தத்தில் " நீ சிவம் ஆகிறாய் " என்று கூறப்படுகிறது.  இரண்டும் ஒன்றே.
 
2572: சிவம் விளங்கும் நிலை :
சீவ துரியத்தில் அடங்கிய, சொல்வதற்கு இயலாத சீவப்பாழை - அதன் உண்மை இயல்பை அறியாதவர் மேலான பரம் எனப் புகல்வர் .  இது பரநிலை அன்று என்பதை உணரமாட்டாத அவர், பரத்துக்கு மேலான பரமாகியசிவம் உதிக்கின்ற அந்த அரிய இடம் எது என்பதை அறியமாட்டார்.
 
2573: தொம்பத சீவன் பக்குவம் அடைந்து சிவம் ஆதல் :
தொம்பதம், தற்பதம், அசிபதம் ஆகிய மூன்றும் பொருந்திய சீவதுரியம், பரதுரியம், சிவதுரியம் ஆகிய முத்துரியத்துக்கு மேல் சீவன் சிவத்தை விரும்புவதில்  உம்முடைய பதமான தொம்பதம் பக்குவம் ஆகும்.  அப்போது சீவன் பரனாக விளங்கிச் சிவம் ஆகும்.
 
2574: பிரணவ உபதேசத்தை எண்ணியிருப்பின் சிவன் தோன்றுவான் :
உயிருக்கு அமைத்த துரியத்தில் பொருந்தும் ஆனந்தத்தில் நாதத்தைத் தோன்றச் செய்த பிரணவ உபதேசத்தை உண்மையான இதயத்தில் எண்ணியிருங்கள்.இருந்தால் அந்த மெய்யுணர்வு பொருந்தியிருக்கும் போது சிவன் தோன்றுவான்.
 
2575: உபசாந்தத்தில் சிவனை நாட வேண்டும் :
ஆணவம், கன்மம், மாயை என்ற மலத்தைப் பின் வைத்து, (சாக்கிரம்)நனவு, (சொப்பனம்)கனவு,  (சுழுத்தி)உறக்கம், (துரியம்)பேர் உறக்கம், (துரியாதீதம்) உயிர்ப்படக்கம் என்ற ஐந்தையும் முன் வைத்து,   உயர்ந்து சென்றால், பின் தூய்மையான தான் செல்லும் சிவ கதியில், சத்தை ஆதியாகவுடைய உபசாந்தம்
உண்டாகும்.  அங்கு மனத்தையும் சொல்லையும் கடந்து விளங்கும் மன்னனான சிவத்தை நாடுவாய்.
 
2576: நாம ரூபம் கடந்த பொருள் வெளிப்பட்டு விளங்குதல் :                                                          இறைவனின் எல்லையைக் கடந்து வேறு ஒரு பொருள் இல்லை. அதலால் அது அகண்டமாய் என்றும் ஒரு தன்மையாய் உள்ளது.  அது வாக்கு கடந்து குணம், குறி ஒன்றும் இல்லையாதலால் பெயர் இல்லாதது.
 
எல்லாப் பொருள்களுள்ளும் நிறைந்து நிற்பதால் ஒரு பொருளுடனும் கூடாதது.  அதற்கு ஒரு செயலும்
இல்லை.  .ஆதலால் கருத்தாலும் நெருங்க முடியாதது.   உலகத்துக் காட்சிக்கு வேண்டப்படும் காரணம் இல்லாமலே தன்னை விளக்கும் இயல்பு வாய்ந்தது. 
 
2577: நான் அதுவானேன் எனப் பாவித்துச் சீவன் சிவமாதல் :
நீ அது ஆனாய் என்ற குரு உபதேசப்படி அமைந்த பெருவாக்கியம் நாடிய மாணவன் " அது நான் ஆனேன் " என்று பாவிக்கின் பாசம் முதலியவை நீங்கும்.நீங்கிச் சிறப்புடைய நந்தியின் அருளால் சேய்மையாய் எண்ணப்பட்ட சிவமாக ஆக்கும்.  அப்படியாகி அதுவாய் அழிவை அடையாத ஆனந்த வடிவாகும்.
 
2578: சீவன் சிவமாதற்குப் பிரணவமே காரணம் :
உயிர் பரமாகவும், உயர்வுடைய பரநிலையை அடைந்த சீவனிடம் விளங்கும் அரிய சிவமான பிரணவ வடிவத்தைத் தகுந்த குரு விழிக்கச் செய்தால் அன்றி மூன்று வேதங்களிலும் புகழ்ந்து பேசப்பட்ட அந்த பெருவாகியப் பொருள் சீவனுக்கு விளங்காது.  பிரணவ ஞானமே சீவனைச் சிவனாக்கும்.
 
2579: பிரணவம் தொழிற்படும் விதம்:
பிரணவம் வாய், நாசி, புருவ நடு, உச்சி என்பனவற்றில் ஆகி, நாசி முதல் உச்சி முடிய விளங்கும்.  தாய் நாடியான சுழுமுனையில் விளங்கும் நாதம் முதலாகச் சகல நிலையில் விளங்கும் தத்துவங்களும் சீவன் நாடும் ஒளியாய் முன் சொன்ன ஐந்து இடங்களிலும் பாய்ந்து சிவகதி அடையும்.          இயல்பான மூச்சு கதி மாறுதல் பெற்று மூக்குள் புகுந்து பிரமரந்திரத்துக்குப் போகும்.  இதனால் தலையின் உட்பகுதியான மூளைப் பகுதியில் பிராணகலை பாய்ந்து ஒரு சாந்தி நிலை அடையும்.  ஒரு குழந்தை தாயை விரும்புவதைப் போல் பயிற்சியாளர் இதனை விரும்புவர்.  இது தான் சிவகதி அடைவதற்குரிய
வழியாகும்.
 
2580: சிவனை அடையும் குறியை அறிந்து போற்றுபவரே அறிவுடையவர் :
சுட்டி அறியும் அறிவும், அறியாமை ஆகிய இரண்டையும் அகற்றி - அறிவு வடிவாய் எங்கும் நிறைந்து விளங்கும் சிவனை " அவனை விட்டு நீங்காது எம் தலைவன் " என்று விரும்பிப் போற்றும் குறியை அறியாதார் சிவனைத் தம்மிடம் பொருந்திக் கொள்ள அறியாதவர் ஆவர்.
 
2581: சிவம் சீவர்களின் பக்குவத்துக்கு ஏற்ப நடத்தும் :
உலகியல் அறிவு வாய்க்கப் பெற்றவர் சுக நிலையைத் தரும் அப்புத் தத்துவம் அக்கினித் தத்துவம் என்னும் இரண்டையும் காண்பார்.  மூலாக்கினியால் வெதுப்பப்பட்டுக் காமக் கழிவு செய்வதை அறிவார்.   ஆனால் தத்துவ ஞானியரே சுகத்தைத் தரும் அப்புத்தத்துவம்  உடலில் எங்ஙனம் உள்ளது என்பதை அறிவார். 
நீர் நிலை போன்ற ஒளியையும் அங்குள்ள ஒலியையும் காண்பார்.   எல்லாவற்றையும் அறியும் சிவன் அங்குக் கலந்திருந்து புலப்படுத்தினால் அல்லாது சீவரின்சிற்றறிவால் பேரறிவுப் பொருளை அறிய இயலாது.
 
2582:மதிமண்டலம் விளங்கப் பெற்று அறியாமை நீங்கிய பின் சீவன் பரமாகும் :
நந்தியெம்பெருமான் யாவற்றையும் சுட்டி அறியும் அறிவைக் கடந்து எல்லாவற்றையும் ஒரு சேர அறியும் ஆற்றல் உடையவன்.  ஆனால்  ஆன்மா சுட்டியறியும் கருவிகளை இழந்த போது ஒன்றையும் அறியமாட்டாத அஞ்ஞான நிலையில் உள்ளவன்.  நிராதாரத்தில் உள்ள சந்திர மண்டலம் விளங்கப் பெற்று அஞ்ஞான இருளை விட்ட பெருமை பெற்ற உயிரானது  இறைவனுடன் ஒன்றாம்
சிவநிலையில் அமையும்.  அவ்வளவில அந்த உயிர் பரம் என்ற பெயரைப் பெற்று விளங்கும்.
 
2583: சிவனது கருணை :
சிவபெருமானின் திருவடியைத் தொழ வேண்டி அவனது திருமுன்பு நின்று தலையால் வணங்க அப்பெருமானும் என் முன்பு வெளிப்பட்டருளினான்.  "என் அடியை முறையாய்த் தொழ வேண்டி நீ பழமையில் நான் அது ஆனேன் என்று நீ எண்ணியது எல்லாம் சிறப்பாக இப்போது அமைவதை நீ பார்ப்பாயாக!என்று அருளினான் நெற்றிக் கண்ணையுடையவன்.அவன் கருணையே கருணை.
 
2584: சீவனைச் சிவன் ஏற்று மலம் அற்றவராக்குதல் :
இறைவன் ஒளியே மேனியாக உடையவன்.  இயல்பாகவே பாசங்களினின்று நீங்கியவன்.  பிறப்பில்லாதவன்.  இத்தகையவனான அவன் என் மனத்தகத்தே வீற்றிருந்து என்னைத் தன் அடியவனாக்கிக் கொண்டான்;  பொன் ஒளி வண்ணமுடைய புகழ் உடைய பெருமான் என்னை நோக்கி " நீ மலமற்று விளங்குவாய்" என்று கூறி என் மலங்களை நீக்கியருள் செய்தான்.
 
2585: நெடுங்காலம் மண்ணுலகில் வாழ அருள் செய்தான் :
இறைவன் எனக்கு அருளிய பின்பு நான் எனது பாசக் கூட்டமான தத்துவங்களை விட்டேன்;  ஒண்மையான சோதியைக் கண்டேன்.  என் உள்ளமானது உடல் நினைவைவிட்டு வேறாக எங்கும் செல்லுல் ஆற்றல் பெற்றதாய் ஆயிற்று.எனினும் பணிவுடன் அவனை மறவாதிருந்த என்னை அவன் நிலவுலகத்திலேயேமரணம் இல்லாமல் நீண்ட காலம் வாழ வைத்தான்.
 
2586: பூரணமாய் விளங்குதல் :
மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் உடலில் பொருந்திய ஞானேந்திருயங்கள் ஐந்தும் அவற்றின் வழியான அந்தக் கரணம் நான்கும் மற்றத் தத்துவங்களும்எல்லா வகைப்பட்ட உயிர் இனமும் இறைவனின் அருளால் இயங்குவன.  ஆதலால் அவன் இவற்றை இயக்குவதற்குரிய கையும் சொல்வதற்குரிய வாயும் இன்றி இறைவன் எங்கும் உடலாகவும் அறிவாகவும் நிறைந்த பூரணப் பொருள்
ஆகவும் விளங்குகிறான். 
 
37: விசுவக் கிராசம் :விசுவம்=உலகம். கிராசம்=கவளம். உலகம் கவளமாதல்.
அதாவது உலக உயிர்ப்பு ஒடுக்கம் எனப்படும்.  இறைவனது பெருநிலையில் எல்லாம் விழுங்கப் பெறும்.
 
2587: பரம் பொருளிடத்து ஒடுங்கும் :
வானில் தோன்றும் நிழல் வடிவம் வானிலேயே மறைந்து போகும். ஓடும் நீரில் உண்டாகும் நீர்க்குமிழி அதிலேயே சிறிது நேரம் இருப்பது போல இருந்து பின் மறைந்து விடும்.  சுடர் விட்டு எழுகின்ற அக்கினியின் முன் கர்ப்பூரம் எரிந்து மறையும். அது போல தூலமாகக் காணப்படும் இவ்வுடல் தோன்றிய இடமான சிவத்திலேயே காணப்படாததாய் ஒடுங்கும்.
                                                                                                                                                                   2588: உயிர் ஒளி மயமான பின் சிவம் போல் எல்லாப் பொருள்களிலும் கலந்து விளங்கும் :
தூல உடல் ஒளிமயமான உயிரோடு பிரிவின்றி ஒன்றுபட்டால், அப்போது அது பர நிலையை எய்திச் சிவசத்தியுடன் ஒன்று படும்.  உடலாகிய சிறை நீக்கப்பட்ட பின்பு உடலில் இருந்த உயிர், சிவம் எங்கும் விளங்குவது போன்று விளங்கித் தூல பூதத்திலும் சூக்கும பூதத்திலும் கலந்து சிவப் பரப்பில் விளங்கும்.
 
2589: உலகம் காட்சிப்படாததாய் உள்ளமை :
செவி, மெய், வாய், கண், மூக்கு ஆகிய அறிகருவிகளும் பக்குவப்படாத மனம் முதலிய உட்கருவிகள், புருடன் ஆகிய ஐந்தும் பொருந்தி நிலை பெறாமல் உலக முகமாக விரிந்து கண்டப் பொருளில் சென்றால், உலகம் தவிர்க்க முடியாததாய் நிலையான பொருள் போல் விளங்குகிறது.   அவையே சிவமான
அகண்டப் பொருளில் குவிந்தால் நிலையானவை போல் காணப்பட்ட உலகம் காணாமல் போகும்.  கருவிகள் விரிந்த நிலையில் உலகம் காணப்படுவதாயும் குவிந்த நிலையில் காணப்படாத்தாகவும் உள்ளது.
 
2590: பரனுடன் கலந்த சீவன் பரவியதாய்ப் பரனின் தன்மையைப் பெறும் :
முப்பத்தாறு தத்துவங்களையும் விட்டுவிட்ட ஆன்மா பரனின்நிலையை அடைந்துஎங்கும் பொருந்தும்படி பரந்ததாய் விளங்கும்.  சிவச் சார்பினால் எங்கும் பரவியிருக்கின்ற பேராற்றலைப் பெற்று எங்கும் நிறைந்த பொருளாய் விளங்கும்.  எங்கெங்கும் எது எதையும் செய்யும் ஆற்றல் கொண்டதாய் உலகத்தை அழிக்கவும் ஆக்கவும் வல்லதாகும்.  இத்தகைய சிவனருளைப் பெற்று யான் வாழ்பவன் ஆனேன்.
 
2591: மனத்தில் உள்ள பரம் மேல் நோக்குமாயின்
சிதாகாயப் பெருவெளியில் விளங்கும் :
தத்துவ ஆராய்ச்சியில் ஆராய்ந்தறிந்து சிவப்பரப்பான அகண்ட அறிவு பொருந்தும் துரிய நிலையில்  உள்ளம் நிலை பெறும் போது - பரம் உலக முகமாய்ப் போய் அனுபவித்த போகங்களை ஒழித்து விடும். சிவ நோக்கில் கிளர்ந்தெழுந்துமேலே போகும்  பரம் சிவத்தைப் பொருந்தும் போது  சிதாகாய வடிவினன் ஆகவிளங்குவான்.
 
2592: ஆன்மா சிவமாய் விளங்கும் :
தீயிடை காய்ந்த இரும்பு தன் மீது படும் நீரை உள்ளே இழுத்துக் கொள்வதைப் போன்று என்னை உள்ளே கொண்டு மிக மேன்மையான பரமானது கீழ்முகமாக நோக்குவதை விட்டு வன்மையுடைய சீவப்பாழ், சத்திப்பாழ், சிவப்பாழ் ஆகிய மூன்று பாழ் வெளியையும் விழுங்கி விளங்கிய என் நந்தியெம்பெருமான் என் இதயத்தில் இருக்கின்றான்.
 
2593:அகிலமும் சிவன் உண்பான்; தான் கெடாமல் தன் இயல்பில் விளங்குவான்:
யானை நோய் உண்ட விளாம்பழம் போல் - சீவனும் அதன் மேல் நிலையான பரமும் சிவன் முன் ஆகும்.  சீவன் துரிய நிலையை அடையுமானால் சிவபெருமான் சீவனின் இயல்பான தன்மை எல்லாம் மாறும் வண்ணம் செய்து தன் வயப்படுத்திக் கொள்வான்.
விளாம்பழத்தை யானை நோய் பற்றினால் உள்ளே ஒன்றும் இருக்காது.  ஓடு மட்டும் இருக்கும். அது போல சீவன் அக்கினி உருவில் இருப்பினும் உள் சத்துகெடுவது போன்று சீவனது இயல்பான தன்மை கெடப் பெறும்.
 
2594: சிவன் ஆதியாகவும் அந்தமாகவும் விளங்குவான் :
எல்லாத் தத்துவங்களுக்கும் முதலாகவும் முடிவாகவும் உள்ள பரனான சிவபெருமான் அவரவரின் மேலான பரம் என்ற நிலையில் அவரவர் தன்மைக்கேற்பப் பொருந்தியுள்ளான். அப்பெருமான் தன்னிடம் நெருங்கியவரின் பரத்தின் கீழான தத்துவங்களை எல்லாம் உண்டு,  காண்பான்,  காட்சி,  காட்சிப்பொருள் என்ற நிலைகளின் முடிவில் வீற்றிருக்கின்றான்.  இந்த உண்மையை நம்மால் அறியமுடியாது.
 
38. வாய்மை. உண்மை. பொய்ப் பொருளை நீக்கி மெய்ப் பொருளைச் சேர்தல் :
 
2595: சீவன் இடைவிடாமல் சிவனையே சிந்திக்கில் குற்றம் நீங்கும்.
சீவன் ஒளி மயமாய் சுடர் விட்டு விளங்கும் :தீயில் இடப்பட்ட பொன் மாசு நீங்கி உயர்ந்த பொன்னாய் விளங்கும்.  அது போல மலம் நீங்குமாறு இறைவனை இடைவிடாது மாறுபாடின்றி உள்ளத்தில்
வைத்துத் தியானித்தால் இருளை நீக்கிய செழுமையான சுடராகச் சீவன் திகழும்.
 
2596: மெய்ப் பொருளை அறியத் தொடங்கினால் மெய்ப் பொருள் ஆகலாம் :
எல்லவற்றையும் அறியும் பேரறிவுப் பொருளான சிவத்தை அறியாது பிற உலகியல் பொருள் எல்லா வற்றையும் அறிவதால் பயன் ஒன்றும் இல்லை.   அங்ஙனம் எல்லாவற்றையும் அறியும் பேரறிவுப் பொருளை நான் என்று பாவனைப் பயனால் உலகில் உணர்ந்தால், எல்லாவற்றையும் அறியும்
சிவமாகச் சீவன் விளங்கும்.
 
2597: தலையில் விளங்கும் அந்த நாகேசுவரனை
      உடல் தர்மத்தைக் கடந்தால் காணலாம் :
அருள் சுரக்கும் பார்வதியம்மையை ஒரு பாகத்துக் கொண்ட இறைவனை, சந்திர கலையில் மறைந்து விளங்கும் பெருமானை - தலையில் பொருந்தியுள்ள சகஸ்ரதளத்தின் மீது நின்று இடைவிடாது தியானம் செய்து,  ஊன் பொருந்திய இயல்பைக் கடந்து  யானும் கண்டு கொண்டேன்.
 
 
2598: சிவத்தை அறிந்தவர் உலகை நடத்திச் செல்வர் :
நிராதாரத்தில் விளங்கும் சிவத்தை அறிந்து ஒன்றுபட்டவர் உலகினை நடத்திச் செல்லும் தலைமை யுடையவர் ஆவர்.  அத்தகையோரே சிவதத்துவத்தை அருளும் மூர்த்தியும்  ஆவார்.  அவர்களால் உலகில் மழைவளம் இருக்கும் என்று வேதங்கள் அறுதியிட்டுக் கூறுகின்றன.  அவர் ஊனும் உருகும் உள்ள
முடையவரிடம் நிலை பெற்று விளங்குவர்.
 
2599: ஞானியர் செயல் :
பிரபஞ்சப் போரில் மயக்கம் தெளிந்து - சிவஞானத்தில் திளைக்கும் சிந்தை இறைவனை நாடி - உலகியல் மயக்கத்தில் ஈடுபட்ட அச்சிந்தையை மாற்றி அரிய மெய்ப் பொருளான சிவத்தின் திருவடியைப் போற்றி வழிபடுவதற்காகவே சிவத்தின் திருவருள் உயிர்கட்குக் கிட்டியது. 
 
2600: மெய்ப் பொருளை நாடுபவர்க்குச் சிவன் அருளல் :
இறைவன், மெய்ப்பொருளுடன் கலந்திருப்பவரின் உடம்பிலும் உயிரிலும் பிரிவு இல்லாமல் நிற்பவன்.     உலகப்பற்று உள்ளவரிடம் போய் அடையாதவன்.  உய்யும் வகையறிந்து நாடுபவரின் பற்றுகளை அழிப்பவனாய் நின்று, அவர் தம் உயிரிலும் உடலிலும் பொருந்தி இன்பத்தை விளைவிப்பவனாகவும் உள்ளான்.
 
2601: சிவன் சுழுமுனையில் விளங்கித் தோன்றுவான் :
இறைவன் மெய்ப்பொருளாம் சிவத்துடன் பிரிவின்றி நிற்பவரிடம் கலந்திருப்பவன்,   உலகப்பற்று உள்ளவரிடம் போய்ச் சேராதவன்.   இத்தகையவனைச் சுழுமுனை நாடியில் பிராணன் பொருந்தி, பிராணன் பிரமரந்திரம் நோக்கி மேல் எழும் போது சிவபெருமானைச் சுழுமுனையில் எண்ணியிருப் பவர்க்கே மனத்தில்பெற முடியும்.
 
2602: இருபோதும் சிவனை எண்ணியிருப்பவர்க்கு அவன் கபால வழியில் எதிர்ப்பட்டு விளங்குவான் :
பகலிலும் இரவிலும் பிராணன் தலையில் மோதுதலை அடைந்து, சிவத்தை உடம்பில் பொருந்தும்படி தியானித்திருப்பின், அப்பெருமான் தலையின் மேல் சிறந்து விளங்குவான்.  பொய்யான உலக நோக்கில் செல்வதையும் புலன் வழிச் செல்வதையும் விட்டு நின்றால் இறைவனும் கபாலவழியில் எதிர்ப்பட்டுத் தோன்றுவான்.
 
2603: இறைவன் திருவருளால் மேல் நோக்கிய சீவயாத்திரை நிறைவேறாது :
பிராண ஜெயம் பெறுவதும் பெறாமல் போவதும் இறைவன் திருவருளைப் பொறுத்ததே ஆகும்.   இறைவன் பிராண மயனாய் இருந்து சீவனை மேல் முகமாகப் போகச் செய்யும் "வாசி" என்ற அருள் நெறி உத்தமமான நந்தியெம்பெருமான் சீவன் உய்யும்பொருட்டு அருளிச் செய்ததாகும். பொய்யானவற்றுக்கு விளை நிலமான உடலில் உள்ள ஒன்பது துவாரங்களையும் அடைத்து நின்றால் மெய்யான வாசி என்னும் இறைவனின் வான் புரவியைக் கொண்டு சீவப் பயணம்செய்யலாம்.
 
2604: பொய் நீங்கியவர்க்கே இறைவன் புகலிடம் ஆவான் :
சிவன் சுழுமுனை நாடியில் கலந்திருப்பவன்.  நினைப்பவர் உள்ளத்துள் விளங்குபவன்.  மனத்தொடு உடம்பிலும் பொருந்தியிருப்பவன்.   மூலாதாரத்தில் நிலை பெற்றவன்.  உலகப்பற்றை விடாதவரிடம் வெளிப்பட்டு அருளாதவன்.   மலம் அற்றவன்.  இவ்வியல்பு வாய்ந்த இறைவன் உடல்பற்றையும், உலகப்பற்றையும் விட்டவர்க்குத் தஞ்சம் அளிப்பவனாய் உள்ளான்.
 
2605: இறைவனைக் காணும் முறை :
உண்மையான திருவடிகள் மனத்தில் பொருந்தும்படி வைக்கின்ற நந்தியைச்
சுழுமுனையான தாழ்ப்பாளைத் திறந்து கொண்டு அறிபவர் எவரும் இலர். 
பொய்யின் மூலம் வைக்கப்பட்ட உலகப்பற்றை நீ விட்டு, அங்குச் சுழுமுனை
யைத் திறந்து கொண்டால் அதுவே கிடைத்தற்கரிய பேறாகும்.
 
2606: சீவர் இறைவரை உணர்வால் வழிபட்டால் சகஸ்ர தளத்தில் விளங்கி அருள்வான் :
உய்வு பெற வேண்டுமானால் சீவர்களாகிய நீங்கள் உணர்வால் போற்றி வழிபடுங்கள்.    அப்போது மெய்யன் அமைத்துக் கொடுத்த சன்மார்க்க நெறி அமையும்.  உறுதியுடன் பொய்யான உடலைக் கடந்து விளங்குபவரின் சகஸ்ரதளத்தில் நம் தலைவன் வேறுபாடு இல்லாது விளங்குவான்.
(உணர்வு என்பது குருவால் மாணவனின் உடலில் அடங்கியிருந்த ஒரு சத்தியைஎழுப்புவது குறிப்பிடப்படுகிறது. அந்தச் சத்தியால் எல்லாஅறிவும் இயங்குகிறது.அது பொறி அறிவுக்குக் காரணமாய் இருந்தும் அவை இல்லாமலும் இருக்கும் ஓர் அறிவு என்பர்.  அந்த அறிவின் நிலைக்களம் பிடரிக்கண்  ஆகும். இந்தக் கண்ணின் விழிப்பே குருவினால் மாணவனுக்கு உணர்த்தப் பெறுவதாகும்
அங்ஙனம் உணர்த்தப் பெற்றவர்க்கே அரன் நெறியானது அமையும்.)
 
2607: சகஸ்ர தளத்தில் விளங்கும் சிவத்துள் சீவசத்தி கூடினால் சிவகதி விளங்கும் :
நறுமணம் விளங்கும் சகஸ்ரதளமான மலரில் சிவமான கனி ஒன்று உண்டு.  அந்தக் கனி, விஷய வாசனை யான பறவைகள் கொத்தித் தின்பதற்கு எட் டாததாகும்.   அந்த விஷய வாசனைகளான பறவைகளைச் சீவ சத்தியை மேல்  நோக்கச் செய்கின்ற அம்பினால் எய்து அகலத் துரத்தினால் செம்பொன் ஒளியுடைய சிவகதியைப் போய் அடையலாகும்.
 
2608: சிவபெருமான் கலக்கத்தைப் போக்குவான் :
மயக்கத்தைத் தருகின்ற ஐம்புல ஆசைகளை அறுத்துக் கலக்கத்தைப் போக்கிய சிவத்தைத் தொடருங்கள்.  வேறு இறைவன் உண்டு என்று மயங்காமல் சிவனே எம் இறைவன் என்று எண்ணித் தொடரின் உய்ந்து
போவாயாக என்று என் மனத்தை அவனுடன் சேர்த்துக் கொண்டான்.
 
2609: மனத்தால் தனித்திருந்து தியானம் செய்வதன் பலன் :
உள்ளத்தால் உலகத்தைப் பற்றாமல் சிவத்தைப் பற்றி எண்ண வல்லவர்க்குச் சிவம் பதியும் மேலான சூக்குமஉடல் இனமாய்ப் பொருந்தும் என்பர்.உலகத்தைப் பற்றிய எண்ணம் இல்லாமல் தகுந்தபடி தியானம் செய்தால் ஞான பூமியில் தூய சிவத்தின் அருள் உண்டாகும்.
 
39. ஞானி செயல் :  தன் இயல்பு உணர்ந்த ஞானியின் செயல்.  வினையைக் கடிதல் ஞானியின் செய்கை :
 
2610: வினைகளால் துன்பம் அடையாதவர் :
நன்மையை அளிக்காத ஐம்புலன்களின் தன்மையை ஆராய்தலால் நன்மையைத் தரும் தன் இயல்பை உணர்ந்த தத்துவ ஞானியர் முன் பிறப்பில் செய்த பழைய வினைகள் வந்து சேருமாயின், அவற்றை அனுபவித்துக் கழிப்பர்.  அதன் பின்பு இப்பிறவியில் செய்யும் வினைகளைக் கருதிச் செய்யாமல் அவற்றினின்றும் நீங்க முயற்சி செய்பவர் ஆவார்.
 
2611: தத்துவ ஞானியர் சிவனருளால் வினையை அறுப்பர் :
தன் உண்மையை உணர்ந்த ஞானியர் பழ வினையின் பந்தத்தைச் சிவ சிந்தனையால் விலக்கிடுவார்கள்.  தலையின் மீது விளங்கும் சிவனின் திருவருளால் பின் வர இருக்கும் வினையைத் தோற்றம் எடுக்காமலே
அழித்து விடுவார்கள்.
 
2612: ஞானியர் அடையும் பயன் : சிவர்களின் மனம் மொழி செயலால் வலிய வினை வந்து சேரும்.  சீவர்களின் முக்கரணங்களும் உலகியலைப் பற்றாமல் சிவனைப் பற்றியதாகில் வலிய வினை வந்து
சீவர்களைப் பற்றாது.  சாதனையால் மனம், சொல், செயல் கெட்டு மௌனமாய் இருப்பவர் தன்னை வினை பற்றாமல் மாற்றி அமைத்துக் கொள்ளும் ஞானியாவார்.
 
40. அவாவறுத்தல்.  (பொருளின் மீது செல்லும் ஆசையை அகற்றுதல்.)
ஆசை பிறப்பைத் தருவது.ஆதலால் அதனை அறுப்பது ஞானியர் கடமை
 
2613: ஆசையை விட்டவர் இறைவனை அடைவர் :
கீழ் நோக்கிச் செல்லும் அபான வாயுவின் கதியை மாற்றி மேலே பிரமரந்திரத்தை நோக்கி செலுத்தும் வாசி யோகத்தை - பிராணனையும் சுழுமுனையையும் பற்றிப் பேசுவதாலும்,  அவற்றை நெறிப்படுத்தும் முறையறிந்து மற்றவர்க்கு எடுத்துச் சொல்லுவதாலும் அடைய முடியாது.   பொருளின் மீது செல்லும் ஆசையையும் மக்கள் மீது செல்லும்  ஆசையையும் அகற்றுங்கள்.  அங்ஙனம் நீங்கிய பின்பு இறைவன் இருக்கும் இடம் எளிதாய் உணரப்படும். 
 
2614: ஆசை விட்டவரின் உள்ளத்தில் இறைவன் எழுந்தருளி முத்தியை அளிப்பான் :
சிவபெருமான் வீட்டுச் சுவரில் உள்ள மாடங்களில் இருப்பவன் அல்லன்.  தனியான மண்டபத்தில் இருப்பவன் அல்லன்.  வீட்டுக் கூடங்களில் இருப்பவன் அல்லன்.  வேடம் கொண்டவரிடம் இருப்பவன் அல்லன்.  ஆனால் மனத்தில் ஆசையை விட்டவரின் மனத்தில் உள்ளிருந்த படியே அவரை இயக்கி முத்தி அருளுபவன்.
 
2615: இன்பம் பெறுவதற்கு வழி :
எவ்வகைப் பட்ட ஆசைகளையும் அறவே விட்டு விடுங்கள்.  இறைவனோடு கூட ஆசையைச் செலுத்தாமல் கை விடுங்கள்.  ஆசை உண்டாக உண்டாக அவற்றால் உயிர்க்குத் துன்பமே வரும். ஆசையை அறவே விட்டால்  ஆனந்தம் உண்டாகும்.
2616: தம்மையுணர்தல் :
சூக்குமமான பூதங்கள் சத்தம், பரிசம், ரூபம், இரசம், கந்தம் என்பன.
அவை சீவர்களை உலக முகமாய்த் தூண்டித் துன்பப் படுத்துகின்றன. அவை உடனிருந்து தீய வழியில் செலுத்துவன.  ஆதலால் உண்டாகும் பற்றுகளை விட்டு அழித்து, ஆசையை விட்டு, உண்மையான ஞானத்தை எட்டுவது சீவர்கள் தமது உண்மை நிலையை அறிந்து கொள்வதாகும்.   ஆசையை விட்டு உண்மை ஞானத்தைத் தொடர்வதே தம்மையுணர்தல்.
 
2617: ஊழி பல சென்றாலும்
இறைவன், ஆசையை விட்டவர்க்கே அருளுகிறான் :
நிறைமதியில் பொங்கும் கடல் போல் அளவு இல்லாது அளவின்றிப் பொங்கி உலகை அழிக்கின்ற பல ஊழிகள் சென்றன.  இன்ப துன்பமான கடலில் ஆழ்ந்து தேவர் முதலியவர் இறந்தனர்.    உலகத்தவர் ஆசைக் கடலுள் பட்டுப் பிறவியை விடாதவர் ஆயினர்.  ஆனால் ஈசன் நீக்கமில்லாமல் இருக்கும் ஆனந்தக்கடலில் நிலையாய் நின்று அருளுகின்றான்.
 
2618: ஞானியரின் தூய நிலை :
நெடுங்காலம் நீங்காமல் நின்ற இரு வினையும், மூன்று மலப் பாசமும், அவற்றால் ஆன செயலும், பொருந்தும் இயக்கம் அற்றுத் தூய்மை  பெறுதலும்,  பின்பு படைப்பு முதலிய ஐந்தொழிலையும் நீக்கி அருள் மயமாக்கி ஆழ்ந்து நிற்கச் செய்தலுமே ஞானியரின் தூய்மையான நிலைகளாகும்.
 
2619: சீவர்கள் சிவத்தைப் பற்றிய போது அன்புடன் அமர்ந்திருப்பர் :
சீவன் தன் உண்மை வடிவம் ஒளி மயம் என்பதை உணர்ந்து நிற்கில் அறிவுடன் கூடிய சித்தியும் முத்தியும் உண்டாகும். பெண் மீது கொள்ளும் ஆசையை விட்டு நின்றால் பெருஞ் சித்திகள் கிட்டும்.  உறுதியான சிவப்பற்றுடைய ஞானி தன் தேகத்தை நழுவ விட்டால் சிவத்தின் அருள் நின்று பின் சிவத்தைச் சார்ந்து விடுவார்.
 
2620:அறியாமையால் உலகமயமாய்ப் பிறப்பில் விழுந்து சீவன் துன்புறும்.
இச் சீவன் சிவமாக ஆக வேண்டும் என்று இறைவனை அன்புடன் நாடி, சிவனாகவே இவன் மாறிப் பதி நிலையை அடைகின்றான் என்ற உண்மையை உலகத்தவர் உணரமாட்டார்.   ஆயின் இச் சீவன் பலவகையான பிறவிகளை எடுத்துப் பல உலகங்களுக்குச் செல்வது - உண்மையை உணராமல் பொய்ப் பொருளில் பற்றுக் கொண்டிருப்பதனாலேயே ஆகும்.
 
2621: அறிவுடையோர் செய்கை :
வெறுப்பைச் செய்கின்ற தூல உடலில் - சூக்கும உடலுக்குச் செல்லும் சுழுமுனை நாடியைப் பொருந்தி யிருப்பதால் - இவ்வுலகம் முழுவதும் துன்பம் தரும் தூல உடலில் விடுவதும், அது நீங்குமாறு செய்வதும்,  மீண்டும் பிறவியில் சேர்ப்பதும் அகியவற்றைச் செய்யும் நான்முகன், திருமால், உருத்திரன், மகேசன், சதாசிவன் முதலிய ஐவரை அறிவுடையோர் விரும்பமாட்டார்.
 
2622: பிறவி வாராமைக்குரிய வழி :
பிறவியை மாற்றி அமைக்கும் ஞானத்தைப் பெற்றுள்ளோம் என்பவரே!  அத்தகைய ஞானத்துக்கு அடிப்படை எது என்பதை அறிந்து கொள்வீர்.  மூலாதாரத்தில் வீரிய சத்தியாகக் கலந்துள்ள உருத்திர மூர்த்தியைச் சிந்தனையால் - கீழ் உள்ள அக்கினியை மேலே எழும்படி செய்து ஒளி மயமாய்க் கண்டால் அது முன் நோக்கியுள்ள பிறவியைப் போக்குதற்கு மூல காரணமாய்ப் பொருந்தும்.
 
41. பத்தியுடைமை :
அகண்ட சிவத்திடம் பத்தி கொள்வது பத்தியுடைமையாகும்.
 
2623: ஞான வடிவினனான சிவனை அடியார் துதிப்பர் :
இறைவன், உயிர்களுக்கு வீடு பேற்றை அளிக்கும் ஞான வடிவாகவும், மந்திர வடிவாகவும் உள்ள தலைவன், அழியாத தேவர்களை நடத்துபவன் தூய்மையானவன், தூய நெறியாக விளங்குபவன்.  இத்தகைய இறைவன் அடியார்களால் போற்றப்படும் உயிர்களின் தலைவனும் ஆவான்.
 
2624: சம்பிரதாய முறையில் சிவஞானத்தைப் பெற வேண்டும் :
சிவபெருமானின் சந்தான பரம்பரையில் வந்த அடியவரிடம் அடிமைக்கு அடியவனாகி அவரிடம் அடிமைப்பட்டேன்.  அப்படி அடியார் அருளால் சிவஞானம் பெற, என்னையும் அடியார்களுல்
ஒருவனாய் ஏற்றுக் கொண்டான்.
 
2625:நந்தியெம்பெருமான் அறக்கருணை மறக்கருணை காட்டி ஆள்வான்.
இறைவன் தன்னைச் சார்ந்தவர்க்கு நீரை விடக் குளிர்ச்சியுடையவன்.  உலகத்தைச் சார்ந்தவர்க்குத் தீயை விட வெம்மையைத் தருபவன்.  அவனது இப்படிச் செய்யும் இச்செய்கையை அறிபவர் யார்?  ஆனால் உலகத்தில் பயன் அளிப்பவரைக் காட்டிலும் நேர்மையானவன். அத்தகையவன் நினைப்பவர் உள்ளத்தில் உமையம்மையுடன் எழுந்தருளியிருப்பவன்  ஆவான்.
 
2626: குருவின் உதவியால் இறைவனை அடையலாம் :
ஏழு உலகங்களில் உள்ளவர் ஒன்றாய்க் கூடி ஆராய்ந்தாலும் ஆராயமுடியாத ஒப்பற்றவன் ஆன என் தலைவன் எழுந்தருளியிருக்கும் இடத்தை யார் அறிய வல்லார்? சொல்வாய்!  சிவத்திடம் பத்தி கொண்டு ஊர்த்துவ சகஸ்ரதளம் விழிப்படைந்த குருவைஅடைந்து அவரது உதவியைப் பெற்றவர்க்கே அல்லாமல்  முத்தைப் போன்ற வெண்மையான ஒளியில் விளங்கும் குண்டலினியான அவளைக் காணலாம் என்று சொல்பவர் எவருமிலர்.
 
2627: கன்றை நினைந்தெழு தாயாக வருவான் :
ஆவின் கன்று தாயை நாடிக் கதறி அழைப்பதைப் போன்று நான் கன்றின் தன்மையில் இருந்து என் தாயான சிவத்தைப் பக்தியினால் கதறி அழைத்தேன்.  வான் உலகு வாழ்பவர்களுக்கும் அப்பாற்பட்டு நிற்கும் மறைபொருள், ஊனில் கட்டப்பட்டிருக்கும் என்னை விரும்பி என் மனத்தில் எழுந்தருளியுள்ளான்.
 
2628: பத்தி உடையவர்க்குப் பணி இல்லை!
மலத்தால் கட்டப்பட்டிருக்கும் சீவர்கள் பிறக்கும் நியதியைக் கடவாதவர். ஆதலால் அவர்களாகச் செய்து கொள்ளும் பயிற்சி பலன் அளிக்காது போகும்.  முத்தி நிலையில் உள்ளவர் சிவனைத் தவிர வேறு எதனையும் நினையாதவராதலால் அவர்களின் முயற்சியில்லாமலேயே வேண்டியவை எல்லாம் அவர்களுக்குப் பொருந்தும். 
மலக்கட்டு உடையவர்க்குப் பிறவிப் பிணிப்பும், மலம் அற்றவர்க்கு காட்டும் அருட் பிணிப்பும் அருளும் தலைவனான சிவத்தை,  இறைவனைப் பற்றிக் கொண்டு விளங்குபவர்க்குச் செயல் ஏதும் இல்லை.
 
2629:தலை மீது விளங்கும் சிவத்தை வழிபடுவதே பத்தி செய்தல் ஆகும் :
உடல் கற்பமாகக் குண்டலினி சத்தி உடம்பில் விளங்கவும் நாத ஒலி கேட்கத் தலையின் உச்சியில் விளங்கும் ஒளி மண்டலத்தில் ஏறித் தேன் சிந்தும் சகஸ்ரதள மலரைக் கொண்டு சிவபெருமானை வழிபடுவதல்லாது பிற கடவுளைத் தெய்வம் என்று எண்ணி வழிபடுவதற்கு என் மனம் இடம்
அளிக்காது.
 
2630: சிவபெருமானைத் துணையாகக் கொண்டு வழிபட்டால் பிறப்பினை நீக்குவான் :
அடியார்க்கு எப்போதும் தக்க துணையான நந்தியும் தேவர்க்குத் தலைவனும் ஆகிய இறைவனைத் துணைவனாகப் பெற்றுக் கொண்டு பிறப்பை ஒழித்துக் கடைத் தேறுங்கள்.  அவனை நெருக்கமான துணைவனாய்க் கொண்டு அவனது திருவடியைச் சிந்தித்திருக்கத் துணைவனாய் தலையின்
மேல் ஒளி வடிவினனாய் நின்று அருள்கின்றான்.
 
2631: முப்புரம் எரித்தவனை அடியார் வழிபட்டனர் :
ஒளி மண்டலத்து வாழ்பவர்களான தேவர்களை அடக்கியிருக்கின்ற இருள்மண்டலத்தில்  வாழ்பவர்களான  அசுரர்களது  ஆணவம், கன்மம், மாயைஎன்ற முப்புரத்தை எரித்த தலைவனை நாதமயமானவன் என்றும் வீரிய கோசத்தில் விளங்குபவன் என்றும் ஊன் பொதிந்தஉடலுள் விளங்குபவன் என்றும் அறிந்து ஞானியர் வழிபட்டனர்.
 
2632: பத்தி செய்த முறை :
" குண்டலினி சத்தியை மூலாதாரத்தினின்று எழுப்பிச் சகஸ்ரதளத்தில் சேர்க்கும் முறையை அறிந்து நிலை பெறுக அல்லது அறியாது கேடு செய்க"  என்று கருவி கரணங்களைப் படைத்துக் கொடுத்தவன் சிவன்.  அப்பெருமானை நாடி என் மனம் ஒளி பெற்று விளங்கும்.  சிரமான மலையிலும் நெற்றி நடுவான வானத்துள்ளும் விரிந்த சகஸ்ரதளமான புறத்திலும் மூலாதாரமான உலையிலும் மனமண்டலம் என்ற உள்ளத்திலும் தியானித்து ஆழ்ந்தேன்.
இதில் மூன்று தீட்சை முறைகள் கூறப்பட்டுள்ளன.
1. தலையிலும் அதன் மேலும் உணர்வை எழுப்புதல்.
2. மூலாதாரத்திற்கு உணர்வை எடுத்துச் செல்லுதல்.
3. பிரமப் புழையுள் இருக்கும் சகஸ்ரதளத்தை மலரச் செய்தல்.
இப்படிச் செய்தால் மனமண்டலத்திலும் உடலிலும் உணர்வு சென்றுமீள்வது இயல்பாகி விடும். 
 
42. முத்தியுடைமை. வீடுபேறு பெறுதல் :
 
2633: மெய்ஞ் ஞானியர் இயல்பு :
முத்தி நிலையில் சிவபெருமானின் முழு அருளையும் உயிரானது பெற்று, முப்பத்தாறு தத்துவங்களும் வேறு எனக் கண்டு, நீங்கி, உண்மையுணர்ந்து, தன் கடமை - உண்மைத் தவமான இறைவனை எண்ணியிருத்தலே என்றுவினைகள் நீங்கிய உண்மையான பத்தியில் ஈடுபட்டவர் மேன்மையுடைய சிவானந்தத்தைப் பெற்ற மெய்யறிவுடையவர் ஆவர்.
 
2634: சீவன் சிவனை நாடிய போது அந்தக் கரணக் குறும்பு நீங்கும் :
உண்மை வாய்ந்த சிவம் என்னும் கனியை நாடிய - இழிந்த இன்பத்தில் ஆசை கொண்ட சீவன் என்ற பறவை - உள்ள மண்டலத்தில் விளங்கும் சிவம் என்ற கனியை விரும்பிச் சிந்தித்திருக்கும் போது - கண்டத்துக்கு மேல் விளங்கும் அக்கினியில் சுழுமுனையாகிய விளக்கை ஏற்றி மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய அந்தக்கரணங்களான நால்வரும் உடல் அற்ற இடத்தில் இன்பத்தை நாடுபவர் ஆயினர்.
 
43. சோதனை.  (குருவருளால் உண்மை உணர்தல் சோதனை.)
 
2635: இறைவன் செயலற்று இருக்குமாறு செய்தான் :
பெருமையுடைய சிவபெருமான் உரையற்று விளங்கும் நிலையில் அப்பெரியோன் அடி ஞானத்தால் அருள் கடலில் முழுகினோம்.  எல்லாவிதமான மாயா தொடர்புகளையும் கடக்கச் செய்து அவற்றினின்றும்
வேறுபடுத்திச் செயல் அற்று இருக்கும்படி செய்வதே சோதனை.
 
2636: என் குரு நாதனைப் பொருந்தியிருப்பேன் :
அகண்ட அறிவுடையவன்; அரிய வேதத்தால் புகழ்ந்து பேசப்படுபவன்; தேவர்களுக்குத் தலைவன்; ஐம்புல அறிவுகளையும் விட்டு அகண்ட அறிவை அறியும் பொறியை உடையவன்;  இத்தன்மையுடைய, அடையாளங்களையுடைய எம் குருநாதனை நான் பொருந்தியிருப்பேன்.
 
2637: விளக்கம் மந்திரம் 2362 ல் முன்னமே வந்திருக்கிறது.
 
2638: சிவமாம் தன்மை பொருந்தல் :
சோதனைக்குப் பின், சுட்டறிவு இல்லாமல், யாவற்றையும் ஒரு சேர அறியும் அறிவில், கீழான மலங்கள் போய் அடையாத சேர்க்கையில், அவனது அறிவே கண்ணாகக் கொண்டு, தம் அறிவு கெட்டு, ஏகாக்கிர
சித்தத்துடன் -  நெறியாக உள்ள மேலான நந்தியின் அருளுடன் ஒன்றுபட்டுத் தான் என்ற ஒன்று இல்லாமல் இருத்தலே சிவமாம் தன்மை அடைதல் ஆகும்.
 
2639: இறைவன் உடனாய் நின்று எங்கும் கலந்திருப்பதை உணர்க :
எம் தலைவன் காற்றில் பிரிக்க முடியாத பரிசமும், கரும்பில் பொருந்திய இனிமையும், பாலுள் மறைந்துள்ள நெய்யும், இனிய பழத்துள் பொருந்திய சாறும், மலருள் பொருந்திய நறுமணமும் போல் சீவனுடன் உடனாய்இருக்கின்றான்.  அவனே யாவற்றிலும் கலந்து விளங்குகின்றான்.
 
2640: சோதனைக்கு உட்பட்டவர் உள்ளத்தில் சிவன் ஒளிமயமாக விளங்குவான் :
விருப்பத்துடனே சிவபெருமானை நாடி இமயத்தைச் சேரும் உமையம்மையைப் போல் விருப்புடன் இருப்பவர் மனத்தில் எம் இறைவன் ஒளி வடிவமாய்  விளங்கிடுவான்.    கணவனின் விருப்பத்தையே தம் விருப்பமாய்க் கொள்ளும் பெண்ணைப் போல் சிவனது விருப்பத்தையே தம் விருப்பமாகக் கொண்டு வாழும் சீவர்கள் உள்ளத்தில் சிவம் ஒளி வடிவாய் எப்போதும் விளங்கும்.    மூலாதாரத்தில் உள்ள குண்டலினி அக்கினி,  தலையில் விளங்கும் சோதியைச்  சென்றடைவதே திருமணம் எனப்படும்.
 
2641:உயிர் அறிவுகெட்டு மனமழிந்த நிலையில் சிவம் வந்து பொருந்தும்:
தலைவனான சிவபெருமான் - தலையின் மீது விளங்கும் பெருவெளியில் வந்து எனது மன மண்டலத்தையே கோயிலாகக் கொண்டு எழுந்தருளினான்.  அங்ஙனம் அப்பெருமான் எழுந்தருள என் உயிர்த் தந்தை வந்து விட்டான் என்று என் உயிரும் அறிவு கெட்டு நின்றேன்.  அங்ஙனம் நின்றதும் என் மனத்துள் சிவன் சிறந்து விளங்கியிருப்பதைப் பார்த்தேன்.
 
2642: உள்ளத்தில் விளங்கும் இறைவனின் அருள் திறம் :
சத்து, சித்து, ஆனந்தம் என்ற பண்புகளை உடையவனும், தவத்தின் பயனாக இருப்பவனும், 
தவம் செய்வார்க்கு நன்மை செய்பவனும், உள்ளமான நடுவில் வீற்றிருப்பவனும், அழியும்
இயல்புடையவற்றைக் கடந்து நிற்பவனுமான இறைவனை நாடுங்கள்.அவ்வாறு நாடினால் எண்ணில்லாத சீவ கோடிகளில் உம்மை மேலானவனாக அவன் ஆக்குவான்.
 
2643: சிவகுரு வழிகாட்டுகிறான் :
சிவகுருவாய் எழுந்தருளி வந்து (அத்துவா) வழி சோதனை செய்த போது நல்ல நாதனான சிவ்பெருமான் உடனாய் இருக்கின்றான்.  பரமாகவும் அபரமாகவும் உள்ள அப்பெருமான் எல்லாவற்றிலும் கலந்து உள்ளான்.   மேலும் அவன் யாவற்றையும் கடந்து நின்று கலை முதலிய அத்துவாக்களைக் (வழி சோதனைகளை) கடப்பதற்கு துணையாகின்றான்.
 
2644: சிவன் இம்மை மறுமை இன்பம் உதவி அருள்வான் :
தேவராலும் அறிய இயலாத அப்பரம் பொருள் மேலே சொன்னபடி நல்ல நெறியில் செலுத்தும்.  இந்த வாழ்வில் தந்தையும் தாயும் தோழனும் போல்  இனியவனாய் எனக்குத் துணை செய்யும். எனக்கு வழிகாட்டியாய் இருந்து சிவவுலகத்துக்கு அழைத்துச் சென்று அங்கு வைக்கும்.  இந்த வகையாக
நந்தி உதவி செய்வான்.
 
2645: சோதனைக்குப் பின் மாணவனிடம் ஞானம் விளங்கும் :
சோதனைக்குப் பின்பு ஞானமாகிய வாளை உறையினின்றும் எடுத்து அஞ்ஞானமான இருளைப் மாணவன் போக்கக் கூடும்.   அவ்வாறு அருளிய பெருமையுடையவன் இருப்பதை அறியவும் கூடும்.அறிவதோடு தேவ தேவனான அவனை நெருங்கிப் பொருந்தவும் கூடும்.  அப்போது
அஞ்ஞான இருளில் செலுத்தும் பல கூட்டத்தை நீங்கவும் கூடும்.
 
2646: சிவகுருவால் உணர்த்தியபோது சிவனாதல் :
சிவகுருவால் உணர்த்தப்பட்ட ஞானம் என்ற வாளை என் மனம் என்னும் கையில் கையில் எடுத்தவுடன் - என்னை வேறுபடுத்தி நன்னெறியினின்றும் நீக்க வல்லார் எவரும் இல்லை.  சிவம் அல்லாதவை நிலை பெறாதபடி ஞான விசாரணையால் என் மனத்தைச் சோதனை செய்வேன்.  அப்போதுஆதிமூர்த்தியாகிய சிவத்தைப் பொருந்திச் சிவமாக இவன் ஆகின்றான்.
 
2647: மும்மலங்கள் நீங்கப் பெற்றுச் சிவத்தைச் சேர்வர் :
குருவானவர் பிறவிக்குக் காரணமான பாசத்தையும், அருவமான மாயையையும், கன்மங்கள் உருவாக்கும் பந்தத்தையும், அங்ஙனம் செய்யும் போது உண்டாக்கும் அச்சத்தையும், அச்சத்தினால் உண்டாகும் பிறவி
யையும் போக்கி - அச்சோதனையால் தீய நெறியில் போகும் சிந்தையைத் திருத்தலும் மாணவர் நன்னெறியைச் சேர்ந்தார்.    அங்ஙனம் சோதனை செய்யப்படும்  திறமை  உடையவர்க்கே  சிவத்தைச்  சார்ந்து  சிவமாக முடியும்.
 
2648: பிரணவ உபதேசம் செய்து அழிவற்று இருக்குமாறு செய்தான் :
சொல்லால் சொல்ல முடியாத ஒன்றை - பிரணவ உபதேசத்தை – என் அக உணர்வில் குருநாதன் உபதேசம் செய்தான்.  எல்லை கடந்த நூல் ஆராய்ச்சியில் விருப்பத்தை ஒழித்து, அலைபோல் வந்து அழியும் இயல்பு கொண்ட உடம்பை அழியாமல் இருக்கச் செய்து, குற்றம் நீங்கப் பெற்ற என்னிடத்தில் பரன் வந்து பொருந்துவான்.
 
ஒன்பதாம் தந்திரம்
1.குருமடதரிசனம். ஒளி விளங்கும் இடத்தைத் தரிசித்தல்  (2649-2656)
 
2649: ஒளியைக் கண்டவர் உடல் வெப்பத்தை விட்டவர்.
நைவேத்தியமும் அக்கினியில் பெய்யும் ஆகுதியும் பரந்து ஓமத்தீயினின்று கிளம்பும் புகையும் வேத ஒலியும் ஆகிய எல்லாம் எமது சிவபெருமானைக் கருதி செய்வனவே என்று நினைந்து குவிந்த மனதுடன் குரு சொரூபமாக விளங்கும் ஒளி நிலையைத் தரிசித்தவர் நைவேத்தியம், அக்கினி, ஆகுதி, ஓமத்தீ, புகை, வேத ஒலி ஆகிய பிரபஞ்ச வெப்பத்தை விட்டு இறைவனது திருவடியைப் பொருந்தி நிற்பர்.
 
2650: சிவனது உறைவிடம் சீவனது உள்ளமே.
சிவனது  உறைவிடம்  சீவனது  உள்ளமே  என்பதை  நன்றாக அறிந்திருந்தும் சிவன் வேறாய் உள்ளான் என்று கூறுவது அறியாமை.
 
2651: எல்லாவற்றையும் உணரும் தன்மை உண்டாகும்.
சகஸ்ரதளத்தில் சிவனது ஒளியாகிய திருவடிகளைக் கண்ட சாதகர் சிவம் எப்போதும்  மாறிக் கொண்டிருக்கும் உலகமாகவும் உயிராகவும் எல்லாமாகவும் உள்ளதை உணர்வார்.
 
2652&2653: ஞானியர் பொருந்தியிருக்கும் இடமே சிவத்தின் முகமாகும்.
பெருமை பொருந்திய மடம் சிவத்தின் முன்னுள்ள ஒளியாகும். மனத்தில் உண்டாகும்  நல்ல எண்ணங்களே சிவன் அடியார் கூட்டமாகும்.  பிறர்க்கு நன்மை செய்யும் எண்ணத்தைச் சிந்தித்திருத்தலே நல்ல சிவக் காட்சியாகும். ஞானியரின் சூக்கும உடம்பே சிவத்தின் மேலான ஆசன மாகும். அருவுருவான ஈசுவர நாமத்தைக் கணித்தல் கிரியை அல்லது செயலாகும். அறிவாகாயமே சிவம் ஒடுங்கியிருக்கும் குகையாகும்.   இதுவே அவரைத் தாங்கி நிற்பதாகும்.
 
2654: ஞானியர்க்கு அக நோக்கில் பீடம் முதலியவை அமையும்.
ஆன்மாவாகிய பீடமே எல்லாத் தத்துவங்களுக்கும் ஆதாரமாகும். சத்தியே எல்லாவற்றுக்கும் இருக்கையாகும். தெய்வமே எல்லாவற்றையும் இயக்கும் சிவமாகும் என்பது அகநோக்கில் ஆராயும் ஞானியருக்கு விளங்கும்.
 
2655: திரிபுடி ஞானம் நீங்கிய தவத்தவர்.
சுத்த மாயை, அசுத்த மாயை இரண்டும் நீங்கி அன்னமயகோசம், ,பிராணமய கோசம், மனோமயகோசம், விஞ்ஞானமயகோசம்,ஆனந்தமயகோசம் ஆகிய  ஐந்து  திறைகளும்  அகல ஞானியர் "காண்பான், காணப்படுபொருள், காட்சி " மூன்றையும் கடந்து மேலான பிரணவ யோகத்தை அறிவர்.
 
2.ஞான குரு தரிசனம்.  (2656 - 2674)
ஞானத்தைத் தரும் குருவைக் காணல்.  ஒளி மண்டலத்தல் குருவைக் காணல்.  குருமண்டல விழிப்பு என்பது புருவமத்தி திறப்பு.  பரம சிவமேஅங்கு குருவாய் எழுந்தருளி அருள் செய்வான்.
 
2656:குருபரன் சீடனுக்குப் பரமாம் தன்மை அளித்துப் பேரின்பத்தில் திளைக்கச் செய்வான்.
முப்பத்தாறு தத்துவங்களும் ஆன்மாவில் ஒடுங்கினால் சிவம் வெளிப்பட்டு ஆன்மாவைத் தன்னுள் அடக்கிக் கொள்ளும்.  அந்நிலை அமைந்த பின் சிவப்பேறு கிட்டும்.  இதன் பயனாக ஆன்மா உலக இன்பத்தை விட்டுச் சிவானந்தத்தில் திளைத்துச் சிவபோகத்தைப் பெறும்.
 
2657: ஞானகுரு அருளும் திறம்.
சீவதுரியம், பரதுரியம், சிவதுரியம் ஆகிய  மூன்று நிலைகளையும் கடந்துவிளங்கும் அறிவுப் பேரொளியாகிய  அருமையான பரசிவன் எல்லாமாய் போக்கும் வரவும் இல்லாத இடத்திலுள்ள பெருமை மிக்க குருபதத்தின் தன்மையைப் பேச முடியாததாகும்.
 
2658: தலை, நாட்டம், சித்தம் என்பவை ஞான குருவைத் தரிசிப்பதற்குரிய இடங்கள்.
சிரசில் சிவத்தைப் பொருந்துங்கள்;  வாயால் சிவத்தை வாழ்த்துங்கள்; அறிவால் ஞான சாதனை  செய்து சிவத்தைக் காணுங்கள்;  சிந்தையால் சிவத்தை உணருங்கள்.  சிவமாகிய ஞான குருவை சிரம், நாட்டம், சித்தம் ஆகியவற்றால் தரிசியுங்கள்.
 
2659: குரு மாணவனின் மும்மலங்களையும் போக்க வல்லவர்.
ஞான சாதகன் பேரொளிப்பிழம்பான ஞானகுருவினைத் தியானித்த உடனே மும்மலங்களும் நீங்கிப் பேரொளிப் பிழம்பாக ஆவான்.
 
2660: சிவகுருநாதன் சீவனிடம் உள்ளதை உணர்ந்தவர் சிவம் ஆவார்.
சிவகுருநாதன் இருப்பிடம் சீவர்களிடம் தான் என்பதை ஞான விசாரனையால் உணர்ந்தவர் உள்ளத்தில் சிவன் நிலையாக அமர்ந்து அச்சீவர் சிவமேயாவார்.
 
2661:சிவகுருநாதன் திருவடியைப் பெற்றால் ஒளியில் நிலை பெறுவர்.
முத்துரியம் கடந்து சிவகுருநாதன் திருவடியைப் பெற்ற பின்னர் அறிவு அறியாமையாகிய தன்மைகள் நீங்கி சீவர் ஒளியில் நிலை  பெறுவர்.
 
2662: சிவனது திருவடியை நிலை பெற்ற பின்பு ஒளியில் நிலை பெறுதல்.
சந்திர பூமியில் ஆக்ஞையில் விளங்கும் சத்தியே பந்தங்களை அறுக்கும் குரு ஆவாள். எனவே ஆக்ஞையிலேயே தியானத்தைத் தொடங்குவாயாக.
 
2663: மாணவனை மேல் நோக்க அருளுபவர் பரமகுரு.
புருவ நடுத்தியானத்தால் ஏழு ஆதாரங்களையும் வளர்ச்சி பெறச் செய்த பரமகுரு பின்னர் சீவனின் சிரசைச் சூழவுள்ள அட்டதிக்குப் பாலகர்களின் சேட்டை அறுமாறு சந்திர திசை நோக்கி மேலெழுந்து அனுக்ரகம் செய்தான்.
 
2664: பஞ்ச கோசங்களைக் கடந்து நீங்க வழி.
சீவன் தவறாகத் தான் என எண்ணியிருந்த பஞ்ச கோசங்களைக் கடந்து நீங்கி, தான் வேறு என்ற தனது உண்மை நிலையை உணர்வதற்கு பிரசாத நெறியும்,  ஞான விசாரனையால் அமையும் தசகாரிய விளக்கமும் வழியாகும்.
 
2665: இறைவனை நினைய வல்லார்க்கு அருவினைகள் அழியும்.
நந்தியெம் பெருமானை உள்ளத்தில் நினய வல்லாரது பக்குவம் கண்டு கலந்த பின் பிரியாத சிவம் சீவரது சிவபோதம், அருவினை, மாயை முதலியவற்றை அழித்து சசீடனுக்குப் பரமாம்தனவரை சிவமாக்கும்..
 
2666: பாசத்தைக் குறைப்பது சிவனைப் பெறுவதற்கான வழி.
பலமாகப் பற்றியுள்ள பாசத்தைத் தளிர்க்க விடாமல் பாசவழிச் செல்லாது சிவத்தை இடைவிடாது சிந்தித்து சிவநெறியில் சென்று  பேணுதல் கூடும்.  பாசத்தை குறைப்பதும் அருளைப் பெறுவதும் சிவத்தை அடைவதற்குரிய வழியாம்.
 
2667: சிறியவராயினும் பெரியவர்.
குரு காட்டிய வழியில் சோதியை நினந்திருப்பின் சிவனும் அவரை நினைந்து புருவ மத்தியில் சோதிப் பொருளாக விளங்குவான்.  அச்சிவத்தை நினைப்பவர் சிறியவராக இருந்தாலும் பெரியவராகக் கருதப்படுவார்.
 
2668: சிவனுக்குப் பாத்திரம் ஆவர்.
சிவ வழிபாட்டுச் சாதனை ஒருவேளை தீய வினையால் தடைப்பட்டாலும் இறை வழிபாட்டில் சோர்வின்றி இருப்பவர் சிவனது அன்புக்குப் பாத்திரமாவர்.
 
2669: சிவத்தை இடைவிடாமல் பொருந்தியிருப்பவர் பெறும் பயன்.
சிவத்தை இடைவிடாது பொருந்தி இருப்பவர் உலக விவகாரத்தில் பற்றை விட்டவராக, உலகத்தில் சிறப்பை விரும்பாதவராக இருப்பர்.
 
2670: ஞானகுரு உபதேசத்தால் சீவ ஒளியில் சிவ ஒளி விளங்கும்.
ஞான குரு உபதேசத்தால் சீடனின் புருவமத்தியில் சீவஒளியில் சிவவொளி விளங்கும்.
 
2671: ஞான குருவின் நிலை.
சிவம் குருவினிடம் பொருந்தியிருப்பதால் குருவின் வாய் மொழி சிவனது மொழியாகும்.  குருவின் பரிசம் சிவனது பரிசமாகும்.  குருவின் உயிரில் சிவம் விளங்கும்.  குருவின் பார்வை சிவ திருஷ்டியாகும். குரு திருமேனியை விட்டபோது சூக்கும நிலையில் பஞ்சபூதத்துக்குக் காரணமாயுள்ள தன்மாத்திரைகளுடன் கூடினவராய் அறிவு மயமாய் விளங்குவார்.  இதுவே ஞான குருவின் நிலையாகும்.
 
2672: சிவன் அடியவரை வானமாய் ஆக்குவான்.
சத்தியின் மூலம் உலகை நடத்தும் உலகம் புகழும் உத்தமனான சிவம் அடியார்களின் தகுதிக்கேற்ப அவர்களை ஆகாயத்தில் வைத்து அருளுவான்.
 
2673:அறிவுடையவர் சிவபெருமான் வழி நின்று அருள் பெறுவர்.
எல்லாம் சிவபெருமானது அருளால் நடைபெறுவதன்றி தாம் வேறொன்றும் அறிய வில்லை என்று அப்பெருமானது அருளைப் பெற்றிருந்த அறிவுடையோர் கூறுவர்.  அவரே அவனைக் கண்டு அருள் பெற்றவராவர்.
 
2674: சிவனை வழிபட்டவர் பிறரால் வழிபடப் பெறுவர்.
சிவம் ஒன்றாலேயே பிற தெய்வங்கள் சிவத்தினிடமிருந்து அதிகாரங்களைப் பெற்று தெய்வப் பொறுப்பை வகிக்கின்றன என்பதை அறிந்து தெளிவீராக.  சிவத்தை வழிபட்டவர் சிவகுருநாதன் அருளால் சிவமாந்தன்மை எய்திப் பிறரால் வழிபடப் பெறும் பேறு பெறுபவராவர்.
 
3. பிரணவ சமாதி  (ஒங்காரத்தில் ஒடுக்கம்)  (2675 - 2680)
ஒ உ ம என்ற எழுத்துக்களால் ஆன ஓம் தூல பிரணவம்.  விந்து நாதமாக உணர்வது சூக்கும பிரணவம்.  பிரணவத்தை உணர்ந்துநேயப் பொருளோடு அடங்கியிருத்தலே பிரணவ சமாதியாம்.
 
2675: வேதாந்த நெறி.
ஓம் எனும் தூல பிரணவம் பரு உடலுக்கு இன்பத்தைத் தரும். விந்து நாதமாகிய சூக்குமப்  பிரணவம் ஆன்மாவுக்குக் களிப்பினைத் தரும்.  ஞான குருவின் உபதேசம் பெற்று சூக்குமப் பிரணவத்தை உணர்வதே வேதாந்த நெறியாகும்.
 
2676: பிரணவத்தை அறிவதால் சித்தியும் முத்தியும் உண்டாகும்.
உருவையும் அருவையும் தன்னுள் கொண்டஓம் எனும் பிரணவத்தை உணர்பவர் புத்தியும் சித்தியும் பெறுவர்.
 
2677: ஓங்காரத்தில் தோன்றுவன.
ஓங்காரமே ஐம்பூதங்களுக்கும்  உயிர் வாழ்வனவாகிய சீவர்களுக்கும் வியஷ்டியாகிய ஆன்மாக்களுக்கும் சமஷ்டியாகிய சிவத்துக்கும் காரணமாயும் இருப்பிடமாயும் வடிவாயும் உள்ளன.
 
2678: ஞானியர் செயல்.
அ உ ம என்ற மூன்று எழுத்துக்களோடு கூடிய ஓங்காரத்தின் அ (பிரமனும்) உ(விஷ்ணுவும்),
 ம (உருத்திரனும்) ஆகிய நிலை கெட்டு ஓங்காரத்தின் இறுதியில் மகேசுவர வடிவமான விந்துவும் சதாசிவ வடிவமான நாதமும் அர்த்தமாத்திரைப் பிரணவமாகப் பெருகும்.  சுகம் உண்டாகும். இந்த  சிவானந்த சுகத்தையும், பெரிதாகக் கருதப்படும் பரந்த இந்த உலகமெல்லாம் நாதப்பிரமத்தின் வடிவமே என்பதையும்
விரிந்த ஞானமுடையோர் அறிவர்.
 
2679:சன்மார்க்க நெறியில் மனம் சிவத்தில் பதியப் பிராணன் அடங்கும்.
மனம் இயங்கும் போது பிராண இயக்கம் இருக்கும்.  அது போல பிராண இயக்கம் இருக்கும் வரை மனமும் அலைந்து கொண்டே இருக்கும். சன்மார்க்க நெறியில் ஆன்மா புறத்தே சென்று பற்றாத போது மனமடங்கி வாயு அடங்கி ஒளி அமையும்.
 
2680: பிரணவ யோகம் பயில்பவர் அடையும் பயன்.
கிரியை வழி நிற்போர் ஆகாய மயமாய் விளங்கும் சதாசிவரைக் கீழிருந்து தியானம் செய்து மேல் செல்வர்.  ஞானவழி நிற்போர் தியானம், பாவனை, மந்திரம் இன்றியே இப்பிராசாதநெறியைப் பயில்வர்.   பிரணவ யோகம் பயிலும் சன்மார்க்கிகள் ஆதார நிலைகளைக் கடந்து நேயாந்தத்தே இருப்பர்.
 
4.ஒளி.
(சிவன் ஒளிப்பொருள். சீவனும் ஒளிப்பொருள். சீவனாகிய ஒளிப் பொருள் சிவனாகிய பேரொளியை அறிந்து அதில் ஒடுங்கிடப் பிறவி நீங்கும்.
 
2681:ஆன்ம ஒளியை அறிந்து மனம் பொருந்தினால் சிவனுடன் பிரிவின்றி இருக்கலாம்.
உடல் நினைவு இருக்கும் வரை மீண்டும் மீண்டும் பிறப்பு வரும். ஆன்மஒளியில் மனம் உணரின்  நினைவு மறைந்து உருவமாகிய உடல் ஒளிமயமாகத் தோன்றும்.  அவ்வொளியில் தோய்ந்து நிற்க  அவ்வொளியும் உருகிச் சிவன் தோன்றுவான்.
 
2682: ஆன்மப் பேரொளியில் பொருந்தியிருப்பவர் எல்லா ஆற்றலையும் பெற வல்லவர்.
ஆன்ம சோதியில் நிலைத்துப் பொருந்தியிருக்கும் ஆற்றல் உள்ளவர் உள்ளத்தில் சிவம் ஒளியாகப் பொருந்தி மல இருளை நீக்குவான். அச்சீவர் எட்டுத் திசைகளிலும் தங்கு தடையின்றிச் செல்லும் ஆற்றலைப் பெறுவர்.  ஆன்ம பிரகாசம் புற இருளையும் மாற்ற வல்லது.
 
2683: சிவன் ஒளியைத் தந்து ஆன்மாவுடன் பொருந்தியிருந்தான்.
அக்கினியும் சூரியனும் சந்திரனும் ஆன்மாவில் பிரகாசிக்க பேரொளியான சிவன் ஓலியினை நல்கி ஆன்மாவை இடமாகக் கொண்டு கலந்திருந்தான்.
 
2684: ஞானியர்க்கும் முச்சுடரும் மூன்று கண்களாய் அமையும்.
பிரகாசிக்கின்ற ஒளியை உடைய சூரியனும் சந்திரனும் சிவனது கண்கள். ஞானஒளியை வீசுகின்ற அக்கினி சிவனது மூன்றாவது கண்ணாகிய நெற்றிக் கண்ணாகும். சிவனது அருளால் ஞானியர்க்கு
சோம சூரிய அக்கினியாகிய முச்சுடரும் மூன்று கண்களாக அமையும்.
 
2685:ஐந்து பூத ஒளிகளும் சாதனையால் தலையின் மீது ஒரே ஒளியாகும்.
நீரை முகமாகவுடைய அபானனை நீண்டு உயர்ந்து செல்லும் வீணாத்தண்டினூடே சுழுமுனைக்குச் செலுத்திடில் மேலான நிலவொளி, நீரொளி, நெருப்பொளி, காற்றொளி, விண்ணொளியாகிய ஐந்தும் ஒன்றாகி ஒரே ஒளியாக விளங்கும்.
 
2686: சிற்சத்தியின் செயல்.
ஆன்மாவின் ஒளி ஆறு ஆதாரங்களில் பொருந்திய ஒளி ஆகியவற்றைத் தூய்மையான சிற்சத்தி நாள்தோறும் சீவர்கள் விருப்பத்துக்கேற்ப ஒரே சோதியாக அமையுமாறு அருளுவாள்.
 
2687: சிவன் உடலுக்கு ஆற்றலை அருளுபவன்.
ஆன்மாவில் மறைந்து பிரகாசிக்கின்ற ஒளியாகிய ஈசனை இடைவிடாது நினையுங்கள்.  அப்போது உள்ளத்தை இடமாகக் கொண்டவன் உடம்பிடை விளங்கி உடலுக்கு ஆற்றலைத் தருவான்.
 
2688: வணங்குபவர்ர்கு இருளைப் போக்குபவன் சிவன்.
ஒளியாகிய ஆன்மா காம வசப்பட்ட போது தன்னுண்மை அறியாது இருள் மயமாக இருக்கும்.  பிரகாசமான ஒளியையுடைய சிவன் தன்னை வழிபடுவோர்க்கு ஆன்ம ஒளியைக் கொடுக்கும் விந்து உப்பளம் வழியாகப் பாய்வதை மாற்றி மேலேற்றி ஒளியைப் பெருக்கிப் பிடரிக் கண்ணைத் தொழிற்படச் செய்வான்.
 
2689: சிவன் முச்சுடரும் ஒரு சுடராய் விளங்கும்படி அருள்வான்.
ஆன்மா சத்தியின் வயப்பட்டபோது சோமன், சூரியன், அக்கினி என்ற மூன்று கண்டங்களில் ஒளி விளங்கியது.  ஆன்மா ஊர்த்துவ திருஷ்டி பெற்றபோது இவை மூன்றும் ஒரே ஒளியாக மன மண்டலத்தில் பொருந்திப் பிரகாசித்தது.  மூன்று மண்டலங்களிலும் தூணாகார சோதியாக உள்ளது. ஈசானனேயாகும். 
இதுவே பிரணவ சொரூப ஒளி.
 
2690: சிவ ஒளி சீவ ஒளியுடன் வானத்தில் கலந்து விளங்கும்.
மன மண்டலத்தில் விளங்கும் ஒளி எனது சூக்கும உடலில் உள்ள சீவனேயாகும்.  அவொளிக்குள் ஒளியாய் விளங்கும் சிவஒளி சீவ ஒளிக்கிரண சமூகத்துடன் ஆகாயத்தில் கலந்து விளங்கும்.
 
2691: சிவன் சீவரின் மன மண்டலத்து இருளைப் போக்கினான்.
விளங்கும் ஒளியுடைய விகிர்தனான சிவன் முன்பு, மிக்க ஒளியுடன் கூடிய மாயையுள் வலிய இருள் பொருந்தாதபடி, களங்கத்துடன் கூடிய இருளில் சிவன் நடிக்க, விளங்கும் ஒளியிலே மன மண்டலத்தில் விளங்கி நின்றான். உள்ளத்துப் பார்வையில் தோன்றுவது இருள்.   அந்த இருளில் வெண்ணிற ஒளி ஆடிக் கொண்டிருப்பதைப் பயிற்சியாளர் அறிவர்.   அந்த இருளானது கீழ்ப்பட ஆடும் வெண்மையான ஒளியே சிவநடனம் என்பர்.  இந்நிகழ்வு அடியாரின் உள்ள மண்டலத்தில் நிகழ்வது.
 
2692: மாயை முதலியவை நீங்கும் விதம்.
ஞானப் பயிற்சியால் ஆதியான பரம்பொருளைத் தேவர் தலைவனான உருத்திர சோதியுடன் தலையின் உச்சியில் விளங்கும் சகஸ்ரதள மலரில் போய் அடைந்தவர் ஆன்மப் பிழம்பும் ஆவார்.  இம்முறையில் ஆதியான பரம்பொருள் சீவர்களை மாயையினின்று கடக்கச் செய்யும்.
 
2693: சோதியைக் காண வல்லவர்.
உலகுக்குக் காரணமானவன் ஒருவன் உண்டு என்றும் இல்லை என்றும் சொல்லும் கொள்கை உடையவர் உலகில் உண்டு.  ஆன்மாவுக்கு மேலான ஒன்று பழமையில் இல்லை எனக் கூறுபவர்க்கு மேலான சிவகதி இருக்கக் கூடுமோ!  அங்ஙனம் இருப்பதைக் கண்டதில்லை என்று கூறுபவருங்கூட அறியவேண்டும் என்ற எண்ணம் ஏற்படின் வானமயமான தில்லையான மனமண்டலத்தில் விளக்கமான ஒளியாய் இறைவன் விளங்குவதைக் காணலாம்.
 
2694: பயிற்சியாளன் அக நோக்கில் பகலவனைக் கண்டால் ஞானம் பெற்று உலகினைத் துறந்தவன் ஆகலாம்.   சுடர் பொருந்துமாறு உயர்வான ஒண்மையான ஒளி வடிவாய்ப் பயிற்சியாளரின் அக நோக்கத்தில் படர்ந்து விரிந்து கதிரவன் போல் இறைவன் காட்சி தருவான்.  அந்த ஒளியால் அடர்ந்துள்ள மாயையின்  இருளை வேறுபடுத்தினால் உடலுடன் கூடியிருந்து ஞானத்தால் பயிற்சியாளன் உலகைத் துறந்தவன் ஆகலாம்.
 
2695: சிவன் பயிற்சியாளருடன் பொருந்தியிருப்பான்.
ஒளியைத் தரும் பவளம் போன்ற மேனியை உடையவனும் அதன் மேல் வெண்ணிற ஒளி படிந்தவனும் பவளம் போன்ற செம்பொன் நிறமுடைய ஆதிப் பிரானும் ஆன சிவன் மூலாதாரத்திலிருந்து களிப்பைத் தரும் பவள நிறத்தவனாக விளங்கிக் கரிய பாச இருளை அகன்று ஒளி பெற்ற பவள நிறம் உடையவனாய் என்னுடன் இருந்தான்.
 
2696: சீவர் பக்குவம் அடைந்த போது எங்கும் பரவுவர்.
வான் மண்டலத்தில் இறைவன் இருந்தான்.    அங்கங்கேயே தேவரும் இருந்தனர்.  அப்படியிருப்பினும் அவர்கள் ஒளியின்றி மக்களைப் பூமியைநோக்கிச் செலுத்துபவராய் இருக்கின்றனர்.    இருவினை ஒப்பு வரவே இறைவன் அருளால் பழைய வினையுடன் புது வினையும் அடியோடு நீங்க, மலர் பக்குவமான போது வெளிப்படும் நறுமணம் போன்று சீவன் வியாபகம் அடைவான்.
 
2697: சீவன் சிவத்துடன் கூடி விளங்குவான்.
தேவர்கள் மக்களை உலகத்தில் செலுத்துபவர் ஆயினும் தேவர்களுக்கும் தலைவனாய்ச் சிவன் உள்ளான். சீவர்களுக்கு முத்தியை அளித்துத் தன்னுடன் பொருந்துமாறு செய்பவன் அவன் அல்லாமல் வேறு எவரும் இல்லை.  இந்தப் பெரிய உலகத்தில் அச்சிவமே வான் வடிவில் நிலை பெற்றுள்ளது. அப்போது சீவன் பரனாய் எங்கும் பரவுதலும் கூடும்.
 
5. தூல பஞ்சாக்கரம்.
(தூலம் - பருமை.  பஞ்சாக்கரம் - திருவைந்தெழுத்து.  'சிவாயநம'  என்ற ஐந்தெழுத்தை மானசீகமாக உச்சரித்தால் நுண்மையான அசைவுகள் வானத்தில் ஏற்படும்.  மூலாதாரம் முதலாக நிற்கும் 'நமசிவாய' என்ற இறைவனை உடலில் பொருந்துமாறு செய்து விடும்.  மறைநெறியில் உள்ள புறவழிபாடு 'நமசிவாய' என்பதாம்.  ஆகம நெறியில் தியானத்துக்கு உகந்தது 'சிவாயநம'.)
 
2698: ஐம்பது எழுத்தும் ஐந்தெழுத்தும் பயனால் ஒன்றே.
மூலாதாரம் 4, சுவாதிட்டானம் 6, மணிபூரகம் 10, அநாகதம் 12, விசுத்தி 16, ஆஞ்ஞை 2  ஆக ஐம்பது எழுத்துக்களால் வேதங்கள் எல்லாம் கூறப்பெற்றுள்ளன.  அப்படியே எல்லா ஆகமங்களும் ஐம்பது எழுத்துக்களால் கூறப்பெற்றுள்ளன.  ஐம்பது எழுத்துக்களும் உடலுள் பொருந்தியிருக்கும் முறையை அறிந்தால் ஐம்பது எழுத்தோசையால் அடையக் கூடியதை  'நமசிவாய'  என்ற ஐந்து எழுத்தால் அடையலாம்.
 
2699: நந்தியின் பெயர் நகாரத்தை முதலாக உடைய நமசிவாய என்பது.
எழுத்துக்கள் 'அ' முதலாக ஐம்பத்தோர் எழுத்துக்களாகி, உகாரம் முதலாக நிலை பெற்று நின்று, மகரத்தால் இறுதி அடைந்து தேய்ந்து மேல் போய் நகாரத்தை முதலாக உடைய நந்தியின் பெயர் 'நமசிவாய' என்பதாகும்.
 
2700:ஐந்தெழுத்தை ஓதினால் நமசிவாய என்ற தேவனைக் காணலாம்.
'அ' முதலான உயிர் எழுத்துக்கள் பதினாறுடன் கலந்த பரை என்ற சிவசத்தியுடன், பரையில் பிரிந்து மற்ற மெய்யெழுத்து முப்பத்தைந்தையும் இயக்கும் 'பிராமி' முதலிய எட்டுச் சத்தியுடன் கலந்து ஒளியாய்த் திகழும் சிவம்.  சைவாகமம் கண்ட 'சிவாயநம' என்ற மகாமநு  அங்குசமாகும். இதை அறிந்தவர்க்கு வேதம் கூறும் 'ந' முதலிய 'நமசிவாய' என்ற உணர்வு மூலாதாரம் முதல் உடலிலேயே பொருந்தும்.
 
2701: ஐந்தெழுத்து முறையாய் ஓதினால் தொழிற்படும் முறை.
சிவாயநம என்ற பஞ்சாக்கர மந்திரத்தை முறையாக ஓதும்போது ஆகாயத்தில் உண்டாகும் உணர்வு அலைகள் படர்ந்து விரிந்து மேலும் கீழுமாகவும் வட்டம் வட்டமாகவும் வாய், கழுத்து, இதயம், நாபி மற்றும் லிங்கம் என்ற ஐந்து இடங்களிலும் பரவி மூலாதாரத்தை அடைந்து முதுகந்தண்டின் வழியாக நேரே ஆகாய வீதியான உச்சியிலுள்ள சகஸ்ரதளத்தை அடைந்து முடிவாவதில் நமசிவாய என்ற சோதி உருவம் இவ்வைந்து இடங்களிலும் எழும்.
 
2702: மரண காலத்தில் பாதுகாவலாக உள்ளது பஞ்சாக்கரம்.
யோகியர் உயிர் ஊதா, நீலம், இளநீலம், பச்சை, சிவப்பு, மஞ்சள் மற்றும் பழுப்பு நிறங்களினால் ஆன ஒளி என்பதை அறிந்து அவற்றை உடலினின்று வேறுபடுத்த பஞ்சாக்கரத்தைச் செபிக்கிறார்.  அந்த ஏழு நிறக் கதிர்களும் சிரசின் மேல் ஒளி மயமாக விளங்கி கருவிகளை விட்டு யோகியின் உயிர் சிரசுக்கு மேல் செல்லும் போதும், இயல்பாக இறப்பு வந்து கருவிகளை விட்டு உயிர் பிரியும் போதும் பாதுகாவலாய் துணையாய் வருவது ஐந்தெழுத்தாகும். 
 
2703: ஐந்தெழுத்து ஓதினால் அழகிய ஒளியாக விளங்கும் மந்திரம்.
செம்மை நிறமுடைய குண்டலினி அம்மைக்குரிய பஞ்சாக்கரத்தை வாயினுள்ளே மென்மையாகச் செபிக்க மூலாதார சுவாதிட்டானச் சக்கரங்களில் விளங்கும் குண்டலினி மேலெழுந்து சூரிய சந்திரனுடன் அழகு பொருந்திய ஒளியாக விளங்குவதை உணரலாம்.
 
2704: பிறவிக் கடலில் வீழ்பவர்.
சிவாயநம என்று உள்ளே ஒளி பெற ஒருதரம் நினையுங்கள்.  தெளிந்த அமுதமயமான ஒளி உண்டாகும்.  இவ்வாறு வெள்ளம் போல் பெருகி வரும் சீவ ஒளிய விரும்பிப் பெறாதவர்கள் பிறவிச் சக்கரத்தில் மீண்டும் மீண்டும் விழுந்து கெடுவர். சிவாயநம என்று செபிக்காதவர் பிறவிக் கடலில் பட்டழிவர்.
 
2705: ஐந்தெழுத்துத் தியானத்தின் பயன்.
பஞ்சாக்கர தியானத்தால் சீவரது மல இருள் கெடும்; பிறவிக்குக் காரணமான வினைகள் அறும்: ஒளி பெருகி பிறவி நீங்கும்.
 
2706: சிவரூபம் கிட்டும்.
மனம் தடுமாற்றத்தை அடையும் வண்ணம் துயரம் வந்த போது உன்னிடம் செறிந்துள்ள சிவத்தைப் பிரகாசிக்கச் செய்ய சிவாயநம என்று ஓதுவாயாக.  உன்னுடைய விருப்பத்தை அறிந்து 'ஒலிக்கின்ற திருவடியால்' சிவம் உனக்கு உறு துணையாக இருப்பதை  உணர்த்துவான்.  சிவாயநம  என ஓதுவார்க்கு சிவரூபம் கிட்டும்.
 
2707:தினமும் உறங்கும் போது ஐந்தெழுத்தை எண்ணியிருப்பதன் பயன்.
சிவத்தின் அருளைப் பெற, தினமும் தூங்குவதற்கு முன் திருவைந்தெழுத்தை நினைந்து தமது தொண்டை வழியாகப் பிரமரந்திரம் செல்லும் ஊர்த்துவ கதி உணர்வை எழுப்பி சிவனது திருவடியில் அடைக்கலம் புகுவாயாக.
 
2708: ஐந்தெழுத்தின் பெருமையை அஞ்ஞானியர் அறியார்.
குண்டலினியாகிய அரவினை உள்ளும் புறமுமாக இயக்கும்  ஞானச் செல்வ மான சிவனது ஐந்தெழுத்தின் பெருமையை அறியாதவர் அஞ்ஞான இருளை அகற்ற முடியாது வருந்துவர்.
 
6. சூக்கும பஞ்சக்கரம்.   (2709 - 2717)
ஒளியை நினைந்து சிவாயநம என ஓதல் சூக்கும பஞ்சக்கரம்.  இது ஒளி பெற்ற குருவால் சீடனுக்கு உபதேசம் செய்தல்.
 
2709:ஐந்தெழுத்தை ஒளியாக  எண்ணி உருகினால் பொன்னொளி பெறலாம்.
சிவனை ஒளிமயமாக நினைந்து மனமுருகி அவன் ஒளியாக வெளிப்படுவான் என்று நம்பி சிவாயநம என ஓதுபவரது மலக்குற்றத்தோடு கூடிய உடம்பைப் பொன்னொளி பெறச் செய்வான் சிவன்.
 
2710: நுட்ப ஐந்தெழுத்து உச்சரிப்பால் சீவனைப் பற்றிய பாசம் நில்லா.
சிவாயநம எனும் மந்திரம் முறையே சிவன், சத்தி, சீவன்,மலம், மாயை ஆகியவற்றைக் றிக்கும்.அச்செபம் ஐம்மலங்களையும் நீக்கும். ஒளிமயமான சிவத்தையும் சத்தியையும் பற்றி, சிந்தித்து சீவன் ஒளியாக மாறின போது சீவனைப் பற்றிய பாசம் நில்லாது போகும்.
 
2711: ஐந்தெழுத்தூச்சரிப்பவர் வினைக் கூட்டத்தை அழிக்க முடியும்.
சத்தி பஞ்சாக்கரமாகிய "சிவாயநம" என்பது செபிப்போரது  வினைக்கூட்டத்தை அழித்து பிறப்பை  நீக்கி அச்சீவரை பரசிவனாக்கும்.
 
2712: 'சிவாய' என்ற ஒளியை வழிபடின் இருள் நீங்கும்.
ஒளிமயமான சிவசத்தியுடன் ஒளிமயமாக சீவனும் பொருந்த உண்டாகும் "சிவாய" என்ற மலம் நீங்கிய ஒளியைப் பூசிக்க பாச இருள் நீங்கும். சிவஞான யோகம் கூடும்.
 
2713: சிவாய நம என்று உச்சரித்தால்
சீவன் சமாதி நிலை பெற்றுச் சிவமாகும்.  சிரசின் மேல் சிவசத்தி விளங்கித் துரிய நிலையைத் தம்மிடத்தே பெற்று மூலாதாரம் முதல் சோதியாக விளங்குவதில் சமாதியுற்றுச் சிவாயநம என எண்ணுபவர் சிவமாவர்.
 
2714: நவசத்திகளின் செயலற்றுப் போகும் நேரம்.
ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களும் விலக "சிவாய" என்று ஒளி உருவாகப் பூசை செய்யுங்கள்.  அப்போது நவசத்திகளும் சிவசத்தியில் இலயமடையும்.  ஐங்கோசங்களும் மும்மலங்களும் வினைகளும் நீங்கும்.
 
2715: 'சிவசிவ' என்ற மந்திரம் தெளிந்தவர் சிவசத்தி ஆவார்.
"சிவசிவ" என்று எண்ணுபவரது சுவாச கதியும் இயங்காது இலயமடையும்.  சிவமும் சத்தியுமாகிய "சிவசிவ" என்ற மஹாமந்திரத் தைத்தெளிந்தவர்கள் திருவருள் பெற்று சிவசத்தியாகவே அமைவர்.
 
2716: தீவினை நீங்கி நன்னெறியுண்டாகும்.
முற்பிறவியில் செய்த தீவினையின் காரணமே சிவசிவ என்று ஓதாமல் இருப்பதாகும்.  அத்தகைய தீவினையாளரும் சிவசிவ என்று செபிப்பாராயின் அவரது தீவினைகள் நீங்கி அவர் தேவ சரீரம் பெற்று
உய்வார்.
 
2717: சிவத்தைத் தியானிக்க ஆன்ம ஒளி பெருகிப் பிறவி நீங்கும்.
சிவாயநம என்று பஞ்சாக்கரத்தைச் செபிக்கும் போது நம என்ற எழுத்துக்களை கண்டத்துக்கு கீழுள்ள இருள் பிரதேசத்தில் நிறுத்தி சிவ என்ற எழுத்துக்களை சிரசின் மேல் தியானிக்க ஆன்ம ஒளி பெருகி பிறவி நீங்கும்.
 
7. அதிசூக்கும பஞ்சக்கரம்.  (2718 - 2721)
"சிவாய சிவ சிவ" என்பது அதிசூக்கும பஞ்சக்கரம்.  அதாவது இருளைவிட்ட ஆன்மா சிவசத்தியைத் தாரகமாகக் கொண்டு அழிவற்ற நிலை பெறும் என்பதாம்.  ஒளியில் நினைப்பும் அற்று அடங்கி நிற்றலே அதிசூக்கும பஞ்சக்கர தரிசனமாகும்.
 
2718: சீவன் சிவ சத்தியுடன் பொருந்தி ஆனந்த நிலையில் இருக்கும்.
சித்தத்தைப் புறத்தே செல்லாது சிவத்துக்கு அடிமையாக்கி "சிவாய சிவ சிவ" என்று பலமுறை சித்தத்தில் எண்ணியிருக்க மலம் நீங்கிய சீவன் சிவசத்தியோடு பொருந்தி அச்சம் நீங்கி ஆனந்த  நிலையில் ஒளிமயமாய் இருக்கும்.
 
2719: மிக நுட்ப ஐந்தெழுத்தைத் தரிசனம் செய்பவன் சிவத்தை பிரியாது நிற்பன்.
அதிசூக்கும பஞ்சாக்கர தரிசனத்தால் சீவனது மூலாதாரத்திலுள்ள அக்கினி சூரிய மண்டலத்தைப் பேதித்துச் சென்று தோளுக்கு மேல் விளங்கும் சந்திர மண்டல ஒளியில் ஐயறிவுகளும் பொருந்தும் முறையில் போய் யோக நித்திரையில் பொருந்தியிருக்கும். உலகை மறந்திருக்கும் அப்போது சிவத்தை நெஞ்சில் இடமாகக் கொண்டு சீவன்  பிரியாது இருக்கும் நிலை அடையலாம். 
 
2720: முத்திக்கரைக்கு அழைத்துச் செல்லும் தோணி.
அனைத்துக்கும் சிவமே மூலம் என்பதை சந்தேகமின்றி உணர்ந்து சிவத்தையடைய சாதனை செய்யும் சீவர்களுக்கு சிவமே முத்திக் கரைக்கு அழைத்துச் செல்லும் தோணியாகும்.
 
2721: ஐந்தெழுத்து தலைவிதியை மாற்றும்.
சிவாயநம என்ற பஞ்சக்கரம் வெறும் எழுத்துக்கள் அல்ல.  அது ஓதுபவரின் தலையெழுத்தை மாற்றும் அற்புத மந்திரம் என்பதை ஞானமுள்ளவரே அறிவார்.
 
2722 : ஐந்தொழில் நடைபெறல்.
சிவம் அகண்டமாய் எங்கும் வியாபித்துள்ளது போல் அதன் சத்தியும் அகண்டமாய் உள்ளது. அது எங்கும் பரந்துள்ள அறிவாகாயத்தில் நிறைந்து எவ்விடத்தும் அசைவினை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. சிவமும் சத்தியும் அகண்டமாய் எங்கும் வியாபித்துள்ள -மையால் சிவன் யாவற்றிலும் பொருந்திச் சிருட்டியாதி ஐந்தொழிலை தனது சத்தியாலே செய்கிறான்.  சிவன் அகண்ட வியாபகமாய் யாவற்றிலும் கலந்திருப்பதால் ஐந்தொழில் நடைப்பெறுகின்றது.
 
2723 : சிவன் ஐந்து கூத்தாடுகின்றான்.
சிவானந்தத்தை விளைவிக்கும் கூத்தனும் சொல்பதமாகிய பிரணவத் தொனியில் விளங்கும் அழகிய கூத்தனும் சிரசின் மேல் அகாயத்தில் பொன்னொளியில் விளங்கும் கூத்தனும் நெற்றிக்கு நேரே  பொன்னொளியில் விளங்கும் கூத்தனும் சொல்லவொண்ணாத பரவச நிலையை அளிக்கும் கூத்தனும் அறிவுருவாகிய சோதிப் பிழம்பாகிய சிவனை யாரால் அறியமுடியும்.
 
2724 : சிவனுக்கு ஆடுதற்குரிய இடம்.
சிவானந்தக் கூத்து (சிவானந்தத்தை விளைவிக்கும் கூத்து) தனக்கு ஒரு அழிவில்லாச் சத்தாகிய ஆனந்த சத்தியின் இடமாக இன்பமாகிய தேனைப் பிலிற்றும் ஆனந்தத்தை விளைக்கும் பெரிய கூத்தினைக் கண்டவர்களே, சீவபோதம் கடந்து விளங்கும் திருக்கூத்தினை இயற்றும் நம்பியாகிய சிவபெருமானுக்கு அவ்விடத்து ஆனந்தமே திருக்கூத்து ஆடுவதற்கு இடமாயிற்று.
 
2725:சிவனது நடனத்தால் விளைவன.
ஆகாய ஒளி அணுக்களின் நடனம் ஓர் ஆனந்தம். ஆகாயத்திலுள்ள தொனி ஓர் ஆனந்தம். ஆகாய அணுக்கள் ஒன்றோடொன்று உரசுவதால் உண்டாகும் தொனியும் ஆனந்தம். ஆகாயப் பொருளாக விளங்கி ஆனந்தத்தை விளைவிக்கும் தோத்திரங்ளின் ஞானமும் ஆனந்தமாக ஆனந்தத்திலிருந்து நடிக்கும் சிவபெருமானுக்கே அசைவனவும் அசையாதவனவுமாகவுள்ள யாவும் ஆனந்தமாகும். சிவனது நடனத்தால் எல்லாம் ஆனந்தமாக அமையும்.
 
2726 : சிவ நடனத்தின் பயன்.     
அறிவுப் பேரொளியாய் விளங்கும் சிவமும் தத்துவங்களை விட்ட நிலையில் என்றும் உள்ளதாகிய ஆன்மாவாகிய பரமும் ஆருயிர்க்கு அன்பு செய்யும் சிவகாமியாகிய இன்பம் பொருந்திய சத்தியாகிய பரையும் ஆகிய முன்றும் கருத்தில் ஒன்றாக உறைகின்ற அந்த ஆனந்த எல்லையே சிவானந்த நடனத்தின் பயனாகும். இம்மூன்றும் ஒன்றாய் விளங்குவதே சிவநடனத்தின் பயனாகும்.
 
2727 : வடிவம் இல்லாத சிவம் சத்தியைக் கொண்டு ஐந்தொழில் செய்யச் சிவனாக ஆடுகின்றான்.
உருவமில்லாத பெருமான் சிவம் சத்தியைக் கொண்டு உருவை எடுத்துக் கொண்டு சீவர்கள் பொருட்டுப் புரிகின்ற நடனம் ஐந்து ஆகும். ஐந்தொழிலை நடத்துவதற்காக அத்தொழிலைத் தனது சத்தியால் சிருட்டியாதி செய்து ஐந்தொழில் புரிய சிவனாக ஆடுகின்றான்.
 
2728: அண்டம் ஒன்பது சிவனது ஆளுகைக்கு உட்பட்டவை.         
அண்டம் 9 வகைபடும். அவை 1, பேதாண்டம், 2, போகாண்டம், 3, யோகாண்டம் 4, மூதாண்டம், 5, முத்தாண்டம், 6, மோகாண்டம், 7, தேகாண்டம், 8, தாகாண்டம், 9, பூதாண்டம். 
ஒன்பது அண்டங்களும் சிவனது ஆளூகைக்கு உட்பட்டவனாம்.
 
2729: ஆனந்தக் கூத்து ஆடல்.
வேதங்களின் அறிவு ஆட, மிகுந்திருக்கின்ற ஆகமங்களின் அறிவு ஆட, கீதங்களின் அறிவு ஆட,
ஆதார சக்கரங்களினால் வரும் எழுவகை அறிவும் ஆட, ஐம்பூத காரிய அணுக்களின் அறிவு ஆட ,
224 புவனங்களில் பெறும் அறிவு ஆட, ஆனந்தக் கூத்தைச் சிவன் நாத சத்தியைக் கொண்டு ஆடினான். (எல்லா அறிவும் ஆகாயத்தில் ஒரு சலனத்தை உண்டாக்குகின்றன. அதற்கு " ஸ்பந்தம்" என்று பெயர். அவ்வித சலனம் இருப்பதை ஆடல் என்றார்) கூத்தபிரான் எல்லா அறிவும் ஆட ஆனந்தக் கூத்து ஆடினான்.
 
2730: பூதங்களில் சிவன் ஆடிக் கொண்டிருக்கிறான்.
ஐம்பூதங்களினும் ஐம்பொறிகளிலும் ஐம்புலன்களிலும் ஐந்து வேதங்களிலும் மிகுந்த எண்ணிக்கையுடைய ஆகமங்களிலும் ஓதுதற்குரிய பலவகை  காலம் ஊழிகளோடு பல வகை அண்டங்களிலுள்ள ஐவகை அறிவுகளிலும் கலந்து சித்த மூர்த்தியாகிய சிவன் அவற்றினூடே ஆடிக் கொண்டிருக்கின்றான்.
 
2731: சிவத்தின் ஆணையைக் கடப்பவர் ஒருவரும் இலர்.
ஒளியுடலில் சஞ்சரிப்போர், வானுலகவாசிகள், மானிடர், அறிவு உடலில் சஞ்சரிக்கும் சித்தர், கந்தர்வர், பிரமன், விஷ்ணு, ருத்திரார், பன்னிரு ஆதித்தர், பதினோர் உருத்திரர், எட்டு வசுக்கள், இரு மருத்துவர், தவசிகள், ஏழு முனிவர்கள் ஆகியோர் சமயம், இயங்கும் உயிர் இனம் இயங்கா உயிர் இினம் யாவும்
எம் இறைவனாகிய  சிவன் ஆடும் இடங்கள் ஆகும்.  தேவர் முதலாக யாவரும் சிவத்தின் ஆணையைக் கடப்பவர் ஒருவரும் இல்லை.
 
சுந்தரக் கூத்து
( சொற்பதமாகிய பிரணவத்தில் நடிக்கும் அழகிய கூத்து )
 
2732:சிவம் சீவனின் அண்ட கோசத்தில் உமையம்மை காண நடித்தல்.
மூலாதாரம் முதல் சகஸ்ரதளம் ஈறாகவுள்ள ஏழு அண்டங்களுக்கு அப்பாலாய் சதாசிவத்தின் உச்சியின் மேல் விளங்கும் சத்தியின் இடமாக நீலகண்டப் பெருமான் கருணையே வடிவாகக் கொண்டு அவ்விடத்தில் தன்னில் பிரிந்த சத்தியாகிய உமையம்மை காணும்படியாகத் திருக்கூத்தை விரும்பி ஆடினான். சிவம் சிவரது அண்ட கோசத்தில் உமை காண நடிக்கின்றார்.
 
2733 : தாருகாவனம் முதலிய இடங்களில் சிவன் கொடுகொட்டி முதலிய கூத்தை ஆடுதல்.
கொடுகொட்டி, பாண்டரங்கம், கோடு, சங்காரம் ஆகியவற்றையும் எட்டு வகையான நடனத்தோடு ஐந்து வகை நடனத்தையும் ஆறுவகை நடனத்தையும் இடை பிங்கலை சுழுமுனை வழியாகக் கண்டு அறியவும் இனி தேவதாருவனம், தில்லைவனம், ஆலவனம் ஆகியவற்றிலும் நடராசப் பெருமான் சிறந்து விளங்குவான்.  நடராசப் பெருமானே எல்லா வகை காரிங்களுக்காகவும், எல்லா இடங்களிலும், எல்லா வகை நடனங்களையும் ஆடிக்கொண்டிருக்கின்றான்.
 
2734 : சிவன் சுழுமுனையில் பொங்கி எழுந்து அருள் சுரக்கும் காலத்தில் மனம் அடங்கும்.
சீவர்களிடம் பொருந்திய மேலான அண்ட கோசத்து உச்சியில் பராசத்தியின் திருவடிகள் உள்ளன. அங்குப் படர்ந்து வீசுகின்ற ஒளியில் ஈசுவரன் நிறைந்துள்ளான். அவ்வண்ட கோச ஒளியினூடே படருகின்ற நல்ல நாதமும் உள்ளது. அந்த நாதத்தின் ஊடே சிவனாகிய பரன் நடித்தருளுகின்றான்.  எல்லா அண்டங்களையும் கடந்து விளங்கும் உச்சியில் பரன் நடம் புரிந்தருளுகின்றான்.
 
2735: சுழுமுனை உச்சியில் பொங்கி எழுந்து அருள் சுரக்கும் காலத்தில் மனம் அடங்கும்.
அங்குசம் போன்று எழுகின்ற நாத சம்மியத்தால் சீவ அறிவில் பொருந்திய ‘தொம்தீம்' எனத் தட்டும் தாள ஓத்தினில் சங்கரன் சுழுமுனையாகிய மூலநாடியில் நிலை பெற்று ஆடல் புரியும் காலத்தில் மனம் புறம் போதலை விட்டு அடங்கி விடும்.  சிவன் சுழுமுனை உச்சியில் பொங்கியெழுந்து அருள் சுரக்கும் காலத்தில் மனம் அடங்கும்.
 
2736 : சிவன் சீவ போதத்தைத் கெடுத்தருளுகின்றான்.
சீவர்களாகிய பசுக்களின் அறியாமையைப் போக்க விரும்பி ஆடி, அறிவு பெற்ற பின் சீவர்களிடம் ஒன்பது வகையாகப் பொருந்தி ஆடி, சீவர்களிடம் அஞ்ஞான மாகிய காட்டில் விரும்பி ஆடி, அவரது கருத்தினில் பொருந்தி ஆடி, மூன்று நாடிகளும் பொருந்தும் இடமான சுழுமுனையுள் ஆடி, எல்லையில்லாச் சிவஞானத்தில் ஆடல் பொருந்தி எனது சிவ போதத்தைக் கெடுத்து அருளினான். என் நாதனாகிய சிவபெருமான்.  சீவர்களின் அஞ்ஞானக் காட்டில் ஆடி அறியாமையைப் போக்கி, அறிவு பெற்ற சீடர்களின் கருத்தில் ஒன்பது வகையாக பொருந்தி ஆடி சுழுமுனையில் ஆடி எல்லையில்லாச் சிவஞானத்தில் ஆடி சீவர்களிடம் பொருந்தி ஆடிச் சீவ போதத்தைக் கெடுத்தருளினான்.
 
2737 : சிவன் பொருந்துவதாலேயே சத்திகள் இயங்குகின்றன.
பிராமி, வைஷ்ணவி, ரௌத்திரி, காளி, மனோன்மனி ஆகிய ஐந்து சத்திகளிலும் பிரமன், விஷ்ணு, ருத்திரன், மகேசுவரன், சதாசிவன் ஆகிய ஐந்திலும் அஷ்டமூர்த்தம் இலயமடையும் நிலை எட்டிலும் அந்நிலையில் அறிவு குன்றது நிற்கும் நிலைகள் எட்டிலும் அணிமாதி சித்திகள் எட்டிலும் அஷ்ட மூர்த்தத்தில் ஒன்றுக் கொன்று மேலான அறிவு பொருந்திய நிலை எட்டிலும் நிரீட்சணம், புரோக்கணம், தாடணம், அப்யுக்கணம், தாளத்திரயம், திக்குபந்தனம், அவகுண்டனம், தேனு முத்திரை ஆகிய சுத்திகள் எட்டிலும் இறைவனாகிய சிவன் பொருந்தி நடமாடுகின்றான். எல்லா சத்திகளும் சிவன் பொருந்தியே இயங்குகின்றன.
 
2738 : இறைவனின் திருவடிக் கீஷ் மேகம் முதலியவை தங்குதல்.   
ஆவர்த்தம், புட்கலம், சங்காரம், ஆசவனம், நீர்க்காரி, சொற்காரி, சிலாவருடம் ஆகிய மேகங்கள் ஏழும் உப்புகடல், கருப்பஞ்சாற்றுக்கடல், மதுக்கடல், நெய்க்கடல், தயிர்கடல், பாற்க்கடல், சுத்தநீர்க்கடல் ஆகிய எழுடன், நாவலந்தீவு, இறலித்தீவு, குசைத்தீவு, கிரௌஞ்ச தீவு, இலவந்தீவு, தெங்கத்தீவு, புட்கரத்தீவு ஆகிய தீவுகள் ஏழும் தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் ஆகிய உடல்கள் ஏழும், பிரமன், விஷ்னு, ருத்திரன், மகேசன், சதாசிவன், நாதம், சிவன் ஆகிய ஏழுவகை அடக்கமும் எல்லாமாய் ஆகின்ற சிவ பிரானது திருவடியின் கீழ் அடங்கும்.
 
2739 : சிவன் நடனமாடும் இடங்கள்.
சதாசிவத் திருமேனியில் அகோரம் வாமதேவம் தற்புருடம் சத்தியோசாதம் ஈசானம் ஆகிய ஐந்து முகங்களிலும் ஒப்பற்ற பேரின்பம் தரவல்ல உருவம் அருவுருவம் அருவம் ஆகிய நவந்தரு பேதத்துள்ளும் அந்த மேலான சிவன் போருந்தி ஒப்பற்ற நடனத்தை புரிந்தருள்கின்றான்.        ஆன்மாவில் விளங்கும் சிவன் இவ்வகையான ஒன்பது பேதமாகக் கலந்து நடிப்பான்.
 
2740 : அடியவர் பொன்னம்பலத்துள் ஆடல் கண்டு மகிழ்தல்.
சிவானந்தத்தைத் தம்மில் கண்டவரே சிவத்துக்கு அடிமையாவர். சிவபிரானிடத்தில் அடங்கி நின்றவரே அடியாராவார். திருவடி இன்பத்தில் திளைத்திருப்பவரே சிவனடியாராவார். சகஸ்ரதளத்துக்கு மேல் பொன்னொளியில் தடம்கண்டவரே அடியாராவார். அடியார் பொன்னம்பல்த்து ஆடல் கண்டு திளைத்திருப்போராவார்.
 
2741: சிவ நடனத்தால் உண்டாகும் பயன்.
நன்மையைத் தரும் ஞான நடனத்தைப் புரியும் கூத்தப் பெருமான் இந்திரிய வயப்பட்டு மனம் அடங்கப் பெறாதிருந்த சீவனைத்  தனது திருவடியைப் பதிப்பித்து அடங்கும் படியாக செய்து  சிவசத்தியைப் பெருக்கும் ஒளியை சீவனுக்கு நல்கிப் பேரின்பத்தில்  திளைக்கச் செய்து அவ்வொளியில் நிலைபெற்று  சித்திரம் போல் சீவனை அசைவற்று இருக்கச் செய்து சீவனது உள்ளத்தில் நிலைபெற்று விளங்கினான். சிவநடனத்தால் மனம் இந்திரிய வழிச் செல்லாது அடங்கிவிடும்.
 
2742 : சிவன் சீவர்களுக்கும் இன்பம் தந்தருளல்.
ஆகாயத்தில் நடனம் செய்பவனை உத்தமரிடம் நடனம் செய்பவனை செம்மையாகிய பொன்னொளி விளங்கும் ஆகாயத்தில் பிரபஞ்சப் போர் நடத்தும் சீவனுக்குத் துணை வீரனாக இருந்து நடிப்பவனை சீவர்களோடு உறவு கொண்டு நடிப்பவனை, தத் என்னும் சொல்லுக்குப் பொருளாய் ஆன்மாவில் நடிப்பவனை இன்பம் பெற என் அன்பில் பதித்து வைத்தேன். சிவன் ஆகாயத்தில் பொன்னொளியில் விளங்கிச் சீவர்களுக்கு இன்பம் தந்து அருளுவான்.
 
2743 : சிவன் உடலில் மூலாதரம் முதல் துவாதசாந்தம் வரை நடித்தல்.        
மூலாதாரச் சுவாதிட்டானச் சங்கரங்களில் செவ்வொளியில் நடிப்பவனும், செறிவுடைய அஞ்ஞான இருளில் அநாகதச் சக்கரத்தில் நடிப்பவனும் பல நிறங்களோடு விளங்கும் சகஸ்ரதளத்தில் ஒளிக் கிரணங்களோடு கூடி நடிப்பவனும் துவாதசாந்த வெளியில் சோதியாக விளங்கிச் சிவானந்தத்தை விளைக்கும் கூத்தனும் அங்கு மாற்றுக் குறையாத பொன்னொளியில் விளங்குபவனும் ஆகிய கூத்தப் பெருமானை யார் முழுதும் உணர்ந்து உறைக்கவல்லவராவர்?
 
2744 : திருவம்பலத்தைக் கண்டவர்க்கு உண்டாகும் மெய்ப்பாடுகள்.           
நன்மை மிக்க ஊர்த்துவ சகஸ்ரதளத்தில் விளங்கும் நடனத்தில் அத்திருவடி கமலத்துக்கு அன்பு கொண்டவர்க்கு காதலால் மிக்க மகிழ்ச்சி உண்டாகும் . பின் பயம் உண்டாகும். பத்தியால் விழுதலும் எழுதலும் ஆகும். உடல் தளர்ச்சி பெறும். தம் பஞ்சேந்திரிய அறிவு கெட்டுத் தம் நினைவு அறும். அதனால் தமது சாமர்த்தியமும் குறைந்து போகும்.
 
2745 : இதுவும் அது.      
சிவநடனத்தைத் திருவம்பலத்தில் காணவே புறம் சென்று ஒன்றைத் தேட வேண்டும் என்ற எண்ணம் கெடும். நாடுகின்ற சிந்தை ஒன்றைச் சீர்தூக்கிப் பார்க்கும் செயலை விடுத்து நிற்கும். உடல் நினைவில்லா மையால் உடலால் வரும் தளர்ச்சி நீங்கும். பிராணன் பிரமபுழையை நோக்கிப் பாய்வதில் உண்டாகும் உணர்வில் புத்தி செம்மையாக இருக்கும். அதனால் ஐம்புலன் அறிவும் பொருந்தா மனம் புறம் செல்லாமையின் ஒருவித ஆசையும் உண்டாகாது. உள்ளத்தில் ஆனந்தம் பெருகும். உயிரில் சிவநடனத்தைக் காண விருப்பம் மேலும் முதிர்ந்து நிற்கும். (முன்மந்திர தொடர்ச்சி)
 
2746 : சிவன் அம்பலத்தில் ஆடுவதன் காரணம்.
காளியுடன் ஆடி, பொன்மாலையில் நடனம் ஆடி, பேய்களுடன் நடனம் ஆடி, பூமியில் நடனம் ஆடி, நீண்டுகிடக்கும் நீரிலும் நெருப்பிலும் காற்றிலும் பரந்துள்ள ஆகாயத்திலும் நடனம் ஆடி சீவர்கள் நீண்ட வாழ்நாள்  பெற ஆகாயத்தே இருந்து நடனம் புரிபவன் சிவன்.
சீவர்களை அஞ்ஞான நிலையிலிருந்து மீட்க சிவன் அம்பலத்தே ஆடுகின்றான்.
 
2747 : சிவபூமியில் சிவனை வைத்து வழிப்பட்டால் வரும் பயன்.
சகஸ்ரதளமாகிய மேருவில் சுழுமுனை நாடியும் மேல் விளங்கும் இடை நாடியும் பிங்கல நாடியும் ஆகிய மூன்றும் மிக்குள்ள ஆகாயத்தில் பூமியின் தொடர்பின்றி விளங்கும் தீவாகிய இலங்கை போல் உடம்பின் தொடர்பின்றி  விளங்கும் இடைகலை பிங்கலையாகிய இரு நாடிகளும் இதயமாகிய தில்லை வனத்தை வளைத்துக் குளிர்ச்சி பொருந்திய சகஸ்ரதளமாகிய மலை உச்சியில் ஏறிச் சுழுமுனையோடு விளங்கும். ஆதலால் இதயமும் சகஸ்ரதளமும் ஆகிய இரண்டும் சிவன் விளங்கும் இடங்களாம். இதயமும் சிரசும் சிவபூமியாம்.  சிவபூமியில் இறைவனை வழிபட்டால் சிரசின் மேல் நட்சத்திரங்கள் போன்ற ஒளி தோன்றும்.
 
2748 : சிவபெருமான் ஆடும் திருவம்பலமே பூத அண்டத்தின் எல்லை.        
சிரசின் தென்பக்கம் விளங்குவது பிங்கலை. வடபக்கம் விளங்குவது இடைகலை. இரண்டுக்கும் நடுவில் இடையில் விளங்குவது சுழுமுனை.   இச்சுழுமுனை நாடியே அர்த்த சந்திரனை அணிந்த சிவபெருமான் நடிக்கின்ற திருவம்பலமாகும். பூதாண்டத்தின் எல்லையும் இதுவேயாகும்.
 
2749: சத்தியே திருவம்பலமாகக் கொண்டு நடிக்கின்றான்.
பரஞ்சோதியாகிய பெருமான் ஏழு அண்டங்களும் பொன்னம்பலமாக ஆகும் வண்ணம் ஐந்து ஆகாயங்களிலும் அக்கினி கலையில் விளங்கும் சத்தியை திருவம்பலமாகக் கொண்டு கூத்தை விரும்பி நடிக்கின்றான். 
 
2750: சிவன் தென் திசையில் உமையுடன் இருந்து
 ஆடி உயிர்களுக்கு ஆனந்தத்தை அளிக்கிறான்.
சந்திரமண்டல ஒளியாய் விளங்கும் சிவம் வலப்பால் சூரியகலையை  அடைந்து உமையோடிருந்து ஆடிச் சீவர்களுக்கு ஆனந்தத்தை அளிக்கிறான்.
 
2751: நிரானந்தத்தின் பயன்.
சிவபெருமான் ஆட சுழுமுனையில் சந்திரமண்டல ஒளி அசைய சீவர்கள் தம் செயலற்று ஆட அர்த்த சந்திரனில் உள்ள நீல ஒளி அசைய தேக தத்துவத்துக்கு மேல் விளங்கும் அகாய அணுக்கள் ஆட தனது நாத சத்தியால் நாதாந்த நிலையை அடைவிக்கும் நடனத்தை ஆடினான்.
 
2752: சிதாகாயக் கூத்தைக் கண்டவர்
ஞானத்தின் முடிவான பேற்றைப் பெற்றவர்.
சிதாகாயத்தில் சீவர்கள் உய்யுமாறு அவரவர் சிதாகாய மண்டலத்தில் அழகிய சிவபரன் ஆடிய திருக் கூத்தைக் கண்டவர் ஞானத்தின் முடிவான செம்பொருள் நிலையை அடைந்த பேறு பெற்றவராவர்.
 
2753: சிவக் கூத்தே உலகம் முதல் யாவற்றையும் இயக்க வல்லது.
சீவரது இடை பிங்கலை ஆகிய நாடிகள் சிவனது இரு திருவடிகள்.  இவை நரம்பு பற்றித் தொழிற்படுவன அல்ல.  இவை ஆகாயக் கூறால் ஆனவை.  சிவசத்தி இந்த இடைபிங்கலை நாடிகளில் நடனமாடி உடம்பின் கண்ணுள்ள ஏழு ஆதாரங்களையும் இருபத்தோரு உலகங்களையும் நூற்றியெட்டு சமயங்களையும் ஒருசேர இயக்கும்.  சிவத்தின் இயக்கமே உலகம் முதல் யாவற்றையும் இயக்க வல்லது.
 
2754: இடைகலை பிங்கலை சுழுமுனை மூன்றும் கடந்தவர் சிவம்.
ஆகாய மண்டலத்தில் இடக்கண்ணுக்கு மேல் சிரசுக்கு மேல் சாதகர்க்கு பனிப்படலம் போல் ஒளி தோன்றும்.  இதற்கு இடை என்று பெயர். ஆகாய மண்டலத்தில் வலக்கண்ணுக்கு மேல்  பொன்னொளி போன்ற  ஒரு சிறு மஞ்சள் ஒளியை தீட்சை பெற்ற சாதகர் அறிவார்.  இதற்கு பிங்கலன் என்று பெயர்.   இந்த இடை நாடிக்கும் பிங்கல நாடிக்கும் இடையில் உள்ளது சுழுமுனை நாடியாகும்.  இந்த  இடை பிங்கலை சுழுமுனை நாடிகளைக் கடந்து மேலே சென்றவர் பரன் என்னும் சிவமாவர்.
 
2755: பாரத நாட்டின் இயல்பு.
பெற்தற்கரிய வேதங்களும் ஆகமங்களும் தோன்றுதற்கேற்ற ஒன்பது தீர்த்தங்களும் ஏழுமலைகளும் உடைய பூமியின் தென்- பகுதியான பாரத தேசம் மிகவும் சுத்தமான புண்ணிய பூமியாகும்.
 
2756 & 2757: தேவ தேவன் எல்லாப் புவனங்களிலும்
பொருந்தி ஆடினான்.  சிவன் ஆடிய இடங்கள்.
சிவபிரான் நாதத்தொனியில் ஆடி, சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு பாதங்களிலும் ஆடி, அக்கினி கலையின் மீது ஆடி, இருநூற்று  இருபத்து நான்கு புவனங்களிலும் ஆடி, தேவர்கள் அறிவினில் ஆடி, அறிவா- காயத்தில் ஆடி, பிரமன், விஷ்ணு, உருத்திரன் ஆகியோரிடம் ஆடி, முனிவர்- களோடு ஆடி, செய்யுட் கருத்துக்களில் ஆடி, மேலான பராசத்தியிடம் ஆடி, ஆன்மாக்களில் அவரவர் அறிவிற்கேற்ப பொருந்தி ஆடுபவனாக  உள்ளான்.
 
2758: அண்ணல் கலந்து விளங்கும் இடம்.
வலக்கண்ணுக்கு மேல் உள்ள ஒளியை  ஆத்ம சொரூபமாக அறிந்த சாதகர்
ஐந்து முகத்தோடு அதோமுகத்தையும் சேர்த்து ஆறுமுகங்களோடு கூடிய ஒளியாகிய சிவனார் தாமே என்றும்,  சமயம் கூறும் குருவும் தாமே என்றும் உணர்ந்தனர்.
 
2759: சிவன் திங்கள் கலையில் ஒளியாய் நின்று அருள்வான்.
சந்திர சூரியர்களாகிய இரு திருவடிகளின் ஒளி அணுக்களின் திரட்சியாகிய ஆகாயத்தில் அகார, உகார, மகார, விந்து நாதமாகிய ஐவகையும் பொருந்தி விளங்கும் சந்திர கலையில் தமது நிலையாய் இருந்து சிவபெருமான் ஒளியாக அருள் செய்வான்.
 
ஆறுமுகம்.  -  சிவகுமாரன்.  (2760 - 2761)
குரு சீடனுக்கு ஞான தீட்சை செய்யும் போது உடலில் உள்ள சூரியன் உடலுக்கு வெளியே விளங்கும்.  இந்தச் சூரியனை குரு கீழேயுள்ள அக்கினி மண்டலத்தில் (மூலாதாரத்தில்) சேர்த்து மீண்டும் மேலே சகஸ்ரதளத்துக்குக் கொண்டு வருவதில் ஐந்து முகங்களோடு அதோமுகமும் சேர்ந்து ஆறுமுகமுடையவனாகச் சீவன் விளங்குவான்.  இவ்வுண்மையை உலகுக்கு அளிப்பவன் குருபரனாவான்.  இவ்வாறு வலக்கண்ணுக்கு மேல் உள்ள சூரிய ஒளியை அக்கினி சந்திரன் என்ற ஏனைய ஒளியுடன் ஒன்று படுத்திவிட்டால் சீவனே சிவகுமாரன் ஆகின்றான்.
 
2760: சிவக் கூத்தைக் காண்பவர்க்குத் தெளிவு உண்டாகும்.
இடை நாடியாகிய தூக்கிய திருவடியும் அவ்விடை நாடியில் உதிக்கும் நாதமும் அங்குக் கேட்கும் பல ஓசையும் பலப் பல அசைவும் பொருந்திய கோசங்களுடன் ஒளி மயமான சிவன் நடிப்பதை உள்ளத்திலே காண்பவர்க்கு ஐயம் நீங்கித் தெளிவு உண்டாகும்.
 
2761: கூத்தன் ஆடலால் அண்டகோசம் ஒளி மயமாய் விளங்கும்.
மூலாதாரத்தில் காமாக்கினியாக விளங்கும் கூத்தப்பெருமான் இதயத்தில் இருந்து பிராணனாக மேலெழுந்து ஒளியுருவாகி உடலிலும் உடலைக் கடந்தும் விளங்குகிறான்.
 
அற்புதக் கூத்து.  (2762 -      )  சொல்ல வொண்ணாத பரவசத்தை
அடையச் செய்வது அற்புதக் கூத்து.
2762: தலையின் முன்னே உள்ள ஒளியே சிவமும் சத்தியும் ஆகும்.  ஞானயோகத்தில் குருவினால் கட்டப்படும் சொரூபத்தில் குருவான சிவமும் சத்தியும் உள்ளது.  ஸ்பந்தமே ஒளியாவதால் நாத (ஒலி)
அறிவில் சிவமும் விந்து அறிவில் சத்தியும் உள்ளன. சிரசின் முன்னே உள்ள ஒளியே சிவமும்  ‚வித்தையுமாகும்.
 
2763: வான் மண்டலத்தில் மனம் பதிந்தவர் அருள் உடையவர் ஆவர்.
சிரசுக்கு முன்னுள்ள ஆகாய மண்டலத்தில் ஒளியின் உள்ளாகத் தியானிக்கும் முறையே ஞானத்தை அடைவிக்கும் நெறியாகும்.  அத்தியானத்தில் தியானிக்கும் உருவம் மறைந்து அருவமாகிப் பின் அருட்
சத்தி பதியும்.  சிரசுக்கு முன்னுள்ள ஆகாய மண்டலத்தில் மனம் பதிந்தவர் ஆகாயமயமாய் அருளுடையோராவர்.
 
2764: துவாத சாந்தத்தில் சிவம் விளங்கும் இடம் திருவம்பலம் ஆகும்.
சிரசின் மேல் பன்னிரண்டு விரற்கடை அளவு உயரத்தில் விளங்கும் ஒளி திருவம்பலம்.  நீங்கள் துவாத சாந்த வெளியில் கீழ்ச் செல்லும் பிராணனை மேல் செல்லும்படியாக இறைவனைத் தியானம் செய்து இருக்கும்போது நாதம் ஒடுங்கிய நாதாந்த நிலையில் சிவம் திருவம்பலத்தில் தோன்றி அருளுவான்.
 
2765: இறைவன் ஆனந்தத்தை விளைவிக்கும் ஆறுவகை ஆதார ஒளியாகவும் அவற்றுடன் கலந்தும் அவற்றைவிட்டு வேறாயும் ஒளிவடிவமாகிச் சீவர்களுக்குப் புலனாகாமல் மறைந்து நின்றருளுகிறான்.
 
2766: தத்துவங்களைக் கடந்து இறைவன் நடனம் ஆடுகிறான்.
மாயையும் சுத்த மாயையும் கடந்து நின்றவர் காணும்படியான சிவானந்தம் ஐம்பூத ஒளி அணுக்களிலும், எட்டுத் திசைகளிலும், மேலும் கீழும் ஆராய்ந்து காணும் அறிவினைக் கடந்தும் உள்ளது.
 
2767: சிவசத்தி விளக்கத்தால் உயிர்கள் இடைவிடாமல் ஆனந்தத்தை அனுபவித்துக் கொண்டிருப்பர்.
பல ஒளிகளாக விளங்கும் சத்தியோடு வெண்ணிற ஒளியாக விளங்கும் சிவன் சகஸ்ரதள வட்டத்தில் கலந்து சீவர்களுக்கு குற்றமிலா ஆனந்தத்தை விளை வித்து அவர்களது குற்றமில்லா ஞானத்தில் நிலைபெற்று விளங்குவான்.சிவசத்தி விளக்கத்தால் சீவர்கள் இடைவிடாத ஆனந்தத்தைத் துய்த்துக் கொண்டிருப்பர்.
 
2768: சிவமும் சத்தியும் உயிர்களின் நன்மையைப் பொறுத்து ஆடுகிறார்கள்.
சிவமும் சத்தியும் சீவர்களின் ஒளியில் கலந்து சீவர்களின் மலமறைப்பை நீக்கி நன்மை செய்யும் பொருட்டு ஆடுகின்றனர்.
 
2769: சீவனும் சிவனும் ஒத்த நிலையில் விளையும் ஆனந்தமே அற்புத நடனம்.
சீவன் சத்தாகவும் சித்தாகவும் ஆனந்தமாகவும் உள்ள சிவத்தை விரும்பி அதில் திளைக்கும் போது சீவனும் சத்தாகவும் சித்தாகவும் ஆனந்தமாகவும் ஆகிவிடுகிறது.  சீவன் முற்றிலும் சத்து சித்து ஆனந்தம் ஆகிவிடில் சீவனே சிவத்துக்கு சத்தியாகி விடும்.  அப்போது இரண்டும் ஒத்த நிலை அமைந்து சிவனும் சீவனும் சிவசத்தியாகிவிடும்.
 
2770:  குரு காடிய வழியில் சாதனை செய்யில் சிற்றம்பலத்தைப் பார்த்து வழிபடலாம்.
பரமன் ஒளிமயம். சீவனும் ஒளிமயம், குருவருளால்  நெற்றிக்கு முன் புருவ மத்தியில் பொருந்திச் சாதனம் செய்யில் "சிவாயநம" மந்திரம் ஒளியாக விளங்கும்.  அறிவாகாயமாகிய புருவ மத்தியில் பொருந்தி நின்றால் பரமனது ஒளி நாளுக்கு நாள் பெருகும்.  இந்த ஒளியே சிற்றம்பலம், சிதாகாயம், சிதம்பரம் எனப்படும்.  புருவ மத்தியில் ஒளி பெருக்கி சிற்றறிவாக உள்ள சீவனைப் பேரறிவாக ஆக்கி உதவுவது பரமனது பரோபகாரமாம்.
 
2771: அண்டம் முதலாகச் சத்தி இறுதியாகச் சிவன் ஆசனமாகக் கொண்டு கூத்திடுகின்றான்.
அண்டங்களெல்லாம் சூக்குமமாக அமைந்துள்ள பிரம்மன், விஷ்ணு, ருத்திரன், மகேசுவரன், சதாசிவன், வீணாத்தண்டில்  உள்ள குண்டலியாகிய சத்தி, பார்வதியாகிய சம்புவின் சத்தி ஆகிய ஏழு இடங்களிலும் சுடர் போன்ற சிவன் தனது நடனத்தை விரும்பி செய்கின்றான்.
 
2772: சகஸ்ரதளமலரே சிவநடனத்துக்குரிய இடம்.
சிதாகாயப் பெருவெளியில் ஒளிமயமாய் விளங்கும் சகஸ்ரதள மலர்  நன்மை தருவது.  இதுவே நான்கு இதழ்களோடு நூறு இதழ்களாய் விரிந்து அ•து இருநூற்றுப் பத்து புவனங்களிலும் சென்று விளங்கு
வதாயிற்று.  இவ்விதமாக  சிதாகாயத்தில் விளங்கும் சகஸ்ரதள மலரே சிவநடனத்துக்குரிய இடமாம். சகஸ்ரதளத்தில் இருந்து கீழ்நோக்கி நூறு நாடிகள் வருகின்றன.
 
2773: யாவற்றிலும் இறைவன் திருநடனம் நிகழும்.
அண்டநாயகனான சிவன் ஆகாயக்கூறாலான ஆதாரங்கள் ஏழிலும், தேவர், மனிதர், விலங்கு, நீர் வாழ்வன, ஊர்வன, தாவரம் என்ற ஏழு வகைப் பிறப்பு களிலும், தூய்மையான ஆகாய அலைகள் மோதும் ஆதாரங்களின் நோக்க வகைகள் ஏழிலும், எட்டு திசையும் பொருந்தி விளங்கும் அடையாளங் களிலும், சிவத்தின் பேதங்களான பிரமன், விஷ்ணு, ருத்திரன், மகேசுவரன், சதாசிவன், விந்து, நாதம் ஆகிய ஏழிலும்பொருந்தி அவற்றை ஆலயமாகக் கொண்டு நடிப்பவன் ஆவான்.
 
2774: கூத்தன் வான் வெளியில் ஆடும் விதம்.
கூத்தப் பெருமானது உடல் ஆகாயமானது.  அந்த ஆகாய வெளியி லுள்ள கார் இருளே முயலகனாம் (மும்மலமாம்).  மேலாடை போன்று காணப்பெறும் எட்டுத் திசைகளும் அவனது கைகள்.  சீவர்கள் மேல் விருப்பத்தைக் காட்டும் மூன்று கண்களும் சோம சூரிய அக்கினியாக அறிவுப் பெருவெளியில் நடனம் செய்பவனாக அவன் உள்ளான்.
 
2775: கூத்தப் பெருமானுக்கு அகில சராசரமும் அம்பலம்.
உலகில் காணப்பெறும் அசைவனவும் அசையாதனவுமாகவுள்ள அனைத்துயிர்களின் அறிவுப் பெருவெளியே சிவன் நடனமிடும் இடமாகும்.  சிதாகாயப் பெருவெளியில் ஒளியும் நீரின் அசைவு போன்ற ஒரு நிலையும் உண்டு. அவ்வசைவே அப்புத் தீ மண்டலமும் அவனது திருவடி நடனமுமாகும். அகில சராசரமும் ஆதிப் பிரானுக்கு அம்பலமாகும்.
 
2776: வெண்ணீற்று ஒளியில் நடிப்பதே பாண்டரங்கக் கூத்து.
பொருந்திய வலிமையான முழவும் குழலும் ஓம் என ஒலிக்க அதில் பொருந்திய ஞானிகள் அந்நாத ஒலியை ஆதிப் பிரான் என்று உணர, பெருமானை விரும்பி நிற்கும்  கூட்டமாகவுள்ள நல்ல தேவ கணங்களும் பல பூதப்படைகளும் போற்றி இசைப்ப அமைந்திருப்பது   திரிபுரசங்காரக் கூத்தாகும்.  சிதாகாயப் பெருவெளியில் தோன்றும் வெண்ணிற ஒளியே பாண்டரங்கக் கூத்தாகும்.
 
2777:தலையில் விளங்கும் சோமவட்டம் சிறப்புற அந்ைதவரைத் தேவரும் வணங்குவர்.
அண்டத்தின் அகத்தேயுள்ள தேவர்களும் புறத்தேயுள்ள தேவர்களும் தெளிந்த அலைகளையுடைய கடலால் சூழப்பட்ட உலகத்திலுள்ள தேவர்களும் சிரசின் மேல் விளங்கும் பொன்னிற ஒளியில்
நடிக்கும் சிவத்தின் தூக்கிய திருவடி(சந்திரகலை)யைக் கண்டு வணங்க நற்கதி பெறுவர்.
 
2778: சிவக் கூத்தைக் கண்டவர் அடையும் நிலை.
புளியினைக் கண்ணால் கண்டவுடன் நாவில் நீர் சுரப்பதைப் போல சிவானந்தத்தை அளிக்கும் திருக்கூத்தைச் சிரசின் மேல் கண்டவர்க்கெல்லாம் இன்பக் கண்ணீர் முத்து முத்தாக விழும்.  சோர்வுடைய நெஞ்சமானது அன்பினால் உருகும்.  உள்ளத்தின்கண் உணரும் ஒளியாய்ச் சிவம் இன்பம் பெருகி நிற்கும்.
 
2779: கூத்தைக் கண்டவரும் கேட்டவரும் பேரின்பம் அடைவர்.
திருநடனம் கண்டவர் கால்கள் பலமற்று திண்டாடி வீழும்.  இது சிவானந்தத்தால் ஆவதாம்.  அவ்வாறு சிவானந்தத்தைப் பருகியவர்க்கு அகவொளியில் பார்வை பதிந்து தன்னை மறந்த நிலையில் பேரின்பம் கிட்டும்.  யாவராலும் கொண்டாடப் பெறும் சிதாகாயத்தில் ஆடுகின்ற நடனத்தை அறிந்தவரது அருமையான இயல்பு பிரணவத் தொனியைக் கேட்டு நாதாந்தம் சென்றவர்க்குப் பொருந்தும்.
 
2780:கூத்தன் அக்கினிச் சட்டி முதலியவற்றை ஏந்திச் சத்தியுடன் ஆடுதல்.
கூத்தப் பெருமான் அக்கினிச் சட்டி முதலானவைகளைக் கைகளில் ஏந்தி பரஞானம், அபரஞானம் ஆகியவற்றைக் கொடுக்கும் நீல ஒளியாக வுள்ள சத்தியோடு ஆடுகின்றான்.
 
2781: பதினோர் உறுப்புகளுடன் நடனம் செய்து அன்பர்க்கு மேலான பதவியை அளித்தல்.
பாண்டரங்கம் என்ற நடன்த்துக்குரிய பதினோர் உறுப்புக்களும் முறையாகப் பொருந்து மாறு பாதத்தில் சிலம்பும் கையில் உடுக்கையும் கொண்டு நடிப்பதில் எழும் ஒலி சீவனை மேலானவற்றுக்கெல்லாம் மேலான பொருளிடை செலுத்தி நந்தியானவன் புறத்திலும் அகத்திலும் விளங்குகின்றான்.
 
2782: நவம் தரும் பேதம் முதலாக ஆட ஆனந்தக் கூத்து ஆடுதல்
நவந்தரும் பேதங்களும், பதினாறு கோணங்களிலும் உள்ள திசைகளும், ஆறு பக்தி மார்க்கங்களும், 
ஏழு ஆதாரங்களும், ஏழு வகைத் தோற்றமும், ஐம்பத்தாறு தேசமும் ஆட அட்சர வடிவமாகவுள்ள ஐம்பது சத்திகளிடமாகச் சிவானந்தக் கூத்தைச் சிவபெருமான் ஆடியருளினான்.
 
2783: இறைவன் இசையில் பொருந்தி விளங்குவான்.
சன்மார்க்கத்தில் விளங்கும் பரஞ்சோதி ஏழு வகை இசையாகவும், ஏழிசையோடு கூடிய நாடகமாகவும், பிரணவமாக ஒரே தொனியாகவும் இசைந்தருளினான்..
 
2784: மும் மண்டலங்களிலும் பொருந்தி உயிர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நடிக்கிறான்.
கூத்தப் பெருமான் மும்மண்டலங்களிலுள்ள ஆறு ஆதாரங்களிலும் முன்னூற்று அறுபது கலைகளிலும் தூலம், சூக்குமம் ஆகிய பன்னிரண்டு ஆதாரங்களுக்கும் மூலமாய் அகர உகர மகர என்ற மூன்றும் ஒன்றாகி பஞ்சாக்கர வடிவாய் பொருந்திச் சீவர்களின் விருப்பத்துக்கேற்ப நடித்தருளுகிறான்.
 
2785: தேவர் முடி மேல் விள்ங்கும் சிவன் திருவடிகள் அன்புடையார் மனத்து விளங்கி அருளுதல்.
ஈசனது மலர் போன்ற திருவடிகள் அழகு பொருந்திய அன்புடை யாரது மனத்தில் விளங்கிக் கற்பகத்தரு போன்று வேண்டியவற்றைக் கொடுக்கும்.  அத்தகைய பெருமான் பூமியைக் கடந்து ஆகாயத்தில் விளங்குபவனாக உள்ளான்.
 
2786: சிவன் ஆடினால் புவனங்கள் ஆடும். (நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே.)
எல்லாம் உணர்ந்த சிவன் ஆடினால் சிவத்துக்கு கீழாகவுள்ள இருநூற்று இருபத்துநான்கு புவனங்களும் ஆடும்.  சாதகரின் தியான ஆற்றலுக்கேற்ப சிவன் சாதகரின் உள்ளத்திலும் ஆடுவான். சாதகரின் உள்ளத்தில் சிவன் விரும்பி ஆடும்போது அவனுக்குக் கீழான பல பூதங்களும் ஆடித் தத்தம் நிலையினின்றும் விலகும்.  பேரொளிப் பிழம்பான சிவநடத்தைச் சாதகன் இந்த முறையில் கண்டு இன்புறுவான்.
 
2787: கூத்தனின் கூத்து அருட்சத்தியால் விளங்கும்.
ஆதியான சிவன் அவரவர் உள்ளத்தில் நடிப்பதைக் காணுமாறு அருட்சத்தியே துணை புரிகிறது என்பதை அறிவுடையோர் உணர்வார்.
 
2788: கூத்தன் உயிரின் துன்பத்தைப் போக்கி இன்பத்தை அருள்வதற்காக ஆடுகின்றான்.
பிரமன், விஷ்ணு, ருத்திரன், மகேசுவரன், சதாசிவன், விந்து, நாதம், சத்தி, சிவன் என நவந்தரு பேதமாகவுள்ள சிவபெருமான் சீவர்களின் துன்பத்தை போக்கி இன்பத்தை அருளுவதற்காகவே அசிபதத்து ஆடுகின்றான்.
 
2789: அத்தன் ஆட்டத்தால் தத்துவம் ஆடும்.
அத்தனாகிய சிவன் ஆனந்தக்கூத்து ஆடியருளும் போது சகல தத்துவங்களூம், சதாசிவ மூர்த்தியும்,
சித்த மண்டலமும், சிவத்தின் சத்தியும், அசைவன அசையாதனவாகிய எல்லாமும், வேத சொரூபமான மூலாதாரத்தில் உள்ள ஒளியும் ஆடும். (நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே.)
 
2790: பரமாகாயத்தில் சிவன் ஆடுகின்றான்.
பதஞ்சலி முனிவர் போல சிவத்தின்  திருவடியைக் கை  கூப்பி வணங்கி  நிற்பவரும்  வியாக்கிரபாதர் முனிவர் போல சிவத்தின் திருவடியைப்  புலியைப் போல பற்றி நிற்பவருமே சிவத்தைக் காண முடியும்.  இத்தகையோர் காணும்படி அறிவுமயமான ஆனந்தன்  உருவமாய், அருவமாய், அருவுருவமாய் ஆகாயத்தில் நின்று ஆடல் புரிகிறான்.
 
2791: சிவக்கூத்தால் தத்துவங்கள் நீங்கும்; நாதாந்தம் கிட்டும்.
சிவன் நடனம் செய்தமையால் சத்தியும், அசைவில்லாத ஆகாயமும் நற்பயன் அளிக்காத தத்துவங்களும், உருவம், அருவம், அருவுருவ -மாகிய ஒன்பது தத்துவங்களும், அவற்றைக் கடந்து விளங்கும் நாதாந்தமும் ஆட வேதாந்த சித்தாந்தத்துள்ளே சிவம் ஆடுவதைக் காணலாம்.
 
2792: சிவ நடன இயல்பு.
நாதாந்தத்தால் அடையத் தக்கதும், புருடார்த்தத்தால் அடையத் தக்கதும், தத்துவமசி வாக்கியம் சொன்ன வேதாந்தத்தால் அடையத் தக்கதும், நீ சிவம் ஆகிறாய் என்ற சித்தாந்தத்தால் அடையத் தக்கதும் நாதானு சந்தானமாகிய சிவநடனமே.
 
2793: மல நீக்கம் பெற்ற சீவன் ஞானக் கூத்தை அனுபவிப்பான்.
பிரமனாதி ஐவரது ஆட்சி முடிவில் பாசம் நீங்கி மலநீக்கம் பெற்ற சீவன் தவத்தின் விளைவாகிய சிவானந்தத்தில் சிவனது ஞானக் கூத்தினை அனுபவிப்பான்.
 
2794: சிறு தெய்வ ஆட்சியினின்று மீட்டான்.
சோம சூரியாக்கினியாகிய முச்சுடர்களும் ஆடும்படி நின்ற சிவன் சீவர்களைச் சிறு தெய்வங்களின் ஆட்சியினின்றும் விடுவிக்குமாறு ஆடி அருளுகிறான்.
 
2795: சீவர்களை உலக இன்பத்தில் சேர்ப்பதும் பிரிப்பதும் அவனே!
சந்திரகலை விந்து ரூபமாக இருந்த போது மூலாதாரத்தில் இருந்து உலக இன்பத்தை அனுபவிக்க உதவினவன் சிவனேயாகும்.  சந்திரகலை நாதாந்தத்தில் விளங்கிய போது பிரிக்கப்படாத விந்து நிலை பிரிக்கப்பட்டு ஒளிமயமாக மாறிற்று.  விந்துவாகவும் ஒளியாகவும் இருந்து சீவனுடன் தப்படாவண்ணம் பின்னி நிற்பவன் சிவபெருமான். "சிவனே விந்து - வீணாக்காதே - விந்தை ஒளியாக மாற்றி சிவமாகு."
 
2796:கூத்தினால் சீவர்களின் தத்துவக்கூட்டுறவு நீங்கி ஆனந்தம் ஏற்படும்.
ஆன்மாவுக்கு அழிவு இல்லை.  ஆனால் தத்துவக் கூட்டுறவு உண்டு.   ஆனந்தமான சிவ நடனத்தை அறிந்த பிறகு "தான்" என்ற ஆன்மாவுக்குத் தத்துவக் கூட்டுறவு முடியும். இந்த நடனமே  உண்மையான ஆனந்தமாகும்.  இதனைத் தானறுதல் என்பர்.
 
2797: கூத்தன் திருவடியில் ஐந்தெழுத்துக்கும் உள்ள ஐந்து இடங்கள்.
கூத்தனது திருவுருவில்
உடுக்கையை உதறிய வலக்கை  "சி"'-யையும்,
மலர் போன்ற இடக்கை "வா"-வையும்,
பொன் போன்ற வலக்கை "ய"-வையும்,
அக்கினியையுடைய இடக்கை "ந"-வையும்
மலத்தை அடக்கிய திருவடி "ம"-வையும் குறிக்கும்.  
கூத்தனது திருவுருவில் ஐந்தெழுத்துக்களுக்கும் உரிய ஐந்து இடங்கள் இவை.
 
2798: ஐந்தெழுத்தை சிவ வடிவமாக எண்ணித் துதிக்க வேண்டும்.
உருவமற்ற "சிவாயநம" என்ற பஞ்சாக்கரத்தை கூத்தப் பெருமான்
உருவமாக எண்ணி ஓத வேண்டும்.
 
2799:சிவனின் வடிவில் சீவர்களுக்காக ஐந்தொழில் உணரப் பெறுகின்றன
சகல தத்துவங்களையும் ஒடுக்கி நிற்கும் அரன் உடுக்கையால் தோற்றத்தையும் அபயகரத்தால் காத்தலையும் தீயை ஏந்திய கரத்தால் அழிப்பினையும் அரனது ஊன்றிய திருவடியால் மறைப்பையும் அரனது தூக்கிய திருவடியால் அநுக்கிரகத்தையும் செய்து அருளுவான்.
 
2800: படைத்தல் முதலிய மூவரின் ஆட்சியும் சீவர்களிடம் முடியும்.
சீவரது அக்கினி மண்டலம் சந்திர மண்டல ஒளியாக மாறிய போது  சிரசின் மேல் வேத சொரூபமான நாதம் முழங்கும்.  அப்போது சிவசத்தியின் அருளால் படைத்தலாதி செயலைச் செய்யும் பிரமன், விஷ்ணு, ருத்திரன் ஆகிய மூவருடைய ஆட்சியும் சீவர்களிடம் முடியும்.
           
2801: துவாத சாந்தத்தில் விளங்கும் பெருமானின் பெருமையை விளக்க இயலாது.
ஓம் எனும் பிரணவத்தில் பொருந்தியும் அதைக் கடந்தும் சீவ ஒளிக்குள் ஒளியாயுமுள்ள சிவத்தை வாயினால் விளக்க முடியாது.  துவாத சாந்தப் பெருவெளியில் நடிக்கும் பெருமானது பெருமையைக் கூற முடியாது.
 
2802: சிவனது திருமேனி சீவர்களுக்குப் புகலிடம்.
மூலாதாரத்தில் சிவப்பாயும் சிரசின் மேல் வெள்ளையாயும் சிவனை ஒளி  வடிவாகக் காணில் அது சீவர்களுக்குப் புகலிடமாகும்.
 
2803: உயிர் அரனிடம் ஒன்றி அறிவு வட்வமாகும்.
சீவன் இச்சை, ஞானம், கிரியை, பிரகிருதி மயத்தை விட்டு சிவமயமான போது பராசத்தியின் அருளால் அரனோடு ஒன்றி அறிவுருவாகும்.
 
9. ஆகாயப் பேறு: (2804 - 2812)
பராகாயத்தில் ஒளியில் திளைத்திருத்தல் ஆகாயப் பேறாகும்.  திருக்கூத்துத் தரிசனத்தின் பின் தன் செயலற்றிருக்கும் நிலை.)
 
2804: உள்ளத்துள்ளே சிவம் ஓங்காரமாய் ஒளியாக விளங்கும். 
மன மண்டலத்துள் ஓங்காரமாய் நின்ற ஈசனான ஒருவனும் அங்கு அக்கினி போல் ஒளிரும் ஒருவனும் அங்கு நீதி மயமான ஒருவனும் ஆகியவனைக் கொண்டு விளங்கும் மன மண்டலம் சூழ்ந்த உடம்பு
வானம் ஆகும்.
 
2805: எல்லாவற்றுக்கும் ஆதாரமானவன் சிவன்.   உருவ நிலையில் தேகமாகவும் அருவுருவாக தேகத்தைச் சூழவுள்ள அண்ட கோசமாகவும் அருவமாக ஒளியாகவும் விளங்குபவன் சிவமேயாகும்.
 
2806: மனம் அடங்கிய போது உடல் நினைவு அகன்று விடும்.  மனம் அடங்கியபோது சீவ ஒளி சிவ ஒளியில் கலந்து ஒன்றாகும்.  அப்போது தேக நினைவு நீங்கும்.  தேகம் ஒளிமயமாகும்.
 
2807: இன்பத்தை ஊட்டிய சிவனே ஞான நெறியைக் காட்ட வல்லவன்.
சீவன் அநுபவிக்கும் சிற்றின்பத்தில் இன்பமாக இருப்பவன் சிவனே.  அதே சீவன் சிவத்தின்பால் அன்பு கொண்டபோது ஞான நெறியைக் காட்டுவதும் அவனேயாகும்.
 
2808: நீண்ட காலம் வாழ்வதற்கு வழி.
சீவ ஒளி சிரசின் மேல் விளங்கும் சிவ ஒளியில் பொருந்தி இருக்கில் எடுத்த தேகத்தில் நீடூழி வாழலாம்.
 
2809: சிவன் விளங்கும் இயல்பு.
மூலாதாரத்தில் உள்ள குண்டலினியை சிரசுக்கு மேல் எழச் செய்து அணிந்து கொண்டிருக்கும் சிவன் ஆகாயவண்ணமாய் அறிவுப் பேரொளியாய் விளங்கி அருளுவான்.
 
2810: ஒளியாய் என் உள்ளத்தில் பொருந்தி நுண்ணுடலைத் தனித்து வெளியாகும்படி செய்தது!
சிவசத்தியும் சீவசத்தியும் ஒன்றான போது ஆன்மாவைத் தேகத்தினின்றும் பிரித்துக் காண முடியும்.
 
2811: சிவானந்தத்தை அடையலாம்.
சீவர்கள் உலக நினைவை விட்டு சிவ நினைவு கொண்டு பராகாயத்தில் விளங்கும் சோதியை அறிந்து தம்மை ஒளி மயமாகக் கண்டு வழிபடில் சிவானந்தம் உண்டாகும்.
 
2812: வானப் பேறு.
சீவன் வியஷ்டி நிலை நீங்கிச் சமஷ்டியாகிய சிவத்தில் நிலை பெற்றுத் தன் செயலற்றிருத்தலே ஆகாயப் பேறாகும்.
 
10. ஞானோதயம்.  (2813 - 2824)
தான் வேறு அவன் வேறு என்ற நிலை மாறித் தானே அவன் என்ற ஞானம் உண்டாதலே ஞானோதயமாகும்.
 
2813: நந்தி அருளியவை.
நனவு, கனவு நிலைகளில் உண்டாகும் விஷயானந்தமும் சுட்டறிவு நீங்கிய நிலையில் உண்டாகும் சிவானந்தமும் இரண்டும் நந்தியெம்பெருமான் சீவர்களுக்கு அருளியனவே என்று உணர்தல் ஞானோதயமாகும்.
 
2814: உயிர்கள் சிவனின் பெருமையை உணர்ந்து அகண்டத்தில் வழிபட வேண்டும்.
சீவர்கள் ஆணவத்தை அழித்து காமசெயத்தை நல்கி பெருங்கருணை புரியும் சிவபெருமானது அருமை பெருமைகளை எண்ணி அகண்டத்தில் வழிபட வேண்டும்.
 
2815: சிவன் மேலான ஞானத்தை அருள்வான்.
தகுதிஉடையோர் உரை செய்த சிவத்தின் நாத நெறி வழியே விந்து சத்தியை சீவர்கள் இழக்காது பொருந்தி நின்றால் சிவபெருமான் மேலான ஞானத்தை அருளுவான்.
 
2816: சிவத்தின் அகண்ட ஒளியில் அடங்கியிருக்கும் திறமுடையவர் ஞானியர்.
சிவத்தின் அகண்ட ஒளியில் சீவஒளி அடங்கக்காணும் திறமுடைய சீவர்கள் ஞானோதயம் பெற்று சிவத்தினது திருவடியைப் பொருந்தி வாழக் கூடும்.
 
2817: ஆன்மா தத்துவங்களின் உண்மையை உணரும் போது சிவனை நாடும்.
தேகம் முதலியவை தான் அல்ல; தான் எல்லாவற்றையும் அறிபவன் என்ற உண்மையை ஆன்மா உணர்ந்தபோது சிவனை நாடிச் சிவமாந்தன்மை பெறும்.
 
2818: ஆன்மா தத்துவங்களின் உண்மையை உணரும் போது சிவனை நாடும்.
உண்மை ஞானம் கைவரஉண்மை ஞானம் கைவந்தபோது சுவாதிட்டான மலரில் இருந்து உடம்பில் பரவிய காமசத்தி பசும் பொன்னின் ஒளி கொண்டு சிரசின் மேல் சென்று சிவசத்தியாக சகஸ்ரதளத்தில் ஒளிரும்.
 
2819: உள்ளும் புறமும் கலந்து விளங்கும் பேரொளியைப் புறம்பு எனக் கூற முடியாது.
சிரசின் மேல் உள்ள அண்டத்திலும் உடலின் உள்ளும் புறமும் சோதியாக விளங்கும் சிவம் சீவனுக்கு வேறானவன் அல்ல.
 
2820: மெய்ஞ்ஞானம் கிட்ட வழி.
சீவன் வேறு சிவன் வேறு என்ற துவைத பாவனை விட்டு சிவனே சீவனாக உள்ளது என்பதை உணரும் போது மெய்ஞானம் உதயமாகும்.
 
2821: பிரணவத்தை உணர்ந்து நாதாந்த நிலை அடைதலே ஞான நெறியாகும்.
ஆன்மா அறிவுரு என்பதைத் தெரிந்து சீவ போதத்தை விட்டு சிவ போதத்தில் அடங்கியிருந்து பிரணவப் பொருளை உணர்ந்து நாதாந்த நிலை எய்தலே ஞான நெறியாகும்.
 
2822: உய்ய வால்லவர் செயல்.
சிவத்தை உயிராகக் கொண்டு பிரணவத்தில் ஒடுங்கி சிவஞானத்தால் பிறப்புக்களினின்று உய்ய வல்லாரது அறிவுக்கு அறிவாய்ச் சிவன் விளங்குவான்.
 
2823: அன்புடன் நாடுவார்க்குச் சிவன் உறுதுணையாவான்.
அன்போடு நாடவல்லார்க்கு சிவன் உறுதுணையாய் நின்று நீண்ட ஆயுளைத் தந்து தவறாது காத்தருள்வான்.
 
2824: ஞானமுடையார் மனத்தில் தேவர் கூட்டம்.
ஓம் என்ற பிரணவத்தை விட்டு நீங்காத நாதம் போல் ஞானோதயம் பெற்றோரது உள்ளத்தை விட்டு தேவர்கள் நீங்காது இருப்பர்.
 
11. சத்திய ஞானானந்தம்.  (2825 - 2834)
உண்மை ஞானத்தினால் பெறும் ஆனந்தம்.   முத்துரியம் கடந்த நிலையில் பெறும் ஆனந்தமே மெய்ப்பொருள் ஆனந்தமாகும்.
 
2825: ஆன்மா நாதாந்த நிலையில் சிவத்துடன் பொருந்தி ஆனந்தமாய் விளங்கும்.
ஆன்மா  தத்துவங்களை விட்டு நனவு, கனவு,உறக்கம் துரியம் ஆகிய நிலைகளைக் கடந்து நின்ற போது தன் நிலை இன்ன தன்மையது என்று கூறவொண்ணாதபடி சிவத்துடன் பொருந்தி இருப்பதில் ஆனந்தமாய் விளங்கும்.
 
2826: சிவன் சீவர்களை முப்பதங்களையும் கடந்த சிவதுரியத்தில் செலுத்தி ஆட்கொள்வான்.
ஆன்மா பிரகிருதியை நோக்கி நினைக்காத அவ்வப்பால் நிலையில் சிவன் சீவர்களைப்  பக்குவம் நோக்கி சிவதுரியத்தில் செலுத்தி ஆட்கொண்டருள்வான்.
 
2827: சத்திய ஞானானந்தம் நீலமலர் முதலிய ஆறையும் போல் இனியது.
சத்திய ஞானானந்தம் கண்ணுக்கினிய நீலோற்பலமும் தூய்மையும் நாதமும் நிறமும் மணமும் பிரகாசமும் போன்று இனிமையானதாம்.
 
2828: சிவசத்தியுடன் பொருந்தி அனுபவிக்கும் மேலான ஆனந்தமே மேலானது.
இணைபிரியாத சிவசத்தியோடு சீவர்கள் பொருந்தி அனுபவிக்கும் ஆனந்தமே மேலான ஆனந்தம் என்று உணர்வதே பரஞானமாகும்.
 
2829: சீவன் சித்தத்துடன் பிரிவில்லாமல் பொருந்தவே சிவன் மேலான ஆனந்தத்தை அளிப்பான்.          சீவன் சிவத்தோடு பிரிப்பின்றி பொருந்தவே சிவன் மேலான ஞானானந்தத்தை அருளினான்.
 
2830: உயிரின் எண்ணம் சிவமயமாவதில் சீவன் சிவமாகும்.  சீவனது எண்ணம் சிவமயமாகும் போது சீவன் சிவமாகும்.
 
2831: சிவன் சீவனுள் புகுந்து இன்பம் பெருகச் செய்வான்.
துரியாவத்தையைச் சீவன் கடந்த போது சிவன் சீவனுள் புகுந்து மயிர்க்கால் தோறும் இன்பம் பெருகுமாறு அருளுவான்.
 
2832: நாதாந்தத்திலும் சிவன் சீவனைப் பிரியாதிருந்து அருளுவான்.
அழியாத்தன்மையுடைய சீவனையும் அது பொருந்தியிருக்கும் அண்ட கோசத்தையும் நாதத்துவத்தையும்  கடந்து தனித்து நிற்கும் சிவபெருமான் நாதாந்தத்திலும் சீவனைப் பிரியாது தொடர்ந்து அருளுகின்றான்.
 
2833: சீவன் உண்மையான ஞானானந்தத்தில் திளைத்திருக்கும்.
மும்மல வாதனைகள், முப்பத்தாறு தத்துவங்கள், துரியாவத்தைக் குற்றங்கள் ஆகியவற்றைக் கடந்து  உலக நிலையினின்றும் மாறி துரியாதீதத்தில் ஆன்மா சிவக் காதலுடன் நிற்கும்.அந்த ஞானானந்த நிலை கைவரப்பெற்றபோது ஆன்மா சச்சிதானந்தமயமாய் விளங்கும்.
(சிவம் சச்சிதானந்தமாகும். சீவன் சிவனை அடைய அதனுடைய பிரகிருதி நோக்கிய மனம் மாற வேண்டும்.  மனமாற்றம் அடைந்தால் ஒழிய துரியத்தை அடைய முடியாது. துரியத்தில் நிலை பெற்ற சீவன் உலக நிலையினின்றும் மாறிச் சிவக் காதலுடன் நிற்கும்.  அந்நிலை கைவரப்பெற்றவன் ஞானான்ந்தம் பெற்ற ஞானியாவான்.)
 
2834: சீவன் சிவ வடிவம் பெறும்.
சீவன் பிறவியைத் தரும் மும்மலங்கள், மும்மாயைகள், பற்று ஆகியவற்றை விட்டு துரியாதீதத்தில் சிவத்தைச் சார்ந்து சிவமானபோது சீவனுக்கு சிவரூபம் அமையும்.
 
12. சொரூப உதயம்.  (2835 - 2846)
 
2835: சிவன் துரிய நிலையில் ஆன்ம சொரூபத்தில் பொருந்தி விளங்கும்.
சிவன் தத்துவங்களைவிட்ட ஆன்மாவின் அருமையான துரிய நிலையில் ஆன்ம சொரூபத்தில் பொருந்தி எவ்விடத்தும் நீக்கமற விளங்குவான்.
 
2836: மண் முதல் விண் வரை நீண்டு உயர்ந்த சிவனை எல்லைக்குட்படுத்தி வணங்க முடியாது.
பஞ்ச பூதங்களாயும் அவற்றைக் கடந்தும் நிலம் முதல் ஆகாயம் வரை நீண்டும் உயர்ந்தும் அகன்றும் பரந்துள்ள சிவனை எந்த ஒரு எல்லைக்குள்ளும் உட்படுத்த முடியாது.
 
2837: எங்கும் நிறை இறைவனைத் தேவர் முதலியவர் வழிபடுவர்.
இறைவன் அவரவரிடம் உள்ள ஆன்ம சோதியில்  பொருந்தியும் அவர்களைக் கடந்தும் சமஷ்டி நிலையில் புவனங்களுக்குத் தலைவனாகவும் எங்கும் நிறைந்து உள்ளான்.
 
2838: தேவர்க்குத் தலைவராய் விளங்குபவர்.
காமம், குரோதம், உலோபம், மதம், மாற்சரியம், மண்ணாசை, பொன்னாசை ஆகியவற்றின் தீமைகளை உணர்ந்து அவைகளை விட்டு நீங்கி சிவத்தோடு கலந்து இருப்பவர் தேவர்களுக்குத் தலைவராவர்.
 
2839: சீவர்களைச் செம்மையுறச் செய்பவன் சிவன்.
சிவன் சீவ துரியம், பர துரியம், சிவ துரியம் ஆகிய மூன்றிலும் பொருந்தியும் அவற்றின் வேறாய் இருந்தும் சீவர்களை ஆட்கொள்ளுவான்.
 
2840: சிவனின் இயல்பு.
தனக்கென ஒரு மூலமின்றித் தான் அருவமாக எல்லாவற்றுக்கும் மூலமாக இருக்கும் சிவசொரூபத்தை அவனது அருளால் அன்றிக் கூட முடியாது.
 
2841: சீவனின் உண்மைத் தன்மையை உணர்பவர் அடையும் பயன்.
சிவத்தின் திருவருளை இடைவிடாது சிந்தித்திருப்பவர் ஒளி பொருந்திய தேவ சரீரம் பெற்று மரணத்தை வென்று வாழ்வர்.
 
2842: பரஞ்சோதியைப் பற்றாகக் கொள்வதன் பயன்!
சீவன் பரஞ்சோதியைப் பற்றாகக் கொள்ளின் பரஞ்சோதி சீவனைப் பற்றிக்   கொள்ளும்.   பிறகு அது தன்னை விளக்கி ஆன்ம சொரூபத்தை உணர்த்தியருளும்.
 
2843:குரு சீவனுக்கு இன்பம் அளித்தல்.
பரஞோதியைப் பற்றாகக் கொள்ளின் ஆதிசத்தி, இச்சாசத்தி, ஞானசத்தி, கிரியாசத்தியாகிய நான்கு சத்திகளும் கலந்து நிற்கும் சிவ சொரூபமான குரு சீவனுக்கு இன்பம் அளிப்பவனாக விளங்குவான்.
 
2844: மோன சொரூபமான சிவன் ஒளிமயமாய் ஒளிர்வான்.
குருவினால் தீட்சை பெற்ற பிறகு அர்த்த மாத்திரைப் பிரணவம் விளங்கும்.  அதன் வழிச் செல்ல நாதாந்தம் கிட்டி உலகியல் விடுபட்டு இன்ப நிலையைச் சீவன் பெற்று ஒளிமயமாக விளங்குவான்.
 
2845: சந்திர மண்டலத்தில் தலைவனைக் கண்டேன்!
கண்டப் பிரதேசத்தில் தவம் செய்து மாதறி மூர்த்தி சிரசுக்கு மேல் சென்று சந்திர மண்டல ஒளியில் விளங்குவதைக் காணலாம்.
 
2846: சிவரூபம் பெறுதல்.
சீவன் சீவர்களை சிவன் ஆட்கொள்ளும் வழியையும், சிவனைச் சென்றடையும் நெறியையும் அறிந்து கலந்தபின் சிவரூபம் பெறும்.
13.     ஊழ்    (2847 - 2852)
 
2847: ஞானியர் துன்பத்துக்காக வருத்தமும் இன்பத்துக்காக மகிழ்வும் கொள்ளார்.
தத்துவத்தை உணர்ந்த ஞானியர் துன்பத்துக்காக வருத்தமும் இன்பத்துக்காக மகிழ்வும் கொள்ளார்.  எல்லாம் இறைவனின் விருப்பப்படியே நடக்கிறது என்றுணர்ந்து அமைதியாக நடப்பர்.
 
2848: இன்பமும் துன்பமும் வினைப்பயனால் உண்டாவன.
இன்பமும் துன்பமும் சீவர்கள் செய்யும் வினப் பயனுக்கு ஏற்றவாறு அமையும். சிரசின் வழி மேல் சென்று சிவசத்தியை நோக்கிச் செய்யும் தவம் மேலான இடத்தை அளிக்கும்.
 
2849: இறைவனை இன்பத்திலும் துன்பத்திலும் நினைக்க வேண்டும்.
நாம் செய்த வினைக்குரிய இன்ப துன்பங்களை நாமே தான் அனுபவித்தாக வேண்டும் என்பதை உணர்ந்து இன்ப துன்ப அனுபவத்தில் இறைவனை இடைவிடாது எண்ணியிருக்க வேண்டும்.
 
2850: வெளித் துன்பங்களால் தாக்கப்படாமல் இறைவனையே எண்ணியிருப்பேன்!
இடிவிழுதல், கடல்பொங்குதல், காட்டுத்தீயால் சூழப்படுதல், புயல் காற்று போன்ற எத்தகைய மோசமான சூழலால் பாதிப்பு ஏற்பட்டாலும் புறச்சூழலால் தாக்கப்படாது இறைவனை இடைவிடாது நாட வேண்டும்.
 
2851: துன்பம் வரினும் துவளவிடேன்.
தூல உடலுக்கு எத்துைைனத் துன்பம் வந்தாலும் ஞான  சாதனையைச் செய்வதினின்றும் தவறலாகாது.
 
2852: சிவஞானியர்க்கு உடல் அழிவு பற்றிய அச்சமில்லை.
குடியிருந்த வீடு பழுதடைந்த போது வேறோர் வீடு புகுவது போல எடுத்த தேகம் கெடுமாயின் வேறோர் உடல் வாழ்வு கிட்டும். சிவஞானம் பெற்றோர்க்கு உடல் அழிவு பற்றிய அச்சம் விலகும்.
 
14. சிவதரிசனம்.    (2853 - 2855)
சிவனை இடைவிடாது எண்ணியிருந்தால் அவன் வெளிப்பட்டருள்வான் என்க.
 
2853: சிந்திப்பவர்சிந்தையுளான் சிவன்!
சிவனையே எண்ணிக் கொண்டிருக்கும் தூய எண்ணமுடையோர் நெஞ்சினுள்ளே சிவன் சிறந்து வெளிப்பட்டு அருளுவான்,
 
2854: மனம் வாக்கைக் கடந்தவனை முறைப்படி வழிபட வேண்டும்.  வாக்கு மனதுக்கு அப்பாற்பட்ட, நுண்மையான, போக்கும் வரவும் கேடும் இல்லாத சிவத்தைத் தேடி ஆராய்ந்து தெளிந்து பொருந்த வேண்டும்.
 
2855: யாவற்றுக்கும் சிவனே ஆதாரம்.
பரம்பொருளாகிய சிவன் ஆன்ம ஒளியாயும் பேராற்றலும் பேரறிவும் உடையவனாயும் மறைக்க முடியாத சுடராயும், அறிவால் அறியப்படாத அரனாயும், எல்லாவற்றுக்கும் ஆதாரமாயும் உலகுக்கு அருள் புரிபவனாகவும் உள்ளான்.
 
15. சிவசொரூப தரிசனம்.     (2856 - 2863)
சிவத்தின் இயல்பான சத்து சித்து ஆனந்த நிலையை உணர்தல்.  சிவதரிசனம் கண்டவர்க்கு உண்டாகும் மெய்ப்பாடு இங்கு கூறப்படுகிறது.
 
2856: மூன்று நிலைகளைக் கடந்த ஆனந்தமே சிவத்தின் சொரூபம்.
புறத்தும் அகத்தும் தடைப்படாத, உருவம், அருவுருவம், அருவம் ஆகிய மூன்று நிலைகளையும் கடந்த ஆனந்தமே சிவத்தின் மேன்மையான சொரூபமாகும்.
 
2857: சிவனை இன்ன தன்மையன் என்று இயம்ப இயலாது.
உணர்வாகவும், உணர்வு வெளிப்படும் உயிராகவும், இரு உயிர்களைப் புணரும்படி செய்பவனும், பிணங்கும்படி செய்பவனும், சுவாதிட்டான மலரில் பொருந்தி இருப்பவனுமாகிய சிவன் எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவன்.
 
2858: சிவன் தன்னை எண்ணி வழிபடுவோர்க்குத் தலையிலிருந்து பொருள் விளக்கம்தருபவன்.
சிவனைத் தன் முன் இருப்பதாக நினைந்து வழிபடுவோர்க்குச் சிவன் சிரசிலிருந்து பொருள் விளக்கம் செய்வான்; விருப்பங்களை நிறைவேற்றி வைப்பான்.
 
2859: சிவன் ஆன்மாவின் வடிவை உணர்த்துவான்.
சிந்தையைத் தெளிய வைத்து சிவத்தை விடாது நினைக்க - ஒப்பற்ற தலைவனான சிவன் வெளிப்பட்டு  - ஆன்மாவின் சொரூபத்தை, நீ அறிவு மயமானவன் என்பதை உணர்த்துவான்.
 
2860: சீவன் நிர்க்குணமானபோது சிவன் வெளிப்படுவான்.
சீவரது சித்தம் முக்குணவயப்பட்ட போது சிவானந்தத்தை விளைவிக்கும்  பேரொளி அவரிடம் பொருந்தாது.  சச்சிதானந்த பொருளாகிய சிவன் சீவன் நிர்க்குணமான போது ஒளிமயமாக விளங்குவான்.
 
2861: சிவனின் வடிவ இயல்பு.
சிவனே பரனாயும், சிரசின் மேல் விளங்கும் ஒளிமயமாயும், சுகம் தரும் அரனாயும், ஆனந்தமாயும் உள்ளான்.  சிவனே அவை அல்லவாயும் உள்ளான்.  சிவ சொரூபத்தை அளவிட முடியாது.
 
2862: சிவனது வடிவத்தை உணர்ந்தவர் பேரானந்தத்தில் திளைப்பர்.
முத்தியும் சித்தியும் கை கூடி சிவனது சொரூபத்தை உணர்ந்தவர் பேரானந்தத்தில் திளைக்கும் ஞானியாவர்.  அவர் கிரியை எதுவும் செய்யத் தேவையில்லை.
 
2863: துரியாதீத நிலையடைந்தவர் இயல்பைக் கூற இயலாது.
துரியாதீத நிலை சொல்லுவதற்கு முடியாத பாழாகும்.  அத் துரியாதீதத்தை அடைந்தால் மனம் விரிதலும் குவிதலும் இல்லாது சிந்தனையற்று நின்று விடும்.  அந்நிலையை வாக்கினால் கூற இயலாது.
 
16. முத்திபேதம், கரும நிருவாணம்.   (2864 - 2865)
 
2864: நிருவாண நிலை உண்டாகும்.
ஆன்ம சொரூபமாகிய பரம் செயலற்றுச் சிவசொரூபத்தில் அடங்கியிருத்தல் முத்தியாகும்.
 
2865: மௌன நிலை அடைபவர்.
கற்றதனாலாய பயன் உலகப் பற்றினை விட்டு சிவஞானம் பெற்றுச் சிவனைப் பொருந்தியிருத்தல் என்று உணர்பவர் மௌனநிலை எய்தி இருப்பர்.
 
17. சூரிய சம்பாஷணை.   (2866 - 2935)
ஞானப்பொருளை மறைவாகப் பேசுவது.   ஞான்சாதனையும் ஞானசாதனையின் பயனும் இங்குக் கூறப்பெறும்.
2866: பொறிகளின் மறைப்பை அறியேன்.
மனித உடம்பில் பஞ்சேந்திரியங்கள், இச்சா சத்தி, ஞானசத்தி, கிரியா சத்தி, ஐம்பத்தோர் அக்கரங்களை யுடைய ஆதாரங்கள் ஆகியவற்றில் சீவன் கண்ணுக்குப் புலப்படாமல் பொருந்தி கருவிகளை இயக்கி விஷய சுகமாகிய ஆதாயத்தை அடைய செயல்படுகிறது. சீவன் உடலைபற்றிய போது உடலின் இயக்கம் உணரப் படுவது போலச் சீவன் சிவத்தைப் பற்றிய போது அதன் சூக்கும நிலையான விந்து நாதம் உணரப்பட்டுச் சிவ நடனத்தைக் கண்டு நாதாந்தம் செல்லலாம்.
 
2867: ஆணவம், கன்மம், மாயை ஆகிய களைச்செடிகளைப் பறித்துச்சிவப்பயிரை வளர்க்க வேண்டும்.
ஆணவம், கன்மம், மாயை ஆகிய ஆணவமாதி களைகளை அகற்றிச் சிவப்பயிர் வளர்ப்பவரே சிவத்தையடைவர்.
 
2868: ஆதாரங்கள் ஒன்று பட்டு ஒளிமயமாய் நிற்கும்!
மூலாதாரத்திலுள்ள மூலவாயு சுழுமுனை வழியாக மேலே சகஸ்ரதளம் சென்ற போது ஏழு ஆதாரங்களும் ஒன்று பட்டு ஒளிமயமாய் விளங்கும்.
 
2869: வைராக்கியத்தால் உண்டாகும் பயன்.
ஞான சாதனையில் முதலில் புருவ நடுவில் சிறிய துடிப்பு தோன்றும். பின் ஞான சாதனையில் சிரசின் மேல் சகஸ்ரதளத்தில்  மஞ்சள் ஒளி உண்டாகும்.  உலகக் கசப்பால் வைராக்கியம் உண்டாகும்.  ஆன்மாவை விட்டு தத்துவங்கள் விலகி ஓடும்.  ஆன்ம லாபமாகிய சிவக்கனி கிட்டும்.
 
2870: விந்து வெற்றியால் சந்திர மண்டல ஒளியை எளிதாய் அடைய முடியும்.
நீலகண்டப் பெருமானிடம் மனம் பதித்து விந்து சத்தியை மாற்றுவதில் ஐம்பூதமயமான வீரியம் ஐந்து தன்மாத்திரை வடிவான ஒளியாக மாறும்.  விந்து செயத்தால் ஆன்மா விளங்கும் சந்திர மண்டல ஒளியை எளிதாய் அடைய முடியும்.
 
2871: சீவன் முத்தி சித்திக்கும்.
தன்னுண்மையை உணராதவரை ஆன்மா சாகிர சொப்பன சுழுத்தியில் அவத்தைப்படும்.  தன்னுண்மையை உணர்ந்து சிவத்தொண்டினைச் செய்யும்போது சிவானந்தம் பெருகி சீவன் முத்தி சித்திக்கும்.
 
2872: ஞானப் பேறு கிடைப்பதே சிறந்தது!
அடயோகத்தால் கிடைக்கப்பெறும் தேக சித்தியை விட ஞான சாதனையால் கிடைக்கப்பெறும் ஞான சித்தியே சிறப்புடையது.
 
2873: ஆத்ம சாதனத்தின் இயல்பு.
சத்தியானது சுழுமுனை வழியே சகஸ்ரதளம் செல்லாமல் காமவேட்கையைத் தணிப்பதற்கு மட்டும் பயன்பட்டால் சத்தி அழிந்து கெடும்.
 
2874: ஆன்மா சிற்றின்பத்தை நாடிக் கெடுகின்றது.
பேரின்பத்தை நாடி வளர்வதை விட்டு ஆன்மா சிற்றின்பத்தை நாடிக் கெடுகின்றது.
 
2875: உடம்பில் காற்றின் இயக்கம் இருக்கும் வரை சுத்த தத்துவம் விளங்காது.
சிவ தத்துவமான பசுக்கள் கறக்கின்ற இன்பமான பால் ஒரு குடம் ஆன்மாவுக்குப் போதுமானது. 
இடை கலை, பிங்கலையாகிய காற்றுப் பசுக்கலைக் கறந்து உண்ணும் காலத்தில், அதனின் வேறான
சுத்த தத்துவமான பசுக்கள் வருவதை அறிய இயலாது.
 
2876: சீவன் சிவத்தை உரிமையாக்கிக் கொள்ளலாம்.
சிரசின் மேல் நாதம் படரச் சீவன் அவ்வழியே சென்று சிவத்தை உரிமையாக்கிக் கொண்டான்.
 
2877: சிவம் பொருந்துவதற்கு விதையாதல்.
உடலில் கீழ்முகமாகச் செல்லும் பிராண சத்தியின் வழியை அடைத்து சிவதத்துவத்தால் மேல் முகமாக்கிக் கொண்டால் சிரசில் விந்து மண்டலம் விளங்கிச் சிவம் பொருந்துவதற்கு விதையாகும்.
 
2878: பிரணவ உபாசகரின் சாதனம்.
பிரணவ உபாசகர் சந்திர சூரிய கலைகளை சிவ சிந்தனையால் பொருத்தி ஒன்றாக்கி  சுவாச கதியை மாற்றி தொண்டைச் சக்கரத்தில்  சிவ உணர்வாகிய ஞான சாதனையைத் தேக்கி சிவபதம் அடைவார்.
 
2879: விந்து மண்டல ஒளி பரவி விளங்குதல்.
சிவத்தையடையும் உபாயம் அறிந்து ஆகாயப் பேற்றில் சிந்தனையுடையார்க்கு விந்து மண்டல ஒளி மூன்று முறையாகப் பெருகி ஆனந்தமயமாக விளங்கும்.
 
2880: அடயோக நெறி பற்றி ஞானமின்றி இருத்தலால் தீமை உண்டாகும்
குண்டலியின் ஆற்றல் கீழ்முகப்படுத்தப்படுமாயின் அழிவு உண்டாகும்.  அடயோக நெறி நின்று உடல் ஆற்றலை மட்டும் பெருக்கி இருப்பவர்கள் குண்டலியின் ஆற்றலை கீழ்முகப்படுத்திக் காமத்துக்கு இரையாகி மாள்வர்.
 
2881: இருள் நீங்கி ஒளியுண்டாகும்.
வஞ்சனையைச் செய்யும் காமவாழ்வில் பந்தப்படுத்தும் பாசத்தைச் சிவாக்கினியில் வைத்து நாதோபாசனை செய்து வந்தால் சீவரது உள்ளத்தில் சிவசத்தி பதிந்து இருள் நீங்கி ஒளி பெருகும்.
 
2882: உலைக் களத்தில் இட்ட இரும்பைப் போல் சிவன் ஒளியைத் தருவான்.
சகஸ்ரதளத்தில் பதிந்து ஞான சாதனை செய்பவர் மார்பகத்துக்கு மேல் சிவன் ஒளியாகிய அமிர்தத்தை விளங்குமாறு செய்வான்.
 
2883: பொறிகள் அகநோக்குக் கொள்வதால் உண்டாகும் பயன்.
அடக்குவாரின்றி விருப்பம் போல் அலையும் பஞ்சேந்திரியங்கள் சிவத்தின் அருளால் உலக நோக்கின்றி அகநோக்காக அமையுமாயின் பேரின்பம் உண்டாகும்.
 
2884: மனம் செம்மையாகி ஞானம் ஒளிரும்.
பஞ்சப் பிராணன்கள், இரண்டு தேமாக்கள், ஒன்பது திப்பிலிகள், முப்பது தத்துவங்கள் அனைத்தும் சீவரது வசப்படுமாயின் மனத்துள்ள காமாதிகள் விருத்தியடையாது மனம் செம்மையாகி ஞானம்  மிளிரும்.
 
2885: ஆன்மா சகஸ்ரதளத்து நாதத்தில் திளைத்திருக்கும்.
குண்டலினி சத்தி சுழுமுனை வழியாக சிரசை அடைய ஆன்மா தத்துவங்களை மறந்து சிவத்தின் அருளால் தேனுண்ட வண்டு போலச் சகஸ்ரதள மலரிலுள்ள நாதத்தில் திளைத்திருக்கும்.
 
2886:  ஐம்பொறிகளின் இயல்பு.
வெந்து போகின்ற இந்த பொய்யான உடலை மெய்யென்று எண்ணிப் பஞ்சேந்திரியங்கள் போக இன்பத்தில் திளைக்கின்றன.
 
2887: வைராக்கியத்துடன் ஞான சாதனையும் இன்றியமையாதது.
ஆன்ம ஞானமாகிய அமுதம் பெற வைராக்கியத்தோடு குண்டலினி சத்தியை சுழுமுனை வழியாக மேலே சிரசுக்கு செலுத்தும் ஞானசாதனையும் இன்றியமையாது வேண்டப்படும்.
 
2888: ஆன்மா ஐந்து நிலைகளை அடைதல்.
தசநாடிகள், ஐம்புலன்கள், பஞ்சபூதங்கள், பஞ்சதன்மாத்திரைகள், ஐந்து ஞானேந்திரியங்கள்,
தச வாயுக்கள், முக்குணங்கள், ஆறு மருத்துவர்கள் ஆகிய அனைவரும் உள்ள  சீவரது தேகத்தில் ஆன்மா பொருந்தி   சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் ஆகிய நிலைகளில் ஐந்தவத்தைப்படும்.
 
2889: கும்பகம் அமையுமாறு.
சீவன் தனது நிலையை அறிந்து பிராண அபான இயக்கத்தை செயல்படாது நிறுத்திவிடின் கும்பகம் அமைந்து சுழுமுனை விளங்கும்.
 
2890: சீடர் மனத்தை நிறுத்தி வானையே உடலாகக் கொண்டு முழுமை பெற்று விளங்குவர்.
ஞானசாதகர் மனமண்டலத்தை ஒழுங்கு படுத்தி இறைவனிடம் மனம் பதியும்படி  செய்து
வெண்ணிற ஒளியை சிரசின் மேல் விளங்கும்படி பாவித்தால் இந்த உடலையும் உயிரையும்
சூழ்ந்துள்ள ஆகாயத்தையே உடம்பாகக் கொண்டு பூரணத்துவம் பெற்று விளங்குவர்.
 
2891: நாதத்தில் நிலை பெற்று நிற்பதில் சிற்றறிவையுடைய சீவன் மீட்கப்படும்.
அறியாமை, காமம், அதர்மம், சிற்றறிவு, குரோதம் அனைத்தும் மனத்தில் இருப்பினும் நாத சம்மியத்தில் சீவன் நிலை பெற்று  நிற்கும்போது சிற்றறிவுடைய சீவன் அஞ்ஞான வழி செல்லாது மீட்கப்படுகிறது.
 
2892: அறிவில் மனம் அடங்குதற்குரிய வழி.
உடல் பற்றுக் காரணமாகப் பிறந்த ஆசையால் அலையும் மனத்தையுடைய சீவன் நன்மையானவற்றை நினைந்தும் பேசியும் இருந்தால் மனம் முக்குண வயப்பட்டு புறத்தே செல்லாது அறிவினில் அடங்கி இருக்கும்.
 
2893: பஞ்சப் பிராண இயக்கத்தின் பயன்.
அஞ்ஞானமயமான தத்துவமாகிய காட்டினுள் புகுந்தவர் சிவபூமியாகிய வெட்ட வெளியைக் காண மாட்டார். பஞ்சப் பிராண இயக்கத்தால் காமக்குரோதாதிகளான தீய எண்ணங்கள் நீங்கினால் சீவன் சீவதுரியம், பரதுரியம் மற்றும்  சிவதுரியம் ஆகிய மூன்றையும்  கடந்து விளங்கும்.
 
2894: மங்கையர் மையலில் பட்டவர் கெடுவர்.
பெண்களைக் கண்டு மோகம் கொண்டவர் பாறையின் மேல் வைத்த ஆடை பறப்பது போல் காமாதி அறுபகையில் அலைப்புண்டு கெடுவர்.
 
2895: பரசத்தியின் அருள் கிட்டுமாறு.
காலை, நண்பகல், மாலையாகிய மூன்று காலங்களிலும் சிதாகாயப் பெருவெளியில் மனத்தை நிறுத்தித் தியானம் செய்பவரின் தீவினைகளைப் பராசத்தி தவிர்த்து அருள்  புரிவாள்.
 
2896: இன்பத்திலும் துன்பத்திலும் ஈடுபடாது சிவானந்தத்தில் திளைத்திருப்பர் ஞானியர்.
தர்மத்தால் வந்த சுகத்தில் பற்றும் அதர்மத்தால் வந்த துக்கத்தில் வெறுப்பும் கொள்ளாத சீவர்கள்  தவத்தால் சிவத்தை அடைந்து  ஆகாயமயமான தேகம் பெற்று சிவானந்தத்தை அனுபவித்துக் கொண்டிருப்பர்.
 
2897: மூலாக்கினி ஒளிமயமாய் மாறும் விதம்.
இந்திரியங்கள் உலக விஷயங்களைப் பற்றவில்லையெனில் -  சீவரது உணர்வு பெருகி மூலாக்கினியைத் தூண்டி - சூழ்ந்த அண்டகோசத்தின் இருளைப் போக்கி  ஒளிமயமான சிவத்தை அடையும்.
 
2898: நிர்க்குணப் பிரமத்தின் இயல்பு.
எல்லாவற்றிலும் ஒளிமயமாக வியாபித்திருக்கும் ஞானமாகிய நிர்க்குணப் பிரம்மத்தை கரும காண்ட அறிவாகிய கிளையில் யாரும் காண முடியாது.
 
2899: சிவத்தை அடையும் உபாயம்.
சிவத்தை அடையும் உபாயம் சிவத்தை வாழ்த்துவதும் அதனிடம் தாழ்ந்து கிடப்பதுமாகும்.
 
2900: உயிர் வலிய காட்டைக் கடக்கும் வழி சிவ ஒளியில் மனம் நிலை பெறுவதே.
சம்சார வழியில் செல்லும் சீவனை ஐம்புலன்கள் அஞ்ஞானத்தால் சீவபோதத்தில் ஆழ்த்தி விடும்.  சீவன் சிவவொளியில் மனம் நிலை பெற்று நாதமாகிய ஒலியை எழுப்பி ஐம்புலன்களை அழைக்க அவை மீண்டு வந்து சிரசின் சகஸ்ரதளத்தில் பொருந்தும். சிவ ஒளியில் மனதை நிலை நிறுத்தி சீவன் வலிய அஞ்ஞானக் காட்டைக் கடக்கலாம்.
 
2901: சிவபோகத்தை நாட வேண்டும்.
அறிவும் அறியாமையும் மலர்ந்த சம்சாரமாகிய சாகரத்தில் கசப்பான நாமரூபமான பிரபஞ்சத்தில் மயங்கி கெடாது அகண்ட சிவத்தின் சத்து சித்து ஆனந்தத்தை அனுபவிக்காதவர் தீமை செய்யும் உலக போகத்தை நாடிக் கெடுவர்.
 
2902: சிவத்தை ஒளிமயமாகக் கண்ட ஆன்மா துன்பம் நீங்கி இன்பம் அனுபவிக்கும்.             
பிருதிவியின் இயல்பால் உருவத்தாலாகிய உடலின் பயனை மனத்தின் வழி அனுபவிக்கும் பாசவயப்பட்ட ஆன்மா சிவத்தை ஒளி மயமாகக் கண்டதும் துன்பம் நீங்கி இன்பம் அனுபவிக்கும்.
 
2903: இறைவன் அருளால் அல்லாமல் ஆன்மா உலக மாயையைக் கடந்து அகண்ட சொரூபத்தை அறியமுடியாது.
 
2904: பேரின்பம் உண்டாகுதல்.
சந்திர சூரிய கலையை ஞானசாதனையால் சகஸ்ரதளத்தில் சேர்த்து அக்கினி கலையில் விளங்க வல்லார்க்கு பேரின்பம் உண்டாகும்.
 
2905: உயிர் சிவ பூமியை அடையும் முறை.
ஐம்பூதமயமான உடலில் உள்ள ஆறு காமாதிகளைச் சீவன் வென்று ஏழு ஆதாரங்களைக் கடந்த பின் சிவ பூமியை அடைதல் கூடும்.
 
2906: பரியங்கி யோக சாதனையால் விந்து வெற்றி பெறலாம்.
வீரியமாகிய சத்தியை வெளியே விடாமல் நடு நாடியாகிய சுழுமுனையில் கட்டி உடலினுள்ளே நிலை பெறும்படி செய்யும் பரியங்கி யோக சாதனையால் விந்து செயம் பெற்று ஒளியுடல் பெறலாம்.
 
2907: வானப்பேறு கிட்டும் முறை.
ஆகாயமே ஏழு கடல்கள், எட்டு மலைகள், அக்கினி, காற்று ஆகிய எல்லாவற்றையும் தாங்கியுள்ளது என்ற உணர்வு விளங்கியபோது சீவனுக்கு ஆகாயப்பேறு கிட்டும்.
 
2908: உலக இன்பம் நிலையற்றது.
மனமும் இந்திரியங்களும் ஒன்றி காமச்செயலில் சிற்றின்பம் அனுபவிக்கும்.  அந்த நிலையற்ற சிற்றின்ப அனுபவம் முடிந்ததுமே  மனமும் இந்திரியங்களும் விலகிவிடும்.  இத்தகைய நிலையற்ற மன உடல் கூட்டுறவால் வரும் சிற்றின்பத்தால்,உலக போகங்களால் வரும் இன்பம் நிலையற்றது. மனமே அறிந்து கொள்.
 
2909: அருளால் உண்டாகும் விருப்பமே நிலையானது.
திருமணத்தில் பிறர் அறிய மேளம் கொட்டுவதையும் உரிமைக்காக தாலி அணிவதையும் விட இறைவன் அருளால் (மணமக்களுக்கிடையே) உண்டாகும் விருப்பமே மிகவும் வலிமையுடையதாகும்.
 
2910: தர்க்க வாதம் செய்பவர்க்கு அப்பாற்பட்டவன் சிவன்.
புலன்வழிச் செல்லும் உலகப் பற்றை விடாதவனும், ஞான சாதனையின்றி வீணாக தர்க்க வாதம் செய்பவனும் மெய்ப் பொருளாகிய சிவத்தைக் காண முடியாது.  சரியை, கிரியை யோக நெறியில் நிற்பவரே சிவஞானம் பெற்றுச் சிவமாவர்.
 
2911: ஆசையும் பாசமும் நீங்கி உள்ளம் தூயதானால் சிவன் அதில் விளங்குவான்.
ஆசையும் பாசமும் சித்தத்தின் தூய்மையைக் கெடுத்து அதனுள்ளிருக்கும் சீவனையும் மறைத்து நிற்கும்.  ஆசையும் பாசமும் நீங்கிய சலனமில்லாத சித்தத்தில் சீவனை ஆட்கொள்ளுவான் சிவன்.
 
2912: சிவ பூமியை அடைவது எளிதல்ல.
பிரணவத்தைக் கடந்து சிரசின் மேல் சென்று இயங்க வல்லார்க்கு ஒளிஞானம் பெற்றுச் சிவபூமியை அடைதல் எளிதாகும்.
 
2913: மலபரிபாகம் பெற்றுச் சிவம் விளங்குதல்.
அகண்ட சிவத்தை அடையும் தவம் கைகூடி மனம் ஒருமைப்பட்டால் சத்தி பொருந்தி மலபரிபாகம் உண்டாகி வினை போகத்தைக் கொடுக்காது எண்ணம் அடங்கும்.  அப்போது தவறுதலின்றி சிவம் ஒளிமயமாக விளங்கும்.
 
2914: உணர்வு சிவமயமானது அறிவு தொழிற்படாது.
பிராண இயக்கம் உள்ளவரை உடலுணர்வு இருக்கும்.  சுட்டறிவு  செயல்படும். சிரசின் மேல் விளங்கும் சந்திர மண்டலத்தை சீவனின் உணர்வு அடந்து சிவமயமான போது பிராண இயக்கம் கெட்டுப் பஞ்சேந்திரிய அறிவு செயல்படாது.  உணர்வு சிவமயமான போது சுட்டறிவு செயல்படாது உடல் பற்றிய சிந்தனை நின்று போகும்.
 
2915: மாயா காரியத்தில் பற்றுக் கொள்ளாதவன்.
பிரணவமாகிய தோணி பற்றி ஏறிச் சிரசின் மேல் செல்பவன் பிறப்பு இறப்பைத் தரும் மாயா காரியத்தில் பற்றுக் கொள்ள மாட்டான்.
 
2916: மங்கையரிடம் அன்பு கொண்டாலும் தளராமல் சுழுமுனையில் பொருந்தியிருப்பார் அடியார்.
ஆணவம் கன்மம் மாயை ஆகிய மும்மலங்களும் நீங்கிய சிவக்காதலுடையார்
கன்னியரிடம் காமச் செயல் புரிந்தாலும் தம் நிலை தளராது சுழுமுனையில்  பொருந்தியிருப்பர்.
 
2917: சீவன் சிவபுரத்தை அடையும் போது சங்கநாதம் எழும்.                                                                 சீவரது ஞான சாதனையால் முக்கண் போன்ற சோம சூரிய அக்கினி கலைகள் சிரசில் முதுகந்தண்டு முடியுமிடத்தில் வளர்ச்சி பெற்று ஒன்றான போது சீவரது இந்திரியங்களின் செயல்பாடுகள் கெட்டு ஒழிந்து சங்கநாதம் கேட்கும்.
 
2918: உயிரின் குறை குறைதல்.
சீவன் மனத்திலுள்ள தீய குணங்களைச் சேர்ந்து பொருந்தாமல் சிவத்தோடு சேர்ந்து பொருந்தும் போது சீவனது குறைகள் சிறிது சிறிதாகக் குறையும்.
 
2919: உலகப் பற்றை நீங்கியவர் சகஸ்ரதளத்தைக் காண முடியும்.
தத்துவக் கூட்டங்களாலான இந்த உடலின் தேகப்பற்றை நீக்கி  உடலை ஒளிமயமாகக் காண்பவரே சிரசில் விளங்கும் சகஸ்ரதளமலரைக் காணமுடியும்.
 
2920; சகஸ்ரதள மலரில் உள்ள பச்சை நிற ஒளியைக் காண்பது பொறி வயப்பட்டவர்க்கு இயலாது.
சிதாகாயத்தில் விளங்கும் பச்சை நிற மரகத ஒளி ஞானசாதனையைச் செய்பவரால் அன்றி கீழான இந்திரிய வயப்பட்டவரால் காண முடியாததாகும்.
 
2921: பிறப்பு நீங்கிச் சிவமாகும்.
சீவன் குருவருளால் ஒளியாகிய குருந்தம் ஏறி ' உலகம் ஒரு மாயாகாரியம் ' என்று உணர்ந்த போது குண்டலினி சத்தி சிரசின் நடுவேயுள்ள ஊர்த்துவ சகஸ்ரதளத்தில் பொருந்தி நாதத்தை எழுப்பி நிற்கும்.  அப்போது இந்திரிய வயப்பட்டு இறந்து பிறந்து கொண்டிருந்த சீவன் பிறப்பிறப்பற்ற சிவமேயாகும்.
 
2922: சிவத்தைச் சேர்ந்து வாழ்வதே முறை.
இன்பமும் துன்பமும் செய்த வினைக்கீடாகவே வந்து பொருந்தின என்பதையும்  அவை இன்பமாகவும் துன்பமாகவும் தேகப் பற்றின் காரணமாகவே தோன்றுகின்றன என்பதையும் சீவன் உணர்ந்து தேகப் பற்றை நீக்கிச் சிவத்தைச் சேர்ந்து வாழ்வதே  முறையான வாழ்வாகும்.
 
2923: விந்து செயம் கிட்டி நின்றால் உயிர் பக்குவப்பட்டுச் சிவம் ஆகும்.
மாதரோடு பொருந்தி விந்தை நாசம் செய்வதை விட்டு நில்லுங்கள்.  விந்து செயம் பெற்றுச் சிவத்தை விரும்பி நிற்பின் குறைவற்ற செல்வமாகிய  சிவம் கிட்டுவதோடு சீவன் பக்குவப்பட்டுச் சிவமாகும்.
 
2924: உயிர் அசைவு உணர்வில் மனம் பதிந்த போது உடல் ஓசை வழியே போய்ச் சுழுமுனையில் விளங்கும்.   சீவன் ஸ்பந்த உணர்வில் தோன்றும் சங்கநாத ஓசை வழியே சென்று சிவத்தில் மனம்
பதிந்தபோது சகஸ்ரதளத்தில் சிவம் விளங்கும்.
 
2925: விஷய வாசனை ஞான சாதனைக்குத் தடைஎன எண்ணி அவற்றினின்றும் நீங்க வேண்டும்.
தேக விஷய வாசனைகள் ஞான சாதனைக்குத் தடையானவை என்று உணர்ந்து சிவத்தை அடைய விரும்பும் சீவன் நவத்துவாரங்களின் வழிச் செல்லாது தேகப்பற்றை விட்டு நீங்க வேண்டும்.
 
2926:கலை முதலியவற்றின் இயல்பு அறிந்து செயல்பட்டு மேற் செல்ல வேண்டும்.
சீவன் அறிந்து செயற்படாத நிலையில்  குண்டலினியும் அகர விந்து கலைகளும்  கீழ் முகமாக செயல்பட்டு சீவனைப் பன்றி போன்ற இழிநிலைக்குத் தள்ளும்.  சீவன் அறிந்து செயற்படும்போது குண்டலினி புருவ மத்தியை அடைந்து அகரகலையும் விந்துகலை நான்கும் அங்குப் பொருந்தும்.
 
2927: சிவத்தின் துணை உயிர்க்குக் கிட்டியபின் உலகப்பற்றுகள் எல்லாம் நீங்கும்.
சிவப்பற்றின்றி தேகப்பற்று உள்ளவரை சீவன் விஷயானுபவத்தின் மீதே நாட்டம் கொள்ளும்.  சீவன் சிவப் பற்றுக் கொண்டு சிவபெருமானது துணை சீவனுக்குக் கிட்டியபின் விஷயப் பற்றுக்கள் எல்லாம் நீங்கிவிடும்.
 
2928: சிவன் ஆட்கொள்ளல்.
உலகப் பற்றை விட்டு ஞானசாதனையில் நிற்கும் சீவனின் பிராணன் சிரசின் மேலுள்ள ஊர்த்துவ சகஸ்ரதளத்தில் சென்று மோதும் போது சிவன் நாதத்தை வெளிப்படுத்தி சீவனை ஆட்கொள்ளுவான்.  அங்கு சிவானந்தம் தோன்றும்.
 
2929: உயிர் இன்பம் பெறத் தன்னைச் சிவனுக்கு உரிமையாக்கிவிடும்.  சீவன் சிவானந்தம் பெறத் தன்னை சிவனுக்கு உரிமையாகிவிட வேண்டும்.
 
2930: உண்மையான துறவியர்.
சிவானந்தம் ஆராய்ச்சி அறிவால் அறியப்படுவதல்ல.  இருளே ஆன்ம சொரூபம் என்பதை அறிந்து சந்திர மண்டல ஒளியில் துரிய பூமியில் உலகை மறந்து திளைத்திருப்போர் உண்மைத் துறவியாவர்.
 
2931: சகஸ்ரதளமலர் விரிந்த பின் சீவன் சிவனுடன் பொருந்தும்
சகஸ்ரதளமலர் சிவம் செயல்படும் இடமாகும்.  இது காதல் கொண்ட சீவனும் சிவனும் பொருந்தும் சிவபூமியாம்.  சகஸ்ரதள மலர் விரிந்தபின் சீவன் சிவனோடு பொருந்தி நிற்கும்.
 
2932: இறைவன் ஐந்து கோசங்களையும் கடக்க உதவுவான்.
தேகத்தில் ஆன்மாவோடு பொருந்தி அக்கினியை முட்டி நிற்கும் தத்துவங்களை சிவன் ஆன்மாவில் வழிகாட்டியாக நின்று அச்சுறுத்தி  - ஆன்மா ஐந்து கோசங்களையும் கடந்து அழிதல் இல்லாத இடத்துக்குத் தனித்துச் செல்ல உதவுவான்.
 
2933: குரு உபதேசத்துடன் மன ஒருமைப்பாடு தேவை.
ஞானசாதனைக்கு குரு உபதேசத்தோடு மன ஒருமைப்பாடும் மிகவும்  இன்றியமை -யாததாகும்.  புறக்கிரியை ஞானசாதனைக்கு எந்த பயனையும் தராது. 
 
2934: ஞான சாதனைக்கு இன்றியமையாதவை.
சிரசில் சகஸ்ரதளமலரில் சீவன் சோமசூரியாக்கினியில் ஒளிமயமான சிவசத்தியோடு
திளைத்திருக்கும்போது பொழுது விடிதல் என்ற பேச்சுக்கே இடமில்லை.
 
2935: உயிர் நான்முகன் முதலிய ஐவரின் ஆட்சியினின்று விடுபட்டால் சிவம் ஆகலாம்.
பிரமன், விஷ்ணு உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் என்ற பிரமனாதி ஐவர் ஆட்சி உள்ளவரை பிரணவத் தொனி விளங்காது.  சீவன் சிதாகாயப் பெருவெளியைச் சென்று அடையாது. சீவன் ஐவரது ஆட்சியினின்றும் விடுபட்டு தேகப்பற்றை விட்டுச் சிவமயமாகும்  போது சிவம் பொருந்திச் சீவன் சிவமாகும்.
 
18.  மோன சமாதி. (2936-2953)
மோன சமாதியாவது மௌனத்தில் ஒடுங்கும் நிலை.  அதாவது சகச நிட்டை.  இது பிரணவ யோகத்தால் அடையப் பெறுவதாகும்.
 
2936: சகச நிட்டையில் இருப்பவர் ஆவார்.
பிரணவ யோகத்தில் நாதாந்த நிலையில்  சித்தம் அடங்கியிருத்தலே ஒடுக்க        நிலையாம்.   மோன சமாதி கூடினவர் நாத வழியே சென்று சிதாகாயப் பெருவெளியில் சிவத்தோடு சேர்ந்து இடையீடின்றிச் சகச நிட்டையில் இருப்பர்.
 
2937: குருவருளாலும், திருவருளாலும் மோன சமாதி கைகூடும்.
மோன சமாதி வெறும் நூலறிவால் அறிய முடியாதது.  மோன சமாதி ஞான குருவான சிவத்தின் திருவருளாலேயே கை கூடுவதாகும்.
 
2938: சமாதியில் அமர்ந்தவர் எல்லாவற்றையும் உணர்வர்;
மற்றவர்க்கும் உணர்த்தவல்லவர்.
மோன சமாதி கூடினவர் எதற்கும் கவலைப்படுவதில்லை.  அவர்கள் இருந்த இடத்திலிருந்தே எல்லாவற்றையும் அறியும் திறன் கொண்டவர்.  குருவினால் இறையுணர்வைத்  தனக்கு உணர்த்தப் பெற்ற அவர்கள்  தம் சுய அனுபவத்தில் சிவத்தைக் காணும்  பேறு பெற்றவர்.  பிரணவ தீட்சை மூலம் இறையுணர்வைப் பிறருக்கு உணர்த்தவும் வல்லவராவர்.  
 
2939: மௌனயோகியர் இயல்பு.
மௌனயோகி மீண்டும் பிறக்கவேண்டிய நியதியைக் கடந்து பிறர்க்கு அருள் புரியும் தன்மையாளர்.  அவர் தன்னை அறிந்து  சிவசத்தியோடு சூக்கும மண்டலத்தில்  கூடி  உலகை மறந்து இருப்பர்.  
 
2940: மோன நிலையில் உள்ளவர் முத்துரியங்களைக் கடந்து விளங்குதல்.
சீவதுரியத்தில் சீவனது தேகத்தின் செயல் விடுபடும்.  பரதுரியத்தில் ஆன்மாவின் செயல் விடுபடும்.  சிவதுரியத்தில் சிவதத்துவத்தில் உள்ள விந்து நாதங்கள் விடுபடும். இம் மூன்று துரிய நிலைகளிலும் சீவன் பொருந்தி விரிந்தும் குவிந்தும் அனுபவித்தும் கடந்து வாயினால் கூறமுடியாத மோன சமாதியுற்று சிவானுபவத்தில் திளைத்திருக்கும்.
 
2941: மருவிலி வந்து என் மனம் புகுந்தான்.
தான் எல்லப் பொருளுக்கும் ஆதாரமாய் இருந்தும் தனக்கு ஓர் ஆதாரம் இல்லாதவன்,உருவம், உடல் இல்லாத,ஒப்பில்லாத,பிரமனாதி ஐவருக்கும் தலைவனான சிவன் சிவஞான சாதகரின் மனத்தையே தனது இருப்பிடமாகக் கொள்கிறான்.
 
2942: ஞானானந்த அனுபூதியர்க்கே சிவானந்த போகத்தை அனுபவிக்க முடியும்.
சிவன் எல்லோரிடமும் தங்கியுள்ளான் என்று சொல்லுவதால் மட்டும் பயனில்லை. அந்த உண்மையை, சிவத்தை நமது உடம்பிலேயே கண்டு வழிபட வேண்டும்.  எல்லையற்ற சிவானந்தத்தைச் சாதகர்கள் அனுபவித்து நிற்கும் ஞானானந்த அநுபூதி நிலையை அறிந்து அடைந்து ஒவ்வொரு சீவனும் சிவானந்தத்தை அனுபவிக்க வேண்டும்.
 
2943: யோகியர் பரபரத்தை அனுபவிப்பதன்றி முற்றும் அறிய இயலாது.
விரும்பிய சீவனுக்கு சிவம் ஆன்மாவில் கலந்து தனது இருப்பை உணர்த்துவதை ஞானசாதகர் அனுபோகக் காமம் போல் அனுபவிக்க முடியுமே தவிர உருவமாகவும் அருவமாகவும் அருவுருவமாகவும் நவந்தருபேதமாகவும் உள்ள சிவத்தை ஞானசாதகர் முற்றிலும் அறிய முடியாது.
 
2944: சிவானந்த அனுபவத்தைப் பிறர்க்கு விளக்க இயலாது.
சிவானந்த அனுபவத்தை அக உணர்வில் கண்டு அனுபவிக்க முடியுமே தவிர பிறருக்கு வாயினால் சொல்லி உணர்த்த முடியாது.
 
2945: ஆன்மாவும் சிவமும் நீரில் உப்பு போல் கலந்திருக்கும்.
நீரில் கலந்த உப்பு நீராய் மாறி விடுவதைப் போல சிவானுபவத்தில் திளைத்திருக்கும் ஆன்மாவும் சிவமயமாகவே ஆகிவிடும்.
 
2946: சிவபோகம் பொருந்துமாறு.
அழகான எட்டிப் பழம் தின்ற பிறகு கசப்பைத் தருவது போல உலகவாழ்வும் அனுபவித்த பின்னர்க் கசப்பைத் தரும் என்பதையும்  உலக போகம் நிலையானதல்ல  என்பதையும் சீவன் உணர்ந்து உலகானுபவத்தில் கசப்புத் தோன்றி சீவன் பக்குவமடைந்த போது சிவன் சீவனிடத்தில் விளங்கி சிவபோகம் பொருந்தும்.
 
2947: அறிவால் புணர்ச்சி உண்டாதல்.
சிவமே ஆன்மாவாக இருந்து அனைத்தையும் இயக்குகிறான் என்பது விளங்கிய பிறகு சீவனுக்கு சிவனை அடைய சமாதிப் பயிற்சி தேவையில்லாததாயிற்று.  அந்நிலையில் அறிவினாலேயே சிவத்தோடு சீவன் ஒன்றாக முடியும்.
 
2948: நாதாந்தம் அடைய வேண்டிய முறை.
ஞான சாதனையில் சோர்வு அடையாமல் நாதசம்மியம் செய்து வந்தால் நாதாந்தம் கைவரப்பெற்று அந்தக் கற்பனைக் கடந்த சோதியான சிவத்தில் பொருந்தலாம்.
 
2949: தேவர்கள் இயல்புகள்.
போக பூமியான சொர்க்கத்தில் உள்ள தேவர்கள் இன்பத்தை நாடுபவராதலால் அவர்கள் எல்லாப் போக பூமியும் கடந்து நிற்கும் சிவானுபவத்தைப் பெற முயல்வதில்லை. அதனால் தேகப்பற்றை விட்ட சீவருக்கு எட்டும் சிவானுபவம் தேவர்களுக்கு  எட்டாததாகிறது.
 
2950: சீவன் எண்ணுமுன் சிவன் விளங்குவான்.
அந்தக்கரண விருத்தியைக் கடந்து நிற்கும் குருவுக்கும் அவரோடு ஒன்றி நிற்கும் சீடனுக்கும் உரிமை நிலைத்த பிறகு சீடனாகிய சீவன் எண்ணுமுன் குருவாகிய சிவன் விளங்குவான்.
 
2951: உடல்பற்று முதலியன அகன்ற விதத்தை அறியேன்!
சிவானுபவத்தில்  சீவனது தூல உடல் பற்று, சூக்கும உடல் பற்று, பொருள் பற்று, காம வேட்கை, உயிர்ப் பற்று, உலகப்பற்று, ஆசை, அகங்காரம், மமகாரம் எல்லாம் எவ்வாறு அழிகிறது என்பதை அறிய முடியாது.
 
2952; திருகு சிந்தையும் திரிந்தது.
சீவன் சிவத்தோடு அணைந்து வேறுபாடற்றுப் பொருந்த சிவத்தின் அருளால் சுட்டியறியும் அறிவும் சிந்தையும் கெட்டு சீவன் சிவத்தோடு அசைவின்றிப் பொருந்தும்.
 
2953: இறைவனை உள்ளத்தில் நிறுத்திய மோனியர் பல உழி அழியாது இருப்பர்.
சீவன் உள்ளத்தினுள்ளே சிவத்தை எண்ணி பொருந்தியிருந்தால் சிவமும் சீவனும் புணரும் முறைமையை உணர்ந்து சிவத்தோடு பொருந்தி பல யுகங்கள் அழியாது வாழலாம்.
 
19. வரையுரை மாட்சி  (2954 - 2956)
எல்லையற்ற பெருமை.  ஆன்மா தன்னை உணர்ந்து சிவனோடு பொருந்தியிருப்பதே எல்லையற்ற பெருமையாம்.
 
2954: சீவ எல்லையைக் கடந்தால் நினைப்பு மறப்பு அற்று அவனே தானாதல்.
ஆன்மா சீவ எல்லையைக் கடந்து பரவஸ்துவாகிய சிவமான பிறகு யாரைப்பற்றியும் எதைப் பற்றிய நினப்பும் மறப்பும் இன்றி தானே சிவமாய் விளங்கும்.
 
2955: தெளிந்த உள்ளம் உடையவர்க்குச் சிவன் மறைவின்றி விளங்குவான்.
அகண்ட சிவத்தை இவ்வண்ணம், இப்பண்பு என்று யாரும் வரையறுத்துக் கூற முடியாது.  ஆனால் ஆராய்ச்சியற்று தெளிந்த சிவ சிந்தனையுடையார்க்கு ஒளிக்கிரணங்- களையுடைய அச் சிவம் மறைவின்றி விளங்குவான்.
 
2956: ஆன்மவின் எல்லை கடந்த பெருமை.
மயக்கத்தைத் தரும் மாயையாகிய மனோசங்கற்பம் கெட்டு ஆன்மா தனது யதார்த்த சொரூபத்தை ஆராய்ந்து அதில் அடங்கியிருப்பதே எல்லை கடந்த பெருமையுடையதாம்.
          
20. அணைந்தோர் (மோனத்தில் பொருந்தியவர்) தன்மை.
 
2957: சிவத்தை அணைந்தவர்க்கு மலம் முதலியவை இல்லை.
சிவகுருநாதனை ஞானத்தினால் உறுதியுடன் பற்றி அன்பினால் அணைந்தவரிடம் சீவர்களைப் பந்திக்கும் மலமும் அவற்றால் வரும் குற்றமும் இல்லை.  அவருக்கு உயிர்ப்பற்றும் பொருட்பற்றும் இனப்பற்றும் இல்லை.
 
2958: சிவனைப் பொருந்தியவர்க்குஅவனை அடையும் நெறி தேவை இல்லை.
சிவத்துடன் சீவபோதமற்றுப் பொருந்தி நின்றால் பந்த பாசங்கள் அகலும்.  பிறப்பில் விருப்பம் நீங்கும்.  பிறப்பறும்.  சிவனைப் பொருந்தினமையால் இனி சிவனை அடையும் நெறியும் தேவை இல்லாது போய்விடும்.
 
2959: குறைவற்ற நிறைவில் திளைத்திருப்பவர்.
இனிமையான சிவானந்தம் உள்ள சிவபூமியில் உறைவோர் சங்கற்பத்தாலேயே எல்லாப் பொருளையும் அடைவதால் குறையேதுமின்றி நிறைவில் திளைத்திருப்பர்.
 
2960: சிவத்தில் கலந்திருப்பவர் அறிய வேண்டியது ஒன்றும் இல்லை.
எல்லாத் தத்துவங்களையும் கடந்து விளங்கும் சிவபிரானது அகண்ட வியாபகத்தில் பொருந்தியிருப்பார் பிற தத்துவங்களோடு கூடி அறிய வேண்டியது ஒன்றும் இல்லை.
 
2961: அகண்டத்தை அடைபவர் செய்ய வேண்டியவை.
சிவகதியை அடையும் நெறியை அறிந்து பழைய வினைகளால் தோன்றிய பாச இயல்பை நீக்கித் தூல சூக்கும காரண தேகத்தை விடுபவர் பிறவிக் கட்டினின்று பிரிந்து அகண்டத்தில் உள்ள சிவத்தை அடைதல் கூடும்.
 
2962: சிவானுபவத்தில் திளைத்திருப்போர்.
பேரொளிப் பிழம்பாகிய சிவம் உலகத்தை உயிர் போல இருந்து இயக்குகிறது.
நமசிவாய என்ற அந்த சிவக்கனியை உண்டு சிவத்தில் பொருந்தியுள்ளோர் சிவாவனுபவத்தில் என்றும் திளைத்திருப்பர்.
 
2963: அன்பரின் உள்ளத்தில் அமர்ந்து இருளைப் போக்குபவன்.
ஒளியாகிய சந்திரனையும் உணர்வாகிய குண்டலினியையும் தரித்துள்ள ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதியாகிய சிவபெருமான் அணைந்தோரது சிந்தையில் பொருந்தி மயக்கத்தைப் போக்கியருள்வான்.
 
2964: சிவன் சீவனை ஆசனமாய்க் கொள்வான்.
பிரணவ சொரூபமான சிவன் தேக தர்மத்தைக் கடந்து மேற்சென்று எண்ணமற்ற நிலையை அடைந்த சீவர்களைத் தனது ஆசனமாகக் கொண்டு விளங்குவான்.
 
2965: சத்தியிடம் அன்பு பூண்டு ஒழுக வேண்டும்.
சிவமாகிய இறைவன் சீவனிடம் அன்பு காட்டிப் பாதுகாப்பதற்கேற்பவே பெற்றெடுத்த தாயும் தந்தையும் அந்த சீவனைப் பாதுகாக்கிறார்கள்.  எனவே சீவன் தாய் தந்தையரோடு சிவசத்தியின் அருளையும் நினந்து அன்பு பூண்டு ஒழுக வேண்டும்.
 
2966: சிவபெருமானைச் சேர்ந்தாரின் விருப்பம் போன்று யாவும் நிகழும்.
சிவனிடம் அணந்தோர் மற்ற எல்லோரையும் விட மேலானவராதலால் அவர் இடும் பணியை கடல், மலைச்சிகரம், தேவர்கள், பிரமன், விஷ்ணு, உருத்திரன், ஆதிசத்தி மற்றும் எட்டுத் திக்கில் ஊள்ள எல்லோரும் கேட்டு செயலாற்றுவர்.  அவரது விருப்பம் போல் எல்லாம் நடக்கும்.
 
2967: சிவனைச் சேர்ந்தவர் திசை முதலிய யாவுமாவார்.
உருவத்தைக் கடந்து யாவற்றுக்கும் தலைவனாக உள்ள சிவத்தோடு பொருந்திய சீவர்களே தேவர்களாகவும் மேருமலையாகவும் உடலாகவும் உயிராகவும் தத்துவமாகவும் எட்டுத் திசைகளிலும் எல்லாமாயும் விளங்குவர்.
 
2968: ஞானியர்க்கு நமன் பயம் இல்லை.
உடல் பற்று நீங்கி ஆகாயமயன் என்ற உணர்வு வந்து ஆகாயசம்மியம் செய்யும் போது பேரொளிப் பிழம்பான சிவன் வந்து பொருந்தும்.  தவத்தால் அடையப் பெற்ற அந்த பேரின்ப  நிலையில் ஞானியர்க்குப் பிறப்பினை தரும் பழைய வினைகள் நீங்கும்.  மரண பயம் இருக்காது.
 
2969: ஞானியர் வாதம் செய்யார்.
ஆணவம் கன்மம் மாயையாகிய மும்மலங்களையும் வென்ற எண்ணம் எப்போதும் சிவமேயாகிய ஞானியர் எதிலும் பந்தப்படாமல் சூக்கும நாதத்தில் விளங்கியிருத்தலால் வாதம் பூசல் பிதற்றல் முதலியன செய்ய மாட்டார்.
 
2970: சிவனை இடைவிடாது நினைக்க வேண்டும்.
நினைத்தலும் மறத்தலுமின்றி இடைவிடாது நினைப்பவரிடத்தில் சிவன் விளங்கி வினைக் கூட்டங்களை அழிப்பான்.  விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளும்பொருட்டுஅவ்வப்போது நினைப்பவர் மனத்தில் சிவன் விளங்கித் தோன்றமாட்டான்.
 
2971: விரும்பிச் சிவனை வழிபடின் அவனும் விரும்பி வந்து சேர்வான்.
சிவத்தை விரும்பி வழிபட்டால் அவனும் விளங்கித் தோன்றி அருள் புரிவான்.  பற்றுக்களைக் கொடுப்பவனாயும் அதை நீக்குபவனாயும் உள்ள அந்த நித்தியப் பொருளான சிவத்தை வணங்கிப் பிறவியைக் கடந்து நிற்கலாம்.
 
2972: சிவனது எங்கும் நிறை தன்மையை ஞான சாதனையாளர் உணர்வர்:
நம் உடலில் இடங்கொண்ட ஆதியாகிய சிவத்தை சீவபோதத்தை விட்டுப் பொருந்தி நின்றால் சிவமே பரம்பொருள் என்று தெளிந்து சிவத்தை விட மேலான தெய்வம் ஏதுமில்லை என்று உணரலாம்.  சிவத்தின் அகண்ட வியாபகத்தில் பொருந்தலாம்.
 
2973: சிவனை வணங்கினால் பிறவி இல்லையாகும்.
சிவபெருமான் திருவடியை வணங்கி வழிபட்டால் சிவன் - பிரமன் எழுதிய தலையெழுத்தைக் கெடுத்து சீவன் தத்துவங்களோடு போராடும் நிலையைக் கெடுத்து  பிறவிக்கான காரணத்தையும் கெடுத்து பிறப்பறுப்பான்.
 
2974: சிவபெருமானின் வெளிப்பாட்ட்க்குப் பின் நோய் துன்பம் தொடரா.
சிவம் வெளிப்பட்டுப் பிரகாசித்து விளங்கிய பின்னர் சிவத்தினருளால் சீவன் கால எல்லையைக் கடந்து பிணி, மூப்பு, துன்பம் ஆகியவை பற்றாது வாழும்.
 
2975: சிவன் உயிர்களை ஆட்கொள்ளும் விதம்.
சீவன் சிவத்தை விரும்பின் சிவன் ஒளிமயமான தேவருடன் சீவனது உள்ளத்தில் எழுந்தருளி சீவனை ஆட்கொண்டு சீவரது பாச இருளைப் போக்குவான்.
 
2976: சிவத்தை நாடுபவர்க்கு உலக இன்பம் சுவைக்காது.
சிவானந்தத்தை நாடி தேக தர்மத்தைக் கடந்து உணர்வு மேலே சென்ற பின்னர் அச் சீவர்க்கு கரும்பு போன்ற காமமும் அதன் சுவையும் புளித்து இன்பம் தருவனவாக இராது.
 
2977: எல்லாம் சிவன் செயல் என்று இருப்பவர்க்குப் பிறவியைக் கடக்கக் கூடும்.
சிவம் கருணை காட்டி அன்பு செய்த திறத்தினை உணர்ந்து சிவத்தின் பெருமை
யைப் பாடி "நான் செய்கின்ற எல்லாம் சிவம் என்னிடமிருந்து செய்விக்கின்றன" என்பதை  உணர்ந்த சாதகர் வினைப் பயனின்றி பிறவியைக் கடத்தல் கூடும்.
 
2978: பேரின்பம் பெறுவர்.
உலக இன்பத்தில் இருந்து மீண்ட சாதகர் மூலாதாரத்திலுள்ள அக்கினியை சகஸ்ரதளத்துக்கு  எடுத்துச் சென்று சேர்த்ததும் அங்கு பராசத்தி வந்து பொருந்தி சிவானுபவம் கிட்டிப் பேரின்பம் பெறுவர்.
 
2979:சிவசத்தி விளங்குமாறு.
கண்டத்தின் கீழுள்ள சத்திகளைக் கீழே போகாதவாறு தடுத்து சிவகதியின் மிகவும் நுட்பமான இயல்பால் ஆறாதாரங்களின் வழியே மேலேற்றி சிரசில் சகஸ்ரதளத்தில் கொண்டு சேர்த்த போது சிவசத்தி விளங்கும்.
 
2980: ஞானப் பயிற்சியாளனுக்குச் சிவனிடத்தில் உள்ள அன்பு.
ஞான சாதகன் சிவத்திடம் உள்ள அன்பால் இரவு பகல் என்ற வேறுபாடின்றி எப்போதும் இறைவனை வழிபடுவான்.  தோத்திரத்தைப் பாடுவான்.  இறைவன் செய்த உதவியை நினைந்து உருகி அழுவான்.  எப்பொதும் இறைவன் தன்னிடம் பொருந்தி -யிருக்குமாறு தொடர்ந்து ஞான சாதனை செய்து கொண்டே இருப்பான்.
 
2981: முத்தியின் இயல்பு.
மனம் உலகமுகமாக விரிந்து துன்புற்று பின் அடங்கிய போது பிராணனும்  அபானனும்  சிரசில் லயமடைந்து பிராணன் தத்துவங்களில் இருந்து நீங்கித் தனித்து  பரத்துடன் ஒன்றும்.  அப்போது பேச்சற்ற பேரானந்த முத்தி கிட்டும்.  மனம் அடங்கி வாயு அடங்கிப் பேச்சற்றிருத்தலே முத்தியாகும்.
 
21.  தோத்திரம். இறைவனைப் புகழ்ந்து பாடுதல் தோத்திரமாகும். (2982-
 
2982: இறைவனை உள்ளத்தில் தேட வேண்டும்.
ஊனக் கண்ணுக்குப் புலப்படாத இறைவனை மனமாகிய தேரில் ஏறி புறத்தே சென்றலைந்து காண முடியாது.  மனமடங்கி அகத்தில் நோக்க இவ்வுடம்பிலேயே ஒளிமயமான அந்த இறைவன் விளங்குவதைக் காணலாம்.
 
2983: இறைவனைப் பல பிறவிகளில் வழிபட்டவர் இப்பிறவியில் நிலையான அமைதி அடைவர்.  பல காலம் சிவனது நாமத்தை ஏத்தி வழிபட்டவர் இப்பிறவியில் சிரசின் மேல் சகஸ்ரதளத்தில் சிவத்தோடு பொருந்தி நிலையான அமைதி பெற்றிருப்பர்.
 
2984: தம்மை மறந்து சிவசிந்தனையில் உன்மத்தராய் இருப்பவர் ஞானியர்.
தம்மை மறந்து சிவத்தை நினைந்து உன்மத்த நிலையில் உள்ளவரே ஞானியர் ஆவார்.   அத்தகைய ஞானியரை உலகவர் பைத்தியக்காரர் என்று கூறுவர்.
 
2985: சிவக் கதிரவனை இடைவிடாமல் வழிபட வேண்டும்.
பேரறிவாளனும் புண்ணியம் செய்தவர்களால் உணரப் பெறும் சிவாதித்தனுமாகிய இறைவன் அடியார்கள் உள்ளத்தில் எப்போதும் விளங்கிக் கொண்டிருப்பான்.  அத்தகைய புண்ணியமூர்த்தியாகிய சிவத்தை இடைவிடாது வழிபட வேண்டும்.
 
2986: நாதமயமாய் இறைவனை நினைந்து வழிபடுங்கள்.
ஊனக் கண்ணால் காணமுடியாத இறைவனை மானசீகமாக நினைந்து உடம்பில்  விந்து நாதத்தை சிரசின் மேல் எழுப்பி சகஸ்ரதளத்தில்  விளங்கும் சிவசத்தியை நாதமயமாக வழிபட வேண்டும்.  அதுவே ஞான பூசையாகும்.
 
2987:சிவன் திருப்பெயரைச் சிந்தித்திருப்பவர் ஆசையினின்று நீங்குவர்.
வழிபாடு செய்பவர் ஆயிரம் வகையான சுகத்தை அடைவர்.  சிவநாமத்தை ஓதி சிரசின் மேல் மனத்தை இடைவிடாது நிறுத்தி ஞான சாதனை செய்கின்றவர்  ஆயிரக்கணக்கான ஆசையினின்றும் நீங்கியவராவர்.
 
2988: சிவனது திருவடி ஞானம் எல்லா மேன்மையும் தரவல்லது.
சிரசின் மேல் விளங்கும் விந்து நாதங்களாகிய சிவனது திருவடி ஞானம் எல்லா மேன்மையினையும்
தரவல்லது.  எனவே சிவத்தின் திருவடிகளைப் புகழ்ந்து போற்றி வணங்குங்கள்.  எல்லோரும் அறியும் வண்ணம் சிவயோகத்தைப் பறை சாற்றுங்கள்.
 
2989: ஒளி மண்டலம் விளங்கியபின் சிவானந்தத்தில் திளைப்பர்.
உடலில் உள்ள ஆறு ஆதாரங்களின் வழியே நடு நாடியூடே மேல் சென்று ஞான சாதனையால் ஒளி மன்டலம் அமையப் பெற்ற சாதகர் சிவானந்தத்தில் திளைத்திருப்பர்.
 
2990: பயன் கருதிய வழிபாடு நிலைத்த இன்பத்தைத் தராது.
பயன் கருதிய ஆசை வயப்பட்ட வழிபாடு உலக சுகத்தை அளிக்கலாம்.  ஆனால் நிலையான இன்பமான சிவகதி கிடைக்காது.  ஞானியர் வழிபாடு பயன் ஏதும் கருதாத - சிவத்தோடு கலந்து சிவமயமாதல் பற்றியதேயாதலால் ஞானியர்க்கு சிவகதி கிடைக்கும்.  ஞானியர் முத்திப் பயனும் எய்துவர்.
 
2991: சிவமாய் விளங்குபவர் சிவ ஞானியர்.
உலகமயமான எண்ணத்தினால் கலக்கமுற்று உள்ள வரை இறைவனின் தன்மையை யாரும் உணர முடியாது.  சிந்தையை அடக்கிச் சிவத்தில் வைத்துத் தெளிவு பெற சீவன் சிவமாவான்.
 
2992: இறைவனைப் பொருந்தின் உலகைக் கடக்கலாம்.
தூய்மையானவனும் தூய்மை நெறியாயும் விளங்கும் சிவபெருமானை விரும்பும் சாதகர்க்கு சிவன் உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்குவான்.  அத்தகைய தேவனிடம் பொருந்தி உலகினைக் கடந்து செல்ல வேண்டும்.
 
2993: அசைடாத பத்தியுடையவர் அடையும் பயன்!
சிவத்திடம் அசையாப் பக்தி கொண்டு தத்துவக் கூட்டங்களைக் கடந்து சிவஞானம் பெற்றபின் சீவனின் மும்மலங்கள் நீங்கும்.  அப்போது சீவனின் மூலாதாரத்திலுள்ள அக்கினி சிரசின் மேல் எழ ஒளி மயமான புண்ணியமூர்த்தி பொருந்தி தேகம் வேறு - தேகி வேறு  என்ற உண்மையை உணர்த்தும்.     தேகம் வேறு - தேகி வேறு.
 
2994: அகத்தூய்மை அற்ற நெஞ்சினர்க்கு சிவன் புலப்படமாட்டான்.
வஞ்சகத் தன்மையுடைய உலகவர் தம்மைக் கண்டுபிடித்துவிடக்கூடாது என்றே சிவபெருமான் சீவரது உள்ளத்தில் மறைந்திருந்து ஆட்கொள்ளுகிறான்.  அகத்தூய்மை உள்ளவரே உள்ளே விளங்கும் சிவத்தையுணர்ந்து பொருந்த முடியும்.
 
2995: சிவன் திருவடியில் மனம் வைத்து உலகப் பற்றை விட வேண்டும்.
தினமும் சிவ வழிபாடு செய்யும் அடியாரது தீய குணத்தையும் தீய செயலையும் துன்பத்தையும் நீக்கும் சிவனது திருவடியில் சாதகர் மனதை வைத்து உலகப் பற்றை விட்டுவிட வேண்டும்.
 
2996: இறைவனின் திருவடிகளே சொர்க்கம், தீர்த்தம்!
உலப்பற்றை விட்டு சிவத்தைப் பொருந்தியவர்க்குச் சிவனது திருவடியே சொர்க்கமாகவும் புண்ணிய லோகமாகவும் தீர்த்தமாகவும் அமைந்து பயனை அளிக்கும்.
 
2997: சிவன் அஞ்ஞானத்தைப் போக்கிச் சிவானந்தத்தை நால்குவான்.
தனக்கென்று ஓர் உடம்பு இல்லாது தனித்து விளங்கும் அறிவு மயமான சிவகுருநாதன் சீவரது அஞ்ஞானத்தைப் போக்கிச் சிவானந்தத்தை நல்குவான்.
 
2998: அறிவாகாயத்தின் பயன்.
சிரசின் மேல் விளங்கும் சிதாகாய ஒளியே சத்திபீடமாய் சீவரது பழைய வினையை அழிக்கின்ற இடமாகும். அதுவே உலகினைக் கடந்து நிற்கும் முடிவு நிலையுமாகும்.
 
2999: பரவிந்து மண்டலத்தில் தேவர், முனிவர், மனிதர், சிற்சத்தி, சிவம் உள்ளனர்.
சிதாகாய ஒளியில் மேலே பரவிந்து மண்டலத்தில் தேவர்களும் அவர்களுக்குக் கீழே முனிவர்களும் அவர்களுக்கும் கீழே துன்பம் அனுபவிக்கும் மனிதர்களும் பொருந்தி - யுள்ளனர்.  சிவத்துடன்  சத்தி அங்குப் பொருந்தி உயிர்களுக்கு வெண்டிய போக போக்கிய நியதிகளைச் செய்யும்.
 
3000: ஐந்தெழுத்தில் விளங்கும் சிவன் உயிர்களின் அஞ்ஞானத்தைப் போக்கி ஞானத்தை அருள்வான்.
"நமசிவாய" என்ற அஞ்செழுத்தில் விளங்கும் சிவன் சீவரது அஞ்ஞானத்தைப் போக்கி ஞானத்தைக் கொடுப்பவனாவான்.
 
3001: சிவன் உலகம் முதலியவாகவும் அவற்றை அழித்து வேறாகவும் விளங்குவான்.
ஆதிப்பிரானே நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயமாகவும், சூரியன், சந்திரன்  மற்றும் உலகத்துக்கு உயிராகவும் அவற்றை அழிப்பவனாகவும் அஷ்டதிக்குப் பாலகர் -களுக்குத் தலைவனாகவும் உள்ளான்.
 
3002: இறைவன் சந்திரமண்டல ஒளியைப் பெருகச் செய்வான்.
அக்கினி, சூரியன், காற்று ஆகிய எல்லாவற்றிலும் பொருந்தியுள்ள ஈசன் பிராண சத்தியைப் பெருக்கி சந்திரமண்டலத்தை விளங்கச் செய்வான்.
 
3003: துடைக்கும் இறைவன் தாங்குபவனாகவும் உள்ளான்.
பஞ்ச பூதங்களைச் சங்காரம் செய்யும் சிவன் அடைக்கலமாகக் கொண்ட ஆன்மாக்களைத் தாங்குபவனாகவும் உள்ளான். 
 
3004: சிவனின்ன்வியாபகத்தைத் தெளிவற்றார் உணரார்.
தெளிவில்லாதவர் சிவனது திருமுடியையும் திருவடியையும் சிவனது அகண்ட வியாபகத்தையும் உணரமாட்டார்.
 
3005: சிவன் பேரொளியாய் விளங்குபவன்.
ஆதியாகிய சிவனே சோம சூரியாக்கினியாகவும் முச்சுடராகவும் சிவசோதியாகவும் எங்கும் வியாபித்து நம்மையெல்லாம் னடத்தும் தலைவனுமாவான்.
 
3006: இறைவன் வழிகாட்டி.
நாதசொரூபமான இறைவன் தொண்டர்களை முத்திக்கு அழைத்துச்  செல்லும்  நெறியில் வழிகாட்டியாக விளங்குவான்.
 
3007: சிவன் உயிர் நன்மை கருதிப் பொன்னொளியில் விளங்கி நின்றான்.
உலகிலுள்ள சீவர்களையெல்லாம் காக்கும் பொருட்டு சீவர்களுக்குப் பயன் தரத்தக்கவை எல்லாவற்றையும் முன்னமேயே படைத்து நிலவுலகெல்லாம் ஈசன் பொன்னொளியாக நிறைந்து நின்றனன்.
 
3008: சிவன் ஆற்றி வரும் அருஞ்செயல்.
சிவனே பரனாகவும் அபரனாகவும் தூலமாகவும் சூக்குமமாகவும் புவனங்கள் அனைத்திலும் ஆன்மாவிலும் வியாபித்தும் காத்தும் இருக்கின்றான்.
 
3009: இறைவன் பிராண சத்தியாய் உள்ளான்.
சிவனே தூலமாயும் சூக்குமமாயும் தூலத்தையும் சூக்குமத்தையும் இணைக்கும்
பிராணனாயும் ஆதாரமாகிய உடலாயும் நாதமாயும் நாதாந்தமாயும் உயிராயும் அகண்ட வடிவாயும் விளங்கும் பெருந்தெய்வமாகும்.  சிவத்தை விட வணங்கத்தக்க பெரிய தெய்வம் வேறு ஒன்றும் இல்லை.
 
3010: இறைவன் உலகத்துக்குக் காரணமாகி உதவுவான்!
புகை மேலோங்கிக் காணப்படினும் அது நெருப்பில் இருந்தே தோன்றியது.  அது போல புறத்தே காணப்படும் தெய்வங்களும் எல்லாமும் திசைகள் அனைத்துமான ஆதிப்பிரானாகிய சிவத்தினிடமிருந்தே தோன்றின. எனவே சிவத்துக்குப் புறம்பாக தெய்வம் ஏதுமில்லை.
 
3011: சிவனே பல பல சீவர்கள்.
எல்லாப் புவனங்களாகவும் அவற்றின் மேலாகவும் அவற்றின் வேறாகவும் எங்கும் எல்லாமாகவும் வியாபித்துள்ள சிவன் உலகோரால் காணப்படுமாறு தோன்றுபவனாக  இல்லை.   ஆனால் அவனே பிராணசத்தியாய் சீவர்களை இயக்கி உலக நிலையில் பொருந்தி சீவர்கள் நம்பும்படியாகவும் உள்ளான்.
 
3012: தந்திரம் முதலிய கலைகளைக் கடந்தவனை நாடினால் உள்ளத்தில்
விளங்குவான்.
தந்திரம், மந்திரம், உபதேசம் ஆகிய மூன்று கலைகளுக்கும் அப்பால் நின்ற, சகல தத்துவங்களுக்கும் தலைவனான விலை மதிக்க முடியாத சிவத்தை விரும்பி நில்லுங்கள்.  அத்தகைய இறைவன் உங்கள் உள்ளத்தில் சிறந்து விளங்குவான்.
 
3013: சிவபெருமான் ஆசி முதலியவற்றை அழித்துப் படைப்புத் தொழினின்று விடுவிப்பான்.
சிவபெருமான் சீவர்களை இச்சை தரும் பற்று, பற்றினால் வரும் செயல் மற்றும் செயலால் விளையும் வினை முதலியவற்றை அகற்றிப் பிறவியில் இருந்து உய்யுமாறு செய்து அன்பினில் அகப்படுத்தி அருளுவான்.
 
3014: மலரில் நறுமணம் போல் இறைவன் விளங்குகிறான்.
ஈசனாகிய சிவனே பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், சூரியன், சந்திரன்,அக்கினி, ஆன்மா ஆகிய ஒன்பது கண்டங்களிலும் எட்டுத்திக்குகளிலும் மலரின் மணம் போலப் பொருந்தி ஒளிமயமாக விளங்குகிறான்.
 
3015: சீவர்களின் உள்ளத்தை உருக்கித் தூய்மை செய்து விளங்குபவன்.
இறைவன் புறக்கண்ணால் காணப்படாதவன்; நெஞ்சுருகி நிற்பவரின் அகக்கண்ணில் விளங்குபவன்; குற்றமற்றவன்; தூய்மையானவன்; பிரகாசமுடையவன்; சொல்லுவதற்கரிய சோதிவடிவானவன்.  அத்தகைய சிவம் சீவர்களது உள்ளத்தை உருக்கி அவர்கள் தூய்மை பெறத் தொடர்ந்து நின்றருளுகிறான்.
 
3016: உயிர்களின் விருப்பத்துக்கு ஏற்ப சிவன் உதவுபவன்.
சீவர் உலக வயப்பட்ட போது சிவன் அவரது இந்திரியங்களை இயக்கும் கள்ளத் தலைவனாக செயல்படுகிறான்.  அதே சீவர் சிவனது சிவபோகத்தை விரும்பி நிற்கும் போது சீவரது பிறப்பினை அறுத்து நிற்பவனாக உள்ளான். இப்படி  சீவரது உள்ளத்தில் பொருந்தி சீவரது விருப்பத்திற்கும் பக்குவத்துக்கும் ஏற்ப சிவன் உதவுகிறான்.
 
3017: அடியார்க்கு ஒளியானவன்.
தேவர்க்கும் அசுரர்க்கும் எளிதில் காட்சி தராத சிவபெருமான் தன்னை நினைந்துருகும் அடியார்க்கு எளிதில் சோதியாகக் காட்சி தருவான்.  அடியாரின் ஊனினை நீக்கி உணர்விணைப் பெருக்கி அவர்களுக்கு அருள் செய்வான்.
 
3018: உயிர்களுக்கு அளவில்லாத இன்பத்தை அளிப்பவன்.
ஆகாய வடிவில் உள்ள சிவபெருமான் புறக்காட்சிக்கு அப்பாற்பட்டவன்.  உள்ளப் பண்பற்ற தோத்திரங் களால் அறியப்படாதவன்.  உள்ளப் பண்போடு தன் மீது அன்பு வைத்துள்ளவர் அகக்கண்ணில் எளிதில் தோன்றி அவன் எண்ணற்ற ஆனந்தத்தை அருளுவான்.
 
3019: அன்பால் அன்றி அறிவால் காண இயலாது.
சிரசின் மேல் வெள்ளை ஒளியும் நீல ஒளியுமாக முன்னும் பின்னும் சிவசோதியாக விளங்கும் சிவசத்தியை சிவஞானத்தில் திளைத்திருக்கும் சிவயோகியரே காணமுடியும்.  ஆராய்ச்சி செய்யும் சுட்டறிவு உடையோராலும் காண இயலாது.
 
3020: மக்கள் நிலை என்னே!
அறவொழுக்கம் எந்த அளவு கடைப்பிடிக்கப்படுகிறதோ அந்த அளவு புண்ணியம் பொருந்தும்.  தீயவொழுக்கம் எந்த அளவு கடைப்பிடிக்கப்படுகிறதோ அந்த அளவு பாவம் பொருந்தும்.  சீவரின் புண்ணிய பாவங்களுக்கேற்ப சிவம் சீவருக்கு இன்ப துன்பங்களைத் தரும்.  எனவே தீயவொழுக்கத்தை விலக்கி அறவொழுக்கத்தைக் கைப்பிடித்து  மேன்மை பெற வேண்டும்.
 
3021: எல்லா உலகங்களிலும் உயிர்களிலும் சிவன் உள்ளான்.
அஞ்ஞான இருளில் உள்ள சீவருக்கு ஞானஒளியை வழங்கி கருணை பொழிகின்ற புண்ணிய மூர்த்தியாகிய சிவம் எல்லாப் புவனங்களிலும் எல்லா இடத்தும் நிறைந்துள்ளான்.
 
3022: உயிர்களுக்கு உணர்வை நல்குவான்.
உடலிலே உணர்வு மயமாயும் அண்டாகாயத்தில் சூக்குமமாக சீவவொளியிலும்  உள்ள சிவபெருமான் சீவர்களுக்கு உணர்வினை நல்கி ஆட்கொள்ளுவான்.
 
3023: சிவன் அணுவுக்கு அணுவாய் நிறைந்துள்ளான்.
அணுவைக் காட்டிலும் சூக்குமமான சிவம் அஷ்ட பர்வதங்களையும் விட வலிமையானவன்.  அவன் தனது ஆற்றலால் ஏழு உலகங்களையும் தாங்கி விசாலமான கடலிலும் எங்கும் வியாபித்துள்ளான்.
 
3024: சிவம் தவத்தின் ஆற்றலுக்கு ஏற்ப விளங்குபவன்.
சிவபெருமான் மண்ணவர் விண்ணவர் எல்லோரையும் விட பெருமையுடையவன்.  அத்தகையவன் சாதகரின் ஊனுடலிலும் உணர்வாகக் கலந்து அங்கு உள்ளான்.  வானுலக வாசிகளால் அறிய முடியாத அவனை மண்ணுலக சாதகர் தமது தவத்தின் மூலம் தவத்தின் ஆற்றலுக்கேற்ப அறியமுடியும்.
 
3025: அறிவற்றவர் செய்கை.
குண்டலினி சத்தியை சுழுமுனை வழியாக சிரசின் மேல் செலுத்தி சகஸ்ரதளத்தை அடைந்து பொருந்தியவர்கள் சிவஒளியில் திளைத்திருப்பார்கள்.  அவ்வுணர்வு பெறாத அறிவிலிகள் உடலைக் கடந்து ஒளியை அறியாது உடலே பெரிது என்று எண்ணி மயங்கி இருப்பர்.
 
22. சர்வ வியாபி.  எல்லாவற்றிலும் நிறைந்திருப்பவன்.   (3026 - 3047)
 
3026: உயிர் சிவ போகத்தில் தன்னிலை கெட்டு முழு நிறைவு பெறும்.
சிவபோகத்தில் தன்னிலை, சுட்டறிவு, தேகப்பற்று, விஷயவாசனைகள் ஆகியவை கெட்டு ஆன்மா பூரண வியாபகம் பெறும்.
 
3027: எங்கும்சென்று வர வல்லவர்.
எங்கும் நீக்கமற நிறைந்துள்ள சிவனை ஆகாயமண்டலத்தில் ஒளிமயமாகக் கண்டு வழிபடும் சாதகர் எங்கும் சென்று மீளிம் ஆற்றலைப் பெறுவர். 
 
3028: துன்பம் மிக்க வாழ்விலும் சோதிக்குள் சோதியான இறைவனைக் கண்டு இன்பம் அடையலாம்.  துன்பம் தரும் உலக வாழ்வில் சீவரது உள்ளத்தில் சோதிக்குள் சோதியாய் விளங்கும் இறைவனை துன்பத்திலும் நாடி இன்பம் பெறலாம்.
 
3029: சிவம் அடியாக்காகப் புறம் புறம் திரிந்து அருள்பவன்.
சோமசூரியாக்கினியாகிய முச்சுடருக்கும் ஒளியைக் கொடுக்கும் சிவபெருமானே பெருஞ்சோதியாக அடியார்களை மாறுபாடுடைய உலகமெல்லாம் தொடர்ந்து சென்று அருளுவான்.
 
3030: வினைக்குட்பட்டு வருந்துபவரும் இறைவனைச் சரண் அடையின்
அவன் காப்பான்.
வல்வினையால் துன்பப்பட்டு ஆழ்ந்தாரும் ஈசான திக்கில் உள்ளொளியாக இருக்கும் நிலையான திவ்விய மூர்த்தியைச் சரண் அடையின் அவன் சிரசின் மேல் பெரிய சோதியாக விளங்கிக் காப்பான்.
 
3031: இறைவன் பற்றைப் பற்றியவர் சிவமாய்த் திகழ்வர்.
எங்கும் நிறைந்த சிவத்தை சூரியன், சந்திரன், அக்கினி என்ற மூன்று ஒளியாக நெற்றி நடுவில் பற்றிக் கொண்ட சீவர் சிவமேயாவர்.
 
3032: சிவமாகிய சீவன் எங்கும் நிறைந்து விளங்குபவன்.
சிவமாகிய சீவன் எல்லாம் அறிந்தவன்.  எல்லோரையும் ஏவல் செய்யும் ஆற்றல் உடையவன்.  அவன் ஒளியாக எங்கும் நிறைந்து வியாபகம் உடையவனாவான்.
 
3033: போக்கு வரவு இல்லாதவன் அடியார் பொருட்டுப் போக்கு வரவு செய்ய வல்லவன் ஆவான்.
தனக்கெனப் போக்குவரவில்லாத் தலைமகனான சிவம் அடியார் துன்பம் போக்கவும் ஏழுலகைக் காக்கவும் போதலும் வருதலும் எல்லாவற்றோடும் புணர்தலையும் செய்கிறான்.
 
3034:மாயாஉலகில் இருந்தாலும் இறைவன் தன் தன்மை கெடாதிருந்தான்
செம்பொன்னை ஒத்த ஒளிக்கிரணங்களைத் தேகமாகக் கொண்ட சிவன் ஏழுலகங்களிலும் கலந்தும் அவற்றை விட்டு நீங்கியும் உலகோடு தொடர்பு கொண்டும் தொடர்பு இல்லாமலும் தனது தனித்தன்மை கெடாது இருக்கிறான்.
 
3035: சிவஞானியரிடம் சிவன் மலரின் மணம் போல் நிறைந்து விளங்க வல்லவன்.
பூவினில் மணம் போல் சிவஞானியரிடம் உணர்வாகவும் உயிராகவும் சிவம் விளங்கும்.  அறிவாகவும் அறியப்படும் பொருளாகவும் எங்கும் பரவி அருளும் சிவத்தை எண்ணத்தில் அகப்படுத்த முடியாது.
 
3036: சிவன் பேரறிவினனாய் யாவற்றிலும் நிறைந்து நிற்கின்றான்.
நல்ல ஞானத்தை முழுதும் கொண்ட சிவன் பேரறிவுடையவனாய் எல்லா அறிவிலும் வேதத்திலும் நிலைத்து நிற்கின்றனன்.
 
3037: சிவபெருமான் ஞான சாதனையில் விளங்குவான்.
அகண்ட வியாபகமுடைய சிவபெருமான் சீவரது ஞான சாதனையில் சீவரது வலக்கண்ணின் மேல் குளிர்ச்சியைத் தருபவனாய் சீவரிடம் விளங்கித் தோன்றுவான்.
 
3038: எல்லாவற்றையும் தாங்கி அருளுபவன்.
சிவனே  பிரமனாகவும் திருமாலாகவும் ஆகாயமாகவும் நிலமாகவும் மேருமலையாகவும் ஏழுகடலாகவும் சாதகர்க்கு வளம் தந்து பயனளிப்பவனாயும் உள்ளான்.
 
3039: எங்குமுள்ள உயிர்க்கூட்டத்தை இயக்க வல்லவன் சிவன்.
சிவஞானியர் தமது தலைவனாகக் கொள்ளும் சிவபெருமானே எங்குமுள்ள சீவவர்க்கத்தை உயிர்க்குயிராக இருந்து இயக்குபவனாகவும் சகல புவனங்களுக்கும் தலைவனாகவும் உள்ளான்.
 
3040: பிராணன் அபானன் ஆகியவற்றை இயக்குபவன் சிவன்.
சிவனே சந்திரனாகவும் பிராணன் அபானன் ஆகிய வாயுக்களை இயக்குபவனாகவும் கண்ணின் பார்வையில் விளங்குபவனாகவும் உள்ளான்.
 
3041: சிவத்தை அகக்கண் கொண்டு காணுங்கால் அவன் உடம்பின் தன்மையை மாற்றியருள்வான்.
பிரணவப் பொருளான சிவத்தை அகக்கண் கொண்டு காணும் போது சிவம் சீவனது உடம்பில் பொருந்தி அதன் தன்மையை மாற்றி அருளுவான்.
 
3042: எல்லாவற்றிலும் கலந்து அவற்றை இயக்குபவன் சிவன்.
மஞ்சள் ஒளியில் அறிவுருவாக விளங்கும் சிவபிரான் எல்லாத் தத்துவங்களிலும் சூக்குமமாய் ஊடுருவி இயக்கும் தன்மையன் ஆவான்.
 
3043: சிவன் யாவற்றிலும் கலந்தும் கடந்தும் உள்ளான்.
சிவன் எங்கும் எல்லாவற்றிலும் கலந்தும் அவற்றைக் கடந்தும் மாறுபாடு இல்லாதவனாய் சீவர்களுக்கு இன்பம் தருபவனாயும் ஆதி அந்தம் இல்லாதவனாயும் உள்ள உண்மை இயல்பை உலகத்தவர் அறிவதில்லை.
 
3044: சிவன் எல்லாக் காரணங்களுமாய் எல்லாம் அறிபவனாய் விளங்குபவன்.
எல்லாச் சீவர்களின் அறிவுக்கு அறிவான மிகவும் தொன்மையான  சிவன் நிற்கும் நிலையை சீவர்களால் அறியமுடியவில்லை.  ஆனால் புவனங்கள் எட்டிலும் உள்ள ஒவ்வொரு சீவனையும் நந்தியெம்பெருமான் அறிய வல்லவனாவான்.
 
3045: சிவன் யாவற்றுக்கும் ஆதாரமானவன்.
பராபரன் எனப்படும் அணுசொரூபமான சிவபெருமான் நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் ஆகிய எல்லாத் தத்துவங்களோடு கூடியிருந்தும் அவற்றுக்கு ஆதாரமாயும் உடம்பில் பொருந்தும் சோதியாயும் அழிவில்லாதவனாக இருக்கிறான்.
 
3046: திருமூலர் அருளியவை.
திருமூலர் அருளிச் செய்த முவாயிரம் பாடல்களும் முந்நூறு மந்திரப் பாடல்களும் முப்பது உபதேசப் பாடல்களும் ஒரே பொருளான சிவத்தைக் குறிப்பனவாம்.
 
3047: வாழ்த்து.
சிவகுருநாதனாகிய நந்தியின் திருவடி வாழ்க. மலக்கட்டினை நீக்கியருளிய அவனது திருவடி வாழ்க.  மலமறுத்தலோடு உண்மை ஞானத்தையும் அருளிய அவனது திருவடி வாழ்க.  நின்மலனாகிய சிவத்தின் திருவடி வாழ்க வாழ்கவே.  சிவமே குருவானது.  அதனால் குருவே சிவமானது.
 
                                                            **************
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free